ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 3, 4, கேட்டை- 1.
செவ்வாய்: ரேவதி- 4.
புதன்: அனுஷம்- 1, 2, 3, 4, கேட்டை- 1.
குரு: உத்திராடம்- 2, 3.
சுக்கிரன்: சுவாதி- 3, 4, விசாகம்- 1.
சனி: உத்திராடம்- 1.
ராகு: மிருகசீரிடம்- 1.
கேது: கேட்டை- 3.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
29-11-2020- ரிஷபம்.
1-12-2020- மிதுனம்.
4-12-2020- கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் பன்னிரண்டில் விரய ஸ்தானத்தில் மறைவு. ராசிநாதன் மறைவது மைனஸ். என்றாலும் அவரே 8-க்குடையவர் என்பதால் அது பிளஸ். அதேசமயம் 5-க்குடைய சூரியன் எட்டில் மறைவது பிளஸ். 6-க்குடைய புதன் ஏழில் சுக்கிரனோடு சேர்வது மைனஸ். எனவே கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை, உடன்பாட்டுக்கும் சுகத்துக்கும் பஞ்சமில்லை என்றாலும், எதிர்மறை விவாதங்களுக்கும் இடம் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் பிரிவுக்கு இடமில்லை. ரயில் தண்டவாளம் தனியாகச் சென்றாலும், ரயில் நிலையம் வரும்போது இணைவது போல வாழ்க்கைப் பயணம் ஓடும். சில விஷயங்களில் கணவனும் மனைவியும் ஒருமித்து முடிவுகள் எடுத்து செயல்படலாம். அதனால் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாகி வேடிக்கை பார்க்க நினைக்கும் வேண்டாதவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவார்கள். உங்கள் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் பொறாமை கொண்டவர்கள் வெறும் வாயை மென்று வீணாகப் போவார்கள். இதற்கு முக்கிய காரணம், 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் பரிவர்த்தனையாக இருப்பது. இது தர்மகர்மாதிபதி யோகப் பரிவர்த்தனை. ஜாதகத்தில் நூற்றுக்கணக்கான யோகங்கள் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆறில் மறைவு. என்றாலும் அவர் ஆட்சி பெறுவதாலும், 5-க்குடைய புதனோடு சேர்வதாலும் மறைவு தோஷம் நீங்கிவிடுகிறது. நவகிரகங்களில் ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் அவரவர் கிழமையில் பலம்பெறும். அதனால்தான் வாரத்திற்கு ஏழு கிழமைகள். ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுவுக்கும் கேதுவுக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலம், எமகண்டம் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ராகு தசை அல்லது ராகு புக்தி நடக்கும்போது ராகுகாலம் நல்லதே செய்யும். ஆனால் கேதுவுக்கு அந்தப் பெருமை இல்லை. அதனால்தான் ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்றார்கள். இதில் ஒரு விதிவிலக்கு உண்டு. என்னவென்றால் ராகு கொடுத்துக் கெடுக்கும்; கேது கெடுத்துக் கொடுக்கும். அதாவது நெல்லிக்காய் முதலில் துவர்க்கும்; நீர் பட்டதும் இனிக்கும். இப்படித்தான் நல்லோர் நட்பும்! அழ அழச் சொல்கிறவர்கள் அபிமானம் கொண்டவர்கள். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் சீரழிக்கச்செய்வார்கள். ஆகவே ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் குரு பார்வையால் உங்களைக் கெடுக்கமாட்டார்கள். நல்லதே செய்வார்கள். ராகுதசை, ராகுபுக்தி நடப்பவர்கள் எந்தச் செயலையும் ராகு காலத்தில் செய்யலாம். கேதுதசை, கேதுபுத்தி நடப்பவர்கள் எமகண்ட நேரத்தில் செயல்படுத்தலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு ஐந்தில் திரிகோணமாக இருக்கிறார். அவருடன் 5-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை மற்றும் ஆட்சி. சந்திர காவியம் என்ற ஜோதிட நூலில், 5, 9-க்கு அதிபர் பாபர் சுபரானாலும் பொன்போன்ற நன்மையே புரிவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது 5, 9 திரிகோண ஸ்தானங் கள். 4, 7, 10 கேந்திர ஸ்தானங்கள். திரிகோணம் லட்சுமி ஸ்தானம்; கேந்திரம் விஷ்ணு ஸ்தானம். ஒன்றாம் இடம் திரிகோணத்திலும்; சேரும் கேந்திரத்திலும் சேரும். திரிகோணம் பூர்வ புண்ணியவசமாகக் கிடைக்கும் அதிர்ஷ்டம்; கேந்திரம் முயற்சிக் கேற்ற பலன் தரும். அதனால் தான் வள்ளுவர், தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றார். ஒரு உண்மை வரலாறு. இரண்டு பிரம்மச்சாரிகள் வறுமையில் வாடினார்கள். குபேரலட்சுமியை நோக்கிக் கடும்தவம் செய்தார்கள். லட்சுமி அவர்கள்முன் தோன்றி, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு செல்வ யோகம் இல்லை. ஆனால் உங்கள் தவத்தின் பயன் வீண்போகாது. அடுத்த ஜென்மத்தில் உங்களை வந்துசேரும் என்றாள். அவர்கள் வருத்தமடைந்து தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டார்கள். அடுத்த ஜென்மம் என்றால் நீங்கள் மரணமடைந்து பிறகு பிறக்கவேண்டும் என்பதல்ல. சன்னியாசம் ஏற்றுக்கொண்டாலே அடுத்தபிறவி எடுப்பதற்கு சமம் என்றார். உடனே இருவரும் சன்னியாசம் பெற்றார்கள். சன்யாசம் ஏற்றதும் செல்வத்தின்மீது இருந்த பற்று விலகிவிட்டது. ஆனால் குபேரலட்சுமி அவர்களுக்குத் தர வேண்டிய நிதிகளை வழங்கிவிட்டாள். அந்த செல்வத்தைக்கொண்டு அவர்கள் விஜயநகரப் பேரரசை உருவாக்கினர். அவர்கள்தான் ஹரிஹரன், புக்கரன்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 9-ல் செவ்வாய் (10-க்குடையவர்) இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம். எனவே, குறையொன்றுமில்லை; மறைமூர்த்தி கண்ணா என்று பாடியதுபோல, உங்களுக்கு உண்மையிலேயே எந்தக் குறையும் இருக்காது. எந்தக் குறையும் அணுகாது. ஆனால் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மனக்குறை அல்லது கற்பனைக்குறை மட்டும் ஒருசிலருக்கு (எல்லாருக்கும் அல்ல) காணப்படலாம். அப்படிப்பட்டவர்கள் காலம் கண்போன்றது; கடமை பொன்போன்றது என்ற கொள்கையைக் கடைப்பிடித்தால், குறையெல்லாம் மறைந்து நிறைவாகி விடும். ஞானசம்பந்தப் பெருமான் நவ கோள்களும் நல்லநல்ல என்று பாடினார். 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், ஒன்பது கிரகங்களும் நல்லவைதான். யாருக்கு? இறைவனை நெஞ்சில் சுமக்கும் அடியாருக்கு! ஒருசமயம் (சல்) முகமது நபிகளை, கொடியவர்கள் கொலைசெய்யத் துரத்தி வந்தார்கள். நபிகள் நாயகம் ஒரு குகைக்குள் மறைந்துகொண்டார். எதிரிகள் வருவதற்குள் குகையின் வாயிலை மறைத்தபடி சிலந்தி வலை பின்னிவிட்டது. வந்தவர்கள் சிலந்திவலை சிதையாமல் இருப்பதைப் பார்த்து, உள்ளே ஆள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்படி பல உதாரணங்கள், உண்மைச் சம்பவங்கள் வரலாற்றில் உண்டு. ஆக, இறைவனை நாம் உண்மையாக நம்பினால் அவர் நம்மைக் கைவிடாமல் காப்பாற்றுவார்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் பலம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் அவருக்கு 5-ல் திரிகோணம் பெறுகிறார். செவ்வாய்க்கு வீடுகொடுத்த குரு, சனியுடன் பரிவர்த்தனை. எனவே உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் எவ்விதத் தடையும் இல்லாமல், நினைத்தது நினைத்த படி நிறைவேறும்; கருதியது கைகூடும்; எண்ணியது ஈடேறும், அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகாது என்பது பாடல். அதேசமயம், தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது குறள். எனவே உங்கள் விடாமுயற்சிக்கும் வைராக்கியத்திற்கும் வெற்றி நிச்சயம். இறைவன் இருவருக்குத் துணை போகமாட்டான். ஒன்று நம்பிக்கை துரோகி; இன்னொன்று சோம்பேறி. இந்த இருவரைத்தவிர மற்றவர்களுக்கு ஆசிகூறி, வாழ்த்துக்கூறி வழித்துணையாக வருவான். அதுமட்டுமல்ல; நல்லவர் வெல்வது நிச்சயம்! அதற்கு பஞ்ச பாண்டவர்கள் ஐவர்தான் உதாரணம். 100 பேரான துரியோதனாதி யர்களை வென்றார்கள். படைபலமும் பணபலமும் இருந்தால் மட்டும் வெற்றி பெறமுடியாது. தெய்வபலம் வேண்டும். கிருஷ்ணரின் படைபலம் அத்தனையும் கௌரவர் பக்கம் இருந்தும் வெற்றிபெற முடியவில்லை. கிருஷ்ணர் மட்டும் தனியாக பாண்டவர்கள் பக்கம் நின்றதால் பாண்டவர்கள் வென்றார்கள். எப்போதும் தெய்வம் நல்லவர்கள் பக்கம்தான் துணை நிற்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல், 2-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம். அவர் களுக்கு செவ்வாயின் பார்வை! செவ்வாய் 3, 8-க்குரியவர் என்றாலும், ராசிநாதன் புதன் சாரம்பெற்று (ரேவதி 4-ல்) வர்க்கோத்தமமாக நின்று பார்ப்பது சிறப்பு. (ராசி, அம்சத்தில் ஒரே இடத்தில் இருந்தால் வர்க்கோத்தமம் எனப்படும்.) எனவே செவ்வாயின் பார்வைக்கு முக்கியத்துவம் உண்டாகும். மேலும் குரு வீட்டில் நிற்பதும் சிறப்பு. இது நல்லோர் கூட்டணி எனப் படும். நல்லோர் சேர்க்கையால் நல்லதே நடக்கும். ஒன்பதில் ராகு நிற்பது- குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, ஆன்மிக ஈடுபாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். ஜாதக அமைப்பு தெளிவாக இருந்தால் ஜோதிடம், ஆன்மிகம், கைரேகை, வாஸ்து, எண் கணிதம் போன்ற துறைகளில் ஆர்வமும் அக்கறையும் உயர்வும் எதிர்பார்க்கலாம். தெய்வ உபாசனை உள்ளவர்கள் அருள் வாக்கு சொல்லலாம். அருள்வாக்கு என்பது பொருள் சேர்ப்பதற்கு அல்ல. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற முறையில் வழிகாட்டி வழிநடத்துவதே! அருள்வாக்கு கூறுவோரின் குறிக்கோளும் இதுவாக அமையவேண்டும். பாதிக்கப்பட்டோரின் பாதுகாவலராக இருந்து துணை நிற்கவேண்டும். சிலர் பணம் படைத்தவருக்கு ஆதரவாக நின்று சாமானியருக்குப் பாதகம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்குதான் பாரதிதாசன், கொலை வாளினை எடடா கொடியோர் செயல் அறவே என்று பாடினார்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசி நாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 9-க்குடைய புதன் சேர்க்கை. எந்த ஒரு கிரகமும் 5, 9-க்குடைய திரிகோணாதிபதிகள் சம்பந்தம் பெற்றால், அந்த ஜாதகருக்கு குருவருளும் திருவருளும் நிறைவாக இருந்து அருள்பாலிக்கும்; வழிநடத்தும், 4, 7, 10- கேந்திரம்; மனித முயற்சி. 5, 9- திரிகோணம்; தெய்வ கடாட்சம்! ஏழுக்குடைய செவ்வாய் ஆறில் மறைவது குற்றமென்றாலும், களத்திர காரகன் சுக்கிரனை செவ்வாய் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகி விடும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் கூடும். திருமணமானவர்களுக்கு கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யமும் உறவும் பலப்படும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால், பிரிந்திருக்கும் தம்பதிகள் இணைந்து வாழ்வார்கள். இணைவாக வாழும் கணவன்- மனைவிக்கு ஆடை ஆபரண யோகம் அமையும். சிலர் மனைவி பெயரில் சொத்து சுகங்கள், வீடு வாசல் அமைக்கலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் மனைவியைக் கூட்டாளியாக சேர்த்து செயல்படலாம். படித்து வேலைதேடி அலையும் பெண்களுக்கு வேலை யோகம் அமையும். ஏற்கெனவே வேலைபார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சி அமையும். சில பெண்கள் திருமணமாகி கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்று செட்டில் ஆகலாம். வெளிநாட்டில் வேலைபார்க்கும் யோகமும் அமையும். கூட்டுக்குடும்பமாக இருப்பவர்கள் சுமுகமான முறையில் தனித்தனி குடும்பமாக செயல்படலாம். அது முன்னேற்றத்திற்கான வழிமுறை என ஆறுதல் பெறலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 5-ல் திரிகோணமாக இருக்கி றார். அவருக்கு வீடுகொடுத்த குருவும், குருவுக்கு வீடுகொடுத்த சனியும் பரிவர்த்தனை. 5-ஆம் இடம் எண்ணம், திட்டம், மக்கள், மகிழ்ச்சியைக் குறிக்கும் ஸ்தானம். 2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். உங்கள் நியாயமான எண்ணங்கள் ஈடேறும். அதேசமயம் ஜென்ம கேது, சப்தம ராகு, சூரியன் சம்பந்தம் என்பதாலும், ஏழரைச் சனி நடப்பதாலும் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு அல்லது ஆரோக்கியக் குறைவு போன்ற துர்ப்பலன்கள் நடக்கலாம். இம்மாத இறுதியில் ஏழரைச்சனி விலகியதும் மேற்கண்ட பலன்கள் விலகிவிடும்; நற்பலனாகவும் மாறிவிடும். அதாவது நெல்லிக்கனி முதலில் துவர்க்கும்; நீர் பட்டதும் இனிக்கும் என்பதுபோல! நல்லோர் நட்பும் உறவும் அதுபோலதான். முதலில் வேறுபாடாகத் தெரியும்; அடுத்து ஆறுதலாக- உடன்பாடாக அமையும். சந்திர தசையோ புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும்தான் வேறுபாடாகத் தோன்றும். அப்படியிருந்தால் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். வசதியிருந்தால் ருத்ராபிஷேக ஹோமம், பூஜை செய்யலாம். சந்திர தசை இல்லாமல் மற்ற தசைகளோ குரு தசையோ புக்தியோ நடந்தால், அவர்களுக்கு இக்காலம் நற்காலம்; பொற்காலம். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும் காலம்!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. சனி குரு வீட்டிலும், குரு சனி வீட்டிலும் பரிவர்த்தனை யோகம் பெறுவதால், உங்களுக்கு எந்த சுற்று சனியாக இருந்தாலும் அது பொங்குசனிப் பலனாகவே நடக்கும். அதாவது முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாவது சுற்று மரணச் சனி என்று பொதுவாகச் சொல்வார்கள். ஜனன காலத்தில் ஏழரைச் சனி நடந்தால் 60 வயதில் மூன்றாவது சுற்று வந்துவிடும். அதையும் கடந்து 90 வயதுவரை வாழ்ந்தவர்கள் உண்டு. கலைஞர் 90 வயதுக்குமேல் வாழ்ந்தார். மூன்று சுற்று சனியையும் சந்தித்தவர். எம்.ஜி.ஆரை அரசியலில் அறிமுகப்படுத்தியவர் கலைஞர்தான். அவரை வீழ்த்த நினைத்தார் கலைஞர். முடியவில்லை. பொதுவாகவே கலைஞருக்கு ஒரு ராசி உண்டு. யாரை அவர் வீழ்ச்சியடையச் செய்ய நினைக்கிறாரோ அவர்கள் ஜாம்பவான்போல் வெகுவேகமாக வளர்ந்துவிடுவார்கள். சட்டசபையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார். அதுவே ஜெயலலிதாவுக்கு லட்சிய வெறியாகி, கலைஞர் ஆட்சியை அப்புறப் படுத்தி முதல்வர் ஆசனத்தில் அமர வைத்தது. எனவே ஏழரைச் சனி உங்களுக்கு நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி குரு வீடான தனுசிலும், குரு சனியின் வீடான மகரத்திலும் பரிவர்த்தனையாக விளங்குகிறார் கள். பரிவர்த்தனையின் பலன், அவரவர் ராசியில் ஆட்சியாக இருப்பதற்குச் சமம். மகர ராசிக்கு தற்போது ஏழரைச்சனி- விரயச்சனி நடந்தாலும், அதுவே சுபவிரயச் சனியாக விளங்கும். வேலை இல்லாதோருக்கு வேலைவாய்ப்பு யோகமும், தொழில் இல்லாதோருக்கு தொழில் யோகமும், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதோருக்கு வாரிசு யோகமும், சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்தவீடு யோகம் அமையும். கவியரசர் பாடிய மாதிரி, எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை என்பது இல்லாமல் ஆக வேண்டும். ஆண்டவன் ஒருவன்தான் வேண்டுபவர்கள் வேண்டுவதை வேண்டுவதுபோல அருளுவான். அதாவது, பெற்ற தாய் ஒருத்திக்குதான் கைப்பிள்ளை எதற்காக அழுகிறதென்ற உண்மை புலப்படும். பசிக்காக அழுகிறதா, தூக்கத்திற்காக அழுகிறதா, ஏதாவது பூச்சி கடித்து அழுகிறதா என்பது புரியும். நாமெல்லாம் ஆண்டவனின் குழந்தைகள். ஆண்டவன் நமக்குத் தாயானவன். அதனால்தான் அவனை அம்மையே அப்பா என்றார்கள்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி குரு வீட்டில் 11-ல் நின்று தன் ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; குரு வீட்டில் சனியும், சனி வீட்டில் குருவும் பரிவர்த்தனையாக இருக்கி றார்கள். அதனால் உங்கள் செயல்பாடும் திறமையும் சிறப்பாகத் திகழும். திறமைக்கேற்ற பெருமையும் புகழும் செல்வாக்கும் உண்டாகும். பொதுவாக எந்த ஒரு ராசிக்கும் ராசிநாதன் என்பவருக்கு விரயாதிபதி என்ற மைனஸ் பாயின்ட் இருக்காது. கும்பராசிக்கு மட்டுமே ராசிநாதனும் விரயநாதனும் ஒருவராக அமையும். அதனால்தான் கும்ப ராசிக்காரர்கள் அனுதாபக்குரியவர்கள் என்ற தகுதியைப் பெறுகிறார்கள். மேஷம், துலா ராசிக்கு 1, 8-க்குடையவர்; விருச்சிகம், ரிஷப ராசிக்கு 1, 6-க்குடையவர். எனவே எழுதி எழுதி சரியில்லையென்று கிழித்துப் போட்டுவிட்டு மீண்டும் மீண்டும் எழுதுவதற்கு சமம். ராசியாதிபதியும் அவரே; விரயாதிபதியும் அவரே! தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் என்று பாடியமாதிரி, தனக்குத்தானே விரயாதிபதி. ஆகவே, எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற குறளுக்கு ஏற்ப, சிந்தித்து சீர்தூக்கி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு, சனி வீடான மகரத்தில் (11-ல்) இருக்கிறார். 11-க்குடைய சனி 10-ல் குரு வீட்டில் இருக்கிறார். இதற்கு பரிவர்த்தனை என்று பெயர். இந்தப் பரிவர்த்தனை யோகம் மட்டும் ஒரு ஜாதகத்தில் இருந்துவிட்டால் போதும்; இழந்ததை மீண்டும் பெறலாம். காரில் டயர் பஞ்சராகிவிட்டால், ஸ்டெப்னி டயர் மாற்றி பயணம் செய்வதுபோல! சுயதொழில் துறையில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். அடிமை வேலையில் இருப்போர் பதவி உயர்வும் பாராட்டும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் புதிய வேலை விஷயமாக இடமாறுதலை சந்திக்கலாம் அல்லது ஊர் மாற்றத்தை சந்திக்கலாம். சிலர் கூட்டுத்தொழில் அல்லது சொந்தத் தொழில் செய்யலாம். ஒருசிலர் மனைவி பெயரில் இடம், வீடு, வாகனம் வாங்கலாம் அல்லது சொந்தத் தொழில் துறையை மனைவி பேரில் மாற்றி அமைக்கலாம் அல்லது பங்கு சேர்க்கலாம். அப்படிப்பட்ட கோரிக்கை எதுவாக இருந்தாலும், பொன்னமராவதி வழி செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபட்டால், நினைத்தது நினைத்தபடி நிறைவேறும்.