எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
தபால் பெட்டி எண்: 2255, வடபழனி, சென்னை- 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 2.
செவ்வாய்: சித்திரை- 2.
புதன்: அஸ்தம்- 2.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: அனுஷம்- 4.
சனி: திருவோணம்- 1.
ராகு: கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 2.
கிரக மாற்றம்:
புரட்டாசி 31 (17-10-2021)
துலா சூரியன். (பகல் 1.12).
ஐப்பசி 1 (18-10-2021)
குரு வக்ர முடிவு. (காலை 10.54).
ஐப்பசி 1 (18-10-2021)
புதன் வக்ர முடிவு. (இரவு 8.45).
ஐப்பசி 4 (22-10-2021)
துலா செவ்வாய். (அதிகாலை 2.02).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்
18-10-2021 அதிகாலை 4.32 மணிக்கு மீனம்.
20-10-2021 பகல் 2.00 மணிக்கு மேஷம்.
23-10-2021 அதிகாலை 1.38
மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உபஜெய ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால், எதிலும் துணிவுடன் செயல்படுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலப் பலனை அடைவீர்கள். 2-ல் ராகுவும், 7-ல் சூரியனும் சஞ்சரிப்பதால், இல்லற வாழ்வில் தேவையற்ற கசப்புகள் ஏற்படலாம். எனவே, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன் கிட்டும். உற்றார்- உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு வக்ரநிவர்த்தி அடைவதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஜீவன ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் முன்நின்று செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைத் தடையின்றிப் பெறமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தியை வழிபட்டுவந்தால் சுபிட்சமான நிலை ஏற்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், மாதக் கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் குடும்பத்தில் சுபிட்சமும், பொருளாதாரரீதியாக அனுகூலங்களும் ஏற்படும். தன பஞ்சமாதிபதி புதன், கேந்திராதிபதி செவ்வாய் சேர்க்கைபெற்று 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொன், பொருள் சேரும். சகோதர- சகோதரிகளிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு 18-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி பெற்று சஞ்சரிப்பதாலும், குரு 9-ல் நீசம்பெற்றாலும் உடன் சனி இருந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ள தால் வருகின்ற நாட்களில் உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். தடைப்பட்ட மங்களகர மான சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கூட்டாளிகள், தொழிலாளர்கள் ஆதரவாக செயல் படுவதால் தொழிலை அபிவிருத்தி செய்வதோடு, எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் இணையும் அமைப்புண்டாகும். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதியான புதன் 4-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு பஞ்சமகா புருஷயோகத்தில் சிறந்த யோகமான பத்திரை யோகம் உண்டாகி உள்ளதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதும் சாதகமான நிலை என்பதால், எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எந்தவொரு விஷயத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். உங்கள் ராசிக்கு சுகஸ்தானத் தில் செவ்வாய், அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதால், பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. 5-ஆம் அதிபதி சுக்கிரன் 6-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். 10-ஆம் அதிபதி குரு 8-ல் மறைந்து சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் செயல்களைத் தற்போது தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பயணங்களால் அலைச்சல், உடல் சோர்வு இருந்தாலும் அனுகூலப்பலன் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. முருகனை வழிபடுவதும், பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வதும் நன்மைகளை உருவாக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு 18-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி பெற இருப்பதால், பொருளாதாரரீதியாக இருந்த தேக்கங்கள் முழுமையாக விலகி, தாராள தனவரவு ஏற்படும். குரு நீசம்பெற்றாலும், உடன் சனி சஞ்சரித்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். புதிய இடம், மனை வாங்கும் வாய்ப்பு அமையும். ஆடம்பரப் பொருட்சேர்க்கை உண்டு. உங்கள் ராசிக்கு கேந்திராதிபதி சுக்கிரன் திரிகோண ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் சுமுகமாக முடியும். உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் 3-ல் புதனுடன் சஞ்சரிப்பதால், சகலவிதத்திலும் வளமான நிலையை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு களும், ஊதிய உயர்வு களும் கிடைக்கப்பெற்று ஆனந்த மடைவார்கள். அரசுவழியில் அனுகூலங்கள் உண்டா கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வெளியூர் தொடர்பு களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இவ்வாரத்தில் சுக ஸ்தானமான 4-ல் சூரியன் நீசம்பெற்று சஞ்சரிப்பதால் வயதில் மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. சனி ப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சனேயரையும் வழி பட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகளை அடையலாம்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்களுக்கு ராசிநாதன் சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், சனி உபஜெய ஸ்தான மான 6-ல் ஆட்சிபெற்று வலுவாக சஞ்சரிப்ப தும் உன்னதமான அமைப்பென்பதால், கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக மறைந்து முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டாகும். கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக விலகும். தொழில்ரீதியாக லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள்மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். அடிக் கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அமை யும். நவகிரகங்களில் முன்கோபத்திற்குக் காரகனான செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல் பட்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்து வழியில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். கௌரவமான பதவிகளை அடையும் யோகமுண்டு. நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டி ருப்பவர்களுக்கு இவ்வாரத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். கிருத்திகையன்று முருக வழிபாடும், புதன்கிழமை மகாவிஷ்ணு வழிபாடும் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதியான புதன் ஜென்ம ராசியில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், பஞ்சமகா புருஷயோகத்தில் சிறந்த யோகமான பத்திரை யோகம் உண்டாகி உள்ளதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபதியான குரு, திரிகோண ஸ்தானாதிபதி சனியுடன் சேர்க்கை பெற்று திரிகோண ஸ்தானமான 5-ல் 18-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி அடைந்து சாதகமாக சஞ்சரிப்பதால், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த பொருளாதாரரீதியான நெருக்கடிகள் விலகி சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்திசெய்ய முடியும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால், நீண்டநாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. அசையா சொத்து வகையில் அனுகூலங்கள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி 5-ல், ராகு 9-ல் சஞ்சரிப்பதால் புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். குலதெய்வ வழிபாடு சிக்கலைக் குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். என்றாலும் உயரதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகி எதிர்பார்த்த லாபம் கிட்டும். உற்றார்- உறவினர் கள் தேவையறிந்து உதவுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது, சிவ மந்திரங்கள் சொல்வது வாழ்வில் வளர்ச்சியடைய வழிவகுக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன் நீசம்பெற்று சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான செவ்வாய் 12-ல் மறைந்து சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சர்ப்ப கிரகங்களான கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் நெருங்கியவர்களால் இடையூறுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் ராசிக்கு குரு, சனி சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துகளால் தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். எந்தவொரு விஷயத்திலும் மிகவும் கவனமாக செயல்பட்டால்தான் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர் களின் ஆதரவால் ஓரளவுக்கு முன்னேற முடியும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரி பவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி யுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் கிட்டும். மகாலட்சுமிக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிக்கிறார். ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் லாபாதிபதி புதன் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே, எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு தற்போது நற்பலன்களை அடைவீர்கள். சுக காரகன் சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சூரியன் 12-ல் நீசம்பெற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும் வாரமாக இவ்வாரம் அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். வியாபார ரீதியாக வாங்கிய கடன்களை எல்லாம் சரிசெய்துவிடுவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே பிணக்குகள் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால் ஒற்றுமையை நிலைநாட்டலாம். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் இருந்த தடைகள் விலகி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்றார்- உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைசாற்றி நெய்தீபமேற்றி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 2-ல் நீசம்பெற்றாலும், உடன் சனி சஞ்சரித்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதால் பலமும் வலிமையும் அதிகரிக்கும். எத்தகைய எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இதுவரை பொருளாதாரரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி லாபங்கள் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உங்கள் ராசிக்கு திரிகோண ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 7, 10-க்கு அதிபதியான புதன் சேர்க்கைபெற்று 10-ல் சஞ்சரிப்பதால், பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றி தரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக பிரச்சினைகள் எல்லாம் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். பலருக்கு உதவிகள் செய்யும் வாய்ப்பு கள் கிட்டும். வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்ப தால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி, எள்தீபமேற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்தால் சிறப் பான பலன்கள் கிடைக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால், எந்தவொரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதன்மூலமாக வரவிருக்கும் பிரச்சினைகளை தைரியத்துடன் எதிர்கொள்ளமுடியும். உங்கள் ராசிக்கு இந்த வாரத்தில் சூரியன் 10-ல் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதாலும், சுக காரகன் சுக்கிரன்- கேது சேர்க்கைபெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்கள்மூலம் தக்கநேரத்தில் பண உதவிகள் கிடைத்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் தீர்ந்துவிடும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால், திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் காணப்பட்ட மந்தநிலை நீங்கி, சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு உதவியாக இருப்பார்கள். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலனை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பதும், பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ மான பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மனை வழிபட்டுவந்தால் வாழ்வில் மேன்மைகளை அடையலாம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் சனி, குரு சேர்க்கைப் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்படவேண்டிய நேரமிது. வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். நியாயப்படி கிடைக்கவேண்டிய பணவரவுகள்கூட கடைசிநேரத்தில் தட்டிப்போகும். அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றால் வீண்விரயம் ஏற்படக்கூடும். எதிலும் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3, 10-க்கு அதிபதியான செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வெளியிடங்களிலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மனவேதனையை உண்டாக்கும். உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4-ஆம் வீட்டிற்கும், திரிகோண ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரன், உச்ச கேந்திரமான 10-ல் கேது சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உற்றார்- உறவினர்கள்மூலம் உதவிகள் கிடைக்கும். பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது, பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னா பிஷேகத்தை தரிசிப்பது மிகவும் நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் நாடிவரும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். சுக காரகன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் சொந்த பூமி, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். இவ்வாரத்தில் களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். என்றாலும் குரு பார்வை இருப்பதால் ஒற்றுமை குறையாது. சூரியன் 8-ல் நீசம்பெற்று சஞ்சரிக்கவிருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஜென்ம ராசிக்கும் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கும் அதிபதியான குரு, சனி சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக பொருளாதார நிலை மேலோங்கும். எதிர்பாராத நல்ல மாற்றங் கள் ஏற்படும். எதிரியாக இருந்தவர்கள்கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபங்களை அடையும் யோகமுண்டு. வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்தபடி புதிய வேலை வாய்ப்புகள் அமையும். உற்றார்- உறவினர்கள் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். கிருத்திகையன்று விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். விநாயகர் வழிபாடும் நல்லது.