ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
13-5-2018- மேஷம்.
15-5-2018- ரிஷபம்.
17-5-2018- மிதுனம்.
19-5-2018- கடகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: கிருத்திகை- 1, 2, 3.
செவ்வாய்: உத்திராடம்- 3, 4, திருவோணம்- 1.
புதன்: பரணி- 1, 2, 3, 4, கிருத்திகை- 1.v குரு: விசாகம்- 2.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 2, 3, 4.
சனி: மூலம்- 3.
ராகு: பூசம்- 4.
கேது: திருவோணம்- 2.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
15-5-2018- ரிஷப சூரியன்.
15-5-2018- மிதுன சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். 10-க்குடைய சனி 9-ல் வக்ரம். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 9-க்குடைய குரு 7-ல் வக்ரம்; ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய சுக்கிரன் 2-ல் ஆட்சி. எனவே பொருளாதாரத்திலும் குடும்பச் சூழ்நிலையிலும் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் குறைவில்லை. அதேபோல தொழில் இயக்கத்திலும் எந்த சங்கடமும் ஏற்படாது. ஆனால் 6-க்குடைய புதன் ஜென்ம ராசியில் நிற்பதால் விருதுபட்டி போகிற சனியை வீட்டுக்குள் அழைத்துவந்து உபசரிப்பதுபோல எதிரியை சோறு போட்டு வளர்ப்பீர்கள். ஒரு காலகட்டத்தில் அது வளர்த்த கடா மார்பில் பாய்வதுபோல- பாலூட்டி வளர்த்த பாம்பு கையைக் கொத்துவதுபோல நல்லவர் என்று நம்பினவர் பொல்லாதவனாக மாறி தொல்லைகள் கொடுக்கலாம். மனசாட்சியில்லாதவர்கள் எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்று கூட்டுச் சேர்ந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடலாம். மனசாட்சிக்கும் கௌரவத்துக்கும் பயப்படுகிறவர்கள் கீழ்த்தரமான எதிரியை எதிர்க்க தானும் கீழ்த்தரமாக இறங்காமல் ஒதுங்கிப் போவார்கள். நாய் நம்மைக் கடித்தால் நாமும் திருப்பி நாயைக் கடிக்க முடியுமா? "எளியாரை வலியாரை வதை செய்தால் வலியாரை தெய்வம் பலிகொள்ளும்' என்று பெருந்தன்மையாகப் போகலாம். சத்ரு சங்காரவேல் பதிகம் என்று எதிரியை வெல்ல ஒரு வழிபாட்டு முறை- 10 பாடல்கள் உண்டு. தினசரி அதைப் பாராயணம் செய்யலாம். அல்லது சத்ரு சங்கார ஹோமம் செய்யலாம். அல்லது பிரத்தியங்கரா ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம், சரபேஸ்வர ஹோமம் செய்யலாம். எதிரியை நேரடியாக எதிர்த்து போட்டியிட்டு ஜெயிப்பது ஒருமுறை. இன்னொருமுறை எதிரியை அணைத்து இணைத்துக்கொள்வது. இந்த இரண்டாவது முறைதான் ஓ.பி.எஸ்ஸை ஈ.பி.எஸ் இணைத்துக்கொண்டது. இராவணனை எதிர்க்க இராமன் கையாண்ட ராஜதந்திரம் விபீஷணனை இணைத்துக்கொண்டது இந்த இரண்டாவது முறைதான்!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சி! 7, 12-க்குடைய செவ்வாயின் சாரம். (மிருகசீரிடம்). செவ்வாய் 9-ல் உச்சம். எனவே மதிப்பு, மரியாதை, செல்வாக்கு இவற்றுக்கு எந்தக் குறையும் வராது. பொருளாதார வசதிகளிலும் எந்தக் குறையும் இருக்காது. அதேசமயம் அட்டமத்துச்சனி நடப்பதால் எதிலும் முழுமையான திருப்தி ஏற்படாது; நிறைவு ஏற்படாது; எல்லா காரியங்களிலும் செயல்களிலும் அரை கிணறு தாண்டியமாதிரி அரைகுறையாக இருக்கும். ஆ என்று எழுத ஆரம்பித்தால் ழ என்று முடிக்க முடியாது. ங-ச-ஞ- என்று எழுதி முடித்து மறுபடியும் "ஆ'யில் தொடங்குவதுபோல பல காரியங்கள் தேக்கமாக நிற்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் பாதியிலேயே அப்படியே ஸ்ட்ரக்கப் பிரேக்டவுன் ஆகவும் நின்றுவிடும். ஒரு திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம் ஒரு பாடல் பாடியிருப்பார். "சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டுப் போனாளே- நிற்பதா- தொடர்ந்து நடப்பதா' என்று கண்ணதாசன் எழுதிய பாடல்! ஐ.பி.எல் மேட்ச் பாதி நடந்து முடிந்த நிலையில் அடாத மழை திடீரென்று பெய்து ஆட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டதுபோல என்றும் கூறலாம். சிலருக்கு தொழில்துறையிலும், சிலருக்கு தொடங்கிய காரியங்களிலும், சிலருக்கு சுபகாரியங்களிலும் இந்தத் தடை ஏற்படலாம். ஒரு அன்பர் அரும்பாடுபட்டு ஒரு திரைப்படத் தயாரிப்புத் நிறுவனம் தொடங்கி பல லட்சம் முதலீடு செய்து மைத்துனரை கூட்டுச் சேர்த்தார். ஆரம்பப் பூஜையெல்லாம் ஆடம்பரமாக நடந்தது. சிறிது காலத்தில் கூட்டாளிக்கு வரவேண்டிய பல லட்சம் சொத்து கிடைத்தது. உடனே அவர் "கூட்டு வேண்டாம். நீங்கள் போட்ட முதலீட்டை திரும்பக் கொடுத்துவிடுகிறேன்' என்று பணத்தைக் கொடுத்துவிட்டு தனது சொந்தப் பொறுப்பில் படத்தைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார். இன்னொரு உதாரணம். இரண்டு அரிசி ஆலை அதிபர்கள் கூட்டாளிகள். இருவருக்கும் மணப்பருவத்தில் இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை மணம் முடிக்க மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்துவிட்டு, பெண் பிடிக்கவில்லை என்று காபிகூட சாப்பிடாமல், கை நனைக்காமல் எழுந்துவிட்டார்கள். இன்னொரு கூட்டாளி வந்தவர்களைத் திருப்பி அனுப்ப மனமில்லாமல் தன் வீட்டில் வந்து காபி சாப்பிட்டுப்போக அழைத்தார். வந்தவர்களுக்கு அவர் வீட்டுப் பெண் பிடித்துவிட்டது. பூ வைத்துவிட்டார்கள். யாருக்கு யார் என்பது இறைவன் வகுத்த வழி. திருமணம் நடக்காத கூட்டாளி உடனே பங்கை முறித்துவிட்டார். கிரகங்கள் எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 11-ல் செவ்வாய் வீட்டில் இருக்கிறார். அது புதனுக்கு பகை வீடு என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்று புதனைப் பார்ப்பதால் பகைத்தன்மைக்கு விதிவிலக்கு ஏற்படுகிறது. நண்பர்கள் பகையாவதும் பகைவர்கள் நண்பர்களாவதும் கிரகங்களின் ஜாலங்கள்தான்! இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கியது பெருந்தலைவர் காமராஜர்தான். மகனுக்கு தொழில்கடன் தராத காரணத்தால் வங்கிகளையெல்லாம் தேசியமயமாக்க வேண்டுமென்று சட்டம் இயற்றிய இந்திரா காந்தியை எதிர்த்ததால் இருவரும் பிரிந்தார்கள். மூதறிஞர் ராஜாஜியை அரசியல் சாணக்கியர் என்றும் உல்லுகபட்டர் என்றும் விமர்சனம் செய்த தி.மு.க.வினர், காங்கிரசுக்கு சாவு மணி அடிப்பேன் என்ற ராஜாஜியை "நல்லவரே வல்லவரே, வழிகாட்டுங்கள்' என்று கோபாலபுரம் பிராமணர் சங்கத்தில் கலைஞர் பேசியதால் (1967) ராஜாஜியின் ஆசியுடன் தி.மு.க. வெற்றி பெற்றது. ராஜாஜியுடன் இருந்த சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவரிடம் "அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டீர்கள். விஷக்கிருமியை உருவாக்கி விட்டீர்கள்' என்றார். அன்று உதயமான திராவிடக் கட்சி இன்றுவரை ஒவ்வொரு மாற்றுப்பேரில் ஆட்சி செய்கிறது. இது காலத்தின் கொடுமையா அல்லது காலத்தின் கட்டாயமா? இது நாட்டு நடப்பு! ஒவ்வொரு வீட்டிலும் தொழில் அமைப்பிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அது சிலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு இகழ்ச்சி! பெற்று வளர்த்தவர்கள் முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைவதும், மாமியார் மெச்சிய மருமகள் தீக்குளிப்பதும் எத்தனையோ குடும்ப சம்பவங்களாக உருவெடுக்கின்றன. மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்தான் என்பதை ஏன் மறந்தார்களோ? அதாவது காய்ந்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்த கதைதான்! 2-ல் உள்ள ராகுவை செவ்வாயும் கேதுவும் பார்ப்பதால் "நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழிப்படி சிலசமயம் உங்கள் பேச்சும் சொல்லுமே உங்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். (தவளை தன் வாயால் கெட்ட மாதிரி). இருந்தாலும் ராசியை 5-ஆம் இடத்து குரு பார்ப்பதால் கழுவின மீனில் நழுவின மீனைப்போல குருவருளும் திருவருளும் உங்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும். அதேசமயம் புத்திர ஸ்தானத்தில் புத்திரகாரகன் நிற்பதும், அவரை சூரியனும் புதனும் பார்ப்பதும் சிலசமயம் சிலருக்கு புத்திர தோஷம் ஏற்படலாம். அல்லது பிள்ளைகளால் தொல்லைகள் அதிகமாகலாம். அல்லது பேரன் பேத்தி, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை பெரும் மனப்பாரமாக அமையும். பிள்ளை வரம் வேண்டுவோர் சந்தான பரமேசுவர ஹோமம், சந்தன கோபால கிருஷ்ண ஹோமம், வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமம் செய்யலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகு நிற்பதும் அவரை கேது பார்ப்பதும் ஒருவகையில் தோஷம் என்றாலும், 9-க்குடைய குரு 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டு உங்களை வழிநடத்தும். இது தோஷப் பரிகாரம் ஆகும். துரோணரும் துருபதனும் ஒரே பள்ளியில் படித்த மாணவ நண்பர்கள். துருபதன் தான் அரசனானதும் துரோணருக்கு அரசவையில் பதவி தருவதாக வாக்கு தந்தான். அதன்படியே துருபதன் அரசன் ஆனதும் துரோணர் தன் பிள்ளை பால் குடிக்க ஒரு பசுவை தானம் கேட்க- அரசன் துரோணரை கேவலப்படுத்தி அனுப்ப, அவர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருவாகி வில்வித்தையைக் கற்றுக்கொடுத்தார். இதில் அர்ஜுனன்மீது மட்டும் தனி அபிமானம் வைத்திருந்தார். வித்தை பூர்த்தியானதும் துருபதனை போரில் வென்று சிறைப்படுத்தி குருநாதர்முன்பு அடிமையாக நிறுத்தினான். அதே குருநாதரை குருக்ஷேத்திரப் போரில் எதிர்க்கும்நிலை ஏற்பட்டது. குருவை எதிர்க்கத் தடுமாறிய அர்ஜுனனுக்காகவே கிருஷ்ணர் கீதாஉபதேசம் செய்தார். அன்று நடந்த பாரதக் கதை இன்று தமிழ்நாட்டு அரசியலில் நடக்கிறது. பலருடைய வீட்டிலும் சொந்த வாழ்க்கையிலும் நடக்கிறது. இதுதான் ராகு- கேது- செவ்வாய் சேர்க்கைப் பலன்! குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட உங்களுக்கு சிலசமயம் கிரகங்கள் பரீட்சை வைக்கும். அதனால் விட்டுக்கொடுத்துப் பொறுமையாகப் போனாலும் உங்கள் உள்ளுக்குள் இருந்து உங்களை இயக்கும் "ஈகோ உணர்வு' சமயத்தில் வெளிப்பட்டு வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதையாக மாற்றிவிடும். ஒரு முனிவர், ஒருவனுக்கு ஆற்றங்கரையில் உள்ள கணபதிக்கு 108 குடம் அபிஷேகம் செய்தால் அரசனாகும் பாக்கியம் உண்டாகும் என்றாராம். 107 குடம் ஊற்றிய அவன் பொறுமையை இழந்து, கொஞ்சம்கூட பிள்ளையாரின் நிலையில் ஒரு அசைவு ஏற்படவில்லையே என்று நம்பிக்கையிழந்து 108-ஆவது குடத்தை பிள்ளையாரின் தலைமேல் போட்டு உடைத்தானாம். அதுபோல உங்கள் பெற்றோர்- உற்றார்- நண்பர்கள்- மனைவி, மக்கள்- உடன்பிறப்புக்கள் எல்லாரையும் நன்றாக கவனிப்பீர்கள். கடைசியில் வார்த்தையால் அவர்களை நோகடித்துவிடுவீர்கள்; வம்பிழுத்துவிடுவீர்கள். அர்ஜுனனுக்கு கீதாஉபதேசம் செய்த மாதிரி உங்களுக்கும் ஒரு கண்ணன் வரவேண்டும்; பாடம் நடத்த வேண்டும். சிலருக்கு கண்ணன் என்றாலே கடுப்பாகிவிடுகிறது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் 6-ல் உச்சம் பெற்று சூரியனைப் பார்க்கிறார். உச்சனை உச்சன் பார்ப்பது தோஷம் என்றாலும் இங்கு அது விதிவிலக்கு! சூரியன் ராசிநாதன். செவ்வாய் பாக்கியாதிபதி! அத்துடன் செவ்வாய் ராசிநாதன் சூரியன் சாரத்தில் நின்று சூரியனைப் பார்ப்பதாலும், 5-க்குடைய குருவும் சூரியனைப் பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தி ஆகிறது! எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு கோட்சாரம் அனுகூலமாக அமைவதால் எந்த பாதிப்பும் வராது! எல்லாத் தேவைகளும் பூர்த்தியடையும். 10-ல் சுக்கிரன் ஆட்சி! வேலை உயர்வும் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். 3-ல் உள்ள குருவால், உடன்பிறந்தவர்களாலும் நண்பர்களாலும் உதவி ஒத்தாசை கிடைக்கும். சிலருடைய அனுபவத்தில் "உயிர் காப்பான் தோழன்' என்று பெருமையடையலாம். தொன்னைக்கு நெய் ஆதாரமா நெய்க்கு தொன்னை ஆதாரமா என்ற மாதிரி நண்பர்களால் உங்களுக்கு நன்மையா- உங்களால் நண்பர்களுக்கு நன்மையா? என்று பாகுபாடு பார்க்க முடியாதபடி பலன்கள் நடக்கும். 6-ஆம் இடத்து செவ்வாய் கடன், போட்டி, பொறாமை, வைத்தியச்செலவுகளைப் போக்கிவிடும். 12-ஆம் இடத்து ராகு வரவுக்கு மீறிய செலவு என்ற நிலையை மாற்றி வரவுக்குக் கட்டுப்பட்ட செலவு என்ற நிலையை உருவாக்கி சிக்கன நடவடிக்கையை உண்டாக்கும். 9-ல் சூரியன் உச்சம். அவருடன் 2, 11-க்குடைய புதன் சம்பந்தம். பொருளாதாரத்திலும் வரவு- செலவுகளிலும் குடும்பத்திலும் ஆனந்தம், அமைதி, மனநிறைவு ஏற்படும். தேவைகள் நிறைவேறும்; திட்டங்கள் வெற்றியடையும். தேக ஆரோக்கியத்திலும் தெளிவு பிறக்கும். தடைப்பட்ட திருமணங்கள் கைகூடும். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு கிடைக்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு எட்டில் மறைவு. அவருடன் 12-க்குடைய சூரியன் சம்பந்தம். இவர்களுக்கு 3, 8-க்குடைய செவ்வாயின் பார்வை. ஆக, ஏழரைச்சனியில்கூட இவ்வளவு பிரச்சினைகள் இல்லையென்று சொல்லுமளவு இப்போது உங்களுக்கு பிரச்சினைகள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி வந்து தாக்குகிறது. பணம் அதிகமாக இருப்பதும் ஒரு பிரச்சினை! பணமே இல்லாததும் பிரச்சினை! சாப்பாட்டுக்கே வழியில்லை என்பது ஒரு பிரச்சினை. அதிகமான உபசரிப்பால் சாப்பிடுவதும் பிரச்சினை. உதாரணமாக, கல்யாணப் பத்திரிகை கொண்டுபோய் உறவினர்களிடம் கொடுக்கும்போது எல்லாரும் காபி- டீ- கூல்ட்ரிங்ஸ் என்று உபசரிப்பார்கள். எத்தனை வீட்டில் எத்தனை காபி, டீ குடிக்க முடியும்? "சுகர்' என்றால் வெறும் தண்ணீராவது மோராவது குடியுங்கள் என்பார்கள். அதையும் எவ்வளவு குடிக்க முடியும்? எத்தனை முறை குடிக்க முடியும்? இப்படி அன்புத் தொல்லைக்கு ஆளாவதும் உண்டு! வேறுசிலர் வம்புத்தொல்லைக்கும் ஆளாக நேரும். 4-ஆம் இடத்து வக்ர சனி சிலருக்கு வாய்வுத் தொல்லை அல்லது அஜீரணத் தொல்லை ஏற்படுத்தும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டாக்கும். வாகனங்கள் வைத்திருப்போருக்கு செய்த செலவுகளே மீண்டும் மீண்டும் செய்யும் சூழ்நிலை, வீண்விரயம் ஏற்படும். சிலர் வீடு சம்பந்தமான விரயச்செலவுகளையோ பராமரிப்புச் செலவுகளையோ ரிப்பேர் செலவுகளையோ சந்திக்கலாம். ஒருசிலர் யோகமான தசாபுக்திகள் நடந்தால் புதிய இடம் அல்லது புதிய வீடு, புதிய வாகனம் சம்பந்தமான செலவுகளை, சுபச்செலவுகளைச் செய்யலாம். பாதகமாக தசாபுக்திகள் நடந்தால் தாய்- பிள்ளை உறவில் சலனம், சங்கடம், வருத்தம் ஏற்படலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு என்றாலும் ஆட்சி பெறுகிறார். 2, 7-க்குடைய செவ்வாய் சாரம்! செவ்வாய் 4-ல் உச்சம்! தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். சிலர் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகளைச் செய்யலாம். கட்டட மராமத்து பராமரிப்பு செலவுகளும் செய்யலாம். 4-க்குடைய சனி 3-ல் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த குருவும் ஜென்மத்தில் வக்ரம். செவ்வாய் சகோதர காரகன்! சிலர் உடன்பிறந்தோர் வகையில் நட்பும் உறவும் பலப்படுத்தும்படி மகிழ்ச்சி உண்டாகும். மனநிறைவும் உண்டாகும். அவர்கள் வகையில் சுபச்செலவுகளைச் சந்திக்கலாம். தசாபுக்திகள் எதிர்மறையாக (ஆறு, எட்டாக) அமைந்தால் உடன்பிறந்தோர் வகையில் கொடுத்தும் கெட்ட பெயர் எடுக்கும் நிலை ஏற்படும். உதவி செய்தும் பொல்லாப்பு ஏற்படும். ஒருசிலரின் அனுபவத்தில் மனைவி வகையில் சில மனஸ்தாபங்களை, மனவருத்தங்களைச் சந்திக்கலாம். மதினி, கொழுந்தியாள் குடும்பத்துக்கு சிலர் மனிதாபிமான முறைப்படி உதவிகள் செய்யலாம். சிலர் உடன்பிறந்தோர் குடும்பத்துக்கு உதவிபுரியலாம். அதனால் சொந்தக் குடும்பத்தில் வருத்தங்களும் பூசல்களும் ஏற்படலாம். சொந்தப் பிள்ளையின் பள்ளிக்கு கட்டணம் கட்டாமல் தம்பி பிள்ளைகளின் பள்ளிக்கு கடணம் கட்டுவதால் கணவன்- மனைவிக்குள் சிலசமயம் வருத்தம் உண்டாகலாம். அதாவது தனக்குப் போகத்தான் தானமும் தருமமும் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. "தந்தையோடு கல்விபோகும். தாயோடு அறுசுவைபோகும், மனைவியோடு எல்லா வளமும் போகும்' என்பார்கள். கோடீசுவரனுக்கு வீடு எரியக்கூடாது; ஏழைக்கு மனைவி இறக்கக்கூடாது என்பார்கள். எனவே உற்றம் எது, சுற்றம் எது என்று உணர்ந்து செயல்பட வேண்டியது குடும்பத்தலைவனின் கடமை.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். அவருடன் கேது சம்பந்தம்- ராகு பார்வை! ஏழரைச்சனியின் கடைசிக்கட்டம் என்றாலும் பயப்படத் தேவையில்லை. பாசமும் நேசமும் பணம் உள்ளவரைதான். இதனால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்னமே வள்ளுவர் "அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை' என்று சொல்லிவிட்டார். 2-ஆம் இடத்துச்சனியும் 12-ஆம் இடத்து குருவும் கைநிறைய சம்பாதிக்க வேண்டும், எல்லாருக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும். ஆனால் அதனைச் செயல்படுத்த முடியாதபடி தடைகளையும் உருவாக்கும். சிலர் எதிர்பாராத தனம் வரும் என்று காத்திருக்கலாம். அல்லது திடீர்க் குபேரனாக திட்டங்கள் வகுக்கலாம். ஆனால் எல்லாம் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலையாக மாறிவிடும். 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் 6-ல் மறைவு. ஆனால் அவர்களுக்கு குரு பார்வை. ஆக தொழிலும் லாபமும் இலைமறைவு காய்போல இருக்கும். அதாவது கடுமையான உழைப்பு- அற்ப ஊதியம். (லாபம்)! இருந்தாலும் வரவேண்டியது வரும் என்று ஒரு நப்பாசை! வாரியார் சுவாமிகள் சொன்னார்: "வரவேண்டியது- தானே வரும்; வரவேண்டியதுதானே- வரும். எது ரவேண்டும் என்று இருக்கிறதோ அது வந்தே தீரும். சிலர் பொருள் சேர்க்க வேண்டும் என்ற போதையால் தருமநெறிகளைப் புறந்தள்ளி துரோகம் செய்து பொருள் சேர்க்கலாம். ஆனால் அதை அனுபவிக்க ப்ராப்தம் வேண்டுமே! கோடி கோடியாகச் சேர்த்தவர்கள் எதையும் அனுபவிக்க முடியாமல் சிறையில் வாடுகிறார்கள். வந்தவர்களும் போனவர்களும் உறவினர்களும் எதை அனுபவிக்கிறார்கள். இதுதான் ஏழரைச்சனியின் திருவிளையாடல்! ஒருவர் தங்கம் செய்ய என்ன வழிமுறை என்றார். அதற்கு சித்தர் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்றார். சாப்பாடு ஒன்றுதான் (அன்னதானம்) போதும் போதும் என்ற திருப்தியைத் தரும். இதை உணர்ந்துவிட்டால் ஏழரைச்சனியோ அட்டமச்சனியோ எந்தச் சனியோ நம்மை பாதிக்காது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு வக்ரம். தனுசு ராசியில் இருக்கும் சனியும் வக்ரம். இந்த இரு கிரக வக்ரமும், ஏழரைச்சனியில் ஜென்மச்சனியும் சேர்ந்ததால் உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் புரட்டி அடிக்கிறது. சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்று சொல்லுமளவு வேதனைப்படுத்துகிறது. விதி உங்களை விரட்டி விரட்டி அடிக்கிறது. எல்லாருக்கும் எல்லாத் துன்பமும் என்றில்லை. உதாரணமாக, சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் எல்லாரும் ஒரேமாதிரி துன்பப்படுவதில்லையல்லவா! ஆ கிளாஸ், இ கிளாஸ், ஈ க்ளாஸ்- அரசியல்கைதிகள், திருட்டுக் குற்றவாளிகள், கொலைக்குற்றவாளிகள் என்று பாகுபாடு பிரித்து செயல்படுத்தப்படுவதுபோல! சில ஊழல்வாதிகள் சிறைவாசத்தையும் மேலிருந்து கீழ்வரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி சுகபோகமாக இருப்பதில்லையா? சுடிதார் அணிந்து (கைதி உடையைக் கழற்றிவிட்டு) சிறை ஊர்தியில் ஷாப்பிங் போய் வருவதாக செய்திகள் வருவதுபோல. அவரவர் தகுதிக்கேற்றபடி அவரவர் மனதுக்கேற்றபடி அவரவர் செயலுக்கேற்றபடி கிரகங்களும் சனி பகவானும் ராகு- கேதுவும் சோதனை செய்யும். சிலருக்கு பணக்கவலை! சிலருக்கு மனக்கவலை! சிலருக்கு நோய்க்கவலை! சிலருக்கு வேலைக்கவலை! சிலருக்கு சம்பாத்தியக்கவலை! சிலருக்கு உறவு, நட்பு வகையில் கவலை! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. இந்த ஏழரைச்சனியும் அட்டமச்சனியும் கண்டச்சனியும் எல்லாருக்கும்தானே வருகிறது. இருப்பவனுக்கும் வருகிறது; இல்லாதவனுக்கும் வருகிறது. ஞானிகளுக்கும் வருகிறது; சித்தர்களுக்கும் வருகிறது. ஆனால் சித்தர்களும் ஞானிகளும் சித்தத்தை சிவன்பால் வைத்ததால் கிரகங்களின் சோதனைகள் அவர்களை வேதனைப்படுத்துவதில்லை. ஆனால் மனிதர்கள் பந்தபாசங்களில் சிக்கி அல்லல்படுவதால் அவர்களுக்கு எல்லாமே தொல்லையாகத் தெரிகிறது. மிருகங்களுக்கும் ஏழரைச்சனி, அட்டமச்சனி வராமலா இருக்கிறது. அது மனிதர்களைப்போல புலம்புவதில்லையே! எல்லாவற்றையும் சுமந்து அதுபாட்டுக்குத் திரிகிறது. அதுபோல மனிதர்களும் எதையும் பொருட்படுத்தாத பக்குவம் பெற்றுவிட்டால் நவகிரகங்களும் நமக்கு அனுக்கிரகங்களாக மாறிவிடும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு, வக்ரம்! பொதுவாக வக்ரத்தில் உக்ரபலம் என்பார்கள். அதாவது வக்ர கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டுப் பலனை ஆணித்தரமாகச் செய்யும் என்பது அர்த்தம். நல்ல இடத்தில் இருந்தால் நல்ல பலனையும், கெட்ட இடத்தில் இருந்தால் கெட்ட பலனையும் வலுவாகச் செய்யும். இங்கு சனி 12-ல் வக்ரம் என்பதால், 12-ஆம் இடம் விரயம், மாற்றம், பயணம், அயன சுக போக ஸ்தானம், இந்தப் பலன்களையெல்லாம் தீவிரமாக செயல்படுத்தலாம். சனி கேது சாரம் பெற (மூலம்- 3-ல் சனி), சனிக்கு வீடு கொடுத்த குரு 10-ல் வக்ரம் என்பதால் தொழில், வாழ்க்கை இவற்றில் நற்பலன்கள் வேகமாக நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, எதிர்பார்க்கும் நன்மைகள், உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பு, வெளியூர்ப்பயணம், வெளியூர் வேலை போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். சிலர் புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலை வாய்ப்பை அடையலாம். ஜென்மத்தில் கேது, செவ்வாய் சேர்க்கையும், ராகு பார்வையும் இருப்பதால் உங்களைப் பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைச் சந்திக்கக்கூடும். கேது கோள் கிரகம் என்பதால், உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கலாம். அல்லது அவர்களை ஓரம் கட்டலாம். மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால் மற்றவர்களால் அல்லது நீங்கள் நம்பும் நபர்களால் உங்களுக்கு வெட்டிச்செலவும் தண்டச்செலவும் ஏற்பட இடமுண்டு. அதனால் தினசரி விநாயகர் கவசம் படிக்கலாம். (வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க என்று தொடங்கும் பாடல்கள்). அல்லது தினசரி விநாயகர் சந்நிதியில் இரண்டு நெய்விளக்கு 21 நாள் தொடர்ந்து ஏற்றி வழிபடலாம். வாய்ப்பு இருப்பவர்கள் 21 நாள் தொடர்ந்து விநாயகருக்கு ஒரு குடம் நீர் அபிஷேகம் செய்யலாம். கொஞ்சம் அறுகம்புல் சாற்றலாம். அல்லது அறுகம்புல் மாலை அணிவிக்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் வக்ரம். ராசிக்கு 9-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 4-ல் சுக்கிரன் ஆட்சி. குருவருளும் திருவருளும் வழிநடத்த உங்கள் வாழ்க்கைப் பயணம் தடையில்லாமல் ஹைவேஸ் ரோட்டில் பயணிக்கும். 4-ல் 9-க்குடைய சுக்கிரன் ஆட்சி! தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் தெளிவான நிலையும் எதிர்பார்க்கலாம். 7-க்குடைய சூரியனும் உச்சம். களஸ்திர காரகன் சுக்கிரனும் ஆட்சி! திருமணத்தடை விலகி திருமணம் கைகூடும். அது ஆண்களானாலும் பெண்களானாலும் சரி- திருமணயோகம் உண்டாகும். திருமணமானவர்களுக்கு சம்பந்தம் செய்த வகையில் ஆண்களுக்குப் பெண்களாலும்- பெண்களுக்கு ஆண்களாலும் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். சிலர் சம்பந்தகாரர்களிடம் (மாமனார்- அத்தை வகையில்) பணஉதவி கிடைக்கப்பெற்று புதிய தொழில் தொடங்கலாம் அல்லது புதிய வாகனம் வாங்கலாம் அல்லது புதிய இடம், வீடு வாங்கலாம். எதிர்காலத்துக்கான முதலீட்டுத் திட்டங்கள் வெற்றியடையும். பற்றாக்குறைக்கு வங்கிக்கடன் வாங்கி (தவணை) திட்டங்களை செயல்படுத்தலாம். ஒரு தொழிலதிபர் குடும்பம். நான்கு பேர் சகோதரர்கள். ஒருவர் (தம்பி) தவறான கொள்கையாலும் திறமை இன்மையாலும் தனித்தொழில் செய்து ஏமாற்றமாகி ஏகப்பட்ட கடனாளியாகிவிட்டார். எல்லாரும் கூட்டுக்குடும்பம். மூத்த அண்ணன் தன் மனைவி, தம்பி மனைவிகளை அழைத்துப் பேசி, தம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்று எடுத்துக்கூறி, எல்லாப் பெண்களும் அணிந்திருந்த நகைகளையும் வாங்கி விற்று, கடன்பட்ட தம்பியின் கடனை எல்லாம் அடைத்து தங்கள் தொழிலில் பார்ட்னராக்கிவிட்டார். இரண்டே வருடத்தில் லாபம் பார்த்து எல்லா பெண்களின் நகைகளையும் மீட்டுக்கொடுத்துவிட்டார். ஆக கூட்டுறவே நாட்டுக்கும் நல்லது; வீட்டுக்கும் உகந்தது என்பதை நிரூபித்துவிட்டார்கள்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவு, வக்ரம்! அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் 3-ல் மறைவு, ஆட்சி; குருவுக்கு 8-ல் மறைவு. கோட்சாரம் பலக்குறைவாக இருந்தாலும், 10-ல் சனி வக்ரம்; கேது சாரம் என்பதால் அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும், சௌகர்யங்களுக்கும், தேவைகளுக்கும் குறைவில்லை. அதேசமயம் கிரகங்களின் மறைவால் உங்கள் காரியங்களிலும் செயல்களிலும் தடை, தாமதம் இருக்கத்தான் செய்யும். ரயில் பயணத்துக்கு டிக்கெட் புக்கிங் செய்தாலும் கடைசி நிமிடம்வரை வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும். பயணத்துக்கு சில மணி நேரத்துக்குமுன்பு அல்லது முதல் நாள் டிக்கெட் கன்பர்ம் ஆகும். அதனால் மனம் மட்டும் "திக்திக்- பக்பக்' என்று அலைபாயும். ஏதாவது ஒரு திட்டம் வகுத்தால் குடும்பத்தில் உள்ளவர்களை ஒன்றுதிரட்டி செயல்படுத்துவது கஷ்டம். ஒருவர் காட்டுக்கு இழுப்பார். ஒருவர் மேட்டுக்கு இழுப்பார். அவரவர்களும் அவரவர் சௌகர்யத்தைத்தான் கருதுவார்களே தவிர எல்லாருடனும் இணைந்து செயல்படுவோம்- விட்டுக்கொடுத்துப் போவோம் என்ற அனுசரணை இருக்காது. அதனால் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களுக்கு விரக்தியும் வெறுப்பும் மேலோங்கும். எக்கேடு கெட்டாவது போய்த்தொலையட்டும் என்று நினைப்பீர்கள். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கவும் முடியாது. இதுதான் தர்மசங்கடம் என்பது! இந்த நிலை கூட்டுக் குடும்பத்திலும் இருக்கும்; தொழில் அமைப்பிலும் இருக்கும். அதிலும் மற்றவர்கள், மூன்றாவது நபர்கள் எல்லாம் உங்கள் கருத்தைப் புரிந்துசெயல்படலாம். சொந்தக்காரர்கள் மட்டும் ஏனோதானோவென்று நடந்து உங்களைப் புண்படுத்துவார்கள். இதுதான் கிரக மறைவின் பலன்!