ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

4-6-2018- கும்பம்.

7-6-2018- மீனம்.

9-6-2018- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 3, 4, மிருகசீரிடம்- 1.

செவ்வாய்: திருவோணம்- 2, 3.

புதன்: மிருகசீரிடம்- 1, 2, 3, 4, திருவாதிரை- 1.

குரு: விசாகம்- 2, 1.

சுக்கிரன்: புனர்பூசம்- 1, 2, 3, 4.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

5-6-2018 மிதுன புதன்.

9-6-2018 கடக சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 10-ல் உச்சம்! பதவி, தொழில், வாழ்க்கை, உத்தியோகம் எதிலும் பிரச்சினைக்கு இடமில்லை. செவ்வாய் கேதுவுடன் கூடி ராகு பார்வையைப் பெறுவதால் சிலசில குறுக்கீடுகளும் தடைகளும் சிலசமயம் ஏற்பட்டாலும், சுக்கிரனும் பார்ப்பதால் அவை சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். மேலும் செவ்வாய்க்கு வீடு கொடுத்த 10-க்குடைய சனி 9-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால் தடைகளை உடைத்து முன்னேறலாம். தவிரவும் பாக்கியாதிபதி குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் உங்களுக்கு சத்து ஊசி போட்டதற்குச் சமம்! பூஸ்ட்! 4-ல் உள்ள ராகு ஒருசிலருக்கு தேக ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தினாலும் பாதிப்புக்கு இடமில்லை. பனிக்காலம், குளிர்காலம், மழைக்காலம், வெயில் காலங்களில் ஏற்படும் தொல்லைகள்போல அவ்வப்போது ஏற்பட்டு விலகிவிடும். மேஜர் ட்ரீட்மென்டுக்கு இடமில்லை. கைப்பக்குவத்தால்- பாட்டி வைத்தியத்தால் குணமாகிவிடும். சிலருக்கு பூமி, இடத்துப் பிரச்சினையோ வாகனம் சம்பந்தமான செலவுகளோ வரலாம். தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் அவற்றையும் எளிதாக சமாளிக்கலாம். 7-ல் உள்ள குரு திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகத்தை வழங்குவார். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியத்தை வழங்குவார்.

Advertisment

பரிகாரம்: வீடு, பூமி, சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதர்- ஆரணவல்லியம்மனை வழிபடலாம். அது வாஸ்துக் கோவில். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863. ஆரோக்கியம் தெளிவாக தன்வந்திரி பகவானை வழிபடலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ganeshரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் சந்திரன் வீட்டில் நட்பு. சந்திரன் ரிஷப ராசியில்தான் உச்சம் பெறுவார். எனவே ரிஷப ராசிக்கு இப்போது அட்டமச்சனி நடப்பதால்- சுக்கிரன் சஞ்சாரத்தால் அது உங்களை பாதிக்காது. பொதுவாக ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் சனி பகவான் ராஜயோகாதிபதியாவார். அதாவது எந்த ஒரு கிரகம் ஒரு ராசிக்கு திரிகோணாதிபத்தியமும், கேந்திராதிபத்தியமும் பெறுகிறாரோ அந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாவார். அந்த விதிப்படி ரிஷபத்துக்கு சனி 9, 10-க்குடையவர்; துலாத்துக்கு 4, 5-க்குடையவர். 5-ம், 9-ம் திரிகோணம். 4-ம், 10-ம் கேந்திரம். கலைஞர் ரிஷப ராசி- 30 ஆண்டுகளுக்கு முன்பு ரிஷப ராசிக்கு எட்டில் சனி வந்தபோதுதான் (அட்டமச்சனியில்) அவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல்வர் பதவியேற்றார். அட்டமச்சனி முடிந்ததும் பதவியும் முடிந்தது. தற்போது அவருக்கு அட்டமச்சனி செயலிழக்கச் செய்தாலும் ஆயுளைக் காப்பாற்றுகிறது. எனவே ரிஷப ராசிக்காரர்கள் அட்டமச்சனியைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சிலர் வேலை தேடி வெளியூர் அல்லது வெளிநாடு போகலாம். கூட்டுக்குடும்பத்தில் வாட்டி வதைக்கப்பட்டவர்கள் தனிக்குடித்தனம் போய் இனிதாக வாழலாம். அடிமை வேலையில் கடுமையாக உழைத்தும் பயனற்றவர்கள் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். வாடகை வீட்டில் வதங்கியவர்கள் சொந்த வீடு அல்லது ஒத்தி வீடு மாறலாம். ஏதோ ஒரு வகையில் இடப்பெயர்ச்சி ஏற்படலாம்.

பரிகாரம்: சனியின் உபாதை விலக அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அந்த எண்ணிக்கை மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி தீபமேற்றவும்- அட்டமச்சனி முடியும்வரை. அத்துடன் கும்பகோணம் அருகில் திருவிசைநல்லூர் சிவன் கோவிலில் சதுர்யுக பைரவர் சந்நிதி சென்றும் வழிபடலாம். சனியின் குருநாதர் பைரவர்.

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். ராகு சாரம் பெறுகிறார். ராகு 2-ல் இருக்கிறார். வாக்கு, வித்தை, தனம், குடும்பம் என்னும் 2-ஆம் வீட்டுப்பலன் அமோகமாக இருக்கிறது. ராகுவோடு மிதுன ராசியின் யோகாதிபதியான சுக்கிரனும் சம்பந்தம். ராசிக்கு குரு பார்வையும் கிடைக்கிறது. சனியின் பார்வையும் கிடைக்கிறது. 8, 9-க்குடைய சனி 7-ல் இருக்கிறார். ஹைவேஸ் ரோட்டில் பழுதுபார்க்கும்போது ஒரேவழியில் போக்குவரத்து செயல்படுவதுபோல சில தடைகளும் குறுக்கீடுகளும் காணப்பட்டாலும் தடைக்கு இடமில்லை. சில காரியங்கள் நினைத்ததுபோல உடனுக்குடன் நிறைவேறிவிடும். சில காரியங்கள் தாமதமாக நிறைவேறும். போக்குவரத்து ஸ்தம்பிதம் ஆனதால் வண்டிகள் வேகக்குறைவாக இயங்குவதுபோல! திருமணத்தடை விலகும். நல்ல கணவன்- நல்ல மனைவி யோகம் உண்டு. அதேபோல ஆண் குழந்தை யோகமும் பெண் குழந்தை யோகமும் உண்டாகும். 10-க்குடைய குரு தன் வீட்டுக்கு எட்டில் மறைவதால், ஒருசிலர் ஜாதகக் கோளாறால் தொழில், வாழ்க்கையில் பிரச்சினைகள் உருவாகும். கூட்டுத்தொழில் புரிகிறவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினை உண்டாகலாம். தனித்தொழில் புரிகிறவர்களுக்கு நல்ல வேலையாட்கள் நீடிக்கமாட்டார்கள். வேறு இடங்களுக்கு மாறிப்போய்விடுவார்கள். அடிக்கடி லீவு போட்டு ஏமாற்றும் வேலைக்காரர்கள், என்ன திட்டினாலும் வாங்கிக்கொண்டு காலடியிலேயே கிடப்பார்கள்.

பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் பூஜை செய்து வழிபடவும். தொடர்புக்கு: டிரஸ்டி நாகசுப்ரமணியன், செல்: 94872 92481.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

Advertisment

கடக ராசியில் ராகுவும் சுக்கிரனும் நிற்க, 7-ல் செவ்வாயும் கேதுவும் நின்று ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் வேலை அலைச்சல், வேலைச்சுமை (ஒர்க் லோடு) அதிகமாகவே இருக்கும். என்றாலும் 2-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால்- தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். ஒரு திரைப்படத்தில் வடிவேல் "ரொம்ப நல்லவண்டா; எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்' என்று சொல்லுவதுபோல எவ்வளவு வேலைச்சுமையை உங்கள்மேல் சுமத்தினாலும் பொறுமையாகவும் திறமையாகவும் செயல்பட்டு, நிர்வாகத்திடம் ரொம்ப கெட்டிக்காரர் என்று பேர் எடுக்கலாம். பேரும் பெருமையும்தான் கிடைக்குமேதவிர ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ (ப்ரமோஷன்) எதிர்பார்க்க முடியாது. என்றாலும் 10-க்குடைய செவ்வாய் 7-ல் உச்சம் பெறுவதால் தொழில், உத்தியோகம், வேலை, வாழ்க்கை முதலிய 10-ஆம் இடத்துப் பலன்களில் எந்தவித பாதிப்புக்கும் இடமில்லை. 2-க்குடைய சூரியன் 11-ல் செவ்வாய் சாரம் பெறுவதால் பொருளாதாரத்திலும் நெருக்கடி நிலைக்கு இடமில்லை. தேவைகள் நிறைவேறும். விரயாதிபதி புதன் 12-ல் ஆட்சி பெறுவதால் செலவுகளுக்கும் பஞ்சமில்லை. வரவு வருவதற்குமுன்பே செலவு ரெடியாகக் காத்திருந்து வரவேற்கும். சிலருக்கு (ஆண்கள் அல்லது பெண்களுக்கு) திருமணத்தடையும் தாமதமும் ஏற்பட இடமுண்டு. ஜாதகரீதியாகவும் மேற்படி தோஷம் இருந்தால் பரிகாரம் அவசியம்.

பரிகாரம்: ஆண்களுக்கு காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். மேற்படி ஹோமங்களை காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களிடம் செய்யலாம். தொடர்புக்கு: செல்: 99942 74067.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 10-ல் திக்பலம் பெற, அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 12-ல் மறைவு- ராகு சம்பந்தம். பதவி, வேலை, உத்தியோகத்தில் ஓய்வில்லாத வேலைப்பளு ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு போட்டியும் பொறாமையும், எதிர்ப்பும் இடையூறும் அதிகமாக ஏற்படலாம். என்றாலும் தைரிய ஸ்தானத்தில் குரு சுயசாரம் பெற்று வக்ரமாக இருப்பதால், எடுத்த வேலை பின்வாங்காமல் விடாமுயற்சியோடு செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிவிடுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகிவிடும். போஜ மகாராஜன் விக்ரமாதித்தனுக்குப் பிறகு வெற்றிகரமாக நல்லாட்சி நடத்தி வந்தான். ஏழரைச்சனி ஆரம்பிக்கும் காலம். அவன் சிறப்பாக தினசரி வழிபட்டு வந்த அஷ்டலட்சுமியில் ஆதிலட்சுமி, ""உனக்கு கிரகச் சூழ்நிலை கெடுதலாக வரப்போகிறது. அதை நீ அனுபவித்தாக வேண்டும். அதனால் நாங்கள் (அஷ்டலட்சுமி) உன்னைவிட்டு வெளியேற வேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது. என்றாலும் உன் முறையான பக்தியின் பலனாக- பூஜையின் பலனாக எங்களில் யாராவது ஒருவர் மட்டும் உன்னிடம் இருப்போம். யார் வேண்டும் என்று நீயே முடிவு செய்'' என்றாள். அதற்கு போஜன், ""தைரியலட்சுமி மட்டும் என்னிடம் இருந்தால் போதும். மற்ற ஏழு பேரும் என்னைவிட்டு விலகிப்போனாலும் கவலையில்லை'' என்று பதில் சொன்னான். மறுநாள் அவன் பூஜையறையில் எட்டு லட்சுமிகளும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கேட்க, ""எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. தைரியலட்சுமி எங்கே இருக்கிறாளோ அவளுக்கு உதவியாக, ஆதரவாக மற்ற ஏழுபேர்களும் இருப்போம்'' என்று ஆதிலட்சுமி பதில் கூறினாள். ஆகவே சிம்ம ராசிக்கே தைரியம் புருஷ லட்சணம். அதற்கு உதாரணம் மறைந்த ஜெயலலிதாதான்.

பரிகாரம்: சொர்ணாகர்ஷண பைரவ மந்திர ஜெபம் தினசரி ஜெபிக்கலாம். அந்த சந்நிதி சென்றும் வழிபடலாம். திருத்தணிக்கு முன்னால் நாபளூர் என்ற கிராமத்தில் புரட்டாசி மாதம் 64 பைரவ ஹோமம் சிறப்பாக நடக்கும். அதில் கலந்துகொள்ளலாம். தொடர்புக்கு: சுவாமிநாத சிவாச்சாரியார், செல்: 96551 11424. ஞாயிறுதோறும் அருள்வாக்கு சொல்லுவார்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் மிதுனத்தில் ஆட்சியாக இருக்கிறார். பொதுவாகவே ராசிநாதனோ லக்னநாதனோ எந்த இடத்தில் இருந்தாலும். அந்த இடத்துப் பலனில் நல்லதே நடக்கும். கெட்டது விலகிவிடும். அன்னப்பட்சிக்கு பாலும் நீரும் கலந்து பருக வைத்தாலும், நீரை வேறாக்கி பாலை மட்டும் பருகும் என்று சொல்லுவார்கள். அது உணமையோ பொய்யோ தெரியாது. இங்கு அதை உதாரணமாக எடுத்துக்கொண்டு, லக்னாதிபதி, ராசியாதிபதி இருக்கும் வீட்டுப்பலன்- கெட்டதுவிலகி நல்லதே உண்டாகும். தேன் தானும் கெடாது. தன்னோடு சேர்ந்த பொருட்களையும் கெட்டுப்போகவிடாது என்பதை உதாரணமாகக் கூறலாம். 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம், வாழ்க்கை ஸ்தானம். அந்த வீட்டுக்குடைய புதனே அங்கு ஆட்சி என்பதோடு, ராசிநாதன் என்ற பெருமையும் சேருகிறது. எனவே மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இக்காலம் உங்களுக்கு புதன் பாதுகாப்பாக இருந்து நற்பலன் செய்வார். வேலையில்லாதோருக்கு வேலை வாய்ப்பும், தொழில் இல்லாதோருக்கு தொழில் வாய்ப்பும் உண்டாகும். தசாபுக்தி காரணமாக கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவனும் மனைவியும் இப்போது மனம் திருந்தி விரும்பி ஒன்றுசேர்ந்து குடும்பம் நடத்தலாம். திருமணமாகாத ஆண்கள் அல்லது பெண்ளுக்கு இக்காலம் திருமணம் நடந்தேறும். 9-ல் சூரியன், 10-ல் புதன். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஊதிய உயர்வும் உண்டாகும்.

பரிகாரம்: மேட்டூர்- சேலம் பாதையில் நங்கவள்ளி என்ற ஊரில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மூலவர் சுயம்பு. அங்கு சென்று ஒரு அபிஷேக பூஜை செய்தால் வேலை, தொழில் சம்பந்தமான 10-ஆம் இடத்து எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். பெரிய பாலாஜி, செல்: 94435 15904, சின்ன பாலாஜி செல்: 94439 41014-ல் தொடர்புகொள்ளவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். ராகு- கேதுக்களுக்கு சொந்தவீடு இல்லை. எங்கிருக்கிறார்களோ அந்த வீட்டுப் பலனை அற்புதமாகச் செய்வார்கள். அதேபோல யார் சாரத்தில் இருக்கிறார்களோ- யாரால் பார்க்கப்படுகிறார்களோ அவர்கள் பலனையும் இணைத்துச் செயல்படுவார்கள். அந்த விதிப்படி ராசிநாதன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் சுக்கிரனுடைய பலம் அற்புதமாக செயல்படும். லக்னநாதன், அட்டமாதிபதி இரு பலனையும் இணைத்துச் செய்வதால் உங்களுடைய முயற்சிகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் நடக்கும். ஆயுள் பலம் தீர்க்கமாக இருக்கும். கவலைகள் மறையும். தொல்லைகள் விலகும். புதிய முயற்சிகள் கைகூடும். வேலையில் நிலவிய சங்கடங்கள் விலகும். 2, 7-க்குடைய செவ்வாய் உச்சம்பெற்றுப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். நல்ல இடத்து சம்பந்தம் அமையும். தொழில் வளம், தொழில் மேன்மை, கூட்டுத்தொழில் யோகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய நன்மைகள் எல்லாம் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்திலும் பிரச்சினை இல்லை.

பரிகாரம்: ராகு- கேது சுபப்பலன்கள் தருவதற்கு திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி போகலாம். தேனி- உத்தமபாளையம் அருகில் தென் காளஹஸ்தி செல்லலாம். போடி பாதையில் கோடாங்கிப்பட்டியில் உள்ள சித்ரகுப்தன் கோவிலுக்குப் போகலாம். காஞ்சிபுரத்திலும் சித்ரகுப்தன் கோவில் உள்ளது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம் பெறுகிறார். அவருடன் கேது சம்பந்தம். ராகு, சுக்கிரன் பார்வை. சுக்கிரன் 7, 12-க்குடையவர். ஜாதகரீதியாக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மனைவி வகையில் கெடுபலன்கள் ஏற்படும். ஜாதகரீதியாக சுப ஆதிபத்தியம் பெற்ற தசாபுக்திகள் நடந்தால் மனைவி வகையில் சுபச்செலவுகள் நடக்கும். இடம், வீடு வாங்குதல், நகை, ஆபரணம், அணிகலன்கள் வாங்குதல் போன்ற சுபகாரியச் செலவுகள் வரும். திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணயோகம் செயல்படும். ராசிக்கு 7-ல் சூரியன் இருப்பது திருமணத்தடையைக் குறிக்கும். அல்லது திருமணம் தாமதமாகலாம். ஆண்கள் கந்தவர்ராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொண்டால் திருமணமும் நிகழும்; நல்ல வாழ்க்கையும் அமையும். 2, 5-க்குடையவர் குரு 12-ல் மறைவதாலும், 6-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் பிள்ளைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்பட இடமுண்டு. திருமணம், பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு, காதணிவிழா போன்ற சுபகாரியங்கள், சுபச்செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: கோவை அருகில் அய்யம்பாளையம் (சாமலாபுரம் அஞ்சல்) வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோவில் சென்றுவழிபட கிரகதோஷங்கள் விலகும். தொடர்புக்கு: 0421-2322250.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 11-ல் பலம்பெறுகிறார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் அற்புதமான இடங்கள். ஆகவே உங்கள் முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். வழக்குகள் இருந்தால் அவை அனைத்தும் சாதகமாக மாறும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு போட்டி பொறாமைகள்விலகி கைநிறைய லாபம் பெருகும். கான்டிராக்ட் தொழிலிலில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். ஜென்மச்சனி 7-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். மனைவி பெயரில் சிலர் தொழில் ஆரம்பிக்கலாம். கூட்டுச் சேரலாம். புதிய வீடு, மனை வாங்கலாம். ஒருசிலர் ஏற்கெனவே வாங்கிய வீட்டில் மராமத்து வேலைகள் செய்து வருமானம் பார்க்க, அது சம்பந்தமாக கடன் வாங்கலாம். குறைந்த வட்டியில் எளிய தவணையில் கடன் கிடைக்கும். கடன் வாங்குவதிலும் ஒரு பாலிலிசி உண்டு. தரம் கெட்டவர்களிடமும், அநியாய வட்டி வாங்குகிறவர்களிடமும் (ரன் வட்டி, மீட்டர் வட்டி) கண்டிப்பாகக் கடன்வாங்கக் கூடாது. வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டோ அல்லது தொகை குறிப்பிடாக் காசோலையில் கையெழுத்திட்டோ கடன் வாங்கக்கூடாது.

பரிகாரம்: கடன் நிவர்த்திக்கும், தவறாமல் தவணை அடைவதற்கும் கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று (கடன் நிவர்த்தி ஸ்தலம்) ரிணவிமோசன லிலிங்கேஸ்வரரையும், சாரபரமேஸ்வரரையும் வழிபடவும். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். 12 என்பது விரயஸ்தானம்; இடமாற்றத்தைக் குறிக்கும் ஸ்தானம். விரயம் என்பதில் இருவகை உண்டு. வீண்விரயம்; நல்விரயம். வீண்விரயம் என்பது அசுபவிரயம்; நல்விரயம் என்பது சுபவிரயம். கோர்ட் செலவு, வைத்தியச் செலவு, தண்டம் தீர்வை, வட்டிச் செலவு, திருடு போவது இவையெல்லாம் வீண்விரயம். பூமி, மனை, வீடு, வாகனம் வாங்குவது, கிரகப்பிரவேசம், காதணி விழா, திருமண வைபவம் போன்ற மங்களச் செலவுகள் எல்லாம் நல்விரயம். மகர ராசிக்கு விரயச்சனி நடந்தாலும், சனி ராசிநாதன் என்பதாலும், குரு வீட்டில் இருக்கிறார் என்பதாலும் உங்களுக்கு வீண்விரயம் ஏற்படாது. சுபவிரயமாகவே நடக்கும். வேண்டாத இடத்தில் விருப்பமில்லாமல் வேலை பார்க்கிறவர்கள் இப்போது விரும்பிய இடத்திற்கு மாறலாம். இருக்கும் வேலையைவிட உயர்வான வேலைக்குப் போகலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். சம்பளத்திற்கு இருப்பவர்கள் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். தொழில் முதலீடு என்பது சுபவிரயமாகும். 4-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும்.

பரிகாரம்: ஏழரைச்சனியில் இப்போது விரயச்சனி நடப்பதால் (எழரை ஆரம்பம்) தேனிவழி குச்சனூர் சென்று சனீஸ்வரரை வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். 3, 6, 11 என்பது சனிக்கு யோகமான இடங்களாகும். சனிக்கு வீடு கொடுத்த குரு 9-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குருவுக்கும் 9-ஆம் இடம் திரிகோணம் மிகமிக யோகமான இடமாகும். ஆக, குருவும் சனியும் உங்களுக்கு உதவும் கரங்களாக அமைந்து வழிநடத்தும். தொட்டதெல்லாம் வெற்றியாகும். தொடங்கியது எல்லாம் துலங்கும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக- பக்கபலமாக நிற்கும். 6-ல் ராகு, 12-ல் கேது, செவ்வாய். பாவ கிரகங்கள் பாவ ஸ்தானங்களில் இருப்பதால் பாவங்கள் விலகும். புண்ணியங்கள் சேரும். களஸ்திரகாரகன் சுக்கிரன் 6-ல் மறைவதால் திருமணமாகாதவர்கள் ஆசிரமம், மடம், கோவில் நிர்வாகம் போன்ற ஸ்தாபனங்களில் பொறுப்பேற்று சமூகத்தொண்டும் இறைத்தொண்டும் செய்து வாழ்நாளை ஓட்டலாம். இன்றைய உலகத்தில் அரசியல்முதலாக அறநிலையம்வரையில் எல்லா இடத்திலும் ஊழல்களும் தவறுகளும் நடக்கின்றன. "ஆதாயமில்லாத வணிகர் ஆத்தோடு போவாரா!' என்ற பழமொழி மாதிரி பயனும் பலனும் எதிர்பார்த்துதான் எல்லாரும் இருப்பார்கள். நீங்கள் அதில் வித்தியாசமாக- வேறுபட்டவராக இருப்பீர்கள். அதனால் எல்லாவற்றையும் கண்டாலும் காணாதமாதிரி நடந்துகொள்வது நல்லது.

பரிகாரம்: நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கைநல்லூர் சென்று கோரக்கநாதரை வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவது குற்றம்தான். அதிலும் அவர் வக்ரமாக இருப்பது அதைவிட குற்றம்தான். குரு 1, 10-க்குடையவர். வாழ்க்கை, தொழில் வழக்கம்போல இயங்கும். என்றாலும் தூத்துக்குடி சம்பவத்தையொட்டி ரஜினிகாந்த் சொன்ன கருத்துக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விமர்சனம் செய்வதுபோல உங்கள் செயல்களையும் நடவடிக்கைகளையும் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள். தேவையற்ற விமர்சனம் செய்வார்கள். அதற்கு நீங்களும் விளக்கம் சொல்லவேண்டிய நிலை ஏற்படும். உறவினர்களும் நெருக்கமானவர்களும் அவரவர் குறைகளையும் பிரச்சினைகளையும் உங்கள் தலைமீது சுமத்திவிட்டு அவர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். ஆனால் அந்த வேதனைகளை எல்லாம் நீங்கள் சுமந்து சங்கடப்பட வேண்டும்; சஞ்சலப்பட வேண்டும். பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்விக்கு விடைகாண்பது அரிது! புரியாத புதிராக இருக்கும். ஆகவே, எதிலும் தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும், பட்டும்படாமலும் நடந்து கொள்வதுதான் புத்திசாலிலித்தனம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறவர்கள் மத்தியில் நீங்கள் விவேகமாக நடந்துகொள்ளவேண்டும்.

பரிகாரம்: எந்த ஒரு துன்பத்தையும் பிரச்சினையையும் ஹோமம்செய்து போக்கமுடியும். அக்னி காரியத்தில்தான் உங்கள் தீவினைகள் அனைத்தும் பொசுங்கி சாம்பலாகும்.