ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

கிரகப் பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 4, பூசம்- 1, 2.

செவ்வாய்: ரேவதி- 1, 2.

Advertisment

புதன்: திருவாதிரை- 4, புனர்பூசம்- 1, 2, 3.

குரு: உத்திராடம்- 1.

சுக்கிரன்: ரோகிணி- 4, மிருகசீரிஷம்- 1.

சனி: உத்திராடம்- 1, பூராடம்- 4.

ராகு: மிருகசீரிஷம்- 3.

கேது: மூலம்- 1.

கிரக மாற்றம்:

குரு, சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

20-7-2020- கடகம்.

22-7-2020- சிம்மம்.

24-7-2020- கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சி, வக்ரம். ஒரு கிரகம் 6, 8, 12-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த கிரகம் ஆட்சி, உச்சம், கேந்திரத் திரிகோணமாக இருந்தாலும், அந்த கிரகத்தின் மறைவு தோஷம் விலகிவிடும்; நிறைவுப் பலனாகிவிடும். மேலும், மேஷ ராசிக்கு 9-க்குரிய குருவோடு 10-க்குரிய சனியும் இணைந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதாவது, 9 என்பது திரிகோணம். 10 என்பது கேந்திரம். ஒரு திரிகோணாதிபதியும் ஒரு கேந்திராதிபதியும் இணைந்தாலும்; பரிவர்த்தனை பெற்றாலும் அதற்கு தனிச் சிறப்பும் முக்கியத்துவமும் உண்டாகும். திரிகோணம் என்பது தெய்வ பலம். கேந்திரம் என்பது மனித முயற்சி பலம். மனிதன் நினைக்கிறான். இறைவன் நிறைவேற்றுகிறான். பகீரதன் என்ற மாமன்னன் தன் முன்னோர்களின் முக்திக்காக- அவர்களின் அஸ்தியைக் கரைப்பதற்காக வானிலிருந்து பூமிக்கு கங்கையை வரவழைக்கத் தவமிருந்து சாதனை படைத்தான். இதுதான் திரிகோணம், கேந்திரத்தின் சாதனை. எனவே, உங்கள் ராசிக்கு இந்த யோகம் அமைவதால், நீங்கள் எண்ணும் நல்லவையெல்லாம் தொல்லையில்லாமல், அல்லல் இல்லாமல் நிறைவேறும் என்பது திண்ணம். "நினைப் பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கவிய ரசர் கண்ண தாசன் எழுதினார். ஆனால், நல்லோர் எண்ணம் வெல்வது நிச்சயம். கோழி முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறிக்கும். (கடமை). மீன் நீரில் முட்டையிட்டு அதைத் திரும்பிப் பார்க்கும். அதன் பார்வையில் படுவதெல்லாம் பொறியும். (நயனம்). ஆமை எங்கோ ஓரிடத்தில் முட்டையிட்டுவிட்டுப் போய்விடும். வேறிடத்திலிருந்து அதை நினைக்கும்; குஞ்சு பெரிதாக வளர்ந்துவிடும். கோழி- சீடன் கடமைக்கு உதாரணம். மீன்- குருவின் நயன தீட்சைக்கு உதாரணம். ஆமை- ஞானிகளின் சிந்தனைக்கு உதாரணம். ஞானிகள் எப்பொழுதும் தியானத்திலேயே திளைத்திருப்பார்கள். இந்த உலக முன்னேற்றத் திற்காக நினைத்தாலே போதும்- அந்த ஆசிர்வாதம் பலன்தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

tt

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் வீட்டில் ஆட்சிபெறுகிறார். தொடக்கத்தில் சந்திரன் சாரத்திலும் (ரோகிணி) பிறகு, செவ்வாயின் சாரத்திலும் (மிருகசீரிடம்) சஞ்சாரம். எந்தவொரு திட்டத்தையும் தீர்க்கமாகத் திட்டமிட்டு, வைராக்கியமாக சாதனை புரிவ தால் அட்டமத்துச்சனியின் தோல்விகளைத் துரத்தியடித்து வெற்றிமாலை சூடலாம். பலமுறை எதிரியிடம் தோற்றுப் பின்வாங்கிய ஒரு மன்னன், பாசறையில் கவலையோடு அமர்ந்திருந்தான். அப்பொழுது அங்கொரு சிலந்தி வலைபின்னுவதையும், கீழே விழுந்தாலும் மீண்டும் மீண்டும் வலைபின்னி மேலே முன்னேறி கூடு அமைத்ததையும் கண்டான். முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார் என்னும் தத்துவத்தை உணர்ந்து, தன் படைவீரர்களை உற்சாகப்படுத்தி வைராக்கியமாக மீண்டும் போரிட்டு எதிரியை ஓடவைத்து வெற்றிபெற்றான். குழவி ஒரு புழுவைக் கொட்டி கூட்டில்வைத்து (கூடுகட்டி) அதைச்சுற்றி ரீங்காரமிடும். அதன் ஒலி அந்தப் புழுவுக்கு உயிரூட்டி குழவியாக உருவெடுத்து மாறச்செய்யும். ஆக, இந்த உலகம் இயங்குவதற்கே ஒலியும் ஒளியும்தான் (ள்ர்ன்ய்க் ஹய்க் ப்ண்ஞ்ட்ற்) காரணம். இதுதான் பிரபஞ்சத்தின் தத்துவம்- பஞ்சபூதத் தத்துவம்- நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகிய இந்த பஞ்சபூதங் கள்தான் ஒரு தாயின் வயிற்றில் ஒரு கரு உயிராக உருவாகிப் பிறப்பதற்குக் காரணமாக அமைகின்றன. இந்தப் பஞ்சபூதங்கள் இல்லாமல் எந்த ஜனனமும் இல்லை. நமது சரீரத்திலும் இந்த பஞ்சபூதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதன் தத்துவம்தான் (மறைபொருள்) குந்தி தேவியின் பிள்ளைகளான பஞ்சபாண்டவர்கள் கதை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் ஆட்சிபெறுகிறார். அவருடன் ராகு சம்பந்தம். குரு, சனி, கேது பார்வை. 6, 11-க்குரிய செவ்வாய் 4-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். புதன் நிற்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடம். எனவே, உங்களுடைய தொழில்துறையில் புது முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், சிலர் பூமி, இடம், நிலம், வீடு, மனை, வாகன சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடலாம். செவ்வாய் 6-க்கு அதிபதி என்பதால், அதுசம்பந்தமான அரசுக் கடன், வங்கிக் கடன், தனியார் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை அமையும். கடனில் இரண்டுவகை உண்டு. பற்றாக்குறை செலவை சமாளிக்க வாங்கும் கடன்- பழைய கடன் வட்டிக்காகப் புதிதாக வாங்கும் கடன். கடன் வாங்குவது தவறல்ல- குற்றமல்ல. கடன் வாங்கா தவர்கள் யாருமே இல்லை. பெரிய பெரிய தொழிலதிபர்களும் கோடீஸ்வரர்களும் கடன் வாங்குகிறார்கள். வாங்கிய கடனை நாணயமாகத் திருப்பியடைப்பதுதான் முக்கியம். நிரவ் மோடி போன்றவர்கள் ஏமாற்றிக் கடன் வாங்கி, இன்னொருபுறம் சொத்துகளை சேர்ப்பதுதான் தவறு, குற்றம்; தண்டிக்கப்படவேண்டியவர்கள். இதற்கு அதிகாரிகளும் (கமிஷன் பெற்றுக்கொண்டு) உடந்தையாக இருப்பதுதான் குற்றம். இவர்களெல்லாம் முஸ்லிம் நாடுகளைப் போல் பொது இடங்களில் வைத்து தூக்கில் போட வேண்டியவர்கள். யானை போவது தெரியாது, பூனை போவதைப் பெரிதுபடுத்து வார்கள் என்பதைப்போல, கோடிகோடியாக அரசுக் கடன் வாங்கித் தலைமறைவாக ஓடிப் போனவர்களை விட்டுவிட்டு ஆயிரக் கணக்கில் கடன்வாங்கி, உண்மையிலேயே அதைத் திரும்பச் செலுத்தமுடியாதவர் களிடம் அரசும் அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை நினைக்கும்பொழுது ""நெஞ்சு பொறுக்குதில்லையே- நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலைகெட்ட மனிதனை நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே'' எனப் பாட, மறுபடியும் ஒரு மகாகவி பாரதி பிறந்து வரவேண்டும்- பாட மட்டுமல்ல; .சாபம் கொடுக்கவும்தான்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

"பாடப் படிக்கத் தேடச் சுகிக்கப் பரதவியம் கற்க கற்கடமல்லாது மற்கிடமேது' என்றொரு ஜோதிடப் பாடல் உண்டு. அதாவது, கடகம், சிம்மம், கன்னி ஆகிய மூன்று ராசி அல்லது லக்னக்காரர்களுக் குத்தான் இந்தப் பாடல். பிரம்மா இந்த உலகைப் படைத்தபொழுது கடக லக்னம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், எல்லா உயிரினங் களும் திரும்புவதற்குத் தன் உடலைத் திருப்ப வேண்டும். ஆனால், நண்டு தன் உடலைச் சுற்றிக் கால்கள் இருப்பதால், எட்டுத் திசை யிலும் நின்ற இடத்திலேயே திரும்பலாம். அதுபோல, கடக ராசி அல்லது கடக லக்னத்தில் பிறந்தவர்கள் எதையும் சாதிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள். வருமுன் காப்போன், வந்தபின் காப்போன், "வந்த பின்னும் காவாதவன்' என மூன்று நிலை சொல்வார்கள். கடகத்தில் பிறந்தவர்கள் வருமுன் காப்பவர்கள் ஆவர். இதைத்தான் வள்ளுவர் "எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்றார். அதாவது, ஒரு செயலைச் செய்வதற்குமுன் திட்டமிட்டு செயல்படவேண்டும். செயலைச் செய்துவிட்டு யோசிக்கக் கூடாது. கடகத்தில் பிறந்தவர்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. 10-க்குரிய செவ்வாய் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதேபோல, 9-க்குரிய குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். 9 என்பது திரிகோணம்- தெய்வ ஸ்தானம். 10 என்பது கேந்திர ஸ்தானம்- முயற்சி ஸ்தானம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைவு. 9-க்குரிய செவ்வாய் 8-ல் மறைவு. எனவே, உங்கள் முயற்சிகளிலும் செயல்களிலும் தளர்வு காணப்படும். தாமதம், தடைகள் குறுக்கிடும். என்றாலும், 5-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்' என்று வசனம் பேசியதுபோல, தடையானாலும் தாமதமானாலும் சிங்கத்தின் கர்ஜனை மற்ற மிருகங்களைப் பயந்து பணியவைப்பதுபோல எதிரிகளை சமாளிக்கலாம், வெற்றிகொள்ளலாம். கராத்தே விளையாட்டில் குங்பூ என்ற விளையாட்டுவகை உண்டு. சத்தம் போடுவதிலேயே எதிரியைப் பலமிழக்கச் செய்துவிடுவார்கள். அதுபோல, வாய்ச் சத்தத்திலேயே எதிரியைப் பலமிழக்கச்செய்து அவன் பலவீனத்தைப் புரிந்து வெற்றிபெறும் யுக்தியைக் கையாள்வீர்கள். ஒரு மல்யுத்த வீரன் தன் சீடனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டான். உடனே, சீடன் குருவையே சண்டைக்கு அழைத்தான். குருவின் மனைவியின் ஆலோசனைப்படி, குரு அகப்பையையும் இட்லி தட்டையும் எடுத்து வந்து, "இந்தக் கலையை உனக்குக் கற்றுத்தரவில்லை' என்று சமாளிக்க, சீடன் சரணடைந்து மன்னிப்புக் கேட்டான். அதுதான் சமயோசித யுக்தி.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார்; ராகு சம்பந்தம். அவர்களை 4-ல் ஆட்சிபெற்ற குருவும், 5, 6-க்குரிய சனியும், அடுத்துக் கேதுவும் பார்க்கிறார்கள். அத்துடன், 3, 8-க்குரிய செவ்வாய் 7-ல் நின்று பார்க்கிறார். கன்னி ராசியை சனியும் பார்க்கிறார். திருமணமாகாதவர்களுக்குத் திருமணத்தடையும் தாமதமும் ஏற்படும். திருமணமானவர்களுக்கு கணவர்-மனை விக்குள் கருத்துவேறுபாடு, அபிப்ராயப் பேதம் உருவாகும். 7-க்குரிய குரு 4-ல் ஆட்சிபெறுவதால், பிரிவு, பிளவுக்கு இடமிருக்காது. பிள்ளைப் பூச்சியை மடியில் கட்டியமாதிரி அவஸ்தை மட்டும் இருக்கும். 10-ல் ராகு, 4-ல் சனி, கேது இருப்பதன் காரணமாக ரயில்வே தண்டவாளம்போல கணவர்-மனைவிக்குள் இரட்டை வாழ்க்கையாக அமையும். ஏட்டிக்குப்போட்டியாக மாற்றுக் கருத்துகள் வரும். நித்திய கண்டம் பூரண ஆயுசாக வரும். ஒரு திரைப்படத்தில் ஒரு டாக்டர் அடிக்கடி சண்டைபோடும் மனைவியிடம், ""கணவர் சண்டைபோடும் போதெல்லாம் வாயில் இந்த மருந்தை ஊற்றிக்கொண்டு துப்பவும் கூடாது, விழுங்கவும் கூடாது'' என்பார். அது வெறும் தண்ணீர்தான். பதிலுக்குப் பதில் பேசினால்தானே சண்டை வரும்? அப்படிப் பழகிக்கொள்ளுங்கள்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந் தாலும் ஆட்சிபெறுகிறார். எனவே, அவருக்கு மறைவு தோஷமில்லை. மேலும், அவர் ராசிநாதன் ஆவார். சுக்கிரன் களத்திரக் காரகன். குரு மாங்கல்ய காரகன். (கணவர்க்காரகன்). இருவரும் 6, 8 ஆக இருப்பதால், குடும்பச்சூழ்நிலையில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் செயல்படுவீர்கள். சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், "எதிரி'க் கட்சியாக இருக்கக்கூடாது. அந்தப் பாலிசியைக் குடும்பத்திலும் கடைப்பிடித்தால் வம்பு, வழக்கு இருக்காது. உண்மையில் ஒருகை ஓசையாக இருந்து விட்டால் பிரச்சினைக்கு இடமில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும். 3-ஆமிடம் நட்பு ஸதானம், சகோதர ஸ்தானம். அங்கு குருவும் சனியும் வக்ரமாகவும், ராகு- கேது சம்பந்தமாகவும் இருப்பதோடு, சகோதரக் காரகன் செவ்வாய் 6-ல் மறைவதாலும் உடன்பிறந்தவர் வகையில் (ஆணாக இருந்தாலும்; பெண்ணாக இருந்தாலும்) பிரச்சினைகளை சந்திக்கநேரும். அந்தப் பிரச்சினைக்குக் காரணம் பெரும்பாலும் ஒரு பெண்ணாக அமையும். "பெண் புத்தி பின்புத்தி' என அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்துகொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம். அவருக்கு வீடுகொடுத்த குரு 2-ல் ஆட்சி. பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. தாராளமான வரவு-செலவு காணப்படும். சனி, கேது- ராகு சம்பந்தம் ஏற்படுவதால், முக்கியமான செலவுகளுக்கு எதிர்பார்க்கும் நேரம் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவி கிடைக்காது. பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். சாப்பிட்டுமுடித்தவரை அன்னதானத்திற்கு அழைத்தால் எப்படியிருக்கும்? பண உதவியோ, சரீர உதவியோ, ஆறுதல் உதவியோ- எதுவாக இருந்தாலும் தக்க சமயத்தில் கிடைக்கவேண்டும். அதைத்தான் வள்ளுவர், "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்றார். இங்கு நட்பு என்பதற்கு உதவி எனப் பெயர். ஏழரைச்சனியின் கடைசிப் பகுதி என்பதால், சில நேரங்களில் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர் மறைப் பலனாக அமையும். உங்கள் புத்தி சாதுரியத்தால் அதைச் சமாளிக்கவேண்டும். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பார்கள். அதற்கு இடந்தராமல் நடந்துகொள்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்காரர்களுக்கும் தனுசு லக்னக்காரர்களுக்கும் ஜென்மச்சனி நடக்கிறது. என்றாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு அங்கு ஆட்சிபெறுவதால், சனி, கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் பாதிக்காது. வீட்டு உரிமையாளர் குடியிருக்கும் வீட்டின் அருகில் அல்லது மாடியில் வாடகைக்குக் குடியிருப்போர், ஆணி அடிப்பதுமுதல் தண்ணீரைப் பயன்படுத்துவதுவரை பயந்து, அடக்கமாகக் குடியிருப்பதுபோல, ராசிநாதன் குரு ஆட்சிபெறுவதால், அந்த ராசியில் சனி, கேது, ராகு சம்பந்தப்பட்டாலும், அந்த கிரகங்களின் கடுமை பாதிக்காது. என்றாலும், சனி, கேது, ராகு சம்பந்தத்தால், உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் தாமதமாக நடக்கும். 5-க்குரிய செவ்வாய் 4-ல் நின்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால், அந்த இடத்தை ஜீவனக்காரகன் சனியும் பார்ப்பதால் வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலர் பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்சசி போன்ற நற்பலன்களைச் சந்திக்கலாம். சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் சுயதொழில் புரியலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவர் 2-க்குரியவர்; 2-ஆமிடத்தையே பார்க்கிறார். அதனால், குடும்பச் சூழ்நிலையிலும் பொருளாதாரத்திலும் பிரச்சினைக்கு இடமில்லை. தாராளமான வரவு-செலவு ஏற்படும். 6-ல் புதன் ஆட்சிபெற்று செவ்வாய் பார்ப்பதால், ஒருசிலருக்கு கடன் கவலை உண்டாகலாம். கடன் என்பது சுபக்கடன்தான். ஆகவே, கடனைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். ஒரு அன்பர் தன் மகள் திருமணத்திற்கு முதலாளியிடம் கடன் கேட்டிருந்தார். அவரும் தருவதாக ஒப்புக்கொண்டார். நேரப் பிசகால், முதலாளி ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு சிறைக்குச் சென்றுவிட்டார். வேலைக்காரர் கவலைப்பட்டு தற்கொலை முடிவுக்கு வந்தபோது, உடனிருந்தவர்கள் அனைவரும் அவரவர் பங்குக்குப் பணம் கொடுத்து திருமணத்தை நடத்திமுடித்தனர். மொய்ப் பணத்தில் அந்தக் கடனை அவர் அடைத்துவிட்டார். முதலாளியும் நிரபராதி என்று வழக்கிலிருந்து விடுபட்டு விட்டார். இது சிவகாசியில் நடந்த உண்மைச் சம்பவம். எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன், குரு, சனி, கேது, ராகு, புதன் சம்பந்தம். ராசிக்கு 4-ல் சுக்கிரன் ஆட்சி. 2-ல் செவ்வாய் பலம். எனவே, பொருளாதாரத்தில் ஏராளமான வரவும் தாராளமான செலவும் காணப்படும். தேவைகள் பூர்த்தியடையும். வரவேண்டிய பணம் வசூலாகும். அதனால், கொடுக்கவேண்டியது அடைபட்டு வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். ஒருசிலருக்கு மனைவி வகையில் காசு, பணம் அல்லது சொத்து சுகம் போன்ற அதிர்ஷ்டம் உண்டாகும். தன லாபாதிபதியான குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதன் பலன் அதுதான். 7-க்குரிய சூரியன் 6-ல் மறைவதால், கிடைப்பதைக்கொண்டு நிறைவடைய வேண்டும். பங்குபாகங்களில் பேராசைப்பட்டால் பகை, வருத்தத்தை சந்திக்கநேரும். அத்துடன் நிம்மதியும் இருக்காது. ஒரு திரைப்படத்தில் "கிடைக்க வேண்டும் என்றிருப்பது கிடைக்காமல் போகாது, கிடைக்கக்கூடாதென்பது கிடைக்காமல் போய்விடும்' என நடிகர் ரஜினிகாந்த் வசனம் பேசுவார். எனவே, உங்களுக்குக் கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சமீபகாலமாக கோட்சார நிலை மீன ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் நல்லதாகவே அமைகிறது. 9-க்குரிய செவ்வாய் ஜென்ம ராசியில் நிற்க, அவருக்கு வீடுகொடுத்த குரு 10-ல் ஆட்சிபெறுகிறார். அவருடன் சனி, கேது சம்பந்தம். ராகு பார்வை. அதனால், பொதுவாக யாருக்கும் பணக்குறை இல்லை. ஆனால், ஜாதக அமைப்பின்படி ஒருசிலருக்கு மனக்குறை காணப்படலாம். ஒரு சின்னக் கதை. ஒரு குருவும் சீடனும் ஆற்றைக் கடந்துபோக வருகி றார்கள். அங்கு ஒரு பெண்ணும் வருகிறாள். சேலை நனைந்துவிடுமென யோசிக்கும் போது, சீடன் அந்தப் பெண்ணைத் தன் தோளில் சுமந்துகொண்டு, ஆற்றைக் கடந்து மறுகரையில் விட்டுவிடுகிறான். வெகுநேரம் கழித்து சீடனிடம் குரு, ""நீ செய்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்றார். அதற்கு சீடன் ""அந்தப் பெண் சுமையை நான் அங்கேயே இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்'' என்று பதில் சொன்னான். இப்படி சில வேண்டாத, கற்பனைச் சுமைகளை சிலர் சுமந்து வேதனைப்பட நேரும். அதற்குப் பரிகாரம் மனப்பக்குவம் பெறுவதுதான்.