6-5-2018 முதல் 12-5-2018 வரை

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

6-5-2018- மகரம்.

8-5-2018- கும்பம்.

11-5-2018- மீனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 3, 4, கிருத்திகை- 1.

செவ்வாய்: உத்திராடம்- 2, 3.

புதன்: அஸ்வினி- 2, 3, 4, பரணி- 1.

குரு: விசாகம்- 3, 2.

சுக்கிரன்: ரோகிணி- 3, 4,

மிருகசீரிடம்- 1, 2.

சனி: மூலம்- 3.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

10-5-2018- புதன் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். அவருக்கு வீடு கொடுத்த சனி 10-க்கு உடையவராகி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 9-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க- செவ்வாயும் (ராசிநாதன்) ராசியைப் பார்ப்பதும் பலம். எனவே இந்த வாரம் உங்கள் எண்ணங்களும் காரியங்களும் எண்ணம்போல் ஈடேறும். 5-க்குடைய சூரியன் உச்சம். 2-ல் சுக்கிரன் ஆட்சி. எனவே குடும்பத்தில் மனைவி- மக்கள், உறவினர்கள் வகையிலும் எந்த விதமான பின்னடைவுகளும் இல்லாமல் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். எண்ணுவதும் செயல்படுவதும் மனித முயற்சி! அதை நிறைவேற்றி வெற்றிபெற வைப்பது இறை கருணை! உங்களுடைய முயற்சிகளையும் திட்டங்களையும் முழுமையாக்கி வெற்றி பெறுவது உறுதி! குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். 4-ல் உள்ள ராகு- 10-ல் உள்ள கேது சிலருக்கு ஆரோக்கியக்குறைவு, தொழில், வேலையில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், ராசிநாதன் செவ்வாயின் சம்பந்தம் கிடைப்பதால் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு ஏற்படும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள், நிலுவைகள் எதிர்பார்த்தபடி வந்துசேரும். அதனால் வீடு, வாகனம் சம்பந்தமான திட்டங்கள் பூர்த்தியடையும். அதேபோல தொழில் முயற்சிகள் தொய்வின்றி உயர்வடையும். வேலை முன்னேற்றமும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும்- குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பதுபோல முடிவில் பலன் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும் நிறைவேற சூழ்நிலை சாதகமாக அமையும். நண்பர்கள் உதவியும் சகோதர வகை சகாயமும் குறைவற அமையும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். தொடக்கத்தில் மூன்றுக்குடைய சந்திரன் சாரத்திலும் (ரோகிணி) பிறகு 7, 12-க்குடைய செவ்வாயின் சாரத்திலும் சஞ்சாரம்! அட்டமத்துச்சனி நடந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு 6-ல் மறைவதால் சனி உங்களுக்கு பொங்கு சனியாகவே பொலிவைத் தருவார். 9, 10-க்குடையவர் 8-ல் மறைவது ஒரு வகையில் குற்றம்தான். என்றாலும்- 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பது பலம். எனவே தொழில், வாழ்க்கை, பதவி, வேலை இவற்றில் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும் யாவும் முடிவில் நன்மையாகவே அமையும். ஜெயஸ்தானாதிபதி (11-க்குடைய) குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கருதிய காரியங்களும் கைகூடும். கடமைகளும் நிறைவேறும். 8, 11-க்குடைய குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனப்ராப்தியும் கிடைக்கும். சிலர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும், கேரளா போன்ற வெளிமாநிலங்களிலும் நடைபெறும் லாட்டரி சீட்டுகளில் முதலீடு செய்து பெரும் லாபம் அடையலாம். 8-ஆம் இடம் விபத்து, மரணம், கண்டம் என்ற பலனைக் குறிக்கும் என்றாலும், அவர் 11-ஆம் இடம், 9-ஆம் இடம், 2-ஆம் இடங்களோடு தொடர்புகொள்ளும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறி யோகத்தை உண்டாக்கும். 3-ஆம் இடத்து ராகு ஒரு சிலருக்கு நண்பர்கள் வகையிலோ உடன்பிறப்புக்கள் வகையிலோ பங்காளி வகையிலோ எதிர்மறைப் பலன்களை உருவாக்கி ஏமாற்றத்தைத் தரலாம். ஆகவே எல்லாரிடமும் எல்லா ரகசியங்களையும் உளறிக்கொட்டாமல் இறுக்கமாக இருப்பது நல்லது. "பகலில் பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசாதே' என்ற பாலிசியைக் கடைப்பிடித்தால் ஏமாற்றம் ஆகாமல் தப்பிக்கலாம். கடன் வாங்கி சில நல்ல காரியங்களை நிறைவேற்றலாம். வீடு, பிளாட், வாகனம், கல்வி சம்பந்தமான சுபமுதலீடுகளைச் செய்யலாம். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்க யோகமுண்டு.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 11-ல் உச்சம் பெற்ற சூரியனோடு சம்பந்தம். வார ஆரம்பத்தில் 8-ல் உள்ள கேது சாரம். பிறகு 12-ல் உள்ள சுக்கிரன் சாரம். பொதுவாக இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு ஏதாவது ஒரு வகை செலவுகளும் விரயங்களும் இருக்கத்தான் செய்யும். 7, 10-க்குடைய குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதோடு ராசிநாதன் புதனையும் பார்ப்பதால் எந்த வகையிலும் கேடு கெடுதி ஏற்படாது. 2-ஆம் இடத்து ராகுவும் 8-ஆம் இடத்துக் கேதுவும் வாக்குவாதங்கள்- தர்க்கவாதங்களை ஏற்படுத்தி அமைதிக் குறைவை உருவாக்கலாம். குறிப்பாக குடும்பத்தில் எல்லாருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல், "ஈகோ உணர்வால்' பிரச்சினைகளைச் சந்திக்கலாம். 7-ல் உள்ள சனி மனைவி வகை உறவினர்களாலும் சுற்றத்தாராலும் பிரச்சினைகளைச் சந்தித்து வருத்தங்களைச் சுமக்கச் செய்வார். சிலசமயம் ஒதுங்கிப் போனாலும் பின்தொடர்ந்து வந்து வம்பிழுக்கலாம். காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியத்தை விட்டொழித்துவிட்டு காரியத்தை கவனிப்பதே நல்லது. காரியம் கைகூட கழுதைக்காலைக்கூட பிடிக்கலாம் என்பது பழமொழி! 5-ல் உள்ள குரு உங்களுக்கு அந்த மனப்பக்குவத்தை உருவாக்கி வெற்றிபெறச் செய்வார். ஒரு சிலருக்கு கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நன்மைகளும் ஆதாயங்களும் உண்டாகும். தொழில், லாபம், பூர்வீக சொத்துவகை பங்கு பாகங்கள் கிடைப்பது- எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு திருமணத்தடை ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து பேசிமுடித்த திருமணமும் தடைப்படலாம். ஜாதகரீதியான தோஷங்கள் இருந்தால் அதற்கான பரிகார முறைகளைச் செய்துவிட்டால் தடைகள் நீங்கும். விருப்பம்போல் வெற்றி உண்டாகும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

Advertisment

கடக ராசியில் ஜென்ம ராகு. ஏழில் கேது. கேதுவுடன் செவ்வாய் உச்சம். செவ்வாய் 5, 10-க்குடையவர். 9-க்குடைய குரு 4-ல் அமர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் 10-க்குடைய செவ்வாய் 7-ல் அமர்ந்து 10-ஆம் வீட்டையும் பார்க்கிறார்; ஜென்ம ராசியையும் பார்க்கிறார். எனவே தொழில், வாழ்க்கை, செய்யும் வேலை எல்லாம் நல்லபடியாக இயங்கும். எதைத் தொட்டாலும் அதன் வெற்றி பாதிக்காது. தோல்விக்கு இடமில்லை. என்றாலும் எல்லாம் ஆமை வேகத்தில் செயல்படும். ஆரம்பப் பள்ளியில் ஒரு பாடக்கதை படித்திருப்போம். முயல் ஆமையை ஓட்டப்பந்தயத்துக்கு அழைத்ததாம். முயல் வேகமாக ஓடி பாதி வழியில் ஓய்வு எடுக்கும்போது தன்னை மறந்து உறங்கிவிட்டதாம். ஆமை மெதுவாக ஊர்ந்து போனாலும் முயலைத் தாண்டி எல்லையை அடைந்துவிட்டதாம். அதாவது முயலுக்கு ஆணவமும் அகந்தையும் இருந்ததால் ஆமையை எளிதாக மதிப்பிட்டு அலட்சியத்தால் தோற்றுவிட்டது. அதனால் எப்போதும் எதிரியை பலவீனமாகக் கருதி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. "எதிரிகள் ஜாக்கிரதை' என்ற கருத்தை கவனத்தில்கொண்டு எப்போதும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இதுதான் வெற்றியின் ரகசியம்! 6-க்குடைய குரு 4-ல். அவர் 9-க்கும் அதிபதி ஆவார். எனவே ஒரு சிலரின் அனுபவத்தில் பெற்றோர்க்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடும் முரண்பட்ட செயல்களும் உருவாகி பிரச்சினையை உண்டாக்கலாம். என்னதான் இருந்தாலும் பெற்றவர்களைக் குற்றம் கூறுவதோ- புறக்கணிப்பதோ தர்மச்செயல் அல்ல! பெற்றவர்களுக்கு உதவி செய்யவிட்டாலும் பரவாயில்லை; உதாசீனப்படுத்தக்கூடாது. 3, 12-க்குடைய புதனோடு 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம் பெறுவதால், உங்கள் தொழில் மேன்மையடையும். பணி பாராட்டும்படியாக அமையும். வேலையில் விரும்பிய முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருடன் 2, 11-க்குடைய புதன் சம்பந்தம். அவர்களுக்கு 5-க்குடைய குரு பார்வை. 10-க்குடைய சுக்கிரன் ஆட்சி! மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். பணவரவுக்குப் பஞ்சமில்லை. சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு லாபம் பெருகும். உண்மையான- விசுவாசமான வேலையாட்கள் அமைவார்கள். கூட்டுத்தொழில் செய்கிறவர்களும் கூட்டாளிகளோடு நல்ல இணைவும் தனவரவும் உண்டாகும். தொழில் முன்னேற்ற திட்டங்கள் செயல்படும். புதிய தொழில் தொடங்கலாம். அதேபோல வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும். சிலர் வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதித்து வீட்டுக்கு அனுப்பலாம். அதுமட்டுமல்ல; சொந்த வீட்டுக்கனவும் நனவாகும். என்.ஆர்.ஐ. ஸ்கீமில் வங்கிக்கடன் வசதியும் பெறலாம். 7-க்குடைய சனி 5-ல் குரு வீட்டில் நிற்க- குரு ராசிக்கு 3-ல் இருந்து 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலருடைய அனுபவத்தில் கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் அனுகூலமான- ஆதாயகரமான பலன்கள் உண்டாகும். பங்கு பாகம், பணவரவு, இடம், வீடு போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம். இப்படி ஏதும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வர இடமில்லை என்றால்- இதுவரை நோய் நொடி, வைத்தியச் செலவு என்று நிலவிய கெடுபலன்கள் விட்டுவிலகி இந்த வாரம் முதல் முழுமையான ஆரோக்கியமும் சௌக்கியமும் உண்டாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். "ஒருபோது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி; அதற்கும் மேல் உண்பவன் உடல்விட்டுப் போகி' என்று ஒரு பழம் பாடல் உண்டு.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் தன் ராசிக்கு 8-ல் மறைகிறார். அவருடன் 12-க்குடைய சூரியன் சம்பந்தம். வார மத்தியில் புதன் அஸ்தமனம்! அவர் 10-க்கும் உடையவர். ஏழரைச்சனி முழுமையாக விலகி மூன்றாண்டு ஆகியும் உங்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. எனக்குத் தெரிந்த இரண்டு கன்னியா ராசிக்காரர்களில் ஒருவர் நன்றி மறந்தவர். காரியவாதி மட்டுமல்ல; சுயநலவாதி. இன்னொருவர் யதார்த்தவாதி. எல்லாருக்கும் நல்லது செய்யும் பண்பாளர். காரியவாதி நல்ல வசதி வாய்ப்போடு சௌகர்யமாக வாழ்கிறார். கருணையுள்ளம் கொண்ட நல்லவரோ 80 வயதிலும், தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க மனமில்லாத மகனோடும் மருமகளோடும் தனிமரமாக வாழ்கிறார். தனக்கு வேண்டிய காபி- பலகாரம் செய்ய அதிகாலை ஆறு மணிக்கே அடுப்படிக்குப் போய் சமையல் செய்கிறார். ஏழு மணிக்கு மருமகள் ஷிப்ட் டூட்டிக்கு வந்துவிடுவதால், அதற்குள் கிச்சனை அவர்வசம் ஒப்படைக்க வேண்டும். நான்கூட அவரிடம் "ஹோட்டலில் போய் சாப்பிடலாமே அல்லது ஏதாவது முதியோர் இல்லத்தில் போய் சேரலாமே' என்றேன். அதற்கு அவர் "அப்படிச் செய்தால் தந்தையை கவனிக்காத மகன் என்று மகனுக்கு கெட்ட பேர் வந்துவிடும்' என்று பதில் சொன்னார். ஆக, ஒரே ராசியில் பிறந்தவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்! அவர் மனைவி இருந்தவரை அவர் மகாராஜா மாதிரி இருந்தார். ஒரு ஜீவன் இல்லாதுபோனதுமே எல்லாம் போய்விட்டது. அதேபோல எனது உறவினர் பெருங்குடும்பம்! சர்க்கஸ் கம்பெனி மாதிரி (மனிதர்கள், மிருகங்கள்) எல்லாரையும் கட்டிக்காத்து பராமரித்தார். அவர் காலமானதும் ஒரே மகன்- பெற்ற தாய்க்குச் சோறு போடவில்லை. அவன் மனைவியும் அத்தையைப் பார்க்கவில்லை. வெளியேற்றிவிட்டாள். 4-ல் சனி, 8-ல் சூரியன் மறைவு. அதன் பலன் இதுதான்.

Advertisment

ramarதுலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிக்கு 10-ல் ராகு. 4-ல் செவ்வாய்- கேது. தொழில், வாழ்க்கை, செய்யும் பணி, வேலை எல்லாவற்றிலும் பிரச்சினைதான். சிலருக்கு சுகக்குறைவு, சிலருக்கு வாகன வகையில் செலவு, சிலருக்கு தொழில் பிரச்சினை, சிலருக்கு வேலையில் சிக்கல், சிலருக்கு சொந்தக் குடும்பத்தில் சிக்கல்! சம்பாதிக்கும் மனைவி தன்னை மதிப்பதில்லை என்ற குறை! பிள்ளைகளும் அப்பாவைப் புறக்கணித்து அம்மாவை மட்டும் அரவணைக்கும் நிலை! கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால்- அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜக்கா என்று ஆடிக்கொண்டிருந்தமாதிரி, யாரிடமாவது சொல்லி ஆறுதல்பெறப் போனாலும் அங்குள்ள பிரச்சினைக்கு தன் வீட்டுப் பிரச்சினை பரவாயில்லை என்று, எதையும் வெளியில் சொல்லாமல் மனதில் போட்டு அடக்கிக்கொண்டு வந்துவிடும் நிலையிருக்கிறது! சிலருடைய அனுபவம், வேலியே பயிரை மேய்ந்த கதையாக- தொழில் ஸ்தாபனத்தில் யாரை நம்பி பொறுப்பை ஒப்படைத்தீர்களோ அவர்களே உங்களை ஏமாற்றி நம்பிக்கைத் துரோகம் செய்து லட்சாதிபதியாகி விடுவார்கள். மதுரையில் பிரபலமான பஸ் கம்பெனி இருந்தது. வேலை பார்ப்பவர்கள் எல்லாம் களவாணித்தனம் பண்ணி காசைச் சுரண்டினார்கள். இதைக் கண்டுபிடிக்க சொந்த மகனையே "செக்கிங்' போட்டார். அவனும் அவர்களோடு சேர்ந்து தப்பு பண்ணி பங்கு வாங்கிக் கொண்டான். ஒரு ஹோட்டல் அதிபர் ஒரேமகனை நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைத்தார். அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து விடுங்கள் என்று அவர் மனைவியிடம் கூறினேன். கேட்கவில்லை. வீட்டுமாடியில் படுக்கை. ஒரே சாப்பாடு. மகன் நிர்வாகத்தை கவனிக்கவில்லை. அப்பாவுக்கு உதவியாகவும் இல்லை. எப்போதாவது வருவார். இரண்டாயிரம் மூவாயிரம் என்று கல்லாவில் வாங்கிப்போய் விடுவார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பா மகனுக்கு நூறு ரூபாய்க்குமேல் தரக்கூடாது என்று தடை போட்டார். உடனே பூகம்பம், எரிமலை வெடித்துவிட்டது. வீட்டில் சாமான்களை உடைக்கவும் தாயாரோடு சண்டைபோடவும் பிரச்சினை உருவாகிவிட்டது. இதெல்லாம் 5-க்குடைய சனி 3-ல் மறைவு. 5-ஆம் இடத்துப்பார்வை. இப்படியிருந்தால் நந்தி சந்நிதியில் ஞாயிறுதோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு என்றாலும் உச்சம். 3-க்குடைய சனி 2-ல் குரு வீட்டில். அவருக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 12-ல். 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் 6-ல் மறைவு. அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் குறைவில்லை. வீட்டு வாடகை- மின் கட்டணம்- அன்றாட சாப்பாட்டுப் பிரச்சினை எதுவும் இல்லை. ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பென்ஷன், சிலர் இன்சூரன்ஸ் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்து மாத வருவாய்க்கு வழி வகுத்திருப்பார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமைக்கும் குறைவில்லை. ஆரோக்கியத்திலும் பாதிப்பு இல்லை. ஆனால் பிள்ளைகள் வகையில் சிலருக்குத் தொல்லை. சிலருக்கு மனைவி, மருமகள் பிரச்சினை! பாலைப் பார்ப்பதா? பானையைப் பார்ப்பதா? மனைவிக்கு ஆதரவாகப் பேசினால் மகனுக்கும் மருமகளுக்கும் வருத்தம்! அவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மனைவிக்குக் கோபம்! ஆக நியாயத்தை எடுத்துச் சொன்னாலும் யாருக்கும் பிடிக்கவில்லை. மௌனமாக இருந்தால் (மௌனம் கலக நாஸ்தி) "எதையும் கண்டுகொள்ளாமல் எருமை மாட்டின் மேல் மழைபெய்த மாதிரி இருக்கிறீர்களே' என்ற வசைப்பாடு. உரலுக்கு ஒரு பக்கம் இடி- மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதுபோல உங்கள் நிலை! ஒருசிலர் தன் குடும்பத்தை- மனைவி மக்களைப் பார்க்க முடியாமல், மற்றவர்களையும் மற்றவர்கள் பிரச்சினைகளையும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். அதாவது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்- அதில் பிறந்தவர்கள்தானே நீங்களும்! ஒன்று நினைவில் கொள்ளவேண்டும். தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்! 21-ஆம் நூற்றாண்டில் இந்தப் பார்வையைக் கடைப்பிடிக்காவிட்டால், வள்ளல் வாழ்க்கை வாழ்ந்தால் அல்லப்பட்டு அனாதையாக வேண்டியதுதான்!

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 11-ல் நின்று 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 3 சகோதர ஸ்தானம், நண்பர்கள் ஸ்தானம், தைரிய ஸ்தானம். அதனால் நண்பர்கள் வகையிலும் உடன் பிறப்புகள் வகையிலும் நன்மையுண்டு; உதவியுண்டு; ஒத்தாசையுண்டு. தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டு. எதையும் சாதிக்கும் ஆர்வமும் அக்கறையும் உண்டு. அதேசமயம் ஜென்மச்சனி 3-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலசமயம் உங்களுடைய அலட்சியத்தால் சில காரியங்கள் தடைப்படலாம் அல்லது தாமதப்படலாம். ஆனால் தோல்விக்கு இடமில்லை. ரயில்வே டிக்கெட் புக்கிங் சமயத்தில் "வெயிட்டிங் லிஸ்டில்' இருப்பது போல! கடைசி நேரம் டிக்கெட் "கன்பாம்' ஆகிவிடும். 2-ல் செவ்வாய், கேது சேர்க்கையும் 8-ல் ராகுவும் இருப்பதால் பெரும்பாலும் சிக்கன நடவடிக்கையாக இருப்பீர்கள். எதையும் கணக்குப் பார்த்து செலவழிப்பீர்கள். ஆற்றில் போட்டாலும் அளந்து போடுவீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்! அவசியமான செலவுகளை தாராளமாகச் செய்யலாம். 11-ஆம் இடத்து குரு செலவுகளை சரிக்கட்டும் அளவு வருமானத்தையும் லாபத்தையும் தரலாம். 6-ஆம் இடத்துக்கு குரு 8-க்குடையவராகி 6-ல் மறைவதால் வம்பு வழக்கு, வியாஜ்ஜியங்கள், கேஸ்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாகும். போட்டி பொறாமையும் புகைந்து போகும்! எதிர்ப்புகளும் இடையூறுகளும் இல்லாது ஒழியும். 2-ஆம் இடத்து செவ்வாய்- கேது சேர்க்கைப்பலன்- குடும்பத்தில் நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் தடையாகலாம்; தாமதமாகலாம் என்றாலும், ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி தோல்வியோ ஏமாற்றமோ இல்லை. (வெயிட்டிங் லிஸ்ட்). பிள்ளைகள் படிப்பு, திருமணம், வேலை, சம்பாத்தியம் போன்ற பிரச்சினைகளில் முழுமையான தீர்வு (தீர்ப்பு) ஒத்திவைக்கப்படும்! ஒரு சிலர் சுபக்கடன் வாங்கி நிலம், வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் முதலீடு செய்யலாம். இப்படிக் கடன்வாங்குவதால் 6-ஆம் பாவத்தின் மற்ற விரோதி, வியாதி, வைத்தியச் செலவு போன்ற பலன்கள் மறையும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு ராசிக்கு 10-ல் கேந்திரம். ஜென்மத்தில் செவ்வாய், கேது. 5-ல் சுக்கிரன் ஆட்சி! உங்களுடைய முயற்சிகளில் தளர்ச்சி நீங்கி வளர்ச்சி உண்டாகும்! விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும். அதைத்தான் வள்ளுவர், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்' என்று சொல்லுவார். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் எதிர்பாராத நன்மையும் அதிர்ஷ்டமும் உண்டாகும். வரவேண்டிய பங்கும் பணமும் வந்து சேரும். விரயச் சனி; 4-ல் அட்டமாதிபதி சூரியன் உச்சம்; அவருக்கு உச்சம்பெற்ற செவ்வாயின் பார்வை; உச்சனை உச்சன் பார்ப்பது தோஷம். எனவே சிலர் பதவி மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்ற பலன்களைச் சந்திக்கலாம். 4-ஆம் இடத்துக்கு குரு பார்வையும் கிடைப்பதால் அந்த மாற்றம்- எந்த மாற்றமாக இருந்தாலும் நல்ல மாற்றமாகவே அமையும். சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளலாம்! குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு இக்காலம் ஏற்றமான காலம். அதேபோல கலைத்துறையினருக்கும் யோகமான காலம்! அரசியல் கிரகம் சூரியன் உச்சம். கலை கிரகம் சுக்கிரன் ஆட்சி. அதிகார உத்தியோகம் செய்கிறவர்களுக்கும் (இராணுவம், போலீஸ், தீயணைப்புத் துறை) செவ்வாய் உச்சம் என்பதால் திருப்தியும் முன்னேற்றமும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கும் தொழில் வளர்ச்சி, லாபம், திருப்தி உண்டாகும். தகப்பனாரோடு இணைந்து தொழில் புரிகிறவர்களும் கிளைகள் ஆரம்பிக்கலாம். தொழில் விருத்திக்கான முதலீடு செய்யலாம். அதற்காக கடன் வாங்கலாம். அது சுபக்கடன் ஆகும். ஏழில் ராகு. சிலநேரம் கணவன்- மனைவிக்குள் தர்க்கம், ஆரோக்கியக் குறைவு, கருத்து வேறுபாடு போன்ற "ஈகோ' பிரச்சினைகளை எழுப்பினாலும், உச்சம்பெற்ற செவ்வாயின் பார்வை அவற்றை சரிக்கட்டி சமாதானப் படுத்துவார்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் குரு வீட்டில் பலம்பெறுவார். சனி பகவானுக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் பலம் பொருந்திய இடங்கள். நன்மை தரும் இடங்கள். அதை விளக்கும் ஒரு ஜோதிடப்பாடல்: "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் (சனி) நிற்குமாகில் கூறு பொன் பொருளுண்டாம்; குறைவிலாச் செல்வமுண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்.' அதிலும் அவர் ராசிநாதன் என்ற பெருமைக்குடையவர். அவர் 11-ல் நிற்பதாலும், ஜென்மராசி, 5-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும் இக்காலம் உங்களுக்கு ஏற்றமான காலம்! எண்ணம்போல எல்லாம் ஈடேறும் காலம்! விருப்பங்கள் விரைவாக நிறைவேறும் காலம். 8-ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் என்றாலும், அது 2, 11-க்கும் 9-க்கும் சம்பந்தம் பெறும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாகிவிடும். எனவே 11-ல் உள்ள ராசிநாதன் சனி 2-க்குடைய குரு வீட்டில் நின்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 2, 11-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத தனலாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையலாம். சிலருக்கு டிரஸ்ட் அமைப்பில் உதவி அமையும். வெளிநாட்டுப் பண உதவியும் கிடைக்கும். ஒரு பெரிய நிறுவனத்துக்கு வெளிநாட்டுப் பண உதவி கிடைக்க நீங்கள் பெரும் முயற்சி எடுப்பதால், அதனால் உங்களுக்கும் பணமும் பயனும் கிடைக்க வழி பிறக்கும். இதுதான் எதிர்பாராத அதிர்ஷ்டம் என்பது! ஒரு சிலருக்கு (வி.ஐ.பிக்களுக்கு) பெரும் காரியங்களைச் சாதிப்பதற்கு நீங்கள் வழிகாட்டியாக இருப்பதால், உங்களுக்கு அதற்கு கமிஷன் கிடைப்பதுபோல தனப்பிராப்தி கிடைக்கும். இன்றைய உலகில்- குறிப்பாக அரசியல் துறையிலாகட்டும்- வேறு துறையிலாகட்டும் பணம்தான் பேரம்! பணம் இல்லாத நிலையில் "செக்ஸ்' பேரம் நடக்கிறது! (அருப்புக்கோட்டை பேராசிரியை உதாரணம்). எந்த பேரம் நடந்தாலும் பேராசை இல்லாமல் அளவோடு நடந்தால்- போதும் என்ற மனமிருந்தால் ஆபத்தில்லை. சிக்கல் இல்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்காரர்கள் சுறுசுறுப்பானவர்கள். நீரில் வாழும் மீன் ஒரு நிலையாக இருப்பதில்லை. நீச்சல் அடித்துக்கொண்டே இருக்கும். கோழி அடைகாத்தல், மீன் பார்த்தல், ஆமை நினைத்தல் என்று சொல்வதுண்டு. கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து வாரிசை உருவாக்கும். மீன் தண்ணீரில் முட்டையைப் பொரித்துவிட்டு அதைத் திரும்பிப் பார்க்குமாம். அதன் பார்வை பட்ட முட்டையெல்லாம் பொரிந்து இனவிருத்தியகுமாம். ஆமை எங்கேயாவது ஒரு இடத்தில் முட்டையை இட்டுவிட்டுப் போய்விடுமாம். எப்போதாவது இந்த இடத்தில் முட்டை இட்டோமே என்று நினைத்தால் அது உயிர்பெற்று உருவாகிவிடுமாம். இதைத்தான் காத்தல், பார்த்தல், நினைத்தல் என்பார்கள். லௌகீக வாழ்க்கையில் உள்ள நாம் கோழியைப்போல நமது கடமைகளைக் கட்டிக் காத்து செயல்படவேண்டும். நல்ல சீடனை அல்லது நேரம் உள்ளவனை சாதுவோ குருவோ பார்த்தால் அவருக்கு விமோசனமும் அதிர்ஷ்டமும் உண்டாகிவிடும். சாது தரிசனம் பாப விமோசனம். மீன் போன்ற கண்களையுடைய மீனாட்சியை தரிசனம் செய்தால் நமக்கு யோகம்! மீன்+அட்சி (கண்) மீனாட்சி! ஞானிகள் எப்போதும் தவத்திலேயே ஆழ்ந்திருப்பார்கள். நினைவு வரும்போது நம்மையோ இந்த உலகத்தையோ நினைத்தால் விமோசனம் பிறக்கும். நமது நாட்டைப்பற்றி இன்னும் எந்த ஞானியும் நினைக்கவில்லை போலும். அதனால்தான் நாட்டுக்கும் விடிவு பிறக்கவில்லை;வீட்டுக்கும் விடிவு பிறக்கவில்லை. ராசிநாதன் குரு எட்டில் மறைவதால் உங்கள் செயல்களும் முயற்சிகளும் அசைவற்றுக் கிடக்கிறது. அதோடு 10-ல் சனி 4-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால், உண்ணுவதும் உறங்குவதும் இனப்பெருக்கத்தை செய்வதுமாக வாழ்க்கை ஓடுகிறது. சாதனை படைக்கவேண்டும்- சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம், லட்சியம், வெறி எல்லாம் இருக்கிறது. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையவில்லை. அதற்காக மனம் தளரவேண்டாம். இரவு என்பது 12 மணி நேரம்தானே. எல்லா இரவுகளும் விடியத்தானே வேண்டும். விடியும்வரை காத்திருப்போம்.