ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

Advertisment

ஆரம்பம்- மகரம்.

26-1-2020- கும்பம்.

28-1-2020- மீனம்.

Advertisment

31-1-2020- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 1, 2, 3.

செவ்வாய்: கேட்டை- 1, 2, 3.

tt

புதன்: அவிட்டம்- 2, 3, 4.

குரு: பூராடம்- 2, 3.

சுக்கிரன்: சதயம்- 4, பூரட்டாதி- 1, 2, 3.

சனி: பூராடம்- 4.

ராகு: திருவாதிரை- 2.

கேது: மூலம்- 4.

கிரக மாற்றம்:

28-1-2020- கும்ப புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு 9-ல் குருவும் சனியும் கூடிநிற்க, குரு ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். 9-ல் குரு, சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். 5-க்குடைய சூரியன் 3-ல் மறைவு பெற்றாலும் குருவின் பார்வையைப் பெறுவதால், இரண்டு திரிகோணாதிபதி களின் பார்வை (சம்பந்தம்) உங்களுக்குத் துணையாக இருந்து வழிநடத்தும். அதாவது குருவருளும் திருவருளும் பரிபூரணம் என்பது பொருள்! எனவே உங்களின் நியாய மான ஆசைகளும் திட்டங்களும் எந்தவிதமான தங்கு தடையுமில்லாமலும், இடையூறு ஏதுமில்லாமலும் நிறைவேறுவது நிச்சயம்! 5-ஆமிடம் புத்திர ஸ்தானம், மகிழ்ச்சி ஸ்தானம்- மனது, திட்டங்களைக் குறிக்கும் ஸ்தானம். வாரிசு எதிர்நோக்கும் தம்பதியர்க்கு வாரிசு கிடைக்கும். வாரிசு உள்ளோருக்கு பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை இனிமையாக மலரும்! திருக்குறளில் வள்ளுவப் பெருந் தகை இரண்டு குறிக்கோளை- தந்தையின் கடமையையும், மகனின் நன்றியையும் வலியுறுத்துவார். "தந்தை மகற்காற்றும் உதவி அவை யத்து முந்தியிருப்பச் செயல்'- ஒரு தகப்பன் பிள்ளையை கற்றவர் மத்தியில் பெருமைக்காளாக்கு மளவு படிப்பையும் ஆற்றலையும் புகட்ட வேண்டும். பிள்ளை பெற் றோர்க்குச் செய்ய வேண்டியது- "மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை எந்நோற்றான்கொல் எனும் சொல்.' அதேபோல "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனகேட்ட தாய்' என்றும் கூறுவார். தாயின் பெருமையில் தந்தை யின் பெருமையும் கடமையும் அடங்கும். இந்தப் பெருமையை தெய்வங்களுள் முருகன் (சுவாமி நாதன்), புராணத்தில் லவன்- குசன், வரலாற்றில் இந்திரா காந்தியைக் கூறலாம். சிவகாமியின் செல்வன் காமராஜரையும் கூறலாம். இவையெல்லாம் பூர்வபுண்ணியப் பலன்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெற்று 2, 7-க்குடைய செவ்வா யின் பார்வையைப் பெறுகிறார். அதுமட்டு மல்லாமல் 9-ல் உள்ள ராகுவின் சாரத்தில், 9-க்குடைய சனியின் பார்வையையும் பெறு கிறார். ஆக 5, 9 ஆகிய இரண்டு திரிகோணா திபதிகளின் சம்பந்தம் ராசிநாதனுக்குக் கிடைப்பதால் குருவருளும் திருவருளும் பரி பூரணமாக அமையும். அதனால் உங்களின் எண்ணங்களும் திட்டங்களும் லட்சியங்களும் எளிதாக ஈடேறும். சொல்வது எளிது; செயல் படுத்துவது அரிது. "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்று வள்ளுவப் பெருமான் சொல்வார். ஆனால் நீங்கள் செய்வதைத்தான் சொல் வீர்கள். சொல்வதையே செய்வீர்கள். இதுதான் உங்களுக்குக் கிடைத்துள்ள திறமை- பெருமை! அந்த தகுதியே உங்களுக்கு நடக்கும் அட்ட மச்சனியின் பலனை பொங்கு சனிப்பலனாக மாற்றி பூரிப்படையச் செய்யும். மேலும் 9-க்கு டைய சனியே 10-க்குடையவர் என்பதாலும், குருவும் சனியும் உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாரத்தில் (பூராடம்) சஞ்சரிப்பதும் உங்களுக்கு ஒரு பிளஸ் பாயின்ட் ஆகும். இதுவும் அட்டமச்சனியின் தாக்கத்தைக் குறைக்கும். சனியில் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்று மூன்று நிலை உண்டு. ஏழரைச்சனிக் காலத்தில் முதல் சுற்று மங்குசனி- இரண்டாம் சுற்று பொங்கு சனி- மூன்றாம் சுற்று மரணச்சனி என்று சொல்லப் பட்டாலும், ரிஷப ராசி- ரிஷப லக்னத் தாருக்கும், துலா ராசி- துலா லக்னத்தாருக்கும் சனி ராஜயோகாதிபதி என்பதால், எந்தச் சுற்று சனியாக நடந்தாலும் உங்களுக்கு கெடுதல் நடக்காது; யோகமாகவே அமையும். இப்படி ஏழரைச்சனியோ அட்டமச்சனியோ நடப்பவர்களுக்கு சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் மட்டுமே பொருட்சேதம் அல்லது துயரம் சம்பவிக்கும். அப்படிப் பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங் கத்துக்குப் பாலாபிஷேகம் செய்வதும், ஒரு திங்களன்று ருத்ரஹோமம் வளர்த்து சிவலிங்கத்துக்கு ஒருமுறை ருத்ராபிஷேகம் செய்வதும் பரிகாரமாகும். இதனால் நவகிர கங்களின் விளைவாக உருவாகும் கடுமை குறையும். நவகிரகங்களும் அனுக்கிரகமாகி, "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று மாறிவிடும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் சூரியனும் ராகுவும் இருப்பது ஒருவகையில் உங்களுக்கு சோதனையும் வேதனையும் உண்டாக்கினாலும், அவர் களை குருவும் சனியும் இணைந்து பார்ப் பதால் சாதனையாக மாறிவிடும். ஏனென் றால் மிதுன ராசிக்கு 9-க்குடையவர் சனி; 10-க்குடையவர் குரு. இவர்கள் இருவரும் இணைவது தர்மகர்மாதிபதி சம்பந்தமாகும். அத்துடன் 6, 11-க்குடைய செவ்வாய் 6-ல் ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். 10-ஆமிடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு 9-ல் 9-க்குடையவரே நிற்பதும், 10-க்கு 10-க் குடைய குருவும் பார்ப்பதும், ராசியை குருவும் செவ்வாயும் பார்ப்பதும் யோக மாகும். அதனால் உங்களுடைய வாழ்க்கை யிலும், தொழில்துறையிலும், வேலை, உத்தி யோகத்திலும் தடைகளைக் கடந்து முன்னேறலாம். தோல்வியும் தடையும் வெற்றிக்கு அமைக் கப்படும் படிக்கற்கள் என்று ஒரு அறிஞர் கூறினார். அன்யோன்யமான தாம்பத்திய வாழ்க் கைக்கு கணவனும் மனைவியும் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு வாசகம் உண்டு. இதை வள்ளுவப் பெருந்தகை யும் "ஊடுதல் காமத்திற்கின்பம்- அதற்கின் பம் கூடி முயங்கப் பெறின்' என்றார். அதுதான் 11-க்குடைய செவ்வாய் 6-ல் ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கும் பலன். அதாவது எப்போதும் இனிப்பையே அளவுக்கதிமாக சாப்பிட்டால் திகட்டிவிடும். அதற்காகத்தன் இனிப்புக்குப் பிறகு காரம் சாப்பிடும் வழக்கம்! அதன் அர்த்தம்தான் ஊடலும் கூடலும்! வாடல் போகவேண்டுமென்றால் தேடல் வேண்டும். தேடல் இருந்தால் கூடல். தசாபுக்தி பாதகமாக அமைந்தால் ஜென்மத்திலுள்ள சூரியனும் ராகுவும்- தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை உருவாக்கு வார்கள். அப்படியிருந்தால் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்யலாம். நெய் தீபமேற்றலாம். பூர்வீகச் சொத்து விவகாரங்கள் சுமுகமாகத் தீரவேண்டு மென்றால் பொன்னமராவதி வழி செவலூர் சென்று பூமிநாதசுவாமியை வழிபடலாம். வழக்குகள், நீதிமன்ற விவகாரம் இருந்தால் காஞ்சிபுரம் சென்று வழக்கறுத்தீசனாரை வழிபடலாம். ஒருகாலத்தில் அந்த ஆலயத்தில் பூஜை செய்துதான் ஜெயலலிதா வழக்கு களில் ஜெயித்தார். அதேபோல ராஜபாளையம் வழி தாருகாபுரம் சென்று பிணக்கறுத்தீஸ் வரரையும் வழிபடலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 12-ல் சூரியனும் ராகுவும், 6-ல் குரு, சனி, கேதுவும், 8-ல் சுக்கிரனும் மறைவு. முக்கியமான ஆதிக்கம் பெறும் கிரகங்கள் 6, 8, 12-ல் மறைந்தாலும், 3, 12-க்கு டைய புதனும் 5, 10-க்குடைய செவ்வாயும் பலம்பெறுவதால், மற்ற கிரகங்களின் பலக்குறைவை ஈடுசெய்வதாக அமைந்து விடுகிறது. அதாவது பல ஆண்டுகளுக்குமுன்பு பள்ளிகளில் ஒரு நடைமுறை இருந்தது. நான் படிக்கும் காலத்தில் ஆங்கிலம், தமிழ், கணக்கு இப்படிப்பட்ட எல்லாப் பாடத்திலும் பாஸ் மார்க் 40 பெறவேண்டும். ஒரு மார்க் குறைந் தால், மொத்த மார்க்கில் கூடுதலாக 10 பெற்றிருந்தால் பாஸாகலாம். ஆங்கிலத்தில் நான் கொஞ்சம் "வீக்'. அதில் 38 மார்க் எடுத் திருந்தேன். 2 மார்க் குறைவுக்கு மொத்த மார்க்கில் 20 மார்க் அதிகம் வேண்டும். தமிழில் 80 மார்க் எடுத்திருந்தேன். அதனால் தேர்வில் பாஸாகிவிட்டேன். இது ஒரு விதிவிலக்கு. இப்படி கிரக அமைப்பிலும், ஜோதிடத்திலும் பல விதிவிலக்கு உண்டு. அதனால் பல குறைகள் நிறைவாகிவிடும்! பொதுவாக நீசமடைந்த ஒரு கிரகம்- அதற்கு வீடுகொடுத்த கிரகம் ஆட்சி, உச்சமா னாலும்; அம்சத்தில் ஆட்சி, உச்சமானாலும் நீசபங்க ராஜயோகமாகிவிடும். கடக ராசிக்கு 9-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்ப் பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகம் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் அமைந்து விட்டால், அந்த ஜாதகர் வீழ்ந்தாலும் மீண் டெழுந்துவிடலாம். அதாவது ரேஸில் ஓடும் குதிரை (சுறுசுறுப்பாகப் பழக்கப்பட்ட குதிரை) இடறி வீழ்ந்தாலும் வேகமாக எழுந்து ஓடி மற்ற குதிரைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதுபோல! ஒரு மன்னன் எதிரிகளிடம் இரண்டு மூன்று முறை தோல்வியடைந்து பாசறையில் சோர்வாக அமர்ந்திருந்தான். அப்போது ஒரு சிலந்தி வலைபின்னி மேலே போகும்போது கீழே விழுந்து விழுந்து, மறுபடியும் மறுபடியும் வலைபின்னி மேலேறிப் போனதைப் பார்த்தான். அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, சோர்ந்துபோன படைவீரர்களுக்கு உற்சாகமூட்டி, வைராக்கியமாக மறுபடி போர் தொடுத்து எதிரிகளை முறியடித்து வெற்றிபெற்றான். அதுபோல நீங்களும் உங்கள் வைராக்கியத்தாலும் விடாமுயற்சியாலும் எடுத்த காரியத்தைத் தொடுத்துமுயன்று வெற்றிபெறலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் ஜெயஸ் தானத்தில் ராகுவோடு சம்பந்தம். ராகு- கேது, சனி ஆகிய கிரகங்களுக்கு 3, 6, 11-ஆமிடங்கள் வெற்றி ஸ்தானம்- ஜெயஸ்தானமாகும். ஆகவே உங்கள் முயற்சிகளிலும் செயல் களிலும் காரியங்களிலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும். மேலும் 9-க்குடைய செவ்வாய் 4-ல் ஆட்சிபெற்று 10-ஆமிடத்தைப் பார்க் கிறார். எனவே இரண்டுவிதமான யோகப் பலன்கள் இடம்பெறுகின்றன. அதாவது திரிகோணாதிபதி (9-க்குடையவர்) 4-ல் கேந்திரம் பெறுவது ஒரு சிறப்பு! இன்னொன்று 9-க்குடையவர் 10-ஆமிடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும் என்பது இன்னொரு சிறப்பு! எனவே வாழ்க்கை, பதவி, தொழில், வேலை, உத்தியோகம் எல்லா வற்றிலும் நீங்கள் வெற்றியையும் முன்னேற் றத்தையும் அடையலாம். வழக்கு விவகாரம், வியாஜ்ஜியங்கள் எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறலாம்; கரையேறலாம்! 2, 11-க்குடைய புதன் 6-ல் மறைந்தாலும், 10-ஆமிடத்துக்கு அது பாக்கிய ஸ்தானம் (9-ஆமிடம்) என்பதால், எத்தனை எதிர்ப்பு, போட்டி இருந்தாலும் அவற்றை வெல்லலாம்; வெற்றிக்கொடி நாட்டலாம். 5-ல் கேது நிற்க, ராகு பார்ப்பதால் சில நேரங்களில் உங்கள் திட்டங்களிலும் எண்ணங்களிலும் தடுமாற்றம் ஏற்பட்டாலும், ராசிநாதன் சூரியன் சம்பந்தம் பெறுவதால் தடைகள் பொடிப் பொடியாக உடைபடும். நினைத் ததை சாதிக்கலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுவதால் உங்கள் செயல்களும், திட்டங் களும், எண்ணங்களும் வெற்றிபெறும்! அதாவது வெற்றிபெறும் திட்டங்களையே எண்ணுவீர்கள். 10-ஆமிடத்தை செவ்வாய், குரு, சனி, கேது பார்ப்பதால், எண்ணிய திட்டங்களை எண்ணிவாறே செயல்படுத்தி சிந்தை நிறைவடைவீர்கள். வள்ளுவர், "எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்பார். அதுபோல சாதனையும் வைராக் கியமும் உங்களுக்கு லட்சிய வெறியுண்டாக்கி வெற்றிபெறச் செய்யும். அதற்கு உதாரணம் ஏகலைவனும், விசுவாமித்திரரும்தான். ஏகலைவன் குரு துரோணரிடம் வில்வத்தை கற்றுக்கொள்ள விரும்பினான். துரோணர் அரச வம்சத்தினருக்கு மட்டுமே வித்தை கற்றுக்கொடுக்கும் சபதம் வைத்திருந்தார். அதனால் ஏகலைவனைப் புறக்கணித்து விட்டார். ஆனால் ஏகலைவன் துரோணரைப் போல் ஒரு சிலையமைத்து அவரை மானசீக குருவாகப் போற்றி, சுயமுயற்சியால் வித்தையைக்கற்று அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாகிவிட்டான். இது தெரிந்த அர்ஜுனன், துரோணரிடம் வருத்தப்பட, அவர் ஏகலைவனிடம் குரு காணிக்கையாக அவன் கட்டை விரலைக் கேட்க, அவனும் மனமுவந்து கட்டைவிரலை வெட்டிக் கொடுத்துவிட்டான். அதனால் வரலாற்றில் அவன் அர்ஜுனனைவிட முக்கியத்துவ இடம் பெற்றுவிட்டான். புராணத்தில்- மகாபாரதத்தில் ஏகலைவனும் அர்ஜுனனும்; இராமாயணத்தில் படகோட்டி குகனும், லவகுசனும் முக்கியத்துவம் பெற்றார்கள். அதனால்தான் இராமபிரான் "குகனோடு ஐவரானோம்' என்று குகனைப் புகழ்ந்தார். இதுபோல உங்கள் வாழ்க்கையிலும் நல்லோர் நட்பும் தொடர்பும் உங்களை வல்லவ னாக்கும். நல்லாரோடு இணைவதும் நன்று- நல்லாரைக் காண்பதும் நன்று. ராசிநாதன் புதன் 28-ஆம் தேதி கும்ப ராசிக்கு மாறுவார். கன்னிக்கு அது 6-ஆமிடம்! 6 என்பது தொழில், வாழ்க்கை ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம் (9-ஆமிடம்) ஆகும். எனவே 6-ல் வரும் புதன் பதவி உயர்வு, வேலை, தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் போன்ற நன்மை களை வழங்குவது திண்ணம்!

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். பொதுவாக ராசிநாதன் திரிகோணம் பெற்றாலும், கேந்திரம் பெற்றாலும் அதற்குத் தனித்துவம் உண்டாகும். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம்; கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் அதிர்ஷ்டவசமாக அமையும் யோகம்; கேந்திரம் முயற்சியின் பலனாக விளையும் வெற்றி! இதை உள்ளுவப் பெருந்தகை, "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்பார். அதாவது முயற்சி திருவினையாக்கும். 9-ஆமிடத்து ராகுவும் அவரைப் பார்க்கும் குருவும் உங்கள் முயற்சிக்கேற்ற முழுப்பலனையும் அடையச்செய்வார்கள். 2-ஆமிடத்துச் செவ்வாய் பூமிகாரகன் என்பதால், சிலருக்கு பூமி, மனை, இடம், வீடு போன்ற யோகத்தை ஏற்படுத்துவார். ராசிநாதன் சுக்கிரன் வாகனகாரகன். அவரை வீடுகொடுத்த சனி பார்ப்பதால் சிலருக்கு வாகன யோகம் அமையும். புதிய வாகனம் வாங்கலாம். அல்லது பழைய வாகனத்தை மாற்றலாம். சுக்கிரன் 8-க்குடையவராகி 10-ஆமிடத்துக்கு 8-ல் மறைவதாலும், 10-ஆமிடத்தை 9-க்குடைய புதன் பார்ப்பதாலும் (தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால்) சிலருக்கு பதவி உயர்வு, புதிய தொழில் யோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு போன்ற பலன்கள் நடைபெறும். 2-ல் 7-க்குடைய செவ்வாய் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலருடைய தொழில் வாய்ப்புக்கும் முன்னேற்றத்துக்கும் மனைவி துணையாக இருப்பார். அல்லது மனைவி பேரில் தொழில் யோகம் அமையும். படித்து முடித்து வேலை தேடும் பெண் களுக்கு வேலை கிடைக்கும். ஒருசிலரின் யோகத்தால் மனைவிவழியில் சொத்து சுகங்கள் கிடைக்கும். அதேபோல பெண்கள் ஜாதகத்தின்படி கணவர்வகை பங்கு பாகங்கள் கிடைக்க வழிபிறக்கும். அதைக் காப்பாற்றி விருத்திபெறச் செய்வதும், அல்லது அதைப் பரிவர்த்தனை செய்து விருப்பம் போல் அமைத்துக்கொள்வதும் அவரவர் ஜாதக யோகத்தைப் பொருத்தது. அதாவது 5-ஆமிடம் எண்ணம், திட்டம்! அங்கு ராசிநாதன் சுக்கிரன் நிற்க, அவரை செவ்வாய் பார்ப்பது யோகம். பூமி , வீடு, வாகன சம்பந்தமான யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். 4-ஆமிடம், 7-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். தேக சுகத்தில் தெளிவு பிறக்கும். பூமி, மனை, வீடு, வாகன யோகம் அமையும். திருமண யோகத்தை எதிர்நோக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண யோகம் அமையும். ஏழரைச்சனிக் காலத்தில் பிரிந்துவாழ்ந்து வரும் கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வார்கள். அதேபோல பிரிந்த குடும்பம் இனி ஒன்றுசேரும். கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒருமித்த கருத்து உருவாகும். அதாவது விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர் வரை ஏழரைச்சனி நடந்தாலும், சனி 2-ல் குரு வீட்டில்; சனியும் குருவும் 4-ல் பலம் பெற்ற சுக்கிரனைப் பார்ப்பதால் உங்களுக்கு இது பொங்குசனிக் காலமாகும். மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்று மூன்று நிலை. முதல் சுற்று மங்குசனி; இரண்டாம் சுற்று பொங்கு சனி; மூன்றாம் சுற்று மரணச்சனி எனப்படும். முப்பது வருடங்களுக்கு ஒரு சுற்று. தற்காலம் குரு வீட்டில் குருவோடு சேர்ந்த சனி- எந்தச் சுற்றாக இருந்தாலும் பொங்குசனியாகவே பலனைச் செய்வார். புனித கங்கையில் அசுத்தம் கலந்தாலும் தோஷமாகாது; புனிதமாகிவிடும். அதுதான் நல்லது என்பதன் அடையாளம். நல்லாரோடு இணைந்திருப்பதும் நல்லாரைக் காண்பதும் நன்று என்பார்கள். தேன் தானும் கெடாது; தன்னோடு சேர்ந்த பொருட்களையும் கெடவிடாது. ராசிநாதனும் ஆட்சி. 2, 5-க்குடைய குருவும் ஆட்சி! இதுதான் நல்லது என்பதன் அடையாளம். தேக சுகம், குடும்ப சந்தோஷம், பொருளாதார முன்னேற்றம் என எல்லாம் இன்பமயம்தான்!

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு ஆட்சி. அவருடன் சனி, கேது சேர்க்கை; ராகு பார்வை. ராகுவும் கேதுவும் சனியும் உங்களை எல்லா வகையிலும் "டென்ஷன்' ஆக்கினாலும், குரு பலத்தால் உங்களுக்கு எந்தவிதமான கேடுகெடுதியும் ஏற்படாது. பொதுவாக உங்களுக்கு கற்பனை பயமும், கற்பனைக் கலக்கமும்தான் இருக்குமே தவிர, பாதிக்கு மளவு எந்த சங்கடமும் அணுகாது. ஏழரைச்சனி- ஜென்மச்சனி உங்களை "டென்ஷன்' ஆக்கினாலும், குரு பலம் உங்களுக்கு தனி தைரியத்ûயும் நம்பிக்கையை யும் தளராத மனவுறுதியையும் தருவது உறுதி! மழைக்காலத்தில் குடைபிடித்துப் போகும்போது தனி ஒருவர் நனையாமல் போகலாம். இருவர் என்றால் தலை நனையாது- ஆடை நனையும். மூவர் என்றால் எல்லாம் நனையும். அதுபோலவே ஜென்மச் சனியும், ஜென்ம கேதுவும், அவர்களைப் பார்க்கும் ராகுவும் உங்களை எல்லா வகை யிலும் அமைதி- ஆனந்தத்தை சோதிக்கும். என்றாலும் ராசிநாதன் குரு ஆட்சி பலத்தால், "எதுவரினும் வரட்டும்; எதிர்த்து சமாளிப்போம்' என்ற வைராக்கியத்தையும் மனவுறுதியையும் நம்பிக்கையையும் தரும். ஜென்மச்சனி, ஜென்ம கேது பலனாக உங்களின் எண்ணங்கள் தாமத மாகலாமேதவிர, தடைப்படாது. சில திட்டங்கள் உடனே நிறைவேறும்- ஹைவேலில் பயணம் போவதுபோல. சில திட்டங்களும் எண்ணங்களும் ஊருக்குள் வேகத்தடைகளைக் கடந்து போவதுபோல மெதுவாகலாம். அதேசமயம் எந்த திட்டங் களும் எண்ணங்களும் தோல்வியடையாது; ஏமாற்றமாகாது. ஒருசில காரியங்களை ஒன்றுக்கு இருமுறை செயல்படுத்த நேரும். அல்லது உரிய விலை மதிப்பைவிட கூடுதலாக விலைகொடுத்து வாங்க நேரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவென்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு ஆட்சியாக அவருடன் சம்பந்தம்! கேது சம்பந்தம் என்பதால், குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும், பாலம் வேலை நடக்கும்போது, "டேக் டைவர்ஷன்' என்ற அறிவிப்புப்படி, மாற்றுப்பாதையில் பயணிப்பதுபோல, சில காரியங்களைத் தாமதமாக நிறைவேற்றும் நிலை ஏற்படலாம். அதாவது ஹோட்டலுக்குப்போய் இட்லிலி கேட்டால் அதற்கு பதிலாக "தோசை இருக்கு' என்பதுபோலவும், பூரி கேட்டால் "சப்பாத்தி இருக்கு' என்பதுபோலவும் விரும்பியது கிடைக்காவிட்டாலும் மாற்று உணவு சாப்பிடுவதுபோல, உங்கள் செயல்களும் காரியங்களும் தோல்வியடையாமல் மாற்றுத் திட்டத்தோடு செயல்படலாம். இதுகூட இல்லையென்றால் ஏழரைச்சனியில் விரயச் சனிக்கு என்ன மதிப்பிருக்கும்? விநாயகரைப் பிடிக்க சனி போனாராம். "இன்று நாள் நன்றாக இல்லை; நாளை வா' என்றாராம். சரியென்று புறப்பட்ட சனியைத் தடுத்து நிறுத்திய விநாயகர், அரச இலையால் தன் முதுகில் "நாளை' என்று எழுதச் சொன்னா ராம். எழுதும்போதுகூட சனியின் விரல் தன்னைத் தொடக்கூடாது என்று கருதினா ராம். மறுநாள் சனி வந்தபோது முதுகைத் திருப்பிக் காட்டி, "நீதானே எழுதினாய்! நாளை வா' என்றாராம். இப்படியே சனியின் ஏழரை வருடக் காலத்தைக் (தெய்வங் களுக்கு மூன்றேமுக்கால் நாழிகை) கடத்திவிட்டாராம். அதேபோல இலங் கைக்குப் பாலம் அமைக்கும் பணியில் இருந்த ஆஞ்சனேயரைப் பிடிக்க சனி போனாராம். அவரைத் தன் தலையில் ஏற்றி வைத்து, "ராமராம' என்று எழுதிய பெரிய பாறைய அதன்மீது தூக்கி வைத்ததும், அதன் சுமை தாங்காமல் சனி "என்னை விட்டு விடுங்கள்' என்று ஓடிவிட்டாராம். அதனால்தான் சனி வரும் காலம் விநாய கரையும், ஆஞ்சனேயரையும் வழிபடச் சொல்வதுண்டு. இருவரும் பிரம்மச்சாரிகள்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் அமர்ந்து தன் ராசியைப் பார்க்கிறார். சனியுடன் கேது சம்பந்தம். ஆனாலும் வீடுகொடுத்த குருவும் சேர்வதால் தோஷம் விலகும். நல்லாரோடு சேர்வதும் நன்று; நல்லாரைக் காண்பதும் நன்று. ஒரு நிறுவனத்தில் உரிமையாளரோ நிர்வாகியோ இருக்கும் போது எல்லா ஊழியர்களும் அமைதியாக, பொறுப்பாக செயல்படுவார்கள். "உடையவர் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை' என்பார்கள். அதுபோல சனியும் கேதுவும் 11-ல் சேர்ந்திருந்தாலும், அவர்களுக்கு வீடுகொடுத்த குருவும் இணைந்து ஆட்சிபெறுவதால், சனியும் கேதுவும் உங்களுக்கு அனுகூலமான கிரகங்களாக மாறிப் பலன் செய்வார்கள். மேலும் ராசிநாதன் சனி தன் ராசியைப் பார்ப்பதும் பலம்தான். எனவே உங்களுடைய முயற்சிகளும் திட்டங்களும் முழுவெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம். தவிரவும் 10-ல் 10-க்குடைய செவ்வாய் ஆட்சிபெறுவதால், உங்களுடைய வாழ்க்கையிலும் தொழில்துறை யிலும் வேலையிலும் பின்னடைவுக்கு இடமில்லாமல் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தோர், உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு நம்பிக்கையூட்டும். தெளிவு பிறக்கும். தேக நலமும் தெளிவாக அமையும். பொருளாதார வளர்ச்சியும் இருக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. அவருடன் 11, 12-க்குடைய சனி சம்பந்தம். கூடவே கேது- ராகு சம்பந்தம். எனவே உங்களுக்குத் தவிர்க்கமுடியாத பயணங்களும் அலைச்சல்களும் காணப்பட்டாலும், அவை பயன்தரும் பயணங்கள் என்று மகிழலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா என்று, பிரார்த்தனை தலங்கள் சென்று வழிபடலாம். சிலர் தொழில் சம்பந்தமாக பல இடங்கள் சென்று பயனடையலாம். அதாவது "செய்யும் தொழிலே தெய்வம்' என்பார்கள். எனவே ஆலயம் செல்வதும், தொழில் சம்பந்தமாக அலைவதும் சிந்தை நிறைவான காரியங்கள்தான். சிலர் கலைத்தொழில் கவர்ச்சியால் புது முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுவார்கள். அதற்காகப் பணம் தேடுவதும், கடன் கேட்பதுமான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் முயற்சிகளும் திட்டங்களும் தாமதப்பட்டாலும் தோல்வி, தொய்வுக்கு இடமே ஏற்படாமல் முழுவெற்றிக்கு இடமுண்டாகும். ஒருசிலர் ஏதோ ஒரு வேகத்தில் சக்திக்குமீறிய செயலிலில் இறங்கிவிட்டு, அதை நிறைவேற்ற பொருளாதாரப் பற்றாக்குறையால் தடுமாறி னாலும், 10-ல் குரு ஆட்சிபெறுவதால் ஏமாற்றமடையாமல் உதவிகளைப் பெறலாம். எடுத்த காரியத்தைத் தொடுத்து நிறை வேற்றலாம். எதிர்பார்த்த நபர் உதவா விட்டாலும், எதிர்பாராத நபர் முன்வந்து உதவி, உங்கள் திட்டங்களை வெற்றிபெறச் செய்வார். இதுதான் 9-ல் ஆட்சிபெறும் செவ்வாயும், 10-ல் ஆட்சிபெறும் குருவும் உங்களுக்குக் காட்டும் கருணை- கடாட்சம். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்துவதால் எல்லா நன்மைகளும் உண்டாகும். நம்பிக்கையோடு செயல்படுங்கள்.