ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

Advertisment

சூரியன்: அவிட்டம்- 4, சதயம்- 1.

செவ்வாய்: கார்த்திகை- 1, 2.

புதன்: திருவோணம்- 1.

Advertisment

குரு: திருவோணம்- 4.

சுக்கிரன்: திருவோணம்- 4,

அவிட்டம்- 1, 2.

சனி: உத்திராடம்- 3.

ராகு: ரோகிணி- 4.

கேது: கேட்டை- 2.

கிரக மாற்றம்:

19-2-2021 ரிஷபச் செவ்வாய்.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

14-2-2021- மீனம்.

16-2-2021- மேஷம்.

19-2-2021- ரிஷபம்.

thisweekrasi

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். வாரக் கடைசியில் ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் ராகு- கேதுக்களின் சம்பந்தம் பெற்றாலும் மகர குருவின் பார்வையைப் பெறுவதால் அப்போதும் உங்களுக்குக் கெடுதல் இல்லை. 9, 12-க்குடைய குரு நீச ராசியில் நின்றாலும் வீடுகொடுத்த சனி ஆட்சி பெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகமாகும். எனவே உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு இவற்றுக்கு எல்லாம் குறைவில்லை. 11-ல் சூரியன் பலம் பெறுவது உங்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட். ஒரு நல்ல காரியத்திற்கு 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால் அந்தக் காரியம் சீரும் சிறப்புமிக்கதாகவும் அமையும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் அவ்வப்போது பொருளாதாரத் தடைகளும் தேக்கமும் காணப்பட்டாலும், 9-க்குடைய குருவும் 10-க்குடைய சனியும் 10-ல் சேர்ந்திருப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால் எடுத்த காரியங்களை எண்ணம்போல் நிறைவேற்றிவிடலாம். தொட்டது துலங்கும். விட்டது கிடைக்கும். பட்டது துளிர்க்கும். வாழ்வில் வசந்தம் பெருகும். எல்லாம் இன்பமயமாக ஜொலிக்கும். 10-ல் புதன், குரு, சுக்கிரன், சனி சம்பந்தம் இருப்பதால் அரசியல் அல்லது கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும் வெற்றியும் கிட்டும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசியில் ராகு நிற்க. 7-ல் கேது. இது நாகதோஷம் எனப்படும். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பருவ வயதினருக்கு (ஆண்களானாலும் பெண்களானாலும்) திருமணத்தடை காணப்படும். ஆண்களாக இருந்தால் கந்தர்வராஜ ஹோமமும், பெண்களாக இருந்தால் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்வது அவசியம். இரு சாரரும் காமோகர்ஷண ஹோமமும் செய்யவும். இதனால் நல்ல கணவன், நல்ல மனைவி அமையும். அத்துடன் நல்ல வாரிசும் கிடைக்கும். 12-ல் செவ்வாய் ஆட்சி பெறுவதாலும் கார்த்திகை சாரம் பெறுவதாலும் (சூரியன் நட்சத்திரம்) பூமி, இடம், வீடு, வாகனம் போன்ற 4-ஆமிடத்துப் பலன்கள் எல்லாம் சீராக அமையும். அதில் அரசு வில்லங்கம், விவகாரம், சிக்கல்கள் இருந்தாலும் நிவர்த்தியாகும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களை செய்துகொள்வதோடு, ஞாயிறு தோறும் சூரிய வழிபாடு செய்வதும் சிறப்பாகும். முடிந்தால் கும்பகோணம் அருகில் சூரியனார்கோவில் சென்று ஞாயிற்றுக்கிழமை உச்சி வேளையில் எருக்கிலையில் தயிர் அன்னம் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம். குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு காரிய சித்தியைக் கொடுக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைகிறார். "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்று ஒரு பழமொழி உண்டு. 8-ஆமிடம் ஏமாற்றம், இழப்பு, நஷ்டம், விபத்து இவற்றை குறிக்குமிடம் என்றா லும், 2, 9, 11-க்குடையவர்கள் சம்பந்தப்படும்போது 8-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று கடந்த வாரமே எழுதியிருந்தோம். இங்கு ராசிநாதன் புதன் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதோடு 9-க்குடைய சனியோடும், 5, 12-க்குடைய சுக்கிரனோ டும் சம்பந்தப்படுவதால் அது அதிர்ஷ்ட ஸ்தானமாகிறது. அதாவது இரண்டு திரிகோணாதிபதிகள் (5, 9), ஒரு கேந்திராதிபதி (7, 10-க்குடையவர்) இணைவது ராஜயோகம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம், முயற்சி ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம், தெய்வ அனுகூல ஸ்தானம். இந்த இரண்டும் இணைவதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதோடு பாராட்டும் வெகுமதிப்பும் உரியவர்களாக ஆவீர்கள். ஜோதிடத்தில் ஒரு நுட்பம் என்னவென்றால் 5, 9 திரிகோண ஸ்தானம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம். ராசி, லக்னம் என்பது திரிகோணத்திற்கும் பொருந்தும். கேந்திரத் திற்கும் பொருந்தும். ஒரு திரிகோணமும் ஒரு கேந்திரமும் இணைவது ராஜயோகமாகும். இந்த விதி எல்லா பாவகத்திற்கும் பொருந்தும். நினைப் பது மனிதன் செயல். முயற்சிப்பதும் மனிதன் செயல். நினைப்பது கேந்திரம்- நிறைவேற்றுவது. திரிகோணம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 10-ல் செவ்வாய் ஆட்சி. 7-ல் புதன், குரு, சுக்கிரன், சந்திரன். ஆக, 7-ஆமிடம் 10-ஆமிடமாகிய கேந்திரங் கள் பலமடைகின்றன. அதனால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். அதைப் பெரியோர்கள் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் என்று சொன்னார்கள். திரிகோணம் தெய்வ ஸ்தானம் என்று சொன்னோம். தெய்வம் உங்கள் உழைப்புக்கான கூலி தரவில்லை என்றாலும், உங்கள் உழைப்பு உங்களை ஏமாற்றாது. நிச்சயம் பலன் தரும். வறுமையில் வாடிய இரண்டு இளைஞர்கள் குபேர லட்சுமி ஹோமம், பூஜை எல்லாம் செய்து, கடுமையாக தபசு செய்தார்கள். "பூர்வஜென்மப் பயனாக இந்த ஜென்மாவில் உங்களுக்கு செல்வந்தராகும் யோகமில்லை' என்று லட்சுமி தோன்றி கூறினாள். "அப்படியென் றால் இந்த தவப் பயன் வீணாகிவிடுமா' என்று கேட்க, "இதன் பலன் வீணாகாது. "அடுத்த ஜென்மாவில் உங்களுக்குக் கிடைக்கும்' என்றாள். இன்றைய பசிக்கு கிடைக்காத உணவு நாளைய பசிக்கு கிடைத்து என்ன பயன் என்று மனம் வெறுத்துப் போனார் கள். அப்போது அவர்கள் குருநாதர் அடுத்த பிறவியென்றால் நீங்கள் மரணமடைந்து ஜனிக்கவேண்டும் என்பதல்ல. சந்நியாசம் வாங்கிகொண்டாலும் மறுஜென்மா அடைந்த தாக அர்த்தம்' என்று தீட்சை வழங்கினார். சந்நியாசம் பெற்றபிறகு செல்வத்தின்மேல் இருந்த பற்று நீங்கிவிட்டது. லட்சுமியும் குபேரனும் அவர்கள் தவப்பயனுக்கு சங்கநிதிமபது, நிதியைத் தந்தார்கள். அந்த செல்வத்தைக்கொண்டு விஜயநகர சாம்ராஜ் ஜியத்தை உருவாக்கினார்கள். அவ்வாறு ஆந்திரா உருவானது. செய்யும் தவம், பூஜை வீணாகாது. உழைப்பும் வீணாகாது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் கும்பத்தில் இருந்து தன் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனோ லக்னநாதனோ ஆட்சி பெற்றாலும் அல்லது ராசி, லக்னத்தைப் பார்த்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்கு வீழ்ச்சிக்கு இடமில்லை. உச்சம் பெற்றாலும் மேற்படி பலனுண்டு. 9-க்குடைய செவ்வாய் ஆட்சி பெறுகிறார். அவருக்கு 10-ல் சுக்கிரன் இருப்பது கேந்திர பலமாகும். எனவே, உங்கள் முயற்சிகளும் காரியங்களும் செயல்களும், தடைகளையும் குறுக்கீடுகளையும் கடந்து முன்னேற்ற மடையும் வெற்றிக்கு வழிவகுக்கும். சிம்ம ராசிக்கு 4-க்குடைய செவ்வாய் 9-ல் நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பது ஒரு தனிபலம். அதாவது கேந்திராதிபதி திரிகோணம் பெற்று கேந்திர ஸ்தானத் தைப் பார்ப்பதால் எண்ணியதை சாதித்து முடிப்பீர்கள். கருதியவை கைகூடும். நினைத் தது நிறைவேறும். அதாவது செய்வதையே சிந்திப்பீர்கள். சிந்தித்தவற்றைச் செய்து முடிப்பீர்கள். 10-ஆமிடத்து ராகு; அவருக்கு வீடுகொடுத்தவர் சுக்கிரன் 10-ஆமிடத்திற்கு திரிகோணம். எனவே, உங்களுடைய கருத்துகளுக்கும் திட்டங்களுக்கும் காலம் துணையாக நின்று நடத்திவைக்கும். 4-ல் உள்ள கேது அதற்கு இடையூறாக ஆரோக்கியத்தைக் கெடுத்தாலும்கொண்ட கொள்கையின் உறுதிப்பாடு வெற்றியைத் தேடித்தரும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் ராசிக்கு 5-ல் திரிகோணம் ஏறுகிறார். அவரும் 1, 10-க்குடையவர். 10-க்குடைய கேந்திராதிபதி 5-ஆமிட திரிகோணம் ஏறுவது மிகச் சிறப்பு. கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். திரிகோணம் என்பது வெற்றி ஸ்தானம். வள்ளுவர் சொல்லிய மாதிரி, முயற்சி வெற்றிதரும். அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி தொடுத்த கருமங்கள் ஆகாது' என்று ஒரு பழமொழி இருந்தாலும், "அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பது அதற்கு எதிர்மறைப் பழமொழி. அதைத்தான் ஏசு பெருமான் "கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்' என்றார். உண்மையில் ஆர்வத்தோடும் வைராக்கியத்தோடும் தேடுவது கிடைக்கும். அதைதான் பெரியோர்கள் விடாமுயற்சி வெற்றிதரும் என்றார்கள். கேந்திரமும் திரிகோணமும் இணைவது உங்கள் முயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதை சுட்டிக்காட்டும். அதற்குப் புராணத்தில் இரண்டு உதாரணமுண்டு. ராஜகுல மன்னனாக இருந்து அரச பதவியைத் தூக்கியெறிந்து தவமிருந்து பிரம்மரிஷியா னார் விசுவாமித்திரர். அதேபோல முன்னோர் களின் பித்ரு தர்ப்பணத்திற்கு ஆகாயத்தில் இருக்கும் கங்கையை பூமிக்கு வரவழைத்தான் பகீரதன் என்னும் மன்னன். அதைதான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். எனவே முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் லட்சியமும் குறிக்கோளும் நியாயமாக இருந்து விடாமுயற்சியுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். அவருடன் துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனியும் பாக்கியாதிபதி புதனும் இணைகிறார்கள். 6-க்குடைய குருவும் சம்பந்தப்படுவதால், இடையிடையே தடைகளும் குறுக்கீடுகளும் தாமதங்களும் காணப்பட்டாலும், கொண்ட கொள்கையில் உறுதிப்பாடும் வைராக்கியமும் இருக்கும்பட்சத்தில் சாதனை படைக்கலாம். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த நெப்போலியன் போனபார்ட் ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவனாக மாறினான். அதுபோல யாருக்கும் உதவாமல் சுற்றித்திரிந்த ராபர்ட் கிளைவை, இந்தியாவுக்குச் சென்ற கிழக்கிந்திய கம்பெனி கப்பலில் அவன் தாய் சேர்த்துவிட்டாள். அவன் வைராக்கியமும் விடாமுயற்சியும் கொண்டு பெரிய பதவி வகித்து சரித்திரத்தில் இடம் பெற்றான். ஆகவே லட்சியமும் குறிக் கோளும் இருந்தால் அடிமட்டத்திலிருந்து வானளாவ உயர்ந்து விளங்கலாம். சரித்திரத்தில் எத்தனையோ உத்தமர்கள் உழைப்பால் உயர்ந்து புகழ்பெற்றவர்கள். உங்களுக்கும் அந்த வாய்ப்புண்டு. 7-க்குடைய செவ்வாய் ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், உங்கள் வெற்றிக்குப் பின்னால் தாயார் அல்லது தாரம் அமைவார்கள். அதைத்தான் தாய்க்குப்பின் தாரம் என்றனர். 9-க்குடைய புதன் 4-ல் கேந்திர பலம்பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே உங்கள் லட்சியத்திற்கு காலம் கைகொடுக்கும்..

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபலம் பெறுகிறார். 10-க்குடைய சூரியன் சாரம் பெறுகிறார். எதிர்ப்பும் இடையூறுகளும் ஒருவகையில் காணப்பட்டாலும், தடைகளைக் கடந்து செயல்பட்டு சாதனை படைக்கலாம். உங்கள் வெற்றிக்குப் பின்னால் தாய் அல்லது வாழ்க்கைத் துணை அல்லது உடன்பிறப்புகள் உறு துணையாக இருப்பார்கள். சகோதர காரகன் செவ்வாய் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதால் "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பதுபோலவும், "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்பது போலவும் உங்கள் வெற்றி நிச்சயிக்கப்படுகிறது. ஜென்ம கேது, சப்தம ராகு காரணமாக சுற்றுச் சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும், கொண்ட கொள்கையில் உறுதிப்பாடும் லட்சிய வெறியும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வாழ்க்கை, தொழில், பொருளாதாரம் எல்லா வற்றுக்கும் இது பொருந்தும். 2-க்குடைய குரு 5-க்குடைய திரிகோணாதிபதியுமாகி அஷ்டம லாபாதிபதியான புதனுடன் சேர்ந்திருப்பதால், எதிர்மறை விளைவுகள் எத்தனை இருந்தாலும் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிப்பாதையில் பயணிக்கலாம். 6-ல் உள்ள செவ்வாய் எதிர்ப்பு, இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதுவே உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி சாதனை புரியவைக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 2-ல் மகரத்தில் நீசமென்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 6-க்குடைய சுக்கிரன் சேர்க்கையால் எதிர்ப்பு, இடையூறு, தடைகள், குறுக்கீடுகள் போன்றவை காணப்பட்டாலும், அவற்றை எதிர்கொண்டு போராடி வெற்றிப் பாதையில் பயணிக்கலாம். எதிர்ப்பு என்னும் ஒன்று இருந்தால்தான் அல்லது எதிரி என்ற ஒருவர் இருந்தால்தான் உங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் சிங்கத்தைத் தட்டியெழுப்பி கர்ஜனை செய்ய வைக்கும். 5-ல் உள்ள ஆட்சிபெற்ற செவ்வாய் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி வைக்கும். குறிப்பாக பூமி, வீடு, கட்டடம் போன்ற செயல்களில் ஈடுபடச் செய்யும். சிலசமயம் சக்திக்கு மீறிய செயல் என்று மலைக்க வைத்தாலும், எடுத்த காரியத்தைத் தொடுத்து முடித்துவிடலாம். உங்கள் வைராக்கியத்தால் சாதனைகள் எளிதாக ஈடேறிவிடும். ஒரு சிலரது அமைப்புக்கு 6, 11-க்குடைய சுக்கிரன் 2-ல் இருப்பதால் கடன் வாங்க நேரும். கடன் ஏற்பட்டாலும் அதை எளிதாக அடைத்துவிடலாம். பெரிய பெரிய கோடீஸ்வரர்களும் கையிருப்பை பத்திரப்படுத்திக்கொண்டு வங்கிக் கடன் வாங்கிதான் காரியங்களை சாதிக்கிறார்கள். ஆகவே கடன் படுவதை ஒரு பிரச்சினையாகக் கருதவேண்டாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஆட்சி. அவருடன் 3, 12-க்குடைய குரு சம்பந்தம். குரு நீச ராசியில் நின்றாலும் நீசபங்கமடைகிறார். 6, 9-க்குடைய புதன் ஜென்ம ராசியில் இருப்பதால் சிலருக்கு பூர்வீக சொத்து விற்பனையாகலாம். அல்லது பரிவர்த்தனை ஏற்படலாம். ஒருசிலர் பூர்வீக சொத்து அபிவிருத்திக்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். 5-ல் உள்ள ராகுவும் கடன் கவலையைக் கொடுத்தாலும், குரு பார்வையால் கடனால் பாதிப்புக்கு இடமில்லை. மதிப்பு, மரியாதை, கௌரவத்திற்கு சங்கடமில்லை. என்றாலும் "கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பன் பாடியமாதிரி கடன்கவலை ஒருசிலருக்கு பெரும் கவலையாக இருக்கலாம். ஒருசிலர் ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். இரண்டு கடன் வட்டிச்சுமை பெரிதாகத் தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் திருச்சேறை கடன்நிவர்த்தி ஸ்தலம் சென்று வழிபட்டால் கடன்சுமை சிறுசுமையாக மாறிவிடும். இந்த கவலைக்குக் காரணம் அட்டமாதிபதி சூரியன் 2-ல் நின்று அட்டம ஸ்தானத்தைப் பார்ப்பதுதான். அந்த சூரியன், செவ்வாய் சாரத்திலும் ராகு சாரத்திலும் சஞ்சரிப்பதால் கௌரவம், மதிப்பு, மரியாதை பாதிக்காது; தேகநலம் நன்றாக இருக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசியில் 7-க்குடைய சூரியன் கேந்திரபலம் பெறுகிறார். அவருக்கு அது பகை வீடு என்றாலும் செவ்வாயின் சாரம் பெறுவதால், செவ்வாய் ஆட்சி பெறுவதால் தற்காலிக நட்பாகும். மேலும் சூரியனின் உச்ச ராசிநாதன் செவ்வாய் என்பதாலும், ராசிநாதன் சனிக்கு கேந்திரமாக இருந்து 3-ல் மறைவதாலும் செவ்வாயின் துர்பலனும் மறையும். 3-ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் சகோதரவகையிலும் நண்பர்கள்வகையிலும் நல்லதே நடக்கும். ராகு தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு மட்டும் தனக்கோ அல்லது தாயார் வர்க்கத்திற்கோ ஆரோக்கியக் குறைவோ வைத்தியச் செலவோ ஏற்படலாம். அப்படியிருந்தால் அவரவர் தசாபுக்தியை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களை செய்துகொள்ளவும். அதேபோல வாழ்க்கை தொழில் ஸ்தானத்தில் கேது நின்று ராகு பார்ப்பதால், தொழில் துறையிலும் வாழ்க்கை அமைப்பிலும் பிரச்சினைகள் உருவாகும் என்றாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் தன் ஸ்தானத்தைத் தானே பார்ப்பதால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். பொருளாதாரம் சீராக அமைவதும் ஒரு காரணம். சமாளிக்கும் சக்தியும் வரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 11-ல் நீச ராசியில் நின்றாலும், வீடுகொடுத்த சனி ஆட்சி பெறுவதால் நீச பங்க ராஜயோகமாகும். இது ஒரு பாயின்ட்டாகும். இன்னொருவகையில் மீன ராசியின் உச்ச ராசிநாதன் சுக்கிரன் குருவோடு இணைவதாலும் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. எனவே, யானை படுத்தாலும் குதிரைமட்டம் என்று சொல்வதுபோல உங்கள் செல்வாக்கும் செயல்பாடும் குறையாது. 2-க்குடைய செவ்வாய் ஆட்சிபெற்று 9-ஆமிடத்தை 8-ஆம் பார்வை பார்க்கிறார். 9-ல் கேது. கேது ஆன்மிககாரகன். 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். அதனால் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த உலகத்தில் ஒரு மனிதனின் வெற்றிக்கு உதவியாக இருப்பது மூன்று. ஒன்று படைபலம். இன்னொன்று பணபலம். மற்றொன்று தெய்வபலம். இதில் பணபலமும் படைபலமும் ஈட்டி எட்டிய மட்டும்தான் பாயும் என்பதுபோல ஒரு குறிப்பிட்ட அளவுதான். ஆனால் தெய்வ பலத்திற்கு எல்லைக்கோடு இல்லை. அதை சரித்திரங்களும் புராணங்களும் எடுத்துக்காட்டும். தாய் பலமுறை மன்னிப்பார். தண்ணீர் மூன்றுமுறை மன்னிக்கும். தெய்வம் ஒருமுறைத்தான் மன்னிக்கும். இது சாஸ்திர உண்மை. சகோதர சகாயத்தையும் தைரியத்தையும் 3-ஆமிடத்து ராகு தருவதோடு நண்பர்களின் நல்லாதரவையும் தரும்.