ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: உத்திரட்டாதி- 4,

ரேவதி- 1, 2.

செவ்வாய்: ரோகிணி- 4,

Advertisment

மிருகசீரிடம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 1, 2, 3, 4, ரேவதி- 1.

குரு: அவிட்டம்- 2.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 3, 4,

ரேவதி- 1, 2.

சனி: உத்திராடம்- 4.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

29-3-2021- துலாம்.

1-4-2021- விருச்சிகம்.

3-4-2021- தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருக்கிறார். ராகு- கேது சம்பந்தம். மென்மை யான உள்ளம் படைத்தவராக இருந்தும், வன்மையான பேச்சுகளாலும் வாக்குவாதங் களாலும் எல்லாரிடமும் அவப்பெயர் எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இன்றைய உலகத்தில் உள்ளதைச் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். நல்லதைச் சொன்னாலும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டர்கள். "உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று' என்று வேஷம் போடுகிறவர்களுக்குத்தான் இந்த உலகத்தில் இடமுண்டு. அதனால்தான் "உள்ளதைச் சொன்னால் பொல்லாப்பு' என்பார்கள். நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கவேண்டும் என்ற விதிப்படி செயல்படவேண்டும். 10-ல் சனி ஆட்சி பெறுவதாலும், அவருடன் 9-க்குடைய குரு சம்பந்தப்படுவதாலும் தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். அதனால் உங்கள் எண்ணங்களும் லட்சியங்களும் செயல்வடிவம் பெறும். சீரும் சிறப்பும் அடையும். தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் எல்லாம் சீராக அமையும். இதுதான் தர்மகர்மாதிபதி யோகத்தின் சூட்சமம். எறும்பின் சுறுசுறுப்பும் யானையின் வைராக்கியமும் சிங்கத்தின் பராக்கிரமும் உங்களிடம் இருப்பதால் வாழ்க்கையில் தோல்விக்கு இடமில்லை.

weekrasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்சமாக இருக்கிறார். ஒரு ராசிநாதனோ அல்லது லக்னநாதனோ ஆட்சி, உச்சமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு எப்போதும் வீழ்ச்சிக்கு இடமில்லை. கழுவின மீனில் நழுவின மீனைப்போல சுயேட்சையாகவும் சுதந்திரமாகவும் செயல் படலாம். ஜென்மத்தில் ராகுவும் செவ்வாயும் நிற்க, 7-ல் கேது இருப்பதால் சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகளை விலக்கி விட்டு சாதனைகள் புரிய லாம். 9-ல் குரு, சனி சேர்க்கை இருப்பதாலும், அங்கு குரு நீசமாகவும் சனி ஆட்சியாகவும் இருப்ப தாலும் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. எனவே, சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல, யாரால் முடியாது என்று நினைக்கிறீர்களோ அவர் களால்தான் நன்மையும் காரியசித்தியும் உண்டாகும். 5-ஆமிடத்தை நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு பார்ப்பதால், மேலே சொன்ன விதிப்படி சாமானியர்களாலும் நீங்கள் சாதிக்கலாம். வேடன் விரித்த வலையில் சிக்கிய பறவைகளை ஒரு சாமானிய எலி வலையைக் கடித்து தப்பிக்கச் செய்ததுபோல ஆபத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் மீனத்தில் நீசபங்க ராஜயோகமாகிறார். மீனத்தில் புதன் நீசம். அவருக்கு வீடுகொடுத்த குரு மகரத்தில் நீசம். டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோல ராஜயோகமாகும். சமயத்தில் எதிரிகள் உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத் திற்கும் மறைபொருளான காரணமாக அமைவார்கள். அது எப்படியென்றால் ஒரு தேர்தலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த வாக்குகளை பிரிப்பதால் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றிபெறுவதுபோல! ராசிக்கு 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால் ராஜாங்க காரியங்களில் சிக்கல்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். அந்த வெற்றிக்கு மனைவி அல்லது மனைவி வர்க்கத்தினரின் ஆதரவுகள் பெருகும். ஒரு அசுரனைக் கொல்வதற்கு கிருஷ்ண பகவானுக்கு பாமாவின் உதவி தேவைப்பட்டது போல, எதிரியை சமாளிப் பதற்கு அல்லது வெல்வதற்கு உங்கள் மனைவியின் ஆதரவு தேவைப்படும். மனைவியின் ஆதரவு தேவை என்பதை உணர்த்தவே அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் உருவானது. அர்த்தம் என்பதால் பாதி; நாரி என்றால் பெண்; ஈஸ்வரன் என்றால் ஆண்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடகம் என்றால் நண்டு. அதற்கு உடம்பைச் சுற்றி கால்கள் உண்டு. அதனால் நின்ற நிலையில் இருந்தபடியே எந்தப் பக்கமும் போகும் ஆற்றல் உண்டு. ஆகவே, பன்னிரண்டு ராசிக்காரர்களிலும் கடக ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. கடக லக்னமாக இருந்தாலும் சரி; கடக ராசியாக இருந்தாலும் சரி- அந்த பெருமை உண்டு. மேலும் பிரம்மா இந்த உலகைப் படைக்கும்போது கடக லக்னம் உதயமானதாம். அதனால்தான் "பாட படிக்க பரதவியம் கற்க தேட சுகிக்க செலவழிக்க கற்கடகம் சிம்மம் கன்னிக்கல்லாது மற்கிடமேது' என்று ஜோதிடப் பாடல் கூறுகிறது. அதாவது கடகம் சர ராசி, சிம்மம் ஸ்திர ராசி, கன்னி உபய ராசி. மேஷம், துலாம் மகரமும் சரராசியாகச் சொல்லப் பட்டாலும், மேஷம்- செவ்வாய்க்கும், துலாம்- சுக்கிரனுக்கும், மகரம்- சனிக்கும் ஆட்சி வீடு. கடகம்- குருவுக்கு உச்சவீடு. ஆட்சி, உச்சம் சிறப்புத் தன்மை பெற்றவை. மேஷம், கடகம், துலாம், மகரம் ஒன்றுக்கு ஒன்று கேந்திர ராசிகள். 1, 5, 9 திரிகோண ராசிகள். 1, 4, 7, 10 கேந்திர ராசிகள். திரி கோணம் என்பது பிறப்புரிமை. கேந்திரம் என்பது அனுபவ உரிமை. பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் ஒருவர் ஒரு வீட்டிலிருந்தால் அவருக்கு அந்த வீட்டில் உரிமைப் பாத்தியதை உண்டு. எனவே அனைத்து செயல்களிலும் நீங்கள் நன்மையையும், வெற்றியையும் எதிர்பார்க்கலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைவு. அவர் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்வதால் மறைவு தோஷம் விலகும். அதேபோல அங்கு புதன் நீசம் என்றாலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். ராமாயணத்தில் வாலியை வதம் செய்ய ராமர் மறைவாக இருந்து அம் பெய்தார். ராமர் விடும் பாணம் எல்லாம் எதிரியை வதம் செய்துவிட்டு மீண்டும் ராமரிடமே வந்து சேர்ந்துவிடும். ஆனால் வாலியின் மார்பில் தைத்த ராமபாணம் ராமரிடம் திரும்பவில்லை. வாலியின் நெஞ்சிலேயே பதிந்து விட்டது. அப்போதே ராமரின் யுத்தம் அதர்ம யுத்தம் என்று நிரூபணம் ஆகிவிட்டது. "பொய்மை யும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின்' என்ற குறளுக்கு ஏற்ப, நன்மை தரும் பொருட்டு பொய்யும் மெய் யாகிவிடும். பொய்யே பேசு வதில்லை என்று சத்திய விரதம் மேற்கொண்ட அரிச்சந்திரன் எல்லாத் துன்பங்களையும் அனு பவித்தான். அது புராண காலம். இன்றைய அரசியல் நாகரீக உலகில் பொய் பேசினால்தான் முன்னேறமுடியும்; அரசியல் செய்யமுடியும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று பாடல் உண்டு. பொய் சொல்வதற்குதான் இவ்வுலகம் என்பது அரசியல் நாகரீகமாகிவிட்டது. ஆக, வழி எப்படியோ, வெற்றிதான் இலக்கு. வேலை, தொழில், வாழ்க்கை என எல்லாவற்றிலும் குறிக்கோள் நிறைவேறப் பெறுவீர்கள்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசமாக இருந்தாலும் உச்சம்பெற்ற சுக்கிரனோடு சேர்வதால் நீசபங்க ராஜயோகமாகிறது. மேலும் நீசன் நின்ற ராசிநாதன் குருவும் நீசம் என்பதால், டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோல, "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்று மாறிவிடுகிறது. எனவே, ஜாதக அமைப்பின்படி கெடுதலும் நன்மையாகிவிடும்; சில நன்மையும் கெடுதலாக முடியும். 9-ஆமிடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அட்டமாதிபதியாகிய செவ்வாய் நிற்க, அவருடன் ராகுவும் நிற்க கேதுவும் பார்க்கிறார். நீசபங்க ராஜயோகம் பெற்ற குருவும் பார்க்கிறார். 12 ஆழ்வார்களில் ஒருவர் திருடுவதையே தொழிலாகக்கொண்டு கோவில் கட்டினார். பெருமாள் அவரை ஆட்கொள்ள, காலில் அணிந்த ஆபரணத்தை கழற்றி எடுத்துக் கொள் என்று சொல்லி திருவடி தீட்சை தந்தார். அதேபோல ரட்சகன் என்ற வழிப்பறிக் கொள்ளைக்காரனுக்கு நாரதர் ஞானம் புகட்டி, வால்மீகியாக மாற்றினார். அதே போல காமவெறி பிடித்த அருணகிரிக்கு சகோதரி நல்வழி காட்டித் திருத்தினார். எனவே, கெட்டவர்களை நல்லவர்களாக்கும் திருப்பம்தான் தெய்வ கடாட்சமாகும். அத்தகைய நல்லருள் உங்களுக்குக் கிட்டும். நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் உச்சமாக இருப்பதால் மறைவு தோஷமில்லை. ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களுக்கு எப்போதும் மறைவு தோஷம் பாதிக்காது. மேலும் ராசி அல்லது லக்னத் துக்கு 6-ஆமிடம் என்பது 10-ஆமிடமான வாழ்க்கை, தொழில் ஸ்தானத்துக்கு பாக்கிய ஸ்தானம் ஆகும்! எனவே, 6 என்பது போட்டி, பொறாமை, கடன், எதிர்ப்பு ஸ்தானம் என்றா லும், வாழ்க்கை, தொழில் ஸ்தானத்துக்கு கேடு கெடுதி ஏற்படுத்தாது. மேலும் 8-ல் ராகு நிற்பது ஒருவகையில் கெடுதல் என்றாலும், பாவ ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் (அசுப கிரகங்கள்) இருப்பது டபுள் மைனஸ்= ஒரு பிளஸ் என்பதுபோலவும், டபுள் நெகட்டிவ்= ஒரு பாசிட்டிவ் என்பதுபோலவும் நல்லதாக மாறிவிடும். இதைத்தான் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பார்கள். இருந்தாலும் 8-ல் செவ்வாய் ராகு இருப்பதன்பலன் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக 7-ஆமிடம் என்பது திருமணம். தனி ஆளாக இருப்பவருக்கு வாழ்க்கைத்துணையை ஏற்படுத்தித்தரும். குடும்பஸ்தராக (தம்பதி யாக) இருப்பவருக்கு வாரிசு ஏற்படுத்தித் தரும். 10-ஆமிடத்தை குருவும் சனியும் பார்ப்ப தால் வேலை, உத்தியோகம், தொழில்ரீதியாக முக்கியமான திருப்பங்கள் ஏற்படும். அந்த திருப்பங்கள் திருப்தியான திருப்பங்களாக அமையும். அதேசமயம் 4-ல் குரு, சனி சேர்க்கை தாயாருக்கோ தனக்கோ சுகக் குறைவை ஏற்படுத்தலாம். அல்லது ஆரோக் கியக்குறைவை ஏற்படுத்தலாம். தேவை யான பரிகாரங்களை ஜாதகரீதியாக செய்துகொள்வது நல்லது. பொருளாதாரத் திலும் வரவு- செலவுகளிலும் குறையேது மில்லை. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று திருப்தியடையலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசியில் கேதுவும், 7-ல் செவ்வாய், ராகுவும் இருக்கிறார்கள். 7-ஆமிடம் என்பது திருமண ஸ்தானம். அங்கு செவ்வாய், ராகு இருப்பது தோஷம். எனவே, தாமதத்திருமணம் ஏற்படும். பெண்கள் என்றால் 27 வயதிற்குமேலும், ஆண்கள் என்றால் 30 வயதிற்குமேலும் திருமண வயதிற்கு எல்லைக் கோடாக அமையும். அதை மீறி முன்னதாக இளமையில் திருமணம் என்றால், சமையலில் அரைவேக்காடு என்பதுபோல பிரச்சினைகளை சந்திக்கநேரும். ஒருசில சமூகத்தாரில் இளமையிலேயே திருமணம் செய்துமுடிப்பார்கள். நீண்ட நெடுங்காலத் திற்குமுன்பு பெண் ருதுவாவதற்கு முந்தியே பாலிய விவாகம் செய்துவைக்கும் பழக்க முண்டு. அந்த முறையை ராஜாராம் மோகன் ராய் காலத்தில் தடுத்துநிறுத்தி மாற்றி யமைத்தாக சொல்லப்படும். மகாகவி பாரதி யாருக்கே இளமையில் திருமணம். ஆக, காலம், தேசம், வர்த்தமானம் என்பதுபோல சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் மாறுதலுக்குப்பட்டதாக அமைகிறது. குருவும் சனியும் சேர்ந்தால் ஜோதிடத்தில் சண்டாள யோகம் என்பார்கள். இங்கு குரு நீசமாகவும், வீடுகொடுத்த சனியோடு சேர்ந்திருப்பதாலும் மேற்படி தோஷம் விலகும். 5-ஆமிடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை. வாழ்க்கையிலும் தொழில்ரீதியாகவும் உத்தியோகத்துறையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவை முன்னேற்றகரமான மாற்றமாக அமையலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல், மகரத்தில் நீச ராசியில் இருந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி பெறுவது நீசபங்க ராஜயோகம் எனப்படும். குடும்ப ஸ்தானத் தில் சனி இருப்பது தாமதத் திருமணத்தைக் குறித்தாலும் குருவோடு கூடியதால் தோஷம் நிவர்த்தியாகிறது. பொதுவாக குரு, சனி சேர்க்கை சண்டாள யோகம் என்பார்கள். சனி ஆட்சியாகவும் குரு நீசபங்க ராஜயோக மாகவும் இருப்பதால் அது விதிவிலக்காகும். 6-ல் செவ்வாய், ராகு சேர்க்கை யோகம் தரும். 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு பாக்கியஸ்தானம். அங்கு 5-க்குடைய செவ்வாய் இருக்கிறார். செவ்வாய் சகோதரகாரகன்; அத்துடன் புத்திர ஸ்தானா திபதி. எனவே, பிள்ளைகள்வகையிலும் சகோதரவகையிலும் நல்லவை நடைபெறும். மேலும் ராசிநாதனாகிய குருவின் பார்வை செவ்வாய், ராகுவுக்குக் கிடைப்பதும் ஒரு யோகமாகும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் கனவுகளும் ஈடேறும். தனகாரகன் குரு தன ஸ்தானத்தில் இருப்பதால் வரவு- செலவுகள் குறையேதும் இல்லாமல் நடக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். 12-ல் உள்ள கேது ஆன்மிக சுற்றுப்பயணங்களை உருவாக்கித் தரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசியில் குருவும் சனியும் சேர்க்கை, குரு விரயாதிபதி; சனி ராசியாதிபதி. எனவே, சுபமங்கள செலவுகள் இடம்பெறும். திருமணம், காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா (சடங்கு) போன்றவை இடம்பெறும். 5-ல் செவ்வாய், ராகு சேர்க்கை. மனதில் இனம்புரியாத கலக்கம், தயக்கம் உண்டாகும். "மயக்கமா- தயக்கமா மனதிலே குழப்பமா' என்று திரைப்படத்தில் பாடியமாதிரி உங்களை சஞ்சலப்படுத்தலாம். அதற்கு இடம்தராமல் செயல்படவேண்டியது உங்கள் பொறுப்பு. "பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பது காலத்தின் நியதியாகும். 3-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு மனவுறுதியையும் தைரியத்தையும் யோகத்தையும் தரும். மேலும் தொல்லைகள் நீங்கி நல்லவையாக நடக்கும்! 11-ஆமிடத்து கேதுவும், அதைப்பார்க்கும் செவ்வாயும் ராகுவும் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தேடித்தரும். அத்துடன் பங்காளிவகையில் இதுவரை காணப்பட்ட சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கி சந்தோஷம் உண்டாகும். ஜாதகரீதியாக யோகமான தசாபுக்திகள் நடந்தால் பேரன்- பேத்தி, பிள்ளைகள்வகையில் யோகமான பலன்கள் நடைபெறும். 11-ஆமிடம் லாபஸ்தானம், வெற்றி ஸ்தானம், ஜெய ஸ்தானமாகும். அங்கு கேது இருப்பது யோகம். முயற்சிகள் தளர்ச்சி, தடையின்றி வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அதனால் கொடுக்கவேண்டியவை பட்டுவாடா செய்யப்படும். வாக்கு நாணயம் காப்பாற்றப் படும். சிலருக்கு உத்தியோகம், வேலை தொடர்பாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு யோகம் அமையும் குறிப்பாக முஸ்லிம் தேசங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநான் சனி 12-ல் மறைந் தாலும் அது அவருக்கு ஆட்சி வீடாகும். அத்துடன் 2, 11-க்குடைய குரு சம்பந்தம் என்பதால், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை மிகமிக நல்லமாற்றங்களாக அமையும். 12-ல் குரு, சனி சேர்க்கை காரணமாக சிலர் கடல் கடந்த பயணம் செல்லவும், வெளிநாடு போய் வேலை பார்க்கவும் யோகமுண்டாகும். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளலாம். அல்லது வெளிமாநிலம் போய் வேலை பார்க்கலாம். கும்ப ராசிக்கு 10-ல் கேது இருப்பதாலும். அதை ராகு பார்ப்பதாலும் பெரும்பாலும் கிறிஸ்துவ நாடு அல்லது முஸ்லிம் நாடுகளுக்கும் போய் வேலை செய்யும் யோகமுண்டாகும். 2-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை காரணமாக சிலர் அரசு அல்லது அரசு சார்ந்த ஸ்தாபனங் களில் பணியாற்றும் அமைப்பு உண்டாகும். 4-ல் செவ்வாய், ராகு சேர்க்கையால் சிலருக்கு பூமி, வீடு இடத்துப் பிரச்சினை கவலையை ஏற்படுத்தும். அப்படியிருந்தால் திருச்சுழி, செவலூர், ஸ்ரீ முஷ்ணம் போன்ற இடங்கள் சென்றுவழிபடலாம். திருச்சுழியும், செவலூரும் பூமிநாதசுவாமி கோவில்; ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில். திருச்சி மார்க்கெட் பகுதியிலும் பூமிநாதசுவாமி கோவில் உண்டு. பூமி, வீடு, மனை சம்பந்தமான கட்டட காரியங்களுக்கு இவை முக்கியமான கோவில்களாகும். யாருக்கு எது அருகில் உள்ளதோ அங்கு சென்று பிராத்திக்கலாம். எனது சொந்த அனுபவம் - செவலூர் சென்று பிரார்த்தனை செய்தபிறகுதான் சொந்த இடம் அமைந்தது. அதில் வீடு கட்டுகிற யோகமும் அமைந்தது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீச ராசியில் நின்றாலும், அங்கு சனி ஆட்சி பெறுவதால் நீச பங்கராஜ யோகமாகும். பொதுவாக குருவும் சனியும் சேர்ந்தால் சண்டாள யோகம் என்பது ஜோதிடவிதியாக அமைந்தாலும், இதில் குருவோ, சனியோ ஆட்சி, உச்சம் பெற்றால் மேற்கண்ட சண்டாள யோகம் மாறிவிடும்; பாதிக்காது- விதிவிலக்கு ஆகும்! மேலும் 2, 5, 7, 9, 11-ஆமிடம் குருவுக்கும், 3, 6, 11- சனிக்கும் யோகமான இடங்களாகும். எனவே, குரு, சனி சேர்க்கை எல்லாவகையிலும் உங்களுக்கு நல்லதே செய்யும்! 10-ல் குரு, சனி சேர்க்கைப் பல னாக உங்களுக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். நல்வாக்கும் நலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள மகிழ்ச்சிகளும் விசேஷங்களும் இடம்பெறும். திருமணம், காதணிவிழா, பூப்புணித நீராட்டுவிழா, புதுமனைப் புகுவிழா, பெயர் சூட்டுவிழா, மணிவிழா போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்! விருந்து விசேஷம், விழாவைபவம் போன்ற கொண்டாட்டமும் கோலாகலமும் உண்டாகும். அல்லது கோவில் குளம், ஆன்மிகச் சுற்றுலா போன்ற புனித நிகழ்ச்சிகள் இடம்பெறும். மொத்தத்தில் கேளிக்கையும் விழாக்கோலமும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுத்தும். விருந்தினர் வருகையும் விழாவும் கலகலப்பாக அமையும். எல்லாம் சுபமங்களச் செலவுகள்தான். சுற்றமும் நட்பும் விருந்தும் விழாவும் உங்களுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்தும். மனம் சந்தோஷமாக இருந்தால் நோயில்லை; துன்பமில்லை; துயரமில்லை.