ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.
கிரக பாதசாரம்:
சூரியன்: மூலம்- 2, 3, 4.
செவ்வாய்: அஸ்வினி- 1, 2.
புதன்: மூலம்- 4. பூராடம்- 1, 2, 3, 4.
குரு: உத்திராடம்- 3, 4.
சுக்கிரன்: அனுஷம்- 2, 3, 4, கேட்டை- 1.
சனி: உத்திராடம்- 1, 2.
ராகு: மிருகசீரிடம்- 1.
கேது: கேட்டை- 3.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
26-12-2020- பின்னிரவு மகரச் சனி.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
21-12-2020- மீனம்.
24-12-2020- மேஷம்.
26-12-2020- ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருக்கு சாரம் கொடுத்த கேது (அஸ்வினியில் செவ்வாய்) செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் இருக்கிறார். அத்துடன் செவ்வாயின் பார்வையையும் பெறுகிறார். திறமை, பெருமை, செயலாற்றல் எல்லாம் மிகச் சிறப்பாக அமையும். 2-ல் ராகு, 8-ல் கேது. எதிலும் ஒழுக்கம், நேர்மை, உண்மை எல்லாம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். அது குறைகிற போது உங்களையறியாமலேயே கோபமும் ஆத்திரமும் உருவாகும். அதனால் சம்பந்தப்பட்ட வர்களிடம் கண்டிப்பாகவும் கடுமையாகவும் நடந்துகொள்வீர்கள். அதாவது மிலிட்டரி டிசிப்ளைனை கடைப்பிடிப்பீர்கள். கோபம் இருக்குமிடத்தில்தான் குணமிருக்கும் என்று சொல்வதுபோல, ஒருநேரம் ஆத்திரப்பட்டாலும் மறுநேரம் நீங்களே அவர்களை சமாதானப் படுத்துவீர்கள்- அடிக்கிற கை அணைக்கும் என்பது போல! பொருளாதாரத்தில் இன்னும் தன்னிறைவு பெறமுடியாது. ஆயிரம் வந்தாலும் மிச்சப்படுத்த முடியாது. இரண்டாயிரம் வந்தாலும் மிச்சப்படுத்த முடியாது. சிக்கனம் சீரமைக்கும் என்பதுபோல சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். சேமிக்க வும் கற்றுக்கொள்ளவேண்டும். 9, 10-க்குடையவர்கள் பரிவர்த்தனை என்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முறையாக செயல்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசியில் ராகு நிற்க, 7-ல் கேதுவும் சுக்கிர னும் இருக்கிறார்கள். ராசியை குரு பார்ப்பதால் நாகதோஷம், களஸ்திர தோஷம் இரண்டும் விதிவிலக்காகி விடுகின்றன. மேலும் குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம். வாரக்கடைசியில் சனி மகர ராசிக்கு மாறி ஆட்சியாவார். அப்போது குரு, சனி சேர்க்கையாகிவிடும். 9-க்குடைய சனியும் 8-க்குடைய குருவும் பரிவர்த்தனை. சில காரியங்கள் நினைத்தவுடன் உடனுக்குடனே நிறைவேறிவிடும். சில காரியங்கள் நிறைவேற காலதாமத மாகும். எப்படியோ எல்லாம் நிறைவேறி விடும் என்னும் மனநிறைவு ஏற்படும். சிலருக்குத் திருமணத் தடையும், சிலருக்கு மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக் குறைவும், சிலருக்கு கணவன்- மனைவி பிரிவும் ஏற்பட இடமுண்டு. குரு பார்வை ராசிக்கு இருப்பதால், ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்தால் மேற்கண்ட தோஷநிவர்த்திக்கு இடமுண்டு. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் தென்படும். வீடு மற்றும் வேலை போன்றவற்றில் இடமாற்றத்தை சந்தித்தவர் களுக்கு, இந்த சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு நிவாரணம் ஏற்படலாம். கடன் தொல்லைகள் படிப்படியாகக் குறையும். இளைய சகோதர- சகோதரிவகையில் சுபச் செலவுகளும் விரயங் களும் உண்டாகும். மனைவிவகையில் தனப்ராப்திக்கு இடமுண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நன்மையான பலனைத் தரும். தாய்மாமன்வகையில் இருந்துவந்த பிணக்குகள் தீரும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் சூரியன், சனி சேர்க்கை. இதில் குரு, சனி பரிவர்த்தனை. எதிர் பாராத பயணங்கள் அமையும். பயணத்தால் பயனும் உண்டு; பலனும் உண்டு. அந்நிய மதத்தினரின் ஆதரவும் உதவியும் உங்களுக்கு மிகச்சிறப் பாக அமையும். புதிய தொழில் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையும். கணிசமான லாபமும் ஏற்படும். 7, 10-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும், நீசமாக இருந்தாலும் குரு, சனி பரிவர்த்தனை யோகத்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகும். 5, 12-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைந் தாலும்- 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு பாக்கியஸ்தானம் என்பதால், தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். இதுவரை அடிமைவேலையில் பணிபுரிந்தவர்கள் இந்த காலகட்டத்தில் சொந்தத் தொழில் புரிய முனையலாம். அடுத்த வாரம் அட்ட மச்சனி ஆரம்பிக்கப் போவதால், தொழில் துறையிலும் வாழ்க்கை அமைப்பிலும் மாற்றங் களை எதிர்பார்க்கலாம். அந்த மாற்றங்கள் முன்னேற்றமான மாற்றமாக அமையுமென்று நம்பலாம். எதைச்செய்தாலும் தீர ஆலோ சனை செய்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரப்பட மாட்டீர்கள். வயதில் சிறியவர்களானாலும் அவர்களது அனுபவங்களைக் கேட்டு செயல் பட்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு அது அஸ்திவாரமாக அமையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 7-ல் நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். குருவும் சனியும் பரிவர்த்தனை அடைகிறார்கள். 10-ல் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். 11-ல் ராகு பலம்பெறுகிறார். அடிமை வேலையாக இருந்தாலும் சரி; சொந்தத் தொழில் புரிந்தாலும் சரி- உங்களுடைய மதிநுட்பமும் வைராக்கியமும் வாழ்க்கையின் உயரத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். கடகம் என்றால் நண்டு. நண்டுக்கு உடலைச்சுற்றி கால்கள் இருப்பதால், நின்ற நிலையிலிருந்து எந்த திசையிலும் பயணிக்கும் ஆற்றல் உண்டு. அதே போல, கடக ராசியில் பிறந்த வர்களனாலும் கடக லக்னத் தில் பிறந்தவர்களானாலும் நான்குவழி சந்திப்பில் நின்றா லும், போகவேண்டிய திசையை அனுமானம் செய்து போய்ச் சேர்ந்து விடலாம். இது இவர் களுக்குக் கிடைத்த வரப் பிரசாதமாகும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை விட்டுவிடுவார்கள். ஏனென் றால் 7-க்குடைய சனி 8-க் குடையவராக இருப்பது தான் காரணம். அதேபோல கும்ப ராசிக்காரர்களுக்கும் ராசிநாதனே 12-க் குடையவராக இருப்பதும் ஒரு மைனஸ் பாயின்ட்தான். எந்த சூழ்நிலையிலும் அடுத்த வரைக் கலந்தாலோசித்துச் செய்யும் செயல்கள் தோல்வியடையாது; ஏமாற்றமாகாது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்காரர்களுக்கு 5-ல் சூரியன், புதன், சனி சம்பந்தம் என்பதாலும், குரு, சனி பரிவர்த்தனை என்பதாலும், 9-க்குடைய செவ்வாய் ஆட்சி என்பதாலும் வாரம் முழுவதும் நற்பலனே நடக்கும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டி உதவிபுரிவார்கள். குறிப்பாக ஆண்களுக்குப் பெண்களாலும், பெண் களுக்கு ஆண்களாலும் அதிக நன்மை உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசாங்க முயற்சிகளில் அனுகூலம் பெருகும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் வைராக் கியமும் செயலில் ஆர்வமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்பு மேலோங்கும். குடும்பத்தில் பெரியோர்களின் அனுசரணையும் ஆதரவும் பெருகும். புதுமணத் தம்பதிகளுக்கு வாரிசுயோகம் உண்டாகும். வாழ்வில் வளம் பெருகும். நலம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அடிமைவேலையில் இருப்பவர் களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், ஆர்வத்தோடும் அக்கறையோடும் பாடுபட்டு மேலிடத்தாரின் பாராட்டைப் பெறலாம். ஒருசிலருக்கு தாய்க்குப் பீடையும் உறவில் சிக்கலும் காணப்படலாம். என்றாலும் 9-ல் ஆட்சி பெற்ற செவ்வாய் எந்தக் குறையாக இருந்தாலும் அவற்றைப் போக்கி, வாழ்வில் வளமும் நலமும் பெற வழிவகுப்பார்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 4-ல் இருக்கிறார். அவருடன் சூரியன், சனி சேர்க்கை. இதில் குருவும் சனியும் பரிவர்த்தனை. 6-க்குடையவர் 4-ல் இருப்பதால் தாயாருக்கோ தனக்கோ ஆரோக்கியக் குறைவு ஏற்பட இடமுண்டு. என்றாலும் பரிவர்த்தனை யோகத்தால் பெரிய அளவு பாதிப்புக்கு இடமிருக்காது. சிலருக்கு பூமி, வீடு, வாகன மாற்றம் ஏற்படும். ராசிக்கு குரு, சனி பார்வை இருப்பதால், அந்த மாற்றங்கள் முன்னேற் றமாக அமையும். தாய்வழி சொந்தம், சுற்றம்வகையில் சிலருக்கு தவிர்க்கமுடியாத செலவுகள் உண்டாகலாம். அல்லது வருத்தமூட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெறலாம். எதுவானாலும் அதை சமாளிக்கும் மனப் பக்குவமும் உண்டாகும். 9-ஆம் இடத்து ராகு தகப்பனார் அல்லது பிதுரார்ஜித சொத்து வகையில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், 4, 7-க்குடைய குரு நீசபங்க ராஜயோகம் பெற்று ராகுவைப் பார்ப்பதால், கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பதுபோல எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடியும். அதுதான் குரு பார்த்த பெருமை. உங்களுக்கு ஆதரவாக தாய் அல்லது தாரம் துணை நிற்பார்கள். உங்களுக்காக வாதாடுவார்கள். தொழில்துறையில் அல்லது வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் கேது வோடு சம்பந்தம். 8-ல் ராகு. உங்களுக்கு நீங்களே எதிரியாக மாறும் சூழ்நிலை அமைகிறது. அதாவது 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதாலும், இரண்டாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியை உருவாக்கும். அதைத்தான் தவளை தன் வாயால் கெட்டது என்பார்கள். அதனால் உங்களை நீங்களே நிதானப்படுத்திக் கொண்டால் சிக்கல்களை சமாளிக்கலாம். துலா ராசிக்கு 10-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால், தொழில் துறையிலும் வேலையிலும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செயல்பட்டு முன்னேறலாம்; உயர் வடையலாம். சிலசமயம் மனைவி அல்லது கூட்டாளியின் ஒத்து ழைப்பு உங்களுக்கு பேராதரவாக அமையும். மனைவி பெயரில் வீடு, மனை போன்ற யோகங்கள் அமையும். பூர்வீக சொத்துப் பிரச் சினைகளில் நிலவிய சிக்கல்களும் சங்கடங் களும் விலகி உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். சிலர் புதிய வீடு, வாகனம், மனை போன்ற யோகங்களை அடையலாம். அதற்கான பணத்தேவைக்கு கடன்படலாம். அது சுபக்கடன் எனப்படும். ஆரோக்கியமும் பொருளாதாரமும் தெளிவாக இருக்கும். உடன்பிறப்புகள், நண்பர்கள் வகையில் உதவி கிட்டும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு இந்தவாரக் கடைசியோடு ஏழரைச்சனி முழுமையாக முடிந்துவிடும். அடுத்த வாரம் குருவும் சனியும் மகரத்தில் இணைவார்கள். அது உங்களுக்கு நிறைவான யோகத்தையும் அனுகூலத்தையும் உண்டாக்கும். சிலர் சனி போகிறபோக்கில் நன்மை செய்யாதா என்று எதிர்பார்க்கலாம். அவர் நன்மை செய்தாலும் செய்யாவிட்டாலும், மகரத்தில் ஆட்சி பெறுகிறபோது நன்மையும் யோகமும் அடைவது உறுதி. ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று ராசியை பார்ப்பதால் எதிரிகளும் உங்களுக்கு உதவ லாம். அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் தங்கள் தலைமையை மாற்றிக்கொள்ளலாம்; கட்சியையும் மாற்றிக்கொள்ளலாம். அதனால் பயனும் பலனும் உண்டு. மற்றவர்களின் ஏச்சும் பேச்சும் எழுந்தால், "குளத்தில் தண்ணீரும் இல்லை; மீனும் இல்லை. கொக்கு நீருள்ள குளத்திற்குப் பறந்துவிட்டது' என்று சமாதானம் சொல்வீர்கள். கட்சித்தாவல் என்பது இப்போது ஏற்பட்டதல்ல. இராமாயண காலத்திலேயே இராவணனின் தம்பி விபீஷணன், அண்ணனையே பிரிந்து எதிரி இராமனோடு இணைந்தான். எங்கே பயனும் பலனும் கிடைக்கிறதோ அங்கு இணைவது தவறில்லையென்று அன்றே நிரூபணமாகிவிட்டது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. வாரக்கடைசியில் 26-ஆம் தேதி சனிப் பெயர்ச்சி வருவதால், ஜென்மச்சனி விலகும். அடுத்து பாதச்சனி இரண்டரை வருடங்கள் நடக்கும். கடந்த ஐந்தாண்டு காலம் ஏழரைச் சனியால் நொந்து நூலாகிப்போனவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதப் பெயர்ச்சியாக- ஆனந்தப் பெயர்ச்சியாக- ஆறுதல் பெயர்ச்சியாக மாறுதலைத் தரும். சனிப்பெயர்ச்சியின்போது குருவும் சனியும் இரண்டாம் இடத்தில் இணைவதால், தனுசு ராசிக்காரர்களானாலும் தனுசு லக்னத் தினரானாலும் வாக்கு, தனம், குடும்பம், வித்தை போன்ற இரண்டாமிடத்துப் பலன் திருப்திகரமாக அமையும். சரளமான பொருளாதாரம் அமையும். இதுவரையில் ஜென்ம ராசியில் இருந்த சனி எல்லா வகையிலும் உங்களை நோகடித்துவிட்டது. இனி இரண்டாம் இடத்தில் ஆட்சி பெறுவதால் ஜென்மச் சனி உங்களைப் படுத்தியபாட்டிற்கு பரிகாரமாக மாறுதலைத் தந்து ஆறுதலையும் ஏற்படுத்தும். பொதுவாக பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை என்றாலும், கடந்தகாலத்தில் திருப்திக் குறைவையும் அனுபவித்தவர்கள் உண்டு. ஒருசிலர் மதில்மேல் பூனையாக, சொந்தபந்தம், சுற்றத் தார் வகையில் யார்பக்கம் பேசுவது, யார் பக்கம் சாய்வதென்ற தர்மசங்கடத்தில் தவித்த நிலை காணப்பட்டது. அவையெல்லாம் இனி மாறிவிடும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி கடந்த மூன்றாண்டு காலமாக விரய ஸ்தானத்தில் இருந்தார். இப்போது இந்த வாரக் கடைசியில் ஜென்ம ராசியில் ஆட்சிபெறுவார். சனி பகவான் மகர ராசிக்கு அதிபதி என்பதோடு, 2-க்கும் உடையவர். எந்த கிரகமும் சொந்த வீட்டைக் கெடுக்காது. அதனால் சனி மாற்றம் உங்களுக்கு ஏற்றம் தருமென்று சொல்லலாம். ஜென்ம ராசிக்கு மாறும் சனி 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்வையிடுகிறார். சகோதரவகையில் ஒற்றுமை, நன்மைகள், சகாயம், அந்நியர்களின் உதவி, திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம், திருமணமானவர்களுக்கு தாம்பத்திய அன்யோன்யம், தொழில் இல்லாதவருக்குத் தொழில் யோகம், வேலை இல்லாதவருக்கு வேலை யோகம், சம்பாத்தியம் இல்லாதவர்களுக்கு சம்பாத்திய யோகம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். விருச்சிக கேது ராசியைப் பார்ப்பதால் பக்திஞானம் உயர்வடையும். ஆன்மிக ஈடுபாடு, ஆன்மிகத் தொண்டு போன்றவற்றில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபமங்கள காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தலாம். புதிய வீடு, மனை வாங்கும் யோசனைகள் செயலாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். 5-ல் ராகு நின்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் புத்திரகாரகன் குருவும் பார்ப்பதால் மேற்கண்ட பெருமைகள் உருவாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல; 11-க்குடைய குருவும் 12-க்குடைய சனியும் பரிவர்த்தனை. தவிர்க்கமுடியாத செலவுகளை சந்தித்தாலும், இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல செலவுகளை சமாளிக்குமளவுக்கு வருமானம் வரும். அதனால் செலவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பதும், 10-க்குடைய செவ்வாய் மேஷத்தில் நின்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம். ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், பரிவர்த்தனை யோகத்திற்கும் தர்மகர்மாதிபதி யோகத்திற்கும் தனிச் சிறப்பு உண்டு; முக்கியத்துவம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, உபசாரம் என கலந்துகொள்வீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும். உடன்பிறப்புகள் வகையில் சகாயத்தை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் வகையில் நன்மைகள் உருவாகும். தொல்லை கொடுத்த எதிரிகளும் உங்கள் எல்லைக்கு அப்பால் தொலைதூரம் விலகிப் போய்விடுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். செல்வாக்கு பெருகும். பொருளாதாரத்திலும் முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். ஆரோக்கியத்திலும் தெளிவு உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 11-ல் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். அதுமட்டுமல்ல; குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம். வாரக்கடைசியில் குருவும் சனியும் இணைவார்கள். கோட்சார கிரகநிலை உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாக அமைவதால் தொட்டது துலங்கும். எடுத்த முயற்சிகள் கைகூடும். பொதுவாக சனிக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் யோகம்தரும் இடங்களாகும். 12-க்குடைய சனி 11-ல் வருவதால் சிலருக்கு சுபமங்களச் செலவுகள் உண்டாகும். சிலருக்கு எதிர்காலத்தில் லாபம்வரும் துறைகளில் முதலீடு செய்யும் அமைப்பு உண்டாகும். சிட்பண்ட், சிறுசேமிப்பு, வங்கி முதலீடு போன்றவகையில் செலவுகள் ஏற்படலாம். எதைச் செய்தாலும் அதை ஆதாயகரமாகத் தான் செய்வீர்கள். பத்து ரூபாய் செலவழித்தால் இருபது ரூபாய் லாபகர மாகப் பெறும் முயற்சியில்தான் இறங்குவீர்கள். அதேசமயம் நம்பக்கூடியவர்களை நம்பாமலும், நம்பக்கூடாதவர்களை நம்பியும் சில ஏமாற்றங் களை சந்திப்பீர்கள். அதுதான் உங்கள் பலவீனம். அதைத் திருத்திக்கொண்டால் ஏமாற்றமில்லை; இழப்புக்கும் இடமில்லை. தேக ஆரோக்கியத்தில் கவலை யில்லை. அதேசமயம் உணவு, உறக்கம் இரண் டிலும் நேரம் தவறாமையைக் கடைப் பிடிக்கவேண்டும். அப்படியிருந்தால் நோயுமில்லை; வைத்தியச் செலவுமில்லை.