ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: பரணி- 2, 3, 4.

செவ்வாய்: திருவாதிரை- 2, 3.

புதன்: கார்த்திகை- 3, 4,

Advertisment

ரோகிணி- 1, 2.

குரு: அவிட்டம்- 4.

சுக்கிரன்: கிருத்திகை- 1, 2, 3.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

5-5-2021- ரிஷப சுக்கிரன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

2-5-2021- மகரம்.

4-5-2021- கும்பம்.

7-5-2021- மீனம்.

thisweekrasi

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த புதன் 12-ல் மறைவு, புதனுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் அதற்கும் 12-ல் மறைவு, ஜென்ம ராசியில் 5-க்குடைய சூரியன் உச்சம். 2, 7-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. சிலகாரியங்கள் நினைத்த படி நினைத்த நேரத்தில் முடிந்துவிடும். சிலகாரியங்கள் எதிர்மறையாக நிறைவேறும். சிலகாரியங்கள் வெற்றி- தோல்வின்றி, எதுவுமில்லாமல் கிணற்றில் போட்ட கல்லைப்போல அசைவற்று இருக்கும். என்றா லும் ராசியாதிபதி செவ்வாயை பாக்கியாதிபதி குரு பார்ப்பதால் உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் வீண்போகாது; ஏமாற்றமாகாது. காலதாமதமானாலும் காத்திருந்தாலும் கருதிய காரியங்கள் கைகூடும். அதற்கு உங்களுக்கு நம்பிக்கையும் விடாமுயற்சியும் தேவைப்படும். பகீரதன் என்னும் மன்னன் தன் முன்னோர் களுக்கு ஆத்மசாந்திபெற ஆகாயத்தில் இருந்த கங்கையை பூலோகத்துக்கு கொண்டுவர கடும் தவமுயற்சி செய்தான். அவனது மகாமுயற்சியின் காரணமாக ஆகாய கங்கை பூமிக்கு வந்தாள். அவள் நேரடியாகப் பாய்ந்தால் பிரளயம் உண்டாகிவிடும் என்று, சிவன் ஆகாய கங்கையைத் தன் தலைபோல் தாங்கி அதன்பிறகு பூமியில் விழவைத்தார். பகீரதன் முயற்சியால் ஆகாய கங்கை பூலோக கங்கையாக பிரவாகம் எடுத்தாள். இதைத்தான் பகீரத முயற்சி என்பார்கள். இதையே வள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்றார்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைந் திருந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 2-ல் புதன் வீட்டி-ருக்க, புதன் ஜென்ம ராசியில் இருப்பதால் மறைவு தோஷம் விதிவிலக்காகிறது. இந்த மறைவு தோஷத்தின் பலன் காலதாமதாலும் காரிய தாமதமாகுமே தவிர தோல்விக்கு இடம் ஏற்படாது. நினைத் ததை நிறைவேற்றலாம்; எண்ணியதை ஈடேற்றலாம். 5-ஆம் தேதி 12-ல் உள்ள சுக்கிரன் ஜென்ம ராசிக்கு மாறுவார். அதனால் தடைகளும் விலகும்; தாமதங்களும் நீங்கும். 12-க்குடைய செவ்வாய் 2-ல் இருப்பதால் சிலகாரியங்கள் செலவில்லாமல் நிறைவேறும். சிலகாரியங்கள் கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். சிலகாரியங்கள் இரட்டிப்புச் செலவோடு நிறைவேறும். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சிபெறுவதால் தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. அது உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கிறது. அத்துடன் 11-க்குடைய குருவும் 10-ல் இருப்பது சிறப்புங்கள் முயற்சிகளுக் கும் செயல்களுக்கும் குரு வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். ஜென்ம ராகு. சப்தம கேது- தசா புக்திரீதியாக திருமணத் தடை, திருமணத் தாமதங் களை ஏற்படுத்தலாம். உரிய பரிகாரங்களை மேற்கொண்டால் தடை, தாமதங்கள் நீங்கும். "மங்களம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.'

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருடன் ராகு, கேது சம்பந்தம். 6, 11-க்குடைய செவ்வாய் மிதுன ராசியில் சம்பந்தம். எனவே, மலையைக் கிள்ளி எ-யைப் பிடித்த கதையாக உங்கள் காரியங்கள் கடும் முயற்சிக்குப்பிறகு பாதி நிறைவேறும். மீதிக்குப் போராடவேண்டும். குறிப்பாக அடுத்தவர்களுக்காக முயற்சிக்கும் காரியங்கள் எளிதில் வெற்றியாகும். உங்கள் சொந்த முயற்சிகள் மந்தமாகும். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது பழமொழி. இந்த கிரக அமைப்புப்படி ஊரார் பிள்ளையையும் வளர்க்க முடியாது; தன் பிள்ளையும் வளராது. அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்; அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்; எவரெவர்க்குதவினர் எவரெவர்க் குதவிலர்; தவரெவர் நினைவது தம்மை உணர்வதுவே!' என்பது சொக்கநாத வெண்பா! ஆகவே நல்லதும், கெட்டதும், நடப்பதும் நடக்காததும் எல்லாம் விதிக்கப்பட்ட செயல்; விதியின் செயல். வெற்றிக்காக மகிழ்ச்சி அடைவதும் தோல்விக்காக வருத்தப்படுவதும் தேவை யற்ற செயல். 6-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் இருப்பதும், 8-க்குடைய சனி ஆட்சிபெற்று செவ்வாயின் பார்வையைப் பெறுவதும்தான் உங்கள் வெற்றி- தோல்விக்குக் காரணம். "அடுத்து முயன்றா லும் ஆகும் நாளன்றி எடுத்த கர்மங்கள் ஆகாது' என்பதை நினைவில்கொண்டு செயல்படவேண்டும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 10-ல் சூரியன் உச்சம். 11-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவு. 9-க்குடைய குரு 8-ல் மறைவு. 7-ல் சனி ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். அந்த ராசிக்கு உச்சநாதனான செவ்வாய் 12-ல் மறைந்தாலும் சனியைப் பார்க்கிறார். உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் காரியங்களிலும் தோல்விக்கு இடமில்லை. என்றாலும் மதில்மேல் உள்ள பூனை இந்தப் பக்கம் தாவுமா? அந்தப் பக்கம் தாவுமா என்று பூவா- தலையா போட்டுப் பார்ப்பதுபோல் எதிர்பார்ப்புகளோடு இயங்கும். என்றாலும் 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம் பெறுவதால் எண்ணியதை ஈடேற்றுவீர்கள்; நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குறுக்கீடுகளையும் தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேற்று வீர்கள். வைராக்கியமும் விடாமுயற்சியும் பக்கத்துணையாக இருந்து உங்களை வழிநடத்துவதால் எல்லாவற்றிலும் வெற்றி யடையலாம். காதல் அரம்பையர் கடைக் கண் காட்டிவிட்டால் இமயமும் ஓர் கடுகாகி விடும் என்று கவிஞர் பாடினார். காதல் அரம்பையருக்கு பதிலாக உங்களுக்கு மனவுறுதியும் செயல் வைராக்கியமும் இருப்ப தால் நினைத்ததை வெற்றி கொள்ளலாம். ஆயிரம் தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்கலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருடன் 10-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் எத்தனையோ யோகங்கள் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றிலும் மேலான யோகம் தலைசிறந்த யோகம் இதுவாகும். தர்மஸ்தானம் என்பது திரிகோணம். கர்மஸ்தானம் என்பது கேந்திர ஸ்தானம். திரிகோணம் லட்சுமி ஸ்தானம். கேந்திரம் விஷ்ணு ஸ்தானம். தர்மகர்மாதிபதி யோகமுள்ள ஜாதகத்திற்கு லட்சுமி கடாட்சமும் விஷ்ணு கடாட்சமும் அமைவதால் எவ்வளவு பெரிய தண்டனையில் இருந்தும் தப்பிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை பெறலாம். 11-ல் செவ்வாய் இருப்பது பலம். செவ்வாயின் வீட்டில் மேஷத்தில் ராசிநாதன் சூரியன் உச்சம். பொதுவாகவே எந்தவொரு ஜாதகத்திலும் 11-ல் ராகு, கேது, சூரியன், செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு எப்போதும் வெற்றிதான். தோல்விக்கு இடமில்லை. தொய்வுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கிரக அமைப்பிருந்தால் எந்த பாதிப்புக்கும் இடமேற்படாது. 6, 8-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார். யாருக்கு உதவிசெய்கிறீர்களோ அவர்களே உங்களுக்கு எதிரியாக மாறி இடையூறு செய்வார்கள். வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோலவும், பாம்புக்குப் பால்வார்த்த கதையாகவும் ஆகிவிடும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 9-ல் இருக்கிறார். அவர் 10-க்குடையவராவதால் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். 9-க்குடைய சுக்கிரன் 12-க்குடைய சூரியனோடு சேர்ந்து 8-ல் மறைவது ஒருவகையில் தோஷம். 9-ல் ராகு ராசிநாதனோடு சேர்க்கை; அவருக்கு கேது பார்வை. எனவே, குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் காணப்படலாம். குறிப்பாக பெண்கள்வழியில் மாங்கல்ய தோஷமும் புத்திர தோஷமும் ஏற்பட இடமுண்டு. அதனால் அப்படித் தடைப்படும் ஜாதகங்களை ஆராய்ந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால் களஸ்திர தோஷம் மாங்கல்ய தோஷம் எல்லாம் நிவர்த்தியாகும். ஒரு சில குடும்பங்களில் நாற்பது நாற்பத்தைந்து வயது காலங்களில் அவமிருத்யு தோஷம்- அகால மிருத்யு தோஷம் ஏற்பட இடமுண்டு. எதிர்பாராத விபத்து அல்லது வெட்டுப்பட்டு இறத்தல் போன்ற மரணங்கள் அவமிருத்யு தோஷங்களைக் குறிக்கும். மத்திய பருவ வயதுகளில் (நாற்பது அல்லது நாற்பத்தைந்து) மரணம் சம்பவிப்பது அகால மிருத்யு தோஷம் எனப்படும். இதையும் ஜாதக ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்டறிந்து பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும். சில குடும்பங்களில் கொள்ளி வைப்பதற்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தாலும், கண்காணாத இடத்தில் வயதானவர்கள் காலமாகி அநாதை யாக இறுதி சடங்குகளைச் செய்யநேரும். 9-க்கு டைய சுக்கிரன் 8-ல் மறைவதும் 9-ல் ராகு- கேது சம்பந்தம் பெறுவதும் இதற்குக் காரணம். ஜாதக தசாபுக்தி பாதகமாகவுள்ள மிகச்சிலருக்கே இவ்வாறு நடக்கும். மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 5-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சிபெறுவார். ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்களுக்கு மறைவுதோஷமில்லை. 7-க்குடைய செவ்வாய் 9-ல் ராகு சாரத்தில் சஞ்சாரம். எனவே, திருமணமானவர்களுக்கு மனைவிவழியில் அல்லது கணவன்வழியில் எதிர்பாராத தனப்ராப்தியும் யோகமும் ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு உடன்பிறப்புக்கள்வகையில் மேற்படி யோகம் உண்டாகும். 8-ல் புதன், ராகு சேர்க்கையும், கேது பார்வையும் இருப்பதால் சிலருக்கு வாகன விபத்துகள் ஏற்பட இடமுண்டு. அப்படி ஏற்பட்டாலும் அதற்குக் கணிசமான நஷ்டஈடு தொகையும் பெறலாம். 3, 6-க்குடைய குரு 5-ல் இருந்து துலா ராசியைப் பார்ப்பதால் மேற்கூறிய வழிகளில் நஷ்டஈடு தொகை பெறுவதற்குக் காரணமாகும். எனக்குத் தெரிந்த ஒருவரின் மகன் (மாணவனும்கூட) அரசு வாகன விபத்தில் சிக்கி கால் ஊனமானான். தந்தை வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடு தொகையாக பல லட்சம் வாங்கிவிட்டார். துலா ராசிக்கு 11-க்குடைய சூரியன் ராசிநாதன் சுக்கிரனோடு சேர்ந்து 7-ல் இருப்பதால், மனைவிவகையில் சொத்து சுகங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புண்டு அல்லது படித்து வேலையற்ற மனைவிமார்களுக்கு அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. படிக்காத பெண்கள் வங்கிக்கடன் வாங்கி சொந்தத் தொழில் செய்து லாபம் சம்பாதிக்கலாம். அல்லது மோடி திட்டத்தின்கீழ் சொந்தவீடு அமைக்க நிதி உதவிபெறலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருக்கிறார்கள். 5-ஆம் தேதி 7-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சியாக மாறுகிறார். ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை வசதிகள் எதிலும் குறைவிருக்காது. 8, 11-க்குடைய புதனும் 7-ல் இருப்பது ஒரு சிறப்பு. 2, 7-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு. கணவன்வழியில் அல்லது மனைவிவழியில் தவிர்க்கமுடியாத கடன்கள் ஏற்படலாம். கடந்தகால ஏழரைச்சனியில் ஊரைச் சுற்றி மனைவி கடன்படிருக்கலாம். அல்லது கணவன் கடன்படிருக்கலாம். அந்த நிலையில் கடன் அடைபட வழியில்லாமல் தலைமறைவாக வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படலாம். பூர்வீக ஆஸ்தி பூஸ்தி இருப்பவர்கள் அதை விற்றுக் கடனை அடைக்கலாம். அல்லது மனைவிவழியினர் தலையிட்டு மகளுக்காக மருமகன் பட்ட கடனை அடைக்கலாம். (வசதி உள்ளவர்கள்). வசதி இல்லாதவர்கள் வக்கீலைக் கலந்து ஐ.பி. (மஞ்சள் கடிதாசி) கொடுக்கலாம். ஒரு நபர் ஊரைச் சுற்றிக் கடன் வாங்கி மகன், மகள், மருமகன் பெயரில் சொத்துகளை வாங்கி ஐ.பி. கொடுத்துவிட்டார். அவர்கள் கடைசிவரை தம்மை ஆதரிப்பார்கள் என்று நினைத்தார். சொத்துப் பதிவானதும் மற்றவர்கள் (பிள்ளைகள்) அவரை ஒதுக்கிவிட்டார்கள். இதுதான் "கெடுவான் கேடு நினைப்பான்' என்பதற்கு உதாரணம். அந்த நபர் ஹோட்ட-ல் பில்போட்டு எஞ்சிய காலத்தை ஓட்டிவிட்டார்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைகிறார். என்றாலும் குருவுக்கு வீடு கொடுத்த சனி 2-ல் ஆட்சிபெற்றதால் மறைவுதோஷம் பாதிக்காது. 9-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அரசுவகையில் எதிர்பார்த்த காரியங்கள் சுமூகமாக நிறைவேறும். தந்தைவழியில் நிலவிய மனக்கிலேசம் மாறி ஒற்றுமையுணர்வு மலரும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம், வழக்குகளில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படலாம். 5, 12-க்குடைய செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 7-க்குடைய புதன் 6-ல் மறைகிறார். ராகு- கேது சம்பந்தம். மனைவிவகையில் அல்லது மனைவிவகை உறவினர்களில் சில சங்கடங்களைச் சந்திக்கலாம். ஜனன ஜாதகத்தில் 5, 9-க்குடைய தசாபுக்தி சம்பந்தம் பெற்றால் நற்பலன்களையும், மனைவியால் ஆதரவும் ஆதாயமும் எதிர்பார்க்கலாம். 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் பாதகமான பலன்களை சந்திக்கநேரும். என்றாலும் 3-ல் உள்ள குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனமாதிரி தப்பிக்கலாம். சங்கடங்களை சமாளிக்கும் யுக்திகளும் தோன்றும். 2-ல் உள்ள சனி உங்களது பேச்சில் சுடுசொற்களை உண்டுபண்ணுவார். அதாவது "வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும்' என்பது ஜோதிட மொழி. சிலர் வீடு, மனை, வாகன யோகத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் மனை வாங்கி வீடுகட்டலாம். அவ்வாறு நடைபெறும்போது கட்டட வேலைகள் தாமதமாகலாம். அப்படிப் பட்டவர்கள் செவலூர் பூமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள் விலகும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். 7-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். சந்திரன் வீட்டையும் சனி பார்க்கிறார். 2-ல் குரு பலம் பெறுகிறார். எனவே, ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை முன்னேற்றம், தொழில் அபிவிருத்தி இவற்றுக்கு குறைவில்லை. தேவைப்படும் நேரம் தேவைப்படும் அளவு பண வரவுக்கும் பஞ்சமில்லை. 12-க்குடையவர் 2-ல் இருப்பதால், பத்து ரூபாய் விரயம்- செலவு ஏற்பட்டால் இருபது ரூபாய் வரவுக்கு வழிவகை அமையும். 2-ல் உள்ள குரு 3-க்குடையவராவார். சகோதரர்கள்வகையில் அல்லது நண்பர்கள்வகையில் தனவருவாய் எதிர்பார்க்கலாம். நீண்டகாலமாகக் வராத பணமெல்லாம் வசூலாகும். சனியை செவ்வாய் பார்ப்பதால் தாயார்வகையில், மூத்த சகோதரர்கள்வகையில், பங்காளிவகையில் வருத்தம் உண்டாக்கும் நிகழ்ச்சிகளை சந்திக்கநேரும். பூமி, வீடு சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம், தொழில்மாற்றம் அல்லது ஊர்மாற்றம் ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடலாம். 5-ஆம் தேதிமுதல் 5-க்குடைய சுக்கிரன் (5-ல்) ரிஷபத்தில் ஆட்சிபெறுகிறார். வாரிசுக்காக தவமிருப்போருக்கு வாரிசு யோகம் உண்டாகும். ஏற்கெனவே வாரிசு யோகம் பெற்றவர்களுக்கு வாரிசுகளுக்கு சுபமங்கள நிகழ்ச்சிகளும் உண்டாகும். வயதான பெற்றோருக்கு பிள்ளைகளின் ஆதரவும் உதவியும் பெருகும். தேக ஆரோக்கியத் தில் தெளிவு ஏற்படும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு நன்முறையில் செயல்படும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைவென்றாலும் ஆட்சிபெறுகிறார். அவருக்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. தேவகேரளம் என்ற நூ-ல் "மந்தன் சேய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் தீது' என்று சொல்லப்படும். ஆனால் இங்கு சனி ராசிநாதன் என்பதாலும், சனி நின்ற ராசி மகரம் செவ்வாயின் உச்ச ராசி என்பதாலும் மேலே குறிப்பிட்டுள்ள விதி இங்கு பொருந்தாது. அதனால் கெடுபலன் ஏற்படவும் இடமிருக்காது. சனி ஆயுள் காரகன், செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் காரகத்துவம் சம்பந்தப்பட்ட கெடுபலன் நடக்க இடமுண்டு. அவரவர் ஜாதகரீதியாக பலனைப் பார்த்து தேவையான பரிகாரங்களைச் செய்துகொள்ளுங்கள். பங்காளி உறவில் பகை ஏற்படவும், சண்டை, சச்சரவுகளால் காயங்களை சந்திப்பதற்கும் இடம் ஏற்படுவதால் யாரையும் புண்படுத்த வேண்டாம். யாரிடமும் விரோதம் பாராட்டவேண்டாம். "நரி வலம்போனால் நல்லதா இடம்போனால் நல்லதா' என்று ஆராய்ச்சி செய்வதைவிடமேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்று திருப்தியடைய வேண்டும். 4-ல் ராகு, 10-ல் கேது இருப்பது சிலருக்கு தேக ஆரோக்கியம், சுகம், சௌக்கியம் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு செய்யும் தொழில், பார்க்கும் வேலை, உத்தியோகம் இவற்றில் பிரச்சினை ஏற்படலாம். கடமையே பிரதானம் என்று விசுவாசமாக வேலை செய்பவர்களுக்கு எந்தக் கெடுதலும் பாதிக்காது. நேர்மை தவறி தொழில் துறையில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை உறுதியாகும். வேலையில் அநியாயமாக குற்றம் சாற்றப்பட்டு நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு நியாயமும் வெற்றியும் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி அவருக்கு 12-ல் மறைவு. என்றாலும் சனி ஆட்சிபெற்று மீன ராசியைப் பார்க்கிறார். ராசிக்கு 2, 9-க்குடைய செவ்வாய் 4-ல் அமர்ந்து சனியைப் பார்க்கிறார். அந்த செவ்வாயை 12-ல் உள்ள குரு பார்க்கிறார். எனவே, அடிப்படை வாழ்க்கை, வசதிகள், செய்யும் தொழில், பார்க்கும் வேலை இவற்றில் கேடு கெடுதிக்கு இடமில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எல்லாவற்றிலும் வாய்மையும் நேர்மையும் தூய்மையும் விசுவாசமும் இருப்பதால், எதிர்மறைப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதாக சந்திக்கலாம்; சமாளிக்கலாம். 9-க்குடைய செவ்வாயை 10-க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. 9-ஆமிடம் தர்மஸ்தானம். 10-ஆமிடம் கர்மஸ்தானம். 9-ஆமிடம் திரிகோணம்- லட்சுமி ஸ்தானம். 10-ஆமிடம் கேந்திரம்- விஷ்ணு ஸ்தானம் என்பார்கள். 9, 10-க்குடையவர் சம்பந்தம் லட்சுமி கடாட்சத்தையும் விஷ்ணு கடாட்சத்தையும் உண்டாக்கும். இறைவன் இருசாராருக்கு உதவமாட்டார். ஒன்று, நம்பிக்கைத் துரோகி. இன்னொன்று சோம்பேறி. இவர்கள் இருவருக்கும் எப்போதும் துணை நிற்கமாட்டார். கடமை உணர்வோடு பாடுபடுகிறவர்களுக்கு எப்போதும் பக்க பலமாக நின்று கைகொடுத்து ஆதரவு தருவார். அதைத்தான் வள்ளுவர், "மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையினாள்' என்று எழுதினார். இதையே "முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார்' என்றும் சொல்லலாம். அதற்கு உதாரணம் பகீரதன் என்னும் மன்னனும், ராஜரிஷி பட்டம் பெற்ற விசுவாசமித்திரரும் ஆவர்.