ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 4,
பூரம்- 1, 2.
செவ்வாய்: பூரம்- 4,
உத்திரம்- 1.
புதன்: உத்திரம்- 4,
அஸ்தம்- 1.
குரு: அவிட்டம்- 3.
சுக்கிரன்: அஸ்தம்- 3, 4, சித்திரை- 1.
சனி: உத்திராடம்- 3.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 3.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
29-8-2021- ரிஷபம்.
31-8-2021- மிதுனம்.
3-9-2021- கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்கு செவ்வாய் 1, 8-க்குடைய வர். அவர் 5-ல் திரிகோணம் பெற்று 5-க்கு டைய சூரியனோடு சேர்ந்திருக்கிறார். யாருக் கும் புலப்படாமல் இருந்த உங்களது திறமை கள் பலரும் அறியும்படி வெளிப்படும். எண்ணங்களிலும் திட்டங்களிலும் இருந்த தடை தாமதங்கள் விலகும். 8-க்குடையவர் 5-ல் நின்று 8-ஆமிடத்தையே பார்க்கிறார். திடீர் ராஜயோகம் ஏற்பட இடமுண்டு. நீண்ட நாட்களாக நடைபெறாமலிருந்த நற்காரியம் ஒன்று இப்போது நடைபெறும். சஞ்சலமும் சங்கடமும் நிவர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செயல்பட்ட முயற்சி கள் பலன் தரும். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. செலவுகள் ஒருபுறம் இருந்து கொண்டிருந்தாலும், அவற்றை சமாளிக்கும் வகையில் வரவுகளும் வரும் என்பதில் சந்தேகமில்லை. 6-க்குடைய புதன் ஆட்சி பெறுகிறார்; உச்சமும் அடைகிறார். சில தேவைகளுக்காக கடனை எதிர்பார்க்கலாம். 9-க்குடைய குரு 11-ல் நின்று ராசிநாதனைப் பார்ப்பதால், எத்தனை கடனிருந்தாலும் மரியாதையோ கௌரவமோ பாதிக்காது. நபிகள் நாயகம், "எவன் ஒருவன் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க நினைக்கிறா னோ அவனுக்கு அல்லா எந்த ரூபத்திலாவது கடனை அடைக்க வழிவிடுவார். அப்படித் திருப்பித்தர நினைக்காதவனுக்கு சாப்பாட் டுக்கே வழியில்லாமல் செய்துவிடுவார்' என்று குர்- ஆனில் கூறியிருக்கிறார். எனவே நாணயமாக நடப்பவர்களுக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் நிம்மதியாக வாழ இறைவன் துணை நிற்பார்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு சுக்கிரன் 1, 6-க்குடையவர். அவர் 5-ல் நீசம் பெறுகிறார். அவருடன் 5-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் என்பதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படு கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பது போல உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதுவுமில்லை' என்று கண்ணதாசன் எழுதினார். ஆனால் உங்களுக்கு இறைவன் நினைப்பதையெல்லாம் நிறை வேற்றுவார். சில நேரங்களில் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக நேரமும் காலமும் உங்களுக்கு உறுதுணை யாக அமையும். 10-ல் நிற்கும் குரு 2-ஆமிடத் தைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக் குறைக்கு இடமிருக்காது. அதேசமயம் வரவும் செலவும் சமமாக அமையும். ஜென்ம ராகு- சப்தம கேது நாகதோஷத்தைக் குறிக்கும். எனவே தாமதத் திருமணம் உண்டாக லாம். ஜனன ஜாதகத்தில் 7-ஆமிடம் வலு விழந்திருந்தாலும், களஸ்திரதோஷமிருந் தாலும் அதற்குப் பரிகார ஹோமங்கள் செய்து தோஷநிவர்த்தி செய்துகொள்ளலாம். 7-க்குடைய செவ்வாய் 4-ல் கேந்திரம் பெற்று குருவின் பார்வையைப் பெறுகிறார். அதனால் குருமங்கள யோகம் ஏற்படுகிறது. மாங்கல்ய தோஷமும் களஸ்திர தோஷமும் விலகும். 2-க்குடையவர் 5-ல் உச்சம் பெறுவது நன்மை தரும். குடும்பத்தில் சங்கடம் தீரும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் கேந்திரமாகி ஆட்சி, உச்சம் பெறுகிறார். அட்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெறுவதால் அட்டமத்துச்சனி தோஷம் பாதிக்காது. என்றாலும் சிலருக்கு இடப் பெயர்ச்சி, குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். அது முன்பிருந்ததைவிட ஏற்றமாக பெயர்ச்சியாகவும் அமையும். குரு 10-க்குடைய வர்- 9-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். தர்மகர்மாதிபதி யோகம் உங்களைப் பெருமளவில் வழி நடத்தும். நீங்கள் பிறருக் குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முனைப் போடு செயல்படுவீர்கள். அவ்வாறு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்தால் இறைவனே உங்களுக்கு துணைபுரிவார். உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் கேடு கெடுதிக்கு இடமில்லை. எனினும் சில நேரங்களில் சிலகாரியங்களை கடின முயற்சிக்குப் பின் நிறைவேற்றவேண்டியது வரும். 11-க்குடைய செவ்வாய் 3-ல் மறைவதால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளி டையே கருத்து வேறுபாடுகள் எழலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் தோன்றலாம். 3-ஆமிடத்தை குரு பார்ப்பதாலும், 3-ல் சூரியன் ஆட்சி என்பதாலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் தெளி வும் சமயோசித செயல்படும் பிறக்கும், அதனால் குறுக்கீடுகளும் தடைகளும் விலகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-க்குடைய குரு 8-ல் மறைகிறார். அது ஒருவகையில் ப்ளஸ் பாயின்ட்தான் என்றாலும், குரு 9-க்குடையவராகி 8-ல் மறைவது ஒருவகையில் மைனஸ் பாயின்ட், உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் தாமதம் நிலவும். கடும் பிரயாசைப்பட நேரிடும். எல்லாம் சரிவர செய்தும் காரிய தாமதம் ஏற்படுவது மனதில் குழப்பதை உண்டாக்கலாம். ஜெய ஸ்தானாதி பதி சுக்கிரன் 3-ல் மறைவு, நீசம். அதனால் வெற்றி தாமதமாகிறதோ என்ற சலனம். என்றா லும் 3-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் என்பதால் உங்கள் முயற்சிகளை நிறுத்த மாட்டீர்கள். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்ற குறளுக்கேற்ப, மெய்வருத்தி செயல்படு வீர்கள். 9-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் 10-க்கு டைய செவ்வாயின் சாரம் பெற்று செவ்வாயைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே பலமுறை குறிப்பிட்டதுபோல, ஒரு ஜாதகத்தில் எத்தனையோ யோகங்கள் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் இருந்தால் அந்த ஜாதக ருக்கு தோல்வியில்லை; வெற்றியுண்டு. சூரியனை குரு பார்ப்பதால் தந்தை- மகன் உறவு பலப்படும். செவ்வாயையும் குரு பார்ப்பதால், தாமரை இலை தண்ணீர்போல நிலவிய சகோதர பாசம் பாலும் தண்ணீரும்போல கலந்து நிறைந்து திருப்திகரமான பலனைத் தரும். வாக்கு, தனம், குடும்பம் கொண்டாடத்தக்க வகையில் அமையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சி. ராசிநாதன் ஆட்சி என்பதே ஒரு பலம். அவருடன் திரிகோணாதிபதி (9-க்கு டையவர்) செவ்வாய் இணைவது மற்றொரு பலம். இருவருக்கும் திரிகோணாதிபதியான (5-க்குடையவர்) குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது மேலும் பலம். ஆக இந்த யோகங் கள் எல்லாம் உங்களை சொல்லி கில்லியடிக்க வைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிக் கொடி நாட்டலாம். கணவன் அல்லது மனைவிவகையில் உதவி, ஒத்தாசை, ஆதரவு, அனுகூலம் எல்லாவற்றையும் எதிர்பார்க்க லாம். சிலருக்கு உடன்பிறப்புகள்வகையில் பிரச்சினைகள், சங்கடங்கள் நிலவி, பிரிந்திருக்கலாம். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு சகோதர- சகோதரி ஒற்றுமையைத் தருவார். 10-க்குடைய சுக்கிரன் நீசம் என்றா லும், 2-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் என்பதால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி றது. எனவே தொழில்துறையில் ஒரு வேலை முடியும் தறுவாயில் மற்றொரு வேலை அமைந்து தொழில் இயக்கம் பாதிக்காமல் செயல்படும். வழவழப்பான தார்ரோட்டில் வாகனம் செல்வதுபோல வேகத்தடையின்றி துரிதப் பயணமாக அமையும். 7-ஆமிடத் துக் குரு குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்களை உண்டாக்கித் தருவார். 4-ல் கேது- சிலநேரம் தனக்கோ தாயாருக்கோ உடல்நலக்குறைவுகளை உண்டாக்கலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிக்கு புதன் 1, 10-க்குடையவர். அவர் ஜென்ம ராசியில் ஆட்சி, உச்சம். 9-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. எனவே 9, 10-க்குடைய தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் நற்பலன்கள் உண்டாகும். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநிலம் சென்று வேலைபார்க்கும் அமைப்பு ஏற்படும். என்றா லும் கூடுதல் பொறுப்புகளும் ஊதிய உயர்வும் உண்டாகும். சிலர் சம்பளத்திற்கு வேலை பார்த்திருந்தால் ஜனன ஜாதகத்தில் சாதகமான கிரக அமைப்புகள் இருந்தால் தொழில் நடத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். அயராத உழைப்பாலும் முயற்சியாலும் முன்னேற்றமடையலாம். 12-ல் சூரியன் மறைவு, ஆட்சி. சிலருக்கு தகப்பனார்வழியில் விரயங்களைச் சந்திக்க நேரும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படலாம். எனினும் 8-க்குடையவர் 12-ல் மறைவதால் "கெட்டவன் கெட்டிடில் ராஜயோகம் கிட்டிடும்' என்பதற்கிணங்க திடீர் நற்பலன்களும் நடக்கும். 7-க்குடைய குரு 6-ல் மறைவு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேற்றுமை, சச்சரவு, வாக்குவாதம், பிரச்சினைகள் உருவாகலாம். அப்படியில்லாதவர்கள் வெளியூர் சென்று வேலைபார்த்து குடும் பத்தைவிட்டுப் பிரிந்திருக்கலாம். களஸ்திர காரகன் களஸ்திர ஸ்தானத்தைப் பார்ப்ப தால் சச்சரவு இருந்தாலும், ஒற்றுமை பாதிக்கா மல் வாழ்க்கை ஓடும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு சுக்கிரன் 1, 8-க்குடையவர். அவர் 12-ல் மறைவு, நீசம். 8-க்குடையவர் 12-ல் மறைவது ப்ளஸ் என்றா லும், 1-க்குடையவர் 12-ல் மறைவது மைனஸ். ஒரு சிலருக்கு வேலை பார்த்துவந்த இடத்தில் சக ஊழியருடன் பிரச்சினை- ஒருசிலருக்கு வேலையே பிரச்சினை போன்றவை தலைவலி யாக அமையலாம். அந்த காலத்தில் நகரத்தார் வீடுகளில் புதிதாக வேலைக்குச் சேர்ப்பவர் களை எடைபோடுவதற்காக பணம், பொருள், பொன் போன்றவற்றை ஆங்காங்கே போட்டு வைப்பார்களாம். அதைத் தவறாமல் எடுத்து உரிமையாளரிடம் கொடுப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். இது வேலைக்காரர்களுக்கு வைக்கும் சோதனை. அது மாதிரி உங்களுடைய நாணயம் ஒழுக்கம் எல்லாவற்றுக்கும் கிரகங்கள் சோதனை வைக்கும். அதில் நீங்கள் ஜெயிக்கப் போராடவேண்டும். 9-க்குடைய புதன் 12-ல் ஆட்சி, உச்சம். அலைச்சல் உண்டாகலாம். ஆனால் அதற்கேற்ற ஆதாயம் குறையலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவும். குடும்பத்திலும் சங்கடம் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக சாதகமான பலன்கள் தாமதமாகும். என்றாலும் ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு உங்களது முயற்சிகளில் உத்வேகத்தையும் தளராத நிலையையும் தருவார். 11-ல் உள்ள சூரியனையும் செவ்வாயையும் குரு பார்க்கி றார். திட்டங்களில் போராடினாலும் வெற்றிவாகை சூடலாம். எண்ணம், வைராக்கியம் உறுதியாக இருந்தால் செயல் முழுவெற்றியாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் பலம் பெறுகிறார். 10-க்குடைய சூரியன் ஆட்சி. வாழ்க்கை, தொழில் எல்லாவற்றிலும் நற்பலன்கள் உண்டாகும். குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் வேலை, உத்தியோகம், தொழில் இவற்றில் முன்னேற்றகரமான சூழல்கள் அமையும். 11-ல் ஆட்சி, உச்சம் பெறும் புதன் உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் வெற்றியைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். ராசியை ராசிநாதனே பார்ப்பது சிறப்பு. அதாவது பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தமாதிரி! தொழிலில் போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கலாம். ஜென்ம கேது ஒரு சிலருக்குப் படுத்தினாலும், ராசிநாதனை குரு பார்ப்பதால் எல்லாவகையிலும் உங்களுக்குப் பாதுகாப்பு ஏற்படும். ராசிநாதன் செவ்வாய் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். 5-க்குடைய குரு 4-ல் கேந்திரம். வீடு, மனை, வாகனம் பற்றிய உங்களது எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் நிறைவேறும். சிலர் வாகனத் திற்காக கடன் வாங்கலாம். சிலர் கட்டடம் சம்பந்தமாக கடன் வாங்கலாம். ஜென்மத் தில் உள்ள கேதுவும், 7-ல் உள்ள ராகுவும் கணவன்- மனைவிக்குள் சஞ்சலங்களை ஏற்படுத்தலாம். ஒருசிலருக்கு தாமத திருமணத்தை உருவாக்கலாம். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். எதிர்கால வாழ்வாதாரம் பலப்படும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச் சனியில் கடைசிக்கூறு பாதச் சனி நடக்கிறது. சனி 2-ல் ஆட்சி. எனவே இந்த பாதச் சனியின் பாதிப்புகள் கடுமையாக வாட்டாது என்று நம்பலம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நன்மதிப்பு உயரும். ராசிநாதன் 3-ல் மறைந்தாலும் 5-க்குடைய திரிகோணாதிபதி செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். எனவே உங்களுக்கு 3-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிக்காது. சகோதர- சகோதரி ஒற்றுமை பலப்படும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட வர்களும் அல்லது நீங்கள் தவறாகப் புரிந்திருந் தாலும் "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்ற கருத்தின் அடிப்படை யில் செயல்படுங்கள். இன்னொரு ஜென்மமா பிறக்கப் போகிறோம்? இருக்கும்வரை அனுசரித்துச் சென்றால் சங்கடங்களைத் தீர்க்கலாம். உங்கள் கனவுதிட்டம் நிறைவேறும். 10-ல் புதன் ஆட்சி, உச்சம். தொழிலில் முன்னேற்றமும் திருப்திகரமும் எதிர்பார்க்க லாம். 6-ஆமிடத்து ராகு போட்டி, பொறாமை களை விலக்கி ஜெயத்தைத் தருவார். ராசிநாதன் குரு 11-ஆமிடத்தைப் பார்ப்பதும் வெற்றிக்கு ஒரு காரணம். கட்டடம் அல்லது மனை சம்பந்தப்பட்ட காரியங்கள் தாமத மின்றி செயல்படும். வேகத்தடை இல்லாத பைபாஸ் ரோட்டில் பயணம் செய்வதுபோல தடையின்றி செயலாற்றல் பெறலாம். பிள்ளைகளின் எதிர்கால திட்டத்திற்கு சேமிப்பு முறையைக் கையாளுவீர்கள் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் செய்யலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாகவும் வக்ரமாகவும் இருக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம். 9-க்குடைய புதனும் 10-க்குடைய சுக்கிரனும் 9-ல் சேர்க்கை- தர்மகர்மாதிபதி யோகம். ஏழரைச் சனி நடந்தாலும் சனி ராசிநாதன் என்ற அடிப்படையில் பாதிப்பு களைத் தரமாட்டார் என்று நம்பலாம். பொதுவாக சனி கெட்டவர் கிடையாது. அவரவர் வினைக்கேற்ற பலனைத் தவறாமல் தருவதில் நியாஸ்தர் என்றுகூட சொல்லலாம். "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்; அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் எவரெவர் குதவினர்- எவரெவர்க்குதவிலர்; தவறெவர் நினைவது தம்மை உணர்வதுவே!' என்பது சொக்கநாத வெண்பா! எனவே பூர்வஜென்ம வினைப்படி நன்மை- தீமை களைத் தடையின்றித் தருவது சனியின் வேலை! 12-க்குடைய குரு 2-ல். ஒருசிலர் விரயம்செய்து லாபம் பார்க்கலாம். சிலர் ஆடம்பரத் தேவைக் காக விரயம் செய்யலாம். எந்த விரயமாக இருந்தாலும் அதை சுப விரயமாக மாற்றும் வழியை சிந்தித்துச் செயலாற்றுங்கள். 4-க்கு டைய செவ்வாய் 8-ல் மறைவு. தேகநலனில் கவனம் தேவை. அவ்வப்போது வைத்தியச் செலவுகள் வந்து விலகும். அலைச்சல்கள் அதிகமாகும். 5-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் புத்திரவகையில் சங்கடத்தை உண்டாக்கலாம். ஒருசிலருக்கு புத்திர சோகத்தை ஏற்படுத்தலாம். ஜனன ஜாதகத்தில் அப்படிப்பட்ட தோஷம் இருந்தால் உரிய பரிகாரம் செய்துகொள்வது அவசியம். சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் செய்து கொள்ளலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி நடக்கிறது. சனி ராசிநாதன் என்பதாலும், 12-ல் ஆட்சி என்பதாலும் மறைவு தோஷம் பாதிக்காது. 3, 10-க்குடைய செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் உங்களைப் பொருத்தவகையில் இந்த கோட்சார கிரகங்கள் அனுதாப அலையை வெற்றி அலையாக மாற்றும் என்று எதிர்பார்க்கலாம். 10-க்குடைய செவ்வாய் 10-ஆமிடத் தையே பார்க்கிறார். தொழிலில் வைராக்கியமும் விடாமுயற்சியும் உங்களை சாதனை புரியவைக்கும். சகோதரவகையில் தாமரை இலை தண்ணீர்போல ஒற்றுமை செயல்பட்டாலும், பாசமும் அன்பும் குறையாது. 7-ல் சூரியன் ஆட்சி. 2, 11-க்குடைய குரு பார்வை. புராணத்தில் ஒரு அசுரனை வதம் செய்ய கிருஷ்ணருக்கு உதவியாக பாமா இருந்தார். அதுபோல உங்கள் வெற்றிக்கு ஆணாக இருந்தால் மனைவியும், பெண்ணாக இருந்தால் கணவரும் துணையாக நிற்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஒருசிலர் "ஈகோ' காரணத்தால் பிரிந்திருந்தால், அவற்றை விட்டுக் கொடுத்து விலக்கி மீண்டும் சேரும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். சனி 12-ல் ஆட்சி பெற்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். சில காரியங்களை செலவுசெய்து சாதிக்க வேண்டும். சில காரியங்களை செலவில்லா மலே சாதிக்கலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி (குருவுக்கு) 12-ல் மறைவு. என்றாலும் சனி ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவு. ஆகவே பொருளாதாரத்தில் ஒரு செலவு- விரயம் செய்துதான் வரவை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக, ஒரு தொழிலில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதுபோல! 9-க்குடைய செவ்வாய் 6-ல் மறைகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக பங்காளிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவும். பூமி, வீடு சம்பந்தப்பட்ட வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய குருவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது தர்மகர்மாதிபதி யோகம். அது வழிநடத்தும். நீங்களும் நாணயம் தவறாமலும் நம்பியவர்களை ஏமாற்றாமலும் நடந்துகொண்டால் மதிப்பு, மரியாதை காப்பாற்றப்படுவதுடன், குருவருளும் திருவருளும் துணை நிற்கும். இறைவன் சோம்பேறிக்கும் நம்பிக்கைத் துரோகிக்கும் துணை நிற்கமாட்டார். எனவே உங்களுடைய செயல்களுக்கும் முயற்சி களுக்கும் காலமும் கடவுளும் காவலாக நின்று வெற்றியைத் தரும். இதுதான் தர்ம கர்மாதிபதி யோகத்தின் பலன். உங்கள் நேர்மையும் உங்களை வழிநடத்தும். அதேசமயம் விரவுலுக்கேற்ற வீக்கம் வேண்டும். எதிலும் அகலக்கால் வைக்காமல் சிந்தித்து செயல் பட்டு வெற்றியைத் தேடவேண்டும்.