ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

கிரகப் பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 4, மகம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 1, 2.

Advertisment

புதன்: மகம்- 2, 3, 4, பூரம்- 1, 2.

குரு: பூராடம்-4.

சுக்கிரன்: திருவாதிரை- 3.

சனி: பூராடம்- 4.

ராகு: மிருகசீரிடம்- 3.

கேது: மூலம்- 1.

கிரக மாற்றம்:

குரு, சனி வக்ரம்.

17-8-2020- சிம்மச் சூரியன்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

16-8-2020- கடகம்.

18-8-2020- சிம்மம்.

21-8-2020- கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். இதனால் உங்கள் திறமையும் பெருமையும் பிரகா சிக்கும். எந்தவொரு செயலையும் திட்டமிட்டு- திட்டமிட்ட படியே செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். 9-க்குரிய குருவும் 10-க்குரிய சனியும் 9-ல் சேர்ந் திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 9 என்பது திரிகோணம். 10 என்பது கேந்திரம். திரிகோணம் என்பது தெய்வானு கூலம். கேந்திரம் என்பது மனித முயற்சி. இந்த இரண்டும் இணைவது சிறப்பு. அதாவது, மனிதன் நினைக்கிறான்- இறைவன் நிறைவேற்றுகிறான் என அர்த்தம். இதைத்தான் வள்ளுவர், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். முயற்சியின் கூலி (சம்பளம்) தான் வெற்றி. தெய்வத் தால் ஆகாதது என்பது எதுவுமேயில்லை. சிலசமயம் தெய்வத்தால் ஆகாதெனினும் என்றால்- உங்கள் முயற்சிக்கு உடனடி வெற்றி கிட்டவில் லையென்றாலும், தாமதமாக அந்த உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என அர்த்தம். பொதுவாக, இறைவன் இருவருக்கு உதவி செய்யமாட்டான். ஒன்று சோம்பேறி. இன்னொன்று நம்பிக்கைத் துரோகி. அவ்விருவகையினரும் அப்பொழுது வெற்றிபெற்றதாக அமைந்தாலும் அந்த வெற்றி நிரந்தர வெற்றியாக அமையாது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய

ss

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 2-ல் திருவாதிரை- ராகு சாரத்தில் சஞ்சாரம். ராகுவும் சுக்கிரனுடன் சேர்க்கை. அவர்களுக்கு 8-ல் ஆட்சிபெற்ற குருவும், ரிஷப ராசியின் ராஜயோகாதிபதியான சனியும் சுக்கிரனைப் பார்ப்பதோடு, கேதுவும் பார்க் கிறார். அட்டமச்சனி காரணமாக சில முயற்சிகள் தடைப்படலாம் அல்லது தாமதப்படலாம் என்றாலும் தோல்வியாகாது. ஏனென்றால், ரிஷப ராசிக்கு சனி பகவான் ராஜயோகாதிபதி; 9, 10-க்குரியவர். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், பதவி மாற்றம் போன்றவை ஏற்பட்டாலும், அந்த மாற்றங்கள் அனைத்தும் ஏற்றம் தரும் மாற்றங்களாகவே இருக்கும். வேலை தேடியலைவோருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் நல்ல வேலை அமையும். அதேபோல, பயிலும் மாணவ- மாணவியர் குடும்பத்தைவிட்டு- பெற்றோரைவிட்டு வெளியூர் அல்லது வேறிடத்தில்- ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் யோகமுண்டாகும். இந்த இரண்டு வாய்ப்பும் இல்லாதவர்களுக்கு வீடு மாறும் யோகமுண்டாகும். வாடகை வீட்டிலிருப்போர் ஒத்திவீட்டுக்குப் போகலாம். ஒத்தி வீட்டிலிருப்போரின் ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால், சொந்த வீடு கிரயம் முடித்துக் கிரகப் பிரவேசம் செய்யலாம். அப்படி வரும் மாற்றத்தை 4, 7, 8-ஆம் தேதிகளைத் தவிர்த்து 1, 3, 6-ல் அமைப்பது நலம் தரும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 3-ல் அமர்ந்து 7-க்குரிய குரு பார்வையைப் பெறுகிறார். 7-ல் குருவும் சனியும் கூடியிருப் பது சிறப்பு. சனி 9-க்குரியவர்; குரு 10-க்குரியவர். அதாவது, தர்மகர் மாதிபதி சம்பந்தம். எந்தவொரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால், அந்த ஜாதகர் வீழ்ச்சியடைவதில்லை. ரேஸில் கால் இடறிவிழும் குதிரை துள்ளியெழுந்து இன்னும் வேகமாக ஓடி வெற்றிபெறுவதற்குச் சமம். 6-ஆமிடம் சத்ரு ஸ்தானம்; அதற்குரிய செவ்வாய் 6-க்கு 6-ல்- ராசிக்கு 11-ல் ஆட்சிபெறுவது சத்ரு ஜெயம், போட்டியில் வெற்றி, கடன் நிவர்த்தி ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, 6-ஆமிடம் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம். அதற்குரியவர் அந்த இடத்துக்கு 6-ல் மறைகிறார். மைனஸ்ல மைனஸ்= பிளஸ் என்பது போல, டபுள் நெகட்டிவ் பாசிட்டிவ் என்பதுபோல, உங்களுக்கு எல்லாவகை யிலும் நல்லதாகவே அமையும். மேலும், மிதுன ராசிக்கு தர்மகர்மாதிபதிகளான குரு, சனி பார்வையும் ராசிக்குக் கிடைப்பது யோகமாகும். ஜென்ம ராகுவும் ஏழாமிடத்துச்சனி- கேதுவும் சிலசமயம் மனைவி- கணவர் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குரி யதானாலும், அவற்றைக் கடந்து செயல்படலாம், சமாளிக்கலாம். சங்கடங்களை ஜெயிக்கலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் வாரத் தொடக்கத்தில் சூரியன் நின்றாலும், மறுநாள் 2-ஆமிட சிம்மத்திற்கு ஆட்சியாக மாறுவார். அங்கு ஏற்கெனவே குடிகொண்டுள்ள புதனுடன் சேர்க்கையாகும். எனவே, சூரியனும் புதனும் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி சாதனை படைக்கச் செய்வார். கடக ராசிக்கு குரு, சனி, கேது மூவரும் 6-ல் மறைய, 12-ல் சுக்கிரனும் ராகுவும் மறைவது ஒருவகையில் குற்றமெனினும், 10-ல் செவ்வாய் ஆட்சிபெற்று கடக ராசியைப் பார்ப்பது பரிகாரமாக அமைகிறது. மேலும், 9-க்குரிய குரு 6-ல் ஆட்சிபெற்று, 10-க்குரிய செவ்வாயும் ஆட்சிபெற அவரைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதனால், "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க இயலுமோ' என்பதுபோல, உங்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் யாராலும் தடுக்கமுடியாது, கெடுக்கமுடியாது. இதுதான் தர்மகர்மாதிபதி யோகத் தின் சிறப்பு. தர்மம் என்பது 9- திரிகோணம், தெய்வ அனுகூல ஸ்தானம். கர்மம் என்பது 10- முயற்சி ஸ்தானம். உங்கள் முயற்சிக்கேற்ற பலனும், உழைப்புக்கேற்ற ஊதியமும் உங்களை வந்தடையும். இறைவன் கொடுப் பதை யாராலும் தடுக்கமுடியாது. இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது. இறைவன் இந்த கிரக அமைப்பை உங்களுக்குக் கொடுப்பது உறுதி. இதை வேறு யாராலும் தடுக்கமுடியாது என்பதும் உறுதி.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்தாலும், 9-ல் செவ்வாய் ஆட்சி. இங்கு செவ்வாய்க்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அதாவது, சிம்ம ராசிக்கு செவ்வாய் 4, 9-க்குரியவர். 4- கேந்திரம்; 9- திரிகோணம். ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதிபதியும் இணைவது ராஜயோகமாகும். கேந்திரம்- விஷ்ணு ஸ்தானம், முயற்சி ஸ்தானம். திரிகோணம்- லட்சுமி ஸ்தானம், அதிர்ஷ்ட ஸ்தானம். கேந்திரமும் திரிகோணமும் இணைவது வேலை பார்த்த கூலி கிடைப்பது நியாயமானது- அதற்கு வெகுமதி யாகக் கிடைப்பது போனஸ் மாதிரி. ஹோட்டலில் சாப் பிட்டதற்கு பில்தொகையைக் கொடுத்தாலும் சர்வருக்கு டிப்ஸ் (பிரியமாகக் கொடுப்பதுதான், அவசியமல்ல.) கொடுப்பதுமாதிரி. 2, 11-க்குரிய புதன் ஜென்ம ராசியில் இருப்பதால் பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லை. தன வரவு இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். சுபச் செலவு களும் இருக்கும். மேலும், 5-க்குரிய குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதுடன், 9-க்குரிய செவ்வாயும் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். எண்ணங் களும் திட்டங்களும் எண்ணி யதைப்போலவே ஈடேறும், நிறைவேறும். "ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும். அன்றி அதுவரினும் வந்தெய்தும்- ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்; என்று ஔவையார் பாடியுள்ளார். அதன்படி, நினைப்பது மனிதன் உரிமை- நிறைவேற்றுவது இறைவன் கடமை.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சூரியன் அதற்கு 12-ல் மறைவு. அதற்கு வீடுகொடுத்த சந்திரன் அதற்கு 12-ல் (வாரத்தொடக்கத்தில்) மறைவு. "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது' என்றொரு பழமொழி உண்டு. அதாவது, நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பதற்காக இப்படிச் சொல் வார்கள். உண்மையில் அதன் அர்த்தம் என்னவெனில், பிள்ளையார் சுழிபோட்டு எழுத ஆரம்பித்து, முடிக்கும்பொழுது ராமராம என முடிக்கவேண்டும் என்பதுதான். அதாவது, ராம நாமம் ஜெபிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி ஆசிர்வதிப்பார். "சூதாட்டத்தில் விட்டதைப் பிடிக்கிறேன்' என்று மேன்மேலும் சூதாடி எல்லாப் பொருளையும் (ஜெயித்த பணத்தையும் கொண்டுபோன பணத்தையும்) இழந்தமாதிரி, இப்பொழுது எல்லாம் விரயமாகும் காலம். ஜாதகரீதியாக, யோக மான தசாபுக்தியும் தனவரவு தரும் தசாபுக்தி யும் நடந்தால், எல்லாம் நல்லபடியாக நிறைவேறும். லாபம் வரும். மிச்சம் ஏற்படும். தொழில்துறையிலும் முதலில் முதலீடுசெய்து (செலவுசெய்து) பிறகு, வியாபாரம் செய்து லாப வரவு பார்க்கவேண்டும்; சேமிக்கவேண்டும். ஆக, "இறைக்கிற கிணறு ஊறும்' என்பது போலதான் பொருளாதார நிலையும். சம்பளத்துக்கு வேலை பார்ப்போரும் முப்பது நாளும் வேலை பார்த்து- உழைத்து கடைசியில் சம்பளம் வாங்கவேண்டும். தொழில்துறையில் பணம் முதலீடு; வேலை பார்ப்பதில் வேலை பார்த்தல் முதலீடு.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம். அவர் ராகுவுடன் சம்பந்தம். அவர்களுக்கு குரு, சனி, கேது பார்வை. குரு துலா ராசிக்கு 3, 6-க்குரியவர். சனி 4, 5-க்குரியவர். 9-க்குரிய புதன் 11-ல் பலம்பெற்று குருவின் பார்வையைப் பெறுகிறார். புதனுக்கு வீடுகொடுத்த சூரியன் 10-ல் பலம்பெறு கிறார். செவ்வாயின் பார்வையையும் பெறுகிறார். தொழில்துறையில் முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் பெருகும். வேலை பார்க்குமிடத்தில் மதிப்பும் மரியாதையும் செல்வமும் உண்டாகும். பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி அமையும். அட்ட மாதிபதி சுக்கிரன் 9-ல் நிற்பதாலும், ராகு, கேது, சனி சம்பந்தப்படுவதாலும் சிலருக்கு பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் வில்லங்கம், விவகாரம் ஏற்படும். சிலருக்கு போலீஸ் விவகாரம், கோர்ட் விவகாரத்தை சந்திக்க நேரும். என்றாலும், குரு பார்வை இருப்பதால், முடிவில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு, ஒரு சொத்தை விற்று இன்னொரு சொத்தை வாங்கும் அமைப்பு உண்டாகும். அதாவது, சொத்துப் பரிவர்த் தனை ஏற்படும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் குலதெய்வக் கோவில் திருப்பணி சம்பந்தமான வேலைகளைச் செய்யலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு பெற்றாலும் ஆட்சியாக இருக்கிறார். 6-ஆமிடம் என்பது 2-ஆமிடத்துக்குத் திரிகோணம். 10-ஆமிடத்துக்கும் திரிகோணம். 2- என்பது தனம், வாக்கு, குடும்பம். 10- என்பது தொழில், வாழ்க்கை, முயற்சி, வேலை. இந்த இரண்டு வீடுகளிலும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். வேலையில்லாதோருக்கு நல்ல வேலை அமையும். வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் பெருகும். சம்பளத்திற்கு வேலை பார்ப்போர் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே சுயதொழிலைக் கவனிப்போர் கிளைகளைக் தொடங்கலாம். அல்லது நடந்துவரும் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். உங்கள் முயற்சிக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற வகையில் தொழில் வளம் பெருகும். லாபம் பெருகும். கடன் அடைபடும். சேமிப்பு உருவாகும். ஏழரைச்சனியில் கடைசிக்கூறு நடப்பவர் களுக்கு இந்த வருடம் டிசம்பரில் ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது. இரண்டாம் சுற்று ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு- இதுவரையில் எந்த நன்மையும் முன்னேற்றமும் அடையாத வர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதிமுதல் (ராகு- கேது பெயர்ச்சி) அதிர்ஷ்டமும் யோகமும் நடக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சனி சம்பந்தம். இருவரும் வக்ரம். (குரு, சனி). வக்ரத்தில் உக்ர பலம் என்பார்கள். எனவே, தனுசு ராசிக்காரர் களுக்குப் பணக்குறை இருக்காது. சிலருக்கு மனக்குறை மட்டும் இருக்கும். அதையும் வழிபாட்டின்மூலமாகவும் மனப்பக்கு வத்தாலும் மாற்றிக்கொள்ள முயல வேண்டும். குருவும் சனியும் கூடியிருந்தால், எல்லாருக்கும் புத்தி சொல்லக்கூடிய அளவு அதிமேதாவியாக இருப்பார்கள். ஆனால், ராகு- கேது சம்பந்தம் அதற்கான சர்ட்டிபிகேட்டைப் பெற்றுத் தராது. இதற்கு ஜென்மச்சனியும் ஒரு காரணம். சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும் கைராசி நிறைந்தவர்கள். மற்றவர்களை நீங்கள் புரிந்துகொண்ட அளவு, உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வது அரிது. அதற்காக எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். "ஈன்று புறந்தள்ளுதல் என் தலைக்கடனே சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே' என்று புறநானூற்றில் ஒரு பாடல் வரும். அந்த தத்துவப்படி, "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று தாயுமான சுவாமிகள் பாடியமாதிரி உங்கள் கடமைகளை மனசாட்சிப்படி செய்துமுடிப்பீர்கள்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. ஏழரைச் சனியில் இக்காலகட்டம் விரயச்சனியாகும். வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி. விரயச் சனி விலகி ஜென்மச்சனி வரும். அடுத்து வரும் நான்கைந்து மாதக் காலகட்டத்தில் விரயச்சனியின் பலனை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. மங்களச் செலவுகள் செய்யலாம். அல்லது நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவு செய்யலாம். அவற்றையெல்லாம் சனியின் பிற்பகுதியில் லாபகரமாகத் திரும்பப் பெறலாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி உருவாகும். குடியிருப்பு அல்லது வேலை அல்லது தொழில்ரீதியாக அந்தப் பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாக அமையும். 4-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதால் பூமி, வீடு, வாகனவகையில் சுபச்செலவுகளைச் செய்வதற்கும், அதற்காக சுபக்கடனை வாங்குவதற்கும் உரிய காலமாகும். 9-க்குரிய புதன் 8-ல் மறைவதால்- சிலருக்கு ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால், பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் விவகாரமாகவும், வேதனை தருவதாகவும் அமையும். அப்படிப்பட்டவர்கள் குலதெய்வ வழிபாடு செய்தால் சாதகமாக முடியும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் குருவும் கேதுவும் சம்பந்தம். உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி இருக்காது. வேகமும் விறுவிறுப்பும் காணப்படும். அதனால் வெற்றி எளிதாகும். சத்ருகாரகன் செவ்வாய் 3-ல் ஆட்சிபெற்று 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். 6-ஆமிட மென்பது எதிரி, பகை, போட்டி ஸ்தானமாகும். எதிரி படைபலம் - பணபலம் மிக்க வராக இருந்தாலும், உங்களுடைய தெய்வ பலத்தால் அவற்றைத் தூள்தூளாக்கி வெற்றி பெறலாம். 9-ஆமிடத்தை 10-க்குரிய செவ்வாய் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எந்த வொரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோக மிருந்தால், அந்த ஜாதகருக்கு குருவருளும் திருவருளும் துணைபுரியும். எல்லா முயற்சிகளும் எளிதாக ஈடேறும். சிலசமயம் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக- அதிர்ஷ்டவசமாக நினைத்தது நிறைவேறும். கருதியது கைகூடும். இந்த உலகத்தில் எதைச் சாதிக்கவேண்டுமானாலும் குருவருளும் வேண்டும்; திருவருளும் வேண்டும். குருவருளைத் தேடிப்பெற வேண்டும். குருவருள் இருந்தால் திருவருள் தானே தேடிவரும். குருவருளும் திருவருளும் உடையவர்களுக்கு குறையேதும் இல்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறு கிறார். அவருடன் சனி சம்பந்தம். குருவும் சனியும் வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். 9-க்குரிய செவ்வாய் 2-ல் ஆட்சி. பண வசதியில் மனநிறைவு இருப்பதால் குறையேதும் வராது. சனி, கேது சம்பந்தப்படுவதால் சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். சில காரியங்கள் தாமதமாக நிறைவேறும். எப்படியும் தோல்வியில்லாமல்- தொய்வில்லாமல் எல்லாம் நிறைவேறும். சிலரின் அனுபவத்தில் "கையளவு இதயத்தில் கடலளவு ஆசைக்கனவுகள்' என்றமாதிரி பலப்பல திட்டங்கள் உருவாகும். அதில் எதை முதலில் செயல்படுத்த வேண்டும்- எதை அடுத்து செயல்படுத்த வேண்டுமென சிந்தித்து செயல்பட்டால் சிறப்பான பலன்களை செவ்வனே அடையலாம். உதாரணமாக, சாப்பிடும்பொழுது சாம்பார்- ரசம்- மோர் என்கிற வரிசைப்படி ஊற்றிச் சாப்பிடுவோமல்லவா? மோர் முதலில், பிறகு ரசம் அடுத்து சாம்பார் எனச் சாப்பிடுவதில்லையே? அதுபோலதான், திட்டங்களை வகுத்துக்கொண்டு அதை முறைப்படி- வரிசைப்படி செயல்படுத்த வேண்டும். அதனால், காலவிரயம், பொருள் விரயம், பணவிரயம் போன்றவற்றைத் தவிர்க்கலாம். அதையே "எண்ணித் துணிக கருமம்' என திருக்குறள் தெரிவிக்கிறது. திட்டமிடாதக் காரியம் நூலறுந்த பட்டம் போலாகும்.