ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 4,

பூனர்பூசம்- 1, 2.v செவ்வாய்: ஆயில்யம்- 1, 2.

Advertisment

புதன்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை- 1, 2, 3.

குரு: சதயம்- 1.

சுக்கிரன்: பூசம்- 1,

ஆயில்யம்- 1, 2.

சனி: உத்திராடம்- 4.

ராகு: ரோகிணி- 2.

கேது: அனுஷம்- 4.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

5-7-2021- ரிஷபம்.

8-7-2021- மிதுனம்.

10-7-2021- கடகம்.v

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருந்தாலும் சனியின் பார்வையைப் பெறுவதால் நீசபங்க ராஜயோகமாகிறார். கெட்டது என்று எதை நினைக் கிறமோ அதுவே நல்லதாக மாறி நற்பலனைத் தருவதுதான் நீசபங்க ராஜயோகம். துவர்க்கும் நெல்லிக்காய் சாப்பிட்டபிறகு தண்ணீர் குடித்தவுடன் இனிப்புச் சுவையாக மாறுவது போன்றது நீசபங்க ராஜயோகம் எனச் சொல்லலாம். பொதுவாக "செவ்வாய், சனி சேர்ந்திடவும் தீது; பார்த்திடவும் தீது' என்று சொல்லப்பட்டாலும், இங்கு ராசிநாதன் நீசமாகி செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனியின் பார்வை யைப் பெறுவதும் நீசபங்க ராஜயோகம் எனலாம். 9, 12-க்குடைய குருவை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால், பூர்வபுண்ணிய யோகமும் உங்களுடைய தெய்வ பக்தியும் உங்களை வழிநடத்தும். அதனால் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியதுபோல எந்தக் குறையும் அல்லது எந்தக் கெடுதலும் உங்களை வந்தடையாது. 5-ஆமிடத்தை 9-க்குடைய குரு பார்ப்பதால்- அதாவது ஒரு திரிகோணத்தை இன்னொரு திரிகோணாதிபதி பார்ப்பதால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக செயல்படும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது களஸ்திர தோஷம் அல்லது தாமதத் திருமணத்தைக் குறிப்பிட்டாலும், சுக்கிரன் 4-ல் ராசி நாதனோடு சேர்வதால் எல்லா வகையிலும் நல்ல பலன்களாகவே நடக்குமென்று நம்பலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந்தாலும், ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியின் பார்வையைப் பெறுவதால் மறைவு தோஷம் விலகும். தொடக்கத்தில் சனியின் சாரத்திலும் பிறகு புதனின் சாரத்திலும் சுக்கிரன் சஞ்சாரம். சனியும் புதனும் திரிகோணாதிபதிகளாவர். புதன் 5-க்குடையவர். சனி 9-க்குடையவர். "5, 9-க்கதிபர் பாபர் சுபரானாலும் பொன்போன்ற நன்மையே தருவார்' என்பது சந்திர காவிய விதி. ஜாதக சந்திரிகை என்னும் வடமொழி நூலின் தமிழாக்கம்தான் சந்திர காவியம். மேலும் ராசிநாதன் அல்லது லக்னாதிபதி எங்கிருந்தாலும்- யாரோடு சேர்ந்தாலும்- யார் பார்வையைப் பெற்றாலும் நற்பலனைத் தருவார்கள். அது எப்படியென்று சந்தேகம் எழுந்தால், "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்குவாள். அசுத்தங்கள் கலந்தாலும் கங்கையின் புனிதத் தன்மை கெடாது' என்பதுபோல! விஞ்ஞானரீதியாக சானிட்டைசர் பயன்படுத்தும்போது கையில் உள்ள கிருமி போவதுபோல, ராசிநாதன் அல்லது லக்னநாதனுக்கு விதிவிலக்குண்டு. ஜென்ம ராகு- சப்தம கேது திருமணத்தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும், 7-க்குடைய செவ்வாயும் ராசிநாதன் சுக்கிரனும் இணைவதால், ரஜினிகாந்த் சொன்னதுபோல் "லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்' என்பதுபோல், தாமதப்பட்டாலும் தகுதியும் திறமையும் தரமும் அமைந்த மணவாழ்க்கை அமையும்.

tt

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். 7, 10-க்குடைய குரு 9-ல் நின்று புதனைப் பார்க்கிறார். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அவர் ராசியைப் பார்ப்பதும் யோகம். எனவே, உங்களுடைய முயற்சிகள் யாவும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறும். ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் அமைவாள் என்று சொல்வார்கள். அது தாயாகவும் இருக்கலாம். தாரமாகவும் அமையலாம். சகோதரியாகவும் இருக்க லாம். நம் எல்லாரையும் தாங்கி நிற்கும் பூமியை பூமாதேவி (பூமித்தாய்) என்றுதான் சொல்கிறோம். பூமிதேவன் என்று சொல்வதில்லை. ஏனென் றால் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம். ஒரு வயதான தாயை அவள் பெற்ற மகன் எந்தக் குறையுமில்லாமல் உபசரித்து போற்றி வணங்கினான். வணங்கிவிட்டு, "உங்களுக் குத் திருப்திதானா' என்று விசாரித்தான். அந்தத் தாயோ, "நீ என்னை கவனித்துக்கொண்டது திருப்திதான் என்றாலும், உன்னைப் பெற்றெடுப்பதற்கு நான்பட்ட பிரசவ வேதனைக்கு எதுவும் ஈடாகாது' என்றார். அதுதான் தாய்மையின் சிறப்பு. அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு பிள்ளையைப் பெற்றுக்கொடுத்தாலும் குழந்தையின் இன்ஷியலுக்கு தாயின் பெயரைப் போடுவதில்லை; தகப்பன் பெயரைத்தான் போடுகிறார்கள். அதுதான் தாயின் தியாக உள்ளம். ராசிநாதனோடு 3-க்குடைய சூரியன் சம்பந்தப்பட்டு குரு பார்வையைப் பெறுவதால், சிலருக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்க்கை. அவர்களுக்கு சனி பார்வை. "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது; பார்த்திடவும் தீது' என்பது ஜோதிட விதியானாலும், கடகச் செவ்வாயும் மகரச் சனியும் பார்த்துக்கொள்வது விதிவிலக்காகும். ஏனென் றால் செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனியும், சனியின் நீச ராசி நாதன் செவ்வாயும் பார்த்துக் கொள்வது- மின்சார சப்ளைக்கு பாஸிட்டிவ்- நெகட்டிவ் இரண்டும் தேவைப்படுவது போல இந்தப் பார்வையை எடுத்துக்கொள்ளலாம். 9-க்குடைய குரு 8-ல் மறைந் தாலும் செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் (செவ்வாய் 10-க்குடையவர் என்பதாலும்) தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. ஆகவே, உங்கள் முயற்சி களுக்கு காலம் வெற்றிமாலை சூட்டுவதாக அர்த்தம். 10- என்பது கேந்திரம்; முயற்சி ஸ்தானம். 9-திரிகோணம்; தெய்வ அனுகூல ஸ்தானம். "முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்' என்பது பழமொழி. அதனால் தான் "முயற்சி திருவினையாக்கும்' என்றார் கள். திருவள்ளுவரும் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்' என்றார். அதற்கு உதாரணம் ராஜரிஷி விசுவாமித்திரர்தான். தவமுயற்சியால் பிரம்மரிஷி பட்டம்பெற்றார். 7-ல் சனி ஆட்சி. ஜென்மச் செவ்வாய் நீசம். இருவருக்கும் சுக்கிரன் தொடர்பு. ஜெனன ஜாதகத்திலும் இதே கிரக அமைப்பு இருந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் உண்டாகும் என்பது விதி. தேகநலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த புதனும் அவருடன் சேர்ந்திருக்கிறார். பொதுவாக 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்து ஒரு காரியத்தைத் தொடங்கினால் சீரும்சிறப்புமாக தங்குதடையின்றி வெற்றி கரமாக முடியுமென்பது ஜோதிடவிதி. இங்கு ராசிநாதனே 11-க் குடைய புதனோடு 11-ல் இணைந்து 5-க்குடைய குருவின் பார்வையைப் பெறுகிறார். எனவே, தொட்டதெல் லாம் ஜெயமாகும். தொடர்வதெல்லாம் பூர்த்தியாகும். 9-க்குடைய சுக்கிரனும் சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதேசமயம் அவர்கள் இருவரும் 12-ல் மறைவதால் சற்று தாமதமாகப் பலன் தரும். கற்பூரம், கரிக்கட்டை, வாழைமட்டை என்பார்கள். கற்பூரம் உடனடியாகப் பற்றிக் கொள்ளும். கரிக்கட்டை சற்று தாமதமாகப் பிடித்துக் கொள்ளும். வாழைமட்டை பற்றவே பற்றாது. உங்களுக்கு கற்பூரம்போல் இல்லாமல் கரிக்கட்டை மாதிரி பலன் அமையும். அதாவது தாமதப்பலன் என்று அர்த்தம். 11-ல் நிற்கும் சூரியனை 7-ல் நிற்கும் குரு பார்ப்பதால் நினைத்ததை சாதிக்கலாம். நினைத்ததை முடிப்பவர் என்று பெருமைப்படலாம். 5-க்குடையவர் 7லில் நிற்பதும், அவரை செவ்வாய் பார்ப்பதும் நல்ல மனைவி, மக்கள் யோகத்தை ஏற்படுத்தும். 6-ல் உள்ள சனியும், 12-ல் உள்ள செவ்வாயும் பார்த்துக்கொள்வதால் சொல்வதைத்தான் செய்வீர்கள்; செய்வதைத்தான் சொல்வீர்கள். அதனால் எப்போதும் தோல்விக்கு இடமில்லை. உடல்நலம், பொருளாதாரம் இரண்டும் திருப்திகரமாக அமையும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் விரயாதிபதி சூரியன் சம்பந்தம். என்றாலும் 4, 7-க்குடைய குரு பார்ப்பதால் குறை ஒன்றுமில்லை. மனைவி, மக்களின் ஒத்துழைப்பும் நல்லோர் ஆதரவும் உங்களை வழிநடத்துவதால் எண்ணியது ஈடேறும்; நினைத் தது நிறைவேறும்; கருதியது கைகூடும். சூரியனும் புதனும் 10-ல் இருப்பதால் சிலருக்கு வேலை, தொழில், உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி ஏற்பட லாம். பதவி உயர்வு எதிர் பார்க்கலாம். விரும்பிய வேலை மாற்றமும் அமைய லாம். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றிச் செய்தி கிட்டும். 4, 7-க்குடையவர் 6-ல் மறைவதால் தாயார் அல்லது மனைவி வகையில் எதிர் பாராத வைத்தியச் செலவு கள் வரலாம். 8-க்குடைய செவ்வாய் குருவைப் பார்ப்பது அதற்குக் காரணம். பெண்கள் ஜாதகமாக இருந்தால் கணவருக்கு மேற்படி பலன் நடக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உருவாகி மறையும். உடன்பிறந்தோர் இல்லாதவர்களுக்கு தகப்பனார் அல்லது பிதுரார்ஜித சொத்துகள் வகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரும். ராகு- கேது தசாபுக்தி நடப்பவர்களுக்கு (ஜனன ஜாதகத்தில்) மேற்கண்ட பலன் விபரீத விளைவுகளை ஏற்படுத்த இடமுண்டு. ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து வேண்டிய பரிகாரங்களைச் செய்துகொள்ளவும். மற்றபடி பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. மிதமான அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் பலம்பெறுகிறார். அவருடன் 2, 7-க்குடைய செவ்வாய் சேர்க்கை. செவ்வாய் நிற்பது நீச ராசி என்றாலும், செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. உடன்பிறந் தோர் வகையில் நிலவிய வேதனை களும் சோதனைகளும் விலகி விடும். பகை நீங்கி நட்பு மலரும். இனியொரு ஜென்மாவில் சேர்ந்து பிறக்கப் போகிறோமா என்ற தத்துவ ஞானம் உதயமாகும். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்றும், 'நீரடித்து நீர் விலகாது' என்றும், 'விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்றும் தத்துவம் பேசி ஒற்றுமைக்கு வித்திடலாம். ஒருசிலரின் வாழ்க்கையில் நீண்டநாள் நிலவிய வருத்தமும் பகையும் விலகி நட்பும் உறவும் மலரும். 9-க்குடைய புதன் 11-க்குடைய சூரியனோடு இணைவதாலும், குருவின் பார்வையைப் பெறுவதாலும் வருடக் கணக்கில் நிலவிய பங்காளிப் பகை மாறும். ஒன்றுசேர்ந்து குலதெய்வப் பூஜை செய்யும் அமைப்புகளும் உருவாகும். 2-ல் கேது, 8-ல் ராகு நிற்பது ஒருசிலருக்கு வறட்டு கௌரவத்தையும் வீண் பிடிவாதத்தையும் உருவாக்கினாலும், ராசியை குரு பார்ப்பதால் வறட்டு கௌரவத்தை விட்டுவிட்டு பெருந்தன்மையோடு நடந்து கொள்ளலாம். முன்கை நீண்டால் முழங்கை நீளும் என்பதற்கிணங்க, சில காரியங்களை முன்நின்று செயல்படுத்தி பெருமையடையலாம். 4-ல் உள்ள சனி தேகநலனில் அவ்வப்போது மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தி விலக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசமாக இருக்கிறார். ஆனால் அவரை சனி பார்ப்பதால் நீசபங்க ராஜயோகமடைவார். அதாவது செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி என்பதால், சனி, செவ்வாய் பார்வை உங்களுக்கு பலம்சேர்க்கும். 4-ல் உள்ள குருவை செவ்வாய் 8-ஆம் பார்வை பார்ப்பதால் 2, 5-க்குடைய குருவின் பலன் திருப்திகரமாகச் செயல்படும். 10-க்குடைய சூரியன் 8-ல் மறைந்தாலும், 8-க்குடைய புதன் அவரோடு சேர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் சூரியனுக்கு மறைவு தோஷப் பலன் மாறிவிடும். தொழில் மேன்மை, பதவி உயர்வு, புதிய தொழில் ஆர்வம் போன்றவை எல்லாம் சிறப்பாக அமையும். அரசு உதவி பெற்று செயல்படும் நிறுவனங்கள் மிக நன்றாக இயங்கும். அரசுப் பதவிகளும் அமையும். தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கு அரசுப் பள்ளியில் வேலைப்பணி அமையும். ஜென்ம கேது- சப்தம ராகு களத்திர தோஷமெனச் சொல்லப்பட்டாலும், 7-க்குடைய சுக்கிரன் திரிகோணம் பெறுவதால் (9-ல்), ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகிறது. கேதுவுக்கு வீடுகொடுத்தவர் செவ்வாய்; ராகுவுக்கு வீடுகொடுத்த வர் சுக்கிரன். இந்த இருவரும் 9-ஆமிடமான திரிகோணத்தில் சேர்க்கை. அவர்களுக்கு சனி பார்வை கிடைப்பது விசேஷம். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை தீங்கு என்றாலும், இங்கு யோகமான பலனா கவே நடக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் வக்ரமாக இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சியாக இருக்கிறார். ராசிக்கு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆம் இடங்களை குரு பார்ப்பது யோகம். திருமணத்தடை விலகும். நல்ல மணவாழ்க்கை அமையும். வாரிசு யோகம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றவர்களுக்கும் பயனும் பலனும் உண்டாகும். "ஈன்று புறந்தருதல் எந்தன் கடன்; சான்றோன் ஆக்குதல் தந்தைக்கடன்' என்பதுபோல! புராணத்தில் தந்தை சுவாமியைவிட (சிவன்) பிள்ளை சுவாமி (முருகன்) புகழடைந்தார். இதிகாசத்தில் ராமரைவிட லவன்- குசன் பெருமை பெற்றார்கள். சரித்திரத்தில் ஜவஹர்லால் நேருவைவிட மகள் இந்திராகாந்தி பெருமை பெற்றார். இதற்கெல்லாம் பூர்வபுண்ணியம் பலம்பெறவேண்டும். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதும், 9-க்குடைய சூரியனையும் குரு பார்ப்பதும், 5-க்குடைய செவ்வாய் குருவைப் பார்ப்பதும் மேற்சொன்ன பூர்வபுண்ணிய பலத்திற்கு பக்கபலமாகும். அதனால்தான் ஜாதகம் எழுதும்போது "ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குலம் ஸம்பதாம் பதவீ பூர்வ புண்ணியானாம்' என்று எழுதுகிறோம். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற வாசகப்படி தெய்வத்தை நம்பினார் கைவிடப்படார்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கி றார். 3, 12-க்குடைய குரு 2-ல் நிற்க, நீசபங்க ராஜயோகம் பெற்ற செவ்வாய் பார்க்கிறார். வாழ்க்கை நலம், செல்வ வளம், தேக பலம் எதிலும் குறையொன்றுமில்லை. ஆனால் 5-ல் உள்ள ராகு மனக்குழப்பத்தையும் நிம்மதிக் குறைவையும் ஏற்படுத்துகிறார். 8-க்குடைய சூரியனும் 6-க்குடைய புதனும் 8-மறைவது ஒருவகையில் உங்களுக்கு பலம். அதாவது கெட்ட ஆதிபத்தியம் பெற்றவர்கள் கெட்டுப் போகிறார்கள். அதனால் கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம் என்பதுபோல எல்லாம் உங்களுக்கு நன்றாகவே இருக்குமென்று நம்பலாம். 2-ல் குரு இருப்பதால், பூணூல் அணிந்தவர்களின் ஆதரவும் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். குருவை செவ்வாய் பார்ப்பதால் பூமி, வீடு, மனை போன்ற வகையில் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் விருப்பங்களும் கைகூடும். வெற்றிபெறும். சிலருக்கு எதிர்பாராத தனப்ராப்தியும் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில், உடன்பிறந் தவர்களின் இடையூறுகளும் தடைகளும் விலகும். ஒத்துழைப்பு உண்டாகும். நீறுபூத்த நெருப்பாக உள்ளத்தைச் சுட்டெறித்த எல்லா பிரச்சினைகளும் மறைமுக விரோதங்களும் மாறிவிடும். எல்லாம் அனுகூலமாகத் தேறிவிடும். உடல்நலனில் ஆரோக் கியக் குறைவு விலகி தேக சௌக்கியம் உண்டாகும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். ஜென்ம ராசியில் 2, 11-க்குடைய குருவும் இருக்கிறார். இவர்கள் இருவரையும் நீசபங்க ராஜயோகம் பெற்ற செவ்வாயும் பார்க்கிறார். செவ்வாய் 10-க்குடையவர். அவருடன் சேர்ந்த சுக்கிரன் 9-க்குடையவர். ஆகவே தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் உங்கள் முயற்சிகள் எல்லாம் கைகூடும். வெற்றியடையும். 5-ல் சூரியன், புதன் சேர்க்கையும், அவர்களுக்கு 2, 11-க்குடைய குரு பார்வையும் இருப்பதால், உங்களுடைய நியாயமான கோரிக்கைகளும் ஆசைகளும் கேடு கெடுதியில்லாமல் நிறைவேறும். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்பது குறள். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் வைராக்கியமாக இருந்தால் நூற்றுக்கு நூறு முழு வெற்றியடையும் என்பது பொருள். எதிர்காலத் திட்டங்கள் எல்லாம் இனிதே நிறைவேறும். அதற்கு மற்றவர்களின் ஒத்துழைப்பும் காலத்தின் கருணையும் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும். அதைத்தான் குருவருளும் திருவருளும் என்பார்கள். இவை இரண்டும் இணையும்போது அது பேரருளாக உருமாறி பெருமிதம் சேர்க்கும். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதும், இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் என்பதும் உங்களின் அனுபவப் பாடமாகும். ஆரோக்கியம், பொருளாதாரம் இரண்டும் உங்களுக்கு ஆதரவாக அமையும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவது ஒருவகையில் மைனஸ் பாயின்ட் என்றாலும், குரு 10-க்குடையவர்; அவரை 9-க்குடைய செவ்வாய் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். 9-லட்சுமி ஸ்தானம்; 10-விஷ்ணு ஸ்தானம். 9-திரிகோணம்; 10-கேந்திரம். ஒன்று உடல்; இன்னொன்று உயிர். ஆகவே உங்களுக்கு எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். வெற்றி உண்டாகும். தோல்விக்கும் இடமில்லை; தொய்வுக்கும் இடமில்லை. குரு 12-ல் மறைந்திருப்பதால் சில காரியங்கள் தாமதப்பட்டாலும் தடைப்பட்டாலும், ஜெய ஸ்தானாதிபதி சனி ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், எல்லாம் விரும்பியதைப்போல வெற்றியாக நடக்கும். கற்பூரம்- கரிக்கட்டை- வாழைமட்டை போல- கிரகநிலைகள் கற்பூரம்போல பற்றிக்கொள்ளாவிட்டாலும், வாழைமட்டைபோல- கரிக்கட்டை யாக தாமதப்பலனைக் கொடுக்கும். (லேட் பிக்- அப்). அதற்காக உங்கள் முயற்சிகளை எப்போதும் விட்டுவிடாதீர்கள். "கிட்டாதாயின் வெட்டென மற' என்ற வாசகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, "அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்' என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்யுங்கள். முடிவு வெற்றியாக அமையும். 3-ல் ராகு, 9-ல் கேது. பூர்வபுண்ணிய பலத்தால் உங்களுக்கு மனோபலம் ஏற்படும். அதனால் முடியாததென்ற ஒன்று உங்கள் அகராதியில் இல்லை. தடைகளைக் கடந்து முன்னேற்றலாம்.