ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

Advertisment

ஆரம்பம்- கடகம்.

17-12-2019- சிம்மம்.

19-12-2019- கன்னி.

Advertisment

21-12-2019- துலாம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 4, மூலம்- 1, 2.

செவ்வாய்: விசாகம்- 1, 2.

புதன்: கேட்டை- 1, 2, 3, 4, மூலம்- 1.

குரு: மூலம்- 3, 4.

சுக்கிரன்: உத்திராடம்- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: திருவாதிரை- 3.

கேது: பூராடம்- 1.

கிரக மாற்றம்:

17-12-2019- தனுசு சூரியன்.

17-12-2019- மகரச் சுக்கிரன்.

20-12-2019- புதன் அஸ்தமனம்

21-12-2019- தனுசு புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னா திபதியோ ராசியாதிபதியோ தன் ஸ்தானத்தைத் தானே பார்த்தால், அந்த ஜாதகருக்கு வளமும் நலமும் உண்டாகும் என்பது விதி. 7-ஆமிடம் கணவன் அல்லது மனைவி ஸ்தானம். பெண்களுக்கு மட்டும் 8-ஆமிடம் மாங்கல்ய ஸ்தானம். ஒரு பெண் ஜாதகத் திற்கு திருமணம் எப்போது நடைபெறும் என்றால், 8-ஆமிடத்துக்கு 5, 9-க்கு டைய தசாபுக்திகள் நடந் தாலும், அவர்கள் சம்பந்தப் பட்ட தசாபுக்திகள் நடந் தாலும் திருமணத்தைத் தீர்மானிக்கலாம். அதேபோல ஆண் ஜாதகத்தில் 7-ஆமிடத் துக்கு 5, 9-க்குடையவர்களின் தசாபுக்திகள் நடைபெற்றாலும், அவர்களோடு சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் கூடுமென்பது ஜோதிட விதி. இந்தமாதிரி ஜோதிட சூட்சுமங்களை அவ்வப்போது எழுதுவதால், ஜோதிடப் பயிற்சியில் இருப்பவர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகவும் பயன்படும் என்பதை அவர்கள் எழுதும் பாராட்டுக் கடிதங்கள்மூலம் புரிந்துகொள்கிறேன். 5-க்குடைய சூரியன், 6-க்குடைய புதனோடு சேர்ந்து 8-ல் மறைவதால், ஒருசிலருக்கு பிள்ளைகளைப் பற்றி கவலை ஏற்படலாம். என்றாலும் பாக்கியாதிபதி ஆட்சிபெற்று புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. 2, 7-க்குடைய சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும், நல்லுறவும் நீடிக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவது குற்றம் என்றாலும், 8-க்குடைய குருவோடும், ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி யோடும் சம்பந்தப்படுவதால் அட்டமாதி பத்திய தோஷம் விலகும். 2-ஆமிடம் ஆயுளையும் குறிக்கும்; அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். 4, 12-க்குடையவரோடு சம்பந் தப்படும்போது 8-ஆமிடம் மாரக ஸ்தானமாகும். 2, 5, 9, 11-க்குடையவரோடு சம்பந்தப் படும்போது 8-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானமாகும். அதிர்ஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. மரணமும், அதிர்ஷ்டமும் கண்ணுக்குத் தெரியாமல், எதிர்பாராமல் வருவது. 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால்- தசாபுக்தி சாதகமாக இருந்தால், இந்த கோட்சாரத்தின் பலனாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், தனப்ராப்தியையும் அடையலாம். வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டுவகையில் சிலர் லாட்டரி யோகங்களை எதிர்பார்க்கலாம். 6, 8, 12-க் குடைய தசாபுக்திகள் சம்பந்தப்படும்போது விபத்து, ஏமாற்றம், இழப்பு போன்ற பலன்களை சந்திக்கநேரும். 7, 12-க்குடைய செவ்வாய் ரிஷப ராசியைப் பார்ப்பதால், திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு கணவர் வகை அல்லது மனைவிவகையில் சுபச்செலவுகள் உண்டாகும். ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடப்பதால், சிலருக்கு இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஏற்பட இடமுண்டு. ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து, இந்த மாற்றம் முன்னேற்றமாக அமையுமா, பின்னிரக்கமாக அமையுமா என்பதை முடிவுசெய்யவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார். என்றாலும் தனது சொந்த நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கிறார். ஆயில்யம், கேட்டை, ரேவதி புதனுடைய நட்சத்திரங் களாகும். பொதுவாக புதனை மறைவு தோஷம் பாதிக்காது. ஏனென்றால், சூரியனோடு இணைந்து எப்போதும் சஞ்சரிக்கும் கிரகம் புதனாகும். ஆகவே, அஸ்தமன தோஷமோ மறைவு தோஷமோ பாதிக்காது. தினசரி ஓசிப்பேப்பர் படிக்கவரும் நண்பர்களுக்கோ பக்கத்து வீட்டுக்காரருக்கோ முக்கியத்துவம் இருக்காது. எப்போதாவது வரும் விருந் தாளிகளுக்கு வரவேற்பு பலமாக இருக்கு மல்லவா? அதுமாதிரிதான்! ஜென் மத்தில் ராகுவும், 7-ல் சனி, சுக்கிரன், கேதுவும் இருப்பது தோஷம். ஆண் ஜாதகமானாலும், பெண் ஜாதகமானாலும்- நாகதோஷமும், களஸ்திர தோஷமும், மாங்கல்ய தோஷமும் ஏற்படலாம். 7-ல் குரு ஆட்சிபெறுவதால் தோஷம் நிவர்த்தியாகலாம். திருமணத்தடைக்கான பரிகாரம்- ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும். பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்யவேண்டும். சனி மட்டும் 7-ல் நின்றால் தாமதத் திருமணம். சனியோடு செவ்வாய் சம்பந்தப்பட்டால் கலப்புத்திருமணம் அல்லது காதல் திருமணம். இவர்களோடு குரு சம்பந்தப்படும்போது தோஷம் நிவர்த் தியாகும். அதாவது காதல் எண்ணம் உருவானாலும், அது செயல்பாட்டுக்கு ஒத்துவராது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் குரு, சனி, சுக்கிரன், கேது நால்வரும் மறைகிறார்கள். 12-ல் ராகு மறைகிறார். இதனால் உங்கள் முயற்சிகளிலும், காரியங்களிலும் குறுக் கீடுகளும், தடைகளும் அளவுக்கதிகமாகவே காணப்படலாம். என்றாலும் 9-க்குடைய குரு ஆட்சிபெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும், 10-க்குடைய செவ்வாயும் 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் வாழ்க்கையிலும், uuதொழிலிலும், செய்யும் பணியிலும், கடமைக் காரியத்திலும் எந்தவிதமான பின்னடைவுக்கும் இடமில்லை. நான்குவழிச் சாலையில் (ஹைவேஸ்) தடை யில்லாமல் வேகமாகப் பயணம் போகலாம். ஆனால் சிங்கிள் ரோட்டில் பயணிக்கும் போது மேடுபள்ளங்கள், ஸ்பீடு பிரேக்கர் களைத் தாண்டி, நின்று நிதானித்துப் பயணிக்க வேண்டும். இப்போது உங்கள் நிலை இரண்டா வது குறிப்பிட்ட நிலையாகும். பயணத்தில் குறுக்கீடுகள் காணப்பட்டாலும், போய்ச்சேர வேண்டிய ஊருக்கு குறிப்பிட்ட வேளையில் போய்ச்சேரலாம். சில ரயில்கள் தண்டவாளத் தில் பழுதுபார்க்கும் நேரத்தில் தடை, தாமத மானாலும், மற்ற இடங்களில் வேகமாகப் போய் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தை அடைவதுபோல! கடக ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால், குரு வருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். அதனால் உங்கள் லட்சியம் ஈடேறும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 4-ல் சூரியனும் புதனும் அமர, 5-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். சிம்ம ராசிக்கு 9-க்குடைய செவ்வாய் 8-ஆம் பார்வையாக 10-ஆமிடத்தை யும் பார்க்கிறார். அதனால் தர்மகர்மா திபதி யோகம் ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகமும், தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்துவிட்டால், அந்த ஜாத கருக்கு எப்போதும் தோல்வி இருக்காது. அதற்கு உதாரணம் கலைஞரின் ஜாதகம் தான். பெருந்தலைவர் காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும் தங்களது சொந்தத் தொகுதி யிலேயே ஒருமுறை தோல்வியடைந் தார்கள். கலைஞர் எந்தத் தேர்தலிலும், எப்போதும் தோற்றதேயில்லை. இந்திராகாந்திகூட ஒருமுறை பதவியிழந்த பிறகு, சிக்மகளூர் தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார்; பிரதமரும் ஆனார். 5-க்குடைய குரு ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதால், உங்கள் கனவுகளும், லட்சியங்களும் ஈடேறும். 5-ல் சனி, கேது, ராகு சம்பந்தம் இருப்பதால், குறுக்கீடுகளும், தடைகளும் காணப்பட்டாலும், உங்கள் வைராக் கியமும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கை யும் வெற்றியைத் தேடித்தரும். ஒரு மன்னர் பலமுறை தோற்று மனமுடைந்த நிலையில், பாசறையில் அமர்ந்து கவலைப் பட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒருசிலந்தி கூடுகட்டுவதைப் பார்த்தார். சிலந்தியின் வாயிலிருந்து வரும் திரவம் நூல்போல அசையும். அது மேலும்கீழும் தவறி விழுந்தாலும் தளராமல் விடாமுயற்சியோடு கூடு அமைத்துவிட்டது. அதைப் பார்த்த மன்னர் வீறுகொண்டு எழுந்து போராடி வெற்றிபெற்றார்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 3-ல் மறைந் தாலும், கேட்டை நட்சத்திரத்தில் சுயசாரம் பெறுகிறார். ஏற்கெனவே மிதுன ராசியில் எழுதியதைப்போல, புதனுக்கு மறைவு தோஷமும் இல்லை; அஸ்தமன தோஷமும் இல்லை. விரயாதிபதி சூரியனோடு 3-ல் இருப்பதால், சகோதரர்கள் வகையிலும் நண்பர்கள்வகையிலும் தவிர்க்கமுடி யாத விரயங்கள் ஏற்படும். 6-க்குடைய சனி ராசியைப் பார்ப்பதால், அனுதாப எண்ணத்தோடு நண்பர்களுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், உங்கள் முயற்சியால் சிபாரிசுசெய்து தவணைக் கடன் வாங்கித் தருவீர்கள். அவர்கள் தவணையை ஒழுங்காகச் செலுத்தாமல், உங்கள் தலையில் வந்துவிழும். உங்கள் நாணயத்தைக் காப்பாற்றுவதற்காக, அவர்களுக்கான கடன் அல்லது வட்டித் தொகையை நீங்கள் தாங்கநேரும். அத்துடன் யாருக்கும், எந்த ஆபத்திலும் தலையிடக் கூடாது என்ற அனுபவப் பாடத்தையும் உணர்வீர்கள். 8-க்குடைய செவ்வாய் 2-ல் இருப்பதால், அந்தக் கொள்கையில் உறுதிப்பாடாகவும் இருக்கமுடியாது. "பட்டாலும் தெரியாது சுட்டாலும் தெரியாது' என்றமாதிரி, உதவி கேட்டவர்களுக்கு உதவிசெய்து வம்பில் மாட்டிக்கொள்வீர்கள். சனி 6-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தையும், ஜென்ம ராசியையும் பார்க்கும் பலன் இதுவே!

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந்தாலும், 3-க்குடைய குரு ஆட்சிபெறுவதாலும், துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி அங்கு சம்பந்தப்படுவதாலும் சுக்கிரன் பலமாகிவிடுகிறார். துலா ராசிக்கு லாபாதிபதியான சூரியன் சாரத்தில் (உத்திராடம்) சுக்கிரன் சஞ்சாரம். சூரியனும் பாக்கியாதிபதி புதனுடன் 2-ல் இருக்கிறார். எனவே, "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி எந்தக் குறையுமில்லை. குறைவையும் நிறைவாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்கு வத்தை அடைந்துவிடுவீர்கள். பகவத் கீதையில் கண்ணபரமாத்மா, "எது நடந் ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று சொன்னார். அதுதான் மனப்பக்குவம். 9-ஆமிடத்து ராகு, அந்த மனப்பக்குவத்தை- ஞானத்தை உங்களுக்குத் தருவார். 2-ஆமிடத்து சூரியனும் புதனும் நிறைவான பொருளாதாரத்தை ஏற்படுத்துவர். 17-ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறும்போது, தொடர்ந்து பணப்பற்றாக் குறையைப் போக்குவதோடு, தாராளமான பொருளாதாரப் புழக்கத்தையும் தருவார். குடும்பத்தில் மனைவி, மக்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் தருவார். அதுவே உங்களுக்குப் பக்கபலமாகி மனோ பலத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. இது கடைசிக்கூறு. 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. அதுதான் வாக்கியப் பஞ்சாங்கப்படி முறையான பெயர்ச்சி. முன்னதாக, ஜனவரி 2020-ல் மகரப் பெயர்ச்சி என்றால், அது திருக்கணிதமாகும். வாக்கியப் பஞ்சாங்கப்படி, 28-3-2020-ல் மகரத்திற்கு சனி அதிசாரமாகப் பெயர்ச்சியாவார். 2020- மே- 20-ல் சனி வக்ரமாகி, 16-6-2020-ல் மீண்டும் தனுசுவுக்கு சனி திரும்புவார். அதன்பிறகு, 15-12-2020-ல்தான் மகரத்திற்கு நிரந்தர சனிப்பெயர்ச்சி யாகிறார். ஆக, 2020 டிசம்பர் வரை சனி மகரத்திலோ தனுசுவிலோ இருந்தாலும், தனுசு ராசியில் இருக்கிற பலனைத்தான் தருவார். ஒரு அரசு அதிகாரி விடுமுறையில் செல்லும்போது, அந்தப் பதவியை தற்காலிக மாக வேறொரு இலாகா அதிகாரி பொறுப்பில் எடுத்துக்கொண்டாலும், (ஆக்டிங் டியூட்டி) அவருக்கு முழு அதிகாரம் இருக்காது. அன்றாட அலுவல்களை கவனிக்கலாமே தவிர, மற்ற பெரும் பொறுப்பு களுக்கு உண்டான கட்டளைகளைப் பிறப் பிக்கமுடியாது. அதுபோலதான் 2020 டிசம்பர்வரைக்கும், ஏழரைச்சனியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அர்த்தம். இதில் முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்ற அடிப்படையில் பலனைச் செய்யும். எனவே, பணப்பற்றாக்குறையால் கடன் வாங்க நேரிடும். விரயச் செலவுகள் ஏற்படலாம். என்றாலும் 6-ஆமிடத்துக்கு 2-ல் உள்ள குருவின் பார்வை இருப்பதால், கடன்காரணமாக உங்கள் செல்வாக் கிற்கோ கௌரவத்துக்கோ குறை நேராது. வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்ம ஏழரைச்சனி நடக்கிறது. 2020 டிசம்பரில்தான் முறையான சனிப்பெயர்ச்சியாகும். ஜனவரி என்றும், மார்ச் என்றும் இருவேறுபாடான கணிப்புகள் இருக்கின்றன! அவை யெல்லாம் அதிசாரம் என்று பெயர். குறிப்பிட்ட சிலகாலம் மகரத்தில் சஞ்சாரம் செய்துவிட்டு, மீண்டும் தனுசுவுக்கு மாறிவிடும். ஆக, 2020 டிசம்பரில்தான் முறையான சனிப்பெயர்ச்சி. இதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால், சிக்கல்களும், சிரமங்களும், பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். ஏழரைச்சனியின் பாதிப்பு குறைய, அவரவர் வயதுடன் ஒன்றுகூட்டி அத்தனை எண்ணிக்கை மிளகைச் சேர்த்து, சிவப்புத் துணியில் பொட்டலம்கட்டி காலபைரவருக்கு நெய் தீபமேற்றவேண்டும். சந்திர தசாபுக்தி பாதிப்பு விலக, திங்கட்கிழமைதோறும் சிவலிலிங்கத்திற்கு காலையில் பாலபிஷேகம் செய்யவேண்டும். கும்பகோணம் அருகில் திருவிசைநல்லூர் என்ற கிராமத்திலுள்ள சிவாலயத்தில் சதுர்யுக பைரவர் சந்நிதி உள்ளது. அங்குசென்று வழிபடலாம். சனிபகவானின் குருநாதர் பைரவர். திருநள்ளாறு, குச்சனூர், எட்டியத்தளி, பெரிச்சியூர் ஒற்றை சனீஸ்வரர், திருக்கொள்ளிக்காடு போன்ற சனி ஸ்தலங் களுக்குச் சென்றும் வழிபடலாம். கடைய நல்லூர் அருகில் கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரையும், வாடிப்பட்டி ஹைவேஸிலுள்ள நவமாருதி ஆலயம் சென்றும் வழிபடலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். 12-ஆமிடம் விரய ஸ்தானம். 5-க்குடைய சுக்கிரனும், 3-க்குடைய குருவும் இணைவதாலும், 4, 11-க்குடைய செவ்வாய் ராசியைப் பார்ப்பதாலும், இந்த விரயங்களெல்லாம் சுபவிரயமாக செயல்படும். மனை, நிலம் வாங் குவது, கட்டடம் கட்டுவது, காதணிவிழா நடத்து வது, திருமணவிழா நடத்துவது போன்றவை யெல்லாம் சுபமங்கள விரயங்கள். ஆதாயம் கருதி முதலீடுசெய்வது லாப விரயமாகும். (அதாவது முதலில் செலவு, பிறகு வரவு). ஒருசிலர் கல்விக்காக வெளியூர் போய் படிக்கலாம். ஒருசிலர் வேலைக்காக வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம். 4-ஆமிடம் கல்வி ஸ்தானம். 10-ஆமிடம் தொழில் ஸ்தானம். 4-க்குடைய செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்ப்பதால், கல்வி, வேலை, தொழில் சம்பந்தமான மாற்றங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்காக சிலர் கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். கடன் வாங்குவதற்கும் ஒரு யோகம் இருந்தால்தான் வாங்கமுடியும். 6-ஆமிடத்து ராகு கடன் வாங்கும் யோகத்தை உருவாக்கும். 6-க்குடைய புதன், 8-க்குடைய சூரியனோடு சம்பந்தப்பட்டு 11-ல் இருப்பதால், வாங்கிய கடனை நாணயமாகத் திரும்பக்கொடுக்கும் யோகத்தையும் கொடுக்கும். கடன் வாங்கவும், திரும்பக் கொடுக்கவும் யோகம் வேண்டும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் குரு, சுக்கிரன், கேது சம்பந்தம்; ராகு பார்வை. பொதுவாக குருவும் சுக்கிரனும் சேரும் கிரகங்களுக்கு குருபலம் பெருகும். குரு- தேவ குரு. சுக்கிரன்- அசுர குரு. கேதுவும் ராகுவும் ஞான, மோட்ச காரகர்கள். ஜாதகரீதியாக "ப்ரோரஜா' யோகம் என்பது சந்நியாசி யோகம் எனப்படும். இந்த கிரக அமைப்பு காரணமாக, சிலர் காவி கட்டியாக வாழலாம். சிலர் காவிகட்டாத சந்நியாசியாக பக்குவம் அடையலாம். இந்த கிரக அமைப்போடு செவ்வாய் இணைந்தால், காவிகட்டிய போர்வையில் காமக்களியாட்டம் புரிகிற சாமியாராக இருப்பார்கள். இந்த அமைப்பில், சிலர் தீவுக்கே சொந்தக்காரர்களாக இருக் கிறார்கள். ஆன்மிகப் போர்வையில் லௌகீக காமவிளையாட்டுகள் விளையாடுகிறவர்கள் நிச்சயம் காலத்தின் தண்டனைக்கு உள்ளாகத்தான் வேண்டும். அரசியல் தூய்மை காமராஜரோடு முடிந்துவிட்டது. ஆன்மிக வாய்மை மகா பெரியவரோடு முடிந்துவிட்டது. மற்றவையெல்லாம் மோகினி ரூபத்திலுள்ள சைத்தான்களாகும். இதை உணர்ந்து, சைத்தானிடம் வசமாகாமல் தப்பிக்கவேண்டியது அவரவர் புத்திசாலிலித் தனத்தைப் பொருத்தது. அதைத்தான் "ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர் இருப்பார்கள்' என்று சொல்வார்கள். இதையே எம்.ஜி.ஆரும் "ஏமாறாதே ஏமாற் றாதே' என்று பாடினார். உங்களைப் பொருத்த வரை கருதிய காரியங்கள் யாவும் பூர்த்தி யாகும். உறவினர்களால் நன்மையுண்டு. சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறையிருக் காது. வேலை, தொழிலிலும் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்காரர்களுக்கு, நடைமுறைக் கோட்சாரம் அற்புதமாகவும் அனுகூலமாகவும் அமைகிறது. 2, 9-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவது ஒருவகையில் பலக்குறைவு என்றாலும், 9-க்குடைய செவ்வாய் 10-க்குடைய குருவின் சாரம் பெறுவதால் (விசாகம்) தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இடமுண்டாகும். அத்துடன், 10-க்குடைய குரு கேது சாரம் (மூலம்) பெறுவதோடு, சுக்கிரன், சனியோடு சம்பந்தம். எனவே, மீன ராசிக்காரர்களுக்கு கவர்ச்சிகரமான தொழில் ஈடுபாடு, கலைத் தொழில், ஊடகத் தொழில் (மீடியா), விளம்பரமாகும் தொழில், பலரின் பாராட்டுக்குரிய தொழில் ஆகியவற்றில் நாட்டமும் தேட்டமும் இருக்கும். தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால், அவர்கள் அதில் சாதனை படைக்கலாம். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று ஒரு வாசகம் உண்டு, அதன் உள்ளர்த்தம் என்ன வென்றால், கற்பனையாக எண்ணினா லும் பெருமையாகவும் உயர்வாகவும் எண்ணவேண்டும் என்பதுதான். எனக்கு மிஸ்டிக் செல்வம் என்று ஒரு நண்பர் இருந்தார். "நினைப்பதில் எதற்குப் பிச்சைக் காரத்தனம்' என்பார். அதன்படி, லட்சக்கணக்காகவும், கோடிக்கணக்காகவும் திட்டமிட்டு எண்ணி செயல்படுங்கள். உங்கள் எண்ணம் வெல்வது திண்ணம். குரு நல்லவர். குருவின் ராசியில் பிறந்த நீங்களும் நல்லவர். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!