ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

13-8-2019- மகரம்.

Advertisment

15-8-2019- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 3, 4, மகம்- 1.

செவ்வாய்: மகம்- 1, 2.

புதன்: பூசம்- 3, 4, ஆயில்யம்- 1, 2, 3.

குரு: கேட்டை- 2.

சுக்கிரன்: ஆயில்யம்- 2, 3, 4, மகம்- 2.

சனி: பூராடம்- 1, மூலம்- 4.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

சுக்கிரன் அஸ்தமனம் (ஆடி- 6 முதல் புரட்டாசி- 3 வரை).

17-8-2019- சிம்மச் சுக்கிரன்.

17-8-2019 இரவு- சிம்ம சூரியன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் இருந்து 5-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். எந்தவொரு கிரகமும் திரிகோணத்திலும் கேந்திரத்திலும் இருப்பது சிறப்பான பலனைத் தரும். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம்; அதை அதிர்ஷ்ட ஸ்தானம் என்று சொல்லலாம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம்; முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லலாம். திரிகோணத்தில் ராசிநாதன் இருப்பதால் எல்லா முயற்சி களும் சிரமப்படாமல் எளிதாக ஈடேறும். பூர்வபுண்ணிய பாக் கியாதிபதியும் திரிகோணா திபதியுமான குரு 8-ல் மறைவது குற்றம் என்றாலும், ராசி நாதன் செவ்வாயின் பார்வை யைப் பெறுவதாலும், அத்துடன் 10-க்குடைய சனி 9-ல் இருப் பதாலும் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எனவே செல்வாக்கு, புகழ், பெருமை, திறமைக்கேற்ற கௌரவம், மதிப்பு, மரியாதை எல்லாம் எதிர்பார்க்கலாம். மனக்கவலை மாறும். குடும்பக் குழப்பம் விலகும். வீட்டில் மங்கள காரி யங்கள் நடைபெறும். விரயா திபதி குரு விரயஸ்தானத்தைப் பார்ப்பதால் சுபவிரயங்கள் உண்டாகும்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோவில் அல்லது பழனி அல்லது சென்னிமலை சென்று முருகனை வழிபடலாம். உள்ளூரில் செவ் வாய் கிரகத்துக்கு செவ்வரளி சாற்றி வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந்தாலும் ஆடி 6 முதல் புரட்டாசி 3 வரை அஸ்தமனமாக இருப்பதால் டபுள் மைனஸ்=ப்ளஸ் என்பதுபோல, "கெட்டவன் கெட்டிடில் ராஜயோகம்' என்பது பலித மாகும். மேலும் சுக்கிரனுக்கு மீனம் உச்ச ராசியாகும். மீனத்துக்கு அதிபதி குரு (உச்ச ராசிநாதன்) ரிஷப ராசியையும் பார்க்கிறார்; சுக்கிரனையும் பார்க்கிறார். சுக்கிரன் 6-க்குடையவர் என்பதால் நோய் நொடி, பிணி, வைத்தியச்செலவு எல்லாம் விலகும். ஆரோக்கியம் பெருகும். அதேபோல எத்தனை லட்சம் கடன் இருந்தாலும் அடைபடும் மார்க்கம் உண்டாகும். வியாபாரம் விருத் தியடையும். தொழில் முன்னேற்றமாகும். தாராளமான வரவு- செலவுகள் ஏற்படும். நீண்டநாள் கனவுகளும் திட்டங்களும் வெற்றியடையும்.திருமணமாகாதவர் களுக்குத் திருமணம் கூடும். திருமணமான வர்களுக்கு மனைவிவகையில் அனுகூலமும் ஆதாயமும் எதிர்பார்க்கலாம். சில பெண் களுக்கு தகப்பனார்மூலம் அசையும் சொத்து, அசையாச் சொத்து கிடைக்கும் யோகம் உண்டாகும். 2-ல் ராகு; 8-ல் கேது. பேச்சில் நிதானம் தேவை.

பரிகாரம்: அட்டமத்துச்சனியின் வேகம் தணிய திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, எட்டியத்தளி, திருநறையூர் போன்ற தலங்கள் சென்று வழிபடலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் ராகு நிற்கிறார். 7-ல் சனி, கேது நின்று பார்க்கிறார்கள். "பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்பது பழ மொழி. அத்துடன் "சந்தையில் விட்டெறிந்த செருப்பு யார் தலையிலாவது விழும்' என்பது விதி. ஆனால் அந்த செருப்புக்கு சனி பிடித்தவன் யார் என்பது தெரியுமாம். அவன் தலையில் விழும். ஆக சனி, ராகு- கேது இவர்களுடைய சம்பந்தம் உங்களைப் பாடாய்ப்படுத்துகிறது. குருவும் 6-ல் மறைகிறார்; பார்வையில்லை. எனவே உப்பு விற்கப்போனால் மழை பெய்யும். மாவு விற்கப் போனால் காற்றடிக்கும். வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் எந்த முயற்சியில் இறங்கினாலும் எல்லாம் கல்லிலே நார் உரிப்பதுபோல காணப்படும். கொண்டது கொடுத்தது வராமல் தடைப்படும். ரத்தபந்த சொந்தங்களிலும், நட்பு வட்டாரத்திலும் பொருளாதாரத்தால் வருத்தங்களை சந்திக்கும் நிலை ஏற்படும். குதிரை கொள் என்றால் வாய் திறக்கும்; கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்வதுபோல, உங்களிடம் பணம் வாங்கும்போது ஆயிரம் வணக்கம் கனிவாகப் பேசி வாங்கிப் போவார்கள். கொடுத்தைக் கேட்டால் பொங்கி எழுவார்கள்.

rr

பரிகாரம்: திருவெண்காடு, மதுரை மீனாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம் பச்சை வண்ணநாதர் கோவில் சென்று வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் சூரியன், புதன் சுக்கிரன் சேர்க்கை. இவர்களுக்கு 5-ல் உள்ள குரு பார்வை கிடைக்கிறது. அத்துடன் 10-க்குடைய செவ்வாய் 9-க்குடைய குருவைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே இந்தவாரக் கதாநாயகன் நீங்கள்தான். ஆகவே தொட்டது துலங்கும்; விட்டது கிடைக்கும்; பட்டது துளிர்க்கும். ஏற்கெனவே தொழில்துறையில் நிலவிய சிக்கல்கள் எல்லாம் நீங்கிவிடும். புதுமுயற்சிகள் முழு வெற்றியடையும். கூட்டுக் குடும்பங்களில் இருப்போருக்கு ரஜினி சொன்னதுபோல் "உங்கள் வழி தனி வழி' ஆகும். உங்கள் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எந்தத் தடையும் ஏற்படாது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அதுவே உங்களைச் சார்ந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் உறுத்தலாக இருக்கும். அதற்காக யார்மீதும் வருத்தப்படாதீர்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். குர்-ஆனில், "ஒவ்வொரு அரிசியிலும் அதை உண்ணுகிறவன் பெயர் எழுதியிருக்கிறது' என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாருக்கு எதுவென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அது கண்டிப்பாகக் கிடைக்கும்.

பரிகாரம்: திங்களூர், திருமாந்துறை, திருவிடைமருதூர் போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசியில் ராஜயோகாதி பதியான செவ்வாய் நிற்கிறார். அதனால் ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்த தோஷம் விலகும். 12-ல் சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் மறைகிறார்கள். புதன் 2, 11-க்குடையவர். சுக்கிரன் 3, 10-க்குடையவர். சூரியன் ராசி நாதன். கடும் உழைப்பு, அற்ப ஊதியம் என்ற வகையில் பலன் நடக்கும். எட்டு மணி நேரத்திற்கு பதில் பத்து மணி நேரம் 12 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்த்தாலும், எட்டு மணி நேரச் சம்பளமே ஒழுங்காக வந்துசேராது. என்றாலும் 5-க்குடைய குருவை 9-க்குடைய செவ்வாய் பார்ப்பதால் (இரண்டு திரிகோணாதிபதிகள் சம்பந்தம்) உங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கும் சௌகரியங்களுக்கும் எந்த குறைவும் இல்லா தபடி எல்லாம் நிறைவாக அமையும். எந்த வொரு ஜாதகத்திலும் திரிகோணமும் கேந்திரமும் வலுவாக இருந்தால் அந்த ஜாதகம் யோகமான ஜாதகமாகும். "சந்திர காவியம்' என்ற நூலில் "அஞ்சு ஒன்பதிற்க திபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற சுபமே பொழிவார்' என்று சொல்லப் பட்டுள்ளது. ஆகவே "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று மனநிறைவடையலாம்.

பரிகாரம்: சூரியனார்கோவில் சென்று வழிபடலாம். பருதியப்பர் கோவிலும் (தஞ்சை) போகலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 11-ல் பலம் பெறுகிறார். வாரத் தொடக்கத்தில் சனியின் சாரம் பெற்றாலும் பிறகு சுயசாரத்தில் சஞ்சாரம். புதனின் நட்சத்திரமான கேட்டையில் நிற்கும் குரு புதனைப் பார்க்கிறார். எனவே, உங்கள் முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியடையும். செய்தொழில் சிறப்படையும். வாழ்வு வளம் பெறும். தேகம் நலம் பெறும். பொருளாதாரத்தில் செல்வாக்கு பலம் பெறும். பணபலம், படைபலம், மனபலம் எல்லாம் தெளிவாக இருக்கும். 9-க்குடைய சுக்கிரனையும் 10-க்குடைய புதனையும் (ராசிநாதன்) குரு பார்க்கிறார். 8-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவதால் தேவையற்றவை சல்லடையில் வடிகட்டுவதுபோல தேங்கி விடும். பயனுள்ளவர்களின் அல்லது பல முடையவர்களின் தொடர்பு உங்கள் முன்னேற் றத்திற்கு வழிவகுக்கும். 5, 6-க்குடைய சனி 4-ல் நின்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால், எதிரி களும் வேண்டாதவர்களும் சிலசமயம் உங்களுக்கு செய்யும் கெடுதல்களே நல்லதாக அமைந்துவிடும். ராமாயணத்தில் ராமனுக்குக் கெடுதல் செய்வதாக நினைத்து கைகேயியின் மூலமாக ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் மந்தரை. அதுவே ராமாவதாரத்தின் குறிக் கோளை நிறைவேற்றியது. (இராவணனின் வதம்).

பரிகாரம்: திருவெண்காடு, மதுரை மீனாட் சியம்மன் கோவில் சென்று வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் திக்பலம் பெறுகிறார். அவருக்கு சாரம் கொடுத்த புதனும் அவருடன் சேர்க்கை. 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே எண்ணியது ஈடேறும். கருதியவை கைகூடும். நிûத்தவை நிறைவேறும். விரும்பியது தேடிவரும். வேண்டாதவை விலகிப் போகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு வாரிசு உண்டாகும். மனைவி, மக்கள் பாக்கியம் பெற்றவர்களுக்கு சொந்த வீட்டு யோகமும் வாகன யோகமும் உண்டாகும். படித்து முடித்து வேலைதேடி அலைவோருக்கு நல்ல வேலை அமையும். அவர்கள் ஜாதகத்தில் 10-க்குடையவரும் சூரியனும் பலமாக இருந் தால் அரசு வேலை அமையும். ராகு- கேது அல்லது 12-க்குடைய கிரக தசாபுக்திகள் நடந் தால் வெளிநாட்டு வேலை யோகம் அமையும். மாணவர்களும் வெளி மாநிலம், வெளிநாடு சென்று படிக்கலாம். 3, 6-க்குடையவர் 2-ல் இருப்பதாலும், அவரை 2, 7-க்குடைய செவ்வாய் பார்ப்பதாலும் ஒருசிலருக்கு பங்காளி வகையிலும் உடன்பிறந்தவர்கள் வகையிலும் மனைவி வகையிலும் நிலவிய சிக்கல்களும் பிரச்சினைகளும் நிவர்த்தியாகி, ஒற்றுமையும் உதவி ஒத்தாசையும் அமையும்.

பரிகாரம்: கஞ்சனூர், உடையாளூர், திருநாவலூர், ஸ்ரீரங்கம் போன்ற திருத்தலங் களுக்குச் சென்று சுக்கிரனை வழிபடலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் திக்பலம் பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். 2, 5-க்குடைய குரு ஜென்மத்தில் நின்று 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறைவைத்தது' என்ற பாடல் விதி உங்களுக்குப் பொருந்தாது. அதற்கு மாறாக சீரான பலன்களையும், சிறப்பான பலன்களையும் சந்திக்கலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் அமையும். புத்திர பாக் கியம் இல்லாதவர்கள் புத்திர பாக்கியத்தை அடையலாம். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் போராடி வருகிறவர்களும், வழக்கு, வில்லங் கம், வியாஜ்ஜியம் போன்றவற்றை சந்திக்கிறவர்களும் இக்காலம் சாதகமான தீர்ப்புகளை சந்திக்கலாம். தகப்பனார், பாட்டனார் வகையில் வரவேண்டிய ஆஸ்திகள் எல்லாம் ஆதாயத்தோடு வந்துசேரும். விருந்து விழாக்களும், கேளிக்கை வைபவங்களும், சுபச்செலவுகளும் உண்டாகும். இதுவரை கடந் தகாலத்தில் மங்குசனியாக இருந்த நிலைமாறி ஏழரைச்சனி பொங்குசனியாக பொலிவைத் தரும். சிலர் வேலை மாறலாம். அல்லது பதவி உயர்வடையலாம். சொந்த வீடு கட்டலாம்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோவில், பழனி அல்லது சென்னிமலை சென்று செவ்வாய்க்கு செவ்வரளி சாற்றி வழிபடலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் சுற்று. 55 வயதைத் தாண்டியவர்களுக்கு இரண்டாம் சுற்று. 80 வயதைக் கடந்தவர் களுக்கு மூன்றாம் சுற்று. முதல் சுற்று மங்கு சனி; இரண்டாம் சுற்று பொங்கு சனி; மூன்றாம் சுற்று மரணச்சனி என்பர். மரணச்சனி என்ற வுடன் மரணம் வந்துவிடும் என்று பயந்துவிடா தீர்கள். 94 வயதுவரை வாழந்த கலைஞர் மூன்று சனியையும் கடந்து நான்காவது சனியையும் சந்தித்தவர்தான். மூன்றாம் சுற்று மாரகம் ஏற்படுத்தினாலும் ஜாதகம் யோகமாக இருந் தால் அதுவே அதிர்ஷ்ட யோகமாக அமைந்து விடும். அமிர்தயோகம், சித்தயோகம் என்று சொல்லுவதுபோல மரணத்தையும் மரண யோகம் என்று சொல்வார்கள். ஞானம் என்பது அந்திமக் காலத்தில் சாவதற்கு முதல் நாளில் கூட வரலாம். அதேபோல சிலருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன்பும் அதிர்ஷ்ட யோகம் வரும். அதனால்தான் ஜாதகம் எழுதுவதற்கு முன்பு "ஜெனனி ஜென்ம சௌக்யானாம் வர்த்தனி குல சம்பதாம் பதவி பூர்வ புண்ணி யானாம்' என்று எழுதுகிறார்கள். ஆகவே ஏழரைச்சனி சிலருக்கு யோகச்சனியாகவும் பொங்குசனியாகவும் நல்லது செய்யலாம்.

பரிகாரம்: குச்சனூர், திருநள்ளாறு, திருவிசைநல்லூர், திருநறையூர் சென்று வழிபடலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ராசிக்கு 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 12-ல் மறைகிறார். குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் மகர ராசிக்கு 8-ல் மறை கிறார். இப்படி மறைந்த கிரகங்கள் மறைந்த பலனைச் செய்யுமா- நிறைந்த பலனைச் செய்யுமா- சிறந்த பலனைச் செய்யுமா என்ற ஒரு கேள்வி எழலாம். புதன் ஒருவருக்கு மட்டுமே "மறைந்த புதன் நிறைந்த தனம் தரும்' என்ற ஜோதிட விதியுண்டு. மற்ற எந்த கிரகங்களுக்கும் இந்த விதி பொருந்தாது. ஆனால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பது போலவும், டபுள் மைனஸ்= ஒரு ப்ளஸ் என்பது போலவும் சில நேரம் நல்லது செய்யும். ஒரு நீளமான கோடு. அதற்குப் பக்கத் தில் அதைவிட நீளமான கோடு வரைந்தால் முதல் கோடு சின்ன கோடாக மாறிவிடும். அதுபோல மனதை வருத்தும் ஒரு பிரச்சினை- அதைவிட பெரும் பிரச்சினை வரும்போது முதல் பிரச்சினை சமாளிக்கும் சாதாரண பிரச் சினையாக மாறிவிடும். பிரச்சினைகள் இல்லா தவர்கள் யாருமே இல்லை. அதேசமயம் அது விரலுக்குத் தகுந்த வீக்கமாக இருக்க வேண்டும். மனவுறுதி படைத்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. அதேபோல தெய்வ நம்பிக்கை உடைய வர்களுக்கும் அந்த மனவுறுதி கிடைக்கும்.

பரிகாரம்: திருப்பத்தூர், கண்டர மாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் சென்று ஒற்றை சனீஸ்வரரை வழிபடவும். நவபா ஷான பைரவர் சந்நிதியும் உண்டு.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறு கிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு 10-ல் இருக்கிறார். குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 7-ல் நின்று கும்ப ராசியைப் பார்க் கிறார். எனவே இக்காலம் நற்காலம் என்றும் சொல்லலாம்; பொற்காலம் என்றும் சொல் லலாம். "ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்று வள்ளுவர் சொல்லுவார். இடம், பொருள், ஏவல் என்பது தான் இதனுடைய ரகசியம். ஒரு உண்மைச் சம்பவ உதாரணம். காரைக்குடி கம்பன் விழாவில் செட்டிநாட்டு அரசரும் (அண்ணா மலைச் செட்டியார்), அன்றைய முதல்வர் கலைஞரும் கலந்துகொண்டார்கள். அவ்விழாவில், விழா ஏற்பாடு செய்திருந்த தமிழறிஞர், "கம்பன் மணிமண்டபம் கட்டவேண்டும்; அதற்கு முதல்வர் கலைஞர் வழிவகை செய்யவேண்டும்' என்று பேசினார். அதற்கு கலைஞர், "நான் வெறும் அமைச் சர்தான்; இங்கு அரசரே வருகைதந்திருக் கிறார்கள். அவர்களால் முடியாததா என்னால் முடியப்போகிறது?' என்று கூறினார். உடனே செட்டியார் அங்கேயே ஆரம்பச்செலவுக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்து விட்டார். இதுதான் சபையறிந்து, சந்தர்ப் பமறிந்து பேசுதல் என்று சொல்லப்படும். இதைக் கடைப்பிடித்தால் உங்கள் கனவுகளும் நனவுகளாகும்.

பரிகாரம்: சனியின் திருத்தலங்கள் சென்று வழிபடுவதோடு, கும்பகோணம் அருகில் எய்யலூர் சென்றும் வழிபடலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இன்றைய கோட்சார நிலையும் கிரக நிலையும் பன்னிரண்டு ராசிக்காரர்களில் இரண்டு ராசிக்காரர்களுக்குத்தான் சாதகமாக அமைகிறது. ஒன்று கடக ராசி; மற்றொன்று மீன ராசி. ஜோதிடத்தில் ஒரு பாடல் உண்டு. "பாடப் படிக்கத் தேட சுகிக்க செலவழிக்க பரதவியம் பயில கற்கடகம் சிம்மம் கன்னிக் கல்லாது மற்கிடமேது மற்று' என்பது பாடல். பிரம்மா பூலோகத்தைப் படைக்கும்போது கடக லக்னம் உதயமானதாகப் புராணம் சொல்லுகிறது. அந்த கடகத்தில்தான் குரு பகவான் உச்சம் பெறுவார். அந்த குருவுக்கு 9-ஆமிடமாகிய மீன ராசி ஒரு சொந்த வீடு. ஆகவே கடகத்துக்குச் சொன்ன அத்தனை யோகமும் பலனும் மீன ராசிக்கும் உண்டு. தமிழ்நாட்டில் முதல்வர் இ.பி.எஸ். தனது ஆட்சி வலுவுக்காக ஓ.பி.எஸ்.யை துணை முதல்வராக ஆக்கியதுபோல, கடக ராசியும் மீன ராசியும் முதல்வர் அல்லது துணை முதல்வர் அந்தஸ்து பெறுகிறது. இதில் யார் முதல்வர், யார் துணை முதல்வர் என்பது (கடகமா மீனமா) அவரவர் எண்ணம், செயல் பாடுகளைப் பொருத்தது. கடகம்- சரராசி; மீனம்- உபய ராசி. கடகம் விட்டுக்கொடுக் காமல் போராடலாம். மீனம் பெருந்தன்மை யோடு விட்டுக்கொடுக்கலாம். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை.

பரிகாரம்: ஆலங்குடி சென்று குரு பகவானை வழிபடவும். பட்டமங்கலம் குரு பகவானையும் வழிபடவும்.