ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 2, 3, 4.
செவ்வாய்: மகம்- 4, பூரம்- 1.
புதன்: மகம்- 2, 3, 4, பூரம்- 1.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2.
சனி: உத்திராடம்- 4, 3.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
12-8-2021- கன்னி சுக்கிரன்.
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
9-8-2021- சிம்மம்.
11-8-2021- கன்னி.
13-8-2021- துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணமாக இருக்கி றார். ராசிநாதன் திரிகோணம் பெறுவதும், அவரை மற்றொரு திரிகோணாதிபதி பார்ப்பதும் சிறப்பு; (குரு 9-க்குடையவர் 11-ல் நின்று செவ்வாயைப் பார்க்கிறார்). உங்கள் திட்டங்களும் முயற்சிகளும் நிறைவேறும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவடையும். குரு 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். பூர்வபுண்ணிய பாக்கிய ஸ்தானம் நன்றாக அமையும். பெண்கள் ஜாதகமாக இருந்தால் நல்ல கணவன் அமைவார். ஆண்கள் ஜாதகமாக இருந்தால் நல்ல மனைவி அமைவாள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலவிய சிறுசிறு வைத்தியச் செலவுகளும் விலகும். சகோதரவகையில் சகாயம் ஏற்படும். அல்லது உங்களால் சகோதரர்களுக்கு- சகோதரிகளுக்கு உதவி கிடைக்கும். அவர்களும் உங்களின் உதவியை நினைத்துப் பெருமிதம் அடைவார்கள். தொழிலில் புதுமுயற்சியும் லாபமும் உண்டாகும். குலதெய்வக் குறை ஏதேனும் இருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளும் சூழல்களும் அமையும். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு எதுவென்று தெரியும் அமைப்புகளும் உருவாகும். வாரக் கடைசியில் 2-க்குடைய சுக்கிரன் 6-ல் நீசம் பெறுகிறார். பொருளாதாரத்தில் சிறு தொய்வுகள் ஏற்படலாம். ஆனாலும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உருவாகும். அதற்காக சிறுதொகையைக் கடனாகப் பெற்றாலும், நாணயமும் நன்மதிப்பும் கெடாமல் அடைத்து காப்பாற்றப்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 4-ல் கேந்திர பலம் பெறுகிறார். 12-க்குடைய செவ்வாய் சம்பந்தம். ராசிநாதனுக்கு குரு பார்வை. நெல்லிக்காயின் சுவை உமிழ்நீர் பட்டவுடன் இனிப்பாக மாறுவதுபோல உங்கள் முயற்சிகள் யாவும் தளர்ச்சியின்றி வளர்ச்சியடையும். ரிஷப ராசிக்கு 10-ல் குருவும், 9-ல் சனியும் இருப்பது நற்பலனைத் தரும். சிலருக்கு காலதாமதமான திருமணம் என்றாலும் திருபதியான மணவாழ்க்கை அமையும். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் தாமதத் திருமணத்தை உண்டாக்குவார்கள். 8-க்குடைய குரு 10-ல் நின்று 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில்துறையில் அல்லது வேலையில் சில மாற்றங்கள் உண்டாகும். அவை முன்னேற்றகரமான மாற்றமாகவும் அமையும். சிலர் வீடு, வாகனவகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். அதற்காக கடன் வாங்கும் அவசியங்களும் ஏற்படும். 7-ல் உள்ள கேது திருமணமான தம்பதிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தினா லும் ஒற்றுமையில் பாதிப்புக்கு இடருக்காது. 3-ல் இருக்கும் சூரியனுக்கு சனி பார்வை கிடைக்கிறது. அரசு அல்லது அரசு சார்ந்த துறையின்மூலம் நடைபெறும் காரியங்களில் தாமத நிலைகளை சந்திக்கநேரும். 12-ஆம் தேதி முதல் ராசிநாதன் 5-ல் நீசமடைகிறார். வரவும் செலவும் சரிசமாக நிகழும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வில்லங்க விவகாரம் உண்டாகும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார் என்று நம்பலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 3-ல் இருக்கிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் புதனுக்கு மறைவுதோஷம் பாதிக்காது. மறைந்த புதன் நிறைந் தனம் என்ற அடிப்படையில் செயல்படும். புதனுடன் 12-க்குடைய சுக்கிரனும், 11-க்குடைய செவ்வாயும் சேர்க்கை. புதனுக்கு குரு பார்வை கிடைக்கிறது. ராசிக்கும் குரு பார்வை கிடைப்பதால் உங்கள் காரியங்களில் மந்தநிலை விலகும். மேலும் 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். குருவும் வக்ரம்; குருவுக்கு வீடுகொடுத்த சனியும் வக்ரம். அட்டமத்துச்சனி நடந்தாலும் சனி 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழிலில் பாதிப்புக்கு இடமில்லை. இளைய சகோதரவகையில் சில நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். யாருக்கும் ஜாமின் பொறுப்பேதும் ஏற்கவேண்டாம். 12-க்குடையவர் 3-ல் மறைவது நல்லதுதான். வீண் அலைச்சல் மாறும். ஒருசிலருக்கு இடமாற்றங் கள் தவிர்க்கமுடியாதவையாக அமையும். சிலர் நண்பர்களுடன் கூட்டு முயற்சியில் தொழில் ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கலாம். முதலீட்டுக்கு உண்டான உதவியும் ஒத்தாசையும் அமையும். அட்டமத்துச்சனியில் சந்திரதசை, சந்திர புக்தி நடப்பவர்கள் மட்டும், புதிய தனி முயற்சிகள் அல்லது கூட்டு சேர்க்கை இவற்றில் ஈடுபடாமல் இருக்கவேண்டும். சந்திரதசையோ புக்தியோ சனியுடன் இணைவது அவ்வளவு நல்லதல்ல. வாரக் கடைசியில் சுக்கிரன் 4-ல் நீசமடைவது ஒருவகையில் நல்லதுதான்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் 2-க்குடைய சூரியன் நிற்கிறார். அவருக்கு 7-ஆமிடத்து சனி பார்வை. அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரிய முயற்சிகள் சற்று தள்ளிப் போகலாம்; தடையாகாது. தாமதம் என்பது வேறு; தடை என்பது வேறு. வாரத் தொடக்கத்தில் சந்திரன் ஜென்ம ராசியில் இருக்கிறார். சனி பார்வையால் சில விஷயங்களில் சந்தேகமோ அல்லது குழப்பங்களோ ஏற்படலாம். குடும்பத்திலும் ஒரு நிம்மதியற்ற நிலைபோல தோன்றலாம். என்றாலும் 8-ல் நிற்கும் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குழப்பங்கள் தோன்றினாலும் தீர்வும் கிடைக்கும். 2-ல் 10-க்குடைய செவ்வாய் நிற்பதும், குரு 9-க்குடையவர்- அவரைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம். ஆக, குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும் என்பதில் சந்தேகமில்லை. 11-க்குடைய சுக்கிரனும் 12-க்குடைய புதனும் 2-ல் செவ்வாயுடன் சம்பந்தம். சிலருக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அனுகூலம் உண்டாகலாம். செய்தொழில்வகையில் லாபமும் முன்னேற்ற மும் எதிர்பார்க்கலாம். மனைவியின் வேலைக்கு முயற்சித்தவர்களுக்கும் சாதகமான முடிவுகள் உண்டாகும். 12-ஆம் தேதிமுதல் 3-ல் நீசம்பெறும் சுக்கிரன் சில சோதனைகளைக் கொடுக்கும் என்றாலும், சோதனைகளை சாதனைகளாக மாற்றும் யுக்தியை தர்மகர்மாதிபதி யோகம் தருமென்று நம்பலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருப்பவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவும் அல்லது வரவுக்கும் செலவுக்கும் சரியாகவும் அமையும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ஒருசிலருக்கு பயண அலைச்சலைத் தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசியில் 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை. அது தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுத்துகிறது. எனவே, ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்த தோஷம் பாதிக்காது. மேலும் 5-க்குடைய குரு 7-ல் நின்று. ஜென்ம ராசியைப் பார்க்கிறார். குரு செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கிறார் (அவிட்டம்- 4-ஆம் பாதம்). உங்கள் எண்ணங்களில் முன்னேற்றம் உண்டாகும். தெளிவு பிறக்கும். 4-ல் உள்ள கேது தாய்சுகம் அல்லது தன்சுகத்தை பாதித்தாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 4-ஆமிடத்தையே பார்ப்பதால் நோய் நொடிகள் நிவர்த்தியாகும். 7-ஆமிடத்து குருவை களஸ்திரகாரகன் சுக்கிரன் பார்க்கிறார். திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். அவர்களால் உண்டான பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வும் ஏற்படும். வாகனம் சம்பந்தவகையில் செலவுகள் உருவாகலாம். அல்லது சிலர் வாகனத்தை மாற்றலாம். 6-ஆமிடத்து சனி போட்டி, பொறாமைகளை விலக்குவார். ஆனாலும் தொழில் வழியில் சில போட்டிகளை சந்தித்துதான் ஆகவேண்டும். 11-ஆமிடத்தையும் 11-க்குடைய புதனையும் குரு பார்ப்பதால் அவற்றை சமாளித்து ஜெயிக்கலாம். வெற்றி நமதே என்று கொண்டாடலாம். 12-ஆம் தேதிமுதல் சகோதர ஸ்தானாதிபதி சுக்கிரன் 2-ல் நீசமடைகிறார். சிலருக்கு சகோதர- சகோதரிவகையிலோ அல்லது அவர்களின் உறவினர் வழியிலோ பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கநேரும். பொறுமையும் நிதானமும் அவசியம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 12-ல் மறைகிறார். முந்தைய ராசியில் கூறியதுபோல மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பலாம். புதன் 10-க்குடையவருமாவதாலும், 9-க்குடைய சுக்கிரன் புதனுடன் இணைவதாலும் அது தர்மகர்மாதிபதி யோகத்தை உருவாக்கும். எல்லாம் அனுகூலமாகவும் சுபமாகவும் அமையும். 4-க்குடைய குரு 6-ல் மறைகிறார். தேகநலனில் அவ்வப்போது சில தொந்தரவுகளை சந்திக்க நேரும். ஜெனன ஜாதகத் தில் ராகு, செவ்வாய் சம்பந்தப் பட்டிருந்தால் அவர்கள் அறுவை சிகிச்சை போன்றவற்றை சந்திக்கநேரும். 3-ஆமிடத்துக் கேது சகோதர- சகோதரி ஒற்றுமையில் சிறுசிறு சங்கடம், பிரிவை உண்டாக்கி னாலும், 3-க்குடைய செவ்வாய் 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் அவை நீறு பூத்த நெருப்பாகிவிடும். நீரடித்து நீர் விலகாது என்ற கருத்தின் அடிப்படையில் விட்டுக்கொடுத்துச் சென்றால் உறவுப் பாலம் உடையாது. 12-ஆம் தேதி முதல் 2-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் நீசமடைகிறார். பெண்களுக்கு கணவரால் பிரச்சினைகளையும் நிம்மதிக் குறைவையும் சந்திக்கநேரும். பொருளாதாரச் சிக்கல் உண்டாகலாம். கணவர்வழியில் பணப் பிரச் சினைக்கும் இடமுண்டு. எனினும் 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ஒற்றுமையில் பிரிவு, பிளவு ஏற்படாது. உங்கள் பொறுமையாலும் பெருந்தன்மையாலும் வைராக்கியத்தாலும் குடும்பம் நடக்கும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் இருக்கிறார். அவருக்கு 3-க்குடைய குரு (5-ல் நின்று) பார்வை கிடைக்கிறது. ஜென்ம ராசியையும் குரு பார்க்கிறார். வேலை, உத்தியோகம் இவற்றில் நற்பலன்கள் உண்டாகும். ஒருசிலர் வேலையில் இடமாற்றம் அல்லது ஊர்மாற்றத்தை சந்திக்கலாம். 10-ல் உள்ள சூரியனை சனி பார்க்கிறார். அரசு சம்பந்தப்பட்ட துறையினருக்கு விருப்பத்துடன்கூடிய இடமாற்றம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தற்காலிக வேலையிழப்பையும் சந்திக்கநேரும். என்றா லும் ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு அடுத்த வேலைவாய்ப்யையும் தருவார். அது பிடித்தோ அல்லது பிடிக்காமலிருந்தாலோ செய்தாக வேண்டிய சூழ்நிலை அமையும். 2-ல் உள்ள கேது பொருளாதாரப் பற்றாக்குறை, குடும்பத்தில் அமைதிக் குறைவை உண்டாக்கினாலும், 2-க்குடைய செவ்வாய் அந்த இடத்தைப் பார்ப்ப தால் ஓரளவு சமாளிக்கக் கூடிய ஆற்றலும் வழி வகைகளும் உண்டாகும். 12-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 12-ல் மறைவதோடு நீசமும் பெறுகிறார். அக்கால கட்டம் எதிலும் பொறுமை யும் நிதானமும் தேவைப்படும். அவசரத்தனமில்லாமல் முடிவெடுப்பது அவசியமான ஒன்றாகும். சகோதர- சகோதரிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். ஒரு சில கணவர்களுக்கு மனைவியால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். ஒரு சிலர் மனைவியின் வேலைக்கு முயற்சித்திருந்தால் அந்த வேலை கிடைக்கும் அமைப்பும் ஏற்படும். 5-ஆமிடத்து குரு பிள்ளைகளுக்கு நல்வாழ்வை உண்டாக்குவார்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசியில் ஜென்ம கேதுவும், சப்தம ராகுவும் இருப்பது ஒருவகையில் நல்லதல்லதான். என்றாலும் ராசிநாதன் செவ்வாய் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனுக்கு குரு பார்வை கிடைக்கிறது. எனவே, தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் செயல்வடிவம் பெறும். அலுவலகத்தில் இருந்த அவப் பெயர்கள் மாறி நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். சுயதொழில் புரிகிறவர்களுக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். அது முன்பிருந்த இடத்தைவிட நல்ல இடமாகவே அமையும். 5-க்குடைய குரு 4-ல் கேந்திரபலம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். குடும்பம், தனம் இவற்றில் நற்பலன்கள் நடக்கும். 5-ஆமிடமாகிய பிள்ளைகள், திட்டம், மகிழ்ச்சி வகையிலும் நன்மைகள் உண்டாகும். 10-க்குடைய சூரியன் 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அது மிகச் சிறப்பான அமைப்புகளைத் தருமென்று எதிர்பார்க்கலாம். சப்தம ராகு திருமணத்தடை, தாமதங்களை உருவாக்கினா லும், 7-க்குடைய சுக்கிரனை குரு பார்ப்பதால் தடை, தாமத தோஷங்கள் விலகும். 3-ல் சனி ஆட்சி. 3-ஆமிடம் தைரிய, வீர்ய, பராக்கிரம, சகோதர ஸ்தானம். சிலருக்கு சகோதரவழியில் உதவியும் ஒத்தாசையும் கிடைக்கும். 12-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 11-ல் நீசம் பெறுகிறார். சுக்கிரன்- களஸ்திர ஸ்தானாதிபதி. அவர் நீசம்பெறுவதால் ஆண்களாக இருந்தால் மனைவிக்கும், பெண்களாக இருந்தால் கணவருக்கும் சில தொந்தரவுகள் உண்டாகும். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த புதன் 10-ல் குருவின் பார்வையைப் பெறுவதால் முடிவில் நன்மையாகவே நிறைவுறும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு அவிட்ட நட்சத்திரம் செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாயும் குருவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். குரு 1, 4-க்குடையவர். செவ்வாய் 5, 12-க்குடையவர். உங்கள் சுயமுயற்சிகளில் ஆதாயமும் அனுகூலமும் ஏற்படும். தேகநலனில் தெளிவு உண்டாகும். சூரியன் 8-ல் மறைவதாலும் சனி அவரைப் பார்ப்பதால் ஒரு சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். சிலருக்கு கண் ஆபரேஷன் ஏற்படவும் இடமுண்டு. 5-க்குடைய செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுவது மிகச் சிறப்பு. உங்களது நீண்டகால கற்பனைக் கனவுகள் நிறைவேறும். திட்டங்கள் பூர்த்தியாகும். எண்ணங்கள் ஈடேறும். குலதெய்வ வழிபாட்டில் குறை குற்றங்கள் ஏதேனும் இருந்தால் அவை விலகி வழிபாடுகள் பூர்த்தியாகும். பிரார்த்தனைகளையும் நிறைவேற்றலாம். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண முயற்சிகளை நிறைவேற்றி வைப்பார். ஜனன ஜாதகத்தில் ராகு- கேது தோஷமிருந்தால் அவர்கள் தாமதத் திருமணத்தை சந்திக்கநேரும். என்றாலும் நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகமில்லை. 10-ல் சுக்கிரன் 12-ஆம் தேதிமுதல் நீசமடைவார். மனைவிவழி உறவினர்களால் சில செலவுகள் உண்டாகும். அவை சுபச் செலவுகளாகவும் அமையும். வீண் விரயங்களாகவும். அமையும். மொத்தத்தில் செலவினங்களைத் தடுக்கமுடியாது. 4-ஆமிடத்தைப் பார்க்கும் செவ்வாய் பூமி, வீடு, கட்டடம் சம்பந்தமாக நற்பலனைத் தருவார்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி. 2023 வரை ஜென்மச்சனி நடக்கிறது. 12-க்குடைய குரு 2-ல் நிற்கிறார். விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுபவிரயமாக அமையும். மகர ராசிக்கு 4-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பம், தனம், வாக்கு இவற்றில் நல்ல பலன்களே நடக்கும். ஜனன ஜாதகத்தில் 4-ஆமிடம் பலம் பெற்றிருந்தால் சிலர் வீடு, வாகன வசதிகளைப் பெருக்கிக்கொள்ளலாம். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். கட்டடம், வீடு போன்றவழியில் முன்னேற்றகரமான நிகழ்வுகள் நடைபெறும். ஒருசிலருக்கு உத்தியோகரீதியாக அலைச்சல், மாற்றம் ஏற்பட்டாலும் அது ஆதாயகரமானதாகவும் அமையும். தனவரவுக்கும் குறைவிருக்காது. 5-ஆமிடத்து ராகு உங்கள் திட்டங்களில் சிலநேரம் குறுக்கீடு, தடைகளை ஏற்படுத்தலாம். 5-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதும் அதற்கொரு காரணம். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வாகனக் கடன், வீட்டுக்கடன் போன்றவற்றை உருவாக்குவார். அது சுபக்கடன் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. இன்றைய சூழலில் வீடு அத்தியாவசியம் என்பதுபோல வாகனமும் அத்தியாவசியத் தேவையாகிவிட்டதே! 9-ல் சுக்கிரன் (12-ஆம் தேதிமுதல்) நீசம்பெறுகிறார். அவர் 10-க்குடைய வருமாவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. வாழ்க்கை, தொழில் இரண்டிலும் நல்லவை நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. பூர்வீக சொத்து சம்பந்தமாக நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த நிலைமாறி, சொத்து விற்பனைமூலம் தனவரவும் உண்டாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி கும்ப ராசிக்கு 12-ல் மறைவு. என்றாலும் ஆட்சி. ராசிநாதனே இங்கு விரயாதிபதியாகவும் அமைகிறார். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை செய்து முடிக்கவேண்டிய நிலைகளையே கும்ப ராசிக்காரர்கள் சந்திக்கநேரும். உதாரணமாக, ஓரிடத்தில் பார்த்துவந்த வேலை சரிவர முடியாமல் மீண்டும் அந்த வேலையைப் பார்த்து நிறைவேற்றவேண்டும். அதனால் நேரமும் விரயமுமாகும். பொருளாதார விரயமும் இரட்டிப்பாகும். 2-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5-க்குடைய புதன் 7-ல் கேந்திரபலம் பெறுகிறார். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். திருமணத்தடை விலகும். 4-ல் உள்ள ராகு தேகநலனில் வைத்தியச் செலவுகளை ஏற்படுத்தினாலும், 4-க்குடைய சுக்கிரன் 7-ல் நின்று குருவின் பார்வையைப் பெறுவதால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்றப்படும். சகோதர- சகோதரிகளுக்கு தடைப்பட்டுவந்த நல்ல காரியங்கள் நடைபெறும். நண்பர்களால் சகாயம் உண்டாகும். தொழில்துறையில் கூட்டாளிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. சிலருக்கு தகப்பனாரால் அல்லது தகப்பனாருக்கு கெடுபலன் நடக்கலாம். வேலையிழப்பு அல்லது வேலையில் மாற்றம் அதனால் அலைச்சல் என்பது மாதிரியான பலன்களை தகப்பனார்வகையில் சந்திக்க நேரும். பூர்வீக சொத்துகளில் விவகாரங்கள் விலகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குருவுக்கு வீடுகொடுத்த சனி 11-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். குரு 12-ல் மறைவு. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வரவு வராமல் தாமதமாகும் நிலைகளைச் சந்திக்கலாம். தொழில்துறையில் முக்கிய நிகழ்வுகள் எடுக்கமுடியாமல் திணறவேண்டியதிருக்கும். என்றாலும் குரு 10-க்குடையவர்; செவ்வாய் 9-க்குடையவர். இருவரும் பரஸ்பர பார்வை யால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எத்தனை இடையூறு, தடைகள், இன்னல் கள் உண்டானாலும் அவற்றையெல்லாம் சமாளித்து வெற்றிபெற தர்மகர்மாதிபதி யோகம் வழிவகை செய்யுமென்று நம்பலாம். விடாமுயற்சி இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர் தான்! அவரது கடும் தவமுயற்சியால் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதுபோல் முயற்சி திருவினையாக்கும். இறைவன் சோம்பேறிக்கும் நம்பிக்கைத் துரோகிக்கும் துணைபுரியமாட்டார். நம்பிக்கையான நல்ல நண்பர்களின் ஆலோசனையும் உங்களை வழிநடத்தும். 7-ல் சுக்கிரன் நீசம்பெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். சிலருக்கு மனைவியால் அல்லது மனைவிவழியில் ஆதாயம் உண்டாகும். நீசம்பெற்ற கிரகம் நன்மை செய்யுமா என்ற சந்தேகம் வரலாம். மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சமடைவார். நீச ஸ்தானத்தில் நின்றாலும் தன் உச்ச வீட்டைப் பார்ப்பதால் கெடுதல் செய்யமாட்டார் என்று நம்பலாம்.