ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரகப் பாதசாரம்:

Advertisment

சூரியன்: மகம்- 4, பூரம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 2, 3.

புதன்: உத்திரம்- 2, 3, 4, அஸ்தம்- 1.

Advertisment

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: புனர்பூசம்- 3, 4, பூரம்- 1.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 3, 2.

கேது: மூலம்- 1, கேட்டை- 4.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம்.

குரு, சனி வக்ரம்

31-8-2020- கடகச் சுக்கிரன்.

1-9-2020- ரிஷப ராகு, விருச்சிகக் கேது.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம் மகரம்.

1-9-2020- கும்பம்.

3-9-2020- மீனம்.

5-9-2020- மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 3-ல் இருக்கும் ராகு இப்பொழுது 2-ஆமிடம் ரிஷபத்துக்கும், 9-ல் இருக்கும் கேது 8-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருக்கும் இடம் நல்ல இடமென்றாலும், சனி சம்பந்தப்பட்டதால் திருப்தியான பலன்களைச் செய்யவில்லை என்பதுதான் அனுபவரீதியான உண்மை. இப்பொழுது ராசிக்கு 2-ல் வரும் ராகுவும், 8-ல் வரும் கேதுவும் என்ன செய்யப்போகிறார்கள் என்னும் சந்தேகம் உங்களுக்கு ஏற்படுவது நியாயம்தான். நரி வலம் போனால் நல்லதா? இடம் போனால் நல்லதா எனக் கேட்டால், மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்கிற முறையில்தான் நீங்கள் ஆறுதல் அடையவேண்டும். இறைவனுடைய கணக்கு- ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். பொதுவாக, இறைவன் யாரையும் கைவிடமாட்டான். அதேசமயம் நம்பிக்கைத் துரோகிகளுக்கும் நன்றிகெட்டவர்களுக்கும் துணைநிற்க மாட்டான். நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான். தக்கசம யத்தில் கைகொடுத்து ஆதரிப்பான். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். நீங்கள் நல்லவரா- கெட்டவரா? குரு 9-ல் ஆட்சிபெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் நிச்சயம் நல்லவர்தான். அதேசமயம் நல்லவர் என பெயர் எடுப்பதற்கும், நிரூபிப்பதற்கும் சோதனைகளை சந்தித்து சாதனை புரிய வேண்டும். அது கொஞ்சம் வேதனையாக இருந்தாலும் பரீட்சையை சந்திக்கவேண்டும். பாஸாவதற்குப் பரீட்சையை சந்திக்கத் தான் வேண்டும். பள்ளியில் சென்று படிப் பவனுக்குத்தானே பரீட்சை வைக்கமுடியும்? அப்பொழுதுதானே அவன் திறமை வெளிப்படும்? படிக்காதவனுக்கும் பள்ளி செல்லாதவனுக்கும் பரீட்சை வைக்க முடியுமா- குப்பையோடு குப்பை சேர்வதுபோல.

பரிகாரம்: ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு குடும்ப நிம்மதியையும் பொருளாதார வளர்ச்சியையும் தரும். ராகு கால வழிபாடு செய்யலாம். துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றலாம். முடிந்தால், திருப்பாம்புரம் சென்று வழிபடலாம். இங்கு சில நேரம் சிவன் சிலைமேல் பாம்பு தன் சட்டையை உரித்துப்போட்டுப் போய்விடும்.

rasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை இரண்டிலிருக்கும் ராகு இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கும், எட்டிலிருக்கும் கேது ஏழாமிட விருச்சிகத்துக்கும் மாறுவார்கள். ராகுவும் கேதுவும் அசுப கிரகங்கள். அவர்கள் கேந்திரம் பெறு வது நல்லதுதான். "ஆ மேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில் ராகு வர- பூமேவும் தனித்துயில் ராஜயோகம் எனப் புகழலாமே' என்பது ஜோதிடப் பாடல். அதாவது, மேஷம், ரிஷபம், மகரம், கடகம், கன்னியில் ராகு வருவது ராஜயோகம் என்பது பாடலின் கருத்து. இப்பொழுது உங்கள் ராசியிலேயே ராகு வருவது யோகம்தான். கடந்தகாலத்தில் நடந்த விரயங்களும் வேதனைகளும் சோதனைகளும் அடியோடு விலகிவிடும். சாதனைகள் புரியலாம். நம்பிக்கையோடு மற்றவர்களுக்கும் போதனை புகட்டலாம். ரிஷப ராசிக்கு அட்டமச் சனி நடந்தாலும் குரு சம்பந்தத்தால் கெட்டதும் நல்லதாக மாறி மகிழ்ச் சியூட்டும். அதாவது, புரை யோடிய புண்ணை அறுவை சிகிச்சையால் அறுத் தெடுத்துக் குணப்படுத்து வதுபோல. கடந்த ஒன்றரை வருடம் ஏற்பட்ட ஏமாற்றங் களும் இழப்புகளும் இல்லாதொழியும். எடுத்த காரியம் யாவும் வெற்றி பெறும். தொடுத் தவை அனைத்தும் துலங்கும். இழந்தவை மீண்டும் கிட்டும். எட்டாமிடம் ஆயுள் ஸ்தானம் என்றாலும் அதுவே 2, 11, 9- ஆமிடத்தோடு சம்பந்தப்பட்டால் அதிர்ஷ்ட தானமாகிவிடும். திருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரிவது. அ- திருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரியாதது. மரணமும் யோகமும் கண்ணுக்குத் தெரியாமல் வரக்கூடியது. அமிர்தயோகம், சித்தயோகம் என்பதுபோல மரணயோகமும் ஒரு யோகம்தான்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும். ராகு தம்பதி சகிதம் காட்சியளிக்கிறார். பால் அபிஷேகத்தின்போது ராகுமீது ஊற்றப்படும் பால் நீலநிறமாகக் காட்சியளிக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் (ஜென்மத்தில்) கடந்த ஒன்றரை வருடமாக இருக்கும் ராகு இப்பொழுது 12-ஆமிடமான ரிஷபத்திற்கும், ஏழிலிருக்கும் கேது 6-ஆமிடமான விருச்சிகத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் இடங்களைவிட இப்பொழுது மாறுமிடங்கள் மிக யோகமான இடங்கள்- அதிர்ஷ்டமான இடங்களாகும். முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்துவார்கள். பழைய கடனை அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, வட்டி வாயைக் கட்டி, நல்ல எதிர்கால வாழ்வுக்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். 12-ஆமிடமும் 6-ஆமிடமும் அசுப ஸ்தானம். அந்த அசுப ஸ்தானங்களில் அசுப கிரகங்களான ராகு- கேது வருவதால் டபுள் மைனஸ்= பிளஸ் எனும் விதிப்படி அந்த கெட்ட இடத்துப் பலனைக் கெடுத்து நல்ல பலனாக- நன்மை தரும் பலனாக மாற்றியமைத்து விடுவார்கள். வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். சிலர் மருத்துவப் படிப்புக்காக ரஷ்யாவுக்குப் போகலாம். அல்லது விரும்பிய வெளிநாட்டுக்குப் போகலாம். அப்படி மேற்படிப்புக்காகவும் வெளிநாட்டுப் படிப்புக்காகவும் அரசுக் கடனுதவியும் வங்கிக் கடனுதவியும் பெறலாம். டிசம்பரில் மிதுன ராசிக்கு 8-ல் சனி வரப்போவதால் அட்டமச்சனி ஆரம்பம். அதனால் வெளிநாட்டுப் பயணமும் கடனுதவியும் எதிர்பார்க்கலாம். அதாவது, பிறந்த குடும்பத்தைவிட்டு தூரம்- தொலைவான இடங்களுக்குப் போகும் வாய்ப்பு உண்டாகுமென அர்த்தம். படிப்பை முடித்தவர்கள் அட்டமச்சனிக் காலத்தில் வெளிநாட்டிற்குப்போய் வேலை பார்க்கவோ ஷெட்டிலாகவோ வாய்ப்புண்டாகும். அதாவது, இடப்பெயர்ச்சி. உள்ளுரிலிருப் பவர்கள் அட்டமச்சனிக் காலத்தில் சொந்த ஊரைவிட்டு வேலைக்காக வெளியூர் போகும் நிலையுண்டாகலாம்.

பரிகாரம்: தேனி வழி உத்தமபாளையத்தில் (தென்காளஹஸ்தி) ராகு- கேதுவுக்குத் தனித்தனி சந்நிதி உண்டு. அங்கு சென்று வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருக்கும் ராகு இப்பொழுது 11-ஆமிடத்துக்கும், 6-ல் இருக்கும் கேது 5-ஆமிடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். முன்ஜென்மத்தில் செய்த பாவதோஷமும் சாபதோஷமும் விலகி விமோசனம் உண்டாகும். முன்னோர்கள், தாத்தா- பாட்டி, பாட்டனார் சொத்துவகைகளில் இருக்கும் சிக்கல்களும் பிரச்சினைகளும் நீங்கி நல்ல தீர்வு ஏற்படும். பிதுரார்ஜித சொத்துகள் இல்லாதவர்களுக்கு அதற்கு சமமான அளவு சுயமுயற்சியால் தேடிக்கொள்ளலாம். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், மாந்த்ரீகம், தெய்வீகம் போன்ற கலைகளில் ஈடுபட்டுப் பெருமை அடையலாம். சீரும் சிறப்பும் அடைய லாம். அருள்நிலை பெற்று அருள்வாக்கு சொல்லி பொருள் சேர்க்கலாம். செல்வாக் குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்டுதல், அறச்சாலை நிறுவுதல், டிரஸ்ட் ஏற்படுத்துதல், ஆலயத் திருப்பணி செய்தல் போன்ற புண்ணிய காரியங்களில் இறங்கி பெருமை சேர்க்கலாம். உங்களின் நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் கைகூடும். சகோதரவகையில் சங்கடங்களும் மனவருத்தங்களும் ஏற்படலாம். உங்கள்மீது போட்டியும் பொறா மையும் கொள்ளும் நிலைகளையும் சந்திக்கலாம். என்றாலும் உங்களின் சுயநல மற்ற மனதும் நடவடிக்கையும் அவற்றை விரட்டும்.

பரிகாரம்: பரமக்குடி அருகிலுள்ள நயினார் கோவில் சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் இருக்கும் ராகு 10-ஆமிடத்துக்கும், 5-ல் இருக்கும் 4-ஆமிடத்துக்கும் வந்திருக்கிறார்கள். 4-ஆமிடத்துக் கேதுவும் 10-ஆமிடத்து ராகுவும் உங்கள் கவலைகளைப் போக்கு வார்களா? கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங் களுக்கு மருந்து போடுவார்களா என்றெல் லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம். 10-ஆமிடம் தொழில், வாழ்க்கை, பணி ஆகியவற்றைக் குறிக்குமிடம். 4-ஆமிடம் பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி, தாயார் ஆகியவற்றைக் குறிக்கு மிடம். 10-ல் ராகு வருவதால் தொழில்து றையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தொழிலதிபர்கள் சங்கம், வர்த்தகர்கள் சங்கம், லயன்ஸ் கிளப், காஸ்மோபாலிட்டன் கிளப், ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகள் தேடிவரலாம். அரசியல்துறை சார்ந்தவர்களுக்கும் புதிய பணிகளும் பொறுப்புகளும் வரலாம். ஜாதக தசாபுக்திகள் யோகமாக அமைந்தால் தலை மைப் பொறுப்பும் வகிக்கலாம். 4-ஆமிடக் கேது உங்களுக்கு வீடுவாசல், சொந்த இடம் வாங்கும் யோகத்தைத் தரும் அல்லது ஏற்கெனவே வாங்கிப்போட்ட மனையிடம் தற்பொழுது பலமடங்கு விலையேற்றத்தால் மதிப்பு கூடும். அதில் சிலவற்றை விற்று மீதியில் வீடு கட்டலாம்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகிலுள்ள செவலூர் சென்று பூமிநாதசுவாமியையும் ஆரணவல்லியம்மனையும் வழிபடலாம். இது வாஸ்துக் கோவிலாகும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு இதுவரை 10-ல் இருக்கும் ராகு இப்பொழுது 9-ஆமிடத்துக்கும், 4-ல் இருக்கும் கேது 3-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். 5-ஆம் இடத்திற்கு 5-ல் ராகு நிற்க, அவரைக் கேது பார்ப்பது ஒருவகையில் புத்திர தோஷம், நாக தோஷம் எனப் படும். நவம்பர் மாதம் குரு 5-க்கு மாறி ராகுவைப் பார்ப்பார். அக்காலம் தோஷ நிவர்த்தி ஏற்படும். உங்களது செயலிலும் முயற்சியிலும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்கெனவே செய்த முயற்சியில் வெற்றியும் கிட்டாமல், தோல்வியும் இல்லாமல் சமமாக இருந்த நிலை ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மாறி, வேகமும் விறுவிறுப்பும் ஏற்படும். ஆதாயமும் லாபமும் கிடைக்கும். விஐபிக்களின் தொடர்பும் அறிமுகமும் உண்டாகும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் கேது உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவார். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும். திருமணம், வாரிசு, வேலை வாய்ப்பு போன்ற நல்ல காரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலைரீதியாக இடமாற்றம் உண்டாகலாம். அல்லது ஊர் மாற்றம் அமையலாம். தொழில்துறையில் உள்ளவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் விலகும். சிலரது அனுபவத்தில் பிள்ளைகளைப் பற்றிய வருத்தமும் கவலையும் ஏற்பட்டிருக்கலாம். அந்த கவலைகளும் வருத்தங்களும் மாறும். குலதெய்வப் பிரார்த் தனைகள் நிறைவேறும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு சிறந்தது. கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிக்கு 9-ல் இருக்கும் ராகு இப்பொழுது 8-ஆமிடத்துக்கும், 3-ல் இருக்கும் கேது 2-ஆமிடத்துக்கும் மாறுகி றார்கள். 8-ஆமிடமென்பது கெட்ட இடமெனினும், இயற்கையில் ராகு கெட்ட கிரகமென்பதால் டபுள் மைனஸ் ஒரு பிளஸ் என்பதுபோல, டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ் என்பதுபோல , "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்னும் ஜோதிட விதிப்படி உங்களுக்கு எல்லாம் நல்லவிதமாக நடக்கும். 8-ஆமிடமென்பது ஏமாற்றம், இழப்பு, சஞ்சலம், தோல்வி ஆகியவற்றைக் குறிக்குமிடம். அங்கு ராகு வருவதால் இவற்றையெல்லாம் கெடுக்கும். அதனால் 8-ஆமிடத்துக் கெட்ட பலன்க ளெல்லாம் கெட்டுப்போவதால் உங்களுக்கு நல்லதுதானே? 8-ஆமிடம் 9-ஆமிடத்துக்கு 12-ஆமிடம் என்பதால் தகப்பனார், பூர்வ புண்ணியம், பிதுரார்ஜித சொத்துகளுக்கு கெடுபலன்கள் நடக்குமெனலாம். எல்லாருக் கும் நடக்கும் என்பதில்லை. ராகு தசை, ராகு புக்தி நடப்பவர்களுக்கு மட்டும் மேற்காணும் மைனஸ் பலன்கள் நடக்கும். மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் 2, 9, 11-க்குரிய தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு 8-ஆமிடக் கெடுபலன்கள் மாறி அதிர்ஷ்டப் பலனாக மாறும். 2-ல் உள்ள கேது சிலருக்கு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி னாலும், கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் எனும் அடிப்படையில் நல்ல தீர்வு ஏற்படும். திருமணமாகி விவாகரத்தை சந்தித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் மறுமண யோகம் அமையும்.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று அபிஷேகப் பூஜைசெய்யலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் சொந்த வீட்டில் ஆட்சிபெறுவதால் மறைவு தோஷமில்லை. மேலும், செவ்வாய் கேதுவின் சாரமாகிய அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ராகு சுக்கிரன் வீட்டிலும் (7-ரிஷபம்) கேது ஜென்ம ராசியிலும் மாறுவதால் செல்வாக்கும் திறமையும், பெருமையும் பாராட்டும் உண்டாகும். திருமணத் தடை விலகும். ஜென்ம ராசியிலும் ஏழிலும் கேது- ராகு இருப்பது நாகதோஷம் எனப்பட்டாலும் திருமணத் தடைகள் நீங்குமென்பது ஒரு கருத்தாகும். அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல. ராகுவைப்போல கொடுப்பாரில்லை, கேதுவைப்போல கெடுப்பாரில்லை எனச் சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம்- கேது இருப் பதைக் கெடுப்பான், இல்லாததைக் கொடுப் பதுதான். ராகு- கேது, சனி ஆகிய மூன்று கிரகங் களுமே எதிர்மறை கிரகங்கள் எனப்படு வார்கள். இணைந்திருக்கும் குடும்பத்தைப் பிரிக்கவும் செய்வார்கள்; பிரிந்திருக்கும் குடும்பத்தை இணைக்கவும் செய்வார்கள். இதற்குப் பெயர்தான் மாற்றம் எனப் படும். மாற்றம் என்பது ஏமாற்றமாகவும் இருக்கலாம்; இறக்கமாகவும் இருக்கலாம். அந்த மாற்றம் எந்த மாற்றமாக இருந்தாலும் 2020, டிசம்பர் சனிப்பெயர்ச்சிவரை சஞ்சல மாகவும் குழப்பமாகவும் இருந்தாலும் அதன்பிறகு மேடுபள்ளம் இல்லாத- ஸ்பீடுபி ரேக்கர் இல்லாத நெடுஞ்சாலையில் பயணம் போவதுபோல, உங்கள் வாழ்க்கையும் தொழிலும் பொருளாதாரப் பணப்புழக்கமும் திருப்திகரமாக அமையும்.

பரிகாரம்: விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் சனிக்கிழமைதோறும் பைரவர் சந்நிதியில் மிளகு தீபமேற்றவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடந்தாலும் குருவோடு கூடியதாலும், குரு வீட்டிலிருப் பதாலும் உங்களுக்குப் பொங்கு சனிதான். அது முதல் சுற்றாக இருந்தாலும்- மூன்றாம் சுற்றாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். "நல்லாரைக் காண்பதுவும் நன்று நல்லாரோடு இணங்கியிருப்பதுவும் நன்று. நல்லார் சொல் கேட்பதுவும் நன்று' என்று சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். குரு நல்லார் மட்டுமல்ல, ராசிநாதனும் ஆவார். எந்தவொரு ஜாதகத்திலும் ராசிநாதனும் லக்னநாதனும் நல்லவர்கள்தான்; பலம் பெற்றவர்கள்தான். ஒரு மரத்தை அண்டி வாழவேண்டும் அல்லது ஒரு மலையை அண்டி வாழவேண்டும் என்பார்கள். அது ஒரு பாதுகாப்பு. அதுபோல, நல்லாரோடு இருப்பதும் ஒரு பாதுகாப்பு. நல்லார் பொருட்டு ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. பல வருடங் களுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் தடுமாறி மதில் சுவரில் மோதி ஒரு பயணியர் பேருந்து நின்றது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பேருந்தை பிரேக் பிடித்துக் கடலுக்குள் விழாமல் நிறுத்திக்கொண்டார். பயணம் செய்தவர்கள் எல்லாரும் தப்பித்து வெளி யேறிவிட்டார்கள். பேருந்தையும் பின்னோக் கித் தள்ளி கடலில் விழாமல் தடுத்தார்கள். யாரோ ஒரு நல்லவர் அந்தப் பேருந்தில் இருந்திருக்கவேண்டும்; அவர்பொருட்டு எல்லார் உயிரும் காப்பாற்றப்பட்டது. கலவரம் நடக்குமிடத்தில் நடந்து போகிறவருக்கும் போலீஸ் தடியடி கிடைக்கும். இதுதான் சகவாச தோஷம் என்பது.

பரிகாரம்: தேனி அருகிலுள்ள குச்சனூர் சென்று சனி பகவானை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். இது விரயச்சனி எனினும் குரு வீட்டில் குருவோடு இருப்பதால், அதை சுபவிரயமாக ஏற்றுக்கொள்ளலாம், மாற்றிக்கொள்ளலாம். 12-ல் இருக்கும் கேது 1-ஆம் தேதி 11-ஆமிடத்துக்கு மாறுகிறார்; ராசியைப் பார்க்கிறார். அதேபோல, 6-ல் இருக்கும் ராகு 5-ஆமிடத்துக்கு மாறுவார். மகர ராசிக்கு ராகு- கேது பெயர்ச்சி யோகப் பெயர்ச்சியாக அமையும். செய்தொழில் விருத்தி, பொருளா தார முன்னேற்றம், தாராளமான பணப் புழக்கம், ஏராளமான நன்மைகள் போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம். திருமணத் தடை விலகும். பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். வாரிசு இல்லாதோர் வாரிசு யோகம் அடைவர். 12-ல் உள்ள குருவும் சனியும் சுபமங் கள விரயங்களை செயல்படுத்து வார்கள். கௌரவப் பதவிகளைத் தருவார்கள். ஜாதி சங்கங்களிலும் சமுதாய அங்கங்களிலும் பொறுப்புள்ள பங்குகளிலும் கௌரவப் பதவிகள் தேடிவரும். அரசியலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆலயத் திருப் பணி, அறக்கட்டளை போன்றவகையில் ஈடுபாடு உண்டாகும். சிலர் குலதெய்வக் கோவில் கட்டுதல், திருப்பணியில் அங்கம் வகித்தல், பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் போன்ற நற்காரியங்களில் ஈடுபடலாம். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான ஈடுபாடுண் டாகும். தொழில் முயற்சிகள் கைகூடும்.

பரிகாரம்: மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால் சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றுங்கள். திருப்பத்தூர் அருகில் பெரிச்சியூர் சென்று ஒற்றை சனீஸ்வரரை வழிபடலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். 11-க்குரிய குரு 11-ல் ஆட்சிபெறுகிறார். செப்டம்பர் 1-ல் 11-ஆமிடத்துக் கேது 10-லும், 5-ஆமிடத்து ராகு 4-லும் மாறுகிறார்கள். அதனால் உங்கள் வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் மாற்றங்கள் உருவாகும். அந்த மாற்றங்கள் ஏற்றமான மாற்றமாக அமையும். தொழில் துறையில் பிற இனத்தவரின் கூட்டுசேர்க்கை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் இஸ்லா மியர்களின் தொடர்புகள் ஏற்பட இடமுண்டு. அவர்கள்மூலமாக உதவிகள் கிடைப்பதற்கும் வழி உண்டு. ராகு- கேது பெயர்ச்சி கேந்திர ஸ்தானங்களில் அமர்வது யோகமாகும். சுபர்கள் திரிகோணம் பெறவேண்டும். அசுபர்கள் கேந்திரம் பெறவேண்டும். உண்மையில் கிரகங்களில் சுபர், அசுபர் எனக் குறிப்பிடுவது தவறு. ஞானசம்பந்தப் பெருமான் பாடியமாதிரி "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல' என்பதுபோல, நவகோள் களும் நல்லவையே. அவரவர் ஜாதக தசா புக்தி அமைப்பின்படி நற்பலனோ துர்பலனோ நடத்துவார்கள். திரிகோண கிரகங்கள் அதிர்ஷ்டமான யோகத்தையும் எதிர்பாராத நன்மைகளையும் செய்வார்கள். கேந்திரங் களில் சஞ்சாரம் செய்யும் கிரகங்கள் கடின முயற்சிக்கேற்பப் பலனைத் தருவார்கள். அதைத்தான் "திருவள்ளுவர் தெய்வத்தாலா காது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் சொந்த வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சனி, கேது சம்பந்தம்; ராகு பார்வை. சனி சம்பந்தம் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் தொழில் அமைப்புப் பற்றியும் அற்புதமான திட்டங் களை உருவாக்கும். எனினும், கேது சம்பந்தப் படுவதால் மதில்மேல் பூனையாக குழப்பத்தை யும் தடுமாற்றத்தையும் தரும். ஆர்வக் கோளாறினால் வாக்குறுதிகளை அள்ளி வீசு வீர்கள். ஆனால், அதை செயல்படுத்துவதில் நீங்களும் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்பிவிடுவீர்கள். இதை ஆர்வக் கோளாறு என்பதா? ஆசைக்கோளாறு என்பதா? இது உங்கள் ராசிக்கே ஏற்பட்ட குணாதிசயமாகும். குளத்திலுள்ள ஒரு மீன் ஒரு விநாடிகூட ஓய்வாக இருக்காது. சுறுசுறுப்பாக நீந்திக் கொண்டே இருக்கும். எதிர்கால முன்னேற்றத் தைக் கருதிய அற்புதமான திட்டங்களை எல்லாம் வகுத்தாலும் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அப்பா சொன்னார், அம்மா சொன்னார், மனைவி, மக்கள் சொன்னார், நண்பர் சொன்னார் என்று ஸ்டேடிமைன்ட் இல்லாமல் தடுமாறுவீர்கள். இதுவே உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தடைக்கல் லாகும். அதனால்தான் திருக்குறளில் "எண்ணித் துணிக கருமம்' என்று சொல்லப்பட்டது. 10-ஆமிடத்தில் சனி, கேதுவும் ராகு பார்வை யும் இருக்கும். 1-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு ராகு உங்கள் ராசியைப் பார்ப்பார். 9-க்குரிய செவ்வாய் கேது சாரம் பெறுவதால் தகப்பனாரே உங்கள் திட்டங்களை திசைமாற்றிவிடுவார்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்று. வாடிப்பட்டி பைபாஸ் ரோட்டில் நவமாருதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அமாவாசையன்று சென்று வழிபடலாம்.