ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 1, 2, 3.
செவ்வாய்: ரேவதி- 4.
புதன்: விசாகம்- 2, 3, 4, அனுஷம்- 1.
குரு: உத்திராடம்- 1, 2.
சுக்கிரன்: சித்திரை- 4, சுவாதி- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 1.
ராகு: மிருகசீரிடம்- 1.
கேது: கேட்டை- 3.
கிரக மாற்றம்:
24-11-2020- செவ்வாய் வக்ரநிவர்த்தி.
22-11-2020- புதன் அஸ்தமனம்.
15-11-2020 குருப்பெயர்ச்சி (கடந்த வாரம்).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
24-11-2020- மீனம்.
26-11-2020- மேஷம்.
28-11-2020- ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு பத்தில் நீசம். ஆனால் குருவும் சனியும் பரிவர்த்தனை. எனவே, குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். அதனால் உங்களுடைய முயற்சிகள் யாவும் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சி பெறும். குரு 12-க்குரியவர் என்பதால், அவர் பத்தில் நீசபங்க ராஜயோகமும் பரிவர்த்தனை யோகமும் அடைவதால், தொழில் துறையில் நிலவிய தொய்வுகளும் தோல்விகளும் விலகி முன்னேற்றமடையும். மேலும் சம்பளத்துக்குப் பணியாற்றுபவர்கள் முதலாளியாகலாம். ஏற்கெனவே முதலாளியாகி சொந்தத் தொழில்புரிபவவர்கள் வேறிடங்களில் கிளைகள் ஆரம்பித்து தொழிலை விருத்தி செய்யலாம். அல்லது ஒரு தொழில் நடந்து வரும் நிலையில் வேறொரு புதிய தொழில் ஆரம்பிக்கலாம். முதலீட்டுப் பற்றாக்குறை இருந்தால் புதிய தொழிலுக்கு கூட்டாளி சேர்த்துக்கொள்ளலாம். (காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் குமரி அனந்தனின் தம்பி வசந்தகுமார் சிறு அளவில் "வசந்த் அண்ட் கோ' என்று ஒரு தொழில் ஆரம்பித்தார். தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை உருவாக்கி தொழிலையும் வருமானத்தையும் பெருக்கிவிட்டார். உழைப் பால் உயர்ந்தவர்கள் வரிசையில் அவரும் ஒருவர்.) அதுபோல் தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்கும் தொழில் உயர்வையும் பெருமை யையும் செல்வாக்கையும் உண்டாக்கும். 5-க்குடைய சூரியன் எட்டில் மறைவதால், ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வரரை வழிபடவும் அல்லது ஞாயிறுதோறும் நவகிரக வழிபாடு செய்யலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆறில் மறைவுபெற்றாலும் ஆட்சி என்பதால் தோஷமில்லை. மேலும் குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, ராசியை குரு பார்ப்பதால் எதிர் பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். நீண்டகாலமாக தடைப்பட்டுவந்த முயற்சிகள் எளிதாக ஈடேறும். வராமலிருந்த பணமெல்லாம் வசூலாகிவிடும். அதனால் சேமிப்பும் ஆபரண யோகமும் உண்டாகும். அட்டமச் சனி நடந்தாலும் குரு, சனி பரிவர்த்தனை என்பதால் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை மட்டுமல்ல; மனை, வீடு, வாகன யோகமும் உண்டா கும். ஏழாமிடம் கணவன்- மனைவியைக் குறிக்கும். செவ்வாய் பூமிகாரகன். எனவே, மனைவி பேரில் மேற்கண்ட யோகம் ஏற்படும். ராசிநாதன் சுக்கிரன் 6-ல் இருப்பதால், அது சம்பந்தமாகக் கடன் யோகமும் அமையும். கையில் ரொக்கம் இல்லாதவர்கள்தான் கடன் வாங்கவேண்டும் என்பதில்லை. வசதிபடைத்தவர்கள்கூட கையிருப்பை சேமித்து வைத்துக்கொண்டு, வங்கி கடன்வாங்கி வசதி களைப் பெருக்கிக் கொள்வார்கள். அட்டமச் சனி உங்களுக்கு பொங்குசனியாகப் பலனைத்தரும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை உருவாகும். எந்த மாற்றமாக இருந்தாலும் அது முன்னேற்றமான மாற்றமாக அமையும். ஏனென்றால் ரிஷப ராசிக்கு தர்மகர்மாதிபதி யோகம் உள்ளது. எந்தவொரு கிரகத் துக்கு திரிகோண ஆதிபத்தியமும் கேந்திராதி பத்தியமும் கிடைக்கிறதோ அந்த கிரகம் ராஜ யோகப் பலனையே செய்யும். அட்டமச் சனி உங்களுக்கு பொங்குசனியாகப் பலனைத் தர சனிக்கிழமைதோறும் காலபைரவரை மிளகு தீபமேற்றி வழிபடவும். சனீஸ்வரரையும் வழிபடவும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு ஏழில் சனியும் எட்டில் குருவும் இருப்பது குரு, சனி பரிவர்த்தனை என்பதால், உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். 6, 11-க்குடைய செவ்வாய் பத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற முறையில் நல்லதையே நினைக்கவேண்டும்; நல்லதையே செய்யவேண்டும். ஒரு சிறுகதை. ஒரு வியாபாரி கடும் வெய்யிலில் நடந்துவந்தார். வழியில் ஒரு ஆலமரம். அதன் நிழலில் அமர்ந்தார். பசி வாட்டியது. உண்ண உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். உடனே அறுசுவை உணவு வந்துவிட்டது. திருப்தியாக உண்டார். தென்றல் வீசியது. கண்களை உறக்கம் தழுவியது. இந்த சமயத்தில் ஒரு கட்டில், மெத்தை இருந்தால் சற்று உறங் கலாம் என்று நினைத்தார். அவையும் வந்துவிட்டன. ஆனந்தமாகப் படுத்தார். கால்களைப் பிடித்துவிட இளம்பெண்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத் தார். உடனே இரண்டு இளம்பெண்கள் அங்கு தோன்றி அவரது கால்களைப் பிடித்துவிட்டனர். அவர் படுத்திருந்த மரம் இச்சா மரம். அதாவது எண்ணத்தை ஈடேற்றும் மரம். அதோடு அவர் விட்டிருக்கலாம். நினைத்ததெல்லாம் நடக்கிறதே. இது இயற்கையா? குட்டிச் சாத்தான் வேலையா என்று நினைத்தார். உடனே குட்டிசாத்தான் தோன்றி அவரை அடித் துக் கொன்று தின்று விட்டது. அதனால்தான் பெரியவர்கள் "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்' என்று சொல்லிவைத்தார்கள். மிஸ்டிக் செல்வம் என்றொரு நண்பர் இருந்தார். அவர், "நினைப்பதற்குக் கஞ்சத்தனம் எதற்கு? பெரிதாக நினையுங்கள்' என்பார். அவர் இயற்பெயர் செல்லப்பா. மிஸ்டிக் செல்வம் என்று நான் பெயர்மாற்றம் செய்தேன். பொருளாதாரத்தில் நிறைவை அடைந்துவிட்டார். 12-ஆம் இடத்து ராகு சுபச் செலவுகளை உண்டாக்க, ராகு காலத்தில் துர்க்கையம்மனை அல்லது வடக்குப் பார்த்த காளியை வழிபடவும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
ஜோதிடத்தில் ஒரு பாடல் உண்டு. பாட படிக்க பரதவியம் கற்க தேட செலவழிக்க சுகிக்க கற்கடகம் சிம்மம் கன்னி அல்லாது மற்கிடம் ஏது என்பது அந்தப்பாடல். ஆக கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் மேற்கண்ட யோகமாம். அதை ஏன் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று சொல்லாமல், துலாம், விருச்சிகம், தனுசு என்று சொல்லாமல், மகரம், கும்பம், மீனம் என்று சொல்லாமல் கடகம், சிம்மம், கன்னி என்று சொல்லப்பட்டது? பிரம்மா உலகத்தைப் படைக்கும்போது கடக லக்னம்தான் உதயமானதாம். கடகத்தில் குரு உச்சமடைவார். சுக போகங்களை அனுபவிக் கச் செய்யும் கிரகம் சுக்கிரன் குருவின் வீடான மீனத்தில் உச்சம். நவகிரகங்களில் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நால்வரும் சுப கிரகங்கள். புதன் சுபரோடு சேரும்போது சுபராகவும், அசுபரோடு சேரும்போது அசுபபராக வும் செயல்படுவார். முழுமையான சுப கிரகம் குருவும் சுக்கிரனும்தான். இதில் தேவர்களின் குரு- வியாழன் எனப் படும் குரு பகவான். அசுர குரு சுக்கிரன். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே, நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எண்ணியவை ஈடேறும். கருதியவை கைகூடும். ஜாதகரீதியாக யோகமான தசாபுக்தி நடைபெற்றால் இந்த கோட்சாரம் உங்களுக்கு பரிபூரண யோகத் தைத் தரும். பட்டமங்கலம் சென்று வழிபடவும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் அமர்ந்து பத்தாம் இடத்தைப் பார்க்கிறார். பத்தில் ராகு இருக்கிறார். எட்டில் செவ்வாய் இருக்கிறார். எட்டில் ஒரு ஏழையேனும், பத்தில் ஒரு பாவியேனும் இருக்கவேண்டும் என்பது ஜோதிடப் பழமொழி. ஏழை என்பதன் பொருள் சனிபகவானைக் குறிக்கும். எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானத்தில் சனி இருப்பது ஆயுள் விருத்தி எனப்படும். பத்தில் பாவி என்பது ராகு- கேதுவைக் குறிக்கும். எனவே, இந்த கோட்சாரம் இந்த பழமொழிக்குத் தக்கபடி அமைவதால், எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். 10-க்குடைய சுக்கிரன் 2, 11-க்குடைய புதனோடு சேர்ந்து ஆட்சி பெறுகிறார். குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். 10-க்குடைய சுக்கிரன் ஒன்பதாம் இடத்தைப் பார்க்கிறார். இது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, சிம்ம ராசிக்காரர்கள் ராஜயோகத்தையும் செல்வாக்கையும் எதிர்பார்க்கலாம். ராசிநாதன் சூரியன் நான்கில் இருப்பதால் பூமி, வீடு, வாகன யோகம் அமையும். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமாக சுபச் செலவுகளை சந்திக்கலாம். சிலருக்கு வேலை மாற்றம், தொழில் மாற்றம், வாகன மாற்றம் போன்ற மாற்றங்கள் நிகழலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதசுவாமியையும் ஆரணவல்லி அம்மனையும் வழிபடவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் இரண்டில் இருக்கிறார். 4, 7-க்குடைய குரு சாரம் பெறுகிறார். குரு, சனி பரிவர்த்தனை யோகம். இருவரும் கன்னி ராசியைப் பார்க்கிறார். குரு 6-க்குடையவர். சனி 4-ல் இருப்பவர். 4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், தாயார் ஆகியவற்றைக் குறிக்கும். தாயன்பும் ஆதரவும் உங்களுக்குத் திருப்தியளிக்கும். வசதி படைத்தவர்கள் தாயின் பெயரில் சொத்து சுகங்களை ஏற்படுத்தலாம் அல்லது மனைவியின் பெயரில் சொத்துகளைப் பதிவு செய்யலாம். தாய் அல்லது மனைவியின் பெயரில் தொழில் தொடங்கலாம். ஏற்கெனவே நடைபெறும் தொழிலில் வருமான வரி விலக்குக்காக தாயார் அல்லது மனைவியைப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளலாம். கன்னி ராசிக்கு சனி 5, 6-க்குடையவர் என்பதால், கடன்வாங்கித் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். அர்த்தாஷ்டமச் சனி நடந்தாலும், குரு, சனி பரிவர்த்தனை என்பதால் உங்கள் கனவுகளும் திட்டங்களும் முழுமையாக நிறைவேறும். கன்னி ராசிக்கு ஆறாம் இடமான கும்பத்திற்கு குரு 2, 11-க்குடையவர் என்பதால், கையிருப்பைப் பயன்படுத்தாமல் கடன்வாங்கித் தொழில்செய்து நிகர லாபம் பார்த்து கடனை அடைக்கலாம். கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று ரிணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபடவும். கடன் நிவர்த்தி ஸ்தலம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 2, 7- க்குடைய செவ்வாய் ஆறில் மறைந்தாலும் ராசியைப் பார்க்கிறார். ஜென்மராசியில் பாக்கிய விரயாதிபதியான புதன், சுக்கிரன் சம்பந்தம். பூர்வீக சொத்துகளில் அல்லது பங்கு பாகங்களில் நிலவிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும். துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனி மூன்றில் பலம்பெற்று 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பொதுவாகவே சனிக்கு 3, 6, 11 ஆகிய இடங்கள் யோகமானவை. மேலும் இப்போது குருவும் சனியும் பரிவர்த்தனை யோகமாக இருக்கிறார்கள். இது உங்களுக்கு அனுகூலமான பலனைத் தரும்; ஆதாயகரமான பலனைத் தரும். பூமிகாரகன் செவ்வாயும் ஒன்பதாம் இடத்தைப் பார்க்கிறார். எனவே வில்லங்கம், விவகாரம் எல்லாம் உங்களுக்கு அனுகூலமாக மாறிவிடும். பங்காளி வகையிலும் உடன்பிறப்புகள் வகையிலும் நிலவிய எல்லா பிரச்சினைகளும் நல்லபடியாக முடிவடையும். சிலர் பூர்வீக வீடு, நிலம், மனை போன்றவற்றில் மாற்றங்களைச் செய்யலாம் அல்லது பரிவர்த்தனை செய்யலாம். ஒன்பதாம் இடத்தை செவ்வாயும் சனியும் பார்ப்பதால் 6, 8, 12-க்குடைய தசாபுக்தி நடப்பவர்களுக்கு பூர்வீக வீடு, நிலம் சம்பந்தப்பட்ட வகையில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். உங்கள் நிலத்தில் டெலிபோன் டவர்கள் அமைப் பதற்கான ஏற்பாடுகள் நடக்கலாம். அத்தகைய வர்கள் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சென்று பூமிநாத சுவாமியை வழிபடலாம். அல்லது திருச்சி மார்க்கெட் அருகிலுள்ள பூமிநாதர் ஆலயம் சென்று வழிபடவும்..
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு இன்னும் ஒருமாத காலம் (டிசம்பர் வரை) ஏழரைச் சனி நடக்கிறது. இதில் சந்திர தசையோ புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும் இந்த ஏழரைச் சனி பாதங்களைத் தரும். அப்படியிருந்தால் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்வதோடு, வசதியிருந்தால் சிவனுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். அத்துடன் சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகுதீபம் ஏற்றலாம். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால், வாகனம் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடும். போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டும். ஆறாம் இடம் என்பது தொழில் ஸ்தானத்துக்கு யோக ஸ்தானமாகும். வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு, உங்கள் திட்டங்களுக்கு மற்றவர்கள் துணையாக அமைவார்கள். பங்கு மார்க்கெட்டில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். எடுத்தோம் முடித்தோம் என்று செயல்படவேண்டாம். சிந்தித்து செயல்படவேண்டும். ஏழரைச்சனி கழிவு, ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து சாதகமாகவும் அமையலாம்; பாதகமாகவும் அமையலாம். அதாவது மதில்மேல் பூனையாக பலனை நிர்ணயிக்க முடியாது. தனியாகக் காட்சித்தரும் சனீஸ்வரரை வழிபடவேண்டும். குச்சனூர், பெரிச்சியூர் போன்ற தலங்களில் சனிபகவான் தனியாகக் காட்சிதருகிறார்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு மகரத்தில் சனி வீட்டில் நிற்க, அவருக்கு வீடுகொடுத்த சனி குரு வீடான தனுசுவில் நிற்க, இருவரும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். அதனால் ஜென்மச்சனி தோஷம் உங்களை பாதிக்காது. அதற்குக் காரணம் குரு, சனி பரிவர்த்தனை. பொதுவாக பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் மாற்று ராசிகளில் ஆட்சி பெறுவதற்குச் சமம். அதாவது மகரத்தில் சனியும், தனுசு ராசியில் குருவும் இருப்பதற்குச் சமம். 30 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த ஏழரைச்சனி பொங்குசனியாக பூரிப்பான பலனைத் தரும். சனி ஒரு ராசிக்கு இரண்டரை வருடங்கள் தங்கிப் பலன் தருவார். ஒரு சுற்று வருவதற்கு முப்பது வருடங்களாகும். முதல் சுற்று மங்குசனி, இரண்டாவது சுற்று பொங்குசனி, மூன்றாவது சுற்று மரணச்சனி என்று சொல்வார்கள். மூன்றாவது சுற்று மரணச்சனி என்பது அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். கலைஞர் கருணாநிதி மூன்று சனியும் கடந்தவர். 93 வயதுவரை இருந்தார். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வும் புகழும் எதிர்பார்க்கலாம். ஊதிய உயர்வுக்கும் இடமுண்டு. ஆனாலும் உங்களுக்கு வேண்டாதவர்கள் உங்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்பலாம் அல்லது உங்கள் மனம் புண்படும்படி நடக்கலாம். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று ஆஞ்சனேயரையும் சனீஸ்வரரையும் வழிபடவும். தட்சிணாமூர்த்தியும் தனிச் சந்நிதியில் உள்ளார்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. ஆனால் குரு வீட்டில் சனியும், சனி வீட்டில் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதால், இந்த ஏழரைச்சனி எந்த சுற்றாக இருந்தால் பொங்குசனியின் பலன்களையே தரும். இதுதான் பரிவர்த்தனை யோகத்தின் பலன். பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் சொந்தவீட்டில் ஆட்சியாக இருப்பதற்குச் சமம். அத்துடன் 11-ல் உள்ள சூரியன் எல்லா விதமான தோஷங்களையும் கெடுபலன்களையும் போக்கும் வலிமை பெறுகிறார். ஒரு தொழிலுக்கோ ஒரு செயலுக்கோ ஒரு கிரகப்பிரவேசத்திற்கோ 11-ல் சூரியன் இருக்குமாறு லக்னம் அமைத்துக் கொடுத்தால் அந்த காரியம் மிக சிறப்பாக, வளர்ச்சியாக அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான போக்கு தென்படும். தொலைதூரத் தகவல்கள் நன்மையளிக்கும். சிலருக்கு ஆதாயம், அனுகூலம். பணவரவையும் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு வேண்டியவர்கள் உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வார்கள். அதை பொங்கல் பரிசாகவும் அன்பளிப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம். தொழில்துறையில் சில நல்ல மாற்றங்கள் நிகழும். சிலருக்கு மனைவியால் நன்மைகள் நடக்கும். குரு, சனி பரிவர்த்தனைக்கு, ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவநல்லூர்- தாருகாபுரம் சென்று நவகிரக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்..
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
பொதுவாக 12 ராசிக் காரர்களிலும் கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என்பது என் கணக்கு. காரணம், ராசிநாதனே விரயாதிபத்தியம் பெறுகிறார். அதேசமயம் சனி இருக்கும் இடத்தைப் பொருத்து அந்த விதி மாறும். 3, 6, 11-ல் சனி நின்றால் கும்ப ராசிக்காரர்களுக்குத் தங்குதடையில்லாத யோகங்களும் பொங்கும் நற்பலன்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் நன்றாக நடக்கும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், ஆயிரம் ரூபாய் கடனை அடைத்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிப் போவார்கள். உங்களுக்குக் கொடுக்க வேண்டியவர்கள் அவர்கள் முன்னாலேயே வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அதனால் நீங்கள் பணம் இல்லையென்றும் சொல்லமுடியாது. 3, 10-க்குடைய செவ்வாய் இரண்டில் இருப்பதால் சகோதரவகையில் நட்பு மலரும். உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். கணவன்வழியில் நன்மைகள் உண்டாகும். ஒருசிலருக்கு வீடு, மனை பாக்கியம் உண்டாகலாம். சிலர் வாகனப் பரிவர்த்தனை செய்யலாம். 4-ல் ராகு நிற்பதால், பரமக்குடி அருகில் நயினார் கோவில் அல்லது திருநாகேஸ்வரம் சென்று வழிபடலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். குருவுக்கு வீடு கொடுத்த சனி 10-ல் இருக்கிறார். குரு, சனி பரிவர்த்தனை. எனவே, பரிபூரணமான யோகங்களைத் தரும். 2, 9-க்குடைய செவ்வாய் ஜென்மராசியில் பலம்பெறுகிறார். "குறை ஒன்றும் இல்லை; மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம். பொதுவாக மீன ராசியிலும் மீன லக்னத் திலும் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்கள். மீன் நீரில் நீந்திக் கொண்டே இருக்கும். அதுபோல நீங்களும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மேலும் எந்த சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்தாலும் அதை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வீர்கள். ஆறுக்குடைய சூரியன் ஒன்பதில் ராகு- கேது சம்பந்தமாக இருப்பதால், எதிரிகளும் போட்டி, பொறாமையாளர்களும் உங்கள் வசமாவார்கள். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். மனைவி, மக்கள், பேரன், பேத்தி ஆகியோர் வகையில் உங்களுக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்பட்டாலும் அவற்றால் அனுகூலமும் ஆதாயமும் எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் லாபத்தோடு தொழில் நடத்தலாம். மதுரை- வாடிப்பட்டி அருகிலுள்ள நவமாருதி ஆஞ்சனேயரை வழிபடவும் (வாடிப்பட்டி பைபாஸ் சாலை.)