ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 4. மிருகசீரிடம்- 1, 2.

செவ்வாய்: பூனர்பூசம்- 4, பூசம்- 1.

Advertisment

புதன்: கார்த்திகை- 4.

குரு: சதயம்- 1.

சுக்கிரன்:

திருவாதிரை- 1, 2, 3, 4.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

10-6-2021-புதன் வக்ர நிவர்த்தி

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

8-6-2021- ரிஷபம்.

10-6-2021- மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார். செவ்வாயை சனி பார்க்கிறார். எனவே செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. செவ்வாய் 1, 8-க்குடையவர் 4-ல் நின்று 7-ஆமிடம், 10-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஆயுள், ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். செவ்வாய் பூமிகாரகன், சகோதரகாரகன். 4-ஆமிடம் பூமி, வீடு, வாகனம், கல்வி, தேகசுகம் ஆகியவற்றைக் குறிக்குமிடம். எனவே, இந்த பாவகம் சம்பந்தமான பலன்கள் யாவும் குறைவின்றி நிறைவாக அமையும். தேகசுகம் தெளிவாக அமையும். பூமி, வீடு, வாகன சுகம் அமையும். சகோதர ஒற்றுமையும் சிறப்பாக அமையும். தனக்கோ அல்லது உடன்பிறந் தவர்களுக்கோ திருமணத்தடை விலகி சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும்.10-ல் சனி நின்று கேது, செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் வேலை, தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் முன்னேற்றகரமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். ஆண்டாண்டு காலமாக சம்பளத்திற்கு வேலை பார்த்தவர்களுக்கு இப்போது சுயதொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். முதலீடு நிறைவாக இருப்பவர்கள் தனித்தொழில் தொடங்கலாம். முதலீடு குறைவாக இருப்பவர்கள் கூட்டுத்தொழில் தொடங்கலாம். அதற்குண்டான பொருளாதார வசதிகளும் உண்டாகும்.

tb

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் நிற்க, அவருக்கு வீடுகொடுத்த புதன் ஜென்ம ராசியில் நிற்க, சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். சுக்கிரனுக்கு 8, 11-க்குடைய குரு பார்வை கிடைக்கிறது. 10-க்குடைய சனி 9-ல் ஆட்சியாகிறார். தர்மகர்மாதிபதி யோகமும் ஏற்படுகிறது. இதுவரை சம்பளத்திற்கு வேலை பார்த்தவர்களுக்கு சொந்தத் தொழில் யோகமும் அல்லது கூட்டுத்தொழில் யோகமும் உண்டாகும். முதலீடு நிறைவாக இருப்பவர்கள் தனித்தொழில் தொடங்கலாம். முதலீடு பற்றாக்குறையாக இருப்பவர்கள் கூட்டுத்தொழிலில் இணையலாம். ஆக எப்படியும் சம்பளத்திற்கு வேலைபார்த்த நிலைமாறி முதலாளி அந்தஸ்து பெறும் யோகம் அமைகிறது. அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். அரசு வேலைக்கு முயற்சிக்கிறவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் களஸ்திர தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது தாமத் திருமணம். இருபத்தேழு வயதிற்குமேல் முப்பது வயதுவரை திருமணம் காலதாமதமாகலாம். சில ஆண்களுக்கு முப்பத்தைந்து வயதுவரைகூட தாமதமாகலாம். களஸ்திர காரகன் சுக்கிரனை மாங்கல்யகாரகன் குரு பார்ப்பதாலும், சுக்கிரனும் குருவும் திரிகோணமாக அமைவதாலும் தாமதமானாலும் தகுதியான கணவன்- மனைவி யோகம் அமையும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 12-ல் மறைந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் பரிவர்த்தனையாக இருப்பதால் (புதன் வீட்டில் சுக்கிரன். சுக்கிரன் வீட்டில் புதன்) திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையும். ஆண் வாரிசு, பெண் வாரிசு யோகம் உண்டாகும். நெய்க்குத் தொன்னை ஆதாரமா- தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவில், வாழ்க்கை என்னும் வண்டிக்கு இரண்டு சக்கரமாக கணவன்- மனைவி இணைந்து செயல்படலாம். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நட்பும் ஒற்றுமையும் முன்னேற் றமும் உயர்வும் உண்டாகலாம். "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை' என்ற குறளின் தத்துவப்படி நல்ல வாழ்க்கைத்துணை அமையும். இல்லாள் என்ற சொல்லுக்கு எல்லாம் உடையவள் என்று அர்த்தம். அது பெண் இனத் திற்கே உண்டான சொல். அதுவே இல்லான் என்றால் எதுவும் இல்லாதவன் என்னும் அர்த்தமுடையதாக மாறிவிடும். இல்லத்தரசி ஆள்வதால் இல்லம், இல்லறம் என்று ஆனது. அந்த இல்லறம் நல்லறமாக அமைவதற்கு இல்லாளே காரணமாவார். அந்த இல்லாள் நல்லாளாக இருந்தால்தான் இல்லறம் நல்லறமாகும். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்கள்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கும் 5, 10-க்குடைய செவ்வாய் நீசமாக இருந்தாலும் சனியின் பார்வையால் நீசபங்கம் ஏற்படுகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம். அந்த மகர ராசிநாதனே சனி செவ்வாயைப் பார்ப்பது சிறப்பு. இந்த சனி, செவ்வாய் பார்வையின் சிறப்பு கடகம், மகரத்திற்கு மட்டும்தான் உண்டு. அடுத்து மேஷம், துலாத்துக்கும் சனி, செவ்வாய் பார்வை பலமுண்டு. எனவே கடக ராசிக்காரர்களுக்கு சனி, செவ்வாய் பார்வை வாழ்க்கை முன்னேற் றம், தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் எல்லாவற்றையும் விசேஷப் பலனாகச் செய்யும். கடக ராசிக்கு 9-க்குடைய குரு 8-ல் மறைந்த தோஷம் இதனால் நிவர்த்தியாகிறது. பொதுவாக சனி, செவ்வாய் இணைவு, பார்வை தீங்குசெய்யும் என்றாலும், கடகச் செவ்வாய், மகரச் சனிக்கு அது விதிவிலக்காக அமையும். நீசபங்க ராஜயோகமாகவும் பலன்தரும். சனி 7-க்குடையவர்; செவ்வாய் 5, 10-க்குடையவர். நல்ல மனைவி, மக்கள் யோகத்தை அடையலாம். பதவி உயர்வு, தொழில் முன்னேற் றங்களை அடையலாம். பஞ்சபாண்டவர்களைப் போலவும், ராம- லட்சுமணரைப்போலவும் உடன்பிறந்தவர்களால் உயர்வும் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 10-ல் இருக்கிறார். அவருடன் 2, 11-க்குடைய புதன் சேர்க்கை. இங்கு புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை யோகம். 5-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 7-ஆமிடம் என்பது மனைவியையும் குறிக்கும்; கூட்டாளியையும் குறிக்கும். மனைவி என்பவர் லைஃப் பார்ட்னர். கூட்டாளி என்பவர் பிஸினஸ் பார்ட்னர். இன்னொருவகையில் 7-ஆமிடம் என்பது 10-ஆமிடத்து 10-ஆமிடம். இதை பாவாத்பாவகம் என்று சொல்லலாம். அந்நியர்களோடும் நண்பர்களோடும் கூட்டுத்தொழில் அமைப்பதைக் காட்டிலும், மனைவியைக் கூட்டாளியாக சேர்த்துக்கொண்டால் அபரிமிதமான லாபம் எதிர்பார்க்கலாம். 4-ல் கேது இருப்பது ஒருவகையில் தேக சுகத்துக்கு கேடு வினைவிக்கும் அல்லது தாயாருக்கு கெடுபலன் நடக்கு வாய்ப்புண்டு. ஜாதகரீதியாக வேண்டிய பரிகாரங்களைச் செய்துகொண்டால் தோஷம் விலகும். 6-ல் சனி ஆட்சி பெறுவதாலும், அவரை செவ்வாய் பார்ப்பதாலும் அவசியத் தேவைகளுக்காக சிலர் கடன் வாங்கலாம். பெரும் பணக்காரர்கள் சொந்த முதலீட்டைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் கடன்வாங்கியே தொழில் செய்வார்கள். லாபத்திலேயே அசலையும் கடனையும் அடைத்துவிடுவார்கள். அது ஒரு வியாபார தந்திரமாகும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கும் புதன் 9-ஆமிடமான திரிகோண ஸ்தானத்தில் இருக்கி றார். அவருடன் 12-க்குடைய சூரியன் சேர்ந்திருந்தாலும், சூரியன் நட்சத்திரமான கார்த்திகையில் புதன் இருப்பதால் கேடு கெடுதிக்கு இடமில்லை. 4, 7-க்குடைய குரு 6-ல் மறைந்து 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் வகையிலும் அல்லது பூமி, வீடு, வாகனம் வாங்கும் வகையிலும் சிலருக்கு கடன் உருவாகும். அந்தக் கடனை சுபக் கடனாக ஏற்றுக்கொள்ளலாம். பொதுவாக 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். ஆகவே வாழ்க்கை, தொழில் இவற்றுக்காக கடன் வாங்குவதில் தவறில்லை. அதேசமயம் தரமுள்ளவர்களிடம் கடன் வாங்கவேண்டும். அதைப்போலவே கடன்வாங்கிக் கடனைக் கொடுக்கவும் கூடாது. கடன்வாங்கிக் கடன் கொடுப்பவன் மரமேறிக் கைவிட்டவனுக் குச் சமம். இவையெல்லாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கொள்கைகள் ஆகும். 9-க்குடைய சுக்கிரனும் 10-க்குடைய புதனும் பரிவர்த்தனை யாக இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கௌரவம் பாதிக்காது. அந்தஸ்துக்கு கேடு வராது. அதேசமயம் எதைச் செய்வதானாலும் தீர ஆராய்ந்து தெளிவு பெற்று செயல்படுத்தவேண்டும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம். அவரை குரு பார்க்கிறார். பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல. ஏனென்றால் குருவின் வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சமடைவார். அவர்கள் இருவருக்கும் பகையென்றால் பகைவீட்டில் உச்சபலம் எப்படி அமையும்? குரு (வியாழன்) தேவர்களுக்கு ஆசான். சுக்கிரன் அசுரர்களுக்கு ஆசான். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்தான் பகை. அவர்களுக்காக வக்காளத்து வாங்கி வாதாடும் வக்கீல்களுக்குள் பகையில்லை. குருவும் சுக்கிரனும் வக்கீல்கள்போல! வக்கீல்கள் தங்கள் கட்சி ஜெயிக்கவேண்டும் என்று கோர்ட்டில் கடுமையாக வாதாடுவார்கள். கோர்ட்டுக்கு வெளியே இரு கட்சி வக்கீல்களும் சேர்ந்து காபி சாப்பிடப் போவார்கள். அதுபோலத்தான் குரு, சுக்கிரன் நிலை! 3, 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதரர்கள், நண்பர்களைக் குறிக்கும். 5-ஆமிடம் பிள்ளைகளைக் குறிக்கும். எனவே, நண்பர்கள் அல்லது பிள்ளைகள்வகையில் கருத்து வேறுபாடுகளும் வாக்கு வாதங்களும் உருவாகலாம். என்றா லும் நீரடித்து நீர் விலகாது என்பது போலவும், விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்பது போலவும் அனுசரித்து நடந்துகொள்வது எல்லாருக்கும் நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதான் செவ்வாய் 9-ல் கடகத்தில் நீசமாகிறார். அவரை சனி பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் அமையும். சனி, செவ்வாயின் உச்ச ராசிநாதனாவார். எனவே மகரம், கடகத்தில் உள்ள சனி, செவ்வாய் பார்வையும் சேர்க்கையும் கெடுபலனைத் தராது. அதேபோல மேஷம், துலாத்தில் உள்ள செவ்வாய், சனிக்கும் கெடுபலன் ஏற்படாது. இது எப்படியென்றால்- தீக்குச்சி தீபமேற்றவும் பொருந்தும். அடுப்பு பற்றவைக்கவும் பொருந்தும். வீட்டைக் கொளுத்தவும் பொருந்தும். 7-க்குடைய சுக்கிரனும், 8-க்குடைய புதனும் பரிவர்த்தனையோகம். இவர்களில் சுக்கிரனை 2, 5-க்குடைய குரு பார்க்கிறார். "5, 9-க்கதிபர் பாவர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே புரிவார்' என்பது சந்திரகாவிய விதி! 5-ம், 9-ம் திரிகோண ஸ்தானங்கள். தெய்வ அனுகூல ஸ்தானங்கள். 4, 7, 10- கேந்திர ஸ்தானங்கள்! முயற்சி ஸ்தானங் கள். கேந்திரம் என்பது நீங்கள் போடும் டெபாசிட்டுக்கு சமம். திரிகோணம் என்பது அதற்குக் கிடைக்கும் வட்டிக்குச் சமம். அதனால்தான் "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்றார்கள். 5-க்குடைய குரு 4-ல் கேந்திரம் பெறுவது ஒரு யோகம். அதனால் உங்களுக்கு முயற்சிக்கேற்ற வெற்றியும் லாபமும் பெருகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைவாக இருந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சிபெறுவதால் மறைவு தோஷம் நிவர்த்தியாகும். அதாவது மறைவாக இருக்கும் கிரகங்கள் நிற்கும் ராசிநாதன் அதற்கு கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும், அவர்களின் சாரம் பெற்றாலும் மறைவு தோஷத்திற்கு விதிவிலக்காகும். இது ஒரு அனுபவ ஜோதிடம். ராசிநாதன் குரு 3-ல் மறைந் தாலும் ராசிக்கு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். திருமண யோகம் கைகூடும். செய்யும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் ஏற்படும். பெற்றோ ரின் ஆதரவும், தெய்வபக்தியும், பிரார்த்தனைகள் நிறைவேறுவதும் போன்ற பலன்கள் நடைபெறும். பொருளாதாரத்தில், வரவு- செலவில் கடன்வாங்குவது மட்டும் கடனல்ல. தெய்வக்கடன், பித்ருக்கடன் குருகடன் என்பதுபோன்ற கடன்களும் உண்டு. ராஜவம்சத்தினருக்கு மட்டுமே வில்வித்தையைக் கற்றுக்கொடுத்தார் துரோணாச்சாரியார். ராஜபரம்பரை இல்லாத ஏகவலைன் அவரை மானசீக குருவாக மதித்து தானே வில் வித்தையைக் கற்றுக்கொண்டான். அர்ச்சுனனைக் காட்டிலும் சிறந்த வில்லாளியாக மாறிவிட்டான். இது அர்ச்சுனனுக்குப் பொறுக்கவில்லை. அவனை சாந்தப்படுத்த குரு துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை குரு காணிக்கையாகப் பெற்றுக்கொண்டார். அந்த பாவத்தின் காரணமாகவே பாரத யுத்தத்தில் மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்டான் என்னும் பொய்யான செய்தியை கேள்விப்பட்டு போரிலி-ருந்து விலகிவிட்டார். இது கண்ணனின் ராஜதந்திரம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி மகரத்தில் ஆட்சி பெறுகிறார். அவரை செவ்வாய் பார்க்கி றார். தேவ கேரளீயம் என்ற ஜோதிட நூலி-ல் "மந்தன் சேய் (செவ்வாய்) இருவரும் சேர்ந்திடவும் தீது; பார்த்திடவும் தீது' என்று சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய், சனியின் வீடான மகர ராசியில் உச்சம். அந்த சனி செவ்வாயின் வீடான மேஷத்தில் நீசம். கரன்ட் சப்ளைக்கு நெகட்டிவ்- பாசிட்டிவ் தேவையென்பதுபோல, சனியும் செவ்வாயும் எதிர்மறையாகவும் செயல்படுவார்கள். உடன்மறையாகவும், செயல்படுவார்கள். அதை எடைபோடமுடியாமல் அல்லது அதன்பலனை நிர்ணயிக்க முடியாமல் குழப்பமடைகிறவர்கள் சனி, செவ்வாய் சேர்க்கையும் பார்வையும் தீது என்று விலக்கிவிட்டார்கள். அதாவது, நரி இடம் போனால் நல்லதா- வலம் போனால் நல்லதா என்று சர்ச்சை வரும்போது, மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்று சொல்வதுபோல! ஆக, இங்கு சனி ஆட்சியாகவும் செவ்வாய் நீசமாகவும் இருப்பதால் ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி நெகட்டிவ்- பாசிட்டிவ் தேவை என்பதுபோல! அதனால்தான் எதிர்மறை- உடன்மறை என்கிறோம். மகரம், கும்பம், மேஷம், விருச்சிகம் இந்த ராசிகளுக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் எப்படி இருந்தாலும் கெடுதல் செய்யாது. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல சனி, செவ்வாய் சம்பந்தம் கெடுதலாகத் தோன்றினாலும் நெல்லி-க்கனியின் துவர்ப்பு, நீர் பட்டதும் இனிப்பாக மாறுவதுபோல நன்மையாகவே முடியும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் குரு பலம்பெறுகிறார். குருவுக்கு கும்பம் நட்பு வீடா- பகைவீடா என்பதை ஆராய்வதைவிட, குரு பார்த்த இடம் சிறப்பு என்பதற்கு சமமாக, குரு நின்ற இடத்தையும் சமமாகச் சொல்லலாம். புராணத்தில் இந்திரன் மகனுக்குத் திருமண லக்னம் நிச்சயிக்கும்போது நவகிரகங்களுக்கும் குழப்பம் உண்டானது. அப்போது சுக்ராச்சாரியார் குருவைப் பார்த்து, 'நீங்கள் இருக்கும் இடமே சிறந்த லக்னம்தான்' என்று எடுத்துக் கூறினாராம். அதாவது குரு நின்ற இடமும் பார்த்த இடமும் சிறப்புடையது. அதாவது குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும் என்பார்களே- அதுபோல குருவுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. வாத்தியார் நல்லவரா கெட்டவரா என்பதைவிட, வாத்தியார் ஆசான்தான். இதில் குரு தேவர்களுக்கு வாத்தியார். சுக்கிரன் அசுரர்களுக்கு வாத்தியார். 2, 11-க்குடைய குரு ஜென்மத்தில் இருப்பதால் தனலாபம் சித்திக்கும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். கொடுக்கல்- வாங்கல் சீராக ஓடியடையும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகும். அவருக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 12-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுவதால், சில காரியங்களை முன்னதாக டெபாசிட் செய்து சாதிக்கவேண்டும். பெரும்பாலும் அரசு அலுவலங்களில் நமக்கு வரவேணடியதைப் பெறுவதற்கு இந்தமுறை கையாளப்படுகிறது. 7-க்குடைய கேந்திராதிபதி சூரியனும், 5-க்குடைய திரிகோணாதிபதி புதனும் 4-ல் இருப்பது ஒருவகையில் யோகம்தான். வாழ்க்கைத் துணையின்மூலம் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சனி அதற்கும் 12-ல் மறைவு. சனிக்கு 12-க்குடையவர் குரு. ஆக, முத-லில் விரயம்; பிறகு லாபம். சில அரசு வங்கிகளில் கடன்பெறுவதற்கு முதலி-ல் அந்த வங்கியில் கணக்கு ஆரம்பித்து தொகை செலுத்தவேண்டும். பிறகு நமது கணக்கில் கடன் கொடுப்பார்கள். அதுமாதிரி! அதனால் முதலி-ல் விரயம்; பிறகு லாபம். சில அரசு ஒப்பந்தங்களில் முதலில் இ.எம்.டி டிபாசிட் செய்யவேண்டும். ஆரம்பத்தில் செலவுசெய்து வரவு பார்க்கவேண்டும். 11-ல் ஆட்சிபெற்ற சனி உங்கள் ராசியைப் பார்க்கிறார். அந்த சனி, ராசிநாதன் குரு நின்ற வீட்டுக்கு அதிபதி என்பதால் நினைத் ததை நிறைவேற்றலாம். பாலம் பழுதுவேலை நடக்கும்போது மாற்றுவழியில் சென்று உரிய பாதையில் சேருவதுபோல- உங்கள் பயணம் நேர்ப்பயணமாக இல்லாவிட்டாலும் போகவேண்டிய இலக்கை அடைந்துவிடும். அதாவது நேரடியாக மூக்கைத் தொடாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல! திருமண விழாக்களில் பெண்ணின் தலையைச் சுற்றி நெற்றியில் திலகமிடுவதற்குச் சமம். இது சாஸ்திரமா சம்பிரதாயமா என்பது தெரியாவிட்டாலும் நடைமுறைப் பழக்கமாகும். இதுமாதிரி சில காரியங்களில் செயல்பட்டு நிறைவேற்றவேண்டும். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, "எழுதி எழுதி மேலே செல்லும் விதியின் கை' என்று குறிப்பிடுவார். கவியரசர் கண்ணதாசர், "விதியை மதியால் வெல்லலாம்' என்றாலும், "அதுவும் வேந்தன் வகுத்த விதியாகும்' என்றார். ராசிநாதன் மறைந்தாலும் பலன் தருவதில் தவறமாட்டார்.