ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 3, 4, விசாகம்- 1.
செவ்வாய்: ரேவதி- 4 (வ).
புதன்: சித்திரை- 2, 3.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: அஸ்தம்- 1, 2, 3.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 2, 1.
கேது: கேட்டை- 4, 3.
கிரக மாற்றம்:
செவ்வாய் (வக்ரம்).
4-11-2020- துலா புதன்.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
2-11-2020- ரிஷபம்.
4-11-2020- மிதுனம்.
6-11-2020- கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் வக்ரமாக இருக்கிறார். அதனால் தவிர்க்கமுடியாத செலவுகளும் பயணங் களும் உண்டாகும். சிலருக்குக் குடியிருப்பு மாற்றங்களும், சிலருக்கு வேலை அல்லது உத்தியோகத்தில் மாற்றங்களும் ஏற்படலாம். சிலர் உள்ளூரில் சொந்தத் தொழில் செய்வ தோடு, வெளியூரில் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது உள்ளூரில் வேறு கிளைகள் தொடங்கலாம். சொந்த ஊரைவிட்டு, மனைவி, மக்கள், குடும்பத்தைவிட்டுவிலகி தொலைவில் வேலை பார்க்கிறவர்களுக்கு ஊர்மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படலாம். ஓட்டல் சாப்பாடு அல்லது கம்பெனி சாப்பாடு அல்லது மெஸ் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப்போனவர்கள் இனிமேல் சொந்த வீட்டுச் சாப்பாடு- அம்மா அல்லது மனைவி கைச் சாப்பாடு வாய்க்கு ருசியாக சாப்பிடும் யோகமுண்டாகும். சொந்தத் தொழில் ஆரம்பிக்க திட்டமிடுகிறவர்கள் ஹோட்டல், மெஸ், உணவு விடுதி, மாலைநேர டிபன் சென்டர் போன்றவற்றைத் தொடங்கலாம். அல்லது கட்டட ஒப்பந்தம் போன்ற தொழில் அல்லது அது சம்பந்தமான சிமென்ட், ராடு, கம்பி, செங்கல் போன்ற தொழில் தொடங்கலாம். அல்லது பூமி, வீடு, தரகு, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்துறையில் செயல்படலாம்.
பரிகாரம்: பொன்னமராவதி வழி செவலூரி லுள்ள பூமிநாதசுவாமியை வழிபடலாம். திருச்சி, திருச்சுழியிலும் பூமிநாதர் கோவில் உள்ளது.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் கன்னியில் (5-ல்) நீசம். எனினும், அவருக்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சிபலம் பெறுவதால், சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. ஒரு கிரகம் நீசமடைந்தால் அதன் ஆதிபத்தியப் பலன் கெடலாம் அல்லது அதன் காரகத்துவப் பலன் கெடலாம். இங்கு சுக்கிரன் களஸ்திர காரகன் என்பதோடு 1, 6-க்குரியவன் என்பதால், மனைவி அல்லது கணவரின் உறவு நிலையில் வருத்தங்கள் உண்டாகலாம் அல்லது பிரிவு, பிளவு ஏற்படலாம். ஜாதக ரீதியாக நல்ல தசாபுக்தி நடந்தால், அந்தப் பிரிவு உத்தியோகம் அல்லது வேலை, படிப்பு போன்றவகையில் சுபப் பிரிவாக ஏற்படலாம். 6, 8, 12-க்குரிய தசாபுக்தி நடந்தால் பகை, வருத்தம் காரணமாக பிரிவு, பிளவு ஏற்படலாம். அதேசமயம் சுக்கிரன் ராசிநாதன் என்பதால் பிரிவும் இடைவெளியும் அன்பையும் பாசத்தையும் வளர்க்கும். பேரறிஞர் பெர்னாட்ஷா "கணவன்- மனைவியிடையே அன்பும் பாசமும் பரிவும் வளரவேண்டுமென்றால், கணவனும் மனைவியும் சிறிதுகாலம் விலகியிருக்க வேண்டும் அல்லது விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றார். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (பூட்டு)? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
பரிகாரம்: நாமக்கல் அருகில் மோகனூர் எனும் ஊரில் சம்மோஹன கிருஷ்ணர் கோவில் உள்ளது. அங்கு சென்று வழிபட் டால் கணவன்- மனைவிக்குள் பாசமும் பற்றும் நெருக்கமும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி. அவருடன் 5-க்குரிய சுக்கிரன் சம்பந்தம். கன்னியில் சுக்கிரன் நீசம். எனினும், வீடு கொடுத்த புதன் ஆட்சியென்பதால் சுக்கிரன் நீசபங்க ராஜயோகமடைவார். ஒரு கிரகம் நீசமடைந்தால், அவரது ஆதிபத்தியமும் கெடும்; காரகத்துவமும் கெடும். இங்கு சுக்கிரன் 5, 12-க்குரியவர்- களஸ்திர காரகன். எனவே, குடும்பச் சூழ்நிலையில் மனைவி- கணவன் உறவில் விரிசல் ஏற்படலாம் அல்லது கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். ஆனா லும், புதன்- சுக்கிரன் சேர்க்கையால் பிரிவு, பிளவு ஏற்பட இட மில்லை. ரிஷப ராசியில் எழுதியமாதிரி, கணவன்- மனைவிக்குள் பாசமும் பரிவும் பெருக தம்பதிகள் இடைவெளிவிட்டு விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். பிசிராந்தையார் என்ற புலவரும், சோழ மன்னர் ஒருவரும் ஒருவரை யொருவர் பார்க்கா மலேயே நட்புகொண்டாடினார்கள். பிசிராந் தையார் அந்திமக் காலத்தில் வடக்கிருந்து உயிர்விட நினைத்தார். அதாவது, சாப்பாடு, தண்ணீர் அருந்தாமல் விரதக் கட்டுப்பாடாக இருந்து, உயிர் மாள்வது "வடக்கிருத்தல்' என அர்த்தம். சோழன் இதைக் கேள்விப்பட்டு, அவரைக் காண வந்து, கண்டு அளவளாவிய தோடு, அவரோடு தானும் உயிர் நீத்தான் என்பது வரலாறு. கோவலன் குற்றமற்றவன் என்று தெரிந்த பாண்டிய மன்னன் "யானே கள்வன்' என்று உயிர் நீத்தான். அவன் மனைவி பாண்டிமா தேவியும் அப்போதே உயிர் நீத்தாள். இவை உண்மையான அன்புக்கு உதாரணங்கள்.
பரிகாரம்: திருவெற்றியூர் எனும் ஊரிலுள்ள (திருவாடானை வழி) பாகம்பிரியாள் கோவிலுக் குச் சென்று வழிபடவும். சுவாமி வன்மீகநாதர்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிநாதன் சந்திரன் வாரத் தொடக்கத்தில் ரிஷபத்தில் உச்சம். கடக ராசியை தாண்டும்வரை சந்திரன் "ஆரோகண' கதியாகும். பிறகு, "அவரோகண' கதியாகும். அதாவது, சந்திரன் விருச்சிக ராசிக்கு வரும்வரை- அங்கு நீசமாக இருக்கும் வரை அவரோகண கதி. (சந்திரன் தனுசுக்கு மாறும்வரை). அதாவது, ஒரு கிரகம் உச்ச வீட்டை நோக்கிப் போகும்வரை ஆரோகண கதி- உச்ச ராசியை தாண்டி நீச ராசிக்குப் போகும்வரை அவரோ கண கதி. தசாபுக்திப் பலனை நிர்ணயிக்கும்போது ஆரோகண கதி, அவரோகண கதியைக் கணித்துப் பலன் நிர்ணயிக்கவேண்டும். அதேபோல், ஒரு கிரகம் நீசமெனில், முதலில் அதன் காரகத்துவம் கெடும். அடுத்து, அந்த வீட்டுப் (பாவகம்) பலன் கெடும். நீசபங்கம் பெற்றால் காரகத்துவமும் ஆதிபத்தியமும் முதலில் கெட்டு, பிறகு நல்லது நடக்கும். உதாரணமாக, விளையாட்டுப் போட்டியில் முதல் சுற்று தோல்வியடைந்து, இரண்டாம் சுற்றில் வெற்றிபெறுவதற்குச் சமம். கடக ராசிக்கு 5-ல் கேது இருப்பது மனசஞ்சலம், குழப்பங்களை ஏற்படுத்தினாலும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் அதற்குத் திரிகோணமாக (மீனத்தில்) இருப்பதால் (அதாவது 5-க்கு 5-ல்), உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழுமையாக வெற்றியடையும். 6-ல் குரு, சனி சேர்க்கையால், சிலநேரங்களில் சில காரியங்களில் தாமதப் பலன் ஏற்படலாம்.
பரிகாரம்: கும்பகோணம் வழி திருவிசை நல்லூர் கற்கடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபடலாம். சுவாமியை அம்பாள் நண்டு வடிவில் வழிபட்ட தலம். இரண்டு அம்பாள் சந்நிதி உண்டு. மூலவரின் சிரசில் இந்திரன் வாளால் வெட்டிய தடம் உண்டு.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் துலா ராசியில் நீசம். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரனும் கன்னியில் நீசம். அத்துடன் சுக்கிரனுக்கு வீடுகொடுத்த புதன் அங்கு ஆட்சி. எனவே, சூரியனும் நீசபங்கம்; சுக்கிரனும் நீசபங்கம். மேலும், 5-ல் குரு ஆட்சிபெற்று சிம்ம ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்கக் கோடி நன்மை, கோடிக் குற்றம் விலகும். எனவே, ராசிநாதன் நீசப்பலன் விலகுவதோடு, நீங்கள் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே கைகூடும் என்பது நிச்சயம். குரு 8-க்குரியவருமாவார். அவர் 6-க்குரிய சனியோடு சேர்வதால் விபரீத ராஜயோகமாகும். அதாவது, 7, 6-க்குரிய சனி 5-ல் திரிகோணம் பெற்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதாவது, 7- கேந்திராதிபதி 5-ல் திரிகோணம் பெறுவது ஒரு சிறப்பு. 7- விஷ்ணு ஸ்தானம். 5- லட்சுமி ஸ்தானம். ஈசன் அங்கத்தில் சரிபாதியை மங்கை பார்வதிக்குக் கொடுத்தார். பெருமாள் தன் மார்பில் லட்சுமிக்கு இடம்கொடுத்தார். அதாவது, "இல்லாள்' (மனைவி) அகத்திலிருக்க இல்லாதது ஒன்றுமில்லை. "இல்' எனில் வீடு. அதை ஆள்பவள் இல்லாள். அதேசமயம், "இல்லான்' எனில் எதுவுமே இல்லாதவன் என அர்த்தம். எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்கள்! அதனால்தான் திருமணம், வீட்டு கிரகப் பிரவேசம் போன்றவற்றை மனைவியின் நட்சத்திரம்- ராசிக்குத் தக்கபடி அமைக்கவேண்டுமென சாஸ்திரம் கூறுகிறது.
பரிகாரம்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபடவும். அதேபோல, தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகில் சிந்தாமணி கிராமத்திலும் அர்த்த நாரீஸ்வரர் சந்நிதி உண்டு.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் கன்னியில் ஆட்சிபெறுகிறார். அவருடன் 2, 9-க்குரிய சுக்கிரன் நீச ராசியில் நின்றாலும், புதன் சேர்க்கையால் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். ஒரு கிரகம் நீசமடைந்தால், முதலில் அவருடைய ஆதிபத்தியப் பலன் கெடும். அடுத்து, அவருடைய காரகத்துவப் பலன் கெடும். சிலநேரங்களில் இந்த விதி மாறியும் பலன் தரும். அதாவது, காரகத்துவப் பலன் முதலிலும், ஆதிபத்தியப் பலன் இரண்டா வதாகவும் செயல்படும். அதாவது, ஒரு வட்டத்தில் ஆரம்பமும் முடிவும் ஒன்றுதானே? நீளமான கோட்டில்தான் ஆரம்பமும் முடிவும் வெவ்வேறாக விளங்கும். 9-ல் ராகு- கேது சம்பந்தம் என்பதால், ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், கைரேகை போன்ற வகையில் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டாகும். சிலர் கரகம் எடுத்தல், அருள் வாக்கு- குறிசொல்லுதல், அரிவாள்மீது நின்று பூஜைசெய்தல் போன்ற அமானுஷ்யங் களில் செயல்படலாம். அதற்கு 9-ஆமிடத்து ராகுவும், அவரைப் பார்க்கும் கேதுவும் துணை புரிவார்கள். இஷ்டதெய்வம், குலதெய்வக் கோவில் திருப்பணிகளில் ஈடுபடலாம்.
பரிகாரம்: மூங்கில் அணை காமாட்சியம்மனை வழிபடலாம். (பெரியகுளம் அருகில்). அங்கு விக்ரகம் இல்லை. கதவுக்கே பூஜை நடக்கிறது.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு, நீசம். துலா ராசியில் சூரியன் நீசம். அதனால் சூரியனும் சுக்கிரனும் நீசபங்க ராஜயோகம் அடைவார்கள். எனவே, உங்கள் திறமைக்கும் செயல்பாட்டுக்கும் குறையேதும் வராது. செய்வதையே சொல்வீர்கள். சொல்வதையே செய்வீர்கள். வேறுசிலர் சொல்வதையும் செய்யமாட்டார்கள். செய்ததையும் சொல்லிக் காட்டுவார்கள். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்றார் வள்ளுவர். ஆனால், இன்று கலியுகத்தில் உடனிருந்தே குழிபறிப்பதும், காட்டிக்கொடுத்து துரோகம் புரிவதும்தான் வழக்கமாக உள்ளது. ஆனால், துரோகத்துக்கு துரோகமே பரிசாக அமையும். அதுதான் பாவத்தின் சம்பளம் மரணம். ஏசுநாதரும் மகான் காந்தியும் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? அவர்களுக்கும் விரோதிகள் இருந்தார்களே? அந்நிலையிலும், "துரோகிகள் அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னியுங்கள்' என்றார்கள். அதாவது, பழிக்குப் பழி என்பது மிருகச் செயல். மறப் பது மனிதச் செயல். மன்னிப்பது தெய்வச் செயல். ஆகவே, மனிதன் மிருகமாகவும் ஆகலாம். தெய்வமாகவும் மாறலாம். பைபிளில் ஒரு வாசகம் உண்டு. "எவனொருவன் தன்னை தாழ்த்திக்கொள்கிறானோ அவன் இறை சந்நிதியில் உயர்த்தப்படுகிறான்.'
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருவிசை நல்லூரில் ஸ்ரீதர சுவாமிகள் என்ற மகான் இருந்தார். ஒரு சிரார்த்த நாளில் சாஸ்திரிகள் காவேரியில் நீராடப் போனார். அப்போது ஓர் ஏழைச் சிறுவன் பசியென்று யாசிக்க, சுவாமிகள் படையலிலிருந்த ஒரு பதார்த்தத்தை எடுத்துக்கொடுத்துவிட்டார். குளித்துவிட்டு வந்த சாஸ்திரிகளைப் பார்த்து "அபசாரம் அபசாரம்' என்று, "கங்கைக்குப் போய் நீராடி வந்தால்தான் பாவம் தொலையும்' என்றார் கள். உடனே ஸ்ரீதரவாள் தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை வரவழைத்து ஊரையே வெள்ளக் காடாக்கிவிட்டார். அங்கு சென்று நீராடி வழிபடவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவரை புதனும் சுக்கிரனும் பார்க்கிறார்கள். 10-க்குரிய சூரியன் 12-ல் நீசம். 12-க்குரிய சுக்கிரன் 11-ல் நீசம். இருவரும் நீசபங்கமடைகிறார்கள். சம்பளத் துக்கு வேலையில் இருப்போர் சொந்தத் தொழில் ஆரம்பித்து முதலாளியாகலாம். அல்லது கூட்டுத் தொழிலில் சேரலாம். தனியார் துறையில் பணிபுரிவோர் அரசு வேலையில் அமரலாம். ஏற்கெனவே அரசுப் பணியிலிருப்போர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி போன்ற சாதகமான பலன்களை அடையலாம். அரசுப் பணி தேர்வு எழுதுகிறவர்கள் வெற்றிபெறலாம்- அரசுப் பணியில் சேரலாம். வேண்டாத- விரும்பாத இடத்திலிருந்து வேதனையை அனுபவித்துக்கொண்டு சோதனைக்கு ஆளானோர் வேதனை தீர்ந்து விரும்பிய இடத்துக்கு மாறி சாதனை படைக்கலாம். ஏழரைச்சனியின் பாதிப்பால், தான் ஓரிடம், குடும்பம் வேறிடம் என்று வேதனைப்பட்டோர் எல்லாரும் ஓரிடம் என்று இணைந்து இன்பம் அடையலாம். பொருளாதாரத்தில் நிலவும் நெருக்கடியைப் போக்கி, வீண்விரயச் செலவுகளை விரட்டியடித்து, சிக்கனம், சீரமைப்பு என்கிற முறையில் சேமிக்கலாம். பழைய கடன்களை அடைத்து நிம்மதிபெறலாம்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் (குடவாசல் பாதை) திருச்சேறை சென்று சார பரமேஸ்வரரை வழிபட்டுக் கடன் நிவர்த்தியடையலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடந்தாலும் குரு வீட்டில் குருவோடு கூடியிருப்பதால், உங்களுக்கு பொங்குசனி தான். அது எந்தச் சுற்றாக இருந்தாலும் பரவாயில்லை. முதல் சுற்று ஏழரைச்சனி மங்குசனி எனவும், இரண்டாம் சுற்று ஏழரைச்சனி பொங்குசனி எனவும், மூன்றாம் சுற்று ஏழரைச்சனி மரணச்சனி எனவும் பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால், இதற்கு முக்கியத்துவமில்லை; பயப்படவும் தேவையில்லை. 90 வயதுடையவர்கள் மூன்று சுற்று சனியையும் சந்தித்தவர்கள்தான். இவையெல்லாம் புலவர்களின் பொய்யான வர்ணனை என்பதுபோல மிகுதியாகச் சொல்லப்பட்டவை. சனி என்பவர் கர்ம காரகன். அவரவர் கர்மவினைக்கேற்ப பலனைத் தருகிறவர். நல்லது செய்வோருக்கு நல்லதே நடக்கும். கெட்டது செய்வோர் கெட்டதையே அடைவர். பகை காரணமாக ஒருவரை வேறொருவர் பழிதீரக் கொன்றால் அது கொலை- குற்றம்- தண்டிக்கப் படவேண்டும். குற்றம் புரிந்து தூக்குத் தண்டனை பெற்ற ஒரு கைதியை அரசு ஊழியர் தூக்கிலேற்றினால் அது சட்டம்; குற்றமாகாது. போரில் எதிரிகளை தாய்நாட்டுக்காக ஒரு வீரன் கொன்றுகுவித்தால் அது யுத்த தர்மம். தாய்நாட்டுக்கு விசுவாசம். ஆக, தர்மமும் சட்டமும் வேலை செய்கிறது பாருங்கள்.
பரிகாரம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை வழிபடவும். உக்ரவன், அண்டா பரணன் என்ற இரு அசுரர்கள், சிவபூஜை தவறிய ஆயிரம் சிவபூஜகர்களை சிறைப் பிடித்து யாகத்தில் பலிகொடுத்து, அஷ்டமா சித்திகளைப் பெற விழைந்தபோது, அவர்களை முருகன் வதம்செய்த இடம் திருப்பரங்குன்றம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. ஆனால், அவர் குரு வீட்டில் குருவோடு சேர்ந்தமையால் மறைவு தோஷமில்லை. யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்குதல் என்பது ஒரு தர்மம். இதை "கொரில்லா போர்' என்பார்கள். முதுகில் குத்துவது தவறு. நேருக்கு நேர் யுத்தம் செய்வதுபோல, மறைந்து தாக்குவதும் ஒரு யுத்தம். ஸ்ரீராமபிரான் வாலியை வதம்செய்தது இந்த தர்மத்தின்படிதான்- மறைந்திருந்து தாக்கினார். 63 நாயன்மார்களுள் ஒரு நாயன்மார் தீவிர சிவபக்தர். அவரை எவரும் வெல்லமுடியவில்லை. முத்தநாதன் என்ற பகையாளி சிவவேடமிட்டு அரசனை நெருங்கி வாளால் குத்திவிட்டான். வீரர்கள் வந்து அவனைப் பிடித்ததும், அரசன் , "சிவ வேடமிட்டு வந்தவருக்கு தண்டனை கொடாமல் விட்டுவிடுங்கள்' என்று கட்டளை யிட்டான். ஆக, அரசன் முத்தநாதனை விரோதி என்று கருதவில்லை. சிவன் கையால் முக்தி பெற்ற தாக ஏற்றுக்கொண்டான். அதேபோல், சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் தன் இறப்புக் காரணமானவர்களை "மன்னித்து விடுங்கள்- அவர்கள் அறியாமல் தவறுசெய்து விட்ட அப்பாவிகள்' என்றார். மகாத்மா காந்தியும் தன்னைச் சுட்ட "கோட்சேவை மன்னித்து விடுங்கள்' என்றார். மரணத்தின் வாசலில் அவர் சொன்ன தாரக மந்திரம் "ஹேராம் ஹேராம்' என்பதுதான். (அதனால் இந்திய ரூபாய்த் தாளில் அவர் படம் அச்சிடப் பட்டுள்ளது.)
பரிகாரம்: காளஹஸ்தி சென்று வேடன் கண்ணப்பன் வழிபட்ட காளத்தியப்பரை வழிபடவேண்டும். சிவனின் ரத்தம் சிந்திய கண்களுக்காக தன் கண்களையே கொடுத்தார்
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று தன் ராசியைப் பார்ப்பது ஒரு சிறப்பு. அத்துடன் 11-க்குரிய குருவோடு கூடியதும் இன்னொரு சிறப்பு. எனவே, உங்கள் செயல்களும் முயற்சி களும் நூற்றுக்கு நூறு வெற்றிபெறும் என்பது நிச்சயம். (99 விழுக்காடு என்பதுகூட இல்லை). 4-ல் ராகு. 10-ல் கேது. இந்த இரண்டு இடங்களும் கேந்திர ஸ்தானங்கள். ராகுவும் கேதுவும் பாவ கிரகங்கள். கேந்திரத்தில் பாவ கிரகங்களும், திரிகோணத்தில் சுபகிரகங்களும் பலம்பெற்றவர்களாவர். மேலும், ராசிநாதனே ராசியைப் பார்ப்பதும் வெகுசிறப்பு. எனவே, நீங்கள் கருதியது கைகூடும். நினைத்தது நிறைவேறும். தொட்டது துலங்கும். எண்ணியது ஈடேறும். மேலும், கும்ப ராசிக்கு 10-க்குரிய செவ்வாய் 9-ஆமிடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். இதன் ரகசியம், குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உள்ளது. இந்த இருவருளும் இருந்தால் போதும்- வாழ்க்கை யில் குறைவில்லாப் பெருவருள் பெருகும். 11-ஆமிடம் என்பது ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம். அங்கு ராசிநாதன் சனியும், அவருக்கு வீடுகொடுத்த குருவும் கூடியிருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பு மாதிரி- வெற்றியின் அறிகுறி. அதற்கு மேல்முறையீடு இல்லை.
பரிகாரம்: திருக்கடையூர் அருகில் அனந்த மங்கலம் எனும் ஊரில் திரிநேத்ர தசபுஜ ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. அங்கு சென்று வழிபடவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறுகிறார். இதை "திக்பலம்' என்பார்கள். அவருடன் சனியும் சம்பந்தம். அதனால் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணம் எனச் சொல்லலாம். மனிதன் நினைக்கிறான்- இறைவன் நிறைவேற்றுகிறான் என்பது இதுதான். 6-க்குரிய சூரியன் 8-ல் மறைவு, நீசம் என்பதால், எதிரிகள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் மாய்த்துக்கொள்வதால் வெற்றி உங்களுக்கு மிகமிக எளிதாகிவிடும். ஆங்கிலேயர் காலத்தில் எதிரி ராஜாக்களைப் பிரித்தாளும் தந்திரத்தால் பகையை உருவாக்கி, தமக்குள் சண்டைபோடச் செய்து, ஆங்கிலேயர்கள் இரு ராஜ்ஜியங்களையும் கைப்பற்றிக்கொண்டதாக சரித்திரம் பேசும். பள்ளிப் பாடத்தில், ஒற்றுமை யாக இருந்த நான்கு மாடுகளை ஒரு நரி தந்திரமாகப் பகையாக்கிப் பிரித்து, ஒவ்வொரு மாடாக அடித்து உணவாக்கிக்கொண்டதாகப் பாடம் படித்தோமே- அதுமாதிரி, எதிரிகள் உதிரி களாகிவிட்டால் எளிதாக வெற்றி யடையலாம் அல்லவா? இதுதான் சகுனியின் ராஜதந்திரம். அந்த தந்திரத்துக்குத் துணைபோனது துரோகி களின் வஞ்சகச் செயல். அதாவது, வேலியே பயிரை மேய்ந்தமாதிரி. ஆனாலும், துரோகம் என்றும் நிலைக்காது. துரோகம்- துரோகத் தாலேயே தோற்கடிக்கப்படும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருபுவனம் சென்று சரபேஸ்வரரை வழிபடவும். காரைக்குடி சிவன் கோவிலிலும் சரபேஸ்வரர் சந்நிதி உண்டு. அங்கு சென்றும் வழிபடலாம்.