ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

Advertisment

ஆரம்பம்- மீனம்.

14-10-2019- மேஷம்.

16-10-2019- ரிஷபம்.

Advertisment

19-10-2019- மிதுனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 1, 2, 3.

செவ்வாய்: அஸ்தம்- 1, 2.

புதன்: சுவாதி- 4, விசாகம்- 1, சுவாதி- 4 (வ).

குரு: கேட்டை- 3, 4.

சுக்கிரன்: சுவாதி- 1, 2, 3, 4.

சனி: பூராடம்- 1.

ராகு: திருவாதிரை- 4.

கேது: பூராடம்- 2.

கிரக மாற்றம்:

15-10-2019- புதன் வக்ரம் ஆரம்பம்.

18-10-2019- துலா சூரியன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைகிறார். அதேசமயம் 8-ஆம் பார்வையாக தன் ராசியைத் தானே பார்க்கிறார். எந்த ஒரு ராசியாதி பதியோ லக்னாதிபதியோ 6, 8, 12-ல் மறைந்தாலும், அந்த ஸ்தானங்களை அவரே பார்த்தாலும் மறைவு தோஷம் விலகும். அதேபோல அந்த மறைந்த கிரகங்களுக்கு வீடுகொடுத்த ராசிநாதன் அந்த கிரகத்துக்கோ, ராசி, லக்னத்திற்கோ கேந்திர- திரிகோணமாக இருந்தால் மறைவு தோஷமில்லை. பாக்கியாதிபதி குரு 8-ல் மறைவென்பது குற்றம்தான். அதனால் உங்கள் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை, தாமதம் காணப்படலாம். அதேசமயம் 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால், தொடக்கத்தில் தாமதப்பட்டாலும், முடிவில் எல்லாக் காரியங்களும் எண்ணம்போல் ஈடேறும். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம். அங்கு ராகு நிற்க, சனியும் கேதுவும் பார்ப்பதால், சகோதரவகையில் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் உருவாகலாம். 6-க்குடைய புதன் 7-ல் சுக்கிரனோடு இணைந்திருப்பதால், மனைவிவகையில் எதிர்பாராத கடன்களும் பிரச்சினைகளும் ஏற்பட இடமுண்டு. பெண் ஜாதகம் என்றால் கணவருக்கு மேற்கண்ட பலன்கள் நடைபெறும். 4-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியத்தில் தெளிவுண்டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறை கிறார். இருந்தாலும் ஆட்சிபெறுகிறார். மேஷ ராசியில் எழுதியமாதிரி மறைந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றாலும் மறைவு தோஷ மில்லை. 2-க்குடைய புதன், 2-ல் நிற்கும் ராகு சாரம் பெறுவதால் வாக்கு, தனம், குடும்பம் ஆகிய 2-ஆமிடத்துப் பலன்கள் சிறப்பாக அமையும். மேலும் வாரக் கடைசியில் புதன் வக்ரமாகிறார். வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். 2-க்குடையவர் 6-ல் மறைவதால், உங்கள் பணம் மற்றவர்வசம் போய்விடும். அதாவது நீங்கள் கொடுத்த கடன் உங்கள் தேவைக்குப் பயன்படாது; திரும்பவும் கிடைக்காது. 6-க்குடையவர் 2-ல் போனால், அந்நியர் தனம் உங்கள் கைவசம் புரளும். இங்கு 6-க்குடையவரும், 2-க்குடையவரும் இணைந்து 6-ல் இருப்பதால், கடன் வாங்கி கடன் கொடுக்கும் நிலை ஏற்படும். ராசியை குரு பார்ப்பதால், கடனை நாணயமாக அடைக்க வேண்டுமே என்ற கவலை இருக்குமே தவிர, கௌரவப் பங்கமோ, வாக்கு நாண யத்திற்கு பிசகோ ஏற்படாது. 8-க்கு டையவர் 7-ல் நிற்பதால், ஒருசிலர் மனைவி பட்ட கடனை கணவர் அடைக்கலாம். அல்லது கணவர்பட்ட கடனுக்கு மனைவி பொறுப்பேற்கலாம். பொருளாதாரத்தில் இப்படிப்பட்ட பலன் ஏற்படா விட்டால், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பனிப்போர், சங்கடங்களும் உண்டாகலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அவரோடு சேர்க்கை. அதனால் குரு 6-ல் மறைந்த தோஷம் விலகும். புதனும் சுக்கிரனும் ஜென்ம ராசியில் நிற்கும் ராகுவின் சாரம் பெறுகிறார் கள். எனவே செல்வாக்கு, கௌரவம், புகழ் ஆகியவற்றுக்குக் குறைவில்லை. செயல் திறமைக்கும் பாதிப்பில்லை. 5, 9 திரிகோண ஸ்தானம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம். கேந்திரம் என்பதை "விஷ்ணு ஸ்தானம்' என்பார்கள். திரிகோணம் என்பதை "லட்சுமி ஸ்தானம்' என்பார்கள். கேந்திரம் முயற்சியையும் உழைப்பை யும் குறிக்கும். திரிகோணம் அதிர்ஷ்டத்தை யும் யோகத்தையும் குறிக்கும். அதாவது கேந்திரம் உழைப்புக்கேற்ற கூ−. திரிகோணம் இனாம், போனஸ். உங்களுக்குத் திரிகோணம் வலுப்பெறுவதால், எதிர்பாராத நன்மைகளும் அனுகூலமும் உண்டாகும். 10-க்குடைய குரு 6-ல் மறைந்தாலும் 10-ஆம் இடத்தையே பார்க்கிறார். அத்துடன் 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 10-ஆமிடம் வாழ்க்கை, தொழிலைக் குறிக்கும் ஸ்தானம். இந்த இரண்டும் உங்களுக்கு பலமாக அமையும்; திருப்திகரமாக அமையும். அதேசமயம் 6-ஆமிடத்து குரு என்பதால், தவிர்க்கமுடியாத கடனும் உருவாகும். மனைவியின் பெயரில் தொழில் செய்யலாம்.

ttt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 9-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 9-ஆமிடமும் திரிகோணம்; 5-ஆமிடமும் திரிகோணம். ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணம் ஏறுவது அதிர்ஷ் டம் எனப்படும். அதாவது ஒரு போட்டி யில் அல்லது தேர்வில் இருவர் வெற்றி பெற்றால், இருவர் பெயரையும் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் போது, யாராவது ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு வரும். இப்படி ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோணம் ஏறும்போது தெய்வபலம் அனுகூலமாகி, உங்களுக்கு அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு அமையும். மேலும் 9-க்குடைய குரு 10-ஆமிடத்துக்கு 8-ல் மறைந்தாலும், 10-க்குடைய செவ்வாய் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்து விட்டால், அவருக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும் என்பது சாஸ்திரம். 4-ல் புதனும் சுக்கிரனும், இருப்பதால் பூமி, வீடு, வாகன யோகம், களஸ்திர சுகம், தாயன்பு போன்ற எல்லா யோகங்களும் இந்த வாரம் எதிர்பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக பாக்கியாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால், எல்லாவகையிலும் அதிர்ஷ்டங்கள் தேடிவரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் செவ்வாயோடு சேர்ந்திருக்கிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு ராஜயோகாதி பதி. அதாவது எந்த ஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதி பத்தியமும் கிடைக்கிறதோ, அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாவார். உதாரணமாக ரிஷப ராசிக்கு சனி ராஜ யோகாதிபதி (9, 10-க்குடையவர்). கடக ராசிக்கு செவ்வாய் ராஜயோகாதிபதி (5, 10-க்குடையவர்). சிம்ம ராசிக்கும் செவ்வாய்தான் ராஜயோகாதிபதி. (4, 9-க்குடையவர்). துலா ராசிக்கு சனி ராஜயோகாதிபதி (4, 5-க்குடையவர்). மகர ராசிக்கு சுக்கிரன் ராஜயோகாதிபதி (5, 10-க்குடையவர்). பெரும்பாலும் இந்த ராஜயோகாதிபதி பாதகாதிபத்திய தோஷமும் அடைவார். ஆனால் பாதிக்காது. 5-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் முன்னேற்றகரமான, திருப்திகரமான பலன்களை எதிர்பார்க்கலாம். ஜாதகரீதியாக புத்திர தோஷம் உடையவர்களுக்கு, 5-ல் சனி, கேது- ராகு சம்பந்தப்படுவதாலும், 5-க்குடையவர் தன் ஸ்தானத்துக்கு 12-ல் மறைவதாலும் புத்திர தோஷமோ, புத்திர சோகமோ ஏற்படலாம். பிள்ளைகளே பிறக்கவில்லை என்பது புத்திர தோஷம். பிறந்து பிறந்து இறப்பது புத்திர சோகம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 2-ல் இருக்கிறார். 2-க்குடைய சுக்கிரனும் அவருடன் கூடியிருக்கிறார். ஜென்ம ராசியில் 12-க்குடைய சூரியனும், 8-க்குடைய செவ்வாயும் சம்பந்தம். அவர்களுக்கு 6-க்குடைய சனி பார்வை. எனவே, "முயற்சி தன் மெய்வருத்தக் கூலிலி− தரும்' என்ற குறள் உங்களைப் பொருத்தவரை பொய்த்துவிடும் என்று கூறலாம். 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய புதனும் ஒன்றுகூடி 2-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டாலும், விட்டகுறை தொட்டகுறை என்ற மாதிரிதான் உங்களுக்கு நன்மைகள் நடக்கலாம். ஒருவர் வெற்றிபெறுவதென்பது மூன்றுவகையில் அமையும். எதிராளியோடு போராடி போட்டிபோட்டு வெற்றிபெறுவது. எதிராளி போட்டியில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிவிடுவதால் அடையும் வெற்றி. எதிராளியோடு ரகசிய ஒப்பந்தம் செய்து தோற்றுப்போவதாக ஏற்பாடு செய்வதால் அடையும் வெற்றி. முந்தைய வெற்றியே வெற்றி. நேர்மையான வெற்றி. மற்றப் வெற்றியெல்லாம் ஊழல் வெற்றியாகும். குறுக்குவழி வெற்றியாகும். உங்கள் கிரக அமைப்புப்படி குறுக்குவழி வெற்றிதான் அமையும், உதாரணமாக "நீட்' தேர்வுகு போலி−ப்பேரில் வேறு மாணவர்கள் பரீட்சை எழுதியதுபோல! 4-ஆம் இடத்திலுள்ள சனி, கேது, ராகு, செவ்வாய் பார்வை காரணமாக ஆரோக் கியத்தில் கவனம் தேவைப்படும். நரம்புத் தளர்ச்சி, வாய்வுத் தொல்லை, தோல் சம்பந்தமான பீடைகள் உருவாகலாம். பரிகாரம் தேடிக்கொள்ளவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் பாக்கிய விரயாதிபதி புதன் சம்பந்தம். 3, 6 க்குடைய குரு 2-ல். 2-க்குடைய செவ்வாய் 12-ல். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு ஆகியவற்றுக்கு குறைவில்லை. என்றாலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பீர்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளும், பற்றாக்குறை பட்ஜெட்டும் காணப்படும். எனினும் 3-ல் உள்ள சனியும் கேதுவும், அவரைப் பார்க்கும் செவ்வாயும் ராகுவும் மன தைரியத்தையும் தன்னம் பிக்கையையும் தருவர். 2-ல் உள்ள குரு வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுவார். அதேசமயம் 6-க்குடையவர் 2-ல் இருப்பதால், ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனைக் கொடுக்கச் செய்வார். 7-ஆமிடத்தை புதனும் சுக்கிரனும் பார்ப்பதால், திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண யோகம் அமையும். 10-ஆமிடம் கடக ராசியை குரு பார்ப்பதால், (10-க்கு பாக்கியாதிபதி) தொழில் மேன்மையும், உயர்வும், முன்னேற்றமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி யோகமும் திருப்தியும் ஏற்படும். செவ்வாய்- சனி ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்வதால், காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு. மிகமிக இளமையில் திருமண மானவர்களுக்குள் (25 வயதிற்குள்) கருத்து வேறுபாடும் பிரிவினையும் உண்டாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 2020 மார்ச்வரை ஏழரைச்சனி நடக்கிறது. முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனி, இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி, மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனி அல்லது அதற்குச் சமமான கண்டச்சனி. யாருக்கு எந்த சனியாக நடந்தாலும் ஜென்மத்தில் குரு இருப்பதாலும், குரு வீட்டில் சனி இருப்பதாலும் கழுவின மீனில் நழுவின மீனாகக் காப்பாற்றப் படுவீர்கள்; தப்பிக்கலாம். மகரத்தில் மாறும் சனி, அங்கு வக்ரமாகி ஜுலை மாதம் தனுசுக்கு மறுபெயர்ச்சியாகி, மறுபடியும் 2020 டிசம் பரில்தான் மகரத்திற்கு மாறுவார். அதுதான் முறையான சனிப்பெயர்ச்சியாகும். மார்ச் மாதம் ஏற்படும் சனிப்பெயர்ச்சி அதிசாரப் பெயர்ச்சியாகும். இருந்தாலும் அதன் பாதிப்பிலி−ருந்து விடுபடலாம். அதேபோல ஜென்மத்திலுள்ள குரு 2019, மே மாதம் வக்ரமாகத் திரும்பியவர் அக்டோபர் மாதக் கடைசியில்தான் தனுசுக்கு மாறுகிறார். 2020 மார்ச்சில் மகரத்திற்கு மாறுவார். இப்படி விருச்சிகம், தனுசில் சஞ்சரிக்கும் குரு அதிசாரம், வக்ரம் என்று சஞ்சாரம் செய்வதால், அவரவர் ஜாதக தசாபுக்திப் பலனை அனுசரித்து நல்ல- கெட்ட பலன்களைச் செய்வார்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசியில் ஜென்மச்சனி, ஜென்மக் கேது. தேக ஆரோக்கியம், உறவினர்கள்வகையில் கவலைகள், பழகிய வர்களுடன் பகை, கொடுக்கல்- வாங்க−ல் சிக்கல், அத்தியாவசியக் கடன் போன்ற பலன்களையெல்லாம் சந்திக்கும் காலம். ஜென்மச்சனியை 10-ஆமிடத்துச் செவ்வாய் பார்க்க, செவ்வாயும் சனியும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்வதால் பொருளா தாரம், வாழ்க்கை வசதி, சௌகரியங்கள் ஆகியவற்றுக்கு எந்தக் குறையும் இல்லை யென்றாலும், காரணம் சொல்லமுடியாத ஏதோ ஒரு குறை; ஏதோ ஒரு கவலை உங்களின் மகிழ்ச்சியைத் தடுக்கிறது. என்றாலும் 7, 10-க்குடைய புதனின் சாரம் பெற்று குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், உங்கள் கவலையும் வருத்தங்களும் நிலையானதல்ல. விரைவில் மாறக்கூடியதுதான். "கட்டிய வீட்டுக்கு எட்டு வக்கணை சொல்வார்கள்' என்பதுபோல உங்களை மற்றவர்கள் விமர்சனம் செய்வார்கள். அல்லது உங்கள் பிரச்சினைகளையே சமாளிக்க முடியாத நிலையில், ரத்த பந்த சொந்தங்களின் பிரச்சினைகள் உங்களைத் தேடிவந்து முற்றுகை யிட்டு நிம்மதியைக் குறைக்கும். ஜாதக தசாபுக்திக்கேற்ற பரிகாரம் தேடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. சனிக்கு கேது- ராகு, செவ்வாய் சம்பந்தமும் கிடைக்கிறது. குதிரை கீழே தள்ளி, குழியை யும் பறித்த கதை. கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டிருந்ததாம். இப்படி பிரச்சினைகளோடு போராடிப் போராடி, பிரச்சினைகளுக்கு மத்தியி லேயே அமைதியும் ஆனந்தமும் இல்லாமல் அவதிப்படும் நிலை. 2020 மார்ச்சில் விரயச்சனி விலகி ஜென்மச்சனி வரும். மகரத்தில் மாறும் சனி, ஜூலையில் வக்ரமாகி மீண்டும் தனுசுக்கு மாறுகிறார். மீண்டும் மகரத்திற்கு 2020 டிசம்பரில் மாறுகிறார். ஆக, 2020 முடியும் வரை உங்களுக்கு விரயச்சனிதான். அதன்பிறகு விரயங்கள் நடந்தாலும், அவை சுபவிரயமாக மாறி மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டும். ஒரு ஜாதகத்தில் 6, 8 சஷ்டாஷ்டகம் என்றாலும், அதில் சுப சஷ்டாஷ்டகம் (அனுகூல சஷ்டாஷ்டகம்), அசுப சஷ்டாஷ்டகம் (பிரதிகூல சஷ்டாஷ்டகம்) என்று இருப்பதுபோல, விரயத்திலும் சுபவிரயம், அசுபவிரயம் என்று இரு விரயம் உண்டு. திருமணம், புத்திரபாக்கியம், வீடு, வாகனம் வாங்குதல் போன்ற செலவுகள் சுபவிரயம். இழப்பு, ஏமாற்றம், கடன், திருட்டு போகுதல் எல்லாம் அசுபவிரயம் அல்லது வீண்விரயம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் கேது சம்பந்தம் பெற்று, ராகு- செவ்வாய் பார்வையைப் பெறுகிறார். பொதுவாக 11-ஆமிடம் என்பது ராகு, கேது, செவ்வாய், சனி இவர்களுக்கு நற்பலன் தரும் இடங்களாகும். "ஆறு பதினொன் பான் மூன்றில் அந்தகன் நிற்குமாகில் கூறும் பொன் பொருளுமுண்டாம் குறைவிலாச் செல்வமுண்டாம் ஏறும் பல்லக்குண்டாம். இடம் பொருள் ஏவலுண்டாம் காரு பால் அஷ்டலட்சுமியின் கடாட்சமும் உண்டாகும்' என்பது சந்திர காவியப் பாடல். சனியைப் போலவே ராகு, கேது, செவ்வாய்க்கும் 11-ஆமிடம் யோகமான இடம். ஆகவே உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்' ஆரோக்கிய விருத்தி, தனவிருத்தி, தொழில் விருத்தி, குடும்ப விருத்தி போன்ற எல்லா முன்னேற்றங்களும் எதிர்பார்க்க லாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். வீடுவாசல், வாகன யோகாதி அமையும். செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். வரவேண்டிய பணம் வசூலாகும். கொடுக்கவேண்டியதைக் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்து நாணயத்தைக் காப் பாற்றலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா போகலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குரு ராசிநாதன் என்பதோடு 10-க்கும் உடையவர். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 9-க்குடையவர். அவரும் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே, 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான யோகங்கள் இருந்தாலும், ஒருசில குறிப்பிட்ட யோகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட யோகங்களில் தர்மகர்மாதிபதி யோகமும் ஒன்று. இதன் பலன்- பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேரும். சிதலமடைந்த தொழில் சீரும் சிறப்பும் பெறும். வராதிருந்த பணம் வந்துசேரும். பிரிந்திருக்கும் நண்பர்கள் இணைந்து ஒன்றுகூடி நட்பாகலாம். இழந்த பதவி, செல்வாக்கு எல்லாவற்றையும் மீண்டும் பெறலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் வம்புதும்புகள் நீங்கி வெற்றியடையலாம். புதிய வேலைவாய்ப்பு, தொழில் யோகம் அடையலாம். முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கலாம். சொல்வாக்கும் செல்வாக்கும் அடையலாம். தீராத பிணிகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஆரோக்கியம் பெருகிவிடும். மொத்தத்தில் இருள் நீங்கி ஒளிமயம் ஏற்படும்.