ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரம்- 4,

அஸ்தம்- 1, 2.

Advertisment

செவ்வாய்: அஸ்தம்- 1, 2.

புதன்: உத்திரம்- 4, 3.

குரு: அவிட்டம்- 2.

சுக்கிரன்: விசாகம்- 1, 2, 3.

சனி: உத்திராடம்- 3.

ராகு: கார்த்திகை- 4.

கேது: அனுஷம்- 2.v

கிரக மாற்றம்:

புதன் வக்ரம்.

குரு வக்ரம்.

27-9-2021- சனி வக்ரநிவர்த்தி.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

28-9-2021- மிதுனம்.

30-9-2021- கடகம்.

2-10-2021- சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு. என்றாலும் மூன்றுவகையில் மறைவுதோஷம் மறைகிறது. முதல்வகை பஞ்சமாதிபதியான சூரியனோடு சம்பந்தம். இரண்டாவதுவகை பாக்கியாதிபதி குருவின் பார்வை. மூன்றாவதுவகை செவ்வாய்க்கு வீடுகொடுத்த புதன் ஆட்சி, உச்சம். எனவே, மறைவுதோஷம் பூரணமாக விலகிவிடுகிறது. ஒருசில சமயம் மறைவுக்கும் முக்கியத்துவம் உண்டு. இராமாயணத்தில் வா-யை இராமர் மறைந்திருந்துதான் தாக்கினார். ஏனென்றால் வா-யோடு நேருக்குநேர் மோதும்போது எதிரியின் பலத்தில் பாதி வா-க்குப் போய்விடுமாம். யுத்த தர்மத்திலும் கொரில்லா போர் என்ற முறை உண்டு. அது மறைந்திருந்து தாக்கும் "மரபுப் போர்.' சில காரியங்களில் "இலை மறைவு காய் மறைவு' என்ற செயல்முறைகளும் உண்டு. தானதர்மம் செய்வதிலும், "வலதுகை கொடுப்பதை இடதுகைக்குத் தெரியக்கூடாது' என்பார்கள். ஆகவே, மறைந்தாலும் நிறைந்த பலன் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 6-ஆமிடம் என்பது போட்டி, பொறாமை, எதிரி, கடன் இவற்றைக் குறிக்கும் இடம். அங்கு செவ்வாய் நின்று பாக்கியாதிபதி குருவின் பார்வையைப் பெறுவதால், இவையெல்லாம் உங்களைவிட்டு விலகிவிடும் என்று பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொள்ளலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ராகு நிற்க, 7-ல் கேது நிற்பது நாகதோஷம் என்றாலும், ராசியை குரு பார்ப்பதால் விதிவிலக்காகும். மேலும் 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுவது தர்மகர்மாதிபதி யோகமாகும். அவர்களுடன் குரு சேர்ந்திருப்பதும் பூவோடு சேர்ந்த நாரும் மணப்பதுபோல! ஜென்ம ராகுவும் 7-ஆமிடத்துக் கேதுவும் திருமணத் தடை, தாமதங்களை ஏற்படுத்தலாம். முப்பது வயதுக்குமேல் யாருக்கும் எந்த தோஷமும் பாதிக்காது. அதற்கு முன்னதாக திருமணச் செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய பரிகாரங்கள் தேவைப்படும். தாமதமாவதே கிரக தோஷ நிவர்த்திதான். 6-ல் ஆட்சிபெற்ற சுக்கிரன் போட்டி, பொறாமை, எதிரி, கடன், நோய் எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றலைத் தருவார். 5-ல் சூரியன், செவ்வாய், புதன் உள்ளதால், உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறுவதற்கு உறுதுணையாக உங்கள் மனைவியும் மக்களும் இருப்பார்கள். பொதுவாக தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். அதேபோல நன்மக்கள் பிறப் பதும் பூர்வபுண்ணிய பாக்கியம்தான். 5, 9 என்ற திரிகோணாதிபதிகள் பலம் பெற்றால் அவர்களுக்கு மேற்படி பாக்கியம் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி, உச்சமாக இருக்கிறார். நவகிரகங்களில் ராகு- கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங் களுக்குத்தான் ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு என்றும் உண்டு. சில ஜோதிட நூல்களில் ராகு- கேதுக்களுக்கு ஆட்சி, உச்ச வீடு குறிப்பிட்டிருந்தாலும் அது இடைக்காலத்தில் ஏற்பட்டதாகும். சௌராஷ்டிர மொழிக்கு பிற்காலத்தில்தான் எழுத்து வடிவம் ஏற்பட்டது. ஆதியில் பேச்சு மொழியாகத்தான் இருந்தது. அதுபோல ராகு- கேதுகளுக்கும் ஆட்சி, உச்சவீடு என்பது ஆதியில் இல்லை. ஏனென் றால் ராகுவும் கேதுவும் சாயாகிரகம். அதாவது நிழல் கிரகம்தான். அதனால் தான் வாரத்தில் சூரியன்முதல் சனிவரை ஏழு நாட்கள் வகுக்கப்பட்டது. ராகு கிழமை, கேது கிழமை என்று இல்லை. ஆனால் தினசரி ராகு காலத்தில் ராகுவும், எமகண்ட நேரத்தில் கேதுவும் மூன்றேமுக்கால் நாழிகை (ஒன்றரை மணிநேரம்) ஆட்சி செய்யும். குருவும் சனியும் 8-ல் மறைவது ஒருவகையில் குற்றம்தான். ஆனால் 9-க்குடைய சனியும், 10-க்குடைய குருவும் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். எனவே, அந்த குற்றமும் குறையும் ஈடுசெய்யப்படுகிறது. எனவே, விடாமுயற்சி வெற்றி தருமென்று எடுத்துக்கொள்ளலாம். எடுத்த காரியங்களில் நற்பலனை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் யோகமுண்டு.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 7-ல் குரு, சனி கூடிநின்று ராசியைப் பார்க்கிறார்கள். இங்கு குரு நீசபங்க ராஜயோகம் அடைகிறார். சனி 7-க்குடையவர். குரு 9-க்குடையவர். ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதிபதியும் இணைந்து ராசியைப் பார்ப்பது யோகமாகும். உங்கள் எண்ணங்களுக் கும் முயற்சிகளுக்கும் குருவருளும் திருவருளும் பரிபூரணம் என்று அர்த்தம். அதாவது மனிதன் நினைக்கிறான்; இறைவன் நிறைவேற்றுகிறான் என்பது அர்த்தம். இறைவன் சோம்பேறிகளுக் கும் நம்பிக்கைத் துரோகிகளுக்கும் துணை. நிற்கமாட்டான். உண்மை யான உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் உறுதுணை யாக நிற்பான். அதனால் தான் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று சொன்னார்கள். "தெய்வத் தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூ- தரும்' என்பது குறள். ஒரு மனிதனுடைய முயற்சிக்கு வெற்றி எப்படி முக்கியமோ அப்படி வைராக்கியமும் சாதனையும் அவசியம். கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை உங்களுக்கு அந்த வெற்றியைத் தேடித் தரும். வாரத் தொடக்கத்தில் 7-க்குடைய சனி வக்ரநிவர்த்தியாவது உங்கள் வெற்றிக்கு பச்சைக்கொடி காட்டும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 6-ல் குருவும் சனியும் மறைகிறார்கள். 10-க்குடைய சுக்கிரனும் 3-ல் மறைகிறார். என்றாலும் ராசிநாதன் சூரியன். 2-ல் (கன்னியில்) அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறார். ஆகவே, உங்களுடைய காரியங்களி லும் முயற்சிகளிலும் நம்பிக்கையும் வைராக்கியமும் வெற்றியைத் தேடித்தரும். "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகாது' என்பது பழமொழியானாலும், "அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்' என்பது புதுமொழியாகும். அதுதான் விடாமுயற்சி வெற்றிதரும் என்பது. அதற்கு உதாரணம் ராஜ வம்சத்தில் பிறந்த விசுவாமித்திரர். கடும் தவமியற்றி பிரம்மரிஷி ஆனார். அதைத்தான் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று சொல்வார்கள். 10-ல் உள்ள ராகு சோதனைகளை உருவாக்கினாலும், ராகுவைப் பார்க்கும் குரு உங்களுக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தருவார். குருவும் சனியும் இணைந்திருந்தால் சண்டாள யோகம் என்பார்கள். அவர்கள் 6-ல் மறைவதால் சண்டாள யோக தோஷம் நிவர்த்தியாகிறது. சோதனைகளை வென்று சாதனை படைக்கலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

tt

கன்னி ராசியில் விரயாதிபதி சூரியனும் அட்டமாதிபதி செவ்வாயும் இணைந் திருப்பது உங்களுடைய முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் தடைகளை ஏற்படுத்தும் என்றாலும், நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு ராசியைப் பார்ப்பதால் எல்லா தோஷங்களும் மறைகிறது. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்பது குறள். வைராக்கிய மும் விடாமுயற்சியும் சாதனையும் இருந்தால் லட்சியம் ஈடேறும் என்பது பொருள். விசுவாமித்திரரும், பகீரதனும் அதற்கு உதாரணம். விசுவாமித்திரர் பிரம்ம ரிஷியானார். பகீரதன் தன் தவமுயற்சியால் ஆகாய கங்கையை பூலோகத்திற்கு வரவழைத்தான். ஆகாய கங்கை பூலோகத்தில் நேரடியாக இறங்கினால் பூலோகம் தாங்காது என்பதற்காகத்தான் எல்லாம் வல்ல இறைவன் சர்வேஸ்வரன் தன் தலையில் தாங்கி பூலோகத்தில் இறங்கச் செய்தார். 9-ல் ராகு; அவருக்கு கேது, குரு, சனி பார்வை. 9-க்குடைய சுக்கிரன் அதற்கு 6-ல் மறைவு. ஒருசிலருக்கு குலதெய்வ வழிபாட்டில் குறை காணப்படலாம். அதைத் தெரிந்து நிவர்த்தி செய்துகொண்டால் குடும்ப விருத்தி உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சிபெறுகிறார். துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி ஆட்சி (4-ல்) பெற்று துலா ராசியைப் பார்க்கிறார். சனியுடன் 3, 6-க்குடைய குரு நீசம். 6-க்குடையவர் நீசம் என்பதால் போட்டி, பொறாமை, எதிரி ஆகியவையெல்லாம் பலமிழந்து விடும். அதேசமயம் 4-ல் குரு, சனி சேர்க்கை என்பதால் சிலருக்கு தாயாருடன் கருத்து வேறுபாடு காணப்படலாம். அல்லது ஆரோக்கியத்தில் குறை ஏற்படலாம். 4-ஆமிடம் கல்வி ஸ்தானம் என்பதால் மாணவ- மாணவியருக்கு கல்வியில் தேக்கநிலை ஏற்படலாம். கர்ணன் பிராமண வேஷம் போட்டு பரசுராமரிடம் வித்தை கற்றுக்கொள்கி றான். அவன் மடியில் பரசுராமர் தலைவைத்து சிரமப் பரிகாரமாக உறங்கு கிறார். அப்போது கிருஷ்ணரின் சூழ்ச்சியால் கர்ணனின் தொடையில் ஒரு வண்டு கடித்து ரத்தம் பெருக்கெடுத்து பரசுராமருடைய காதை நனைக்கிறது. ஈரம் பட்டவுடன் பரசுராமர் திடுக்கிட்டு எழுந்து, "நீ யார்? ஒரு பிராமணருக்கு இப்படிப்பட்ட பொறுமை இருக்காது' என்று சொல்ல, கர்ணன் சத்ரியன் என்பதை ஒப்புக்கொள்கிறான். "உன் வித்தை தக்க சமயத்தில் பயன்படாமல் போகட்டும்' என்று சாபமளித்தார். குருவுடன் சனி சேர்ந்தால் இப்படிப்பட்ட குரு சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது தோஷம். இது நாகதோஷம், சர்ப்ப தோஷம் எனப்படும். என்றாலும் குரு ராகுவைப் பார்ப்ப தால் தோஷநிவர்த்திக்கும் இடமுண்டாகும். நாகதோஷமுடையவர்களுக்குத் திருமணம் தாமதமாகும்; தடையாகும். குரு பார்ப்பதால் தாமதப்பட்டாலும் தகுதியான மணவாழ்க்கை அமையும். இளமையில் திருமணம் என்றால்- அதாவது முப்பது வயதிற்குமுன்பு திருமணம் செயல்பட்டால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. ராசிக்கு 11-ல் சூரியன் நிற்பது ஒருவகையில் தோஷம் நிவர்த்தியாகும். தக்க பரிகாரங்களினால் மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். திருமணத் தடை விலக ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், இருசாரரும் காமோகர்ஷண ஹோமமும் செய்துகொள்ளலாம். வாரிசு யோகம் அமைய சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், வாஞ்சா கல்பகணபதி புத்ர ப்ராப்தி ஹோமமும் செய்துகொள்ளலாம். 3-ல் சனி, குரு சேர்க்கை. உடன்பிறப்புகள்வகையி லும் நண்பர்கள்வகையிலும் சகாயம் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசபங்க ராஜயோகம். 2-ல் குரு, சனி சேர்க்கை. தேவைப்படும் நேரங்களில் தேவையான பொருளாதார வசதிகளை அனுபவிக்கலாம். 11-ல் சுக்கிரன் ஆட்சி. உங்கள் முயற்சிகளில் வெற்றியடைவதற்கு ஒரு பெண் காரணமாக அமைவாள். அது தாயாராகவும் இருக்கலாம்; தாரமாகவும் இருக்கலாம்; சகோதரியாகவும் இருக்கலாம்; சிநேகிதியாகவும் இருக்கலாம். 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கை. சூரியன் 9-க்குடையவர்; புதன் 10-க்குடையவர்- தர்மகர்மாதிபதி யோகம். செவ்வாய் இணைவது திரிகோணாதிபதியின் சேர்க்கை. இவர்களுக்கு ராசிநாதன் குரு பார்வை. குருவும் சனியும் கூடினால் சண்டாள யோகம் என்று சொல்வார்கள். அந்த விதி ராசிநாதனுக்கும் லக்னநாதனுக்கும் திரிகோணாதிபதிக்கும் பொருந்தாது. 6-ல் ராகு, 12-ல் கேது- சத்ரு ஜெயம். 6, 12 பாவ ஸ்தானங்கள். அதில் பாவ கிரகங்கள் இருப்பது டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோல! சிலருடைய அனுபவத்தில் உங்கள் வெற்றிக்கு எதிரியே காரண காரியமாக அமைந்துவிடுவார். 12-ல் உள்ள கேது ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்துவார். ஆன்மிக யாத்திரையும் உண்டாகலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசியில் குரு, சனி சேர்க்கை. குரு 3, 12-க்குடையவர். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று சொல்வார்கள். உடன்பிறப்பே கொல்லும் வியாதியும் என்பார்கள். ஆக, சகோதரர்கள் சகாயமாக உதவுவதும் சத்ருவாக மாறுவதும் அவரவர் ஜாதகப் பலனைப் பொருத்தது. பஞ்ச பாண்டவர்கள் ஐவர். நல்லவர்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்த கௌரவர்கள் நூறுபேர். (துரியோதனன் குழுவினர்). ஆக, அந்தக் காலத்திலேயே நல்லது கொஞ்சம்; கெடுதல் அதிகம். வரலாற்றில் இரண்டும் இடம்பெறும். மகான் காந்தியும் அவரை சுட்டுக்கொன்ற கோட்சேயும் இடம்பெற்றார்கள். அதேபோல புராணத்தில் இராவணனும் இடம்பெறுகிறான். அவனை வதம்செய்த இராமனும் இடம் பெறுகிறார். ஆக, நல்லதும் கெட்டதும் அந்த நாள்முதல் இந்த நாள்வரை இணைவாகவே இருக்கிறது. 9-ல் புதன் ஆட்சிபெற்றாலும், அட்டமாதிபதி சூரியனும் பாதகாதிபதி செவ்வாயும் இணைவதாலும், விரயாதிபதி குரு பார்ப்பதாலும் ஒருசிலருக்கு பிதுரார்ஜித பூர்வீக சொத்துப் பிரச்சினையில் சிக்கல் உருவாகும். பரிவர்த்தனை மாற்றங்கள் ஏற்படலாம். மாற்றங்கள் அனுகூலமாக அமைய பூமிநாத சுவாமியை வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைக்கி றார். அங்கு ஆட்சியாக இருக்கிறார். ராசிநாதனுக்கே விரயாதிபத்தியம் கிடைக்கும் தன்மை கும்ப ராசிக்கு மட்டும்தான் உண்டு. ஊதுபத்தியும் மெழுகுவர்த்தியும் தன்னை அழித்துக்கொண்டு மற்றவர்களுக்கு வாசனையும் ஒளியும் தரும். அதுபோல கும்ப ராசிக்காரர்கள் தங்களை உருக்கிக்கொண்டு மற்றவர்களுக்கு உதவியாக செயல்படுவார்கள். ஒருவகையில் அதைத் தியாகம் என்றும் சொல்லலாம். கும்ப ராசியில் அல்லது கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் மேற்கண்ட தோஷத்திற்குப் பரிகாரமாக எய்யலூர் சென்று வழிபடவேண்டும். (கும்பகோணம் வழி- சொர்ணபுரீஸ்வரர்). இராமபிரான் இலங்கை செல்லும்வழியில் எய்யலூர் காவிரிக்கரையைக் கடந்துபோகும் அமைப்பிருந்தது. காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட, இக்கரையி-ருந்து அக்கரைக்கு மக்கள் போக முடியாமல் தயங்கி நின்றார்கள். இராமபிரான் காவிரியின் வெள்ளப்பெருக்கைத் தடுத்துக் குறைக்க அம்பு எய்தார். அம்பு எய்த ஊர் எய்யலூர் என்று மாறிவிட்டது. 9-ல் உள்ள சுக்கிரன் பிதுரார்ஜிதம், பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் அனுகூலமான திருப்பத்தை உருவாக்கும். சிலர் சொத்துப் பரிவர்த்தனையும் செய்யலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீசபங்க ராஜயோகமாக இருக்கிறார். அவருடன் ஆட்சிபெற்ற சனி சேர்க்கை. 8-ல் சுக்கிரன் ஆட்சி. 7-ல் புதன் ஆட்சி. 5-ஆமிடத்திற்கு குரு, சனி பார்வை. பொதுவாக நல்ல மனைவி, மக்கள், நல்ல தொழில் யோகம், நல்ல வருவாய். "குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்று சொல்லுமளவில் எந்தக் குறையும் இல்லாவிட்டாலும், ராசியை 6-க்குடைய சூரியனும் 12-க்குடைய சனியும் பார்ப்பதால் காரணகாரியமில்லாமல் ஏதோவொரு மனக்கவலை வாட்டி வதைத்து உங்கள் நிம்மதியைக் குலைக்கச் செய்யும். அதற்கு இடம்தராமல் தைரியம் புருஷ லட்சணம் என்று சொல்வதுபோல- வைராக்கியமும் விடாமுயற்சியும் கொண்டு சோதனைகளை வென்று சாதனைகளைப் படைக்கவேண்டும். போஜ மகாராஜன் அஷ்ட லட்சுமிகளை வழிபட்டான். அவனுக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தது. அப்போது ஆதிலட்சுமி, "உனக்கு சனி ஆரம்பிப்பதால் சிறிது காலம் உன்னைவிட்டு விலகியிருக்க நேரும். எனினும் உன் பக்திக்கு மதிப்பளித்து, யார் உன்னோடு இருக்கவேண்டுமென்று சொன்னால் அந்த லட்சுமி உன்னோடு வாசம் செய்வாள்' என்றார். அதற்கு போஜன், "தைரிய லட்சுமி மட்டும் துணையிருந்தால் போதும்' என்றான். தைரிய "லட்சுமி இருக்குமிடத்தில் மற்ற ஏழு லட்சுமிகளும் துணையாக நிற்போம்' என்றார்.

tt