ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
21-5-2019- தனுசு.
23-5-2019- மகரம்.
25-5-2019- கும்பம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: கிருத்திகை- 3, 4, ரோகிணி- 1.
செவ்வாய்: திருவாதிரை- 1, 2.
புதன்: ரோகிணி-1, 2, 3, 4, மிருகசீரிடம்- 1.
குரு: கேட்டை- 4.
சுக்கிரன்: அஸ்வினி- 4, பரணி- 1, 2.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
புதன் வக்ரம், அஸ்தமனம்.
சனி வக்ரம்.
25-5-2019- புதன் உதயம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ் வாய் 3-ல் ராகுவோடு, ராகு சாரத்தில் இருக் கிறார். அவர்களை சனியும் கேதுவும் பார்க் கிறார்கள். 3-ஆம் இடம் சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம். மனவுறுதி, வைராக்கியம், சாதிக்கும் துடிப்பு எல்லாம் இருந்தாலும், உடன்பிறப்புகள் வகையில் உடன்பாடு இருக் காது. செவ்வாய், ராகுவுக்கு வீடுகொடுத்த புதன் 2-ல் சூரியனோடு சம்பந்தம். பொருளா தாரத்திலும், வரவு- செலவுகளிலும் எந்தக் குறையும் இருக்காது. அதேசமயம் செலவு களும் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். அதாவது செவ்வாய் 3-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த புதன் அதற்கு 12-ல் மறைவு. புதனுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அவருக்கு 12-ல் மறைவு. ஆகவே ஒரு பொய்யை சமாளிக்க ஒன்பது பொய் சொல்வதுபோல, ஒரு செலவைச் சரிக்கட்ட பல செலவுகள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். 9-ல் சனி, கேதுவும், அவர்களுக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 12-லும் மறைவு என்பதோடு, ராசிக்கும் 8-ல் மறைவு என்பதால், பெற்றோர் வகையில் வெளியில் சொல்ல முடியாத வேதனைகளும் சோதனைகளும் நிலவும். 5-க்குடைய சூரியனும், 6-க்குடைய புதனும் 2-ல் சேர்க்கை. அவர்களுக்கு 12-க்குடைய குரு பார்வை. எனவே பிள்ளைகள் வகையிலும், தாயாதி வர்க்கத்திலும், தந்தைவழியிலும் தவிர்க்கமுடியாத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விவகாரங்களும், தனக்குக் கிடைக்கவேண்டிய பங்குபாகம் கிடைக்குமா? கிடைக்காதா என்ற குழப்பமும் உண்டாகும். 5-க்குடைய சூரியனை 9-க்குடைய குரு பார்ப்பதால்- அதாவது ஒரு திரிகோணாதி பதி இன்னொரு திரிகோணாதிபதியைப் பார்ப்பது விசேஷம். உங்கள் முயற்சிகளுக்கும், செயல் நடவடிக்கைகளுக்கும் குருவருளும் திருவருளும் துணைபுரியும். இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு பிரச்சினையையும் சமாளிக்க- நிறைவேற்ற ஒன்று பணபலம் வேண்டும் அல்லது படைபலம் வேண்டும். இரண்டும் இல்லாதோருக்கு தெய்வபலம் வேண்டும் உங்களுக்கு 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால், தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவ தால் தெய்வ கடாட்சம் பரிபூரணம்.
பரிகாரம்: தஞ்சாவூர் அருகில் திட்டை (தென்குடித்திட்டை) என்ற ஊரில் வசிஷ்டேசுவரர் கோவிலிலுள்ள குரு பகவானை வழிபட்டால் குரு கடாட்சம் கிடைக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடக்கிறது. அவருடன் கேது சேர்க்கை- செவ்வாய், ராகு பார்வை. எனவே உடலளவிலும், மன அளவிலும் சோர்வு, டென்ஷன், குழப்பம், பிரச்சினை இருந்தாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். பிரச்சினைகளைத் தீர்க்க குருவருளும் திருவருளும் துணைநிற்கும். ராசிநாதன் சுக்கிரன் பன்னிரண்டில் மறைவு. எனவே எந்த குழப்பத்தையும் பிரச்சினையை யும் தைரியமாகச் சந்தித்து, சமாளிக்கும் ஆற்றல்பெற்ற உங்களுக்கு இப்போது சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாதபடி பலவீனமாகத் தெரியும். 2-ஆம் இடத்துச் செவ்வாயும் ராகுவும் உங்களையும் அறியா மல் கோபத்தில் விஷவாக்காகப் பேசச் செய்யும். பெற்ற பிள்ளையை "பிச்சை எடுப்பாய்' என்று திட்டுமளவு ஆத்திரமும் கோபமும் வெளிப்படும். அதைக் கட்டுப் படுத்துவது அவசியம். ஒரு வார்த்தை வெல்லும்- ஒரு வார்த்தை கொல்லும். அதனால்தான் பெரியவர்கள் கோபத்தை "ஆட்கொல்லி' என்று வர்ணித்தார்கள். வள்ளுவப் பெருமானும் "கனியிருப்ப காய் கவர்ந்தற்று' என்றார். கனியிருக்க காயைச் சாப்பிடுவதற்குச் சமம் என்று அர்த்தம். 2, 5-க்குடைய புதன் அஸ்தமனம், வக்ரம். குருவும் வக்ரம்; சனியும் வக்ரம். இப்படி முக்கியமானவர்கள் வக்ரம் அடைவதால், உங்கள் மனோநிலையில் எல்லாரும் தப்பு செய்யும் குற்றவாளிகளாகத் தெரிவார்கள். உலகினில் எல்லாரும் நல்லவர்களே! சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றியமைக்கிறது. இதைத்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், "பிறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்றும், புலமைப் பித்தன், "பிறக்கும்போது எல்லாக் குழந்தை களும் நல்லவர்களே. அவர்கள் நல்லவராவதும் கெட்டவர் ஆவதும் அன்னையின் வளர்ப் பிலே' என்றும் எழுதினர்.
பரிகாரம்: அட்டமச்சனியின் கெட்ட பலன் விட்டுவிலக அறந்தாங்கி அருகில் எட்டியத்தளி சென்று வழிபடவேண்டும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் வக்ரம் அஸ்த மனம். அத்துடன் 12-ல் மறைவு. ஜென்ம ராசியில் 6-க்குடைய செவ்வாயும் ராகுவும்! 7, 10-க்குடைய குருவும் 6-ல் மறைவு. ஆகவே ஓரமாக ஒதுங்கிப் போனாலும், தெருநாய் முறைத்துப் பார்த்து குரைப்பதுபோல, தேவை யில்லாத வம்புதும்பு, வழக்குகள் தேடிவந்து பிரச்சினையுண்டாக்கும். வெளியாரைவிட வீட்டில் உள்ளவர்களே- மனைவி, மக்கள், குடும்பத்தாரே உங்களைப் புரிந்து நடந்து கொள்ளமாட்டார்கள் என்றால், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதால் என்ன பிரயோஜனம்? "தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும்' என்ற பழமொழிப்படி, சம்பந்தம் சம்பந்த மில்லாமல் சச்சரவும் சந்தேகமும் ஏற்பட லாம். உற்றார்- உறவினர், பெற்றோர்- பிள்ளைகள், உடன்பிறப்புகள் என எல்லா வகையிலும் தொல்லைகளும் துயரங் களும் உருவாகும். அதனால் வேண்டாத வர்கள் யாரும் செய்வினை எதுவும் செய்துவிட்டார்களோ, சூனியம் செய்துவிட்டார்களோ என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டு, கோடாங்கி, குறி, அருளாடி என்றெல்லாம் அலைவீர்கள். அப்படி ஏதுமில்லை. நேரம்தான் சரியில்லை என்று அவர்கள் ஆறுதல் கூறலாம். அப்படிப்பட்ட கற்பனைகளையெல்லாம் களைந்து, தூரதூக்கி எறிந்துவிட்டு தைரியமாக இருங்கள். வேறு நபர் உங்களுக்கு செய்வினை செய்வதில்லை. நீங்கள் செய்த வினையே உங்களை வந்து தாக்கும். ஆகவே "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்றும், "நீரடித்து நீர் விலகாது' என்றும் தெளிவடையுங்கள். அதுமட்டுமல்ல; "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்றும் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சொந்தபந்தம், சுற்றம் என்று இந்த ஜென்மாவில் பிறந்துவிட்டோம். அடுத்த ஜென்மாவில் யார் யாரோ எங்கெங் கேயோ?
பரிகாரம்: காரைக்குடி- திருப்பத்தூர் வழி பட்டமங்கலம் சென்று அட்டமா சித்தி தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் 6-ல் மறைந்துள்ள குருவின் தோஷம் குறையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 5-ல் உள்ள குரு பார்வை கிடைக்கிறது. குரு உங்கள் ராசிக்கு 6-க்குடையவர் என்றாலும், 9-க்கும் உடையவர். எனவே பாக்கியாதிபதி குரு பார்வை உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லதே செய்யும்; நல்லதே நடக்கும். 5-ஆம் இடம் மனம், மக்கள், மகிழ்ச்சி ஸ்தானம். அங்கு புத்திரகாரகன் குரு நிற்பதாலும், தகப்பனார், பூர்வபுண்ணிய ஸ்தானமான 9-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், தந்தை- பிள்ளைக்கிடையில் நிலவிய தொல்லைப் பிரச்சினைகள் இல்லாதொழியும். பிரிந்தவர்கள் இணைந்துவாழ வழிவகை அமையும். சிலர் தொழில் வகைக்காக கடன்பட்டிருந்தால், அந்தக் கடன்களை தந்தை உதவியால் அடைத்துவிடலாம். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் பனிப்போர் உண்டாகும். கௌரவப் போராட்டம் ஏற்படும். வாக்குவாத நேரத்தில் ஆத்திரப்பட்டு "நாசமாகப் போவாய்', "பிச்சை எடுப்பாய்' என்றெல்லாம் சாபம் கொடுத்தமாதிரி பேசிவிட்டாலும், "கோழி மிதிச்சு குஞ்சு சாகாது' என்பது போல, அதெல்லாம் பலிக்காது. என்றாலும் ஒன்றுகூடும்போது இருதரப்பிலும் விபூதி பூசிவிட்டு தண்ணீர் குடிப்பது நல்லது. அதனால் தான் வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்றார். 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவதால், அலைச்சல் திரிச்சலோடு செயல்பட வேண்டும். 9-க்குடையவர் 9-ஆம் இடத்தையே பார்ப்பதால், குருவருளும் திருவருளும் துணைநிற்கும். 11-ல் உள்ள சூரியனும் புதனும் உங்களுடைய முயற்சி களில் முழுவெற்றியை உருவாக்கும். பழைய முயற்சிகளும் வெற்றியடையும். புதிய முயற்சிகளும் கைகூடும். 4-க்குடைய சுக்கிரன் 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தேக ஆரோக்கியத்தில் தெளிவும், பூமி, மனை, வீடு, வாகனம் சம்பந்தமான யோகமும் உண்டாக்கும்.
பரிகாரம்: செவலூர் பூமிநாத சுவாமியையும் ஆரணவல்லியம்மனையும் செவ்வாய்க்கிழமை வழிபட்டால் செவ்வாய் 12-ல் மறைந்த தோஷம் குறைந்துவிடும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் 11-க்குடைய புதனோடு சம்பந்தம்! அவர்களுக்கு 5-க்குடைய குரு பார்வை. திரிகோணாதிபதி குரு 4-ல் கேந்திரமாக இருப்பது சிறப்பு! ஒரு திரிகோணமும் கேந்திரமும் இணைவது ராஜயோகமாகும். ரிஷபத்துக்கு 9, 10-க்குடைய சனி ராஜயோகாதிபதி. 11-ல் செவ்வாயும் ராகுவும் இணைவது சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் பீடை நிவாரணமாகும். அதாவது 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். அதற்கு 6-ஆம் இடம் நிவர்த்தி ஸ்தானம். சிம்ம ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும்! அதனால் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம். தொழில் லாபம், தன லாபம் எல்லாம் உண்டாகும். செய்துவரும் தொழில் சிறப்படையும். புதிய தொழில் முயற்சிகளும் அதியோகமாக அமையும். சிலர் வேறு இடங்களில் கிளைகளைத் தொடங்கலாம். கிளைகள் பலவாகும்- அதுவே பலமாகும். 5-ல் உள்ள சனி, கேது சிலருக்கு புத்திர சோகத்தை அல்லது புத்திர தோஷத்தை ஏற்படுத்தலாம். பிள்ளைகளே பிறக்காம லிருப்பது புத்திர தோஷம். பிள்ளைகள் பிறந்து பிறந்து மடிவது புத்திர சோகம். சிலருடைய அனுபவத்தில் பிள்ளைகள் வகையில் தொல்லைகளை அனுபவித்து துயரமடைந்தால் புத்திரசோகம்! சில தகப்பனார், பிள்ளைகள் பட்ட கடன்களை அவர்களுக்கு பங்கு தந்த சொத்துகளை விற்று அடைக்கும்படியான சூழ்நிலை உண்டாகும். அல்லது தன் கைப்பொருளைப் கொடுத்து கடனை அடைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் (குடவாசல் பாதை) திருச்சேறை சென்று சாரபரமேஸ்வரரை வழிபட்டால் கடன் அடைபடும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 9-ல் விரயாதிபதியான சூரியனோடு சம்பந்தம். அவர்களுக்கு 4, 10-க்குடைய குரு பார்வை. கன்னி ராசிக்கு குரு பாதகாதிபதி. அதனால் குருபார்வை கோடி நன்மை செய்யும் என்றாலும், பாதகமும் செய்யும். அல்லது தாயார் வகையில் அல்லது தொழில் வகையில் அல்லது வேலை செய்யும் இடத் தில் மேற்படி பாதகப் பலனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். சிலருடைய அனுபவத்தில் திருமணமான மகனை (மருமகளைப் பிடிக்காத காரணத்தால்) வெறுக்கும் நிலை ஏற்படலாம். அல்லது முதி யோர் இல்லம் போய்ச்சேர்ந்து மகனுக்கும் மருமகளுக்கும் அவப்பெயர் உண்டாக்கலாம். அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் தப்பு செய்து, அதை உங்கள்மேல் சுமத்தி அவர்கள் தப்பிக்கொள்ள லாம். உண்மைபுரியாத மேலிடத்தார் உங்கள்மீது வருத்தப்படலாம் அல்லது கோபிக்கலாம்; தண்டிக்கலாம். இதைதான் "பாவம் ஓரிடம் பழி வேறிடம்' என்றும் சொல் வார்கள். "திங்கிறவன் திங்க- திருப்பத்தூரான் தெண்டம் கொடுத்த மாதிரி' என்றும் சொல்வார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை' என்ற சினிமாவில், முரட்டு எம்.ஜி.ஆர். ஹோட்டலில் வயிறார நிறைய சாப்பிட்டுவிட்டு, கைகழுவு வதுபோல வெளியேறிவிடுவார். அவர் சாப்பிட்ட இடத்தில், சாதுவான எம்.ஜி.ஆர். வந்தமர்ந்து வெறும் காப்பி மட்டும் குடிப்பார். பழையவர் சாப்பிட்டதுக்கும் சேர்த்து மொத்த பில்லை சாதுவானவரிடம் கொடுத்து வசூல் செய்துவிடுவார்கள். இப்படி யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலையும் ஏற்படலாம். நஷ்டமடைய நேரலாம்.
பரிகாரம்: பாதகாதிபதி தோஷம் விலக சித்தர்களின் ஜீவசமாதி சென்று வழிபட வேண்டும். திருவக்கரை (திண்டிவனம்- புதுச்சேரி பாதை) சென்று குண்டலினி முனிவர் ஜீவசமாதியை வழிபடலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனோ, லக்னநாதனோ, பாவகாதி பதியோ தன்வீட்டைத் தானே பார்த்தால் அது ஒரு சிறப்பு! அதாவது புனிதமான கங்கை நதியில் அசுத்த நீர் கலந்தாலும் கங்கை கெடுவதில்லை. அதன் புனிதமும் கெடுவ தில்லை. அதுபோல உங்களை எந்த தோஷமும் அணுகாது! 2-ல் குரு இருப்பதும், 2-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பதும் உங்களுக்குத் தனியோகமாகும். பொருளாதாரம், வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் வறுமை, தரித்திரமில்லை. வாக்கு நாணயம் முழுமையாகக் காப்பாற்றப்படும். சொல் வாக்கு செல்வாக்குப் பெறும். 7-ல் உள்ள சுக்கிரனும் வாழ்க்கைத்துணையால் பயனும் பலனும் அடையச்செய்வார். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் அருமை, பெருமை, ஆதாயம், நற்பலன் உண்டாகும். "நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?' என்று நிர்ணயிக்கமுடியாத நிலையும் பரஸ்பரம் உண்டாகும். திருமணமாகாத ஆண் களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கூடும். திருமணமானவர்களுக்கு குடும்ப ஒற்றுமை, அன்யோன்யம், வாரிசுயோகம், வாழ்க்கை மேன்மை போன்ற யோகங்கள் எல்லாம் அமையும். 3-ல் சனி இருப்பதும், கேது இருப்பதும் ஒருவகையில் கெடுதல் என்றாலும், துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனி என்பதால், சகோதர சகாயம், நடைமுறை நட்பு, நல்லுதவி போன்ற நன்மைகள் எல்லாம் உண்டாகும். தைரியம், பராக்கிரமம், வீரதீரச்செயல் புரிந்து பேரும்புகழும் பெறலாம்.
பரிகாரம்: செவ்வாய், சனி பார்வை இருப் பதால் காமோகர்ஷண ஹோமமும், சூலிலினி துர்க்கா ஹோமமும் செய்வது மிகச் சிறப்பு.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 8-ல் மறைவு; ராகுவோடு சம்பந்தம். கேது, சனி பார்வை! அதோடு ஏழரைச் சனியில் பாதச்சனி! தேவையற்ற அலைச்சல், டென்ஷன், மந்தநிலை, கைகால்வலிலி போன்ற உபாதைகள் உண்டாகும். நேரத்துக்கு உணவுண்ண முடியாத நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படலாம். அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் நிதானமாக, இழுத்துப் பிடித்து செயல்பட வேண்டிய நிலை. குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் குறைவு என்றாலும், ஜென்ம குரு பலனாக குற்றம்குறை கூறாமல் இருப்பதால் பிரச்சினைகள் வெடிக்காது. கூடியவரை நல்லதானாலும், கெட்ட தானாலும் எந்தவிதமான அபிப்பிராயத் தையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மனதுக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டால், மற்றவர்களின் வருத்தத்தைச் சம்பாதிக் காமல் சமாளிக்கலாம். வாகனம் மற்றும் பூமி, வீடு, மனை சம்பந்தப்பட்ட பழுதுச் செலவுகளை அல்லது புதிய செலவுகளைச் செய்யலாம். பண வரவு பற்றாக்குறையாக இருந்தாலும், தேவைக்கேற்ற கடன்கள் வாங்கி, தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். எண்ணங்கள் ஈடேறும்! உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக செயல்பட்டு ஒத்துழைப்பு தருவார்கள். அதேசமயம் ஆடம்பர செலவு களையும், அனாவசிய செலவுகளையும், குறைத்துக்கொள்ளவேண்டும் ஆற்றில் போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
பரிகாரம்: பொருளாதார தேவையைப் பூர்த்திசெய்ய சொர்ணாகர்ஷண பைரவ வரை வழிபடவேண்டும். வீட்டில் சொர்ணாகர்ஷண பைரவ மந்திர ஜெபம் செய்யலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் அதற்கு 8-ல் மறைவு. அதனால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற விதி நேரடியாக செயல்படாவிட்டாலும், மறைமுகமாக செயல்படும். மேலும் ராசிநாதன் குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் ராசியைப் பார்ப்பதும் ஒரு வகையில் நன்மை. அதாவது அரசு அலுவலகங்களில் ஒருவர் லீவில் போயிருந் தாலும், அந்த வேலையை அவர் சீட்டில் அமர்ந்து வேறொருவர் பார்ப்பதில் லையா? (டெபுடேஷன்). அதுபோல. எனவே ஜென்மச் சனி ஒருபுறம் இந்தாலும், அதை பொங்குசனியாக எடுத்துக் கொள்ளலாம். குரு 12-ல் இருந்தாலும், அதை சுபவிரயச் செலவாக எடுத்துக் கொள்ளலாம். ஏழரைச்சனியின் பலன் கொடுக்கல்- வாங்கலில் முன்யோசனையாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். பழைய பாக்கிகளைக் கொடுத்தாலும் எழுத்துப்பூர்வமாக (ரிக்கார்டு) எழுதி வாங்கிக்கொண்டு செயல் படவேண்டும். இல்லாவிட்டால் கொடுத் ததை, வாங்கியதே இல்லையென்று சொல்லிலி இரு பேமென்டாகிவிடும். 7-ல் செவ்வாய், ராகு. கணவன்- மனைவிக்குள் வாக்குவாதங் களும், தர்க்கங்களும் உருவாகும். முன் கோபத்தையும், சுடுவார்த்தைகளைப் பேசு வதையும் குறைத்துக்கொள்ளவும். கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும்தான் ஆதரவு. ஆகவே வேலிலியே பயிரை மேயவிட்டுவிடக்கூடாது.
பரிகாரம்: குடும்ப ஒற்றுமைக்கும் தாம்பத்திய ஒற்றுமைக்கும் அர்த்த நாரீஸ்வரரை வழிபடவேண்டும். சிவனில் பாதி சக்தி; சக்தியில் பாதி சிவன்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி தன் வீட்டுக்கு 12-ல் மறைவு; கேது சம்பந்தம். அவர்களுக்கு செவ்வாய், ராகு பார்வை. அதனால் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்று இருக்கும். கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. "பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது' என்பார்கள். உண்மையில் அதன் அர்த்தம் வேறு. தொடக்கத்தில் பிள்ளையார் சுழி (உ) போடவேண்டும். முடிவில் சுபம்- எண்ட் என்பதற்கு பதில் "ஜெய்ராம்' அல்லது "ராமஜெயம்' என்று முடிக்க வேண்டும். ராமர் இருக்குமிடத்தில் அனுமார் இருப்பார். இந்த அர்த்தம்- அனர்த்தமாகிவிட்டது! அதேபோல "அதிகப் படித்த மூஞ்சூறு கழனிப்பானையிலே' என்பார்கள். இதன் அர்த்தமும் வேறு. "அதிகம் வடித்த முன்சோறு- கழனிப்பானையிலே' என்பதே சரி. இப்படி பழமொழிகள்- பலமொழிகளாகிவிட்டன. இதேபோல சனியும் கேதுவும், செவ்வாயும் ராகுவும் உங்கள் பேச்சிலும் சொல்லிலும் எழுத் திலும் அனர்த்தம் உண்டாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வாழ்க்கையாகவே விளங்கும். அல்லது வாழ்க்கை வழுக்கையாகிவிடும். வாழ்க்கை வாழ்வதற்கே; வீழ்வதற்கல்ல. இப்படி உங்களை திசை திருப்புவது யார்? சனி, கேது- ராகு, செவ்வாய். அதற்கு இடம் தராமல் நடந்துகொள்ளவும்.
பரிகாரம்: தினசரி வீட்டில் "வேயுறு தோளிபங்கன்' என்னும் கோளறுபதிகம் படிக்கலாம். அல்லது கோவிலில் நவகிரகத்தை வழிபடலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம். அவருடன் கேது. அவர்களுக்கு செவ்வாய், ராகு பார்வை! அதனால் 11-ஆம் இடத்துக்கு சனி, கேது, ராகு, செவ்வாய் சம்பந்தம் என்பது சிறப்பு. இந்த நான்குபேருக்கும் 3, 6, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். ஆகவே நீங்கள் யோகக்காரர், அதிர்ஷ்டசாலிலிகள். பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதா பத்துக்குரியவர்கள் என்பது ஒரு கணக்கு. அதை இப்போது நீங்கள் முறியடித்துவிடலாம். அனுதாப அலையே வெற்றி அலையாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொட்டப் போகிறது. செய்யும் தொழில் முன்னேற்றமடையும். லாபம் பெருகும். ஒருசிலருக்கு தொழில் செய்ய முதலோடு கூட்டாளிகள் தேடிவரு வார்கள். உங்களை "ஒர்க்கிங் பார்ட்னராக' சேர்த்துக்கொள்வார்கள். உங்களுடைய அறிவும் உழைப்பும் உங்களுக்கு மூலதனம். முதலீடு செய்கிறவர்களுக்கு பணம் மூலதனம். கடல் உப்புக்கும், மலை நார்த்தங்காய்க்கும் சம்பந்தம் ஏற்பட்டு, ஊறுகாயாக சுவையளிப் பதுபோல! சிறுசிறு நெருடல்களும் சிக்கல் களும் பிரச்சினைகளும் அவ்வப்போது தலை காட்டினாலும், அவற்றை உள்ளே நுழைய விடாமல் விரட்டியடித்து விடவேணடும். அப்போது வாழ்வும் தொழிலும் வளமாகி விடும்.
பரிகாரம்: வடக்குப் பார்த்த அம்மனுக்கு ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் ராகு- கேது தோஷமும் கெடுதலும் விலகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் வக்ரமாக இருந்து ராசியைப் பார்க்கிறார். 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். மேலும் அவர் 4, 7-க்குடைய புதன் சாரம். உங்கள் ஆரோக்கியம், சுகம், தொழில், வாழ்க்கை, உத்தியோகம் எல்லாம் "வெரிவெரி சூப்பர்.' ஆனால் 4-ல் செவ்வாய், ராகு; 10-ல் சனி, கேது. பேருந்துப் பயணத்தில் ஜன்னலோரத்தில் இருக்கும்போது, குளிர்காலத்தில் வாடைக்காற்று வீசுவதுபோல, சிலசமயம் பிரச்சினைகளும் குழப்பங்களும் வந்து போகும். தலையை, முகத்தை துண்டால் மூடிக்கொள்வதுபோல, பிரச்சினைகளை சமாளிக்கவேண்டும். மனம்போல வாழ்வு என்பார்கள். குருபலம் இருப்பதால் நீங்கள் நல்லவர்கள்- உங்கள் மனமும் நல்ல மனம். அதனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் நல்லவர்கள் என்பதால், எல்லாம் நல்லதா கவே அமையும். "நல்லாரைக் காண்பதும் நன்று; நல்லார் சொல் கேட்பதும் நன்று; நல்லா ரோடு இணங்கி இருப்பதும் நன்று.' தேன் தானும் கெடாது; தன்னோடு சேர்ந்த பொருள் களையும் கெடவிடாது. அதுதான் நல்லவர் களின் சிறப்பு. எதிர்பாராத சமயத்தில், எதிர் பாராதவர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அதனால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். யோகக் காரனுக்கு ஆண்டவன் காவல்காரன்.
பரிகாரம்: திருவாரூர் மடப்புரம் தட்சிணா மூர்த்தி அல்லது திருப்புனல்வாசல் அருகில் தீயத்தூர் சஹஸ்ரலட்சுமீஸ்வரரை வழி படவும்.