ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: அஸ்வினி- 2, 3, 4.

செவ்வாய்: மிருகசீரிடம்- 4.

புதன்: பரணி- 1, 2, 3, 4.

Advertisment

குரு: அவிட்டம்- 4.tt

சுக்கிரன்: அஸ்வினி- 3, 4, பரணி- 1, 2.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

19-4-2021- கடகம்.

21-4-2021- சிம்மம்.

24-4-2021- கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த புதன் மேஷத்தில் இருப்பதால் செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை யோகம் பெறுகி றார்கள். அதனால் செவ்வாய் மேஷத்திலும் புதன் மிதுனத்திலும் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கௌரவம், புகழ், கீர்த்தி, செல்வாக்கு எதற்கும் குறைவில்லை. அதேபோல தைரியம், சகாயம், நண்பர்கள், சகோதரர்கள் உதவி எல்லாம் மிகச் சிறப் பாக அமையும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால், குடும்பத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் கவனமாகப் பழகவேண்டும். சிந்தித்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதுபோல யாருக்கும் வாக்குறுதி களைக் கொடுத்துவிடக் கூடாது. செய்வதையே சொல்லவேண்டும். சொல்வதையே செய்ய வேண்டும். 9-க்குடைய குரு 11-ல் இருப்பதும் 10-க்குடைய சனி 10-ல் ஆட்சி பெறுவதும், உங்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும் உண்டாகும். 3, 6-க்குடைய புதன் ஜென்ம ராசியில் பரிவர்த்தனை என்பதோடு சூரியன், சுக்கிரனுடன் சம்பந்தம். எனவே, நண்பர்கள்வகையிலும் உறவினர்கள் வகையிலும் உங்கள் மதிப்பு, மரியாதை, கவுரவம் காப்பாற்றப்படுவதற்கு மனைவி உதவியாக இருப்பார். மனைவி இல்லாதவர்களுக்கு தாய் ஆதரவாக இருப்பார். அதாவது தாய்க்குப்பின் தாரம் என்பதுபோல!

thisweekrasi

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 2-ல் மிதுனத் தில் இருக்கிறார். செவ்வாய்க்கு வீடுகொடுத்த புதன் மேஷத்தில் பரிவர்த்தனையாகி சுக்கிர னோடு சேர்ந்திருக்கிறார். எனவே மறைவு தோஷம் விதிவிலக்காகிறது. யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்குவது ஒரு முறையாகும். இன்றைக்கு இராணுவத்தில் கொரில்லா போர் என்று ஒரு விதிமுறை இருக்கிறது. இராமாயணத்தில் வாலியை வதம் செய்ய ராமரே மறைந்திருந்து தான் அம்பு எய்தார். ஆகவே, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவென்று மயங்காதீர்கள்; தயங்காதீர்கள். 9-க்குடைய சனி 9-ல் ஆட்சி. 11-க்குடைய குரு 10-ல் திக்பலம். எனவே தொழில், பதவி, வேலை, செய்முயற்சி எல்லாவற்றிலும் சீரும் சிறப்பு மாக அமையும். பேரும் பெருமதிப்பும் உண்டாகும். நினைத்தது நிறைவேறும். செய்வதையே சொல்வீர்கள். சொல்வதையே செய்வீர்கள். அதற்கு ஆதரவாக செவ்வாய், புதன் பரிவர்த்தனையும் அமைகிறது. ஜென்ம ராகு, சப்தம கேது திருமணத்தடை அல்லது தாமதத்தை ஏற்படுத்தலாம். என்றாலும் 7-க்குடையவர் 2-ல் இருப்பதால் ஆணாகட்டும்- பெண்ணாகட்டும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நாகதோஷ நிவர்த்திக்கு காமோகர்ஷண ஹோமமும், ஆண்கள் என்றால் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் என்றால் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவண்டும். திருமணத்தடையை விலக்குவதோடு நல்ல வாழ்க்கைத்துணையை ஏற்படுத்தித் தரும். இதன் பலன் இதுதான்!

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன்- செவ்வாய் வீட்டிலும், செவ்வாய்- புதன் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த்தனை யோகத்துக்கு அவரவர் வீட்டில் ஆட்சியாக இருப்பதற்கு சமம். அதாவது புதன் மிதுனத்திலும் செவ்வாய் மேஷத்திலும் இருப்பதாக ஐதீகம்! அரசு அலுவலகங்களில் "டெபுடேஷன் டூட்டி'- பார்ப்பதுபோல! எனவே உங்கள் காரியங்களிலும் செயல்களிலும் தங்குதடையில்லாத முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம்! மேலும் 7, 10-க்குடைய குரு 9-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதும் சிறப்பு! மிதுன ராசிக்கு 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும்! 6, 11-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பது ஒருவகையில் சத்ரு ஜெயம். எதிரிகளால் அனுகூலம்; விரோதிகளி னால் வெற்றி! சரித்திரத்தில் அலெக்ஸாண்டர் என்ற மன்னன் இந்தியாமேல் படையெடுத்து எல்லா நாட்டரசர்களையும் வென்று கைது செய்தான்- வடநாட்டில் புருஷோத்தமன் என்ற மன்னரையும் கடும்போரிட்டு கைது செய்தான். ""உம்மை எப்படி நடத்த வேண்டும்'' என்று அலெக்ஸாண்டர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, ""கைவிலங்கினை அவிழ்த்துவிட்டு ஒரு நாட்டு மன்னருக்கு உரிய மரியாதையோடு நடத்தவேண்டும்'' என்று தலை நிமிர்ந்து அஞ்சாமல் கூறியதும், அலெக்ஸாண்டர் மகிழ்ந்து, ""உம்முடைய அஞ்சாமை எமக்குத் திருப்தியளிக்கிறது'' என்று கைவிலங்கை அகற்றி அவர் நாட்டை அவரிடமே ஒப்படைத்து நாட்டரசராக்கிக்கொண்டார். "அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று பாடிய மாதிரி வீரமும் விவேகமும் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆகவே துணிவே துணையென்று செயல்படுகிறவர்கள் உயர்நிலைக்கு வருவார்கள். இளமையில் காமராஜர் தன்னுடன் பழகும் நண்பர்களுக்கெல்லாம் தலைமையாக இருந்த காரணத்தால்தான் பெரியவராக வளர்ந்த பிறகு அரசியலில் முக்கியத்துவம் பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகத் திகழ்ந்தார்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு குரு 8-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த சனி 7-ல் அமர்ந்து ராôசியைப் பார்க்கிறார். 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் 10-ல் செவ்வாய் வீட்டில் (மேஷத்தில்) பரிவர்த்தனையாகி றார். பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் அவரவர் வீட்டில் ஆட்சியாக இருப்பதற்குச் சமம். எனவே 10-க்குடையவர் 12-ல் மறைந்தாலும் பரிவர்த்தனையோகம் பெறுவதால்- பதவி, வேலை, தொழில் எல்லாவற்றிலும் உங்களுக்கு எந்தக் கேடு கெடுதியும் ஏற்படாமல் சிறப்பாக அமையும். மேலும் 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம் பெறுவதோடு 2, 11-க்குடைய புதன் சேர்க்கை. 4, 11-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. எனவே உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி இருக்காது. வளர்ச்சி உண்டாகும். முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். 8-ல் குரு மறைவதால் விடாமுயற்சி தேவைப்படும். "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்ற திருக்குறளின் தத்துவப்படி முயற்சிக்கு முழுமையான பலனும் வெற்றியும் உண்டாகும். அதாவது இறைவன் இருவருக்குத் துணைபோக மாட்டான். சோம்பேறிகளுக்கும் துரோகிகளுக்கும் கடவுளின் கருணை கிடைக்காது. தளராத முயற்சியுடையவருக்கு துணை நின்று வெற்றியைத் தருவான். எனவே 8-ல் குரு மறைந்துவிட்டாரே என்று கலங்காமல்- தயங்காமல்- மயங்கால் விடாமுயற்சியோடு செயல்படுங்கள். முயற்சி திருவினையாக்கும்- வெற்றியைத் தேடித்தரும்! 7-ல் சனி ஆட்சிபெற்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பது ஒருவகையில் யோகம். 9-ஆம் இடம், ஜென்ம ராசி, 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால், பூர்வபுண்ணியப் பலனாக "நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்ற வாசகப்படி நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல பெற்றோர், நல்ல நண்பர்கள் என்று அமையப்பெற்று நல்லன எல்லாம் அடைந்து ஆனந்தம் அடையாலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் திரிகோணம் பெறுவதோடு உச்சமாகவும் இருக்கிறார். அவருடன் 10-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். 2, 11-க்குடைய புதனும் சம்பந்தம்! எனவே உங்களுடைய செயல்களிலும் முயற்சிகளிலும் தடையில்லாத வெற்றியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். அதனால் உங்களுடைய முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் கடவுளின் கருணை பரிபூரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். பொதுவாக குரு (வியாழன்) நல்ல ஆதிபத்தியம் பெற்றாலும் சரி; கெட்ட ஆதிபத்தியம் பெற்றா லும் சரி- "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்ற வாசகப்படி தண்டிக்க மாட்டார். கெடுக்கமாட்டார். 7-க்குடைய சனி 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெறுவதால் பாதிப்பில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாமதமாகத் திருமண நடக்கும். அப்படி தாமதம்- விரும்பத்தகாத தாமதமாக அமைந்துவிட்டால்- பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமமும், இருவருக்கும் பொதுவாக காமோகர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் திருமணத் தடையும் விலகும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். ஜாதக தசாபுக்தி காரணமாக தோஷம் எதுவுமிருந்தால் அதற்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல; எந்த நட்சத்திரம், எந்த ராசி, எந்த லக்னமாக இருந்தாலும் 4, 7, 8 தேதிகளில் திருமணமோ நிச்சயதார்த்தமோ செய்யக்கூடாது. 1, 3, 6 தேதிகள் மிகமிக உத்தமம். இது அனுபவப் பூர்வமான உண்மையாகும். நாள் செய்வதை நல்லோர் செய்யார் என்பார்கள். அதேசமயம் நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை என்றும் சொல்லப்படும். இரண்டையும் கடைப்பிடிக்கலாம். தவறில்லை.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைகி றார். பொதுவாக மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. மறைந்த புதன் நிறைந்த தனம் என்னும் சொல் உண்டு. அதிலும் புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய், புதன் வீட்டில் மிதுனத்தில் இருக்கிறார். எனவே புதன் மிதுனத்திலும், செவ்வாய் மேஷத்திலும் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். மிதுனம் கன்னி ராசிக்கு 10-ஆமிடம். எனவே தொழில்துறையில் நல்ல மாற்றமான நிகழ்வுகள் உண்டாகும். 6-ல் அதிசாரமாக மாறியுள்ள குரு மிதுன ராசியைப் பார்க்கிறார். சிலருக்கு தொழில் அல்லது உத்தியோகம் சம்பந்தமான இடமாற்றங்களும் ஏற்படலாம். அது முன்னேற்றகரமான அமைப்பாகவும் ஏற்படும். 2-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவு. பொருளாதாரரீதியாக சில சங்கடங்களும் பிரச்சினைகளும் ஏற்படலாம். என்றாலும், 6-ல் உள்ள குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் அந்த சங்கடங்களையும் பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றலும் சிந்தனையும் உருவாகும். 7-க்குடைய குரு 6-ல் மறைவதால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் சச்சரவு, பிரச்சினை, வீண்வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். தேக நலனிலும் அக்கறை காட்டுவது நல்லது. சண்டை சச்சரவுகளில் யாரேனும் ஒருவராவது விட்டுக்கொடுத்துச் செல்வது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். 5-ல் உள்ள சனி ஆட்சியாக இருக்கிறார். எண்ணிய எண்ணங்களையும் திட்டங்களையும் செயலாக்கம் செய்வதில் சற்றே சிரமங்களை சந்திக்க நேரலாம். பிள்ளைகள்வகையில் வீண்செலவுகள் உண்டாகும். சிலர் அதை சுபவிரயமாக மாற்றலாம். கடன் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படவேண்டும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் 11-க்குடைய சூரியனும், 9, 12-க்குடைய புதனும் இணைந்திருக்கிறார்கள். பொதுவாக ராசிநாதனோ அல்லது லக்னநாதனோ ராசி மற்றும் லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு என்று பலமுறை எழுதியுள்ளேன். எனவே உங்களது திறமை, செல்வாக்கு, புகழ், கீர்த்தி எல்லாம் சிறப் பாக இயங்கும். கவுரவம் பாதிக்காது. மதிப்பு மரியாதை உயரும். 5-ல் குரு அதிசாரமாக மாறி (கும்பத்தில்) ராசியைப் பார்ப்பது மேலும் ஒரு சிறப்பு. அதாவது உங்கள் காரியங்கள், செயல்பாடுகள் இவற்றில் தடையேதுமில்லை. குறுக்கீடுகளுக்கு இடமில்லை. ஸ்பீடு பிரேக் இல்லாத ஹைவேஸில் பயணம் போவதுபோல வேகமாகவும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படலாம். 5-ல் மாறிய குரு உங்கள் எண்ணம், திட்டம், கனவு இவற்றை நிறைவேற்றுவார். 4-ல் சனி ஆட்சியாக இருப்பதால், தாயாருக்கு அவ்வப்போது சிறுசிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். பாதிப்புகள் கிடையாது. பயப்படத் தேவையில்லை. 2-ல் உள்ள கேது குடும்பத்திலும் உறவுகளிலும் சில சலசலப்புகளை உண்டாக்கலாம். புரிந்துகொண்டு அனுசரித்துச் சென்றால் சங்கடங்களைத் தவிர்க்கலாம். பெண்களின் பொருட்டு ஒருசில செலவினங்களை ஏற்கவேண்டியிருக்கும். பணவிஷயமாக யாருக்கும் பொறுப்பேற்க வேண்டாம். 9-க்குடைய புதனும், 7-க்குடைய செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஒரு நல்ல தீர்வுக்கு வர வழியுண்டு. தாய்மாமன்வகையில் நல்லாதரவும் ஒத்துழைப்பும் உண்டாகும். சகோதர சகாயமும் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் 6-ல் மறைகிறார். என்றாலும் செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் மேஷத்தில் செவ்வாயும், மிதுனத்தில் புதனும் இருப்பதாக அர்த்தம். 8-ல் மறைந்த செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு 4-ல் நின்று செவ்வாயைப் பார்க்கிறார். ஆக, வரவும் உண்டு; செலவும் உண்டு. சிலநேரம் வரவுக்கு மீறிய செலவுகளும் ஏற்பட இடமுண்டு. ஜென்ம கேது உங்களது முயற்சிகளில் தாமதங்களை ஏற்படுத்தலாம். 10-க்குடைய சூரியன் 6-ல் மறைவதால் தொழில்துறையில் மந்தமான சூழல் தென்படலாம். அரசுவகையில் எதிர்பார்த்த உதவி, காரியங்களில் தடை உண்டாகலாம். சப்தம ராகு குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் சச்சரவுகளை ஏற்படுத்தினாலும் குடும்பத்தில் ஒற்றுமை பாதிக்காது. திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணத்தில் தாமதம் உண்டாகும். 3-ல் உள்ள சனியை செவ்வாய் பார்க்கிறார். சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தைச் சந்திக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்தில் இடப்பெயர்ச்சியும் உத்தியோக உயர்வும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த தொல்லைகளும் பிரச்சினைகளும் விலகும். அவர்களால் உங்கள் மதிப்பும் மரியாதையும் காப்பாற்றப்படும். இளைய சகோதரன், சகோதரிவகையில் நன்மை ஏற்படும். தெய்வ கைங்கரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு வியாஜ்ஜியங்களில் தீர்வுகள் தள்ளிப்போகும். வங்கிக் கடன்மூலம் புது வாகனம் வாங்குதல், அல்லது மனையில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ஆமிடமான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாயின் சாரமான அவிட்டத்தில் சஞ்சாரம் செய்கிறார். செவ்வாய் ராசிக்கு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். சகோதரவகையில் சகாயம் உண்டாகும். வீடு, மனை, கட்டடம் போன்றவற்றில் இழுபறி நிலை மாறி வேகமாக காரியங்கள் செயல்படும். அரிய செயல்களைச் செய்துமுடிக்கும் அசாத்திய தைரியமும் ஏற்படும். அதை 3-ல் உள்ள குரு தருவார். ஒரு மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது தைரியம், நம்பிக்கைதான். தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். 7-ல் செவ்வாய் தாமதத் திருமணத்தை ஏற்படுத்தினாலும், குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் தாமதமானாலும் நல்லமுறையில் நடந்தேறும். அதாவது லேட்டானாலும் லேட்டஸ்ட் என்ற மாதிரி! 9-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் 7-க்குடைய புதன் சேர்ந்திருக்கிறார். உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் செயல் வடிவம் பெற உங்களுக்கு மனைவி உறுதுனையாக இருப்பார். அல்லது நண்பர்கள்மூலம் ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டாகும். அசுரனை வதம் செய்ய கிருஷ்ண பரமாத்மாவிற்கு பாமா உதவி செய்து வெற்றியைத் தேடித் தந்ததுபோல, உங்களுக்கும் மனைவி வழியில் நன்மைகள் உண்டாகும். 12-ஆமிடத்துக் கேது திடீர் பயணமும் அலைச்சலும் தந்தாலும் அது பயனுள்ளதாகவும் அமையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். குலதெய்வமே தெரியாதவர்கள் இஷ்டதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றலாம். மனக்குறைகள் அகலும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். 12-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் நல்ல இடங்கள். அந்த வகையில் 2-ல் வந்திருக்கும் குரு நன்மைகளைத் தருவார். மகர ராசிக்கு குரு 12-க்குடையவராயிற்றே- அவர் 2-ல் வந்தால் எப்படி நன்மை செய்வார் என்று கேள்வி எழலாம். மகர ராசிநாதன் சனி, 2-க்கும் உடையவர். அவர் குருவுக்கு வீடு கொடுத்தவர் என்ற அடிப்படையில் குரு கெடுதல் செய்யமாட்டார் என்று நம்பலாம். சுபவிரயம், சுபமங்களச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை, நிம்மதி ஏற்படும். மகரத்திற்கு நடக்கும் ஏழரைச்சனியில், ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் பொருள் சேதம், உயிர்ச்சேதம் அல்லது அதற்கு சமமான தொல்லைகள் உண்டாகலாம். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். வசதியுள்ளவர்கள் ஒருமுறை சிவன் கோவிலில் ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். 5-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். 10-க்குடைய சுக்கிரன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். 10-ஆமிடத்தையே பார்க்கிறார். எனவே உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும். வாழ்க்கை, தொழில் இவற்றில் நல்ல முன்னேற் றமும், புதிய முயற்சிகள் வெற்றியடையும் அனுகூலமும் உண்டாகும். அக்னி அல்லது நீர் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் முழுமையாக வெற்றியாகும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும் ஆட்சி பலமாக இருப்பதால் தோஷமில்லை. 12 என்பது பயணம், அலைச்சல், விரயஸ்தானம். அதுவே அயன சயன சுகபோக ஸ்தானமும் ஆகும். இல்லற வாழ்க்கை நல்லற வாழ்க்கையாக அமையும். தவிர்க்கமுடியாத பயணங்கள் உண்டாகும். பயனுள்ள பலன்களாகவும் அமையும். சிலருக்கு வெளிநாட்டு வேலை, வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு போன்றவை உருவாகலாம். வெளிநாட்டு யோகம் அமையாவிட்டாலும் வெளியூர் வாசம், வெளியூர் வேலை, வெளியூரில் செட்டில் ஆவது போன்ற பலன்களையும் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு உண்டாகலாம். ஒரு சிலருக்கு அலைந்து திரியும் வேலை, பயண வேலை (உதாரணமாக- டிரைவர், கண்டக்டர்) அமையலாம். அதேசமயம் ஒரு சிலருக்கு ஓவர்டைம் வேலை பார்த்தாலும் அதற்குரிய ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றமாகலாம். ஒரு சிலருக்கு கடுமையாக உழைத்தாலும் முறையான சம்பளமில்லாமல் தடைப்படலாம். அப்படிப்பட்டவர்கள் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமும், அவரின் குருநாதர் பைரவருக்கு மிளகு தீபமுமேற்றி வழிபடலாம். வேலை மாற்றம் ஏற்பட இடமுண்டு. புது வேலையில் நிறைவான சம்பளமும் மனத் திருப்தியும் ஏற்படலாம். வேலை மாற்றமில்லாவிட்டால் குடியிருப்பு மாற்றம் ஏற்பட இடம் உண்டு. அவரவர் ராசிப்படி குடியிருப்பு மாற்றம் அதிர்ஷ்டமான திக்கு திசையில் ஏற்படுத்திக் கொள்ளலாம். தேக நலன், பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை அதேசமயம் கடன்களுக்கும் குறைவில்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். 10-க்குடையவர் 12-ல் மறைவதால் சிலருக்கு குடியிருப்பு மாற்றம், சிலருக்கு வேலை மாற்றம், சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்பட இடமுண்டு. எந்த மாற்றமாக அமைந்தாலும் அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும். 9-ல் கேது இருப்பதால், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் அந்த ஸ்தானத் துக்கு 8-ல் மறைவதால், பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத பிரச்சினையாகவும் தீராத வலியைத் தரக்கூடியதாகவும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்தே இருக்காது. ஆனால் சுய சம்பாத்தியம் பெருகும். சொத்து சுகம் சேரும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலர் சொந்த வீட்டைவிட்டு விலகி வாடகை வீட்டுக்குப் போகும் நிலை ஏற்படும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார வசதி, வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றைக் கருதி சிலர் பரிகாரமாக மாற்றுத் திட்டங் களை செயல்படுத்துவார்கள். அதாவது சென்டிமென்ட் பார்ப்பார்கள். 2, 9-க்குடைய செவ்வாய் 4-ல் இருப்பதாலும், 11-ல் உள்ள சனியைப் பார்ப்பதாலும் தாயாதி பங்காளிவகையில் உதவி ஒத்தாசை, ஆதரவு, அனுகூலம் எதிர்பார்க்கலாம். அந்தவகையில் ஏற்கெனவே நிலவிய மனக் கசப்புகள் விலகும். புது உறவுகளும் பலப்படும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை.