ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.

அலைபேசி: 99440 02365.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 4, மகம்- 1, 2.

Advertisment

செவ்வாய்: பூரம்- 1, 2.

புதன்: பூரம்- 2, 3, 4, உத்திரம்- 1.

குரு: அவிட்டம்- 4, 3.

சுக்கிரன்: உத்திரம்- 3, 4, அஸ்தம்- 1.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 1.

கேது: அனுஷம்- 3.

கிரக மாற்றம்:

17-8-2021- சிம்ம சூரியன்.

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

15-8-2021- விருச்சிகம்.

17-8-2021- தனுசு.

20-8-2021- மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு 9, 12-க்குடைய குரு 11-ல் நின்று 5-ல் நிற்கும் செவ்வாயைப் பார்க்கிறார். (குரு 9-க்குடைய திரிகோணாதி பதி). அவர் மற்றொரு திரிகோண ஸ்தானமான 5-ஆமிடத்தைப் பார்ப்பது சிறப்பு. எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதியது கைகூடும். பணவரவும் செலவும் மாறிமாறி அமையும். இறைக்கிற கிணறுதான் ஊறும் என்ற பழ மொழிக்கிணங்க செலவு வந்தாலும் மறுபுறம் வரவும் வந்துகொண்டிருக்கும்; கவலைப்படத் தேவையில்லை. 2-ல் ராகு நிற்பது அவ்வப்போது குடும்பத்தில் சில சலசலப்புகளை ஏற்படுத்தினா லும், நீரடித்து நீர் விலகாது என்பது மாதிரி விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பிரச் சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் நீசம் பெற்றாலும், வாரத்தொடக்கத்தில் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த புதன் 5-ல் சுக்கிரனுடைய சாரம் பெறுவதால் (பூரம்) நீசம்பெற்ற தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது. சகோதரர்கள் அல்லது சகோதரிகள் உங்களைத் தவறாகப் புரிந்து கொண்ட நிலைமாறி, உங்களின் அருமை பெருமை தெரிந்து வ-யவந்து உறவாடுவர். அவர்களை ஏற்றுக்கொள்வ தும் விலக்குவதும் உங்களின் மனப்பக்குவத்தைப் பொருத் தது. தொழில்துறையில் டென்ஷன் விலகும். 7-ஆமி டத்தைப் பார்க்கும் குரு- திருமண பாக்கியத்தை ஏற் படுத்துவார். அரசியல் துறை சார்ந்தவர்கள் அருமையான பேச்சால் ஆக்கம் பெறுவர். சிலருக்கு எதிர்பார்த்த பதவி கள் வந்துசேரும் வாய்ப்பு அமையும். உறவினர்களால் சுபச்செலவு உண்டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ஜென்ம ராகு- சப்தம கேது, திருமணத்தடை, தாமதங்களை உண்டாக்கலாம். தாமதத் திருமணத்தை சந்திக்காதவர்களுக்கு வாரிசுவகையில் தாமதம் ஏற்படலாம். ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் (பூரம்) சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிப்பதால் நீசதோஷம் நீசபங்கமாக மாறுகிறது. புதனையும் புதனுடன்கூடிய செவ்வாயையும் குரு பார்க்கிறார். 4-ஆமிடம் வீடு, வாகனம், கல்வி, தன்சுகம், தாய்சுகம் போன்றவற்றைக் குறிக்கும். 17-ஆம் தேதிமுதல் சூரியன் 4-ல் ஆட்சி பெறுகிறார். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். அல்லது மனை வாங்கலாம். சிலர் பழைய வீட்டை சீர்த்திருத்தம் செய்யலாம். பணப் புழக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கும். 10-ல் நிற்கும் குரு 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் சுபமங்கள யோகம் உண்டாகும். நீண்டநாட்களாக நடைபெறாமல் இழுபறி யாக இருந்த காரியங்கள் நிறைவேறும். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. செய்தொழி-ல் லாபம் உண்டு. அரசுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வும் விரும் பிய இடமாற்றமும் ஏற்படலாம். கடன் சுமை இருக்கத்தான் செய்யும். மூத்த சகோதர- சகோதரிக்கு சற்று மருத்துவச் செலவுகள் உண்டாகும். வாரக் கடைசியில் வாழ்க்கைத் துணையின்மூலம் அதிர்ஷ்டம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு வியாபார விருத்தி உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம்.

rasipalan

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 3-ல் இருக்கிறார். புதனுக்கு வீடுகொடுத்த சூரியன் 17-ஆம் தேதி 3-ல் ஆட்சியாக மாறுகிறார். எனவே புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. 11-க்குடைய செவ்வாய், சூரியன், புதனுடன் சேர்க்கை. சகோதரவகையில் மனக் குழப்பம் விலகி ஒற்றுமை உண்டா கும். கருத்து வேறு பாடுகள் மறையும். 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை கூடும். சகாயம் ஏற்படும். நண்பர்களிடையே நட்பு அதிக மாகும். அட்டமத்துச்சனி நடப்பதால் சிலருக்கு குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். ஒரு சிலருக்கு வேலையில் ஊர்மாற்றம் உண்டாகும். எந்த மாற்றமாக இருந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் நல்ல மாற்றமாக அமை யும். 10-க் குடைய குரு 9-ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம். அதுவும் உங்களுக்கு அட்டமத்துச் சனியி-ருந்து ஆறுதலையும் தேறுதலையும் தரும். ஒரு சிலருக்கு அலைச்சல் இருந்தாலும் அது ஆதாயமும் தரும். கடன் வாங்கி தொழில் புரியும் நிலை வந்தாலும், அந்தத் தொழி-ன் மூலமாகவே கடனும் அடைபடும். பூர்வீக நிலத்தில் சிலர் விவசாயம் ஆரம்பிக்க வாய்ப்புகள் அமையும். அவ்வப்போது சிறுசிறு தொந்தரவு கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக் கும் சூழ்நிலையும் வரும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் அன்யோன் யம் உண்டாகும். புதிய தொழில் முனைவோருக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும். 5-ஆமிடத்தை குரு பார்க்கிறார். பிள்ளைகள்வகையில் நன்மையும் பாராட்டும் கிடைக்கும்; நன்மதிப்பும் உண்டாகும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் (17-ஆம் தேதி முதல்) 2-ல் ஆட்சியாக மாறுகிறார். 2-ஆமிடத் தில் செவ்வாயும் புதனும் சேர்க்கை. 2-ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைப்பது ஒருவகையில் ப்ளஸ் பாயின்ட்தான். வாக்கு, தனம், குடும்பம் இவற்றில் நல்லபலன்களை சந்திக்கலாம். அரசுத்துறை சம்பந்தமாக எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியின்றி நிறைவேறும். ராசிக்கு 7-ல் சனி ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். ஜனன ஜாதகத்தில் ராகு- கேது சம்பந்தம் இருந்தால் தாமதத் திருமணம்- அதனால் தாமத வாரிசு போன்ற பலன்களை சந்திக்க நேரும். திருமணமான கணவன்- மனைவிக்குள் சிலநேரம் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் தோன்றினாலும் ஒற்றுமையில் பிரிவு, பிளவிற்கு இடமிருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் அன்யோன்யமும் உண்டாகும். 11-க்குடைய சுக்கிரன் 3-ல் மறைவு, நீசம். தொழில்துறையில் புதிய முயற்சிகள் சற்று காலதாமதமாகலாம். அவர் 4-க்குடையவருமாவதால் தேகசுகத்தில் சிறுசிறு தொந்தரவுகளும் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பெரிய பாதிப்புகளில் இருந்து காப்பாற்றுவார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனமாதிரி! பிள்ளைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். சகோதரவழியில் நிலவிய சங்கடங்கள் விலகும். 10-க்குடைய செவ்வாயும் 9-க்குடைய குருவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது தர்மகர்மாதிபதி யோகம். எனவே முடிவில் உங்களுக்கு அனுகூலமும் நன்மையுமே ஏற்படும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 17-ஆம் தேதிமுதல் ஜென்மத்தில் ஆட்சியாக மாறுகிறார். 12-ல் மறைந்த தோஷம் விலகி ஆட்சி யோகம் சூரியனுக்குக் கிடைப்பதோடு, குரு பார்வையும் ராசிக்கும் ராசிநானுக்கும் கிடைப் பது ப்ளஸ் பாயின்ட். உங்களுடைய செயல் பாடுகள், காரியங்களில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். 10-க்குடைய சுக்கிரன் 2-ல் நீசம் பெற்றா லும் சுக்கிரனுக்கு வீடுகொடுத்த புதன், சுக்கிரன் சாரம் (பூரம்) பெறுகிறார். எனவே நீசதோஷம் பாதிக்காது. தொழில் இயக்கம் நடைபெறும். புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் தோன்றும். 11-ஆமி டத்தை குரு பார்ப்பதால் லாபமும் ஜெயமும் உண்டாகும். 6-ல் சனி ஆட்சி பெறுவதால் எதிரி, போட்டி, பொறாமை களை ஜெயிக்கலாம். கூட்டாளி யோகமும் அமையும். தொழிலுக்கான முதலீட்டுக்கு கடன் தேவையும் பூர்த்தியாகும். 11-க்கு டைய புதனும் 9-க்குடைய செவ்வாயும் ஜென்ம ராசியில் இணைகிறார்கள். அரசுவழி ஆதாயமும் அனுகூலமும் உண்டு. உடன்பிறப்புகள் உங்களை ஊதாசீனப்படுத்திய நிலைமாறி ஒற்றுமை உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பங்காளித் தகராறுகள் விலகி சுமூகத் தீர்வு ஏற்படும். வழக்கு வியாஜ்ஜியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடியிருப்பு மாற்றம் ஏற்பட இடமுண்டு. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் தென்படும். 4-ல் கேது- தாயார் உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. சிறுசிறு வைத்தியச் செலவுகள் உண்டாகலாம். என்றாலும் 4-க்குடைய செவ்வாய் 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் பெரிய பாதிப்புகளுக்கு இடமேற்படாது; கவலை வேண்டாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 9-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் நீசமடைகிறார். ராசிநாதன் புதன், சுக்கிரன் சாரம் (பூரம்) பெறுகிறார். புதன் 12-ல் மறைந்தாலும் குருவின் பார்வை யைப் பெறுகிறார். எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தருமென்றாலும் செலவும் வரவும் நிகராக அமையும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள். முக்கிய பிரமுகரின் அறிமுகத்தால் சில நன்மைகளும் உண்டாகும். புதன் 10-க்குடையவருமாகி 12-ல் மறைவ தால் தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் சுமாரான பலன்கள் நடக்கும். குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் இயக்கம் பாதிக்காது; நடந்துகொண்டுதான் இருக்கும். சிலருக்கு சக ஊழியர்களால் பணிச்சுமை அதிக மாகக் காணப்படும். சிலர் பணி விஷயமாக வெளியூர் சென்றுவருவதால் அலைச்சலும் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் இல்லையென்றாலும் ஒற்றுமை யில் பிரிவுக்கு இடமிருக்காது. தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். ஒருசிலர் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருப்பது பிரிவைத் தருமென்றாலும் அது தற்கா-கமே ஆகும்; நிரந்தரம் அல்ல. பிள்ளைகள்வகையில் சுபகாரியங்களுக்கு இடமுண்டு. அதனால் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்கமுடியாமல் திணறலாம். கடனும் உரிய நேரத்தில் கிடைக்காத தால் டென்ஷன் உண்டாகலாம். 2-ஆமிடத் தைப் பார்க்கும் குரு குடும்பத்தில் சில அத்தி யாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வார். சகோதர- சகோதரி உறவில் விரிசல்களுக்கு இடமுண்டு; நிதானம் தேவை.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. பொதுவாக ஒரு ராசிக்கோ ராசிநாதனுக்கோ அல்லது லக்னத்திற்கோ லக்னநாதனுக்கோ குரு பார்வை கிடைப்பது சிறப்பு. நீண்டநாட்களாக நடைபெறாமல் இருந்த காரியங்கள் முடிவடை யும். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டா கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். ஒருசிலர் பார்த்துவந்த வேலையி-ருந்து நீக்கப்பட்டாலும் புதிய வேலை வாய்ப்பு கள் அமையும். அது முந்தைய வேலையைவிட ஊதியத்தில் உயர்வாகவும் பணியில் நிறைவாக வும் அமையும். துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனி 4-ல் ஆட்சி பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்ப தால் மேற்கண்டவகையில் நற்பலன்கள் கிடைக்கும். மேலும் 11-ஆமிடத்தை குரு பார்ப்ப தும், 11-ஆமிடத்தில் சூரியன் ஆட்சியாக அமர்வதும் பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுக்கும் வழிவகைகளை ஏற்படுத்தும். அரசு சார்ந்த வேலை விஷயங்களில் காரிய ஜெயம் உண்டாகும். உத்தியோகரீதியாக சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அதுவும் நல்ல மாற்றமாகவே அமையும். 5-ஆமிடத்து குரு பிள்ளைகளின் வழியில் நன்மையை ஏற்படுத் தும். 9-ஆமிடத்தையும் அவர் பார்க்கிறார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வம் எதுவென்று அறிந்துகொள்ளுதல், இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுதல் போன்ற பலன்கள் உண்டாகும். தந்தைவழியில் மனக்கிலேசம் மாறும். பெற்றோர் ஆதரவும் உண்டாகும். பந்தபாசம் நீடிக்கும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எடுத்த காரியத்தை தடையின்றி செய்துமுடிக்கலாம். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக அமையும். ஜென்ம ராசியில் கேது இருப்பதால் கூடுமானவரை மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வ-யசென்று உதவாம-ருப்பது நல்லது. அது தேவையற்ற டென்ஷனை உருவாக்கும். ராசிநாதனை குரு பார்ப்பதால் உங்களது திறமை பளிச்சிடும். சொல்வாக்கு, செல்வாக்கு பெறும். உத்தியோகத் துறையினருக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். 10-ல் சூரியன் ஆட்சி. தொழி-ல் திருப்தி கரம் ஏற்படும். எதிர்பார்த்தப்படி பணிகள் முடிந்து ஆதாயம் தரும். 5-க்குடைய குரு 4-ல் கேந்திரம். வாகன மாற்றம் உண்டாகும். குரு- செவ்வாயின் சாரம் பெறுகிறார். (அவிட்டம்). வீடு, மனை போன்றவகையில் நற்பலன்கள் நடக்கும். உடன்பிறந்த சகோதரர்கள்வழியில் எதிர்பார்த்த உதவியும் சகாயமும் காலதாமதமாகும். கணவன்- மனைவிக்குள் இணக்கமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும். அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். என்றாலும் ஒருவித இனம் புரியாத குழப்பம் மனதை நெருடலாம். ராகு- கேது சமசப்தமப் பார்வையும் அதற்கு ஒரு காரணமாகலாம். 8-ஆமிடத்தை குரு பார்ப்பதால் மனச்சஞ்சலங்கள் அதிகரித்தாலும் திடீர் அதிர்ஷ்டமும் ஏற்பட இடமுண்டு. தொழில்ரீதியான முதலீட்டுக் கடனுதவியும் அல்லது புதிய பார்ட்னர் களின்மூலம் பண உதவியும் கிடைக்கும். அந்நிய இனத்தவர் ஒருவரால் நன்மை உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ஆமிடத்தில் இருக்கிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானமென்றாலும், குருவுக்கு வீடுகொடுத்த சனி 2-ல் ஆட்சி. எனவே, குருவின் மறைவு தோஷம் பாதிக்காது என்று நம்பலாம். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம். 9-ஆமிடத்துக்கு கேந்திர ஸ்தானம் என்பதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக அல்லது உடன் பிறந்தவர்கள்வகையில் நிலவிய சொத்துப் பிரச்சினைகள் நீங்கி சமரச உடன்பாடு ஏற்படும். மிகவும் நெருக்கமான- விசுவாசமான நண்பர்களின் தலையீட்டால் உடன்பிறப்பு களோடு உடன்பாடு ஏற்படும்படியான முயற்சிகள் பலன்தரும். 7-ஆமிடத்தை குரு பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் சலசலப்பு மாறி கலகலப்பும் ஒற்றுமையும் அன்யோன்யமும் ஏற்படுத்துவார். திருமணம் தடைப்பட்ட ஆண்- பெண்களுக்குத் திருமண யோகம் ஏற்படும். இளமையில் திருமணமாகி விவாகரத்தை சந்தித்தவர்களுக்கு மீண்டும் மறுமணயோகம் உண்டாகும். இரண்டாவது திருமணம் மகிழ்ச்சிகரமாக இருக்குமா என்று சந்தேகப்படுகிறவர்கள்- ஆண்கள் கந்தர்வராஜ புனர்விவாஹ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். குரு 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில்வகையில் இருந்த கடன்கள் மாறி லாபமும் ஜெயமும் உண்டாகும். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி உங்களுக்கு பொங்குசனியாக மாறி முன்னேற்றம் தரும். தெய்வ அனுகூலம் உங்களை வழிநடத்தும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. முதல் சுற்று சனி நடப்பவர்களுக்கு திருமணத் தடையும் தாமதமும் ஏற்படலாம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்தி நடந்தால், திருமணமான தம்பதிகளுக்குள் மனக் கிலேசமும் பிரிவினையும் உண்டாகலாம். 4-க்குடைய செவ்வாய் 8-ல் மறைகிறார். 2-ல் நிற்கும் குரு 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீடு, வாகனம், கட்டடவகையில் கடன்களும் உருவாகும். செலவினங்களும் ஏற்படலாம். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்குசனியாக மாறி பொ-வைத் தரும். வேலையில் நல்ல இடமாற்றம், ஊதிய உயர்வு உண்டாகலாம். சனி வக்ரம்; வக்ரத்தில் உக்ரபலமாகும். 8-ல் சூரியன் 17-ஆம் தேதிமுதல் ஆட்சி. சில காரியங்களில் சந்தேகமும் சஞ்சலமும் ஏற்படலாம். என்றாலும் காரிய வெற்றிக்கு இடமுண்டு. பொதுவாக ஜென்மச்சனி சீரழிக்கும் என்பது பொதுவிதியானாலும், இங்கு சனி ராசிநாதன் என்பதால் எந்தப் பிரச்சினையானாலும் அந்தப் பிரச்சினையை எளிதாகக் கையாண்டு சமாளித்துவிடலாம். யாருக்குத்தான் பிரச்சினை இல்லை? தோட்டி முதல் தொண்டைமான் வரை- சாதாரண குடிமகன் முதல் நாடாளும் மன்னன் வரை பிரச்சினைதான். விரலுக் கேற்ற வீக்கம்போல ஒவ்வொருவருக்கும் அவரவார்க்குத் தகுந்தமாதிரி பிரச்சினைதான். அதை ஒவ்வொருவரும் கையாளும் விதத்தில்தான் அவை எளிதா அல்லது கடினமா என்று புரிகிறது. எது எப்படியோ- சனி ராசிநாதனாவதால் பெரிய கெடுல் தர மாட்டார் என்று நம்பலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு ஏழரைச்சனி யில் விரயச்சனி நடக்கிறது. ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். அதனால் உங்களுக்கு தவிர்க்கமுடியாத விரயங்களையும் செலவுகளையும் ஏற்படுத்தலாம். சிலருக்கு சுபச் செலவாகவும், சிலருக்கு பயனற்ற விரயமாகவும் அமையலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலருக்கு முழங்கால் வ-, மூட்டுவ- போன்ற உபாதைகள் ஏற்பட இடமுண்டு. 11-ஆமிடத்து குரு ஜென்ம ராசியில் நிற்கிறார். சிலர் வேலை மாற்றம், கூடுதல் சம்பளம் அல்லது ஏற்கெனவே உள்ள வேலையில் பதவி உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம், வீடு மாற்றம் செய்யும் யோகம் உண்டாகும். "எட்டில் ஒரு ஏழையேனும் பத்தில் பாவியேனும் இருக்கவேண்டும்' என்பது ஜோதிடமொழி. 10-ல் கேது. கேந்திரத்தில் பாவகிரகம் இருப்பதால் தொழில், வேலையில் பாதிப்புக்கு இடமில்லையென்றாலும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சம்பளமில்லாமல் ஓவர்டைம்- அதிக நேரம் உழைக்கவும் நேரும். சிலர் புதிய வேலைவாய்ப்பு சம்பந்தமாக புதிய பயிற்சிக்குப் போகலாம். வீடு கட்டும் பணி நடக்கலாம். அது சம்பந்தமாக சுபச்செலவுகள் சற்று கூடுதலாகவே அமையும். விரயச்சனி என்பதால் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் விரயமும் உண்டாகலாம். எனினும் குரு ஜென்மத்தில் நின்று 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். கணவர் அல்லது மனைவி வழியில் பெரும் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சித் தேவைகள் நிறைவேறும். பூர்வபுண்ணியப் பலன் நன்றாக இருக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவர் 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2-க்குடைய செவ்வாயும் 4-க்குடைய புதனும் 6-ல் மறைவு. பூமி, வீடு, வாகனம் போன்றவற்றில் சுபமங்கள விரயச் செலவுகள் ஏற்படலாம். 6-க்குடைய சூரியன் ஆட்சி. கடன் வாங்கும் சூழல், அவசியம் உண்டாகும். அது மருத்துவம் சம்பந்தமாகவும் இருக்கலாம். கல்விக் கடனாக வும் இருக்கலாம். வீட்டுக் கடனாகவும் இருக்கலாம். 4-ஆமிடம் தாயார் ஸ்தானம். தாயின் ஆரோக்கியத்திற்காகவோ அல்லது தன் ஆரோக்கியத்திற்காகவோ அல்லது கண் மருத்துவ சிகிச்சைக்காகவோ கடன் வாங்கி செலவுசெய்யும் நிலை ஏற்படலாம். 6-ஆமிடத்தை குரு பார்க்கிறார். உங்களால் ஆதாயமும் நன்மையும் அடைந்தவர்களே உங்களுக்குப் போட்டியாகவும் மாறலாம். எதிரியாகவும் செயல்படலாம். சிலர் தனது சுயலாபத்திற்காக நம்பியவர்களை ஏமாற்றலாம். இப்படி சிலர் சுயநலத்தால் சௌகர்யங்களை வளர்த்துக்கொண்டு மற்றவர்களின் பகை- வருத்தத்தையும் சாபத்தை யும் வாங்கிக் கொள்வார்கள். அதனால் பழிச் சொல் அபகீர்த்திகளை சந்திக்கும் நிலையையும் 8-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உண்டாக்கலாம். குரு உங்கள் எண்ணங்களைப் பொருத்து நல்லது- கெட்டது செய்யும். அது பூர்வ புண்ணியம். மனம்போல் வாழ்வு என்பதன் ரகசியமும் அதுதான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்பதன் தத்துவமும் அதுதான்! வாரியார் சுவாமிகள், "வருவதுதானே வரும்! வருவதுதானே வரும் என்றார். எது வரினும் இறைவனை நம்பி செயல்படுங்கள்; நல்லது நடக்கும்.