ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
3-11-2019- மகரம்.
5-11-2019- கும்பம்.
8-11-2019- மீனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 3, 4, விசாகம்- 1.
செவ்வாய்: சித்திரை- 1, 2.
(வ) புதன்: சுவாதி- 1.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: அனுஷம்- 1, 2, 3, 4.
சனி: பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
7-11-2019- புதன் வக்ரநிவர்த்தி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் பலம்பெறுகிறார். செவ்வாய் நிற்பது கன்னி ராசி. அது அவருக்கு மறைவு என்பதோடு, பகைவனின் வீடாயிற்றே! (செவ்வாயும் புதனும் பகை கிரகம் அல்லவா). அப்படி இருக்கும்போது, கன்னியில் செவ்வாய் பலம்பெறுகிறார் என்று எப்படிச் சொல்லலாம் என உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்! செவ்வாய்க்கு 3, 6, 7, 10, 11-ஆம் இடங்கள் பலம்பொருத்திய பலன்களைத் தரும் இடங்கள் என்பது ஜோதிடவிதி! மேலும் செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான சித்திரையில் நிற்பதோடு, தன் ராசியை- மேஷத்தை 8-ஆம் பார்வையாகப் பார்க் கிறார். அதனால் செவ்வாய்க்கு 6 எனும் மறைவு தோஷம் நீங்குகிறது. ராசிநாதனே ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு செல்வாக்கு, செயல்திறன், கௌரவம், பெருமை, திறமை, புகழ், கீர்த்தி ஆகியவை உண்டாகும். உங்கள் முயற்சிகளும் செயல்களும் பரிபூரணமாக வெற்றிபெறும்! மேலும் 9-க்குடைய குரு 9-ல் ஆட்சிபெறுவதோடு, 10-க்குடைய சனியும் 9-ல் சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அதனால் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பெருகி நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டும்! அதனால் எல்லாம் இனிமையாக நடக்கும்!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனோ லக்ன நாதனோ தன் வீட்டை தானே பார்ப்பது சிறப்பு. அதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமானவர் களுக்கு வாரிசு யோகமும், குடும்பத்தில் மனநிறைவும் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இணைந்து இனிய வாழ்க்கை நடத்து வார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரண அலங்காரப் பொருட்கள் சேர்க்கையும், ஆண்களுக்கு தொழில் அபிவிருத்தி, உத்தியோக முன்னேற்றம், சம்பாத்தியம், வருமானப் பெருக்கம், சேமிப்பு போன்ற மங்களமும் உண்டாகும். சங்கடம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் மனைவி- மக்கள் பேரில் வீடு, மனை, வாகனம் போன்ற சுபமங்கள விரயச்செலவுகள் உண்டாகும். சிலர் உல்லாசப் பயணம் செல்லலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா போகலாம். சிலர் கோவில் சுவாமி தரிசனம், தெய்வ நேர்த்திக்கடன்களை நிறைவேற்றலாம். 8-ல் குரு, சனி, கேது நின்றாலும் செவ்வாய் பார்ப்பதால், மனைவி, பங்காளி, உடன்பிறப்புகள் வகையில் சுபச்செலவுகள் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுனத்தில் ராகு நிற்பது ஒருவகையில் குற்றம்தான் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் 5-ல் திரிகோணம் பெறுவதாலும்; ராகுவை குரு பார்ப் பதாலும் ராகு- கேது தோஷம் நீங்கும் 7-ல் கேது, சனி இருப்பதால் திருமண வயதுடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்தடை ஏற்படலாம். அப்படியிருந்தால் சூலினிதுர்க்கா ஹோமமும்; ஆண்கள் கந்தர்வ ராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொண்டால் திருமணத்தடை நீங்கும். அத்துடன் செவ்வாயும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால், அவரவர் ஜாதகத் திலும் செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் காதல் திருமணம், கலப்புத்திருமணம் நடக்க வாய்ப்பு உண்டாகலாம். அப்படிப் பட்டவர்கள் காமோகர்ஷண ஹோமமும் செய்துகொள்ளவேண்டும். (சூலினிதுர்க்கா ஹோமத்துடன் இணைத்துச் செய்யலாம்). ஜாதகரீதியாக 6, 8, 12-க்குடைய தசாபுக்தி நடந்தால், குடும்பத்தில் வயதான பெரியோர் களுக்கு வைத்தியச் செலவும், மாரக கண்டங்களும் ஏற்படலாம். தசாபுக்தியை அனுசரித்துத் தேவையான பரிகார பூஜைகள் செய்துகொண்டால் உயிர் சேதங்களைத் தவிர்க்கலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 12-ல் ராகு, 6-ல் சனி, கேது இருப்பது உங்களுக்கு பலம். அதாவது பாவ கிரகங்கள் பாவ ஸ்தானங் களில் இருப்பது மைனஸ் ஷ் மைனஸ் பிளஸ் என்றமாதிரி நல்லது. "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது ஜோதிடவிதி! அதுமட்டுமல்ல; வாழ்க்கை ஸ்தானம் என்பதும், தொழில்- உத்தியோக ஸ்தானம் என்பதும் 10-ஆம் இடமாகும். அதற்கு பாக்கிய ஸ்தானம்தான் ராசிக்கு அல்லது லக்னத்துக்கு 6-ஆம் இடமாகும். எனவே 6-ஆம் இடம் போட்டி, பொறாமை, சத்ரு, கடன், வியாதி ஆகியவற்றைக் குறிப்பதோடு, வாழ்க்கை, ஜீவனம் (ஜீவிதம்), தொழில், உத்தியோகம், வேலை இவற்றுக்கு பாக்கியஸ்தானமும் (9-ஆம் இடம்) ஆகும். எந்த ஒரு பாவகத்துக்கும் 5 அல்லது 9-ஆம் இடமாகிய திரிகோண ஸ்தானத்தில் உள்ள கிரகங்களும்; மேற்கண்ட திரிகோண ஸ்தானத்தைப் பார்க்கும் கிரங்களும் அந்த ஸ்தானத்துக்கு நற்பலனையே தரும் என்பது ஜோதிட விதியாகும்! அந்த விதிப்படி 6-ல் தனுசு ராசியிலுள்ள குரு, சனி, கேதுவும்; அவர்களைப் பார்க்கும் செவ்வாயும் உங்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் அனுகூலமாக இருந்து அற்புத நற்பலன்களையே தருவார்கள் என்று நம்பலாம். இதுவரை நிலையான தொழிலோ- நிரந்தர வருமானமோ இல்லாதவர்களுக்கு நிலையான- நிரந்தமான- நிறைவான தொழில்- வருவாய் எல்லாம் அமையும். செவ்வாய், சனி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால், சிலர் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளலாம். பிறந்த ஜாதகத்திலும் இந்த அமைப்பிருந்தால் கலப்புத் திருமணமும் நடக்கலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் துலா ராசியில் நீசமாக இருக்கிறார். என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் சிம்ம ராசிக்கு 4-ல் கேந்திரம் பெறுவதால் நீசபங்க ராஜயோகமாக மாறுகிறது. அதனால் உங்களுடைய செயல்களிலும், காரியங்களிலும் தடையில்லாத முன்னேற்றம் உண்டாகும். சில நேரங்களில் சில மனிதர்களால் தடைகளும் குறுக்கீடுகளும் உருவானாலும், அவற்றை சாமர்த்திய மாகக் கடந்து பயணித்து, உங்கள் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்துக் கட்டியணைக்கலாம். அதற்கு ஆதரவாகவும் அனுகூலமாகவும் இருந்து 11-ஆம் இடத்து ராகுவும்- உங்கள் ராசியைப் பார்க்கும் 5-ஆம் இடத்து குருவும் ஆசிர்வதிப்பார்கள். 5-ல் உள்ள சனி, கேதுவை 2-ஆம் இடத்து செவ்வாய், பார்ப்பதாலும், செவ்வாயை சனி பார்ப்பதாலும் சிலருக்கு புத்திர தோஷமோ, புத்திர சோகமோ ஏற்பட இடமுண்டு. என்றாலும் அங்கு குரு ஆட்சிபெறுவதால், மேற்கண்ட தோஷமும் சோகமும் நிவர்த்தியாகும். "நல்லாரைக் காண்பது நன்று, நல்லாரோடு சேர்வது நன்று, நல்லாரோடு இணங்கியிருப் பதும் நன்று' என்ற விதிப்படி குரு நல்லவர், குருபார்க்க கோடி தோஷம் விலகும் என்றவகையில் சனி, கேது, ராகு தோஷம் எல்லாம் நீங்கிவிடும். அதேபோல உங்களுடைய நல்ல திட்டங்களும், நல்ல செயல்களும் தடைகளையும், குறுக்கீடுகளையும் கடந்து வெற்றியடையும். சிலசமயம் எதிரிகளே உங்களுக்கு ஆதரவாக மாறி உங்களின் வெற்றிக்கு அனுகூலமாக மாறுவார்கள்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன், 2-ல் சுக்கிரன் வீட்டில் இருக்க, அந்த சுக்கிரன் புதனுக்கு 2-ல் செவ்வாய் வீட்டில் இருக்க; அந்தச் செவ்வாய் கன்னி ராசியில் இருப்பதால்- புதன், சுக்கிரன், செவ்வாய் மூவருக்கும் ஒரு சம்பந்தம் கிடைப்பதால் 1-ஆம் பாவம், 2-ஆம் பாவம், 3-ஆம் பாவம் ஆகிய மூன்று பாவகப் பலனும் மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும். 1-ஆம் பாவம் என்பது உங்களுடைய செயல்- அது சிறப்பாக அமைய உங்களுடைய திறமை பெருமைப்படுமளவு பிரகாசிக்கும். செவ்வாக்கு, கீர்த்தி, கௌரவம், பாராட்டு, மதிப்பு, மரியாதை எல்லாம் உருவாகும். 2-ஆம் பாவம் என்பது வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஆகியவற்றைக் குறிக்கும் இடம். தட்டுப்பாடில்லாத வருமானமும் பணப்புழக்கமும் உண்டாகும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். சொல்வதைச் செய்வீர்கள். செய்வதையே சொல்வீர்கள். குடும்பத்தாருடன் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் குடும்பத்தாரின் மகிழ்ச்சியையும் பாராட்டையும் பெறலாம். கல்வி மேன்மையும், உயர்கல்வி யோகமும் அமையும். 2-ஆம் இடம் என்பது 6-ஆம் இடத்துக்கு 9-ஆம் இடம் (பாக்கிய ஸ்தானம்) என்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். சத்ருக்களை ஜெயிக்கலாம். வழக்குகளை வெல்லலாம். 10-ஆம் இடத்தை குருவும் சனியும் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். சிலர் வீடு மாறலாம். அல்லது ஒத்தி வீடு, சொந்த வீடு போகலாம். தேக ஆரோக்கியத்திலும் தெளிவு காணப்படும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் செவ்வாய் வீட்டில், செவ்வாய் 12-ல் புதன் வீட்டில், புதன் ஜென்மத்தில் சுக்கிரன் வீட்டில் அமர்வதால் சுக்கிரன், செவ்வாய், புதன் மூவருக்கும் சம்பந்தம் ஏற்படுகிறது. அதாவது ஜென்ம ராசி 2-ஆம் இடம், 12-ஆம் இடத்துக்கு தொடர்பு உண்டாகிறது. கருத்துவேறுபாடுகள் கொண்ட கட்சிகளுக்கு தேர்தலில் தற்காலிகக் கூட்டணி ஏற்பட்டு, அந்தக் கட்சிகளின் கொடிகளை ஏந்தி பிரச்சாரம் செய்வதும், ஓட்டு சேகரிப்பதும்போல இது கிரகக் கூட்டணி- கிரக உடன்பாடாகும். 2 என்பது வரவு (பிளஸ்). 12 என்பது விரயம், செலவு. (மைனஸ்). எனவே இரண்டையும் நீங்கள் அனுபவிக்கும் காலம். அதாவது வரவும் வரும்; செலவும் இருக்கும். கிணறு இறைக்க இறைக்க நீர் ஊறுவதுபோல, செலவுகள் இருந்தாலும் வரவும் இருக்கும். கணக்குப் புத்தகத்தில் (தினசரி சிட்டையில்) வரவு காலம் இருந்தால்தான் செலவு காலத்தில் எழுதமுடியும். அதுபோல உங்களுக்கு வரவு வந்தால்தான் செலவழிக்க முடியும். ஜாதக அமைப்பு யோகமாக இருந்தால், வரவு அதிகமாகவும் செலவு குறைவாகவும் அமைந்தால் மீதம், சேமிப்பு ஏற்படும். பற்றாக் குறை பட்ஜெட் என்றால் செலவுகளை சரிக்கட்ட வெளியில் கடன் வாங்க நேரிடும். (கடன் வரவு). 6-ஆம் இடம் வலுத்திருந்தால் கடன் வாங்கி செலவு செய்யவேண்டும். 11-ஆம் இடம் வலுத்திருந்தாலும், 2-ஆம் இடம் வலுத்திருந்தாலும் தனலாபம், வரவு உண்டாகும். (லாபவரவு). லாபாதிபதி சூரியனும் பாக்கியாதிபதி புதனும் ஜென்ம ராசியில் சேர்வதன் பலன் அதுதான்!
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ல் புதன் வீட்டில்- செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதன் 12-ல் சுக்கிரன் வீட்டில்- சுக்கிரன் ஜென்ம ராசியில் செவ்வாயின் வீட்டில்! இப்படி மூவரும் ஒருவர் வீட்டில் ஒருவராக அமைவது ஒரு கிரகக் கூட்டணி ஆகும்! பொதுவாக கிரகக் கூட்டணி நல்ல பலனை- வெற்றிப்பலனையே தரும். தேர்தல் காலத்தில் கொள்கை வேறுபாடுள்ள கட்சிகள் தற்காலிகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பிரச்சாரம் செய்வதுமாதிரி! அதாவது பொது எதிரியை தனித்து எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாதபட்சத்தில், உதிரிக்கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெறுவதுபோல! ஒருகாலத்தில்- பல வருடங்களுக்குமுன்பு (1967 என்று நினைக்கிறேன்) காங்கிரசை வீழ்த்த "காங்கிரசுக்கு சாவுமணி அடிப்பேன்' என்று சவால்விட்டு திமுகவுடன் ராஜாஜி கூட்டணி சேர்ந்து காமராஜரை வீழ்த்தி, அண்ணாவை வெற்றிபெறச்செய்து முதல்வர் ஆக்கினார். அப்போது ராஜாஜியிடம் அவருக்கு வேண்டியவரான ம.பொ.சி "நீங்கள் விஷக்கிருமிகளை வளர்த்து விடுகிறீர்கள்' என்று வருத்தப்பட்டார். 40-45 வருடங்களுக்கு முந்திய சமாச்சாரம் அப்போதைய பெரியவர்களுக்குப் புரியும். அன்றுமுதல் இன்றுவரை திராவிடப் பாரம்பரியம்தான் ஆட்சி செய்கிறது. எனவே தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது. காமராஜர்மீது ராஜா ஜிக்கு ஏற்பட்ட வெறுப்பு திராவிடக் கட்சியை வளர்த்துவிட்டது. அதுபோல உங்களின் ஏழரைச்சனி சொந்த விருப்பு- வெறுப்புகளுக்காக கூட்டுக் குடும்பத்தையே சிதறச்செய்துவிடும்! அதற்கு இடம்தராமல் இருப்பது உங்கள் மனவளர்ச்சியைப் பொருத்தது!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருக்கு சாரம் கொடுத்த கேதுவும் அவருடன் சேர்க்கை. (மூலம்- 1-ல் குரு). அவர்களோடு 2, 3-க்குடைய சனி சேர்க்கை. இவர்களை 5-க்குடைய செவ்வாய் 10-ல் இருந்து பார்க்கிறார். 5 திரிகோணம்; 10 கேந்திரம். ஒரு திரிகோணாதிபதி இன்னொரு கேந்திரம் பெற்றால் அந்த கிரகம் ராஜயோகம் தருமென்பது விதி! அதன் அடிப்படையில் குருவும் செவ்வாயும் உங்களுக்கு அதிராஜ யோகத்தைத் தருவார்கள் என்று எதிர்பார்க்க லாம். 5-ஆம் இடம் புத்திரஸ்தானம். 4-ஆம் இடம் பூமி, வீடு, சுகம், தாய், கல்வி ஸ்தானம். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு யோகம் அமையும். பெண் குழந்தையாகப் பெற்றெடுத்தவர்களுக்கு கர்மபுத்திரன் பிறப்பான். "ஆசைக்கொரு பெண்ணும், ஆஸ்திக்கொரு ஆணும்' என்பார்கள். ஆண் வாரிசு யோகம் அமையும். பொதுவாக செவ்வாய்- சனி சேர்க்கையோ பார்வையோ சம்பந்தமோ இருந்தால் கெடுபலன் என்பது விதி. இங்கு அந்த அமைப்பு (செவ்வாய்- சனி பார்வை) இருந்தாலும் கெடுக்காது. ராசிநாதன் குரு ஆட்சிபெற்று இவர்களோடு சம்பந்தம் பெறுவதால் கெடுதல்கள் நீங்கி நல்லதே நடக்கும்! குரு 1, 4-க்குடையவர். செவ்வாய் 5, 12-க்குடையவர். 12 என்பது செலவு, விரயம். பிள்ளைகள் வகையிலும், பூமி, வீடு, மனை பாக்கிய வகையிலும் செலவுகள்- சுபவிரயம்- மங்கள, செலவுகள் நடக்கும். மகப்பேறு பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி யோகம், மங்கள காரியங்கள் போன்ற சுபச்செலவுகள் இடம் பெறும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு அங்கு ஆட்சியாக சேர்ந்திருக்கிறார். சனி சுக்கிரன் நட்சத்திரத்தில் (பூராடம்) இருக்க, சுக்கிரன் சனியின் நட்சத் திரத்தில் (அனுஷம்) இருப்பதால் இருவரும் சாரப் பரிவர்த்தனை! அதனால் தனுசு ராசிக்கு ஜென்மச்சனி (ஏழரைச்சனி) நடந்தாலும் பொங்கு சனியாக மாறி தங்குதடையில்லாத மங்களத்தைதான் தரும். மேலும் மகர ராசிக்கு உச்ச ராசிநாதனான செவ்வாய் ராசிக்கு 9-ல் நின்று சுயசார பலம் பெற்று (சித்திரையில் செவ்வாய்) ராசிநாதன் சனியைப் பார்க்க, சனியும் செவ்வா யைப் பார்ப்பதால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழுமையாக ஈடேறும். வரவு- செலவுகள் திருப்தியாக அமையும். வரவேண்டியது உரிய காலத்தில் வந்து சரும். கொடுக்க வேண்டியது குறித்த காலத்தில் கொடுத்து நாணயம் காப்பாற்றப்படும். 9-ஆம் இடம் பூர்வபுண்ணியஸ்தானம். செவ்வாய் சகோதரகாரகன். எனவே பூர்வீக சொத்துப் பிரச்சினைகள், வில்லங்கம், விவகாரம், சிக்கல் எல்லாம் விடுபட்டு திருப்திகரமாக "பைசல்' ஆகும். பங்கு பாகப்பிரிவினைகள் தங்குதடை யின்றி இங்கிதமாக ஈடேறும். 10-க்குடைய சுக்கிரன் 11-ல் ராசிநாதன் ஆகிய சனியின் சாரம் (அனுஷம்) பெறுவதால், தொழில்வகையில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். பதவியில் முன்னேற்றம், சாதனைகளும் வாழ்க்கையில் வேதனைகள் விலகி உண்டாகும். பொதுவாக மகர ராசிக்காரர்களும் மகர லக்னத்தவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள். சரித்திரம் படைக்கப் பிறந்தவர்கள். 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். அதனால் குருவருளும் திருவருளும் பெருகும்!
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
மகரமும் கும்பமும் சனியின் ராசிகள்தான். ஆனால் மகர ராசிக்காரர்கள் சாதனை படைக் கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் வேதனை களைச் சுமந்து அனுதாபத்துக்குரியவர்களா கிறார்கள். ஏனென்றால் ராசிநாதனே விரயாதி பதியும் ஆகிறார். என்றாலும் அனுதாப அலைகளே அவர்களை வெற்றியாளர்களாக மாற்றவும் செய்துவிடும். அரசியல்துறையில் ராஜீவ்காந்தி, அறிஞர் அண்ணா, அண்ணல் காந்தியடிகள் போன்றவர்கள் மரணமடைந்த போது அந்த அனுதாப அலையே அவர் களின் கட்சிக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுத்தித் தந்தது என்பது வரலாறு! அதே போல மக்கள்திலகம் எம்.ஜி.ஆரை கலைஞர் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்ததும், மக்கள் திலகத்துக்கு ஏற்பட்ட அனுதாப அலை அவரைத் தமிழக முதல்வராக்கியது! சமீபத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிர் பலியான அனுதாப அலை, தமிழ கத்தையே கண்ணீர்விட வைத்ததுடன், அந்தக் குடும்பத்துக்கு அனுதாபம் காட்டச்செய்தது. அரசுத் தரப்பிலும் அரசியல்துறையிலும் கலைத்துறையிலும் அனுதாபத்தை ஏற்படுத் தியது. இயற்கையாகவோ நோய்வாய்க்கப் பட்டோ அல்லது வாகன விபத்திலோ அந்தச் சிறுவன் காலமாயிருந்தால் இந்த அளவு எல்லார் கவனமும் திரும்பியிருக்குமா? "தோன்றிப் புகழோடு தோன்றுக' என்று வள்ளுவப் பெருந் தகை சொன்னார். இந்தப் புகழ் அனுதாபப் புகழ்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் 10-ல் ஆட்சி. அவருடன் லாபாதிபதி சனி சேர்க்கை. இவர் களை 9-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். எனவே மீன ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அதனால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும்! ஒரு மனிதனுடைய வாழ்க்கை முன்னேற் றத்துக்குப் பணம் மட்டும் இருந்தால் போதாது! பதவி மட்டும் இருந்தால் போதாது. குருவருளும் திருவருளும் துணைநிற்க வேண்டும். பணமும் பதவியும் செல்வாக்கும் எல்லாரையும் பணிய வைத்துவிடமுடியாது. இராவணன் பணபலம், படைபலம், செல்வாக்கு எல்லாம் இருந்தும் சீதா பிராட்டியைத் தன்வச மாக்க முடியவில்லையே! அவனுடைய அமைச்சர், "இராமனாக உருமாறி சீதையை அணுகினால் சீதையை வசப்படுத்தலாம்' என்று ஆலோசனை கூறினான். அப்போது இராவணன்"அந்த ராமன் ரூபமும் எடுத்தேன். ஆனால் சீதை இன்னொருவன் மனைவி என்ற நினைவு நெஞ்சில் தோன்றியது' என்றானாம். ஆக, மீன ராசிக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதி சம்பந்தம் (செவ்வாய்- குருபார்வை) உங்கள் மனதினை மாசற்ற மனமுடையதாக்கும்! எல்லா இன்ப துன்பங்களுக்கும் மனமே காரணம்! "மனமது செம்மையானால் மந்திரமது ஜெபிக்க வேண்டாம்' என்று சொன்னார்கள். ஆக, உங்கள் மனத்தூய்மை வாய்மை பெறும். வளமான வாழ்வினை பலம்பெறச் செய்யும்.