ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

22-7-2018 முதல் 28-7-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

22-7-2018- விருச்சிகம்.

24-7-2018- தனுசு.

26-7-2018- மகரம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூசம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 4, 3.

புதன்: பூசம்- 3, 2, 1.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: பூசம்- 2, 3, 4.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 3.

கேது: திருவோணம்- 1.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், அஸ்தமனம்.

செவ்வாய் வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். அத்துடன் வக்ரம். வக்ரமடையும் கிரகங்கள் நல்ல இடத்தில் இருந்தால் நல்லது வேகமாக நடக்கும். கெட்ட இடத்தில் இருந்தால் கெட்டதும் வேகமாக நடக்கும். செவ்வாய் ராசிநாதன் என்ற அந்தஸ்தோடு 10-ல் உச்சம் பெறுகிறார். உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதை காப்பாற்றப்படும். செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். வேலையிலும் விருப்பம்போல் நற்பலன்கள் நடக்கும். 9-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் பண வசதி, பொருள் வசதி தாராளமாகக் காணப்படும். உபரி வருவாய்க்கும் வாய்ப்புகள் ஏராளம் உண்டு. சிலருக்கு திடீர் தனப்ராப்தி வரும். 6-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் போட்டி, பொறாமைகள், எதிர்ப்பு, இடையூறுகள், கடன்கள், வைத்தியச்செலவு போன்ற 6-ஆமிடத்துப் பலன்கள் தாராளமாக இருந்தாலும், 6-க்குடைய புதனை ராசிநாதன் பார்ப்பதால் எல்லாவற்றையும் தைரியமாக சந்தித்து சமாளித்துவிடலாம். மேலும் 6-க்குடைய புதன் அஸ்தமனம் என்பதால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற விதிப்படி கெடுதல்கள் மறையும். நல்லதே நடக்கும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பிணி பீடைகள் வந்து விலகும்; பாதிக்காது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைவு. 8-ல் நிற்கும் சனியின் சாரம் (பூசம்.) அதேசமயம் ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி ஆவார். சனி வக்ரம். சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். சில காரியங்கள் மிகத் தாமதமாக- மெதுவாக தடைப்பட்டுத் தடைப்பட்டு நிறைவேறும். எப்படியோ காரியம் நடந்துவிட்டது என்ற திருப்தி ஏற்படும். அவசரமாகப் போகவேண்டிய முக்கியமான காரியத்திற்கு திடீரென வழியில் மழை பெய்து செல்லவேண்டிய இடத்திற்கு தாமதமாகச் செல்வதுபோல! உடன்பிறந்தவர்களால் சில நன்மைகளும் சகாயங்களும் உதவிகளும் எதிர்பார்க்கலாம். வெளியூர்ப் பயணத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் நன்மைகளும் நடக்கும். நீங்கள் பிறந்த இடத்தில் இருந்தோ அல்லது சம்பந்தம் செய்த இடத்தில் இருந்தோ சில நன்மைகள் உண்டாகும். ஒருசிலருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினை என்றாலும் ராஜ வைத்தியத்தால் பூரண குணம் ஏற்படும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் சனி பிள்ளைகள் வகையில் தொல்லைகளை உருவாக்கலாம். நல்லவற்றைத் தடைப்படுத்தலாம். "நீரடித்து நீர் விலகாது' என்ற முறைப்படியும், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற முறைப்படியும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் வக்ரம், அஸ்தமனம், சனியின் சாரம். சனி 7-ல் இருக்கிறார். அவர் 8, 9-க்குடையவர். அத்துடன் 7-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் வாக்குவாதமும் குழப்பமும் உருவாகும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதே காரணம். அழகையும் பணத்தையும் எதிர்பார்த்து பெண் எடுத்தவர்கள் குணக் கேடான மருமகளை சமாளிக்க முடியாமல் சங்கடப்படுவார்கள். பணமா பாசமா என்றால் பாசம்தான் பெரிது. 7-க்குடைய குரு சொந்த சாரம் பெறுவதால் (விசாகம்-1) வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். செய்முறை சீர்வரிசை அல்லது இணக்கமான பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாத காரணத்தால் பிரிந்திருந்த தம்பதிகள் இனி ஒன்றுகூடும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம். 6-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவது நல்லது. எதிரி, போட்டி, பொறாமை, கடன்கள் குறையும். கடன்கள் கட்டுக்கடங்கி இருக்கும். பங்காளிப்பகை மாறும். சகோதர ஒற்றுமை பலப்படும். கடன் வாங்கி கடன் கொடுப்பதாலும் சிலசமயம் நன்மைகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் சௌகரியம் உண்டாகும்.

amman

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் நான்கு கிரகங்கள் நிற்க, 7-ல் இரண்டு கிரகங்கள் நின்று பார்க்கிறார்கள். 4-ல் குருவும், 6-ல் சனியும் தனித்து இருக்கிறார்கள். ஆக, ஒன்பது கிரகங்களும் நான்கு ராசியில் நிற்பது நங்கூர யோக ஜாதகம் எனப்படும். அத்துடன் 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். மேலும் 10-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார்; ராசியையும் பார்க்கிறார். எந்த வேலையைத் தொட்டாலும் அந்த வேலையை மந்தமில்லாமல் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் நூற்றுக்கு நூறு வெற்றியாகும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உழைப்பிற்கேற்ற கூலி கிடைக்கும். அதைத்தான் வள்ளுவர் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்றார். தெய்வம் தரும் வரம் (கூலி) உங்கள் தவத்தின் அளவைப் பொருத்தது. அல்லது பூர்வ புண்ணிய பலனைப் பொருத்தது. ஆனால் முயற்சிக்கு கைமேல் பலன் உண்டு. பகீரதன் முயற்சியினால் கங்கையை வரவழைத்தான். விஸ்வாமித்திரரும் தவத்தால் பிரம்மரிஷி ஆனார். தவத்தால் என்பதற்கு இங்கு முயற்சி என்று பொருள். ஆக, முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு 12-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய நான்கு பேரும் மறைகிறார்கள். 6-ல் செவ்வாயும் கேதுவும் மறைகிறார்கள். சந்திரனைச் சேர்க்காமல் மற்ற எட்டு கிரகங்களில் ஆறு பேர் மறைவதோடு குருவும் 3-ல் மறைகிறார். மிஞ்சியுள்ள ஒரே கிரகம் சனி 5-ல் நின்று 7-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும் பார்ப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்கால கோட்சார நிலை சிலருக்கு மனைவியிழப்பு, குடும்ப இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் நிலை. மனைவி, குடும்பம் இருந்தும் சிலர் காவிகட்டாத சந்நியாசியாக வாழும் நிலை ஏற்படலாம். பெண்டு பிள்ளைகளைவிட்டுப் பிரிந்து ஹோட்டல் சாப்பாடு அல்லது தானே சமைத்துச் சாப்பிடும் நிலை ஏற்படலாம். 5-ஆமிடத்துச் சனி 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் பொருளாதாரத்திலும் வருமானத்திலும் பிரச்சினைகள் இருக்காது. சிலர் "பேயிங்கெஸ்ட்' என்பதுபோல உறவினர் வீட்டில் பணம் கொடுத்து சாப்பிடும் நிலையும் ஏற்படலாம். சென்னையில் பத்து மணிக்கு மேல் ஆட்டோ கிடைக்காது. ஒன்பது மணிக்குமேல் ஹோட்டல் இருக்காது என்று முன்பு சொல்லுவார்கள். அந்தமாதிரி உறவினர் வீட்டுக்குள் தங்கினாலும் நேரத்தோடு குறிப்பிட்ட இடத்துக்குப் போகமுடியாது.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 11-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு நிற்கிறார்கள். ராசிக்கு 5-ல் செவ்வாயும் கேதுவும் நிற்கிறார்கள். ராசிக்கு 4-ல் உள்ள சனி 6-ஆமிடம், 10-ஆமிடம், ஜென்ம ராசியைப் பார்க்கிறார். 4, 7-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. தாராளமான வரவு- செலவுக்கும் பஞ்சமில்லை. வரவுக்கேற்ற செலவுகளுக்கும் குறைவில்லை. அதனால் மிச்சப்படுத்தும் நிலையும் இல்லை. 6-க்குடைய சனி அதற்கு 11-ல் நிற்க, சனிக்கு வீடு கொடுத்த குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால், ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்க நேரிடும். ஒருசிலர் தவணைக்கடன் வாங்கியே வாழ்க்கையை ஓட்டுவார்கள். பழைய தவணை முடிவதற்குள் புதிய தவணை வாங்குவதால் இரண்டு வகையிலும் வட்டி நட்டம் ஏற்படும். எது எப்படிப் போனாலும் 2-ஆமிடத்து குரு வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுவார். மதிப்பு, மரியாதையையும் காப்பாற்றுவார். 8-க்குடைய செவ்வாயும் கேதுவும் 5-ல் நிற்பதால், ஒருசிலர் பிள்ளைகளால் தொல்லைகளையும் மனவருத்தங்களையும் சங்கடங்களையும் சந்திக்கலாம். யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசியில் 3, 6-க்குடைய குரு ஜென்ம குருவாக இருக்கிறார். 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களை பார்க்கிறார். "ஜென்ம குரு ராமர், சீதையை வனத்திலே சிறை வைத்ததும்' என்பது பாடல். ஆக, குரு நிற்கும் இடம் மோசமாக இருந்தாலும், பார்க்கும் இடங்கள் நன்மையாக (5, 7, 9) நடக்கும். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் தவறுகளும் இன்னொரு வகையில் நன்மையாக முடியும். 5-க்குடைய சனி 5-ஆம் இடத்தையே பார்ப்பதால் நீங்கள் விரும்பியதுபோல எல்லாம் நிறைவேறும். மக்கள் உதவி, ஆதரவு கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். மனைவி, மக்களின் ஒத்துழைப்பும் உங்களை உற்சாகப்படுத்தும். தெய்வ அருளும் தெய்வ பலமும் தெய்வானுகூலமும் எல்லாம் கிடைக்கும். ஒருசிலர் நீண்டகாலமாக நிறைவேற்ற முடியாத பிரார்த்தனைகளை இக்காலகட்டத்தில் நிறைவேற்றலாம். ஆன்மிக வழிகளில் நாட்டம் உருவாகும். ஈடுபாடும் செயல்வேகமும் ஏற்படுவதோடு உங்கள் முயற்சியால் குலதெய்வத்திற்கு அல்லது இஷ்ட தெய்வத்திற்கு திருப்பணி கைங்கரியமும் நிறைவேறும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். மன தைரியத்திற்கு குறைவில்லை. ராகு- கேது சம்பந்தம். சிலர் வெட்டி ஜபர்தஸ்து செய்வார்கள். வேலைபார்த்த இடத்தில் இருந்து விலகி மற்றொரு இடத்திற்கு சிலர் மாறலாம். ஆனால் அங்கு இக்கரைக்கு அக்கறை பச்சையாகத் தோன்றும். மீண்டும் பழைய இடத்திற்கே வருவதற்கு தன்மானமும் இடம் தராது. சிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். இன்னும் சிலர் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பிற்கு உறவினர்களிடம் கைமாற்றுக் கடன் வாங்க நேரிடும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு நல்ல வேலையாட்களும் விசுவாசமானவர்களும் அமைவார்கள். தொழில் நல்ல முறையில் அமையும். அதேபோல சிலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு மாறும். பொறுமையுடனும் நிதானத்துடனும் வேலை பார்க்க வேண்டும். 2-ல் உள்ள சனியும் 2-க்குடைய குருவும் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு எதிர்பாராத தனப்ராப்தி அமையும். 8-ஆமிடம் 5, 8, 11-க்குடைய சம்பந்தம் பெறுகிறபோது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச் சனி நடந்தாலும், 11-ல் சுயசாரம் பெறுவதாலும் ஜென்மச் சனி 2-ல் உள்ள கேதுவின் சாரம் பெற்று வக்ரமாக இருப்பதாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கோட்சார சனி பொங்கு சனியாக செயல்படும். முதல் சுற்றாக இருந்தாலும், இரண்டாம் சுற்றாக இருந்தாலும், மூன்றாம், சுற்றாக இருந்தாலும் எல்லாருக்கும் பொங்கு சனியாகவே பலன் தரும். அதேசமயம் முக்கியமான கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் 8-ல் மறைவதால் கெடுபலன்கள் இல்லையென்றாலும், மனதில் நிறைவும் நிம்மதியும் இருக்காது. உப்பில்லாத சாப்பாடு சப்பென்று இருப்பதுபோல மனதில் ஒரு குறை இருக்கும். குறை என்று சொல்வதைவிட நிறை இருக்காது என்று சொல்லலாம். சிலருக்கு வரவுக்கு மீறிய செலவு என்றாலும், எல்லாம் சுபச் செலவாக அமையலாம். பேங்க் டெபாசிட், இன்ஷ்யூரன்ஸ், சேமிப்பு, கட்டட வகை சுபச் செலவு, வாகன வகை முதலீடு, குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் போன்ற சுபச் செலவுகளாக அமையும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு விரயச்சனி நடக்கிறது. அந்தச் சனியும் வக்ரகதியாக இருக்கிறார். கேது சாரம் பெறுகிறார். கேது ஜென்ம ராசியில் செவ்வாயோடு சம்பந்தம். செவ்வாயும் வக்ரம். 10-ல் உள்ள குரு தனஸ்தானத்தைப் பார்க்கிறார். குடும்ப ஒற்றுமை, கணவன்- மனைவிக்குள் மகிழ்ச்சி, பிள்ளைகள் வகையிலும் நல்ல நிகழ்ச்சி, தொழில், உத்தியோகம், வேலையில் வளர்ச்சி எல்லாம் இருக்கும். அதேசமயம் உடல்நலத்தில் தளர்ச்சி- அதனால் மனதில் வருத்தம் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடத்தில் கடமை உணர்வோடு செயல்பட்டு மேலிடத்தாரின் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் முயற்சிகளில் நீண்டகால ஆசைகளும் கனவுகளும் லட்சியமும் நிறைவேறும். வெளிவட்டாரப் பழக்கவழக்கமும் ஆதரவாக அமையும். பழைய சொத்து, வீடு, மனை, வாகனம் லாபத்தோடு விக்கிரயமாகி புதிய சொத்து, வீடு, மனை, வாகனம் வாங்கலாம். குடியிருக்கும் வீட்டை சீர்திருத்தம் செய்யலாம். அதற்காக தனியார் கடனோ வங்கிக் கடனோ வாங்கலாம். அப்படி வாங்கும் கடன்களும் குறிப்பிட்ட காலத்தில் அடைபட்டு வாக்கு நாணயத்தையும் காப்பாற்றலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ஆமிடத்தில் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடு கொடுத்த குருவும் அவருக்கு 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். நினைப்பதெல்லாம் நிறைவேறும். நிறைவேறுவதையே நினைப்பீர்கள். அரசியல்வாதிகள் சொல்லுவதுபோல சொல்வதெல்லாம் நடக்கும். நடப்பதையே சொல்வீர்கள். முயற்சிகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் காணப்படும். கடினமான காரியங்களையும் எளிதாக சாதிக்கலாம். தெய்வ பலமும் மனித உதவியும் உங்களுக்கு ஆதரவாக அமையும். கருதிய காரியங்கள் கைகூடும். பழகிய நண்பர்களும் விசுவாசமான உறவினர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அண்டை அயலாரின் இடையூறுகளும் குறுக்கீடுகளும் உங்களைத் தடுத்தாலும் அவையெல்லாம் பொறாமை உணர்வுகளால் ஏற்படக்கூடிய சமாச்சாரம். அதைப் பொருட்டாகக் கருதாமல் லட்சியப் பயணம் மேற்கொள்ளுங்கள். வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்கலாம். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் உதயத்தைத் தடுக்கமுடியாது என்பதுபோல உங்கள் பயணம் தொடரும்; வெற்றியாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு குரு 8-ல் மறைவது குற்றம் தான் என்றாலும் (விசாகம்-1) சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் தோல்விக்கு இடமில்லை. தடைக்கு இடமில்லை. சில காரியங்கள் தாமதப்படலாம். மெதுவாக நடக்கலாம். ஹைவேஸ் ரோட்டில் ஒரு பக்கம் புது ரோடு அமைக்கும்போது மறுபக்கம் போக்குவரத்தை மாற்றிவிடுவதால் ஏற்படும் தாமதம்போல- தாமதமாகத்தான் இருக்கும்; தடைப்படாது; திசை திரும்பாது. 9-க்குடைய செவ்வாய் 11-ல் உச்சம் பெறுவதும், அவருக்கு வீடு கொடுத்த சனி 10-ல் பலம் பெறுவதும் உங்களுக்கு சாதகமான திருப்புமுனையாக அமையும். ஏழு அடிக்குக் கீழே உள்ள புதையலை எடுக்க ஆறு அடிவரை தோண்டிவிட்டு புதையல் இல்லையென்று ஏமாற்றமடைந்து விரக்தியாகி வெளிறிவன் புத்திசாலிலியா? அடுத்து வருகிறவன் ஒரு அடி தோண்டி அந்தப் புதையலை எடுத்து அனுபவக்கிறவன் அதிர்ஷ்டசாலிலியா! நீங்கள் புத்திசாலிலியா! அதிர்ஷ்டசாலியா என்பதை சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி உங்களைப் பின்தொடரும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பது பழமொழி.