ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 2, 3, 4.
செவ்வாய்: மகம்- 1, 2.
புதன்: பூசம்- 2, 3, 4,
ஆயில்யம்- 1, 2.
குரு: அவிட்டம்- 4.
சுக்கிரன்: மகம்- 3, 4, பூரம்- 1.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 1.
கேது: அனுஷம்- 1.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
25-7-2021- கும்பம்.
28-7-2021- மீனம்.
30-7-2021- மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவரை 11-ல் இருக்கும் குரு பார்க்கிறார். செவ்வாய்க்கு வீடுகொடுத்த சூரியன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். 10-ல் சனி ஆட்சிபெற்று சூரியனையும் அவருடன் இணைந்த புதனையும் பார்க்கிறார். தகப்பனாருக்கு சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். குரு 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதர, தைரிய, சகாய ஸ்தானம். ஆகவே, இதுவரை சகோதர- சகோதரிகளிடையே நிலவிய மனக்கசப்புகள் மாறி ஒற்றுமை உண்டாகும். அவர்களில் வழியில் சுபமங்களப் பலன்கள் நடைபெறும். தொழில்ரீதியாக சிலர் தைரியமான மாற்றங்களை மேற்கொள்ளலாம். இரும்பு எந்திரம் கணினி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் அடிமை வேலையிலிருந்து விலகி சுயதொழில் அமைப்பை ஏற்படுத்தலாம். திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்து ஒற்றுமை, அன்பு எல்லாம் நிறைவாக அமையும். விலகியிருந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று வாழலாம். நீண்டகாலமாக வாரிசு இல்லையென்று ஏங்கியவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். பிள்ளைகளால் நன்மதிப்பும் ஏற்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரபலம் பெறுகிறார். 4-ஆமிடம் சுக ஸ்தானம். அங்கு 12-க்குடைய செவ்வாயுடன் சுக்கிரன் இணைகிறார். தேகநலன் நன்றாக இருந்தாலும் அவ்வப்போது சிறுசிறு உபாதைகள்- அதனால் வைத்தியச்செலவுகள் ஏற்பட இடமுண்டு. பெரிய பாதிப்புகளுக்கு இடம் இருக்காது- பயம் தேவையில்லை. குடும்பத்தில் பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. வரவுக்கேற்ற செலவும் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். என்றா லும் 2-க்குடையவர் 3-ல் மறைவதால் சேமிப்புக்கு இடமில்லாதவகையில் அமையும். 9-ல் சனி ஆட்சி. அவர் 10-க்குடையவருமாவாதல் தர்மகர்மாதி பதி யோகம் ஒருபுறம் உங்களை வழிநடத்தும். பொதுவாக ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் சனி ராஜயோகாதிபதியாவார். ரிஷப ராசிக்கு 9, 10-க்குடையவர். துலா ராசிக்கு 4, 5-க்குடையவர். கேந்திர பலமும் திரிகோண பலமும் அவரே. எனவே, இந்த இரு ராசிகளுக்கு பெரிய கெடுதல்களையும் பாதிப்புகளையும் சனி ஏற்படுத்தமாட்டார் என்று நம்பலாம். 10-ல் குரு நிற்க, அவரை 12-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். இருவரும் பரஸ்பரம் பார்வை. தொழில்ரீதியாக சுபவிரய முதலீடுகளைச் செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்த கட்ட உயர்வை சந்திக்கலாம். சிலருக்கு தனியாகவோ அல்லது கூட்டுத்தொழில் அமைப்புகளையோ பற்றிய எண்ணங்கள் எழலாம். குருமங்கள யோகம் காரியங்களைத் தடையின்றி நடத்தும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 2-ல் சூரிய னோடு இணைந்திருக்கிறார். திட்டமிடாமல் செய்யும் காரியங்களில்கூட வெற்றி வாய்ப்பு உண்டாகும். மிதுன ராசிக்கு அட்டமத்துச் சனி ஒருபுறம் அலைக்கழித்தாலும் ஆதாயமும் கிடைக்கும். 8-ல் சனி ஆட்சி. சிலநேரம் உங்கள் திட்டங்கள், செயல்பாடுகள், எண்ணங்கள் இவற்றில் சந்தேகம், கற்பனை பயம், சஞ்சலம் போன்றவற்றை உருவாக்கலாம். என்றா லும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமைகளும் கீர்த்திகளும் வீண்போகாது. நினைத்த காரியத்தை தாமதமானாலும் செய்துமுடிக்கலாம். 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் மறைவு. அவர்களுக்கு குரு பார்வை. மனதைரியம், தன்னம்பிக்கை, நண்பர்கள் உதவி, சகோதர ஒற்றுமை எல்லாம் நன்றாக இருக்கும். உங்களைப் பற்றி தவறாக நினைத்து விலகியிருந்த ரத்த பந்த சொந்தங்கள் இப்போது உங்கள் அருமைபெருமை தெரிந்து மீண்டும் வந்து இணையலாம். நீங்களும் "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்ற அடிப்படையில் அவர்களைப் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வீர்கள். 6-ஆமிடத்துக் கேது நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை விலக்கிவிடுவார். தேகநலம் தெளிவாக இருக்கும். கடன் சுமைகள் குறைய வழிவகைகள் பிறக்கும். நிலுவையில் இருந்த பிரச்சினைகளில் சுமூகத் தீர்வு காணப்படும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் 2-க்கு டைய சூரியனும் 12-க்குடைய புதனும் இணைந்திருக்கிறார்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றம் உண்டாகும். தொழில் அல்லது வேலை சம்பந்தமாக விரயங்களை ஏற்படுத்தி லாபங்களை சந்திக்கலாம். அதாவது முதலீடு செய்து பிறகு சம்பாதிப்பது. 2-ஆமிடத்தை குரு பார்க்கிறார். 11-க்குடைய சுக்கிரனும் 10-க்குடைய செவ்வாயும் 2-ல் சேர்க்கை. எனவே தனவரவு திருப்திகரமாக விளங்கும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகளுக்கும் இடமுண்டு. 6-க்குடையவர் 8-ல் மறைவது ஒருவகை யில் நன்மைதான். போட்டி, பொறாமை, எதிரி தொல்லைகளி-ருந்து விடுபடலாம். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் அமையும். வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பத்திருந்தால் அது கைகூடும். சகோதரர்களால் நன்மையும் உண்டாகும். அவர்கள்வகையில் நற்பலன் நடைபெறும். 7-ல் சனி நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். கணவன்- மனைவிக் குள் மனப் போராட்டம், சரளமான பேச்சு வார்த்தைகள் இல்லாமை போன்ற விஷயங்கள் உங்களை சங்கடப்படுத்தலாம். அல்லது மனைவிக்கு தேகநலக் குறைவால் வைத்தியச் செலவுகள் உண்டாக்கி உங்களை அலைக்கழிக்கலாம். என்றாலும் களஸ்திரகாரகனை குரு பார்ப்பதால் இவற்றை சமாளிக்கும் ஆற்றலும் பொறுமை யும் உண்டாகும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. அந்தக்கடனும் எளிதாக அடைபடும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைவு. 9-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் இருக்கிறார். அவருடன் 10-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். அவர்கள் இருவரையும் 5-க்குடைய குரு 7-ல் நின்று பார்க்கிறார். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கை. 10-க்குடைய சுக்கிரனை 5-க்குடைய குரு பார்ப்பதும் ஒரு யோகம். எனவே, இந்த வாரம் முழுவதும் சிம்ம ராசிக்காரர்களுக்கு எண்ணியது ஈடேறும்; நினைத்தது நிறைவேறும். பணம், பதவி, பட்டம் படைத்தவர்கள் சாதிப்பதைக் காட்டிலும் பண பட்டம், பதவி எதுவுமில்லாத எளியவர்கள் சாதித்துவிடலாம். பண சக்தி, மக்கள் சக்தி, இறைசக்தி என்று மூன்று உண்டு. இந்த மூன்றுக்கும் மேலாக உழைக்கும் சக்தி என்ற ஒன்று உண்டு. அதை முயற்சி என்றும் சொல்லலாம். உழைப்பு என்றும் சொல்லலாம். கடைசியாகச் சொல்லப்பட்ட முயற்சியும் உழைப்பும் இருப்பவர்களுக்கு வெற்றித் திருமகளின் கருணையும் கடாட்சமும் நிச்சயம் இருக்கும். நான் அடிக்கடி எழுவது- துரோகிக்கும் சோம்பேறிக்கும் இறைவன் துணை நிற்கமாட்டார். அதேபோல உண்மையும், விசுவாசமும், முயற்சியும் உடையவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அதைத்தான் திருவள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். முயற்சியும் வைராக்கியமும் வெற்றி தரும் என்பதற்கு உதாரணம் ராஜரிஷி விசுவாமித்திரர்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் கடகத்தில் இருக்கிறார். அவர் 10-க்குடையவருமாவார். 10-க்குடையவர் 11-ல் இருப்பது சிறப்பு. அவருடன் சூரியன் இருப்பது சிறுசிறு தடைகள், குறுக்கீடுகள் ஏற்படலாம். என்றா லும் 5-க்குடைய சனி ஆட்சிபெற்று சூரியனையும் புதனையும் பார்ப்பதால் தோஷநிவர்த்தி, தடைகளைக் கடந்து வைராக்கியத்தோடு செயல்படலாம். மேலும் குருவும் வக்ரம்; சனியும் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். 11-ல் சூரியன் இருப்பது ஒரு தனிபலம். அதனால் விரயாதிபத்திய தோஷம் விலகும். குரு 6-ல் மறைவதால் தாயார் அல்லது தாரத்தின் வகையில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும், பாக்கியாதிபதி சுக்கிரன் பார்வையால் அவற்றை சமாளிக்கலாம். 3-ல் கேது. 3-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவதால் உடன்பிறப்புக்கள் வகையில் சங்கடங்களை சந்திக்க நேரும். குரு செவ்வாயைப் பார்ப்பதால் எதையும் சமாளிக்கலாம். மேலும் 11-ல் இருக்கும் சூரியன் சமாளிக்கும் சக்தியைத் தரும். 9-ல் ராகு நிற்பது தெய்வபலத்தைக் குறிக்கும். அந்த வீட்டுக்கு உடையவர் சுக்கிரன் என்பதால், உங்கள் குலதெய்வம் அல்லது குடும்பதெய்வம் பெண் அம்சமாக (சக்திரூபம்) உங்களுக்குத் துணை நிற்கும். ஒவ்வொருவருக்கும் குலதெய்வம், குடும்பதெய்வம், இஷ்ட தெய்வம் என்று மூன்று உண்டு. அம்மூன்றும் உங்களுக்குத் துணைபுரியும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் நிற்க, 5-ஆமிடத்து குரு அவரைப் பார்க்கிறார். துலா ராசிக்கு குரு 3, 6-க்குடையவர். கெட்ட ஆதிபத்தியம் பெற்றாலும் 5-ஆமிடமாகிய திரிகோணத்தில் நிற்பதால் அவருக்கு கெட்ட ஆதிபத்திய தோஷம் (3, 6-க்குடைய தோஷம்) பாதிக்காது. "ஐந்து ஒன்பதுக்கதிபர் பாபர் சுபரானா லும் பொன் போன்ற நன்மையே புரிவார்' என்பது சந்திரகாவிய விதி. குருவுக்குத் திரிகோணமும் சனிக்கு கேந்திரமும் பலமான இடங்களாகும். ராசிநாதன் சுக்கிரனையும் குரு பார்க்கிறார். துலா ராசியையும் குரு பார்க்கிறார். எனவே, குரு பார்க்க கோடி தோஷம் விலகும் என்பதுபோல எல்லாம் வளமாகவும் நலமாகவும் அமையும். அதனால் 2-ஆமிடத்துக் கேதுவும் 8-ஆமிடத்து ராகுவும் கெடுபலனை நீக்கி சுபபலனைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 10-ல் உள்ள சூரியனும் 11-ஆமிடத்து செவ்வாயும் எல்லாவகையிலும் நல்ல பலனாகவே செய்வார்கள். 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். மனைவி, மக்கள், தொழில், பொருளாதாரம், பணவரவு, நண்பர்கள் வட்டாரம் எல்லாவற்றிலும் உங்களுக்கு நற்பலனாகவே நடக்கும் என்று நம்பலாம். 8-ல் ராகு நிற்பது ஒருவகையில் குற்றம் என்றாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரனை குரு பார்க்கிறார். எனவே ராகுவும் உங்களுக்கு நல்லதையே செய்வார்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்து 10-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் 4-ல் உள்ள குரு பார்வை கிடைக்கிறது. அதனால் ஜென்ம கேது, சப்தம ராகு தோஷம் விலகும். 5-க்குடைய குரு 4-ல் இருக்கிறார். திரிகோணாதிபதி கேந்திர பலம் பெறுவதால் 2-ஆமிடம் எனப்படும் வாக்கு, தனம், குடும்பம் இவற்றிலும், 5-ஆமிடம் எனப்படும் மகிழ்ச்சி, திட்டம், பிள்ளைகள்வகையிலும் பெருமையாகச் சொல்லுமளவு நல்ல பலனாகவே நடக்கும். மேலும் ராசிநாதன் செவ்வாய் 7-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்து 10-ல் நிற்க, அவர்களை குரு பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும் திருமணமானவர்களுக்கு கணவ னால் அல்லது மனைவியால் முன்னேற்ற யோகமும் உண்டாகும். ஜென்ம கேது, சப்தம ராகு தோஷமும் விலகுவதால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி திருமணத்தடை விலகும் என்பதோடு, கணவருக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவராலும் நன்மைகளுக்கு குறைவில்லை. 10-க்குடைய சூரியன் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதனால் தொழில் முன்னேற்றம், முயற்சிகளில் வெற்றி, லாபம் உண்டாகும். 8-க்குடைய புதன் சேர்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை வந்தடையும்; தேகநலம் தெளிவுபெறும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசி பாகம் நடக்கிறது. சனி ஆட்சி பெற்றவர் என்பதால் ஏழரைச்சனி எந்தச் சுற்றாக இருந்தாலும் (அதாவது முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றாக) உங்களுக்கு பொங்கு சனி என்ற பொலிவைத் தரும். முதல் சுற்று ஏழரை மங்குசனி என்றும், இரண்டாவது சுற்று ஏழரை பொங்குசனி என்றும், மூன்றாவது சுற்று ஏழரை மரணச்சனி என்றும் பொதுவாகச் சொல்வார்கள். அந்த விதி உங்கள் ராசிக்கு விதிவிலக்காகி விடும். 9-க்குடைய சூரியனும் 10-க்குடைய புதனும் இணைவதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அவர்கள் 8-ல் மறைவதால் மேற்படி யோகம் செயல்படுமா செயல்படாதா என்ற சந்தேகம் ஏற்படலாம். தர்மகர்மாதிபதி சேர்க்கை என்பதால் மேற்படி யோகம் உறுதியாகச் செயல்படும். திருமணமாகாதவர்களுக்கு தாய்வகையிலும், திருணமானவர்களுக்கு தாரத்தின்வகையிலும் அந்த யோகம் பிரதிபலிக்கும் பலன்தரும். அதாவது தாய்க்குபின் தாரம். அதனால் யோகம். 6-ல் ராகு நிற்பதும், 6-க்குடைய சுக்கிரன் செவ்வாயோடு சேர்வதும் சத்ரு ஜெயம் மட்டுமல்ல; கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி என்று 6-ஆமிடத்து, கெடுபலன்களையும் விலக்கிவிடும். 4-க்குடைய குரு 3-ல் மறைவதால் பூமி, வீடு, வாகனம், கட்டடம் சம்பந்தப்பட்ட பலன்கள் தடைப்பட்டாலும் தாமதப்பட்டாலும், திரிகோணாதிபதி செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் முடிவில் நன்மையாக அமையும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கி றார். 6-க்குடைய புதனும் 8-க்குடைய சூரியனும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார் கள். 7-ஆமிடம் மனைவியையும் குறிக்கும். உபதொழில் யோகத்தையும் குறிக்கும். 6, 8-க்குடைய கிரகங்களின் சேர்க்கையால் மனைவி, தொழில்வகையில் சிலருக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், 2-ல் குரு நின்று 9-க்குடைய புதன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும் காரணத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். உங்கள் சாமர்த்தியத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். அதே சமயம் 5-ல் ராகு நிற்பதும் 5-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதும்- உங்கள் மனமும் எண்ணங்களுமே சத்ருவாகவும் இடையூறாக வும் அமையும். அதனால் "எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவதும் என்பது இழுக்கு' என்ற திருக்குறளைப் பயன்படுத்தி சிந்தித்துச் செயல்படுத்தினால் வெற்றிக்கொடி நாட்டலாம். தலைவலிக்கு மருந்து கேட்டால் பத்துபேர் பத்துவிதமாகச் சொல்வார்கள். ஒரே முடிவெடுத்து செயல்பட்டால் நோயும் குணமாகும் வலியும் தீர்ந்துவிடும். ஆகவே குழப்பத்திற்கு இடம்தராமல் எந்த முடிவையும் சொந்த முடிவாக்கி துணிவோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசியில் 2, 11-க்குடைய குரு நிற்கிறார். 3, 10-க்குடைய செவ்வாயும் 4, 9-க்குடைய சுக்கிரனும் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க் கிறார்கள். திரிகோணாதிபதியும் கேந்திராதிபதியும் இணைவதும் ராசியைப் பார்ப்பதும் உங்களுக்கு குருவருளும் திருவருளும் இருப்பதாக அர்த்தம். செவ்வாய் சகோதரகாரகன். சுக்கிரன் களஸ்திரகாரகன். திருமணமானவர்களுக்கு கணவன் அல்லது மனைவியின் ஆலோசனையும், திருமணமாகாதவர்களுக்கு உடன்பிறப்புகளின் ஆலோசனையும் அனுகூலமாகவும் ஆதரவாகவும் அமையும். 3-ஆமிடம் நண்பர்களையும் குறிக்கும். ஆகவே, நம்பிக்கையான நல்ல நண்பர்களின் ஆலோசனையும் உங்களை வழிநடத்தும். அதற்கு மேலாக தெய்வத்தின் வழிநடத்தலும் உங்களுக்கு நல்லதுணையாக அமைந்து நல்லது செய்யும். ஜென்மத்தில் உள்ள குரு அறிந்தோ அறியாமலோ உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணம் என்பதை உணர்த்துவார். ஜாதகம் எழுதும் போது "ஜெனனீ ஜென்ம ஸௌக்யானாம் வர்த்தனி குல தாம் சம்பள பதவி பூர்வ புண்ணியானாம்' என்று எழுதப்படும். அதாவது நற்குடி பிறப்பு (நல்ல தாய்- தந்தை), படிப்பு, பதவி, செல்வச் சேமிப்பு, எல்லாம் பூர்வபுண்ணிய வசமாக அமைய வேண்டும் என்பது அர்த்தம். குருபலம் இருப்பவர்களுக்கும், திரிகோணாதிபதி (5, 9) கிரக அமைப்பு இருப்பவர்களுக்கும் அது இயற்கையில் சாத்தியமாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். 2, 9-க்குடைய செவ்வாயும் 3, 8-க்குடைய சுக்கிரனும் 6-ல் மறைகிறார்கள். அதே சமயம் 9-க்குடைய செவ்வாயும் 10-க்கு டைய குருவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. மேற்படி யோகத் தால் சுக்கிரன், குரு மறைவு தோஷம் விலகும். யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்கும் போர்த் தந்திரம் என்று ஒன்றுண்டு. அந்த தர்மத்தின்படிதான் இராமபிரான் வாலியை மறைந்திருந்து தாக்கி சுக்கிரீவனுக்கு உதவிசெய்தார். அந்நிலையில் இராமனிடம் வாலி, "நாங்கள் குரங்கு இனம். எங்களுக்கு ஏகபத்தினி முறை கிடையாது. ஆகவே, தம்பி மனைவியை நான் நோக்கு வதும் தர்மத்திற்குப் புறம்பானதில்லை. நீ உன் மனைவியைப் பிரிந்த காரணத்தால் புக்தி கெட்டுப் போய் என்னைத் தண்டித்து விட்டாயோ'' என்று சொல்கிறான். இராமா யணத்தில் இராமனுடைய பெருமையை சிறுமையாக்கிய இடங்கள் இரண்டு. ஒன்று வாலியின் வதம். இன்னொன்று சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது. இதற்குப் பெயர்தான் தர்மசங்கடம் என்பது. குருவோடு பாவகிரக சேர்க்கை சேரும்போது இப்படிப்பட்ட தர்மசங்கடங்களுக்கு ஆளாகவேண்டி வரும். மகன் பரசுராமருக்கு பயந்து ஓடி ஒளிந்த தாய் ரேணுகாதேவியை பரசுராமர் தண்டித்த நிலை!