ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: பூரம்- 2, 3, 4.
செவ்வாய்: அஸ்வினி- 3.
புதன்: அஸ்தம்- 1, 2, 3, 4.
குரு: பூராடம்- 4.
சுக்கிரன்: பூசம்- 1, 2, 3.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 2.
கேது: கேட்டை- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
9-9-2020- குரு வக்ர நிவர்த்தி.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
8-9-2020- ரிஷபம்.
10-9-2020- மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். ஐப்பசி 10-ஆம் தேதி வக்ர கதியில் மீன ராசிக்கு மாறுவார். அதுவரை ராசிநாதன் உங்களு டைய எண்ணங்களையும் திட்டங்களையும் குறுக் கீடில்லாமல் நிறைவேற்றி நிம்மதி தருவார். 5-க்குரிய சூரியனும் ஆட்சியிலிருப்பது உங்களுக்கு அனுகூலமான நிலையாகும். மேலும், 9-க்குரிய குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியையும் ராசிநாதனையும் பார்க்கிறார்; 3-ஆமிடத்தையும், அங்குள்ள சூரியனையும் பார்க்கிறார். உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி என்னும் சொல்லுக்கு இடமில்லாமல் வளர்ச்சி உண்டாகும். தடைகளை உடைத்து ஹைவேஸ் பைபாஸில் பயணிப்பதுபோல வேகமாகப் பயணிக்கலாம்; காரியங்களை சாதிக்கலாம். 9-ல் குரு, சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். அதனால் குருவருளும் திருவருளும் பெருகும். திட்டமிட்ட காரியங்கள் தட்டுத்தடுமாற்றம் இல்லாமல் நிறைவேறும். மனைவி, மக்கள், குடும்பத்தார் உங்களுக்கு மதிப்பு, மரியாதையும் கௌர வமும் கொடுத்து உங்களுக்கு ஆதரவாகத் துணைநிற்பார்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சீர்திருத்தங்கள் உண்டாகும். கணிசமான லாபமும் சேமிப்பும் பெருகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைவு பெற்றாலும், அது சந்திரனுடைய வீடு என்பதால், அவரை மறைவு தோஷம் பாதிக்காது. சுக்கிரனுக்கு வீடுகொடுத்த சந்திரன் ரிஷப ராசியில்தான் உச்சமடைவார். தற்காலிக மித்ரு எனும் அடிப்படையில் சுக்கிரனுக்கு பலம் கிடைக்கிறது. உங்கள் செல்வாக்கு, புகழ், திறமை, கீர்த்தி எல்லாம் இதுவரை குடத்துக்குள்ளிருந்த தீபம் குன்றின்மேல் ஏற்றிய தீபம்போல பிரகாசிக்கும். பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் போற்றிப் புகழ்வார்கள். "தேவர்மகன்' திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் "போற்றிப் பாடடிப் பெண்ணே' என்று பாடியதுபோல, பேரன்- பேத்திகளைப் பாடச்சொல்லி பேரானந்தம் பெறலாம். ஜென்ம ராகு குடும்பத்திலும் வெளியிலும் உறவினர்கள்வகையிலும் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கினாலும், 4-ல் சூரியனும் 5-ல் புதனும் ஆட்சிபெறுவதால், மலையே விழுந்தாலும் நிலைகுலையாத மனம் படைத்த உங்கள் துணிவு எதிரிகளைப் பணியவைக்கும் வெற்றிப்பாதையில் பயணித்து நிற்கும். குருவோடு சேர்ந்த சனி அட்டமச்சனியின் கெட்ட பலன்களைப் போக்கி வெற்றிப் பலன்களை உருவாக்குவார். நெல்லிக்கனி முதலில் துவர்த்தாலும் பிறகு இனிப்பதுபோல, தொடக்கத்தில் தேக்கமான காரியங்கள் முடிவில் ஆக்கப்பூர்வமாக நிறைவேறும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சிபெறுகிறார்; 2-க்குரிய சந்திரன் சாரம்பெறுகிறார். (அஸ்தம்). புராணத்தில் சந்திரன் மகன் புதன் என சொல்லப்படும். விஞ்ஞானரீதியாக சந்திர மண்டலத்தில் இருந்துதான் புதன் மண்டலம் உருவானதாகச் சொல்லப்படும். மேலும், சந்திரன் புதனுக்கு தாய்- சேய் உறவாகப் போற்றப் படும். எனவே, இவர்களின் தசாபுக்திகளோ கிரக சம்பந்த சேர்க்கையோ நல்லதாகவே அமையும் என்பது ஒரு நம்பிக்கை. மிதுனமும் கன்னியும் புதனுடைய ராசிகள். சந்திரன் ராசியான கடகம் மிதுனத்துக்கு 2-ஆமிடம்; கன்னிக்கு 11-ஆமிடம். ஆகவே, அவர்களுக்குள் எப்பொழுதும் பகைத் தன்மை வராது. அதேபோல, தசாபுக்திகளில் சந்திர தசையில் புதன் புக்தியோ, புதன் தசையில் சந்திர புக்தியோ கெட்ட ஆதிபத்தியமாக இருந்தாலும் பாதிக்காது. இது அனுபவரீதியான உண்மை. தப்பித் தவறி தசாபுக்திகள் தீங்காக நடந்தாலும் அதை தண்டனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆசிரியர், மாணவனை திருத்துவதற்காக எடுத்துக்கொள்ளும் கண்டிப்பு என எடுத்துக்கொள்ள வேண்டும். 9-க்குரிய சனியும் 10-க்குரிய குருவும் ராசிக்கு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களை வழிநடத்தும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, சனி மறைவு ஒருவகையில் தடை, தாமதங்களைக் கொடுத்தாலும், 11-ஆமிடத்தில் ஆட்சிபெற்ற செவ்வாய் தோல்விக்கு இடமில்லாமல் தொட்டதையெல்லாம் துலங்கச் செய்வார்; வெற்றிபெறச் செய்வார். செவ்வாயின் பார்வை கடக ராசிக்கும் 4-ஆமிடத்துக்கும் 5-ஆமிடத்துக்கும் கிடைக்கிறது. அத்துடன், ராசிக்கு 6-ல் மறையும் குரு செவ்வாயைப் பார்ப்பதால் எண்ணங்கள் ஈடேறும். விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். வேண்டியதை எல்லாம் பெறலாம். இறைவனைப் புகழும்பொழுது "வேண்டுவோர்க்கு வேண்டுவது ஈவான்' என போற்றப் படுவதுண்டு. அதுபோல, உங்கள் நியாயமான கோரிக்கைகளும் குறிக்கோளும் வெற்றிகரமாகவும் விருப்பமாகவும் நிறைவேறும். அதுதான் 9-க்குரிய குரு 10-க்குரிய செவ்வாயைப் பார்ப்பதன் பலன். மேலும், 2-ல் சூரியன் ஆட்சிபெறுகிறார். 3-ல் புதன் ஆட்சி பெறுகிறார். 6-ல் குரு ஆட்சிபெறுகிறார். 10-ல் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். இந்த நான்கு கிரகங்களின் ஆட்சி பலத்தால், சட்டசபையில் அல்லது பாராளுமன்றத்தில் மைனாரிட்டியான எதிர்க்கட்சிகள் மத்தியில் மெஜாரிட்டியான ஆளுங்கட்சி ஆட்சி நடத்துவதற்குச் சமம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசியில் ஆட்சிபெற, அவரை 5-க்குரிய குரு 5-ல் ஆட்சி பெற்றுப் பார்க்கிறார். பொதுவாக, குரு பார்க்க கோடி நன்மையென்பது உண்மையானாலும், திரிகோணத்தில் ஆட்சிபெற்ற குருவுக்கு தனிச் சிறப்பும் முக்கியத்துவமும் உண்டு. 2, 11-க்குரிய புதன் 2-ல் ஆட்சிபெறுவதும், 9-க்குரிய செவ்வாய் 9-ல் ஆட்சிபெறுவதும் உங்களுக்குப் பக்கபலமாகும். ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்களுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு தருவ தற்குச் சமமாகும். 9-க்குரிய செவ்வாய் 10-க்குரிய சுக்கிரனைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஜாதகத்தில் எவ்வளவு யோகங்கள் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகத்துக்கு முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் உண்டாகும். ஏனென்றால், 9-ஆமிடம் திரிகோணம், தர்ம ஸ்தானம். 10-ஆமிடம் கேந்திர ஸ்தானம், கர்ம ஸ்தானம். திரிகோணமும் கேந்திரமும் இணைவது ராஜயோகமாகும். திரிகோணம் என்பது தெய்வ சக்தி. கேந்திரம் என்பது மனித சக்தி. இரண்டு சக்திகளும் இணையும்பொழுது அதைத் தடுக்கும் சக்தி எதற்கும் இருக்காதல்லவா? அதைத்தான் பெரியோர்கள் இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது. இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கேந்திரமும் திரிகோணமும் வலுவடையும் ஜாதகத்திற்கு இந்த இரண்டு சக்திகளும் இரண்டு கைகளாக விளங்கிப் பாதுகாக்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார்; 11-க்குரிய சந்திரன் சாரம் பெறுகிறார். 9-ல் ராகு பலம் பெறுகிறார். சிம்ம ராசியில் சொன்னபடி, மனித சக்தியும் தெய்வ சக்தியும் உங்களை வழிநடத்துவதால் குறையொன்றுமில்லை. 12-ல் ஆட்சிபெற்ற சூரியன் தவிர்க்க முடியாத செலவுகளை ஏற்படுத்தினாலும் 11-ல் உள்ள சுக்கிரன் அவற்றை சமாளிக்கும் அளவு லாபத்தையும் தனவரவையும் தருவார் என நம்பலாம். 9-ல் உள்ள ராகு குலதெய்வத்தின் அருளுக்கு உங்களை ஆளாக்குவார். சிலரை ஜோதிடம், வைத்தியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி புகழ்பெறச் செய்வார். அதேசமயம், சிலருக்கு மாந்த்ரீகத்தின்மீது ஆசையும் ஆர்வமும் ஏற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. கர்ண யட்சிணி என்றொரு தேவதை உண்டு. அந்த தேவதையை உபாசனை செய்து சித்தி பெற்றால், காதில் வந்து எல்லா ரகசியங் களையும் சொல்லும். அந்த மந்திர உபதேசத்தை எனக்கு உபதேசிக்கும்படி என் குருநாதரிடம் கேட்டேன். அதற்கு அவர், "அவையெல்லாம் துர்சக்திகள். அதற்கு முறையாகத் தீனிபோடாவிட்டால் நம்மையே அழித்துவிடும்' என்று மறுத்துவிட்டார். நல்ல சக்திகள் நம்மைவிட்டு ஒதுங்கினாலும் நமக்குத் தீங்கு விளைவிக்காது. கெட்ட சக்திகளை ஒதுக்கிவிட்டால் வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோல தாக்கிவிடும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் திக்பலம் பெறுகிறார். அவரை 7-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் பார்க்கிறார். 11-ல் சூரியன் ஆட்சி. 12-ல் புதன் ஆட்சி. 3-ல் குருவும் ஆட்சி. ஆட்சிபெற்ற கிரகங்களெல்லாம் உங்களுக்குப் பக்கபலமாக நின்று பாதுகாக்கும். 3-ல் மறையும் குருவும் சனியும், 12-ல் மறையும் புதன் இவர்கள் மூவரும் 11-ல் இருக்கும் சூரியனால் பலமிழக்கிறார்கள். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல, குரு, சனி, புதன் மறைவால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம், 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பது- தவளைத் தன் வாயால் கெட்டது என்பதுபோல, சிலசமயம் ஏடாகூடமான தசாபுக்திகளின் விளைவாக சங்கடங்களை நீங்களே தேடிக்கொண்டு வருத்தப்படலாம். வேலியோரத்தில் ஓடும் ஓணானை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு குத்துகிறது, குடைகிறது எனப் புலம்புவதுபோல, வேண்டாத பிரச்சினைகளை விரும்பி ஏற்றுக்கொண்டு வேதனைப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எண்ணித் துணிக கருமம் என்று வள்ளுவர் சொன்னதுபோல், எந்தவொரு செயலையும் முழுமையாக ஆய்வுசெய்து முடிவெடுக்கவேண்டும். தேக ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் குறையேதுமில்லை. குறையும் வராது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசியில் கேது நிற்க, 7-ல் ராகு இருப்பது உங்களுக்குப் பிரச்சினைகள்தான். கழுதை முன்னால்போனால் கடிக்கிறது, பின்னால்போனால் உதைக்கிறது என்கிறமாதிரி, பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பீர்கள். இதற்குக் காரணம் ஏழரைச்சனிதான். நம்ப வேண்டியவர்களை நம்பாததும், நம்பக்கூடாதவர்களை நம்பு வதாலும் ஏற்படும் பாதிப்புகள் உங்களை பாதிக்கும். 7-ல் செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதாலும், 2-ல் குருவும் சனியும் கூடியிருப்பதாலும் பொய்யான வாக்குறுதி களைத் தரும் போலியானவர்களை நம்பி நம்பி பொழுதை வீணாக்குவீர்கள். சிலர் கற்பனைக் கனவுகளில் மிதப்பார்கள். இவையெல்லாம் கேது, ராகு, சனி ஆகியோரின் வேடிக்கை விநோதங்கள். பார்த்தால் தெரியும் சிலருக்கு. பட்டாலும் புரியாது பலருக்கு. குருவும் சனியும் 2-ல் கூடுவதை "சண்டாள யோகம்' என்பார்கள். ஆனால், ஆட்சிபெற்ற குரு என்பதால், சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து சிறந்த வழியைப் பின்பற்றவேண்டும். 6-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதாலும், குரு அவரைப் பார்ப்பதாலும் உங்கள் திறமையும் சாமர்த்தியமும் விழலுக்கு இறைத்த நீர்போல வீணாகும். அதைப் புரிந்து நடந்து கொண்டால் எதிர்காலத்தில் சிறந்துவிளங் கலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசியில் குருவும் சனியும் சேர்க்கை. குரு, சனி சேர்ந்தால் சண்டாள யோகம் என்பார்கள். அந்த விதி உங்களுக்குப் பொருந்தாது. குரு ஆட்சிபெற்றவர். ராசிநாதன் 5-ல் செவ்வாய் ஆட்சி. 9-ல் சூரியன் ஆட்சி. 10-ல் புதன் ஆட்சி. எனவே, அஸ்திவாரம் மிகமிகப் பலமாக இருப்பதால், இடி, மின்னல், புயல் கடுமையாக இருந்தாலும் கட்டடம் கீழே விழாமல் கம்பீரமாக நிற்கும். அண்மையில் வட இந்தியாவில் ஒரு அடுக் குமாடிக் கட்டடம் சிதைந்துவிழுந்து பல உயிர்களைப் பலிகொண்டது. அஸ்திவாரம் பலமாக இருந்தால் அப்படி நடந்திருக்காது. ஒரு வியாபாரி வெயில் நேரத்தில் ஆலமர நிழலில் படுத்திருந்தார். அந்த மரத்தின் நிழல் மிகச்சிறியதாக இருந்தது. அவர், இவ்வளவு பெரிய மரத்திற்கு இவ்வளவு சிறிய விதையைப் படைத்த இறைவன் முட்டாள் என நினைத்தார். அப்பொழுது பலத்த காற்று வீசி அவர்மேல் ஆலவிதை விழுந்தது. இந்த விதை பெரியதாக இருந்திருந்தால் நமக்குக் காயம் ஏற்படுத்தியிருக்கும். கடவுள் அறிவாளி, கருணையாளன் என்பதை உணர்ந் தார். அதைத்தான் பகவத் கீதையில் கண்ணபிரான் சொன்ன உண்மை. "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க விருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' இறைவன் கணக்கு தவறாகாது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அதனால் ஏழரைச்சனியில் உங்களுக்கு விரயச்சனி நடக்கிறது. 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. அப்பொழுது விரயச்சனி விலகி ஜென்மச்சனி ஆரம்பம். சனி சொந்த வீட்டிற்கு வருவதால் ஏழரைச்சனி எத்தனையாவது சுற்றாக இருந் தாலும், பொங்கு சனியாகப் பொலிவு தரும். முதல் சுற்று மங்கு சனி. இரண்டாவது சுற்று பொங்கு சனி. மூன்றாவது சுற்று மரணச்சனி என்பார்கள். மகர ராசி, கும்ப ராசி, ரிஷப ராசி, துலா ராசி ஆகிய இந்த நான்கு ராசிக் காரர்களுக்கும் சனி பொங்கு சனியாகவே செயல்படுவார். அவரவர் ஜாதகப்படி, சந்திர தசை, சந்திர புக்தி நடந்தால் மட்டுமே கெடுபலன்கள் நடக்கும். மற்றவர்களுக்கு பாதிப்பில்லை. பயப்படவேண்டாம். தசா புக்தி அடிப்படையில் சந்திர தசை, சந்திர புக்தி நடந்தால் மட்டும் பாதிப்புகள் உருவாகலாம். அப்படிப்பட்டவர்கள் சனி பகவானின் குருநாதரான காலபைரவருக்கு மிளகுப் பொட்டலத்தை நெய்யில் தீபமேற்றவேண்டும். அவரவர் வயது எண்ணிக்கையுடன் ஒன்றுசேர்த்து மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் தீபமேற்றவேண்டும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேய ரையும் வழிபடலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 11-ல் குரு ஆட்சி. 3-ல் செவ்வாய் ஆட்சி. 7-ல் சூரியன் ஆட்சி. 8-ல் புதன் ஆட்சி. அதனால் கழுவின மீனில் நழுவின மீனைப்போல கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். தசாபுக்திகள் பாதகமாக இருந்தாலும் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வதுபோல் பாதுகாப்பு உண்டாகும். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் இருப்பது ஒருவகையில் சிற்சில குறுக்கீடுகளையும் தடைகளையும் உருவாக்கினாலும், 7-ல் உள்ள ஆட்சிபெற்ற சூரியனை 11-ல் ஆட்சிபெற்ற குரு பார்ப்பதாலும், ராசிநாதன் சனியும் 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்ப்பதாலும் எல்லாத் தடைகளையும் கடந்து வாழ்க்கைப் பயணத்தை செயல்படுத்தலாம். 7-ல் உள்ள சூரியன் அதற்குப் பக்கபலமாக வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். திருமணமாகாத வர்களுக்குப் பெற்றோர் அல்லது உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு நண்பர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். சுக்கிரன் 6-ல் மறைவதால்- அவரை செவ்வாய் பார்ப்பதால், சிலருக்கு பெண்கள்வகையில் பிரச்சினைகள் உருவாகும். முன்யோசனையோடு ஜாக்கிரதையாக செயல்படவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு 10-ல் குருவும் சனியும் கூடியிருக்கிறார்கள். இருவரும் பூராட நட்சத்திரம். அது சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் 3, 8-க்குரியவர். 5-ல் திரிகோணம் பெற்றாலும் ராசிநாதன் குருவுக்கு 8-ல் மறைகிறார். சூரியனும் 6-ல் மறைகிறார். பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் காலம். தவறானவர்களை- தவறான வாக்குறுதி களை நம்பி சில காரியங்களில் இறங்கு வது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகிவிடும். ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவதிப் படக்கூடாது. கவனம் தேவை. 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். அங்கு கேது, ராகு சம்பந்தப்படுவதால் இனிப்பு மூலாம் பூசிய கசப்பு மாத்திரைக்குச் சமமான (சுகர் கோட்டட் டேப்லட்) நபர்களை நம்பி அவசர முடிவெடுத்து அவதிப்படும் நேரம். தொழில் ஸ்தானத்தில் குரு, சனி கூடியிருப்பதன் பலன் அதுதான். குருவும் வக்ரம், சனியும் வக்ரம். செப்டம்பர் 9-ல் குரு மட்டும் வக்ர நிவர்த்தியடைவார். அதன்பிறகு தெளிவு கிடைக்கும். "தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவுருவைச் சிந்தித்தல்தானே' என்பது திருமூலர் வாக்கு. அதை உணர்ந்து செயல்பட்டால் குரு உங்களைக் காப்பாற்றுவார்.