ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

Advertisment

ஆரம்பம்- மீனம்.

10-11-2019- மேஷம்.

12-11-2019- ரிஷபம்.

Advertisment

14-11-2019- மிதுனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 1, 2, 3.

செவ்வாய்: சித்திரை- 2, 3.

புதன்: சுவாதி- 1, 2.

குரு: மூலம்- 1, 2.

சுக்கிரன்: அனுஷம்- 1,

கேட்டை- 1, 2.

சனி: பூராடம்- 1.

ராகு: திருவாதிரை- 3.

கேது: பூராடம்- 1.

கிரக மாற்றம்:

12-11-2019- துலாச் செவ்வாய்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு என்றாலும், தனது சொந்த நட்சத்திரமான சித்திரையில் இருப்பதால் மறைவு தோஷமில்லை. ஒரு கிரகம் ராசிநாதனாகவோ, லக்னநாதனாகவோ அமைந்து, அவர் 6, 8, 12-ல் இருந்தாலும்; பகை, நீசமாக இருந்தாலும் அந்த கிரகத்தை மேற்படி தோஷம் பாதிக்காது. இது ஜோதிட விதிவிலக்கு. எப்படியென்றால்- நோஎன்ட்ரி, ஒருவழிப்பாதையில் அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், போலீஸ் வேன், அமைச்சர் வாகனம் போனாலும் அது குற்றமில்லை; விதிவிலக்கு என்பதுபோல! அதுமாதிரி ராசிநாதன், லக்னநாதன் இருவருக்கும் விதிவிலக்கு உண்டு. மேலும் மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியை- மேஷத்தை 8-ஆம் பார்வை பார்க்கிறார். அதுவும் ஒருவகையில் சிறப்பு. எனவே மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கும், மேஷ லக்னத்தில் பிறந்த வர்களுக்கும் இக்காலம் நற்காலம்- பொற்காலம். அதற்கு இன்னொரு காரணம் உண்டு. திரிகோணாதிபதிகள் இருவரும்- 5-க்குடைய சூரியனும், 9-க்குடைய குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு ராசிநாதனும் பார்க்கிறார். சூரியன் இங்கு நீசம் என்றாலும், ராசிக்கு கேந்திரம் பெறுவதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. எனவே உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, செயல்திறன் ஆகியவை மேன்மையாகத் திகழும். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும். செய்யும் காரியங்களிலும், முயற்சிகளிலும் தளர்ச்சியில்லாத வளர்ச்சியும் வெற்றியும் உண்டாகும். திருமண யோகம், புத்திர யோகம், வாகன யோகம், சொந்த வீடு, மனை யோகம் ஆகிய எல்லா யோகங்களும் உண்டாகும். மனைவி பேரில் சொத்துகள் அல்லது ஆபரணங்கள் வாங்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து தன் ராசியைப் பார்க்கிறார். ஒரு கிரகம் தன் வீட்டைத் தானே பார்த்தால் பார்த்த இடமும், தான் நின்ற இடமும் சிறப்பும் செல்வாக்கும் அடையும். அதிலும் சுக்கிரன் ராசிநாதன். ராசிநாதனோ, லக்னநாதனோ எங்கிருந்தாலும் அந்த இடத்துக்கும் சிறப்பு. அந்த கிரகம் பார்த்த இடத்துக்கும் சிறப்பு. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, மாற்றுக்கட்சி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவதுபோல! உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், கீர்த்தி, செயல்திறன் எல்லாவற்றுக்கும் பெருமையும் பாராட்டும் கிடைக்கும். 2-ல் ராகு, 8-ல் சனி, கேது இருப்பதால் மறைமுக எதிர்ப்புகளும், முதுகுக்குப் பின்னால் விமர்சனங்களும் இருக்கத்தான் செய்யும். அதைப்பற்றிக் கவலைப்படாமல், சிந்திக்காமல் உங்கள் பயணத்தைத் தடையில்லாத பயணமாக செயல்படுத்தலாம். தனகாரகன் குரு 8-ல் மறைவதாலும்; சனி, கேது சம்பந்தம் பெறுவதாலும்; 2-ல் ராகு இருப்பதாலும் சிலருடைய அனுபவத்தில் பொருளாதாரச் சிக்கலும், நெருக்கடியும் காணப்படலாம். என்றா லும் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால், உங்களுடைய பலவீனம் (வீக்னஸ்) வெளியில் தெரியாதபடி சமாளித்து விடலாம். 2-க்குடைய புதன் 6-ல் மறைவதால், இவரிடம் வாங்கி அவரிடம் கொடுப்பதும், அவரிடம் வாங்கி இவரிடம் கொடுப்பதுமாக ரொட் டேஷன் இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணைவி அல்லது வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு ஆதரவாக, அனுகூல மாக இருப்பதால் எதை யும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். எந்த ஒரு கிரகமும் திரிகோணம் அல்லது கேந்திரத்தில் இருந்தால், அந்த கிரகத்துக்கு முழுபலம் கிடைக்கும். அதாவது எதிர்ப்பில்லாத வெற்றிக்குச் சமம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம்; கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம் என்று அடிக்கடி எழுதுகிறேன். அதாவது பூர்வபுண்ணிய வசமாக- அதிர்ஷ்டவசமாகக் கிடைப்பது லட்சுமி கடாட்சம்! விடாமுயற்சி, வைராக்கியத்தோடு செயல்பட்டு அடையும் வெற்றிப் பலன் விஷ்ணு கடாட்சம்! லட்சுமி கடாட்சம் என்பது "பேரர் செக்'; உடனடியாக, நேரடியாக வங்கியில் கொடுத்து மாற்றி, ரொக்கம் பெற்றுக்கொள்வது. விஷ்ணு கடாட்சம் என்பது "அக்கவுண்டு பேயி' செக்; வங்கிக் கணக்கில் செலுத்திப் பணம் பெறுவதுபோல! பொதுவாக, விஷ்ணு சோதனை செய்துதான் அருள்பாலிப்பார். ""அம்மா தாயே, மகாலட்சுமி சாப்பிட்டு இரண்டு நாளாச்சு. பிச்சை போடுங்க'' என்று வாசலில் பிச்சைக்காரன் சொன்னதும், வீட்டம்மா உடனே பழைய சோறோ- இட்லி தோசையோ கொண்டுவந்து பிச்சை போட்டுவிடுவாள். வீட்டய்யாவோ, ""உடம்பு நல்லாத்தானே இருக்கு! பிச்சை எடுக்காமல் வேலை வெட்டி செய்து சம்பாதிக்க வேண்டியதுதானே'' என்று கமென்ட் அடிப்பார். அவன், ""ஒரு கை கால் விளங்கலேய்யா'' என்றதும், அனுதாபப்பட்டு காசு போடுவார். இதுதான் தாயுள்ளத்துக்கும், தந்தையுள்ளத்துக்கும் உள்ள வித்தியாசம். அதனால்தான நம் நாட்டைத் "தாய்நாடு' என்றார் கள். (மதர்கன்ட்ரி). வெளிநாட்டாருக்குத் தந்தைநாடு (ஃபாதர் கன்ட்ரி). எனவேதான் நம் தாய்நாட்டை பாரத மாதாவாக வர்ணித்து, ஓவியம் வரைந்தார்கள். 4-ல் செவ்வாய் இருப்பது தாயாருக்கோ, தன் சுகத்துக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் என்றா லும், செவ்வாய் சுயசாரம் (சித்திரை) பெறுவதால் தோஷமில்லை. மேலும் குரு 7-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதும் தோஷ நிவர்த்தி. குரு பார்க்க கோடி நன்மை.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு குரு 6-ல் மறைவது ஒருவகையில் தோஷம்தான். என்றாலும் ஆட்சிபெற்றதால் பாதிப்புக்கு இடமில்லை. ஆனாலும் சனியும் கேதுவும் குருவோடு கூடியிருப்பதும்; 10-க்குடைய செவ்வாய் 3-ல் மறைவதும் குற்றம்தான். அதனால் வேலையில்லாமல் சும்மா இருக்கும்போது தெளிவாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். வேலை வந்தவுடன் உற்சாகமாக செயல்பட முடியாமல் ஆரோக்கியம் பாதிக்கும்; சுகக்குறைவாகிவிடும். என்றாலும், 10-க்குடைவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 9-க்குடைய குருவும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் (தர்மகர்மாதிபதி யோகம் என்பதால்) எந்த ஒரு காரியத்தையும் அரைகுறையாக நிறுத்திவிடாமல், சிரமத்தோடு சிரமமாக, விடாமுயற்சியோடு செயல்பட்டு நிறைவேற்றிவிடலாம். அதாவது உற்சாகமாக ஆர்வத்தோடு செயல்படுவதற்கும்- சிரமப்பட்டு ஒரு காரியத்தை செயல்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா! உங்கள் நிலை இரண்டாவதாகச் சொன்னதாகும். பரீட்சை எழுதும் மாணவன் படித்துவிட்டுப்போன பாடத்திலேயே கேள்விகள் இருந்தால், மளமளவென்று சீக்கிரமாக எழுதிவிடுவான். படிக்காமல்போன மாணவன் யோசித்து யோசித்து எழுதி, 10-க்கு 7 கேள்விக்கு மட்டும் பதில் (விடை) எழுதுவதுபோல! இருவரும் பாஸ் செய்தாலும், முன்னவன் 100-க்கு 100 வாங்கலாம். பின்னவன் 100-க்கு 50 வாங்கலாம். ஒரு திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியைப் பார்த்து, ""நான் எட்டாவது வகுப்பு பாஸ் அண்ணே! நீங்கள் பத்தாம் வகுப்பு பெயில் அண்ணே!'' என்று சொல்வதுமாதிரிதான். இதுதான் பாக்கியாதிபதி யோகம். உங்களைத் தோல்வியடையச் செய்யாமல் வெற்றி பெறச் செய்வார்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ராசிக்கு 4-ல் கேந்திரம் பெறுவதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. நீசகிரகம் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம், லக்னகேந்திரம், சந்திர கேந்திரம் பெற்றால், நீசகிரகம் நீசபங்க யோகம் அடையும். லக்னாதிபதி அல்லது ராசியதிபதி சம்பந்தம் பெற்றால் நீசபங்க ராஜயோகமாக மாறும். உதாரணம்- ஆழ்குழாய்க் கிணற்றுப் பள்ளத்தில் விழுந்த சுஜித் என்ற சிறுவனை அரசுத்தரப்பில் மீட்க பல லட்சம் செலவு செய்தும், பலனில்லாமல் இறந்துவிட்டான். அவன்மேல் அனுதாப அலைகள் ஆறுதலாக மாறி, முதல்வரே தேடிவந்து பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், நஷ்டஈட்டுத்தொகையும் வழங்கினார். இதுதான் நீசபங்க ராஜயோகம்! அந்தச் சிறுவன் இயற்கை மரணம் அடைந்திருந்தால், இந்த அளவுக்கு அனைவரது கவனத்தையும், அனுதாபத்தையும் பெற்றிருக்க முடியுமா? இதுவும் மரணம்தான்- அதுவும் மரணம்தான்! இன்னொரு உதாரணம்- யாராவது ஒரு மனிதரை வெட்டிக்கொன்றாலோ- சுட்டுக்கொன்றாலோ அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகிவிடுகிறது. தண்டிக்கப்பட்ட கைதியை சிறையில் தூக்கில் மாட்டிக்கொன்றால் அது குற்றமல்ல; சட்டம்! அதற்கு நீதிபதி, டாக்டர்கள் என்று சாட்சிகள் வேறு! அதே போல யுத்தத்தில் எதிரிகளை எந்த அளவுக்கு அதிகமாக சுட்டுக்கொல்கிறார்களோ அந்த அளவுக்கு பாராட்டு, வீரசக்ரா பட்டம், பரிசு! அதுவும் கொலைதானே- இது என்ன நியாயம்? அங்கேதான் தர்மம் தலைதூக்குகிறது. அது கொலையல்ல- சம்ஹாரம்! அதர்மத்தை அழிப்பது சம்ஹாரம் (சூரசம்ஹாரம் சத்ருசம்ஹாரம்). இந்த தத்துவத்தையே பாரத யுத்தக்களத்தில் கண்ணன்- அர்ஜுனனுக்குப் புரியவைக்கிறார்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

mm

கன்னி ராசிநாதன் புதன் 2-ல் ராகு சாரத்தில் இருக்கிறார். ராகு 10-ல் சுயசாரம் பெறுகிறார். ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற குரூர கிரகங்களுக்கு 1, 4, 7, 10 என்ற கேந்திர ஸ்தானங்கள் வலுவானது. குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்களுக்கு 1, 5, 9 என்ற திரிகோண ஸ்தானங்கள் வலுவானது. திரிகோணம் என்பது தெய்வீக அருளால் லட்சுமி கடாட்சமாக வரும் பலன்! கேந்திரம் என்பது விஷ்ணு கடாட்சமாக முயற்சி களுக்கேற்ற வெற்றியாக வரும் பலன்! அதனால்தான் திரிகோணத்தை லட்சுமி ஸ்தானம் என்றும்; கேந்திரத்தை விஷ்ணு ஸ்தானம் என்றும் ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அதைத்தான் திருவள்ளுவப் பெருமானும், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். அதாவது தன் மெய்வருந்த என்றால், தன்னுடைய முயற்சிக்கேற்ற என்பது பொருள். முயற்சி- சாதாரண முயற்சி, தீவிர முயற்சி என்று இருவகைப்படும். புராணத்தில் பகீரதன் என்ற மன்னன் தேவலோகத்தில் உள்ள கங்கையை பூமிக்கு வரவழைக்க கடினமான முயற்சி மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தான் "பகீரதப் பிரயத்தனம்' என்பார்கள்! இதைத்தான் வள்ளுவர் "தன் மெய்வருத்த' என்றார். நம்பிக்கை, வைராக்கியம், விடாமுயற்சி இம்மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். கலைத்துறையில் பிரபலமடைய வேண்டுமென்று கனவு கண்ட நான்- வைராக்கியத்தால் ஜோதிடத் துறையில் பிரபலமாகிவிட்டேன். (இதுவும் ஒருகலைதான்). ராஜயோகத்தில் திளைத்த கௌசிக மன்னர் வைராக்கியத்தால் தவமிருந்து, சாதனை புரிந்து விசுவாமித்திரர் ஆகி பிரம்மரிஷிப் பட்டம் பெற்றார். குளவி ஒரு புழுவைக் கொத்தி அதைச்சுற்றி கூடு அமைத்து, ரீங்காரமிடுமாம். அந்தப் புழு பிறகு குளவியாக மாறி வெளிவடுமாம். அந்த ரீங்காரம்தான் "ஓம்'காரம்! ஆக, நீ எதுவாக மாற விரும்புகிறாயோ- வைராக்கியமும் சாதனையும் இருந்தால் நீ அதுவாகவே மாறலாம் என்பதுதான் இதன் தத்துவம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் பலம்பெறுகிறார். துலா ராசிக்கு 5-க்குடைய சனியின் சாரத்திலும், 9-க்குடைய புதன் சாரத்திலும் சஞ்சாரம் செய்கிறார். அனுஷம், கேட்டையில் சுக்கிரன் சஞ்சாரம். அனுஷம் சனியின் நட்சத்திரம். கேட்டை புதனின் நட்சத்திரம். ஆக, இரண்டு திரிகோணாதிபதி சாரம்பெற்ற சுபகிரகமான சுக்கிரன், உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் முழு அளவில் வெற்றிபெறச் செய்வார் என்று நம்பலாம். ஜென்ம ராசியில் சூரியன் (வெற்றி, லாபத்தைக் குறிக்கும் 11-ஆம் இடத்து அதிபதி) நீசம் பெற்று, விரயாதிபதி புதனோடு சேர்வதால், அவ்வப்போது சிறுசிறு தடைகளும், தாமதமும், குறுக்கீடுகளும் எதிர்ப்பட்டாலும், அவையெல்லாம் வேகத்தடை (ஸ்பீடு பிரேக்) மாதிரிதானேதவிர, பயணத்தை நிறுத்தும் சக்தியில்லை. பயணம் தடைப்படாது. மேலும் 3-ஆம் இடம் தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானம், நண்பர்கள் ஸ்தானம். அந்த வீட்டுக்குரிய குரு அங்கு ஆட்சிபெறுவதால், உங்கள் முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் உங்களின் உடன்பிறந்தவர்களும், உற்ற நண்பர்களும் உதவியாகவும், ஆதரவாகவும் இருந்து அனுகூலம் புரிவார்கள். 3-ஆம் இடத்தை செவ்வாயும் பார்ப்பதால், இதுவரை பகையாக உள்ள பங்காளிகளும் நண்பர்களாக மாறி, உதவும் கரங்களாக அமைவார்கள். அதேபோல மனைவிவகை உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக மாறுவார்கள். ஒரு அசுரனை வதம்செய்ய கிருஷ்ண பகவானுக்கு பாமா உதவியாக இருந்தமாதிரி, உங்கள் வெற்றிக்கு மனைவியே உறுதுணையாக இணைவார். 9-ல் உள்ள ராகு, ஆன்மிக உணர்வுகளையும் உருவாக்கலாம். தந்தைவழி உறவில் சங்கடங்களையும் உருவாககலாம். என்றாலும் குரு பார்ப்பதால்- கோடி தோஷம் விலகும் என்பதால் நன்மையுண்டு.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் தனது சுயசாரம் (சித்திரை) பெறுகிறார். அது புதன் வீடு- செவ்வாய்க்குப் பகைவீடு என்றாலும், இப்போது தற்காலிக நட்பு வீடாக மாறும். சுயசாரம் பெறும் கிரகத்துக்கு தோஷம் விலகும். மேலும் குருவை செவ்வாய் பார்ப்பதும் தோஷ நிவர்த்தி. "நல்லாரைக் காண்பதும் நன்று; நல்லாரோடு இணங்கி இருப்பதும் நன்று; நல்லார் சொல்லைக் கேட்பதும் நன்று' என்று நல்லவர்களுக்கு இலக்கணம் சொன்னார்கள். குரு எப்போதும் நல்லவர்தான். அதாவது கங்கா நதி எப்போதும் புனித நதி. அதில் கழிவு நீர் கலந்தாலும் அதன் புனிதம் கெடாது. அந்தப் பெருமை இன்றைக்குப் பதவிக்கும் உண்டு. ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கும், நீதித்துறையில் உயர்பீடத்தில் இருப்பவர்களுக்கும், ஆலயங்களில் சுவாமியைத் தொட்டு அலங்கரித்துப் பூஜைசெய்யும் அர்ச்சகர் களுக்கும் குரு ஸ்தானம் உண்டு. அவர்களின் சொந்த நடவடிக்கைகள் எப்படியிருந்தாலும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, வணங்கத் தக்கவர்களாவார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு, அவர்களின் பதவி, அவர்களின் மதிப்பு, மரியாதையை உயர்த்தும். அந்தவகையில் வாத்தியார்- வாத்தியார்தான்! குரு- குருதான்! நவகிரகங்களில் குருவும் சுக்கிரனும்தான் சுபகிரகங்கள்; மரியாதைக்குரியவர்கள். அதிலும் குரு- தேவர்களுக்கு குரு. சுக்கிரன்- அசுரர்களுக்கு குரு. ஆக, முழுசுபர்- குருதான். குரு பார்க்க அல்லது சேர கோடி பாவம் போகும்- கோடி நன்மை என்பது பழமொழி. எனவே 2-ல் சனி, கேது; 9-ல் ராகு, செவ்வாய், சனி பார்வை இருந்தாலும் குரு சம்பந்தம் பெறுவதால் எல்லாம் சுபமாகிவிடுகிறது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு அதிபதி குரு அங்கு ஆட்சியாக இருக்கிறார். எனவே உங்களுக்கு ஜென்மச்சனி நடந்தாலும் பாதிப்பு இருக்காது. ரேஸில் சருக்கிக் கீழே விழுந்த குதிரை மீண்டும் துள்ளியெழுந்து ஓடுவது போல, குறுக்கீடுகளையும் தடைகளையும் கடந்து முயற்சிகளைச் செய்து முன்னேறலாம். அதேசமயம் கேது- ராகு சம்பந்தம் கிடைப்பதால் கற்பனைக் கவலைகளும் கௌரவப் பிரச்சினைகளும் உருவாகும். அவற்றைக் கடந்து செயல்படவேண்டும். பொதுவாக "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்றும், "நீரடித்து நீர் விலகாது' என்றும் சொல்வார்கள். அதை நினைவில் நிறுத்தி "போனால் போகட்டும் போடா' என்று பெருந்தன்மையாக நடந்துகொண்டால் வம்பும் வராது- வழக்கும் வராது. எல்லாரும் நல்லவரே என்ற நியாயம் புலப்படும்.' "திருவிளையாடல்' திரைப்படத்தில் "தருமி'யாக நடிக்கும் நாகேஷ், "பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் உண்டு- குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் உண்டு' என்று சொல்வதுபோல, மற்றவர்கள் செய்யும் குற்றங்களே உங்களுக்குப் பெரிதாக- பூதக்கண்ணாடியில் பார்ப்பதுபோல தெரியும். தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னித்து ஏற்பது மாமனிதனாக உயர்த்தும் மாண்பு! அண்ணல் காந்தியடிகளின் இயற்பெயர் கரம்சந்திர மோகனதாஸ் காந்தி! அவருடைய வாய்மையும் தூய்மையும் அவரை சத்திய சோதனையில் ஜெயிக்கவைத்து, மகான் காந்தியடிகளாக மாற்றியது. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் இராமலிங்க வள்ளலார். அவர் அருளியது "திருவருட்பா'. இலங்கையில் நாவலர் என்று ஒரு தமிழ்ப் பெரியவர். அவர் வள்ளலார்மேல், "அது திருவருட்பா இல்லை; மருட்பா' என்று வழக்கு தொடர்ந்தார். ஆங்கிலேயர் காலத்து ஜட்ஜ்முன் வழக்கு நடந்தது. வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்ததும், அமர்ந்திருந்த நாவலர் எழுந்து மரியாதை செலுத்தினார். நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 11-ல் மறைவு என்றாலும், மகர ராசிக்கு ராஜயோகாதிபதி யான சுக்கிரன் சாரம் (பூராடம்) பெற்று, குருவின் வீட்டில் சம்பந்தம். அதனால் ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெற்றாலும், சுபவிரயமாக இருக்கும். வீண்விரயம் அல்லது தண்டச்செலவு விரயமாக இருக்காது. வீடு, மனை, வாகனம் போன்ற சுபமுதலீடாகவும், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்கும் முதலீடாகவும்தான் அமையும். உதாரணமாக டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டைனிங் டேபிள், கட்டில், மெத்தை போன்ற பொருட்கள் வாங்கலாம். அல்லது சொந்த வீட்டில் மாடி எழுப்புவது, சீர்திருத்தம் செய்வது, குளிர்சாதனம் (ஏ.ஸி) பொருத்துவது போன்ற செலவுகள் சுபச்செலவுகள்தான்! கேது- ராகு சம்பந்தம் இருப்பதால், சிலர் சொந்தப் பணம் கையிருப்புப் பற்றாக்குறையால், தவணைக்கடன் வாங்கி மாதந்தோறும் எளிய தவணை (ஈ.எம்.ஐ.) செலுத்தலாம். ஜாதகத்தில் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடந்தால் விரயச்சனி வேதனைச்சனியாகவும், சோதனைச் சனியாகவும் மாறலாம். அப்படிப்பட்டவர்கள் ஜாதகரீதியான தசாபுக்திகளை அனுசரித்து, தேவையான பரிகாரம் தேடிக்கொள்ளலாம். சிவன் கோவிலில் திங்கட்கிழமைதோறும் காலையில் பாலாபிஷேகம் செய்யலாம். அல்லது ஏதாவது ஒரு திங்கட்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திரத்தில் ருத்ரஹோமம் வளர்த்து, சிவன்- அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம். அதனால், மலைபோல வரும் துன்பங்கள் பனிபோல விலகிப்போகும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் 11-ல் பலம். பொதுவாக சனி, செவ்வாய், ராகு- கேது, சூரியன் முதலிய அசுப கிரகங்களுக்கு 3, 6, 11 போன்ற ஸ்தானங் கள் நற்பலன் தரும் ஸ்தானமாகும். சனி, கேது, ராகு மூவரும் 11-ஆம் இடத்துக்கு தொடர்புள்ள- அதேசமயம் அவர்களுக்கு வீடுகொடுத்த குரு அங்கு ஆட்சிபெற- இவர்களை செவ்வாயும் பார்க்கிறார். மேலும் 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே கோட்சாரம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி, குதூகலிக்கச் செய்யும் என்பதை நூற்றுக்கு நூறு நம்பலாம். தசாபுக்திகளும் ஜாதகரீதியாக ஆதரவாக அமைந்துவிட்டால் நீங்களே பாக்கியவான்- ராஜயோகக்காரர்! 5-ல் உள்ள ராகுவும்; அவரைப் பார்க்கும் குரு, சனி, கேதுவும் உங்கள் எண்ணங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவர். 5-ல் ராகு இருந்தால் புத்திர தோஷம் என்பார்கள். ஆனால் அனுபவத்தில் அது சரியல்ல! நான் பார்த்த பலருக்கு- 5-ல் ராகு இருப்பவர்களுக்கு ஆண் வாரிசுகள் பிறந்து, செல்வாக்காக இருக்கிறார் கள். "தோன்றிற் புகழோடு தோன்றுக' என்ற வள்ளுவரின் வாக்குப்படி புகழும் பெருமையும் உள்ள பிள்ளைகளைப் பெற்றெடுக்கலாம். தெய்வீகத்தில் தந்தைக்கு மிஞ்சிய பெருமையும் புகழும் பெற்றவர், தந்தைக்கே பாடம் சொன்ன பாலமுருகன். புராணத்தில் தந்தை ராமருக்கே பாடம் சொன்னவர்கள் லவன்- குசன்! சரித்திரத்தில் தந்தையின் புகழை மிஞ்சியவர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரகாந்தி, ராஜீவ்காந்தி அதேபோல அர்ஜுனனை மிஞ்சிய புகழ்பெற்றவன் அபிமன்யு! உங்களுக்கும் அந்தப் பெருமை உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி! அவரை 9-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்துவிட்டால்போதும்- அவருக்கு குருவருளும் திருவருளும் பெருகிவிடும். இந்த உலகத்தில் உள்ள எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கவேண்டும். அதற்கு ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டும். அதைத்தான் "எடுத்து வச்சாலும் கொடுத்துவைக்க வேண்டும்' என்பார்கள். அந்த யோகம் ஒருவருக்கு அமையவேண்டுமென்றால், குருவருளும் திருவருளும் அவசியம்! அதனால் தான் ஒரு ஜாதகர் பிறக்கும்போதே "ஜெனனீ ஜென்ம ஸௌக்யானாம் வர்தனீ குலம் சம்பதாம் பதவீ பூர்வபுண்யானாம்' என்று எழுதி, ஜாதகம் கணிக்கிறார்கள். குலம் என்றால் தேவர், செட்டியார், அந்தணர் போன்ற ஜாதிகள் இல்லை. நற்குடிப்பிறப்பு, நல்ல தாய்- தந்தை வயிற்றில் ஜெனிப்பது (உருவாகுதல்). பிறகு பட்டம், பதவி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அடையவேண்டும். பூர்வபுண்ணியம் வலுவாக இருந்தால் இவையெல்லாம் அமையும். 9-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 10-க்குடைய குருவைப் பார்ப்பதும் உங்களுக்கு மேற்கண்ட யோகமும் பூர்வபுண்ணியமும் வலுவாக உண்டு என்பதைக் காட்டுகிறது. குருவருள் இருந்தால் திருவருள் பெருகும். திருவருள் இருந்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். எண்ணியது ஈடேறும். விரும்பியது தேடிவரும். "எண்ணியா எண்ணியாங்கு எய்துப- எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்று வள்ளுவர் சொல்வார். அதற்கு உதாரணம் விஸ்வாமித்திரர்தான்! வைராக்கியமும் சாதனையும் இருந்தால் எண்ணியவை ஈடேறும்.