4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

7-1-2019- மகரம்.

9-1-2019- கும்பம்.

11-1-2019- மீனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 3, 4, உத்திராடம்- 1.

செவ்வாய்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1, 2.

புதன்: மூலம்- 4, பூராடம்- 1, 2, 3, 4.

குரு: கேட்டை- 1, 2.

சுக்கிரன்: விசாகம்- 4, அனுஷம்- 1, 2. 3.

சனி: மூலம்- 4.

ராகு: புனர்பூசம்- 4.

கேது: உத்திராடம்- 2.

கிரக மாற்றம்:

சனி அஸ்தமனம்.

புதன் அஸ்தமனம்.

12-1-2019- சனி உதயம்.

Advertisment

thisweekrasi

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 12-ல் மறைவு. என்றாலும், செவ்வாய் குரு வீடான மீனத் திலும், குரு செவ்வாய் வீடான விருச்சிகத் திலும் பரிவர்த்தனை யோகமாக இருப்பதால், செவ்வாய்க்கு 12-ல் மறைந்த தோஷமும், குருவுக்கு 8-ல் மறைந்த தோஷமும் இல்லை. 12-ஆம் இடம் விரயம், 8-ஆம் இடம் கௌர வப் பிரச்சினை அல்லது கவலை! எனவே விரயச் செலவுகள் ஏற்பட்டாலும், அது சுபவிரயச் செலவுகளாக மாறும். கவலை உண்டா னாலும்- 10, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் மகிழ்ச்சியும் உருவாகும்; நல்லமுறையில் பிரசவமாக வேண்டுமே என்ற கவலையும் உருவாகுமே- அப்படிப்பட்ட கவலைதான்! 2, 7-க்குடைய குரு 8-ல் மறைவதால், வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். முக்கியமான விசேஷத்துக்கு இரண்டு நாள் லீவு போட்டதால் உரிமையாளர், "லீவு போட் டால் வேலைக்குத் தேவையில்லை' என்று ஜாடை மாடையாகச் சொல்லலாம். அல்லது அண்ணன்- தம்பிக்குள் போட்டியின் காரண மாக, தம்பியிடம் சொல்லாமல் அண்ணனைப் போய் சந்தித்தால், தம்பி- "அண்ணனிடமே வேலைக்குப் போகவேண்டியதுதானே' என்று ஜாடைமாடையாகச் சொல்வார். இப்படிப் பட்ட முதலாளியிடம் கௌரவத்தை விட்டுக்கொடுத்து வேலைக்குப் போவதைவிட, வேலையைத் தூக்கி எறிந்து விட்டு வீட்டில் சும்மா இருக்கலாம். சும்மா இருந்தால் சோத்துக்கு என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? இது மார்கழி மாதம். அஷ்டமியன்று கோவில் நகரம் மதுரையில் அஷ்டமி சப்பரத் திருவிழா நடக்கும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை மாதம் சித்திரை வீதியிலும், ஆடி மாதம் ஆடிவீதியிலும், ஆவணி மாதம் ஆவணி வீதியிலும், மாசி மாதம் மாசிவீதியிலும், மார்கழி மாதம் வெளிவீதியிலும் வலம் வருவார். அஷ்டமியன்று சுவாமி படிய ளக்கும் நாள். சிவபெருமானுக்கு தெரியாமல் பார்வதிதேவி ஒரு எறும்பைப் பிடித்து ஒரு பாத்திரத்தில் மூடிவைத்தார். சுவாமி யிடம், "எல்லாருக்கும் படியளந்து விட்டீர் களா' என்று கேட்க, "ஆம்' என்று சுவாமி பதில்சொல்ல, "ஒரு ஜீவனுக்குப் படியளக்க வில்லை' என்று, மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்க்க, அந்த எறும்பின் வாயிலும் ஒரு அரிசி இருந்ததாம். இப்படி கல்லினுள் தேரைக்கும், கருப்பையில் முட்டைக்கும் படியளக்கும் ஈசன் உங்களைக் கைவிட்டு விடுவாரா? 10-க்குடைய சனி 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாயிற்றே! அதுவும் உங்களை வழிநடத்தாமல் விட்டுவிடுமா? ஆகவே எதை இழந்தாலும் தன்மானத்தை மட்டும் இழக்கக்கூடாது. இதைத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்' என்று உதாரணம் காட்டிச்சொன்னார். ஆங்கிலப் புத்தாண்டு உங்களுக்கு ஏழாவது ராசியில் பிறந்துள்ளதால் உங்களுக்கு புதிய வாழ்வு உதயமாகும் என்று நம்பலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷிப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் குருவும் சேர்ந்து ராசியைப் பார்க்கிறார். குரு- சுக்கிரன் சேர்க்கையும் உங்களுக்கு நன்மை செய்யும். அதனால் அட்டமச்சனியின் பாதிப்பு தோஷம் விலகும். குருவும் சுக்கிரனும் பகை கிரகங்கள் என்று சிலர் கூறலாம். அது தவறான கருத்து! குருவின் வீடான மீனத்தில்தான் சுக்கிரன் உச்சமடைகிறார்! பகை என்றால் எப்படி அங்கு உச்சமடையமுடியும்? குரு- தேவர்களின் குரு! சுக்கிரன் அசுரர்களின் குரு! தேவர் களுக்கும் அசுரர்களுக்கும்தான் பகை! அவர்களின் குருநாதர்களுக்குள் பகை இல்லை! வாதிக்கும்- அவர் எதிரியான பிரதி வாதிக்கும் வழக்கு என்றால், அவர்களுக்காக வாதாடும் வக்கீல்களுக்குள் பகையோ வழக்கோ வருத்தமோ இருக்காது! கோர்ட்டில் காரசாரமாக எதிர்வாதம் செய்து வக்கீல்கள் வாதாடினாலும், வெளியே இருவரும் சேர்ந்து காப்பி சாப்பிட வருவதில்லையா? அப்படித்தான் தேவகுருவுக்கும், அசுரகுரு வுக்கும் உள்ள நிலை. எனவே குருவுக்கும் சுக் கிரனுக்கும் பகையில்லை. மேலும் குரு பர்துரு காரகன். (கணவன்காரகன்). சுக்கிரன் களஸ் திரகாரகன். (மனைவிகாரகன்). இருவரும் சேர்ந்து 7-ல் அமர்வது, கணவன்- மனை விக்குள் அன்யோன்யத்தையும், நெருக்கத் தையும் உணர்த்தும். 7-ஆம் இடம் என்பது 12 ராசிகளில் சரிபாதியான இடம்! லக்னத் தில் இருந்து (ராசியில் இருந்து) எண்ணி னால் சமபங்கான இடம்! ஈஸ்வரன் தன்னில் சரிபாதியை சக்திக்கு தந்தமாதிரி- அர்த்த நாரி தத்துவம்! எனவே திருமணமாகாத வர்களுக்குத் திருமணம் கைகூடும். திருமண மானவர்களுக்கு தாம்பத்திய ஒற்றுமையும் இணக்கமும் ஏற்படும். "உனக்காக நான்- எனக்காக நீ' என்ற தத்துவப்படி செயல் படலாம். வாழ்க்கை என்னும் வண்டியின் இரு சக்கரங்களுக்குச் சமம்! அட்டமச்சனியால் சிலநேரம் கருத்து வேறுபாடுகளும், உரசல் களும் உருவானாலும், "நீரடித்து நீர் விலகாது' என்று விட்டுக்கொடுத்துப் போகும் நிலையும் அமைந்துவிடும். 9, 10-க்குடைய சனி 8-ல் மறைந்தாலும், 10-ஆம் இடம், 2-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்ப் பதால், தொழில், வாழ்க்கை, பதவி, வேலை, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பொருளாதார மேம்பாடும், பிள்ளைகள் வகையில் திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும். அட்டமத்துச்சனி காலத்தில் அல்லது ஏழரைச்சனியில் சந்திரதசையோ சந்திரபுக்தியோ நடந்தால் மட்டும் ஆகாது. துர்ப்பலன்கள் நடக்கும். அதற்குப் பரிகாரம் திங்கள்கிழமைதோறும் சிவலிலிங் கத்துக்குப் பாலாபிஷேகமும், ஒருமுறை ருத்ரஹோமம்செய்து சிவனுக்கு ருத்ராபி ஷேகமும் செய்யவேண்டும்.

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 6-ல் மறைந் தாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால், மறைவு தோஷம் நீங்கும். மேலும், செவ்வாய் 11-க்குடையவர் 10-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே தொழில், உத்தியோகம், வேலை, பதவி, வாழ்க்கை ஆகியவற்றில் எந்த சங்கடமும் இல்லை. சஞ்சலமும் ஏற்படாது. முயற்சிகளில் முன் னேற்றமும், லாபமும், வெற்றியும் உண்டாகும். தளர்ச்சியில்லாத வளர்ச்சி ஏற்படும். 8, 9-க்குடைய சனியும் 7-ல் இருப்பதால், கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் அனுகூலமும், ஆதாயமும், நன்மைகளும், வெற்றிகளும் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகளும், ஆடை, ஆபரண, அணிகலன்கள் சேர்க்கையும் உண்டாகும். இருதரப்பிலும் (கணவர்- மனைவி) உறவினர்கள் வகையில் நிலவும் மனவருத் தங்களும் பூசல்களும், கருத்து வேறு பாடுகளும் நீங்கி, நல்லுறவும் நட்பும் மலரும்! "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற பாலிலிசியை நினைத்து, நீங்களும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. 6-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய குருவும் பரிவர்த்தனை என்பதால், சிலர் தொழில் சம்பந்தமாக கடன் வாங்கலாம். அல்லது செவ்வாய் பூமிகாரகன் என்பதால், பூமி, மனை, வீடு முதலிலியவை வாங்க கடன் வாங்கலாம். சுக்கிரன் வாகனகாரகன். புதிய வாகனம் (கார் அல்லது ஸ்கூட்டர்) வாங்கவும் கடன் வாங்கலாம். தவணைகளைத் தவறாமல் செலுத்தலாம். புதன் கல்விகாரகன் என்பதால், படிப்புக்காகவும் சிலர் கல்விக்கடன் வாங்கிப் படிக்கலாம். படித்துமுடித்து வேலைக் குப்போய் கடனை அடைக்கலாம். செவ்வாய் சகோதரகாரகன் என்பதால், உடன்பிறப்புகள் வகையில் பகை, வருத்தங்களும் நீங்கி ஒற்றுமையும், உடன்பாடும், உறவும் உண்டாகும். அதேபோல, நட்பு வட்டாரத் திலும் பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். "தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்ற வாசகமும், "இப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா' என்ற சொல்லும், "இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்' என்ற வார்த்தையும், "கஞ்சி ஊத்த ஆள் இல்லையென்றாலும் கச்சை கட்ட ஆள் உண்டு' என்ற பழமொழியும் உங்களுக்கே பொருந்தும்!

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் உள்ள ஜென்ம ராகுவும், ஏழில் உள்ள கேதுவும் மதில்மேல் உள்ள பூனை எந்தப்பக்கம் தாவும் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவது போல ஒருநிலையை உணர்த்துகிறது. சிலருக்கு வேலை அல்லது தொழில் துறையில், சிலருக்கு எதிர்கால வாழ்க்கையில் கேள்விக் குறியை எழுப்பும். கூடப்பிறந்த அண்ணன்- தம்பிக்குள் தொழில் போட்டி நீறுபூத்த நெருப்புபோல ஒரு பனிப்போர்! தம்பியிடம் வேலை பார்த்த ஊழியர் தற்செயலாக அண் ணனிடம் பழகியது தம்பிக்குப் பிடிக்கவில்லை. அண்ணனுடன் பழக்கம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார். அதேபோல 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம். மனைவி வேலை பார்க்கும் இடத்தில் சொல் லாமல் லீவு போட்டதால், அவர் நிர்வாகம் "லீவு போடுகிறவர்கள் வேலைக்குத் தேவை யில்லை' என்று கட்டளைபோடுகிறது. இது ராகு- கேது செய்யும் திருவிளையாடல். அதேசமயம் 6, 9-க்குடைய குரு கடக ராசி யையும், அங்குள்ள ராகுவையும் பார்ப்பதால், "இந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம்' என்ற துணிவை ஏற்படுத்தலாம். "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க- என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று கவியரசர் பாடியதை நினைவு கூரவேண்டும். "மரம்வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்!' என்ற துணிவு வேண்டும்! எந்த வேலைக்காரனுக்கும் யாரும் முதலாளி இல்லை. ஆண்டவன்தான் எல்லாருக்கும் ஒரே முதலாளி! அண்ணல் மகாத்மா காந்தி "கஸ்டமர்தான் முதலாளி' என்று சொன்னார். கோட்டும் சூட்டும் அணிந்து "பாரிஸ்டர் பட்டம்' பெற்ற மகான் காந்தியடிகள்தான், முழங்கால் அளவு வேட்டியும் மேல்துண்டும் அணிந்து எளிமையானது மதுரையில்தான். அகிம்சைவழியில் வெள்ளையனை வெளி யேற்றி, பாரதத்துக்கு விடுதலை வாங்கித் தந்த காரணத்தால்தான், நன்றிக்கடனாக இந்திய கரன்ஸி நோட்டுகளில் மகாத்மாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது! அவர் கடைப்பிடித்த உறுதியும், சத்தியாக்கிரக வைராக்கியமும் இருந்தால், நீங்களும் வாழ்க்கையில் உன்னதம் அடையலாம். அப்படிப்பட்ட உத்தமரையும் ஒருவனுக்குப் பிடிக்காமல்தானே சுட்டுக் கொன்றான். என்ன கொடுமை? அந்த நிலையிலும் "அய்யோ அப்பா' என்ற வார்த் தைகள் அவர் வாயிலிலிருந்து வெளிவரவில்லை. "ராம் ராம்' என்ற புனித மந்திரம்தான் வெளிப்பட்டது. அதுதான் தியாக வாழ்வு! கடக ராசிக்காரர்களும் அப்படி ஒரு தியாக வாழ்வை மேற்கொள்ளவேண்டும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

சிம்ம ராசிக்கு 4-ல் குரு, சுக்கிரன் சேர்க்கை. குரு 5-க்குடையவர். சுக்கிரன் 10-க்குடையவர். ஒரு திரிகோணாதிபதியும், ஒரு கேந்திராதிபதியும் (5- திரிகோணம், 10- கேந்திரம்) சேர்ந்தாலும் அல்லது பார்த்துக் கொண்டாலும் ராஜயோகம் எனப்படும். அத்துடன் ராசிநாதன் சூரியனும் 5-ல் திரிகோணம். ஆகவே உங்களுடைய எண்ணம், செயல், நடவடிக்கைகள் எல்லாம் திட்ட மிட்டபடி வெற்றியாகும். அதேசமயம் 6-க்குடைய சனி 5-ல் இருப்பதால், சில இடையூறுகளும், குறுக்கீடுகளும் ஏற்படத் தான் செய்யும். 4, 9-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதும் அதற்குத் துணைபோகலாம். என்றாலும் செவ்வாய், குரு பரிவர்த்தனை என்பதாலும், 2, 11-க்குடைய புதனும் 5-ல் ராசிநாதனோடு சேர்க்கை எனபதாலும், தடைகளைக் கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். சில வளைவு ரோடுகளில் அல்லது பள்ளியருகில் "ஸ்பீட் பிரேக்' இருப்பது போலத்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். போராட்டக்காரர்களின் சாலை மறியல் காரணமாக பயணம் தேக்கமாகி விடாது. 12-ல் உள்ள ராகு தவிர்க்கமுடியாத விரயங்களையும், செலவுகளையும் உண்டாக் கினாலும், அதற்கு குருபார்வை கிடைப்பதால், எல்லாம் நன்மைக்கே என்று முடியும். 6-ஆம் இடத்தில் கேது; போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளை வென்று பயணிக்கலாம். 9-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதால், சிலருக்கு பூர்வீக பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான பிரச்சினைகளினால் சஞ்சலமும், சங்கடங்களும் ஏற்படலாம். என்றாலும் குரு பார்ப்பதால் அவற்றை நம்பிக்கையோடும், விடாமுயற்சியாலும் போராடி ஜெயிக்கமுடியும்! உங்கள் விடாமுயற்சிக்கு தெய்வத்தின் அனுகூலமும் கிடைக்கும். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். இந்தக் காலத்தில் ஒன்று படைபலம் வேண்டும் அல்லது பணபலம் வேண்டும். இந்த இரண்டும் இல்லையென்றால் தெய்வபலம் இருந்தால்போதும்! திக்கற்றவருக்கு தெய்வமே துணை. திருநாவுக்கரசரை சோழமன்னன் கைகாலைக் கட்டி கடலில் தூக்கிப் போட்ட போதும் "நற்றுணையாவது நமச்சிவாயவே' என்றுபாடி கரையேறினார்! அதிகார பலத் தாலும், பதவி, செல்வாக்கு, பணபலத்தாலும் தகாத செயல் புரிந்தவர்கள் சிறையில் வாடிவதங்குவதே இதற்கு உதாரணம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 4-ல் அஸ்தமனமாக இருக்கிறார். ஆரம்பத்தில் கேது சாரத்திலும், பிறகு சுக்கிரன் சாரத்திலும் சஞ்சாரம்! கேது 5-ல். சுக்கிரன் 3-ல். 5-க்குடைய சனி 4-ல். எனவே உங்கள் கொள்கையிலும், எண்ணங்களிலும், திட்டங்களிலும், செயல்களிலும் வைராக்கியமாகவும், திட்ட மிட்டும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அதற்கு முக்கிய காரணம் குரு 9-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தப்பட்டு, 9-ஆம் இடத்தைப் பார்ப்பதுதான். 5-ம், 9-ம் பூர்வ புண்ணியஸ்தானம். 5- உபாசனா ஸ்தானம். 9- தெய்வ வழிபாட்டு ஸ்தானம், குலதெய்வ ஸ்தானம். ஆகவே உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமைந்து வழி நடத்தும். ஒரு இரவில் மகா சிவராத்திரி புண்ணிய காலத்தில் ஒரு குரங்கு வில்வமரத் தின்மேல் புலிலிக்குப் பயந்து உட்கார்ந்திருந்தது. மரத்தின் அடியில் ஒரு புலிலி அதை வேட்டை யாடிக் கொல்லக் காத்திருந்தது. குரங்கு தூங்காமல் இருக்க வில்வமரத்து இலையை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழேபோட்டது. மரத்தின் அடியில் ஒரு சிவலிலிங்கம். அதன் தலையில் வில்வ இலை விழ அதுவே வில்வ அர்ச்சனையாக மாறியது! விடிந்ததும் புலிலி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து போய்விட்டது. ஈஸ்வரன் தோன்றி குரங்குக்கு மறுஜென் மாவில் அரசனாகும் வரம் தந்தார். அப்படியே அரசனாகும் பாக்கியம் கிடைத் தாலும், இந்த நினைவு மறவாமல் இருக்க குரங்கு முகமாகப் படைக்க வேண்டும் என்று வரம் கேட்டது. அந்தப் பிறவிதான் முசுகுந்த சக்கரவர்த்தி. (முசு என்றால் குரங்கு). பூர்வ புண்ணிய பலமிருந்தால் குருவருளும் திருவருளும் உண்டாகும்! ஏழுக்குடைய குருவும், 3-க்குடைய செவ்வாயும் பரிவர்த் தனை. அதனால் நண்பர்கள் வகையிலும், உடன்பிறப்புகள் வகையிலும் நிலவும் வருத்தங் களும், கருத்து வேறுபாடுகளும் இனிமேல் நிவர்த்தியாகும். பரிவும் பாசமும் பெருகும். உதவியும் ஒத்தாசையும் உருவாகும். நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று பிரித்துப் பார்க்கமுடியாமல் பிணைப்பும் இணைப்பும் ஏற்படும். தந்தை ஸ்தானத்தில் இருந்து தம்பிக்குச் செய்ய வேண்டிய கடமை, காரியங்களையெல்லாம் செய்யலாம்! அவர்களின் நன்றியை எதிர் பார்க்க வேண்டாம்! விசுவாசத்தை விரும்ப வேண்டாம்! உங்கள் நற்செயலுக்கு இறைவன் ஏட்டில் பாராட்டுக்கு இடம் உண்டாகும். மாயத் தடாகத்தில் நீர் அருந்திய பஞ்ச பாண்டவர்களில் தருமர் தவிர, மற்ற நான்கு பேரும் மரணமடைந்தபோது, தருமர் மட்டும் யட்சனின் கேள்விக்கு விடைகூறி மற்ற நான்கு பேரையும் உயிர்ப்பிக்கவில்லையா?

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் குருவோடு சேர்க்கை. குருவும், அவர் களுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் பரிவர்த் தனை. செவ்வாய் 6-ல் மறைந்தாலும், துலா ராசியைப் பார்க்கிறார். வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஆகிய இரண்டாம் இடத்துப் பலன் களில், கொண்டாடும் விதத்தில் நல்லதே நடக்கும். 6-க்குடைய குரு 8-ஆம் இடத்தைப் பார்ப்பது ஒருவகையில் கெடுதல்; இன்னொரு வகையில் நல்லது. கெட்டவன் கெட்ட இடத் தைப் பார்த்தாலும், கெட்ட இடத்தில் இருந் தாலும் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற அடிப்படையில் நன்மை யாகும். டபுள் மைனஸ்= ஒரு பிளஸ் என்பது விதி! 6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு பாக்கிய ஸ்தானம். அத்துடன் 8-ஆம் இடத்துக்கு அது லாப ஸ்தானம்; ஜெய ஸ்தானம். எனவே 6-ல் உள்ள செவ்வாய் தொழில் சம்பந்தமாக அல்லது வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளுக் காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் அது சுபக்கடனாகும்; விருத்திக்கடனாகும். அப்படிக் கடன் வாங்கி செயல்படுவதால் சில எதிர்பாராத முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். சக்திக்குமீறிய விலை மதிப் புடைய சில பொருட்களை, சில குடும்பப் பெண்கள் ரொக்கம் கொடுத்து வாங்க இயலாத போது தவணை முறையில் வாங்குவார்கள். அசலைவிட வட்டி சேர்த்து அதன் மதிப்பு அதிகமாக இருந்தாலும், வாரத் தவணை அல்லது மாதத்தவணையில்- எளிய தவணை யாக வாங்கும்போது கஷ்டம் தெரியாது. சுமை தெரியாது. ஆடை, துணிமணி, சேலை, பண்டம் பாத்திரங்கள் போன்றவையெல் லாம் ரொக்கம் கொடுத்து வாங்குவதற்கு பதில், அதிக, விலையானாலும் எளிய தவணையில் பெரும்பாலான தாய்மார்கள் வாங்குவது பழக்கம்! இதுதான் 6, 8 சம்பந்தப்பட்ட பலன்! நீங்களும் இப்படி சிறுசேமிப்பில் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். அதேபோல சிறுசேமிப்பு, மகளிர் குழு, சீட்டு போன்ற வகையிலும் சேர்ந்து பயனடையலாம். 4-ல் உள்ள கேது சிலருக்கு சுகக்குறைவையும், 10-ல் உள்ள ராகு சிலருக்கு போட்டி, பொறாமைகளையும், திருஷ்டி தோஷங்களையும் ஏற்படுத்தலாம். நாம் யார் விஷயத்தில் தலையிடாவிட்டாலும், யார் வம்புதும்புக்கும் போகாவிட்டாலும் கலியுக தர்மத்தில் அக்கம்பக்கத்தாரின் போட்டி, பொறாமை, கண்திருஷ்டிக்கு ஆளாக நேரும். செவ்வாய்க்கிழமைதோறும் திருஷ்டி கழித்து சுற்றிப்போட வேண்டும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் குரு வீட்டிலும், அவருக்கு வீடு கொடுத்த குரு ஜென்ம ராசியில் விருச்சிகத்திலும் இருப்பது பரிவர்த்தனை யோகம். ஜாதகத்தில் பல நூற்றுக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பிட்ட ஒருசில யோகம், முக்கியத்துவம் உடையவை. தர்மகர்மாதிபதி யோகம், குருச்சந்திர யோகம், பானுபுத யோகம், சசிமங்கள யோகம், கஜகேசரி யோகம் போன்றவற்றில் பரிவர்த்தனை யோகமும் ஒன்று. பரிவர்த்தனை யோகத்தில் ஒன்றுக்குமேற்பட்ட கிரகப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அந்த ஜாதகர் கோட்சாரம் அல்லது தசாபுக்திரீதியாக வீழ்ந்தாலும், மீண்டும் எழுந்துவிடலாம். இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இந்திராகாந்தி அம்மை யாருக்கும் கருணாநிதிக்கும் அப்படிப்பட்ட பரிவர்த்தனை யோகம் இருந்தது. அதனால் ஏழரைச்சனியின் தாக்கம் குறைந்து உங்களுக்கு ஊக்கம் உண்டாகும். ஆக்கம் ஏற்படும். இப்படிப் பரிவர்த்தனை யோகத்தில் 5, 9 என்ற திரிகோணப் பரிவர்த்தனையும், 4, 7, 10 என்ற கேந்திரப் பரிவர்த்துனையும் மிக யோகமானது. 6, 8, 12 என்ற பரிவர்த்தனை யோகம் விபரீத யோகமாகும். விபரீத யோகம் என்பதில் சிலசமயம் விபரீத ராஜயோகமாகவும் அமையும். சிலசமயம் விபரீத நாசயோகமாகவும் அமையும். விருச்சிக ராசிக்கு 9-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் குருவும் உங்களுக்கு குருவருளையும் திருவருளையும் அடையச் செய்யும். சிலருக்கு குரு உபதேசம் கிடைக்கும். சிலருக்கு ஜோதிடம், வைத்தியம், ஆன்மார்த்த வழிபாடு போன்ற மணிமந்திர ஔஷத ஈடுபாட்டை ஏற்படுத்தும். சிலருக்கு குலதெய்வ, இஷ்ட தெய்வ, அபிமான தெய்வ வழிபாடும் அருளும் உருவாகும். சிலர் அருள்வாக்கு சொல்லலாம். திருப்பணி கைங்கர்யத்தில் ஈடுபடலாம். தெய்வீக, ஆன்மிகச் சுற்றுலா போகலாம். தந்தைவழி, பாட்டனார்வழி சொத்துப் பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான திருப்பங்களும், தீர்ப்புகளும் எதிர்பார்க்கலாம். ஒருசிலர் ஆகாத போகாத பயன்படாத சொத்துகளை விற்று பயன் தரும் இடங்களில், பலன்பெறும் வகையில் பரிவர்த்தனை செய்யலாம். இடங்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், விரும்பியபடி நிறைவேறவும் பொன்னமராவதி அருகில் பூமிநாதசுவாமியை வழிபடலாம். விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமியையும் வழிபடலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவது ஒருவகையில் குற்றம் என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை யோகமாக இருப்பது அனுகூலமாகும். நெல்லிக்காய் முதலில் துவர்ப்புச் சுவையாக இருந்தாலும், உமிழ் நீரோடு சேரும்போது இனிப்புச்சுவையாக மாறுவதுபோல, உங்களுக்கு இனிமை சேர்க்கும். அத்துடன் ஜென்ம ஏழரைச்சனி நடந்தாலும், ஒன்பதுக்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் தர்மகர்மாதிபதிகளாக இணைந்திருப்பது ஒருவகையில் யோகம் தான்! தேன் தானும் கெடாது- தன்னோடு சேர்ந்த பொருட்களையும் கெடவிடாது. அதுபோல நல்லோர் நட்பும், குருவின் அருளும், தெய்வத்திருவருளும் உங்களை வழிநடத்துவதால் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. என்றாலும், சனி- கேது சாரம் பெறுவதால், சிலருக்கு ஆரோக்கியக்குறைவும், சிலருக்கு வேலையில் ஓய்வு ஒழிச்சல் இல்லாத நிலையும், சிலருக்கு குடும்பத்தில் நடக்கவேண்டிய நல்ல காரியங்களில் தடையும், தாமதமும் போன்ற பலன்கள் காணப்படலாம். அதனால் காலதாமதம், காசு பணம் செலவு போன்ற பலன் இருந் தாலும், முடிவில் விருப்பம் நிறைவேறும். எண்ணியது ஈடேறும். கருதியது கைகூடும். நினைத்தவை நிகழும்! ஏழரைச்சனி சிலருக்கு பொங்குசனியாகவே பொலிவைத் தரும். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்த கணக்கு.' நல்லவர்களுக்கு சனி பொங்குசனி! அல்லாதவர்களுக்கு சனி மங்குசனி! பொல்லாதவர்களுக்கு சனி மரணச் சனி! ஆக சனி பகவான் குற்றவாளியை தண்டிக்கும் நீதியரசருக்குச் சமம்! மனம், வாக்கு, காயம் இவற்றால் தவறு செய்யா தவர்கள் சனியைக் கண்டு பயப்படத் தேவையில்லை. குரு 12-ல் இருப்பதால், செல வுகள் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவு, பயனுள்ள செலவு! சிலர் ஆன்மிகச் சுற்றுலா, ஆலய வழிபாடு, பிரார்த் தனை என்று புனிதமார்க்கத்தில் மனதைச் செலுத்தி இனிமையடையலாம். குரு- செவ்வாய் பரிவர்த்தனையும் இதற்கு ஒரு காரணம்! பிள்ளைகள் வகையில் தொல் லைகள் விலகி, நல்லவை நடைபெறும். பேரன்- பேத்தி வகையில் பேரானந்தம் பெருகும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு சனி ராசிநாதன். 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு, அவருக்கு 12-ல் மறைவு. குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 3-ல் மறைவு என்றாலும், குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம். எனவே அலைச்சலும் திரிச்சலும், பயணங் களும் அதனால் செலவினங்களும் அதிகம் காணப்படலாம். என்றாலும் 5-க்குடைய சுக்கிரன் குருவோடு சேர்ந்து, இருவரும் (குருவும் சுக்கிரனும்) 5-ஆம் இடத்தைப் பார்ப் பதால், மனது நிறைவாக இருக்கும்; மகிழ்ச்சியாக விளங்கும்; திருப்தியாக அமையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி என்பது இருந்தால் தான் அது நிறைவாகும். குருவும் சுக்கிரனும் 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அந்த திருப்தி யும் நிறைவும் உங்களுக்குக் கிடைக்கும். 5-ஆம் இடம் என்பது (மக்கள்) பிள்ளைகள் ஸ்தானம். 7-ஆம் இடம் என்பது கணவர் அல்லது மனைவி ஸ்தானம். இந்த இடங்களை குரு பார்ப்பதால், மனைவி, மக்கள் வகையில் உங்களுக்கு முழுமையான நிறைவும் நிம்ம தியும் நற்பலனும் உண்டாகும். 7-ல் ராகு நிற்பது ஒருவகையில் மைனஸ் பாயின்டு தான் என்றாலும், குரு பார்ப்பதால் கோடி தோஷம் விலகும். 6-க்குடைய புதனும், 8-க்குடைய சூரியனும் 12-ல் மறைவதும் தோஷம். ஆனாலும், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல உங்களுக்கு மைனஸ்ல மைனஸ்= பிளஸ் ஆகிவிடும். (டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ்). சிற்சில நேரங்களில் கணவன்- மனைவிக்குள் தர்க்கவாதங்கள் எழுந்தாலும் குரு பார்ப்பதால் நிவர்த்தியாகும். 7-ல் உள்ள ராகு மேற்கண்ட துர்ப்பலனை உருவாக் கினாலும், 11-ஆம் இடத்து குரு பார்வை அதை சரிசெய்யும். செலவுகள் தவிர்க்க முடியாதவை! அதிலும் விரயச்சனி! ஆகவே பயனுள்ள- பலன் தரும் சுபச்செலவு களாக அதை மாற்றிக்கொள்வது புத்தி சாலித்தனமாகும். ஏழரைச்சனியின் பலனை பொங்குசனியாக மாற்றச்செய்ய, சனிக் கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் மிளகு தீபம் ஏற்றவேண்டும். அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து (அந்த எண்ணிக்கை அளவு) மிளகை சிவப் புத்துணியில் பொட்டலம் கட்டி தீபம் ஏற்றவும். சனி பகவானுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் எள்தீபம் ஏற்றக்கூடாது. அதற்கு பதிலாக நல்லெண்ணெய் திரிதீபம் ஏற்றலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக் கிறார். 12-ல் இருக்கும் கேது சாரம் பெறு கிறார். அதேசமயம் அஸ்தமனமாகவும் இருக்கிறார். 12-க்குடைய சனி அஸ்தமனம் அடைவது நல்லது. ஆனால் ராசிநாதன் அஸ்தமனம் அடைவது கெடுதல்! ஓட்டைப் பானையில் கிணற்றில் நீர் இறைத்து தண்ணீர் நிரப்புவதுபோல, உங்கள் முயற்சி யாவும் வீணாகிவிடும். நல்லதே செய்தாலும் அது உங்களுக்கு எதிர் மறைப்பலனாக மாறும். 11-க்குடைய குரு 10-ல் இருப்பதும், அவருடன் 9-க்குடைய சுக்கிரன் சேர்ந்திருப்பதும் நல்லது. அதிலும் 9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்பதால், எல்லா வகையிலும் உங்களுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். அதாவது தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சியைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனி யாகப் போட்டி போடும்போது, ஓட்டுகள் சிதறி ஆளும்கட்சி எதிர்பாராத விதமாக வெற்றியடைவது மாதிரி! நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது வாதிக்கு ஆதரவாக சாட்சி சொன்னவர்கள் பல்டி அடித்ததும், பிரதிவாதிக்கு அனுகூலமாக மாறி, பிரதி வாதிக்கு சாதகமாகி வெற்றி பெறுவதுபோல! 6-ல் உள்ள ராகு உங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும். போட்டி, பொறாமைகளைத் தூளாக்கி வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்யும். 12-ல் உள்ள கேது அதற்காக செலவு களை ஏற்படுத்தினாலும், செலவு முக்கிய மல்ல; சாதனையே முக்கியம்! வெற்றியே பிரதானம்! ஒரு அசுரனை ஜெயிக்க- கிருஷ்ண பரமாத்வுக்கு பாமா துணையாக நின்று உதவி செய்ததுபோல, உங்களுடைய முயற்சிக்கும் வெற்றிக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது வாழ்க்கைத்துணைவர் காரணமாக அமையலாம். ராசிநாதனும் சப்தமாதி பதியும் (சனியும் சூரியனும்) 11-ல் நிற்பதே இதற்குக் காரணம்! செவ்வாய்- குரு பரிவர்த்தனை யோகத்தால் தொழில்துறையில் தனலாபம் பெருகும். பதவியில் உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். படித்துப் பட்டம் பெற்றும் நல்ல வேலை, சம்பாத்தியம் இல்லா தவர்களுக்கு இக்காலம் தகுதிக்கேற்ற நல்ல வேலையும், அதற்குச் சமமான வருமானமும் அமையும். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். கைநிறைய சம்பாதிக்கலாம். சொந்த ஊரில் வீடு, வாகனம் போன்ற யோகங்களையும் அடையலாம். 2, 9-க்குடைய செவ்வாய் 2-ல் பரிவர்த்தனையாவதால், குடும்பத்தில் திருப்தி உண்டாகும். நல்ல பலன்கள் உண்டாகும். மங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். வர வேண்டிய பாக்கிசாக்கிகள் வந்துசேரும். அரசுப்பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப். போன்ற தொகைகள் எல்லாம் வந்துசேரும். அதனால் பழைய கடன்களையெல்லாம் அடைத்துவிடலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது யோகம்! அதுமட்டுமல்ல; 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம்! 12 ராசிக்காரர்களிலும் இப்போது மீன ராசிக்கு மட்டுமே கோட்சாரம் முழு அளவில் யோகமாக அமைகிறது. அதாவது தர்மகர்மாதி யோகம் என்பது ஒன்று. ராசி நாதனும், 10-க்குடையவரும் பரிவர்த்தனை என்பது இன்னொன்று. லாபாதிபதி சனி 10-ல்; 4, 7-க்குடைய புதனுடன் சம்பந்தம். 6-க்குடைய சூரியன் சம்பந்தம். சூரியன் 6-க்குடையவர் என்றாலும், 10-க்கு பாக்கியாதிபதியாவார். எனவே உங்களுடைய தொழில், வேலை, வருமானம் இவற்றில் எந்தக் குற்றம் குறையும் வராது. எந்த பாதிப்புக்கும் இடமில்லை. அதேசமயம் 3, 8-க்குடைய சுக்கிரன் 9-ல் 10-க்குடையவருடன் சம்பந்தம் என்பதால், உடன்பிறந்தவர்களே போட்டி, பொறாமை கொண்டு மறைமுக இடையூறு செய்யலாம். சிலரது அனுபவத்தில் பழகிய நண்பர்களே ஐந்தாம்படையாக சதி செய்வார்கள். முகத்துக்கு நேராக இனிப்பாகப் பேசி, முதுகுக்குப் பின்னால் எல்லாக் கெடுதல்களையும் செய்து, மறைமுக சதி செய்வார்கள். இருந்தாலும் 9-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால், எந்த சதியும் கெடுதலும் உங்களை அணுகாது. கெடுக்காது. அதேபோல வரவு எட்டணா- செலவு பத்தணா என்ற அளவில் வரவுக்குமீறிய செலவுகளைச் சந்தித்தாலும், "இறைக்கிற கிணறுதான் ஊறும்' என்ற பழமொழிக்குத் தக்கபடியும் ஓரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற தத்துவப்படியும் சமமாகும். ஒருபக்கம் செலவுகள் ஏற்பட்டாலும், இன்னொரு பக்கம் வரவுக்கும் திட்டங்கள் வகுக்கப்படும். பொருளா தாரத்திலும், வரவு- செலவுகளிலும் குடும்பச் சூழ்நிலையிலும், தொழில்வகையிலும் திருப்தியான பலன்கள் நடக்கும் என்றாலும், 5-ல் உள்ள ராகு மனதில் நிறைவை ஏற்படுத்தாது. திருமண விருந்தில் கடைசிப் பந்தியில் அமரும்போது அப்பளமோ, வடையோ, பாயசமோ அல்லது ஏதாவது ஒரு கறியோ தீர்ந்துபோய் பற்றாக் குறையோடு சாப்பிட்டு எழுவதுபோல ஒரு நிலை! அதற்காக மனம் தளராமல் முழுவேகத்தோடும் நம்பிக்கையோடும் செயல்படுங்கள்! "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத் தக்கூலி தரும்' என்பது வள்ளுவர் வாக்கு! அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான்! அரசனாக இருந்தவர் துறவியாகி தவம் இருந்தார். கடுமை யாகத் தவம் இயற்றினார். அவரது தவத்தை சகுந்தலை கெடுத்தாள். அடுத்து திரிசங்கு கெடுத் தார். என்றாலும் மீண்டும் மீணடும் தவம் இயற்றி வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். அதுபோல மீன ராசிக்காரர்களும் தங்களது முயற்சியாலும் வைராக்கியத்தாலும் நினைத்ததை அடையலாம்.