ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரகப் பாதசாரம்:

Advertisment

சூரியன்: திருவாதிரை- 2, 3, 4.

செவ்வாய்: உத்திரட்டாதி- 1, 2, 3.

புதன்: மிருகசீரிஷம்- 2, 3.

Advertisment

குரு: உத்திராடம்- 2.

சுக்கிரன்: ரோகிணி- 3, 2, 3.

சனி: உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிஷம்- 3.

கேது: மூலம்- 1.

கிரக மாற்றம்:

30-6-2020- சுக்கிரன் வக்ரநிவர்த்தி.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

30-6-2020- துலாம்.

1-7-2020- விருச்சிகம்.

3-7-2020- தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைகிறார். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் வக்ரமாகவும் நீசமாகவும் இருந்தாலும், குருவும் சனியும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்க ராஜயோகமாகும். செவ்வாய் சனியின் சாரம்பெறுவதால் ஓரளவு பாதிப்புகள் குறையும். ஏனென்றால், சனியின் ராசியான மகரத்தில்தான் செவ்வாய் உச்சம் பெறும். காரியத்தடை, வரவுக்குமீறிய செலவு, தவிர்க்கமுடியாத அலைச்சல், பயணம், கற்பனைக் கவலைகள் ஆகியவற்றையெல்லாம் சந்திக்கவேண்டும். 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் பரிவர்த்தனை பெறுவது தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்தவொரு ஜாதகத்திலும் தர்மகர் மாதிபதி யோகம் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர் ஆழ்கடலில் விழுந்தாலும் தெய்வ பலத்தாலும், கிரகப் பலத்தாலும் காப்பாற்றப்படுவார் என அர்த்தம். ஆகவே, முன்னாள் முதல்வர் அமரர் மு.கருணாநிதி எழுதியபடி, ""தென்றலைத் தீண்டிய தில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்'' என்பது உங்கள் வாழ்க்கை வரலாறாக இருந்தாலும், அக்னிப் பிரவேஷம் செய்த சீதை காயமின்றி மீண்டுவந்ததுபோல துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு 8-ல் சனியும் கேதுவும் கூடியிருக்கிறார்கள். 2020 வரை அட்டமத்துச்சனி நீடிக்கிறது. அதற்குமுன்னதாக, செப்டம்பர் 1-ல் ராகு- கேதுப் பெயர்ச்சி. அதன்பிறகு, சனி, ராகு- கேது சம்பந்தத்தால் ஏற்படும் கடும் பாதிப்புகள் விலகும். அதுவரை, ""எங்களுக்கும் காலம்வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே'' என்ற சினிமா பாடலுக்குத் தகுந்தபடி, நம்பிக்கையோடு காத்திருங்கள். எந்த இன்பமும் நிரந்தரமல்ல. அதேபோல, எந்தத் துன்பமும் நிரந்தரமல்ல. வாரியார் சுவாமிகள் சொன்னதுமாதிரி, கஷ்டங்கள் வரும்போதுதான் தெய்வங்களை விரும்பி வழிபடுவோம். தெய்வம் நெருங்கி வந்து காப்பாற்றும். நன்றாகப் படிக்கும் மாணவனுக் குத்தான் பரிட்சை வைக்க முடியும். அது அவன் திறமையை வெளிப் படுத்தும் சந்தர்ப்பமாகும். பள்ளிக்குச் செல்லாதவனுக்கும், பரிட்சை எழுதாத வனுக்கும் தேர்வு அவசியமில்லை. ஆகவே, உங்களின் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாதீர்கள். இருளுக்குப்பின் ஒளி என்பது போல, இரவுக்குப்பின் பகல் என்பதுபோல- துன்பத்திற்குப்பின் இன்பம் தேடிவரும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் சூரியனும் ராகுவும் சேர்ந்திருக்க, சனியும் கேதுவும் பார்க்கிறார்கள். செப்டம்பர் 1-ல்தான் ராகு- கேதுப் பெயர்ச்சி. அதுவரை, இடியும் மின்னலும்கூடிய அடாதமழை விடாது பெய்யத்தான் செய்யும். அதை சமாளிக்கவேண்டும். 7, 10-க்குடைய குரு 8-ல் மறைவு, நீசம். மனைவி, தொழில், சம்பாத்தியம், ஆரோக்கியம் எல்லா வற்றிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடிவிடாதீர்கள். கடலில் அலை எப்போது ஓயும்? எப்பொழுது இறங்கிக் குளிப்பது? அலையிலேயே மூழ்கி எழுந்திருக்கவேண்டியதுதான்! குரு- சனி பரிவர்த்தனை- 9, 10-க்குடையவர்கள் பரிவர்த்தனையாகும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், அந்த தர்மகர்மாதிபதி யோகம் உங்களைக் காப்பாற்றி, கைகொடுத்து கரைசேர்க்கும். மனைவி அல்லது மனைவிவர்க்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சந்தித்து, சமாளிக்கவேண்டும். காரியம் பெரிதா? வீரியம் பெரிதா என்றால், காரியம்தான் பெரிது. வறட்டுக் கௌரவத்தை ஒதுக்கிவிட்டுப் பணிந்துபோவது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அவருக்கு வீடுகொடுத்த குரு 7-ல் அமர்ந்து, நீசபங்கம் பெற்று ராசியைப் பார்க்கிறார். குருவும் சனியும் பரிவர்த் தனை. இதனால், தொழில், வருமானம், காரிய ஜெயம் ஆகியவற்றுக்குக் குறைவில்லை. குருவும் வக்ரம், சனியும் வக்ரம் என்பதால் வேலை, தொழில்துறையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டாலும், தொடர்ந்து தொழில் இயக்கம் இருக்கும். சிலசமயம், “தோட்டத்தில் பாதி கிணறு’’ என்பதுபோல, சில காரியங்களைக் கமிஷன் கொடுத்து சாதிக்கவேண்டும். அதனால், லாபம் குறையும். என்றாலும், சூதாட்டத்தில் விட்டதைப் பிடிக்கிறேன் என்று சூதாடுவதுபோல, ஒருசமயம் இழப்பு, ஏமாற்றம் ஏற்பட்டாலும், இன்னொருசமயம் லாபம் வரும். அது நஷ்டத்தை ஈடுசெய்யும். அதற்கு அடிப்படைக் காரணம்- 10-க்குடைய செவ்வாய் 9-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகத்தைத் தருவதுதான். மேலும், குரு, சனி பரிவர்த்தனை யோகமும் உங்களுக்குப் பாதுகாப்பாக அமையும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருப்பது நல்ல பலம். எந்தவொரு நல்ல காரியத்துக்கும் அல்லது முகூர்த்துக்கும் நாள் குறிக்கும்பொழுது 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்தால், அந்தச் செயல் சீரும்சிறப்புமாக அமையும். தோல்விக்கும் தொய்வுக்கும் இடம்வராது. அதேசமயம், அந்த சூரியன் ராகு-கேது, சனியின் பிடியிலிருப்பதால், வேகமாகப்போகும் பயணத்தின்பொழுது ""பாலம் வேலை நடக்கிறது. மாற்றுப் பாதையில் செல்லவும் (டேக் டைவர்ஷன்)'' என்னும் அறிவிப்பைப் பார்த்து, வேகத்தைக் குறைத்துக்கொண்டு செல்வதைப்போல, சில காரியங்கள் மெதுவாக இயங்கும். பயணம் தாமதப்பட்டாலும், ஆமை முயலை முந்திச்சென்று வெற்றிபெற்றதுபோல உங்கள் காரியம் நிறைவேறும். அதன் உட்கருத்து- எதிரியை எப்பொழுதும் அலட்சியமாக எடைபோடக்கூடாது என்பதுதான். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கவிஞர் வாலியிடம், ""முயல்- ஆமைக் கதையில் முயல் ஏன் தோற்றது?'' என்று கேட்டார். அவர் யோசித்துப் பார்த்து, மறுநாள், ""முயலாமைதான் காரணம்'' என்றார். உடனே, கலைவாணர், "" நீ பிழைத்துக்கொள்வாய்! ஆனால், தாமதமாகப் பிழைச்சுக்குவே'' என்று கூறினாராம். அதுபோல உங்கள் காரியமும் தாமதமானாலும் நிறைவேறிவிடும்.

jj

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 9-ல் இருக்கிறார். அவர் 10-க்கும் உடையவர். 10-க்குடையவர் 9-ல் 9-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகம் எழுதத் தொடங்கும்பொழுது, ""ஜெனனீ ஜென்ம ஸௌக்யானாம் வர்த்தனீ குலம் சம்பத் பதவி பூர்வ புண்ணியானாம்'' என எழுதப்படும். அதாவது, அந்த ஜாதகருடைய பூர்வபுண்ணிய வசமாக நல்ல தாய்- தந்தை வயிற்றில் பிறந்து(குலம்- சாதியல்ல), நற்குடிப்பிறப்பு, செல்வ சம்பத்து, பெருமைப்படும் பதவி அமையும் என்பது பலன். எந்தவொரு ஜாதகருக்கு தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறதோ, அந்த ஜாதகருக்கு மேற்கண்ட யோகம் அமையும். அதைத்தான் சேற்றில் முளைத்த செந்தாமரை எனவும், நத்தையில் பிறக்கும் முத்து எனவும் பெருமையாகச் சொல்வார்கள். தாசி குலத்தில் பிறந்தாலும் மாதவியின் வயிற்றில் பிறந்த மணிமேகலை வரலாறு போற்றும் காவியமானதுபோல, தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தாலும் நந்தனார் சரித்திரத்தில் இடம்பெற்றதுபோல யோகம் அமையும்- இதுதான் பூர்வபுண்ணியம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந் தாலும், வக்ரமாக இருந்தாலும் ஆட்சி வீடு என்பதால், உங்களுக்கு எந்தக் குறையுமில்லை. சுக்கிரன் 9-க்குடைய புதனோடு சம்பந்தம். சந்திர காவியம் எனும் ஜோதிட நூலில், ""5, 9-க்கதிபர் பாபர் சுபரானாலும் பொன்போன்ற நன்மையே புரிவார்'' என்று சொல்லப்பட்டுள்ளது. 5, 9- திரிகோண ஸ்தானம். 4, 7, 10- கேந்திர ஸ்தானம். திரிகோணம் என்பது முன்வினைப் பயனாக அதிர்ஷ்டம் வந்து அரவணைக்கும். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். முயற்சிக்கேற்ற பலனை அடைவது உறுதி. திரிகோண ஸ்தானத்திற்கு உதாரணம் துருவனும் பிரகலாதனும். கேந்திரத்திற்கு உதாரணம் விசுவாமித்திரர். பகீரதனையும் சொல்லலாம். பகீரதப் பிரயத்தனம் செய்து பூமிக்கு கங்கையை வரவழைத்தவன் என்று சொல்வார்கள். அதைத்தான் வள்ளுவர், ""தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' என்றார். அதன் உட்பொருள்- முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி நடக்கிறது. 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு இது மங்கு சனி. அதற்குமேலுள்ள வயதினருக்கு பொங்கு சனி. பொதுவாக, மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி எனச் சொல்வார்கள். பிறக்கும்பொழுது சனி இருந்தவர்களுக்கு அறுபது வயதில் மரணச்சனி என வந்துவிடும். அதற்காக அவர்கள் மரணமடைந்துவிடுவார்கள் என அர்த்தமல்ல. தொன்னூறு வயதுவரை வாழ்ந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நான்கு சனிகளைப் பார்த்தவர். மங்கு சனி, பொங்கு சனி எனச் சொல்வதெல்லாம் அலங்காரமாகச் சொல்வதுதான். அதற்கென்று தனி முக்கியத்துவம் இல்லை. மற்ற கிரக நிலைகளைப் பொருத்தும், தசாபுக்திகளைப் பொருத்தும் கோட்சார சனி உயர்வைத் தரும். பொதுவாக, எந்தவொரு ராசியானாலும் ஏழரைச்சனியில் முதல் ஐந்தாண்டுக்காலம் யோகமாக இருந்தால் மீதமுள்ள காலம் பாதகத்தைச் செய்யும். அதைப்போல முதல் ஐந்தாண்டுக்காலம் கஷ்டமாக இருந்தால் கடைசி இரண்டரை வருடங்கள் அதிர்ஷ்டமும் யோகமுமாக அமையும் என்பது பொதுவிதி. இதில், சந்திர தசை, சந்திர புக்தி சந்திப்பு இருந்தால் மட்டும் யோகம் வேலைசெய்யாது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. உண்மையான சனிப்பெயர்ச்சி என்பது 2020 டிசம்பரில்தான். (26-12-2020). அதற்குமுன்னதாகவோ பின்னதாகவோ சனி மாறியதாகச் சொல்வதெல்லாம் உண்மையல்ல. அது திருக்கணித முறை. பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என இரண்டு முறைகள் உண்டு. சனிக்கு அதிகாரம் பெற்ற கோவில் திருநள்ளாறு. அங்கு வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. ஆகவே, நாமும் அதையே பின்பற்றவேண்டும். தற்காலம் ஜென்ம ராசியில் சனி இருந்தாலும், குருவும் சனியும் பரிவர்த்தனை என்பதால், குரு- தனுசு ராசியிலும், சனி- மகர ராசியிலும் ஆட்சியாக இருப்பதற்குச் சமம். எனவே, தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியும், மகர ராசிக்காரர்களுக்கு விரயச்சனியும் நடைமுறையில் பாதிப்பு ஏற்படுத்தாது. சனி, கேது, ராகு சம்பந்தப்படுவதால் சில காரியங்களில் தடை, தாமதம் காணப்படலாம். என்றாலும், செப்டம்பர் 1-ஆம் தேதிமுதல் ராகு- கேதுப் பெயர்ச்சி ஏற்படுவதால், அதன்பிறகு அந்தத் தடையும் தாமதமும் இருக்காது.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு 2020 டிசம்பர்வரை விரயச்சனி நடக்கிறது. 26-12-2020-ல்தான் சனிப்பெயர்ச்சி. தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி மாற்றம். அதுவரை உங்கள் விரயச் செலவுகள் மிகுதியாக இருந்தாலும், எல்லாம் சுபவிரயச் செலவுகள் என மனநிறைவு அடையலாம். வீடுகட்டுதல், நிலம் வாங்குதல், டூவீலர், கார் போன்ற வாகனங்கள் வாங்குதல், பிள்ளைகளுக்கு மங்கள காரியங்கள் நடத்துதல் போன்ற சுபகாரிய விரயச் செலவுகளாக நடைபெறும். குருவும் சனியும் பரிவர்த்தனை என்பதால், 6-ஆமிடத்தை ராசிநாதன் சனி பார்ப்பதால் நல்ல காரியங்களுக்காகவும் நல்ல திட்டங்களுக்காகவும் கடன் வாங்கும் அவசியம் ஏற்படலாம். இந்தக் கடன் சுபக்கடன் எனவும், சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு, எளிதாக அடைபடும் எனவும் நம்பலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து சிலர் குடியிருப்பு மாறலாம். சிலர் தொழில் மாற்றம் செய்யலாம். சிலர் பதவி உயர்வு அல்லது இடப்பெயர்ச்சியை சந்திக்கலாம். மொத்தத்தில், விரயச்சனி உங்களுக்குப் பொங்கு சனியாக விளங்கும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சனி இருக்கும் இடத்தின் பலனைச் செய்வாரா- பார்க்கும் இடத்தின் பலனைச் செய்வாரா என்பது ஒரு கேள்வி. குரு பார்வை கோடி நன்மை. சனி பார்வை பாழ் என்பது விதி. ஆனால், சனி ராசிநாதனாகவோ லக்னநா தனாகவோ அமைந்துவிட்டால், அவருடைய பார்வை கெடுக்காது. ராகு, கேது, சனி மூன்று கிரகங்களும் அசுப கிரகங்கள் எனச் சொல்லப்படும். இவர்கள் பார்வை கெடுக்கும். நிற்கும் இடம் கொடுக்கும். அதாவது, கேதுவைப்போல கெடுப்பாரில்லை- ராகுவைப்போல கொடுப்பாரில்லை என்பதுபோல- இந்த மூவருக்கும் இருக்கும் இடத்திற்கும் பார்க்கும் இடத்திற்கும் வித்தியாசம் உண்டு. சனி லக்னாதிபதியாகவோ ராசியாதிபதியாகவோ வந்துவிட்டால் (ராகு- கேதுவுக்குச் சொந்த வீடு இல்லை), அவர் இருக்குமிடத் தையும் கெடுக்கமாட்டார்; பார்க்குமிடத்தையும் கெடுக்கமாட்டார். இது விதிவிலக்கு. ராசிநாதனே ராசியைப் பார்ப்பதால் எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை நடக்கும். 3, 6, 11 ஆகியவை சனிக்கு நன்மை தரும் இடங்களாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நடப்புக் கோட்சாரம் மீன ராசிக்காரர்களுக்குத்தான் எல்லா வகையிலும் நல்லதாக அமைகிறது. ராசிநாதன் குரு 11-ல் வக்ரம், நீசபங்கம். அவருக்கு வீடுகொடுத்த சனி 10-ல் வக்ரம். குரு- சனி பரிவர்த்தனை. 2, 9-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று 4, 7, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். செவ்வாய்க்கு வீடுகொடுத்த குரு 11-ல் நீசபங்க ராஜயோகமடைந்தும், வக்ரமடைந்தும் 3, 5, 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். திருமணம் நடைபெறவேண்டியவர்களுக்குத் திருமணம் ஏற்பாடாகும். வாரிசை எதிர்பார்த் தவர்களுக்கு வாரிசு யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக அமையும். வாகனப் பரிவர்த்தனை யோகம் உண்டாகும். பூமி, வீடு சம்பந் தப்பட்ட பலன்களும் அமையும். இதற்காகக் கடன் வாங்கும் அமைப்புகள் உருவாகும். ஜனன தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், நச்சுப்பிணி எனச் சொல்வதுபோல சிற்சிறு தொந்தரவுகள், வைத்தியச் செலவுகள் வரலாம். ஆரோக்கியக் கடவுளான தன்வந்திரி மந்திரத்தைப் பாராயணம் செய்யவும்.