ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரகப் பாதசாரம்:

Advertisment

சூரியன்: பூசம்- 2, 3, 4.

செவ்வாய்: ரேவதி- 2, 3.

புதன்: புனர்பூசம்- 3, 4. பூசம்- 1.

Advertisment

குரு: உத்திராடம்- 1, பூராடம்- 4.

சுக்கிரன்: மிருகசீரிஷம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிஷம்- 3.

கேது: மூலம்- 1.

கிரக மாற்றம்:

27-7-2020- கடகப் புதன்.

22

30-7-2020- புதன் அஸ்தமனம். (ஆவணி 14-ஆம் தேதிவரை).

குரு வக்ரம். (ஆவணி 24-ஆம் தேதிவரை).

சனி வக்ரம். (ஆவணி 29-ஆம் தேதிவரை).

30-7-2020- மிதுனச் சுக்கிரன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

26-7-2020- துலாம்.

29-7-2020- விருச்சிகம்.

31-7-2020- தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. ஆனால், அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சியாகவும் வக்ரமாகவும் இருப்பதால் செவ்வாயின் மறைவு தோஷம் விலகும். எந்தவொரு கிரகமும் 6, 8, 12-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த கிரகம் அதற்கு கேந்திரம்- திரிகோணம் பெற்றாலும் அந்த கிரகத்தின் மறைவு தோஷம் விலகும். அதேபோல, ராசிநாதன் அல்லது லக்னநாதன் சாரம்பெற்றாலும் மறைவு தோஷம் பாதிக்காது. இவை விதிவிலக்கு. 12 என்பது விரயஸ்தானம், பயண ஸ்தானம். எனவே, அவர் 3, 6, 7- ஆமிடங் களைப் பார்ப்பதால், இந்த மூன்று பாவங் களைப் பொருத்த விரயம் அல்லது செலவுகளை சந்திக்கலாம். உடன்பிறந்தவகையில்- எதிரி அல்லது பங்காளிவகையில்- மனைவி அல்லது கணவர்வகையில் செலவுகளை சந்திக்கலாம். அவரவர் ஜாதகரீதியாக சுபகிரக தசாபுக்தி நடந்தால் சுபச்செலவுகளாகவும், 6, 8, 12 கிரக தசாபுக்தி நடந்தால் அசுபச் செலவுகளாகவும் அமையும். 7-க்கு 6-ல் மறைவதால் கணவர் அல்லது மனைவிவகையில் கருத்து வேறுபாடு, விவகாரம் போன்ற பலன்கள் மனவருத்தத்தை உருவாக்கலாம். எது எப்படியிருந்தாலும், பாக்கியாதிபதி குரு 9-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதாலும், 9-க்குரிய குருவும் 10-க்குரிய சனியும் சேர்ந்திருந்து தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதாலும், எல்லாப் பிரச்சினைகளும் சங்கடங்களும் வருத்தங்களும் சூரியனைக் கண்ட பனிபோல ஓடிஒளிந்துவிடும்; ஒழிந்துவிடும்; மறைந்துவிடும்; மாறிவிடும். 9 என்பது திரிகோணம். 10 என்பது கேந்திரம். இருவரும் இணைவது தர்மகர்மாதிபதி யோகம்- புனித கங்கையில் நீராடுவது எல்லாப் பாவங்களையும் போக்கும் என்பதுபோல.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சிபெறுகிறார். வாரத் தொடக்கத்தில் சந்திரன் (ரோகிணி) சாரத்திலும் பிறகு, செவ் வாயின் சாரத்திலும் (மிருகசீரிடம்) சஞ்சாரம். சந்திரன் 3-க்குரியவர் என்பதோடு, ரிஷப ராசிக்கு உச்ச ராசிநாதன் ஆவார். செவ்வாய் 7, 12-க்குரியவர். 7-க்குத் திரிகோணத்திலும் (9-ல்), 12-க்கு 12-லும் இருப்பதால், மனைவி அல்லது கணவர்வகையில் அன்யோன்யம், இணைப்பு, பிணைப்பு உருவாகும். கருத்து வேறுபாடுகள் களையப்படும். வெறுத்து விலகிய நிலைமாறி, விரும்பி நெருங்கும் நிலை உருவாகும். அட்ட மத்துச்சனி ஆரம்பத்தில் விலகியிருந்த குடும்பம் இப்பொழுது அட்டமத்துச்சனி முடிவில் (2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி; அட்டமத்துச் சனி முடியும்) இணையும். விலகியிருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப் பெயர்ச்சியும் குடும்பத்துடன் இணைந்து வாழும் தன்மையும் உண்டாகும். வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒத்தி வீடு அல்லது சொந்த வீடு மாறும் யோகமும் அமையும். அதேபோல, வேலை அல்லது உத்தியோகத் திலும் முன்னேற்றகரமான திருப்பம் உண்டாகும். எட்டாமிடம் கவலை, துன்பம், வருத்தம், இழப்பு, ஏமாற்றம் போன்ற பலன் களைக் குறிப்பதோடு, அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். "திருஷ்டம்' என்பது பார்வை; "அதிர்ஷ்டம்' என்பது பார்வைக்கும் அப்பாற் பட்டதாகும். மரணமும் யோகமும் கண்ணுக்குப் புலப்படாமல் வருவதாகும். எனவே, எட்டாமிடத்தை மோசமான இடமென ஒதுக்கவேண்டாம். மேலும், இந்த உலக வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பது மரணந்தான். அதனால்தான், "உறங்குவது போல் சாக்காடு- உறங்கி விழிப்பதுபோல் பிறப்பு' என வள்ளுவர் சொல்வார்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் ராகு நிற்க, அதற்கு 7-ல் கேதுவும் சனியும் இருப்பது ஒருவகையில் மைனஸ் பாயின்ட்டுதான். ஜாதகரின் செயல்திறனுக்கு சவால்விடுவதுபோல நிகழ்ச்சிகளை சந்தித்து, சமாளித்து மகிழ்ச்சியடையவேண்டும். (சவாலே சமாளி). வாழ்க்கை என்பது எப்பொழு தும் இனிமையாகவே அமையாது. சமயத்தில் காரசாரமும் இருக்கவேண்டும். எப்பொழுதும் இனிப்பாகவே சாப்பிட்டால் திகட்டிவிடும். எனவே, காரமும் தேவைப்படும். அதனால் தான், இன்பம்- துன்பம் என்ற இரண்டும் கலந்ததே வாழ்க்கை என்றார்கள். ஊடலும் வேண்டும், தேடலும் வேண்டும். திருக்குறளில் "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்று கூறப்பட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தையது வள்ளுவரின் காலம். குறளில் கூறப்படாத விஷயமே (பொருள்) இல்லை. இம்மைக்கும் மறுமைக்கும் பொருத்தமான நூல். அதனால் தான் அதைத் தமிழ் மறை (தமிழ் வேதம்) என்றார்கள். வள்ளுவரின் மனைவி வாசுகி என்று வரலாறு கூறும். ஆனால், அவருக்கு வாரிசு- குழந்தைகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. எனினும், அவர், "குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்' என்று எழுதியிருப்பதால், அவருக்கு மக்கள் செல்வம் இருந்துள்ளது தெரியவரு கிறது. 5-ஆமிடம் புத்திர ஸ்தானம். அதை (துலா ராசி யாகிய) 6-க்குரிய செவ்வாய் பார்ப்பதால்- 5-க்குரிய சுக்கிரன் 12-ல் மறைவதால், சிலருக்கு புத்திர தோஷம் இருக்கலாம். வேறுசிலருக்கு புத்திர சோகம் ஏற்படலாம். பிள்ளைகளே இல்லை யென்பது புத்திர தோஷம். பிள்ளைகள் பிறந்து மடிவது புத்திர சோகம். களத்திர தோஷத்தைவிட புத்திர தோஷமும் சோகமும் கொடியது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் 2-க்குரிய சூரியன் நிற்க, 9-ல் 10-க்குரிய செவ்வாய் இருப்பதும், 10-ஆமிடத்தை (மேஷம்) 9-க்குரிய குரு பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி- தர்மகர்மாதிபதி யோகம் இருந்துவிட்டால் போதும்; அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி எனப் போற்றப்படுவார். தர்ம ஸ்தானம் என்பது 9-ஆமிடம். கர்ம ஸ்தானம் என்பது 10-ஆமிடம். 9- திரிகோணம். 10- கேந்திரம். திரிகோணம் இறையருளைக் குறிக்கும். கேந்திரம் மனித முயற்சியை விளக்கும். மனிதன் நினைக்கிறான்; இறைவன் முடிக்கிறான் (நிறைவேற்றுகிறான்). கடவுள் எல்லாரையும் காப்பாற்றினாலும், இருவருக்கு மட்டும் அருள் துணை புரியமாட்டார். ஒன்று சோம்பேறி, இன்னொன்று நம்பிக்கைத் துரோகி. ஆனால், இன்றைய கலியுக தர்மம் துரோகிகளுக்குத் துணைபோகிறது. உண்மையில் துரோகம் நிலைக்காது. "பாட்ஷா' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ""ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான். ஆனால், கைவிடமாட்டான். கெட்ட வர்களுக்கு அள்ளிக்கொடுப்பான். ஆனால், கைவிட்டுவிடுவான்'' என வசனம் பேசுவார். அது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால் தான் "நல்லவன் வாழ்வான்' என்றார்கள். ""நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு- ஒன்று மனசாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். கெட்டது உடனே சபையேறும். நல்லது நின்று நிதானித்து நியாயத்தைக் (தர்மத்தை) காக்கும். புராண காலத்தில் நல்லவர்கள் ஐந்துபேர்தான். (பஞ்சபாண்டவர்கள்). கெட்டவர்கள் நூறுபேர். (கௌரவர்கள்). துரியோதனன் உள்பட நூறு பேரும் அழிந்தனர். பஞ்சபாண்டவர்கள் வாழ்ந் தனர். நல்லதைவிட கெடுதலே அதிகம் (பர்சன் டேஜ்) என்றாலும், கெட்டது அழியும், நல்லது வாழும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைவு. என்றாலும், அவர் புனர்பூசம் 4-ல் குருவின் சாரத்தில் வர்க்கோத்தமமாகவும் பிறகு, சனியின் சாரத்திலும் (பூசம்) சஞ்சாரம். சனி 6, 7-க்குரிய கெட்டவர் என்றாலும், 5-ல் குருவோடு சேர்ந்து, குருவீட்டில் இருப்பதால் சனியும் இனியவரா கிறார். "நல்லாரைக் காண்பதும் நன்று- நல்லா ரோடு இணங்கியிருப்பதுவும் நன்று' என்பது ஆன்றோர் வாக்கு; சான்றோர் வாக்கு. எனவே, ராசிநாதன் மறைவு எனக் கவலைப்பட வேண்டாம். நவகிரகங்களுள் ராகு, கேது சாயாக் கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்பதால் சொந்த வீடு இல்லை. மற்ற ஏழு கிரகங்களுக் குத்தான் ஆட்சி வீடுகள் உண்டு. இதில், சூரியனுக்கு சிம்மம், சந்திரனுக்குக் கடகம் என ஒவ்வோர் ஆட்சி வீடு. மற்ற ஐந்து கிரகங் களுக்கும் இரண்டு வீடுகளாகப் பத்து ஆட்சி வீடுகள். ஒன்பது கிரகங்களிலும் நமது பார்வையில் தெரியும் கிரங்கள் இரண்டுதான். பகலில் சூரியன், இரவில் சந்திரன். எனவே, இவர் களின் வலிமைக்குத் தனித்துவமும் முக்கியத்து வமும் உண்டு. ஆகவே, 12 ராசி- லக்னத்திலும் கடக ராசி- கடக லக்னம், சிம்ம ராசி- சிம்ம லக்னத்துக்கு முக்கியத்துவம் உண்டு. ராசிக் கட்டம் என்னும் ராஜ்ஜியத்துள் கடகம்- ராணி; சிம்மம்- ராஜா; மிதுனம், கன்னி (புதன்)- மந்திரி; துலாம், ரிஷபம் (சுக்கிரன்)-கொத்தவால்; விருச்சிகம், மேஷம் (செவ்வாய்)- தளபதி; தனுசு, மீனம் (வியாழன்)- குரு; மகரம், கும்பம் (சனி)- சேவகன் எனச் சொல்லப்படும். சிம்மத்துக்கு குரு பார்வை இருப்பதால், குரு பார்க்கக் கோடி நன்மை என்பதுபோல, எல்லா தோஷங்களும் விலகியோடிவிடும். நினைத் தது நிறைவேறும். கருதியது கைகூடும். விரும்பியதும் வேண்டியதும் வந்தடையும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி. அதனால், உங்களுடைய செயல்களிலும் முயற்சிகளிலும் தோல்விக்கும் தொய்வுக்கும் இடமில்லை. எண்ணியது ஈடேறும்- நினைத்தது நிறைவேறும். 10-ஆமிடத்தையும், 10-க்குரிய புதனையும் குரு பார்ப்பதன்பலனாக நல்ல தையே எண்ணுவீர்கள். அதனால் நல்லதே நடக்கும். 10-ல் ராகு நிற்க, சனியும் கேதுவும் பார்ப்பதால் தடைகளும் குறுக்கீடுகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றை சந்தித்து வெற்றிகொள்வதுதான் சாதனையாளர்களின் சக்தி- திறமை. ""மயக்கமா, தயக்கமா, வாழ்க்கை யில் கலக்கமா? வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவற்றை சந்தித்து முன்னேறுவதே லட்சியம், வெற்றி'' என்று கவியரசர் கண்ணதாசன் பாடினார். ராகுவும் கேதுவும் குறுக்கீடுகளை உருவாக்கினாலும், தடுப்புகளைத் தாண்டி ஓடுவதே ரேஸ், வெற்றி. அதனால் கிடைப்பது பரிசு, பதக்கம், பாராட்டு! எனவேதான், முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார் என்றார்கள். படிக்கும் மாணவனுக்கு வைப்பது பரிட்சை. வாழும் மனிதனுக்கு வைப்பது சோதனை. சோதனைகளை வென்றால் விலகுவது வேதனை. அதற்கான முயற்சி சாதனை. கிடைப்பது ஆராதனை. "எட்டில் ஒரு ஏழையேனும், பத்தில் ஒரு பாவியேனும் இருக்கவேண்டும்' என்பது ஜோதிட விதி. 10-ல் ராகுவும் அவருக்கு வீடு கொடுத்த புதனும் (ஆட்சியாக) இருப்பதால், உங்கள் முயற்சிகளும் செயல்களும் முழுமை யடையும், முழுவெற்றியடையும். 10-ஆமிடத்தை அதற்கு 9-க்குரிய சனியும், 10-க்குரிய குருவும் 10-க்கு 7-ல் இணைந்து பார்ப்பதால்- 10-ஆமிடத்துக்கு தர்மகர்மாதிபதி யோகம் அமைவதால் செயலாற்றல் சிறக்கும், நினைவாற்றல் செழிக்கும், வெற்றிவாகை கொழிக்கும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந் தாலும், அது சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால் மறைவு தோஷமில்லை. எந்த கிரகமும் 6, 8, 12-ல் மறைந்தாலும், அது ஆட்சி வீடாகவோ, சொந்த வீடாகவோ அமைந்துவிட்டால் அந்தக் கிரகத்து மறைவு தோஷம் பாதிக்காது. "மறைந் திருந்தே பார்க்கும் மர்மமென்ன' என்று பாடியமாதிரி, மறைந்திருந்தே தாக்குவது யுத்த தர்மம்தான். ராமாயணத்தில், வாலியைக் கொல்ல ராமர் மறைந்திருந்துதான் அம்பு எய்தார்- கொன்றார். அதிலொரு தத்துவம் உண்டு. ராமர் எய்யும் அம்புகளெல்லாம் எதிரிகளைத் துளைத்து- வதைத்து, மீண்டும் ராமரின் அம்புராவில் வந்து தங்கிவிடும். ஆனால், வாலியைத் தாக்கிய ராம பாணம் வாலியின் நெஞ்சிலேயே தங்கிவிட்டது. மீண்டும் ராமரிடம் திரும்பவில்லை. இதிலிருந்தே ராமர் நீதிதவறி அம்பு எய்தார் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அப்பொழுது, வாலி ராமர்மீது சாட்டிய குற்றச்சாட்டுக்கு, ராமரால் பதில் கூறமுடியவில்லை. ""நாங்கள் குரங்கு இனம். தம்பி மனைவியை அண்ணன் வைத்துக் கொள்வது எங்கள் மரபு. ஆனால், சம்பந்தமில் லாமல் தம்பிக்குப் பரிந்து என்னை வதைத்தது எவ்வகையில் தர்மம்?'' என்று வினவினான் வாலி. ராமாயணத்தில் இரண்டு இடங்களில் களங்கம் ஏற்படுகிறது. வாலியை வதைத்தது ஒன்று; சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது மற்றொன்று. இதன்விளைவுதான் மனைவியோடு இணைந்து மகிழும் பாக்கியமும், பிள்ளைகளைக் கொஞ்சி மகிழும் பாக்கியமும் ராமனுக்குக் கிடைக்காமல் போனது. வனவாசம் சென்ற ராமன் சீதையை இராவணனிடம் பறிகொடுத்தான். மீண்டுவந்த சீதையை, கர்ப்பமாக இருப்பதறிந்தும் கானகத்தில் கொண்டுபோய்விட்டு வரச்சொன்னான். எண்கணிதப்படி, தஆஙஆ என்ற பெயர் 8 என்னும் எண் சனியின் ஆதிக்கம் நிறைந்தது. பெருந் தலைவர் காமராஜர் சென்னையில் வாழ்ந்த வீடு திருமலைப் பிள்ளை சாலை, 8-ஆம் எண் வீடு. 8 என்பது குடும்ப வாழ்க்கையைக் கெடுக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் குரு வீட்டில் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 2-ல் ஆட்சிபெறுகிறார். எனவே, ஏழரைச்சனியின் கடைசிக் கட்டமானாலும், ஏழரைச்சனி பெரும்பாலருக்குப் பொங்கு சனியாகத் திகழ்கிறது- திகழும். முதல் சுற்று மங்கு சனி, இரண்டாம் சுற்று பொங்கு சனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்பது ஜோதிட விதி. அதற்காக, மூன்றாம் சுற்று ஏழரைச்சனியைச் சந்திப்பவர்களெல்லாம் மரணமடைவார்கள் என அர்த்தமல்ல. நான்கு சுற்று சனியைச் சந்தித்தவர்களெல்லாம் உண்டு. (உதாரணம் மறைந்த முதல்வர் மு. கருணாநிதி- ரிஷப ராசி). விருச்சிகம் செவ்வாயின் ராசி. செவ்வாய், சனியின் ராசியான மகரத்தில்தான் உச்சம். அதேசமயம், செவ்வாயின் ராசியான மேஷத்தில்தான் சனி நீசம். இதனடிப்படையில்தான், செவ்வாய்- சனி சம்பந்தம் கெடுபலன் என்று கூறினார் கள். "மந்தன், சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது- பார்த்திருப்பதும் தீது' என்பது ஜோதிட விதி. ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி சம்பந்தமிருந்தால், அந்த ஜாதகர் (அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி) காதல் திருமணம், கலப்புத் திருமணம் அல்லது மண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திப்பதுண்டு. பெரும்பாலும் இந்த ஜோதிட விதி பொய்யாகாது. என்மீது அபிமானம் கொண்ட தம்பி வஞ்சி வசந்தன் (நத்தம் ஜோதிடர்- டாக்டர் பட்டம் பெற்றவர்) இந்த விதியை சுட்டிக்காட்டி பெருமைகொள்வார். இதில், குரு சம்பந்தமானால் விதிவிலக்கு ஏற்படும். அதனால், செவ்வாய் குருவோடு சம்பந்தம்- பார்வை- சாரம் அல்லது குரு வீட்டிலிருந்தால் விதிவிலக்கு. ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. (கௌசிகர்) விசுவாமித்திரரும் வசிஷ்டரும் தர்க்கம் செய்யும் ஜோதிடப் பாடல்களுள் இதன் தன்மையை ரசிக்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு தன் ராசியில் 9-க்குரிய சூரியன் சாரத்தில் (உத்திராடம் 1-ல் வக்ரம்) ஆட்சியாக இருக்கிறார். சூரியன் தனுசு ராசிக்கு 9-க்குரிய பாக்கியாதிபதி. எந்தக் கிரகம் எங்கே இருந்தாலும், எப்படியிருந்தாலும் திரிகோணாதிபதியின் (5, 9) சம்பந்த மிருந்தால், அந்தக் கிரகம் முன்ஜாமின் பெற்றுக் கொள்வதற்குச் சமம். (முன்ஜாமின் பெற்றவரை எந்த சட்டமும் கைதுசெய்யமுடியாதல்லவா?) எனவே, தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி, ஏழரைச்சனி நடந்தாலும், ஜென்மக் கேது- சப்தம ராகு பார்வை இருந்தாலும் எந்த வகையிலும் பாதிப்புக்கு இடமிருக்காது. சுக்கிரன் 6-க்குரியர்; 6-ல் ஆட்சி. வாழ்க்கை, தொழில், வேலை என்ற 10-ஆமிடத்துக்கு (கன்னிக்கு) 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி. ஆகவே, ஜென்மச்சனி, ஜென்மக் கேது போன்ற எந்தக் கெடுபலனும் உங்களைத் தாக்காது- சிவனின் கழுத்திலிருக்கும் பாம்பு "கருடா சௌக்கியமா' என்று கேட்டமாதிரி- "இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே' என்று கருடன் பதில் சொன்னமாதிரி. அதாவது, ஜென்மச்சனி, ஜென்மக் கேது ஆகியவையெல்லாம் உங்களைப் பாதிக்காதென அர்த்தம். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக் கும் உங்களின் வாழ்க்கைத்துணையே அடிப் படைக் காரணமாக அமையும். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உறு துணையாக அமையும். ஆண்- பெண் ஒருவருக் கொருவர் ஆதரவு, துணை என்பதை உணர்த் தவே அர்த்தநாரீஸ்வர தத்துவம் அமைந்தது. இதை ஒரு திரைப்படத்தில் பாடலாசிரியர் விளக்கினார்- ""நீதானே என் பொஞ்சாதி, நானே உன் சரிபாதி'' என்று. கணவர்-மனைவி என்பது ஒரு நாணயத்தின் இருபக்கம்போல.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவென் றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு அவருடன் சேர்க்கை. அதனால், மறைவு தோஷமில்லை. எந்தவொரு கிரகமும் 6, 8, 12-ல் மறைந்தாலும், அந்த கிரகம் நின்ற ராசிநாதனின் சாரம் பெற்றாலும் அல்லது அதற்கு கேந்திர- திரிகோணம் பெற்றாலும்- பார்வையைப் பெற்றாலும் மறைவு தோஷம் விலகும். (விதிவிலக்கு). ஜோதிடம் என்பது ஒரு பெருங் கடல். இதில் மூழ்கி, பலன் என்னும் முத்து எடுக்க வேண்டுமானால் மூச்சடக்கி நீச்சலடிக்கும் பயிற்சி தேவை. ஜோதிடப் பலன் என்பது ராசி, நவாம்சம் எனும் இரண்டு கட்டங்களுக்குள் அடங்கிவிடும். ராசியிலிருக்கும் கிரகம் எந்த சாரம் என்பது நவாம்சத்தைப் பார்த்தாலே புரிந்துவிடும். மற்ற திரேகாணம், அஷ்டவர்க்கம், போன்றவையெல்லாம் சாப்பாட்டில் சைடிஷ் போலத்தான். சாதம், சாம்பார் அல்லது ரசம் அல்லது மோர் இருந்தால் போதும்- பசி அடங்கிவிடும். மோர் சாதத்துக்கு அல்லது பழைய கஞ்சிக்கு ஊறுகாய் இருந்தாலே போதும். செட்டிநாட்டுப் பக்கம் தலை வாழையிலை பெரிதாகப்போட்டு 16 வகையான காய்கறிகளுடன் விருந்து படைப்பார்கள். அதெல்லாம் அலங்காரந்தான். சாதமும் அதில் ஊற்றிச்சாப்பிடக் குழம்பும்தான் பிரதானம். வெறும் அப்பளம் மட்டும் இருந்தால் போதும். கும்பகோணம் அருகில் ஒரு ஆசிரமத்துக்கு இரவு நேரம் காலதாமதமாகப் போனோம். அங்குள்ள சாமியார் (நிர்வாகி) "சாப்பிட்டீர்களா' என்று கேட்டார். "இல்லை' என்றோம். உடனே ஏற்பாடு செய்தார். சாதம், ரசம், அப்பளம், ஊறுகாய்தான். இருந்தாலும், அந்தப் பசி நேரத்துக்கு அமுதாக இருந்தது. இதேபோலத்தான், ஜோதிடப் பலன் சொல்ல ராசி, அம்சம், தசாபுக்தி இருப்பு, பிறந்த தேதி மட்டும் போதும். 12 பாவ ஆராய்ச்சி செய்து பலனைச் சொல்லிவிடலாம். கிரகப் பாதசாரத்தை, நவாம்சத்தை வைத்தே கணக்கிட்டுவிடலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் குருவோடு கூடியிருக்கிறார். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்க கூறு பொன்பொருளுண்டாம், ஏறும் பல்லக்குண்டாம், இடம் பொருள் ஏவலுண்டாம். பாறுபாலஷ்ட லட்சுமி கடாட்சமும் உண்டாகும்' என்பது ஜோதிடப் பாடல். ஆகவே, சனி பகவான் இனிய நற்பலன் தருமிடங்கள் 3, 6, 11 ஆகியவைதான். எனவே, 11-ல் உள்ள சனி உங்களுக்கு எல்லா வகையிலும் லாபம், வெற்றி, நன்மை, தைரியம் எல்லாம் தரும். சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், செல்வாக்கு, புகழ், திறமை, பாராட்டு எல்லாம் அமையும். 5-ஆமிடத்தைப் பார்ப்பதால், பிள்ளைகளால் பெருமையும் சந்தோஷமும் உண்டாகும். கும்ப ராசிக்கு 8-ஆமிடத்தையும் சனி பார்ப்பதால், சிலசமயம் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்கநேரும். பெரும்பாலும் 6, 8, 12-க்குரிய தசாபுக்தி நடந்தால்தான் கௌரவப் பிரச்சினை உருவாகும். இல்லா விட்டால், பெரும் சங்கடங்கள் ஏற்படாது. புது முயற்சிகள் வெற்றியடையும். அதில் கணிசமான லாபமும் அடையலாம். குடும்பத்தில் ஒற்றுமை யும் நல்லுறவும் நட்பும் மலரும். வேலை யில்லாதோருக்கு வேலையும், தொழில் இல்லா தோருக்கு தொழில்யோகமும் உண்டாகும். ஏற்கெனவே பணியில் திருப்தியில்லாமல் தவிப்போருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பாராட்டு போன்ற நற்பலன்கள் எல்லாம் உண்டாகும். பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணைந்து இன்பம், மகிழ்ச்சி அடையலாம். சிலர் மனை, வீடு, வாகன வகையில் சுபமுதலீடு செய்யலாம். அதுசம்பந்தமான பணப் பற்றாக் குறையை சமாளிக்க சுபக்கடன் வாங்கலாம். சிலர் புதுக்கடன் வாங்கி பழைய கடன்களை அடைப்பதன்மூலம் வட்டிச் சிக்கலை சமாளிக்கலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 10-ல் குரு, சனி சம்பந்தம். ஜென்ம ராசியில் 2, 9-க்குரிய செவ்வாய் சம்பந்தம். இவை உங்களுக்கு அனுகூலமான கிரக நிலையை எடுத்துக்காட்டும். 6-க்குரிய சூரியன் 5-ல் நிற்பதால், சிலருக்கு பிள்ளைகளுக்காகக் கடன் வாங்கி சில நல்ல காரியங்களை செயல் படுத்தும் யோகமுண்டாகும். அல்லது பிள்ளைகளே தங்கள் வாழ்வாதார முயற்சிக் காகவும் வசதிகளுக்காகவும் கடன் வாங்கி செயல் படுத்தலாம். சிலர் அனுபவத்தில் பூர்வீகச் சொத்து, பங்குபாகப் பிரச்சினைகளில் நல்ல முடிவெடுத்து செயல்படுத்தலாம். சிலர் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் (எக்சேஞ்ச்) வாங்கலாம். சிலர் நண்பர்களை நம்பி புதிய தொழில் முயற்சி களில் இறங்கலாம். உணவு, பலசரக்குப் பொருள்க்கள் போன்ற தொழில்துறைகளில் கால்பதிக்கலாம். அதற்கு அனுபவரீதியான, நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் அமையலாம். பொதுவாக, தொழில் தெரியாதவர்கள் ஒரு தொழிலை ஆரம்பித்து, வேலையாட்களை நியமித்து தொழில்செய்வதைவிட, தொழில் தெரிந்தவர்களைக் கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு தொழில் ஆரம்பிப்பது நல்லது. பணம் நம்முடையது- பாடுபடுவது (உழைப்பு) அவர் களுடையது என அமைந்தால், அது வளர்ச்சி யடையும். அப்படிக் கூட்டுசேர்க்கும்போது 6 ல 8 சஷ்டாஷ்டக ராசிக்காரர்களாக இருக்கக் கூடாது. 5, 9 திரிகோண ராசிகளாக அமைந்தால் விரைவில் வளர்ச்சியடையும். லாபம் பெருகும். எப்படி ஒரு திருமணத்துக்கு ஆண்- பெண் பொருத்தம் பார்க்கிறோமோ, அப்படியே தொழில் கூட்டாளிகளுக்கும் பொருத்தம் பார்க்கவேண்டும்.