ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
25-8-2019- மிதுனம்.
27-8-2019- கடகம்.
29-8-2019- சிம்மம்.
31-8-2019- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 3, 4, பூரம்- 1.
செவ்வாய்: மகம்- 3, 4, பூரம்- 1.
புதன்: மகம்- 2, 3, 4, பூரம்- 1, 2.
குரு: கேட்டை- 2.
சுக்கிரன்: மகம்- 3, 4, பூரம்- 1, 2.
சனி: மூலம்- 4.
ராகு: திருவாதிரை- 4.
கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
சனி வக்ரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் திரிகோணத்தில் (சிம்மத்தில்) இருக்கிறார்.
அவருக்கு வீடுகொடுத்த சூரியனும் அவருடன் ஆட்சியாக இருக்கிறார். அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகர்யங்களுக்கு எந்தக் குறையுமில்லை. 9, 12-க்குடைய குரு 8-ல் மறைவது குற்றம்தான். என்றாலும் குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் அவரைப் பார்ப்பதால் தோஷம் குறைகிறது.
அத்துடன் 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். பிரச்சினைகளை எளிதாக சமாளித்துக் கடந்து முன்னேறலாம். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி யிடையே அன்பு மேலோங்கும். திருமணத்தடை நீங்கும். 8-ல் இருக்கும் குரு திருமணக் காரியங் களில் அலைச்சலும், அதிக செலவும், கடும் பிரயாசைகளைக் கொடுத்தாலும், மனம்போல எல்லாம் நிறைவேறும். 8-ஆமிடத்து குரு 2-ஆம் இடத் தைப் பார்ப்பதால், எதிர்பாராத தனப்ராப்தி உண்டாகும். 3-ஆமிடத்து ராகுவும், அவரைப் பார்க்கும் சனியும் கேதுவும் உடன்பிறந்தவர்கள் வகையில் தடம்புரண்ட ரயிலாகப் பிரச்சினை களைக் கொடுத்தாலும், ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் பாதிக்காது.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல்- 4-க்குடைய சூரியனோ டும், 7-க்குடைய செவ்வாயோடும், 2, 5-க்குடைய புதனோடும் சம்பந்தம். நினைத்தவை நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 2-ஆமிடத்து ராகு குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கினாலும், அதைச் சமாளித்து, வேதனைகளை விலக்கி சாதனை புரியலாம். வரவு- செலவு, பொருளாதாரத்தில் சிக்கலாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியடையும். கருதிய காரியங்கள் கைகூடும். கையில் இருக்கும் ரொக்கத்தில் கடைசிப் பணம் செலவாகும்வரை அடுத்த வரவுக்கு இடமிருக்காது என்றாலும், கடைசி நேரத்தில் வரவு வரும்; செயல்கள் நிறைவேறும். கிணற்று நீரூற்று பொங்கி வழியாது என்றாலும், நீர் ஊறஊற தண்ணீரை இறைத்துக்கொள்வதுபோல காத்திருந்து கடமைகளை நிறைவேற்றவேண்டும். கனவுகளும் நிறைவேறும். இதுதான் ராகுவின் பலன். ஜாதகத்திலும் ராகு சம்பந்தம் (தசா புக்தி) இருந்தால் ராகுப்ரீதியும், சூலினிதுர்க்கா ஹோமமும் செய்துகொள்ளலாம். தொழில்துறையில் கூட்டாளிகளின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். புதுமுயற்சிகள் வெற்றியடையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 3-ல் சூரியன் வீட்டில் நிற்க, சூரியன் அங்கு ஆட்சிபெறுகிறார். அவருடன் ராஜயோகாதிபதி சுக்கிரனும் சம்பந்தம். 6, 11-க்குடைய செவ்வாயும் சம்பந்தம். நினைத்த காரியங்களை நிறைவேற்றலாம். கருதிய செயல்பாடுகள் கைகூடும். காசு பணம், பொருளாதாரத்தில் தட்டுப்பாடில்லாமல் சமாளிக்கலாம். ஜென்ம ராகு, சப்தம சனி, கேது இருப் பதால், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் தடைப்படும்; தாமதப்படும். ஜாதக தசாபுக்திக்கேற்றமாதிரி பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. மாணவ- மாணவிகள் படிப்பில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டுப் போக்கையும், அலட்சியத் தன்மையை யும் விரட்டியடிக்கவேண்டும். சொந்தத்தொழில் செய்கிறவர்களுக்கு தொழில் விருத்திக்கான கடன் ஏற்படும். சம்பளத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும், மாற்றமும் உருவாகும். படித்துமுடித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு வெளியூரில் வேலை அமையும். வெளிநாட்டுக்கும் போகலாம். 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தொழில், வாழ்க்கை தொய்வில்லாமல் ஓடும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவர் 6-க்கும் உடையவராவார். 6-ல் சனி, கேது; அவர்களுக்கு ராகு பார்வை. சிலருக்கு வரவுக்குமீறிய செலவு களும் கடன்களும் உருவானாலும் கௌரவம் பாதிக்காது. பணத்தட்டுப்பாடு இருக்காது. 9-க்குடையவர் 10-ஆம் இடத்துக்கு 8-ல் மறைவதால், சிலருக்குப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுமளவு வேலை, உத்தியோக வாய்ப்பு இருக்காது. தொழில் வருமானமும் சேமிப்புக்கு இடமில்லாதபடி அமையும். ஒருசிலருக்கு மனைவி அல்லது குடும்பத்தில் மற்றவர்களின் சம்பாத் தியம் வாழ்க்கையை சரிக்கட்டும்படி அமையும். பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தேவைகள் நிறைவேறும். "குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி பணப் புழக்கமும் தாராளமாக அமையும். என்ன வேலை செய்கிறார், எவ்வளவு வருமானம் பார்க்கிறார் என்று மற்றவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கும். எந்தச் செலவும் தேவையான செலவாகவும், நிறுத்திவைக்க முடியாதபடியும் வழிவிடும். 9-க்குடைய குருவை 10-க்குடைய செவ்வாய் பார்ப் பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதுதான் உங்கள் வாழ்க்கையை இயக்கிறது; தேவையைப் பூர்த்திசெய்கிறது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய சுக்கிரனும் சம்பந்தம். அவர்களுடன் லாபாதிபதி புதனும் இணைகிறார். இந்த வாரக் கோட்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் அடுத்து மீன ராசிக்காரர்களுக்கும் ராஜயோகமாக விளங்குகிறது. 8-க்குடைய குரு 4-ல் (5-க்கும் உடையவர்) நின்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் எதிர்பாராத தனப்ராப்தியும் அதிர்ஷ்டமும் எதிர்பார்க்கலாம். மாணவ- மாணவியர் பரீட்சை எழுதும்போது படித்த பாடங் களின்படியே கேள்விகள் அமைவ தால், எளிதாகத் தேர்வெழுதி அதிக மான மதிப்பெண்களைப் பெறலாம். ஒருசில மாணவர்கள் டியூஷன் ஆசிரியர்கள் குறித்துக்கொடுத்த முக்கிய கேள்விகளைத் தயார் செய்து பரீட்சை எழுதுவதால் நல்ல மதிப்பெண் வாங்கலாம். 5-ல் உள்ள சனி- கேது காரணமாக குடும்பம், வாழ்க்கை, தொழில்துறையில் ஒருசில குழப்பங்கள் ஏற்பட்டு மனஅமைதிக் குறைவைச் சந்திக்க லாம். என்றாலும் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்துகொள்வதால் நிவர்த்தி ஏற்படலாம். ஆரோக்கியம், பொருளாதாரம் இரண்டிலும் பாதிப்புக்கு இடமில்லை.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் நால்வரும் மறைகிறார் கள். 4-ல் சனி வக்ரம். அவருடன் கேது- ராகு சம்பந்தம். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, வைத்தியச் செலவு, சிலருக்கு பூமி, வீடு, வாகன வகையில் தவிர்க்கமுடியாத செலவுகள், சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஆகியவற்றால் தவிர்க்கமுடி யாத செலவுகள் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு உடன்வேலை செய்கிறவர்களால் தொல்லைகளும் பிரச்சினைகளும் உருவாகும். எல்லாரிடமும் எல்லா விஷயங் களையும் பகிர்ந்துகொள்ளாமல், ரகசியத் தைப் பாதுகாக்க வேண்டும். மற்றவர் களுக்கு உதவப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். அல்லது பிரச்சினைகளைச் சந்திக்கலாம். ஆகவே, தொட்டும் தொடா மலும், பட்டும் படாமலும் நடந்துகொள்வது நல்லது. 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருப்பதால், எந்தப் பிரச்சினையானாலும் சமாளித்துவிடலாம். ஒருசிலர் ஆன்மிகப் பயணம் போகலாம். ஒருசிலர் குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வத் திருப்பணி களிலும் ஈடுபடலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல், அவருக்கு வீடுகொடுத்த சூரியனோடு சம்பந்தம். அத்துடன் 9-க்குடைய புதனும், 7-க்குடைய செவ்வாயும் சம்பந்தம். 3, 6-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். வாழ்க்கை வசதி, சௌகரியங்களுக்குக் குறைவில்லை. கடினமான வேலைகளையும் எளிமையாக நிறைவேற்றிவிடலாம். சில காரியங்களில் காசு பணம் கொடுத்து சாதிக்கலாம். சில காரியங்களை உங்கள் செல்வாக்கினால் சாதிக்கலாம். சில காரியங்களை அதிகாரத் தோரணையாலும் சாதிக்கலாம். எந்த முயற்சியும், எந்தக் காரியமும் தோல்விக்கு இடமில்லாமல் திட்டமிட்டபடி நிறைவேறும். 6-க்குடைய குரு 2-ல் நின்று 6-ஆமிடத்தையே பார்ப்பதால், ஒருசிலரின் யோகத்துக்கு எதிரிகளால்கூட சில நன்மைகள் உண்டாகும். அது எப்படி நடக்குமென்று யோசிக்கவேண்டாம். அரசியலில் எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்றரீதியாக சிலசமயம் தேர்தல் கூட்டணி அமைத்து ஜெயிப்பதில்லையா? அதுமாதிரிதான். 9-ல் உள்ள ராகு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிவைப்பார். அத்துடன் குலதெய்வத் திருப்பணிகளிலும் ஈடுபடுத்தச் செய்வார். ஒருசிலருக்கு சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் கடைசி நிலை நடைபெறும் இக்காலம், சனிக்கு வீடுகொடுத்த குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பது யோகம். ஆகவே, இந்த ஏழரைச்சனியில் அது முதல் சுற்றாக இருந்தாலும், இரண்டாம் சுற்றாக இருந் தாலும், மூன்றாம் சுற்றாக இருந்தாலும் உங்களுக்கு பொங்கு சனி பலனையே தரும். கோட்சார சனி நடக்கும்போது மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று நிலை உண்டு. தொண்ணுறு வயதிற்குமேல் வாழ்கிறவர்கள் மூன்று சனியையும் கடந்த நிலையில் யோகத்தை அனுபவிப்பார்கள். அதாவது ஏழரைச்சனியில் மூன்றாவது சுற்று மரணச்சனியைக் கடந்தவர்களா வார்கள். ஏழரைச்சனியோ அட்டமத்துச் சனியோ நடக்கும்போது சந்திர தசையோ, சந்திர புக்தியோ சந்தித்தால், உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் போன்றவற்றை சந்திக்கநேரும். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் ருத்ரஹோமம் வளர்த்து சிவனுக்கு ருத்ரா பிஷேகம் செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் உயிரிழப்பு தோஷங்களைத் தவிர்க்கலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அத்துடன் ஜென்மக் கேதுவும், சப்தம ராகுவும் நடக்கிறது. ராசிநாதன் குரு 12-ல் மறைவு. "திருவிளையாடல்' என்ற திரைப் படத்தில் "தருமி'யாக நடிக்கும் நாகேஷ், "பாட்டெழுதி பேர் வாங்குபவர்கள் ஒரு ரகம். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் ஒரு ரகம்' என்று வசனம் பேசுவார். சனி, கேது, ராகு மூவர் சஞ்சாரத்தினால், குறை சொல்வதே பிழைப்பாக இருக்குமென்று குற்றம் சுமத்தப்படுவீர்கள். அதாவது சனி, ராகு, கேது மூவரும் கோள் கிரகங்கள் எனப் படும். ஆகவே தேவையில்லாமல் குற்றத்திற்கு ஆளாவீர்கள். சிலசமயம் குறை கூறுபவர் களும் தனுசு ராசிக்காரர்களாக இருப் பார்கள். குரு 12-ல் மறைவதும் இதற்கு ஒரு காரணம். குரு பலம்பெற்றிருந்தால் "ஆல் இஸ் வெல்' என்று விஜய் ஒரு படத்தில் சொன்னதுபோலவும் அல்லது "டேக் இட் ஈஸி' என்றும் எடுத்துக்கொண்டால் "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என திருப்திப்படலாம். கிரகங்களின் தாக்கம் "ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும்' என்பதற்கு உதாரணமாகும். எல்லாம் சனி படுத்தும்பாடு என்று பெருந் தன்மையாக எடுத்துக்கொண்டால் யார்மீதும் வருத்தம் ஏற்படாது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். மகர ராசிக்கு இப்போது விரயச்சனி நடக்கிறது. சனியுடன் கேது சம்பந்தம், ராகு பார்வை. 8-ல் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் நான்கு பேரும் மறைகிறார்கள். எனவே, உங்கள் முயற்சி களில் தளர்ச்சியும், செய்யும் காரியங்களில் தடை, தாமதங்களும் காணப்படலாம். நீங்கள் எழுதிய வாசகத்தையே மீண்டும் மீண்டும் திருத்தி எழுதும் சூழ்நிலைகளும் அமைய லாம். மாணவர்களுக்குப் படிப்பில் தெளிவு தெரிந்தாலும், பரீட்சை நேரத்தில் மறதியும் குழப்பமும் ஏற்படலாம். அதனால் விடை தெரிந்த வினாக்களுக்குக்கூட சரியான பதில் எழுதாமல் போய்விடும். பரீட்சை ஹாலை விட்டு வெளியே வந்தபிறகுதான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல சொந்த வியாபாரம் செய் கிறவர்கள், ஐம்பது ரூபாய் கொடுத்த வாடிக்கை யாளருக்கு நூறு ரூபாய் கணக்கிட்டு மீதியைக் கொடுக்கும் சூழ்நிலை வரலாம். அந்த நஷ்டத்தை ஏற்கவேண்டிய நிலை வரலாம். குடும்பத்திலும் அர்த்தமற்ற வாக்குவாதங் களும், தர்க்கங்களும், வீண் சந்தேகங்களும் உருவாகி குடும்ப அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே எதிலும் கவனமாக நடந்து கொள்ளவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு பெரும்பாலான கிரகங்கள் சாதகமாகக் காணப்படுகின்றன. 11-ல் சனி, கேது. 7-ல் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன். 10-ல் குரு. இவர்களெல்லாம் உங்களுக்கு பக்க பலமாக இருந்து, தக்கசமயத்தில் துணை புரிவதால் திட்டமிட்ட செயல்களை திட்ட மிட்டபடி கச்சிதமாக முடிக்கலாம். எதிரி களின் சதியை முறியடிக்கலாம். தளர்ச்சி யில்லாத முயற்சிகள் வளர்ச்சியடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் ஆற்றலை வளர்க்கும்; வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும். உறவினர்கள் வருகையும், அவர் களால் நன்மையும் எதிர்பார்க்கலாம். ஒருசில விரயச்செலவுகள் ஏற்பட்டாலும், அதை செலவென்று கருதாமல் வெற்றிக்கு கொடுக் கும் விலையென்று திருப்தியடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடப் பெயர்ச்சியும் முன்னேற்றமும் எதிர்பார்க்க லாம். தொழில்துறையில் இருப்பவர்களுக்கு வியாபாரத்தை மேன்மையாக்குவதும், லாபத் தைப் பெருக்குவதும் போன்ற பலன்களினால் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படலாம். சிலருக்கு, வெளியூர்வாசம் அல்லது வெளி நாட்டுவாசம் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் முன்னேற்றம் உருவாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு 10-க்குடைய குரு 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. அத்துடன் தன் ராசியைத் தானே பார்க்கிறார். சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் நான்குபேரும் 6-ல் மறைந்தாலும், 2-ஆமிடத் துக்கும் 10-ஆமிடத்துக்கும் திரிகோண ஸ்தானம் என்பதால், வாக்கு, தனம், குடும்பம், வித்தை என்ற இரண்டாமிடத்துக்கும், வாழ்க்கை, ஜீவிதம், தொழில், வேலை, உத்தி யோகமாகிய பத்தாமிடத்துக்கும் நன்மையான பலன்கள் உண்டாகும். ஒரு மனிதனுடைய மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும், திரிகோண ஸ்தானமும் கேந்திர ஸ்தானமும் வலுவாக இருக்கவேண்டும். மீன ராசிக்கு கேந்திராதி பதியான குரு திரிகோணத்தில் அமர்ந்து மீன ராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. அத்துடன் 9-க்குடைய செவ்வாய் 6-ல் நின்று 10-க்குடைய குருவைப் பார்ப்பது சிறப்பான யோகம் தரும். (தர்மகர் மாதிபதி யோகம்). ஆகவே, தளர்ச்சியில்லாத முயற்சிகள் வளர்ச்சியடையும். மனக்கிளர்ச் சிக்கு இடமில்லாமல் சோதனைகளை ஜெயித்து சாதனைகளைப் படைக்கலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் திருப்தி யும் உண்டாகும். வரவேண்டிய பணம் வசூலாகும். கொடுக்கவேண்டிய பாக்கிகளைக் கொடுக்கலாம். சமூகத்தில் மதிப்பு உண்டாகும்.