ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: பூசம்- 4, ஆயில்யம்- 1, 2.
செவ்வாய்: ரேவதி- 3, 4.
புதன்: பூசம்- 2, 3, 4. ஆயில்யம்- 1, 2.
குரு: பூராடம்- 4.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை- 1.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 3.
கேது: மூலம்- 1.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
குரு வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
2-8-2020- மகரம்.
4-8-2020- கும்பம்.
7-8-2020- மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவென்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சி. அவருக்கு சாரம்கொடுத்த புதன் 4-ல் கடகத்தில் நட்பு. கடகம் சந்திரனின் ராசி. (சந்திரனின் மகன் புதன் என்பது புராணம்). எனவே, தாயன்பு, கல்வி முன்னேற்றம், வாகன யோகம், புதிய வீடு, மனை வாங்கும் யோகம், பூர்வீக வீடு சீர்திருத்தம், பழைய வாகனத்தைக்கொடுத்து புதிய வாகனத்தை வாங்கும் பரிவர்த் தனை யோகம் போன்ற பலன்களை அனுபவிக்கலாம். சிலர் குடியிருப்பு மாறலாம். பொதுவாக, ஆடி மாதம் குடிமாற்றம் செய்யக்கூடாதென்பார்கள். உண்மையில், ஆடியில் வீடுமாறலாம், கடை ஆரம்பிக்க லாம். ஆனி மாதந்தான் ஆகாது. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் வாஸ்து புருˆன் கண்விழிக்க மாட்டார். வாஸ்து தேவதைதான் வீடு, மனை, கட்டடம் போன்ற காரியங்களுக்கு அதிகாரம் பெற்ற கிரகம். (அத்தாரிட்டி). ஒரு கட்டடம் துவங்குவதற்குமுன்பு பிளான் அப்ரூவல் வாங்கவேண்டும். பஞ்சாயத்து, நகராட்சியில் முன்அனுமதி பெறவேண்டும். அதற்குமுன்னதாக வாஸ்து புருˆன் அனுமதி அவசியம். பஞ்சாயத்து அல்லது நகராட்சி அனுமதி என்பது கட்டடம் கட்டுவதற்கு. அந்தக் கட்டடத்தில் வசிக்கும்போது அதிர்ஷ்டமும் ராசியும் யோகமும் அமைய வாஸ்து புருˆன் அனுமதிவேண்டும். பஞ்சாயத்து, நகராட்சியில் வாங்கும் அனுமதி சட்டரீதியானது; வாஸ்து புருˆன் சாஸ்திரரீதியானது. ஆகவே, குடியிருப்பு மாறுவதற்கு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களும் ஆகாது. இது இந்து தர்மம். முஸ்லிம், கிறித்துவர்களுக்கு இது பொருந்தாது. சாஸ்திரம் எனில், எல்லாருக்கும் பொதுவாகத் தானே இருக்கவேண்டும்? மதம்- ஜாதிரீதியாக மாறுபடுமா என ஒரு கேள்வி வரும். நெருப்பு எல்லாரையும்தானே சுடும்? மழை எல்லாரையும்தானே நனையச்செய்யும்? இதன் விளக்கம் பிறகு தருகிறேன்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் ராகு- கேதுவுடன் சம்பந்தப்படுகிறார். தொடக் கத்தில் 7, 12-க்குரிய செவ்வாய் சாரத்திலும், வாரக் கடைசியில் ராகு சாரத்திலும் சஞ்சாரம். செவ்வாய் 11-ல் இருக்கிறார். ராகு 2-ல் சுக்கிரனோடு சம்பந்தம். எனவே, இக்காலம் உங்களுக்குக் கேடுகெடுதிக்கு இடமில்லை. நற்காலமாகவும் பொற்கால மாகவும் அமையும். அதேசமயம், அட்டமத்துச் சனி நடப்பதால் கெடுபலன்கள் எல்லாம் உடனடியாக நடைபெறும். நற்பலன் களெல்லாம் தாமதமாக நடைபெறும். உலகத் தில் நல்லது, கெட்டது என இருவகை இருந்தாலும், எதிலும் தனித்துப் பலனிருக் காது. கெட்டதில் நல்லதும், நல்லதில் கெட்டதும் மறைபொருளாக இருக்கும். குரு துரோணாச்சாரியார் தருமரிடமும் துரியோதனிடமும் ""உலகில் நல்லவர்- கெட்டவர் எத்தனை சதவிகிதம்?'' என்று பார்த்து வரச்சொன்னார். துரியோதனன், ""சுத்தமான நல்லவர் யாருமில்லை. நல்லவரிடமும் ஏதோவொரு கெடுதலிருக்கிறது'' என்றார். தருமரோ,"" தனித்து யாரும் கெட்டவரில்லை. கெட்டவரிடத்திலும் ஒரு நல்லது இருக்கிறது'' என்றார். இதுதான் உலகத் தத்துவம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் சுக்கிரனும் ராகுவும் நிற்க, செவ்வாய், குரு, சனி, கேது பார்க் கிறார்கள். ரிˆப ராசியில் எழுதியதுபோல, நல்லதானாலும் கெட்டதானாலும் தனித்து மட்டுமே இருக்காது. சுக்கிரன், குரு நல்ல வர்கள் என்றாலும், அவர்களோடு ராகு- கேது சம்பந்தப்படுவதால், நல்லது மட்டுமோ கெட்டது மட்டுமோ தனித்து செயல்படாது. மிதுன ராசியை 6, 11-க்குரிய செவ்வாயும், 8, 9-க்குரிய சனியும், 7, 10-க்குரிய குருவும் பார்க்கிறார்கள். ஓர் உதாரணத்தின்மூலம் இந்தப் பலனைத் தெளிவுபடுத்தலாம். ஒரு காவல்நிலையத்தில் குற்றவாளிகளிடம் கண்டிப்பாகவும் கடுமையாகவும் நடந்து கொள்ளும் ஒரு காவல்துறை அதிகாரி- வீட்டுக்கு வந்தபிறகு, மனைவி, மக்களிடம் அப்படியே கண்டிப்பாக நடந்துகொள்வார் எனச் சொல்லமுடியாது. கனிவுடனும் பாசமுடனும் நடந்துகொள்வார் அல்லவா? அதேபோலதான், எல்லா கிரகங்களும் நல்லவர்களுமில்லை, எல்லா கிரகங்களும் கெட்டவர்களுமில்லை. நல்லதுசெய்யும் கிரகமும் கெட்டது செய்யும். கெட்டதை நடத்தும் கிரகமும் நல்லது செய்யும். அதுபோலதான் மனிதர்களின் நிலையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் சூரியன், புதன். சூரியன் 2-க்குரியவர். புதன் 3, 12-க்குரியவர். 10-க்குரிய செவ்வாய் 9-ல். இது தர்மகர் மாதிபதி யோகமாகும். எனவே, வரவும் உண்டு; செலவும் உண்டு. கையிருப்பு ஆயிரம் ரூபாயுடன் இன்னொரு புதுவரவு ஐந்நூறு வந்தால், ஆயிரத்து ஐந்நூறில் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என நினைப்பீர்கள். ஆனால், கையிருப்பு ஆயிரத்தில் ஐந்நூறு குறைந்தவுடன்தான் அடுத்த ஐந்நூறு வரும். இறைக்க இறைக்க ஊறும் கிணறுபோல, உங்கள் பொருளாதார நிலை காணப்படும். ஊற்று ஓரளவில் நிரம்பிவிடும்; பொங்கி வழியாது. இதைத்தான் பெரியவர்கள் "அளந்து படிபோட்டமாதிரி' என்பார்கள். அதையே "விரலுக்கேற்ற வீக்கம்' எனவும் சொல்லலாம். ஒரு பிறவி கருவில் உருவாகும் போதே, அதன் தலையில் அதனுடைய ஆயுள், படிப்பு, செல்வம் என்னும் மூன்றும் தலையெழுத்தாக எழுதப்படுகிறது. இதைப் "பிரம்ம லிபி' என்பார்கள். அறிவுக்கும் திறமைக்கும் இந்த மூன்றும் சம்பந்தப்படாது. அதற்குப் பெயர்தான் யோகம் அல்லது அதிர்ஷ்டம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதனான 2, 11-க்குரிய புதன் 12-ல் மறைவு. சிம்ம ராசிக்கு 4, 9-க்குரிய செவ்வாயும் 8-ல் மறைவு. திறமை இருப் பவரிடம் யோகமிருக்காது. யோகம் இருப் பவரிடம் திறமையிருக்காது. இதுதான் சூரியன், புதன் மறைந்ததன் பலன். திறமைக்கும் அதிர்ஷ்டம் அல்லது யோகத்துக்கும் சம்பந்த மில்லை. அதனால்தான், கவியரசர் கண்ண தாசன், "" வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்தி சாலி இல்லை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை'' என்று எழுதினார். அதையே வேடிக்கையாக, "ஒரு முட்டாள், கடலில் எறிந்த கல்லை நூறு அறிவாளிகள் சேர்ந்தாலும் எடுக்கமுடியாது' என்றும் கூறினார்கள். அதற்காக, ஒரு முட்டாள் நூறு அறிவாளியைவிட சிறந்தவனாகிவிட முடியுமா? பணம் இருப்பவரிடம் குணம் இல்லை. குணம் இருப்பவரிடம் பணமில்லை. பணம், குணம் இரண்டையும்விட நல்ல மனமிருந்தால் போதும்- வாழ்க்கையில் வெற்றிபெறலாம். அந்த நல்ல மனம் படைத் தவர்கள் யாரென்று கண்டறிவது கஷ்டமாக இருக்கிறது. காவி புனிதமானது. அந்தக் காவி உடைக்குள்ளும் பாவிகள் அதிகம் காணப்படுகிறார்கள்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் சூரியனோடு சம்பந்தம். சூரியன் விரயாதிபதி. புதன் 10-க்குரியவர். இருவரும் 11-ல் இருப்பது பலம். உங்கள் முயற்சிகள் எல்லாம் முழுவெற்றி யடையும். செயல்கள் எல்லாம் சிறப்படையும். சொல்வாக்கும் செல்வாக்கும் பெருகும். அரசியல், ஆன்மிகம், ஜாதி, சமயச் சங்கங் களுள் அங்கங்கள், கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் கோவில் அறங்காவலர் பொறுப்பும், திருப்பணிக் கமிட்டிப் பொறுப் பும் கிடைக்கும். சிலருக்கு சமூகப் பொதுநலத் தொண்டு ஈடுபாடு உண்டாகும். சமரசக் கல்வி ஸ்தாபனங்கள் தோற்றுவிக்கலாம். அரசு மானியங்கள் பெற்று, அதை விருத்தியடையச் செய்யலாம். சிலர் முதியோர் காப்பகம் தொடங்கலாம். அநாதைச் சிறுவர்கள் முகாம் நடத்தலாம். இப்படி அவரவர் சிந்தனைக் கேற்ப செயல்களைச் செய்து, வந்தனைக்கும் வாழ்த்துக்கும் தகுதிபெறலாம். 9-க்குரிய சுக்கிரன் 10-ல் இருப்பது தர்மகர்மா திபதி யோகம். அவரை 4-ல் ஆட்சிபெற்ற குரு பார்க்கிறார்; சனியும் பார்க்கிறார். அது உங்களுக்குப் பாதுகாப்பாக அமையும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 9-க்குரிய புதன் 10-ல் தர்மகர்மாதிபதி யோகமாகப் பலம் பெறுகிறார். 6-ல் இருக்கும் செவ்வாய் 9-ஆமிடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு தகப்பனார்வழியில் சொத்துப் பிரச்சினை, கௌரவப் பிரச்சினை, பங்குபாகப் பிரச்சினை கடுமையாகத் தெரியும். என்றாலும், குரு 9-ஆமிடத்தைப் பார்ப்பதால், மலை போல வரும் துன்பமெல்லாம் பனிபோல விலகிவிடும். 6-ல் உள்ள செவ்வாய் விரயாதிபதி சாரம்பெறுவதால் (ரேவதி), சொத்துப் பிரச்சினைகளில் சிக்கல்கள், விவகாரங்கள் உருவாகும். அவற்றைச் சமாளிக்கவேண்டும். அப்படி இடத்துப் பிரச்சினை உள்ளவர்கள் பொன்னமராவதி அருகில் செவலூரிலுள்ள பூமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபடவும். அண்ணன்- தம்பி பிரச்சினை உள்ளவர்கள் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று கணபதி சுப்பிரமணியத்தை வழிபடவும். மேற்கண்ட பிரச்சினை இல்லாதவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை அல்லது கடன் பிரச்சினை தலைக்குமேல் வெள்ளமாகத் திணறவைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் மீனத்தில் திரிகோணத்தில் அமர்ந்து மிதுனம், கன்னி, துலா ராசிகளைப் பார்க்கிறார். (4, 7, 8-ஆம் பார்வை). மிதுனம் 8-ஆமிடம், கன்னி 11-ஆமிடம், துலாம் 12-ஆமிடம். 8 என்பது நஷ்டம், ஏமாற்றம், இழப்பு, தோல்வி ஆகியவற்றைக் குறிக்குமிடம். 11-ஆமிடம் என்பது வெற்றி, லாபம், அனுகூலம் ஆகிய வற்றைக் குறிக்கும். 12-ஆமிடம் என்பது விரயம், செலவு, பயணம், அயனசயன போகம் ஆகியவற்றைக் குறிக்கும். செவ்வாய் ராசிநாதன் என்பதால்- மேற்படி இடங் களைப் பார்ப்பதால், அவை சம்பந்தமான நற்பலன்களே நடக்கும். பொதுவாக, ராசி நாதனோ லக்னநாதனோ எந்த வீட்டிலிருந் தாலும், எந்த வீட்டைப் பார்த்தாலும் அந்த வீட்டுப் பலனை நற்பலனாகவே மாற்றி நடத்தும். புராண காலத்தில் "அன்னபட்சி' என்று ஒன்று இருந்ததாகவும், அதற்குப் பாலை வைத்தாலும் அந்தப் பாலில் கலந்துள்ள தண்ணீரை விலக்கிவிட்டு, தனிப்பாலை மட்டுமே பருகும் என்பார்கள். இப்போதுகூட அரிசி ஆலைகளிலுள்ள எந்திரம் அரிசியையும் உமியையும் தவிட்டையும் தனித்தனியே பிரித்துவிடும். அதுபோல, கெட்டதை நீக்கி விட்டு நல்லதை நிலைநாட்டுவது லக்னநாதன் அல்லது ராசிநாதன் சிறப்பாகும். இதை "சகவாச தோˆம்' என்பார்கள். 10 பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில் 9 பேர் லஞ்சம் வாங்கும் கெட்டவர்கள் இருந்தால், லஞ்சம் வாங்காத ஒருவரையும் கெடுத்துவிடுவார்கள். அல்லது வேலையைவிட்டு விலகும்படி டார்ச்சர் செய்துவிடுவார்கள். இது நடை முறை. இதில் தப்பித்தவறி வாழ்கிறவர்கள் சேற்றில் மலர்ந்த செந்தாமரைக்குச் சமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு தன் ராசியில் ஆட்சியாகவும் வக்ரமாகவும் இருக்கிறார். "வக்ரத்தில் உக்ர பலம்' என்பது ஜோதிட விதி. அதாவது, வக்ரமடையும் கிரகம் நல்ல ஆதிபத்தியமாக இருந்தாலும் சரி; கெட்ட ஆதிபத்தியமாக இருந்தாலும் சரி- அதை மிக மிக வலுவாகச் (ஸ்ட்ராங்காக) செய்யும். உங்களுக்கு ராசிநாதனே வக்ரமாக இருப்பதால் திறமை, செல்வாக்கு, செயல்வேகம் எல்லாம் சிறப்பாகவே அமையும். பெருமையும் புகழும் குறையாமல் தேடிவரும். கேதுவும் ராகுவும் சம்பந்தப்படுவதால் புகழுக்கேற்றவகையில் போட்டியும் பொறாமையும் வரத்தான்செய்யும். அவற்றை உங்கள் திறமை யால் விரட்டியடித்து வெற்றிபெறுவதே உங்களின் தனித்திறமையாகும். போட்டியும் எதிர்ப்பும் இருந்தால்தான் உங்களுக்கு ஆர்வம், அக்கறை, வேகம், விறுவிறுப்பு உண்டாகும். மிக உயரத்தில் பறந்தால் தான் கருடன்; இல்லாவிட்டால் ஊர்க் குருவியாகிவிடும். பரிட்சையில் 99 மதிப் பெண்கள் எடுத்தாலும் சந்தோˆம் ஏற்படாது. இன்னும் ஒன்றுசேர்த்து 100-க்கு 100- சதம் அடிக்கமுடியவில்லையே என்னும் ஆதங்கம்தான் அதிகமாக இருக்கும். இது உங்களின் நிலை. வேறுசிலரோ, உங்களுக்குப் பின்தங்கியவர்களுடன் ஒப்பிட்டு ஆறுதல் அடைவார்கள். சேவல் சண்டையில் தோற்றுப் போன சேவல், கீழே சாயும்போதும் எதிரிச் சேவலை ஒரு கொத்து கொத்துவிட்டுத்தான் சாயுமாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ராசிக்கு 12-ல் இருக்கிறார். ராசிக்கு 12-ல் சனி வரும் காலம் ஏழரைச்சனி ஆரம்பம். ஜென்ம ராசிக்கு வரும்போது இரண்டரை வருடம் ஜென்மச்சனி எனப்படும். ராசிக்கு 2-ல் சனி வரும் காலம் பாதச்சனி எனப்படும். ஆக, ராசிக்கு 12, ஜென்மம், 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தையே "ஏழரைச்சனி' என்பார்கள். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கிப் பலன்செய்வார். அந்த மூன்று ராசிகளுள் சனி வரும் காலம் (3ல2 ) ஏழரைச்சனி என்பார்கள். பிறந்த காலந்தொட்டு முதலில் வருவது மங்கு சனி, முப்பது வருடம் கழித்து இரண்டாவதாக வருவது பொங்கு சனி, அடுத்து முப்பது வருடம் வழித்து வருவது மரணச் சனி எனப் பொதுவாகச் சொல்வதுண்டு. இதில், மூன்றாவதாக நடக்கும் மரணச்சனி என்பது எல்லாரையும் மரணமடையச்செய்யும் என அர்த்தமல்ல. அதற்குச் சமமான சங்கடங்களை- வேதனைகளை- சோதனைகளைத் தருமென அர்த்தம். இந்த மூன்று சனியும் நடந்துமுடிய 60 வருடங் களாகும். (பிறக்கும்போது ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு). அதற்குமேல் உயிர் வாழ்கிறவர்களும் உண்டல்லவா? அதனால், மரணச்சனி எனப் பயப்படவேண்டாம். 80- 90 வயதைக் கடந்தவர்கள் எல்லாம் மூன்று சுற்று சனியையும் சந்தித்தவர்கள்தான். மங்கு சனி- பொங்கு சனி- மரணச்சனி ஒருவர் பிறக் கும்போதே அந்தப் பிறவியின் தலையில்- அவரின் ஆயுள், கல்வி, செல்வம் எனும் மூன்றோடு இறைவன் எழுதிவிடுவான். அவரவரின் ஜாதக அமைப்பின்படி, இந்த மூன்றும் அவருக்கு சுகமோ துக்கமோ அமையும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக, சனிக்கு 3, 6, 11-ஆமிடங்கள்தான் யோகமான இடங்களாகும். ""ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் (சனி) நிற்கும்போது கூறு பொன் பொருண்டாம், குறைவிலாச் செல்வமுண்டாம், ஏறும் பல்லக்குண்டாம், இடம்பொருள் ஏவலுண்டாம், காறு பாலஷ்ட லட்சுமி'' என்பது "சந்திர காவியம்' என்ற ஜோதிட நூலின் விதி. ஆகவே, உங்கள் அறிவு, ஆற்றல், செயல், திறமையெல்லாம் குன்றில்மேல் ஏற்றிய தீபம்போல பிரகாசிக்கும். (குடத்துக்குள் ஏற்றிவைத்த நிலை மாறிவிடும்). தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும்; பொதுவாழ்க்கை, அரசியல், சமூகப் பணி, ஜாதி சங்கம் எதுவானாலும், அதில் உங்களுடைய ஆர்வம், அக்கறைக்குத் தக்கபடி வளர்ச்சியும் பிரபலமும் அடையலாம். அதேசமயம், உங்களுடைய ஆர்வமும் விடாமுயற்சியும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் முடங்கி விடக்கூடாது. உயர உயரப் போய்க் கொண்டே இருக்கவேண்டும். அதனால் தான், குடத்துக்குள் ஏற்றிவைத்த தீபமாக இல்லாமல், குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபமாகப் பிரகாசிக்கவேண்டுமெனக் குறிப்பிட்டேன். காமராஜர் மாணவப் பருவத்திலேயே தன்னோடு விளையாடிய மாணவர்கள் மத்தியில் தலைவனாகத் திகழ்ந்தாராம். எனவேதான், அரசியல் துறையில் "கிங் மேக்கர்' என்ற பெருமையைப் பெற்றவர். "கர்மவீரர்' என்றும் போற்றப் பட்டார். ஆகவே, "உள்ளுவதெல்லாம் உயர் வுள்ளல்' என நினைக்கவேண்டும்; செயல் படவேண்டும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்காரர்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள்தான். நீரில் வாழும் மீன்கள் ஓய்வாக முடங்கிக் கிடக்காது. எப்பொழுதும் நீச்சலடித்துக் கொண்டே இருக்கும். கோழி- மீன்- ஆமை எனும் மூன்றும் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லப்படும். கடமைகளை (கர்மாவாக) செயல்படுத்தும் மனிதன் கோழிக்குச் சமம். கோழி முட்டையிட்டு அதன்மேல் அமர்ந்து சூடாக்கி குஞ்சு பொரிக்கும். மீன் நீரில் முட்டையிட்டுவிட்டு திரும்பிப் பார்க்குமாம். அதன் பார்வையில் பட்டவையெல்லாம் குஞ்சாகப் பொரித்து விடும். ஆமை எங்கேயோ ஓரிடத்தில் முட்டையிட்டுப் போய்விடும். பிறகு, அதை நினைத்துப் பார்க்குமாம். அப்பொழுது, குஞ்சாகப் பொரித்துவிடுமாம். கோழியைக் கடமையாற்றும் மனிதனுக்குச் சமமாகவும், மீனை சாது, சந்நியாசிகளுக்குச் சமமாகவும், ஆமையை ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் சமமாகச் சொல்லப்படும். அன்றாடக் கடமைகளைச் செய்கிறவர் சராசரி மனிதர்- கோழிக்குச் சமம். கர்மவினையைப் போக்கச் செய்யும் சாதுக்கள் மீனுக்குச் சமம். சாது தரிசனம் பாவ விமோசனம். இந்த உலகம் சுபிட்சமடைய வேண்டுமென ஞானியரும் சித்தர்களும் நினைத்தாலே பூவுலகம் மேன்மையடையும்; புனிதமடையும். இன்றைய கலியுகத்தில் இன்னும் எந்த ஞானியும் சித்தரும் நினைக்கவில்லை போலும். அதனால் தான் "கொரோனா' போன்ற கொடிய நோய்களுக்கு மனித இனம் பலியாகிறது. இதை "மனம்போல் வாழ்வு' எனவும் கூறலாம்.