ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 2, 3, 4.
செவ்வாய்: பூசம்- 1, 2.
புதன்: கார்த்திகை- 4, ரோகிணி- 1, 2.
குரு: சதயம்- 1.
சுக்கிரன்: திருவாதிரை- 4,
புனர்பூசம்- 1, 2.
சனி: திருவோணம்- 1.
ராகு: ரோகிணி- 2.
கேது: அனுஷம்- 4.
கிரக மாற்றம்:
15-6-2021- மிதுன சூரியன்.
16-6-2021- குரு வக்ர ஆரம்பம் v சனி வக்ரம்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கடகம்.
15-6-2021- சிம்மம்.
17-6-2021- கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீச ராசி யில் இருந்தாலும் சனியின் பார்வையைப் பெறுவதால் நீசபங்க ராஜயோகமடை வார். அது ஏனென்றால் சனி, செவ்வாயின் உச்ச ராசியான மகர ராசிக்கு அதிபதியாவார். அத்துடன் சனியின் நட்சத்திரமான பூசத்தில் செவ்வாய் சஞ்சா ரம் செய்கிறார். எனவே செவ்வாய் 1, 8-க்குடையவர் என்பதால் உங்கள் செல்வாக் கும் சொல்வாக்கும் நல்வாக்காக அமையும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பது ஒருவகையில் தோஷமெனக் கருதப்பட்டா லும், ராகுவோடு பஞ்சமாதிபதி சூரியன் சம்பந்தப்படுவதால் தோஷம் நிவர்த்தியாகும். மேலும், அந்த சூரியன், ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் (மிருகசீரிடம்) சஞ்சரிப்பதால் எல்லாம் நன்மையாகவே நடக்கும். ராசிநாதன், லக்ன நாதன் சம்பந்தப்பட்டால் அந்த கிரகங்களுக்கு முழு நன்மை யான பலனை எதிர்பார்க்கலாம். அதேபோல திரிகோணாதி பதிகளின் சம்பந்தம் பெற்றாலும் கெடுதல்கள் மறையும், நன்மையே நடக்கும். 6-க்குடைய புதன் 2-ல் நின்று ராகு- கேது சம்பந்தப்படுவது ஒருவகையில குடும்பத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் என்றாலும், சலசலப் புக்கு இடமிருக்காது. பாக்யா திபதி குரு 11-ல் இருப்பதால், பூர்வபுண்ணிய பலத்தால் உங்கள் முயற்சிகள யாவும் முழுமையான வெற்றியடை யும். 10-ல் ஆட்சிபெற்ற சனி உங்களுக்கு வாழ்க்கை அமைப் பிலும் தொழில்துறையிலும் நினைத்ததை சாதிக்கும் ஆற்றலைத் தருவார். முன்னேற்றகரமான மாற்றங்களையும் செயல்படுத்தலாம். ஆரோக்கி யம், பொருளாதாரம் என எல்லாவகையிலும் சீரும்சிறப்பு மாக அமையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மிதுன ராசியிலும், அவருக்கு வீடு கொடுத்த புதன் ரிஷப ராசியிலும் (சுக்கிரனின் ராசி) பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த்தனையாக இருக்கும் கிரகங்கள் அவரவர் ராசியில் இருப்பதுபோன்ற பலன்தருவார்கள். அதன்படி ரிஷபத்தில் சுக்கிரனும் மிதுனத்தில் புதனும் இருப்பதாக அர்த்தம். அதனால் உங்களுடைய எண்ணங் களும் திட்டங்களும் முழுமையாக வெற்றி யடையும் என்று நம்பலாம். உங்களது கனவுத்திட்டங் கள் எல்லாம் நனவுத்திட்டங் களாக செயல்படும்; வெற்றி பெறும். 7, 12-க்குடைய செவ்வாய் மூன்றில் மறைவாகவும் இருக்கிறார்; நீசமாகவும் இருக்கிறார். மறைவுபெறும் கிரகம் உச்சம்பெற்றால் மறைவு தோஷம் பலமடையும். அதுவே நீசமானால் மறைவு தோஷம் பலமிழக்கும். எனவே 7, 12-க்குடைய கிரகம் மறைவு ஸ்தானத்தில் நீசம்பெறுவதால், டபுள் மைனஸ்= ஒரு பிளஸ் என்பது போலவும், டபுள் நெகட்டிவ்= ஒரு பிளஸ் என்பது போலவும் மாறிப் பலன்தரும் என்பதால் உங்களுக்கு நல்லதே நடக்கும்! அதாவது திருமணம் ஆகாதவர்களுக்கு (ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி) திருமணம் கைகூடும். திருமணமாகி பிரிந்திருக்கும் தம்பதிகள் இணைந்துவாழும் யோகமும் உண்டாகும். ஜென்ம சூரியனுடன் ராகு- கேது சம்பந்தப்படுவது கிரகண தோஷத் துக்கு சமம். ஜாதகரீதியாக 2, 7, 8-க்குடைய கிரகங்கள் பலம்பெற்றால் திருமணத் தடையும், திருமணமானாவர்களுக்கு கருத்து முரண்பாடுகளும், பிரிவு, பிளவு போன்ற பிரிவினைகளும் ஏற்பட இடமுண்டு. அப்படிப் பட்ட ஜாதகர்களுக்கு பஞ்சம திரிகோணாதி பதிகளின் தசாபுக்தி நடந்தால் தோஷ நிவர்த்தி உண்டாகும். கருத்து வேறுபாடுகள் உருவானாலும் பிரிவு, பிளவுக்கு இடமேற் படாது.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ரிஷபத்திலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் மிதுனத்தி லும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த் தனை பெறும் கிரகங்கள் அவரவர் வீட்டில் (ராசியில்) இருப்பதாக அர்த்தம். எனவே சுக்கிரன் ரிஷபத்திலும், புதன் மிதுனத்தில் இருப்ப தாக அர்த்தம். 12-க்குடைய சுக்கிரன் 5-க்கும் அதிபதி யாவார். "5, 9-க்கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே பெறுவார்' என்பது சந்திர காவிய விதி. எனவே சுக்கிரன் 5-க்குடையவர் என்பதால் விரயாதிபத்திய தோஷம் அவரை பாதிக்காது. சுபவிரயம் என்றே எடுத்துக் கொள்ளலாம். சுபகாரியங்களுக்குச் செலவிடும் தொகை சுபவிரயம். வியாபாரத்தில் ஏமாற்றம் அல்லது இழப்பாக ஏற்படும் விரயம் நஷ்ட விரயம். திருடுபோவது அல்லது பறிகொடுப்பது ஏமாற்ற விரயம். இப்படி விரயத்திலும் சுபவிரயம், அசுபவிரயம் என்று பல பிரிவுகள் உண்டு. விரயாதிபதி கேந்திர திரிகோணாதிபதியாக இருந்தால் அந்த விரயம் சுபவிரயமாகும். 6, 8, 12 சம்பந்தப்பட்ட விரயமாக இருந்தால் நஷ்ட விரயம், ஏமாற்ற விரயமென்று எடுத்துக் கொள்ளவேண்டும். சில காரியங்களுக்காக முன்பணம் செலுத்தும் இ.எம்.டி. தொகையும் விரயம்தான் என்றாலும், அது பயனுள்ள விரயம். இப்படி ஒவ்வொரு காரியத்திலும் சுப விரயம் அசுபவிரயமென்று உண்டு. உங்கள் ராசிக்கு விரயாதிபதி 5-க்குடையவர் என்பதால், எந்த செலவு ஏற்பட்டாலும் அது சுபவிரயமாக அமையும். விழாக்காலங்களில் மொய்ப்பணம் வசூ-லிப்பதுபோல!
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் செவ்வாய் நீசமாக இருக்கிறார். அவர் 5, 10-க்குடையவர். அவரை 7, 8-க்குடைய சனி 7-ல் ஆட்சிபெற்றுப் பார்க்கி றார். "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது; பார்த்திட வும் தீது' என்பது ஜோதிட நூலி-ன் கருத்து. இந்த விதி கடகம், மகரம், மேஷம், துலாம் ஆகியவற்றுக்குப் பொருந்தாது. இந்த வரிசையில் விருச்சிகத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது கத்தி காய்கறி நறுக்கவும் பயன்படும். ஆளைக் குத்துவதற்கும் பயன் படும். அதுபோல செவ்வாய், சனி சேர்க்கை எப்போது நல்லது செய்யும்- எப்போது கெடுதலைச் செய்யும் என்பது அதன் தன்மையைப் பொருத்தது. 6, 9-க்குடைய குரு 8-ல் மறைவது ஒருவகை யில் குற்றம். இன்னொருவகையில் யோகம். பாக்கியாதிபதி 8-ல் மறைவது குற்றம். 6-க் குடையவர் 8-ல் மறைவது யோகம். கெட்டவன் கெட்டடில் கிட்டும் ராஜயோகம் என்பதுபோல, கெடுதலி-லும் நல்லது உண்டு; நல்லதிலும் கெடுதல் உண்டு. 11-ல் சூரியன் இருப்பது ஒருவகையில் அனுகூலமாகும். எந்தவொரு காரியத்திற்கும் 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால் அந்தக் காரியம் பழுதின்றி ஜெயமாகும் என்பது ஜோதிடக் கருத்து. 15-ஆம் தேதி மிதுன ராசிக்கு சூரியன் மாறிவிடுவார். (12-ல் மிதுனத்தில் மாறுவார்). அப்போது 2-க்குடையவர் 12-ல் மறைவது ஒருவகையில் குற்றமென்றா லும், பாக்கியாதிபதி குரு பார்ப்பதால் கெடுபலன் மாறி சுபப் பலனாகிவிடும். மேலும் 9-க்குடைய குருவை 10-க்குடைய செவ்வாய் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். இது சஷ்டாஷ்டகப் பார்வை என்றாலும் விபரீத ராஜயோகமாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் பலம்பெறுகிறார். அவருடன் 2, 11-க்குடைய புதன் சம்பந்தம். மேலும் புதனும் சூரியனும் பரிவர்த் தனை. எனவே, சுக்கிரன் 10-ல் இருப்பதாகவும், புதன் 11-ல் இருப்பதாகவும் அர்த்தம். இருவரும் ஆட்சிபலம் பெறுவதாகவும் அர்த்தம். சூரியன் புதனோடு கூடுவதால் பானுபுத யோகமும், புதன் சுக்கிரன் பரிவர்த்தனையாவதால் புதசுக்கிர யோகமும் அமைகி றது. மேலும் சிம்ம ராசியை குரு பார்ப்பதோடு, சுக்கிரனை யும் பார்க்கிறார். எனவே நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கைவிட்டுப் போன தெல்லாம் மீண்டும் கிடைக் கும். "தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரி யம்' என்று விளம்பரம் செய்வதுபோல, உங்களுக்கு எல்லா யோகங்களும் வந்தடை யும். குருவும் சுக்கிரனும் பகை கிரகங்கள் என்றும், பலன் தராது என்றும் சிலர் வாதாட லாம். உண்மையில் அந்தப் பலன்கள் ஏற்புடையதல்ல. ஏனென்றால் குருவின் ராசியான மீனத்தில்தான் சுக்கிரன் உச்ச மடைவார். பகைவன் என்றால் உச்சபலம் எப்படி அடையமுடியும்? அதன் தத்துவம் என்னவென்றால், சுக்கிரன்- அசுர குரு; குரு- தேவகுரு. வாதியின் வக்கீலும் பிரதிவாதியின் வக்கீலும் காரசாரமாக வாதாடுவார்களே தவிர, நீதிமன்றத்திற்கு வெளியே இருவரும் சேர்ந்து போவார்கள். அது மாதிரிதான் குரு, சுக்கிரனுடைய உறவு. அனுபவரீதியாக வியாழக்கிழமை சுக்கிர ஹோரையும், வெள்ளிக்கிழமை குரு ஹோரையும் நல்ல பலனைத் தரும்; தந்திருக்கிறது.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசி நாதன் புதன் 9-ல் திரிகோணம். அத்துடன் புதன் 10-க்குடையவருமாவார். புதனும் சுக்கிரனும் தர்மகர்மாதிபதியோகப் பரிவர்த்தனை. அந்தச் சுக்கிரனை குரு பார்க்கிறார். சுக்கிரன் நின்ற வீட்டுக்கு 10-க்குடைய குரு 9-ல் நின்று சுக்கிரனைப் பார்ப்பது ஒரு யோகம். சுக்கிர தசையில் குரு புக்தி நடப்பவர்களுக்கு இக்காலம் நற்காலம். இந்தமாதிரி கிரக சம்பந்தத்தால் நடைபெறும் யோகங்கள்தான் எதிர்பாராத விபரீத ராஜயோகம் எனப்படும். கடந்த தேர்தலி-ல் அ.தி.மு.க-வைத் தோற்கடித்து தி.மு.க-வை மக்கள் வெற்றிபெறச் செய்தார் கள். அதனால் முந்தைய அரசு நல்ல அரசாக விளங்கவில்லையென்று அர்த்தமல்ல. தினசரி இட்லி-யும் தோசையுமாகச் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து, மாறுதலான உணவாக ஆப்பம், புட்டு, இடியாப்பம் என்று மாறு பட்ட ருசியைத் தேடுவதற்கு சமம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று அர்த்தம். இந்த மாறுபட்ட சுவை நன்றாக இருந்தா லும், பின்னாளில் மக்களுக்கு அதுவும் அலுத்துப் போகலாம். அதுபோல கிரகங்கள் எப்போதும் தீமை தருவன என்று எண்ணக் கூடாது. அதனால்தான் திருஞானசம்பந்தர் நவகோள்களையும், "ஆசறு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல' என்று கோளறு பதிகத்தில் பாடினார். எந்த ஒரு கிரகமும் எந்த ஒரு ராசிக்கும் தனித்த நல்லவராகவோ தனித்த கெட்டவராகவோ பலன் செய்யாது. கெட்ட கிரகம் நல்லதும் செய்யும். நல்ல கிரகம் கெட்டதும் செய்யும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம் ஏறுவதோடு அந்த வீட்டுக் குடைய புதனோடு பரிவர்த்தனை. புதனுடன் 11-க்குடைய சூரியன் சேர்க்கை. சுக்கிரனுக்கு 5-க்குடைய குரு பார்வை. 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பது ஒருவகையில் எதிர் பாராத விரயங்களையும் ஏமாற்றங்களை யும் ஏற்படுத்தினாலும், புதன், சுக்கிரன் பரிவர்த் தனை யோகத்தால் ஏமாற்றமும் தடையும் ஒருவகையில் நன்மையாக முடியும். ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ரஷ்யாவுக்குப் பயணம் போனார். ஒரு ஊரில் இருந்து ரஷ்யாவுக்கு வேறொரு விமானத்தில் போகவேண்டும். அந்த விமானம் புறப்படும் நேரத்தை கலைவாணர் தவறவிட்டுவிட்டார். அடுத்த விமானத்திற்காக அந்த ஊர் விமான நிலையத்தில் கலைவாணரும் இயக்குநரும் காத்திருந்தார்களாம். சிறிது நேரத்தில் புறப் பட்டுப்போன விமானம் விபத்துக்குள்ளா னது. இயக்குனர், "நல்லவேளை; நாம் உயிர் பிழைத்தோம்' என்று கூறினாராம். அதற்குக் கலைவாணர், "நான் போயிருந்தால் அந்த விமானம் விபத்துக்கு ஆளாகியிருக்காது' என்றாராம். அதுபோல, சிலநேரம் ஏமாற்றமும் விரயமும் நன்மைக்கத்தான் அமையும். துலா ராசிக்கு 10-ல் உள்ள நீச செவ்வாயை 4-ல் உள்ள ஆட்சிபெற்ற சனி பார்க்கிறார். ஏற்கெனவே குறிப்பிட்டபடி செவ்வாய், சனி பார்வை உங்களுக்குப் பாதகம் செய்யாது. சாதகமாகவே அமையும். 6-க்குடைய குருவும், 7-க்குடைய செவ்வாயும் சஷ்டாஷ்டகமாக இருந்தாலும், செவ்வாய், குருவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகும். தேக ஆரோக்கியத்தில் வைத்தியச் செலவுகள் வந்து விலகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் நீசராசியில் இருந்தாலும், செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனி பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். பொதுவாக கேந்திர திரிகோணங்களில் இருக்கும் கிரகங்களுக்கு நீசம்போன்ற கெடுபலன்கள் விதிவிலக்காகும். இது அனுபவ ஜோதிட ஆராய்ச்சியாகும். என்றாலும் ஜென்ம கேது- சப்தம ராகு உங்கள் காரியங்களில் தேக்கத்தை உருவாக்கலாம். அல்லது தடை தாமதங்களை ஏற்படுத்தலாம். என்றாலும் ராசிநாதன் செவ்வாய் நீசபங்க ராஜயோகம் பெற்று குருவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. குருவை செவ்வாய் பார்ப்பதால் செவ்வாய்க்கும் குருவுக்கும் சம்பந்தம் ஏற்படுகிறது. அதன்மூலமாக செவ்வாய், சனி பார்வைக்கும் தோஷம் விலகுகிறது. 7-ல் சூரியன், புதன் சேர்க்கை. அது 10, 11-க்குடையவர் சேர்க்கை என்பதால், உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றியும் லாபமும் அனுகூலமும் உண்டாகும். அதேசமயம் 7, 8-க்குடைய சுக்கிரன், புதன் பரிவர்த்தனையாலும், ராகு- கேது சேர்க்கையாலும் சிலகாரியங்களை எளிதாக வெற்றிகொள்ளமுடியும். சில காரியங்களை கடின முயற்சியோடு சாதிக்கவேண்டும். மாம்பழத்தை அப்படியே சாப்பிடலாம். வாழைப்பழத்தை தோலை உரித்துச் சாப்பிடவேண்டும். பலாப்பழத்தை கடின முயற்சிசெய்து சுளை எடுத்துச் சாப்பிடவேண்டும். இதுபோல உங்ளுடைய காரியங்கள் எளிமை, கடுமை, பெரும் முயற்சியாக அமையும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந்தா லும் அவர் 4-க்குடைய கேந்திராதிபதியாவார். அவரை 5-க்குடைய திரிகோணாதிபதி செவ்வாய் பார்க்கிறார். கேந்திரம், திரிகோணம் சம்பந்தம் ஏற்படுவதால், உங்கள் முயற்சிகளிலும் செயல்பாடுகளி லும் காரியங்களிலும் குருவரு ளும் திருவருளும் நிரம்பப்பெறுவதால் எண்ணியதுபோல் எல்லாம் நிறைவேறும். மனிதன் நினைக்கிறான்; இறைவன் முடிக்கி றான். ராசிநாதன் குரு 6, 11-க்குடைய சுக்கிரனைப் பார்ப்பதால் சில முயற்சிகள் எளிதாக நிறைவேறும். சில முயற்சிகள் கடினமான செயல்பாட்டுக்குப்பிறகு நிறைவேறும். ஒரு மனிதனின் வெற்றிக்குபின் ஒரு பெண் அமைகிறாள் என்பார்கள். அது தாயாக இருக்கலாம். தாரமாக இருக்கலாம். சகோதரியாகவும் இருக்கலாம். அருணகிரி நாதரின் வாழ்க்கைத் திருப்பத்திற்கு அவரது சகோதரியே காரணமாக அமைந்தார். 7-ல் உள்ள சுக்கிரன் களஸ்திர தோஷத்தை ஏற்படுத்தினாலும் (காரகன்- பாவகத்தில் இருப்பது தோஷம்) ராசிநாதன் குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. அதேபோல சனி, செவ்வாய் பார்வை தாரதோஷம், மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தினாலும் அதுவும் நிவர்த்தியாகிறது. அதாவது நீச செவ்வாயை ஆட்சிபெற்ற சனி பார்ப்பதாலும், கும்ப குருவை கடகச் செவ்வாய் பார்ப்பதாலும் செவ்வாய், சனி, குரு சம்பந்தம் ஏற்படுகிறது. அதனால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். அவரை கடகத்தில் நீசம்பெற்ற செவ்வாய் பார்க்கிறார். "மந்தன் சேய் இருவரும் பார்த்திடவும் தீது; சேர்ந்திடவும் தீது' என்பது தேவகேரளீய ஜோதிடநூல் விதி. ஆனால் இந்த விதி கடகம், மகரத்திற்குப் பொருந்தாது. (மகரத்திற்கு செவ்வாய் உச்ச ராசிநாதன்). 3, 12-க்குடைய குரு 2-ல் இருப்பதும், அவரை செவ்வாய் பார்ப்பதும் ஒருவகையில் நல்லதல்ல. அதன்பலன் பிள்ளைகள் அல்லது உடன்பிறப்புகள் வகையில் பிரச்சினைகளை சந்திக்கநேரும். அதாவது குரு புத்திரகாரகன்; செவ்வாய் சகோதரகாரகன். இவர்களின் பார்வை அவர்களது காரகத்துவத்தை பாதிக்கும். அப்படி இல்லாவிட்டால் செவ்வாய் 4-க்குடையவர் பூமிகாரகன்- பூமி, வீடு, இடம் சம்பந்தமான சிக்கல்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரும். இருந்தாலும் சனி ராசிநாதன் என்பதாலும், செவ்வாய் மகர ராசிக்கு உச்சநாதன் என்பதாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல பிரச்சினைகளை சமாளித்துவிடலாம். 12-க்குடைய குரு 2-ல் இருப்பதால் வரவேண்டிய பணம் வந்துசேரும். சிலருக்கு வராது என்று நினைத்த பணம்கூட வந்துசேரும். அப்படிப் பெருந்தொகை வரவேண்டியதிருந்தால், அவினாசியப்பரை சென்று வழிபட்டால் பணம் வந்துசேரும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசியில் குரு பலம்பெறுகி றார். அவரை கடகத்தில் நீசபங்கம் பெற்ற செவ்வாய் பார்க்கிறார். கும்ப ராசிக்கு செவ்வாய் 3, 10-க்குடையவர்- 6-ல் மறைவு. உடன்பிறந்தவர்கள் வகையிலும் அல்லது தொழில்ரீதியாகவும் சிலருக்கு கடன்கள் பெருஞ்சுமையாக அமையும். என்றாலும் கேடு கெடுதிக்கு இடமில்லை. குருவை செவ்வாய் பார்ப்பதால்- ராசியையும் பார்ப்பதால் கேடு கெடுதிக்கு இடமில்லை. 10-ல் கேது, 4-ல் ராகு சம்பந்தம். சிலருக்கு தேகசுகக் குறைவும், சிலருக்கு தொழில் பாதிப்பும் உண்டாகலாம். அதேசமயம் ராகுவுக்கு வீடுகொடுத்த சுக்கிரனை குரு பார்ப்பதாலும், கேதுவுக்கு வீடுகொடுத்த செவ்வாய், குருவைப் பார்ப்பதாலும் செவ்வாய், குரு சம்பந்தம் ஏற்படுகிறது. கும்ப ராசியில் குரு இருப்பதால் உங்கள் ஆற்றல், செயல் எல்லாம் போற்றுதலுக்குரியதாக அமையும். குரு இருந்த வீடும் குரு பார்த்த வீடும் பெருமைக்குரியதாகும். பொதுவாக செவ்வாய், சனி பார்வை கெடுதல் எனச் சொல்லப்பட்டாலும் (கடகச் செவ்வாய், மகரச் சனி பார்வை) நன்மையே தரும். ஏனென்றால் மகர ராசியின் உச்ச ராசிநாதன் செவ்வாய். அதேபோல செவ்வாயின் மேஷ ராசி- சனியின் நீச ராசியாகும். மின் இணைப்புக்கு பாஸிட்டிவ்- நெகட்டிவ் இரண்டும் தேவை என்பதுபோல, இந்தப் பலனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி அவருக்கும் 12-ல் மறைவு. சனிக்கு 12-க்குடைய குரு ராசிக்கு 12-ல். இந்த கிரக சம்பந்தத்தை விபரீத ராஜயோகம் எனச் சொல்லலாம். நீசபங்க ராஜயோகம் என்பது வேறு. விபரீத ராஜயோகம் என்பது வேறு. அந்தக் காலத்தில் ஒரு பத்திரிகையில் துப்பறியும் சாம்பு என்ற கதாபாத்திரம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் செய்யும் காரியங்கள் யாவும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி அவருக்குப் புகழைத் தேடித்தரும். அதுபோல நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறிந்து செய்தாலும் சரி; அறியாமல் செய்தாலும் சரி- உங்களுக்கு அருமை பெருமைகளைச் சேர்த்துவிடும். இதைத்தான் "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை' என்பார்கள். ராசிநாதன் 12-ல் மறைவதால் சிலசமயம் எதிர்பாராத விரயங்களும் உங்களுக்கு லாபகரமாக மாறிவிடும். ஒரு உண்மை நிகழ்வு. சிங்கப்பூரிலி-ருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ஒரு வியாபாரி அளவுக்கு மீறிய தங்க நகைகளைக் கொண்டு வந்தார். கஸ்டம்ஸில் பிடிபடாமலி-ருக்க உடன்வந்த பயணியின் குடும்பத்தாரிடம் அந்த நகைகளைப் பகிர்ந்து கொடுத்து அணிந்து வரச் சொன்னார். சோதனை முடிந்தபிறகு அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதற்குப் பிரதி உபகாரமாக அவர்களுக்கு சில தங்க அணிகலன்களைக் கொடுத்துவிட்டார். இதுதான் எதிர்பாராத அதிர்ஷ்டம் அல்லது விபரீத ராஜயோகம்.