ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

15-7-2018- சிம்மம்.

17-7-2018- கன்னி.

19-7-2018- துலாம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 3, 4, பூசம்- 1.

செவ்வாய்: திருவோணம்- 4.

புதன்: பூசம்- 3.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: மகம்- 4, பூரம்- 1, 2.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

17-7-2018- கடகச் சூரியன்.

செவ்வாய் வக்ரம்.

புதன் வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் (1, 8-க்குடையவர்) 10-ல் உச்சம். ராசிநாதன் உச்சமடைவது நல்லதுதான். என்றாலும் 8-க்குடையவர் உச்சமடைவதால் சில விரயங்களையும் சஞ்சலங்களையும் சந்திக்க நேரும். தொழில்துறையில் டென்ஷன், பணிச்சுமை போன்றவை இருந்தாலும் பணி தடையில்லாமல் செயல்படும். அதற்குக் காரணம் செவ்வாயும் குருவும் ராசியைப் பார்ப்பது, தான். 2-க்குடைய சுக்கிரன் 5-ல் இருக்கிறார். பொருளாதாரத்தில் தேவைகள் நிறைவேறும். தெய்வ கைங்கர்யம் பூர்த்தியாகும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அவர் 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிலருக்கு உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் சங்கடங்களும் செலவினங்களும் உண்டாகும். 4-ல் உள்ள ராகு உடல்நலத்தில் சிறுசிறு தொந்தரவுகளையும் வைத்தியச் செலவுகளையும் உண்டுபண்ணுவார். சிலருக்கு கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். பிள்ளைகள் வகையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அவர்களால் நன்மையும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வி, உத்தியோகம் போன்றவை சிறப்பாக அமையும். 7-ல் உள்ள குரு திருமணத்தடைகளை விலக்குவார். திருமணமாகாதவர்களுக்குத் திருமண பாக்கியம் உண்டாகும். ராசியை குரு பார்ப்பதால் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிக்கு 10-க்குடைய சனி 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அத்தோடு ராசிநாதன் சுக்கிரனும் 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். உங்களது வேலை, தொழில், உத்தியோகம் இவற்றில் எந்தக் குறைபாடும் இல்லை. என்றாலும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை போன்ற உணர்வு. அதற்கு அட்டமத்துச்சனியும் ஒரு காரணம். ரிஷப ராசிக்கு சனி கெடுதல் செய்யமாட்டார். என்றாலும், அவரவர் கர்மவினையின்படி பலன்களை அனுபவித்துத்தானே ஆக வேண்டும். குரு 6-ல் மறைந்தாலும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஆக மேற்கூறியபடி தொழில் இயக்கத்தில் எவ்விதக் குற்றமும் இருக்காது. 7, 12-க்குடைய செவ்வாய் 9-ல் உச்சம்பெற்று 12-ஆமிடத்தையே பார்க்கிறார். சில காரியங்களில் வீண்விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படலாம். சிலருக்கு வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் சிறு விபத்துகளையும் சந்திக்க நேரும். கவனமுடன் இருப்பது அவசியம். 9-ல் கேது. பூர்வீகச் சொத்து சம்பந்தமான பங்கு பாகப்பிரிவினை முயற்சிகளில் சாதகமான முடிவுகள் வராமல் இழுபறிச் சூழலே காணப்படும். தகப்பனாருடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு முயற்சிகள் கைகூடும். சிலர் பெற்றோரைவிட்டு அல்லது மனைவி, குழந்தைகளைவிட்டு வெளியூர், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லலாம். மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 3-க்குடைய சூரியன் சம்பந்தம். புதன் வக்ரம்; 1, 4-க்குடையவர். 8, 9-க்குடைய சனி சாரம் பெறுகிறார். சிலருக்கு ஆரோக்கியத்தில் குறைகள் இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் மந்தநிலை காணப்படும். பூமி, வீடு, வாகன வகையில் செலவினங்கள் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் பிரச்சினைகள் உருவாகும். சனி ராசியையும் பார்க்கிறார்; 4-ஆமிடத்தையும் பார்க்கிறார்.

Advertisment

மேற்கண்ட துர்பலன்கள் 8-க்குடைய ஆதிபத்தியம் பெற்றதால் ஏற்பட்டாலும் அவர் 9-க்குடையவர் என்பதாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு 9-ஆமிடத்தையும் ராசியையும் பார்ப்பதாலும் எல்லாக்குறைகளும் நிவர்த்தியாகும். ராசிக்கு 9, 10-க்குடைய சனி, குரு) பார்வை கிடைப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். 7, 10-க்குடைய குரு 5-ல் இருப்பதால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் விரைவாக நிறைவேறும். தந்தை- மகன் உறவு பலப்படும். விரிசல்கள் விலகும். கருத்து வேறுபாடுகளும் மறையும். மனைவிவழியில் நிலவிய பூசல்களும் பிரச்சினைகளும் நீங்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாய் 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். தொழில், வாழ்க்கை, குடும்பம் எதிலும் இடையூறுக்கு இடமில்லை. அதேசமயம் செவ்வாய் கேதுவோடு சேர்ந்து ஜென்ம ராசியில் ராகு நிற்பதால் செய்யும் வேலையில் விருப்பு வெறுப்போடு செயல்படும் எண்ணம் இருக்கும். தாமரையிலைத் தண்ணீர்போல சிலர் தொழில்துறையிலும், செய்யும் பணியிலும் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பார்கள். எந்த நேரமும் விட்டு வெளியேறத் திட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த மடம் இல்லாவிட்டாலும் சந்தை மடம் என்று சிலர் நினைத்தாலும் அடுத்து நல்லதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு வெளியேற வேண்டும். 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் குறைவின்றி நிறைவேறும். சிலருக்கு புதுமுயற்சி கைகூடும். ஜென்மத்தில் ராகு- சிலருக்கு ஜோதிடத்தில் ஆர்வம், அக்கறை உண்டாகும். சிலருக்குக் குலதெய்வக் கோவில் வழிபாடு, ஆலயத் திருப்பணிக் கமிட்டிக் கௌரவப் பதவிகள் கிடைக்கும். வேறுசிலருக்கு சதுரங்கம்(செஸ்) போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு சூதாட்டத்தில் நாட்டமிருந்தாலும் அதைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருப்பது மிகச்சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும்; விட்டதெல்லாம். மீண்டும் கிடைக்கும். பட்டதெல்லாம் துளிர்க்கும். 3, 10-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் தொடக்கத்தில் கேது சாரத்திலும் பிறகு சுயசாரத்திலும் (பூரம்) சஞ்சரிப்பதே இதற்குக் காரணம். 7-ஆமிடத்தை 6-க்குடைய சனியும், 8-க்குடைய குருவும் பார்ப்பதால், ஆண் ஜாதகமாக இருந்தால் மனைவிக்கும் பெண் ஜாதகமாக இருந்தால் கணவருக்கும், நோய்நொடி, கவலைகள் ஏற்பட இடம் உண்டு. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்யும் சூழ்நிலையும் வரலாம். என்றாலும் 7-க்குடைய சனியும், 5-க்குடைய குருவும், களஸ்திர காரகன் சுக்கிரனும் 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் பயமில்லை. மலைபோல வரும்துன்பம் பனிபோல விலகிவிடும். ஒருசிலருக்கு வாஸ்துக் குற்றமான வீட்டுக்கு மாறியதிலிருந்து மேற்படி தொந்தரவுகள், வைத்தியச்செலவுகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் குடியிருப்பை மாற்றுவது நல்லது. 9-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 5-க்குடைய குருவும் 9-ஆமிடத்தைப் பார்ப்பதும் பாதிப்புகள் விலகி சாதிக்க இடமுண்டு. தெய்வ பலமும், பிரார்த்தனை பலமும் உங்களுக்கு கைகொடுக்கும். நண்பர்கள், உறவினர்கள் சகாயம் உண்டாகும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் பலம் பெறுகிறார். (மிதுனத்தில் புதன் ஆட்சி). அவருடன் விரயாதிபதி சூரியன் சம்பந்தம். 4, 7-க்குடைய குருவும் (பாதகாதிபதி) புதனைப் பார்க்கிறார். தொழில்ரீதியாக அல்லது வேலை வகையில் அல்லது கணவர்- மனைவி வகையில் தேவையற்ற செலவுகளும் விரயங்களும் உண்டாகும். ஒருசிலருக்கு போட்டி, பொறாமை போன்ற சத்ருக்களின் தொல்லைகளும், ஒருசிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகளின் காரணமாக கடன் ஆதிபத்தியமும் உருவாகி மனதை சங்கடப்படுத்தும். ஜென்ம ராசியை சனி பார்ப்பதால் (சனி 5, 6-க்குடையவர்) பிரச்சினைகள் உருவானாலும், அதை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் உபாயங்களைத் தேடிக்கொள்வீர்கள். என்றாலும் 5-ல் உள்ள செவ்வாயும் கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் மனதைப் பொருத்தளவு தைரியம், தன்னம்பிக்கைக்கு இடமில்லாத வகையில் திகில் உணர்வு ஏற்படுத்தும். ஆனாலும் 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் "எண்ணித்துணிக கருமம்' என்ற ரீதியாகத் திட்டமிட்டு செயல்பட்டு தோல்வியைத் தூர விரட்டி வெற்றியை அரவணைக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 4-ல் சனி நரம்புத் தளர்ச்சியைக் கொடுக்கும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

thisweekrasiதுலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அவருக்கு (சுக்கிரன்) 11-ல் இருக்கிறார். அவருடன் புதன் சம்பந்தம். அவர்களுக்கு (சூரியன்- புதன்) 11-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 7-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ஜென்ம குரு 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் அன்பும் ஆதரவும் ஆனந்தம் தரும். அவர்களுக்கு ஆதரவாக 2, 7-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதால், மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். லாபம் பெறலாம். சிலருக்கு மனைவியின் வருமானம் கைகொடுக்கும். அல்லது மனைவி வகை சொத்துகள் கிடைக்கும். லாபம் உண்டாகும். சீட்டு, ரேஸ், லாட்டரி போன்ற வகைகளில் ஏழரைச்சனியில் இழந்த நஷ்டங்களை எல்லாம் இக்காலம் திரும்பப் பெறும் வாய்ப்பு உண்டாகும். கடந்த ஏழரைச் சனியில் மாதச்சீட்டு, ஏலச்சீட்டு, வாரச் சீட்டு என்று நடத்தி கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்தாமல், உங்களை பெரும் கடன்காரர்களாக்கிவிட்டு ஓடி ஒளிந்து இருப்பார்கள். இனிமேல் அவர்கள் இருப்பிடம் கண்டுபிடித்து வசூல் செய்யும் வாய்ப்பு உருவாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம் பெறுகிறார். 6-ஆமிடம் 9-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 2-க்குடையவர் 12-ல் மறைய, 2-ல் சனி நிற்க, 10-க்குடைய சூரியனும் 8-ல் மறைவதால் வரவுக்கு மீறிய செலவுகளால் சிலர் சக்திக்கு மீறிய கடன்களை வாங்கி சங்கடப்படுவார்கள். வேறு சிலர் சொந்தத் தொழில் நடத்தி மந்தநிலையைச் சந்தித்து கடனாளி ஆவார்கள். சிலர் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கடன் உடன் வாங்கி அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த சாதகபலனும் இல்லாத அளவில் வேதனைப்படுவார்கள். 8-க்குடைய புதன் 8-ல் ஆட்சி பெற்று சனியின் சாரம் பெற்று சனியைப் பார்ப்பதாலும், புதன் வக்ரமாக இருப்பதாலும் கௌரவப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சங்கடங்கள் உண்டாகும். செவ்வாய், புதன், சனி மூவரும் வக்ரமாக இருப்பதால் எதிர்பாராத ஏமாற்றங்களையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டும். பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது என்று பழமொழி உண்டு. அதன்படி எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும். குடும்பஸ்தானத்தில் சனி இருப்பதால் வாக்குச் சனி கோப்பைக் குலைக்கும். நிதானம் தேவை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். விசாகம் 1-ல் சுயசாரம் பெறுகிறார். எந்த ஒரு ராசிநாதனும் லக்னநாதனும் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திரம்- திரிகோணம் ஏறினாலும், தன் ஸ்தானத்தையே பார்த்தாலும் அல்லது சுய சாரம் பெற்றாலும் அவர்களை எந்த ஆபத்தும் அணுகாது. கழுவின மீனில் நழுவின மீன் என்று சொல்வதுபோல பாதுகாப்பு உண்டாகும். அரசியல் தலைவர்கள் புல்லட் புரூப் காரில் புல்லட் புரூப் உடையும் அணிந்து செல்வதுபோல கவசமாகும். கர்ணன் பிறக்கும்போதே கவசமணிந்து பிறந்தததனால் அவனை யாராலும் ஜெயிக்க முடியவில்லை. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்புகள் எய்தாலும் கர்ணனின் கவசம் அவனுக்கு பாதுகாப்பாக அமைந்தது. கண்ணபரமாத்மா அந்தக் கவசத்தை தானம் பெற்ற பிறகுதான் அவன் உயிர் பிரிந்தது. அதுபோல ஒவ்வொருவருக்கும் எது கவசம் என்று தெரிந்து அதைப் பயன்படுத்தினால் பிறந்த வாழ்க்கைக்கு ஆதாரமாகிவிடும். ஆயுதக் கவசத்தைவிட தெய்வக் கவசங்கள்- உதாரணமாக விநாயகர் கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவை உங்கள் உயிருக்கும் பாதுகாப்பு. வாழ்க்கை உயர்வுக்கும் பாதுகாப்பு.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி ஆரம்பம். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு. 4, 11-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் உச்சம் பெற்றாலும் சர ராசிக்கு 11-க்குடையவர் பாதகாதிபதி. 2-ஆமிடத்தை சனியும் பார்க்கிறார்; குருவும் பார்க்கிறார். நீங்கள் நல்லதே நினைத்து நல்லதே செய்தாலும் மற்றவர்களுக்குத் தீயதாகவே அமையும். உதவி செய்வதுபோல தெரிந்தாலும் மற்றவர்களுக்கு அது உபத்திரவமாகப்போகும்.

அதற்காக உதவி செய்யாமலும் நமக்கு என்ன என்று ஒதுங்கிப்போகவும் மாட்டீர்கள். குரு சம்பந்தம் இருப்பதால் வலிலியப்போய் உதவிசெய்து வாங்கிக் கட்டிக்கொள்வீர்கள். தொல்லைகளில் இரண்டு உண்டு. ஒன்று அன்புத்தொல்லை; இன்னொன்று வம்புத்தொல்லை. குருவும் சனியும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் இந்த இரண்டுத் தொல்லைக்கும் ஆளாக நேரும். ஒருசிலருடைய அனுபவத்தில் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டுவதுபோல சில சம்பவங்களும் உண்டாகும். தின்கிறவன் திங்க திருப்பத்தூரான் தண்டம் கொடுத்தமாதிரி என்று சொல்லுவார்கள் இதுதான் ஏழரைச்சனியின் விளைவு!

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்க, சனிக்கு வீடு கொடுத்த குருவும் அவருக்கு 11-ல் இருப்பதால், உங்கள் முயற்சிகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் வெற்றியும் உண்டாகும். பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என்று எழுதுவேன். ஆனால் கடந்த பல வாரங்களாக அந்த நிலைமாறி கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிலியாகும்படி கிரக நிலை சாதகமாக அமைகிறது. கெட்டவன் கெட்டவனாகவே இருப்பதில்லை. நல்லவனும் கடைசிவரை நல்லவனாகவே இருப்பதில்லை. கெட்டவனும் நல்லவனாக மாறலாம். நல்லவனும் ஒரு கட்டத்தில் கெட்டவனாக மாறலாம். எல்லாம் காலத்தின் கோலம்தான். 6-ல் ராகு, 12-ல் கேது இருப்பது பாவகிரகங்கள் பாவஸ்தானத்தில் இருப்பதால் பலம் என்பது பலன். மேலும் 2, 11-க்குடைய குருவும் ராசியைப் பார்ப்பது யோகம். குரு பார்க்க கோடி நன்மை என்பது விதி! அதாவது குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும்! இந்த 2-ம் -குருவருளும் திருவருளும் இருந்தால்போதும்; உங்கள் வாழ்க்கையில் வசதிகள் பெருகும், தேவைகள் பூர்த்தியடையும், நினைத்தவை நிறைவேறும், முயற்சிகள் வெற்றியாகும். முக்கியமாக வினைகள் விலகும். சாபதோஷங்கள் மாயமாகும். 7-ல் சுக்கிரன் இருப்பது சிலருக்கு களஸ்திரதோஷம் எனப்படும். அதாவது காரகன் பாவகத்தில் இருந்தால் காரகதோஷம். பிதுர்காரகன் சூரியன் பிதுர்ஸ்தானத்தில் இருந்தால் பிதுர் தோஷம். சகோதரகாரகன் செவ்வாய், சகோதர ஸ்தானத்தில் இருந்தால் சகோதர தோஷம். களஸ்திரகாரகள் சுக்கிரன் களஸ்திரஸ்தானத்தில் இருந்தால் களஸ்திரதோஷம். மாத்ருகாரகன் (தாய்க்காரகன்) 4-ல் தாய் ஸ்தானத்தில் இருந்தால் மாத்ரு தோஷம். மாதுல காரகன் (மாமன்) புதன் மாமன் ஸ்தானத்தில் 5-ல் இருந்தால் மாமன்தோஷம். இதில் விதிவிலக்கு ஆயுள் ஸ்தானத்தில் 8-ல் ஆயுள்காரகன் சனி இருந்தால் ஆயுள் தீர்க்கம்; ஆயுள் தோஷமில்லை. 8-க்குடைய புதன் 5-ல் 7-க்குடைய சூரியனோடு இணைவதால் மனைவி மக்கள் வகையில் மகிழ்ச்சியும் நிறைவும் உருவாகும். சனி குரு பார்வையைப் பெறுகிறார்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவதும் குற்றம்; அவர் வக்ரமாக இருந்ததும் குற்றம். அதனால் கடந்த சில வாரங்கள் உங்களுக்குக் காரணமில்லாத மனக்கவலைகளும், சிலருக்குக் கௌரவப் பிரச்சினைகளும், சிலருக்கு பொருளாதார சிக்கல்களும் கடுமையாக இருந்தன. சிலருக்கு குடும்பக் குழப்பம், நல்லது செய்தும் பொல்லாப்பு, சிலர் பறப்பதற்கு ஆசைப்பட்டு கையில் இருப்பதை கோட்டைவிட்ட நிலை. சமர்த்தன் சந்தைக்குப்போனால் வாங்கவும் மாட்டான்; விற்கவும் மாட்டான் என்ற நிலையாக ஒரு தொழிலிலில் நிலையாக இல்லாமல், பல தொழில்மேல் ஆசைகொண்டு அகலக்கால் வைத்து அவதிப்படும் நிலை. ஒரு சினிமாவில் டி.ஆர். மகாலிலிங்கம் "செந்தமிழ் தேன்மொழியாள்' என்ற பாடல் பாடுவார். அதன் தொகையறாவில் "சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காற்றினிலே நில் என்று சொல்லிலி நிறுத்திவிட்டு வழிபோனாளே நிற்பதா- தொடர்ந்து நடப்பதா' என்று புரியாமல் தவிக்கும் நிலையாக- அதாவது திரிசங்கு சொர்க்கம்போல தொழில்துறையிலும் பொருளாதாரத்திலும் பாதிக்கிணறு தாண்டிய நிலையாக பாதிப்பைச் சந்தித்து பரிதவிக்கும் நிலை. கடந்த வாரம் குரு வக்ர நிவர்த்திக்கு முன்பு மேற்கண்ட சங்கடங்களை எல்லாம் சந்தித்தவர்களுக்கு, குரு வக்ர நிவர்த்திக்குப் பிறகு இனி சில திருப்பங்கள் ஏற்படும். முன்னேற்றமான வழிமுறைகள் புலப்படும். அக்டோபர் 4-ல் (புரட்டாசி- 18) குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் பயணத்தில் வேகத்தடைகள் இல்லாமல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் உண்டாகும். வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கலாம். அதுவரை நீங்கள் பொறுமையாக, நம்பிக்கையை இழக்காமல் காத்திருங்கள். மனிதனுக்குத் தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் அவசியம்.