ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
9-2-2020- சிம்மம்.
11-2-2020- கன்னி.
13-2-2020- துலாம்
15-2-2020- விருச்சிகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அவிட்டம்- 1, 2, 3.
செவ்வாய்: கேட்டை- 4, மூலம்- 1, 2.
புதன்: சதயம்- 1, அவிட்டம்- 4.
குரு: பூராடம்- 3.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 1, 2, 3, 4.
சனி: பூராடம்- 4.
ராகு: திருவாதிரை- 2.
கேது: மூலம்- 4.
கிரக மாற்றம்:
9-2-2020- தனுசு செவ்வாய்.
10-2-2020- புதன் வக்ரம் ஆரம்பம்.
13-2-2020- கும்பச் சூரியன்.
14-2-2020- புதன் அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவென்றாலும், ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷமில்லை. 9-க்குடைய குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதும் சிறப்பு. 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் 9-ல் சேர்ந்திருப்பது தர்மகர் மாதிபதி சேர்க்கையாகும். எனவே, எந்த கிரகம் எப்படியிருந்தாலும் சரி; எந்த தசாபுக்தி நடந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால், உங்களை எந்தக் கேடுகெடுதியும் அணுகாது. 5-க்குடைய சூரியன் 10-ல் ராசிநாதன் செவ்வாயின் சாரம் (அவிட்டம்) பெறுவதால் செல்வாக்கும் செயல்திறனும் கௌரவமும் மதிப்பு, மரியாதையும் குறைவில்லாமல் நிறைவாகத் திகழும். 3-ல் ராகு நின்றாலும், அவரை குரு, சனி, ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால், சகோதரவகையில் சகாயமும் உதவியும் அமையும். அதேபோல நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். உடன்பிறந்தார்வகையில் சுபமங்களச் செலவுகளும் விசேஷங்களும் நடக்கும். பந்தபாசமும் சொந்தச் சுற்றமும் சிந்தையைக் குளிரவைக்கும். கடந்தகால வருத்தங்களும் பகை யுணர்வும் மாறி, இணக்கமும் நெருக்கமும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் உண்டாகும். பொருளா தாரத்தில் நிறைவேற்படும்.
பரிகாரம்: பழநிமலையில் உள்ள போகர் ஜீவசமாதியையும் முருகப்பெருமானையும் வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம்! 11-ஆமிடம் லாப ஸ்தானம்; ஜெய ஸ்தானம். 10-ல்- தொழில், வாழ்க்கை ஸ்தானத்தில் 2, 5-க்குடைய புதன் வீற்றிருந்து 7-க்குடைய செவ்வாயின் பார்வையையும், 9, 10-க்குடைய சனியின் பார்வையையும் பெறுகிறார். எனவே, திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகமும், திருமணமானவர்களுக்கு வாரிசு யோகமும், வாழ்க்கை முன்னேற்றமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு தொழில் வளர்ச்சியும் செல்வாக்கும் ஏற்படும். சிலர் மனைவிபேரில் தொழில் செய்யலாம் அல்லது மனைவியைக் கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளலாம். மனைவிவகை உறவினர் களையும் கூட்டுசேர்க்க லாம். வேறிடங்களில் கிளைகள் ஆரம்பிக்கலாம். இதுவரை சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் இனி சொந்தத் தொழில் அல்லது கூட்டுத்தொழில் ஆரம்பிக்கலாம். ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடப்பதால் இது பொங்கு சனியாகும்; வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். கைநிறைய சம்பாத்தியம் தேடலாம். வேலையில் இருப்போர் பதவி உயர்வு அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சியை சந்திக்கலாம். சிலர் குடியிருப்பு மாறலாம். வாடகை வீட்டிலிருந்து ஒத்தி வீடு அல்லது சொந்த வீடு மாறலாம்.
பரிகாரம்: சிங்கம்புணரியில் வாத்தியார் கோவில் எனப்படும் முத்துவடுகநாதர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 6, 11-க்குடைய செவ்வாயும், 8, 9-க்குடைய சனியும் அவரைப் பார்க்கிறார்கள். 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம். வாழ்க்கை முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளையெல்லாம் எதிர்பார்க்கலாம். பூர்வீகச் சொத்துப் பிரச் சினைகளிலுள்ள விவகாரங் களெல்லாம் அனுகூலமாக மாறும். வழக்கு வியாஜ்ஜியங்கள் சாதகமாகத் தீர்ப்பாகும். புதன் 1, 4-க்குடையவர் என்பதால், பூமி, வீடு, வாகனம் போன்றவகையில் உங்கள் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படும். சிலர் வாகனப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். அது சம்பந்தமான கடன் முயற்சிகள் கைகூடும். அவை சுபக்கடன் தான். எளிய தவணைக்கடன் என்று ஆறுதல டையலாம். 7-ல் குரு ஆட்சி. களஸ்திரகாரகன் சுக்கிரன் உச்சம். எனவே, திருமணமாகாதவர் களுக்குத் திருமண யோகமும், திருமணமானவர்களுக்கு மனைவிவகையில் யோகமும் உண்டாகும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஓத சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். திருவாதிரையன்று ஜீவசமாதி யானார். பிரதி திருவாதிரையில் சிறப்புப் பூஜை நடைபெறும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு, சூரியன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 5-ல் இருக்கும் செவ்வாய் தனுசுக்கு மாறி, அவரும் ராசியைப் பார்ப்பார். 9-ல் சுக்கிரன் உச்சம். குடும்பத்தில் கணவருக்கும் மனைவிக்கும் சம்பாத்திய யோகம் உண்டாகும். ஒருவர் சம்பாத்தியம் குடும்பச் செலவுக்கும், மற்றவர் சம்பாத்தியம் சேமிப்புக்கும் பயன்படும் 12-ஆமிடத்து ராகுவை சனி, குரு, செவ்வாய், கேது அனைவரும் பார்ப்பதால், தவிர்க்கமுடியாத அலைச்சல்களும் பயணங்களும் உண்டாகும். அவை ஆதாயகரமானதாகவும், லாபகரமானதாகவும், அனுகூலமானதாகவும் அமையும். 6-ல் குரு, சனி, கேது இருப்பதால், சிலருக்கு கடன்கள் ஏற்பட்டாலும் அவை பெரும் பாலும் சுபக்கடன் எனலாம். வரவேண்டிய காசு பணம் வந்துசேரும். அதனால் கொடுக்கவேண்டிய பாக்கிகளைக் கொடுத்து நட்பை வளர்க்கலாம். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சோமப்பா சுவாமிகள் மற்றும் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைவு பெற்றாலும், ராஜயோகாதிபதி செவ்வாயின் சாரம்பெறுகிறார். (அவிட்டம்). சூரியனுக்கு வீடுகொடுத்த சனி 5-ல் திரிகோணம். அவருடன் 5-க்குடைய குரு ஆட்சி. எனவே, உங்கள் முயற்சிகளில் தளர்ச்சிகளும், சந்தேகங்களும், அவநம்பிக்கையும் ஏற்பட்டாலும் வளர்ச்சி தடைப்படாது. வேதனைகளை விலக்கி சாதனைகளைப் படைக்கலாம். சோதனைகளை வெற்றிகொள்ளலாம். 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானத்துக்கு திரிகோண ஸ்தானமாகும். ஆகவே, தொழிலுக்காகவும், தொழில் முன்னேற்றத்திற்காகவும் கடன் வாங்கலாம். அவற்றை சுபக்கடனாக ஏற்றுக்கொள்ளலாம். பொதுவாகக் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, அவரவர் சூழ்நிலைக்குத்தக்கபடி கடன் வாங்கித்தான் தொழில் செய்கிறார்கள். நாணயமாகக் கடனை அடைத்து தொழில்புரி கிறவர்கள் உயர்வடைகிறார்கள். நாணயம் தவறுகிறவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். "கொடுத்து வாங்கினால் கோடி புரட்டலாம்' என்பது பழமொழி!
பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் பகுதியிலிருக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமி களின் ஜீவசமாதியை வழிபடவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைந் தாலும், 3, 8-க்குடைய செவ்வாய் புதனைப் பார்ப்பதோடு, புதன் 10-ல் உள்ள ராகு சாரம்பெறுகிறார். எனவே, தொழில் கெடாது. 10-க்குடையவர் 10-க்குத் திரிகோணத்தில் இருப்பதால், தொழில் மேன்மையும், வளர்ச்சியும், முன்னேற்றமும் உண்டாகும் என்பது உறுதி. மேலும் 10-க்கு 6, 11-க்குடைய செவ்வாயும் புதனைப் பார்ப்பதால், தொழில்சம்பந்தமான கடன் ஏற்பட்டாலும் அவை விருத்திக்கடன், லாபக்கடன். பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் கையிருப்பு ரொக்கத்தைப் பயன்படுத்தாமல், அரசுக்கடன் போன்றவகையில் வாங்கித்தான் தொழிலைப் பெருக்குவார்கள். சிலர் நாணயமாக நடந்து கௌரவமாக வாழ்வார்கள். சிலர் தவறானவழிகளில் செயல்பட்டு தலைமறைவாக இருப்பார்கள். செவ்வாய் கடன்காரகன். அவர் 11-க்கும் உடையவர் என்பதால், கடன் வாங்கித் தொழில் செய்வதிலேயே பலர் லட்சாதிபதியாகலாம்; கோடீஸ்வரராகலாம்.
பரிகாரம்: மானாமதுரை வழி இடைக்காட்டூரிலுள்ள இடைக்காடர் சந்நிதி சென்று வழிபடவும். நவகிரகங்களை திசை மாற்றியவர்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம். ஏற்கெனவே குறிப்பிட்டமாதிரி, 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானத்துக்கு பாக்கிய ஸ்தானம். அங்கு ராசிநாதன் உச்சம் பெறுவதால், கடன் இருந்தாலும் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, கௌரவம் பாதிக்காது. மேலும் சுக்கிரன் ஜலகிரகம். ஜலம் (நீர்) சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறவர்கள் எல்லாருக்கும் இக்காலம் நற்காலம், பொற்காலம். உணவு, நீர், காபி, டீ, சர்பத் கடை, ஓட்டல் போன்ற தொழிலிலில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தற்போது வளர்ச்சியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். அதேபோல சுக்கிரன் ஆடை, அலங்காரம், கலைத்தொழில் சம்பந்தப்பட்ட கிரகம். அந்த வகையில் ஈடுபாடுடையவர்களுக்கும் கோட்சார கிரகம் வளர்ச்சி, முன்னேற்றம் தரும். சாதாரண மாக இருப்பவர்களை லட்சாதிபதிகளாக்கி விடும். அதற்கேற்றமாதிரி பிறந்த ஜாதக அமைப்பும், தசாபுக்திகளும் யோகமாக அமையவேண்டும் என்பது விதி.
பரிகாரம்: பழநி போகும் வழியில் கணக்கன்பட்டியில் உள்ள மூட்டை சுவாமிகள் என்னும் பழநி சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் அங்கு ஆட்சியாக இருக்கிறார். 4, 7, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். 4- பூமி, வீடு, வாகனம், சுக ஸ்தானம். 7- கணவன்- மனைவி ஸ்தானம். 8- சஞ்சலம், குழப்ப ஸ்தானம். அதனால் சிலர் பூமி, வீடு, வாகனம் வாங்குவதிலும், குடும்பத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களை நடத்துவதிலும் சக்திக்குமீறிய செயலிலில் இறங்கி, ஆடம்பரமாக செலவு செய்வதால் சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்கலாம். இது ஏழரைச்சனியின் திருவிளையாடல். இருந்தாலும், சனியோடு குரு சம்பந்தப்பட்டு, ராசிநாதன் செவ்வாய் ஆட்சிபெறுவதால் ஏழரைச்சனி உங்களை பாதிக்காது. இது எத்தனையாவது சுற்றாக இருந்தாலும், இந்த கிரக அமைப்பின்படி பொங்குசனியாகவே செயல்படும். தேங்கி நிற்கும் பல காரியங்களை வைராக்கியத்தோடு செயல்பட்டு நிறைவேற்றலாம். வேதனைகளையும் சோதனைகளையும் கடக்கலாம்.
பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலத்தில் உள்ள ஸ்வயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். (சாமியார்கரடு பஸ் ஸ்டாப்).
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடைபெற்றாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு ஆட்சிபெறுவதால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. என்றாலும் கேது சம்பந்தப்பட்டு ராகு பார்ப்பதால், வேலை செய்கிறவர்களுக்கு வேலையில் டென்ஷன் அதிகமாகும். வீட்டிலிலிருக்கிறவர்களுக்கு சரீர சுக பாதிப்பும் காணப்படும். எனினும் குரு ஆட்சிபெறுவதாலும், சுக்கிரன் உச்சம் பெறுவதாலும் சங்கடங்களையும், சஞ்சலங்களையும் உதறித் தள்ளிவிட்டு முன்னேறலாம். தளர்ச்சிகள் நீங்கி வளர்ச்சி பெறலாம். சிலருக்கு கற்பனை பயமும், கற்பனைக் கவலையும் ஏற்பட்டாலும், மனோ பலத்தாலும், தெய்வ பலத்தாலும் அவற்றைத் தூக்கியெறிந்து, தூசிதட்டி தூள் பரத்தலாம். 7-ல் ராகு நிற்பதும், அவரை செவ்வாய் பார்ப் பதும் கற்பனை பயத்திற்குக் காரணமாகும். "எல்லாம் நன்மைக்கே' என்ற தத்துவத்தை நடைமுறையில் கடைப்பிடித்தால், துன்பச் சூழ்நிலையும் இன்பச் சூழ்நிலையாக மாறும்.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டி சென்று ஜோதி மௌனகுரு நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசியில் அட்டமாதிபதி சூரியன் நிற்க, ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். மகர ராசிக்குத் தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. ஜாதகரீதியாக சந்திரதசையோ சந்திர புக்தியோ நடந்தால், இந்த ஏழரைச்சனியும் விரயச்சனியும் வேதனைச்சனியாக சோதனைபுரியும். என்றாலும் 11-ல் செவ்வாய் ஆட்சிபலம் பெறுவதாலும், மகர ராசிக்கு 5, 10-க்குடைய சுக்கிரன் உச்சம் பெறுவதாலும் எல்லா சோதனைகளையும், வேதனைகளையும் விரட்டி ஜெயிக்கலாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல, உங்கள் வைராக்கியமும் மனவலிலிமையும் உங்களுக்கு தனிப்பலமாக அமைந்துவிடும். அதுதான் 11-ஆமிடத்து செவ்வாய் உங்களுக்குக் கொடுக்கும் வெகுமதி. செலவுகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல, அதை சமாளிக்கிறவகையில் வரவுகளுக்கும் இடமுண்டு. அட்ட மாதிபதி சூரியன் ராசியில் இருப்பதால் ஒருபுறம் கவலை இருந்தாலும், சூரியன் கும்பத்துக்கு மாறும்போது (13-ஆம் தேதி) தைரியம் உருவாகும்.
பரிகாரம்: திருச்சி அருகில் திருவெள்ளறை யில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல் பலம்பெறுகிறார். பொதுவாக ராகு, கேது, சனி போன்ற கிரகங்களுக்கு 3, 6, 11-ஆமிடங்கள் யோகமான இடங்களாகும். 11-ல் ஆட்சிபெற்ற குருவும், அவருடன் இணைந்த சனியும் கேதுவும் உங்களுக்கு வற்றாத செல்வத்தையும், தட்டாத நிலையை யும் தருவது உறுதி. பொதுவாக "சனி கொடுத்தால் எவர் தடுப்பார்' என்பது பழமொழி. தெய்வங்களில் ஆஞ்சனேயரும், கிரகங்களில் சனியும் கொடுக்கும் யோகத்தையும் செல்வத்தையும் மற்ற எந்த கிரகத்தாலும், தெய்வத்தாலும் அழிக்கமுடியாது. சனியின் பாதிப்பிலிலிருந்து விடுபட்ட தெய்வங்கள் விநாயகரும், ஆஞ்சனேயரும்தான். ஆஞ்சனேயருக்கு சமமாக கணபதி தரும் செல்வத்தை மற்ற கிரகமோ தெய்வமோ அழிக்கமுடியாது. இதேமாதிரி வலிலிமை ராகுவுக்கும் உண்டு. கும்ப ராசிக்கு 3, 10-க்குடைய செவ்வாய் 10-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பது ஒரு சிறப்பு, அதேபோல 11-ல் ஆட்சிபெறும் குருவும், 2-ல் உச்சம்பெறும் சுக்கிரனும் தனித்துவமுடையவர்கள்.
பரிகாரம்: மதுரை- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுவாமி சந்நிதி பின்புறமுள்ள வல்லப சித்தரை வழிபடவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. மீன ராசிக்கு 3, 8-க்குடைய சுக்கிரன் சாரத்தை குரு பெறுகிறார். (பூராடம்). சுக்கிரன் ஜென்மத்தில் உச்சம். பொதுவாக குருவுக்கும் சுக்கிரனுக்கும் பகை என்று சொல்வார்கள். அந்த வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். குரு- தேவர்களுக்கு குருநாதர் ஆவார். சுக்கிரன்- அசுரர்களுக்கு குருநாதர் ஆவார். அதாவது குரு என்ற வியாழன் தேவர்களின் வக்கீல். சுக்கிரன் அசுரர்களின் வக்கீல். கோர்ட்டில் இரண்டு வக்கீல்களும் எதிரணியில் நின்று வாதி பிரதிவாதிக்கு வக்காலத்து வாங்கி காரசாரமாக வாதாடினாலும், கோர்ட்டுக்கு வெளியில் இருவரும் சேர்ந்துபோய் காபி குடிப்பார்கள். அதுபோலத்தான் தேவ குருவும் அசுர குருவும். அவற்றுக்குள் பகையுணர்வு இல்லை. அப்படி பகைத்தன்மை இருந்தால், குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம்பெற முடியாது. அனுபவரீதியாக வியாழக்கிழமை சுக்கிரன் ஓரையிலும், வெள்ளிக்கிழமை குரு ஓரையிலும் பலருக்கு நன்மைகள் நடந்துள்ளன. எனவே உங்களுக்கு எல்லாவகையிலும் நன்மைகள் நடக்குமென்று எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: திருவள்ளூர்- திருத்தணி பாதையில் இருக்கும் அனுமந்தராயர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.