29-4-2018 முதல் 5-5-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

1-5-2018- விருச்சிகம்.

3-5-2018- தனுசு.

கிரக பாதசாரம்:

சூரியன்: பரணி- 1, 2, 3.

செவ்வாய்: உத்திராடம்- 1, 2.

புதன்: ரேவதி- 2, 3, 4, அஸ்வினி- 1, 2.

குரு: விசாகம்- 3.

சுக்கிரன்: கார்த்திகை- 4, ரோகிணி- 1, 2.

சனி: மூலம்- 3.

Advertisment

thisweekrasi

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

30-4-2018- மகரச் செவ்வாய்.

3-5-2018- மேஷ புதன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் திரிகோண ராசியில் இருக்கிறார்; பஞ்சமாதிபதி சூரியன் சாரம் பெறுகிறார்; உச்சமாக இருக்கிறார்; திரிகோணாதிபதியான குருவின் பார்வை பெறுகிறார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே இந்த வாரம் உங்களுக்கு மங்களம் பொங்கும் தங்கமான வாரம்! குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களை வழிநடத்தும். குடும்பத்தில் மனைவி, மக்கள் ஒற்றுமை, அன்யோன்யம், பந்தபாசம், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் எல்லாம் உங்களை உற்சாகமூட்டும்; திருப்தியாக்கும். நாலில் ராகு, 10-ல் கேது இருப்பதால் சிலருக்கு ஆரோக்கியக்குறைவு, தொழில் பிரச்சினை, மனசங்கடம் இருந்தாலும், ராசியை குரு பார்ப்பதால், முடிவில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்; தொல்லைகள் தீரும்; புதிய தொழில் முயற்சிகளும் திட்டங்களும் நிறைவேறும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் அதிர்ஷ்டமும் யோகமும் தேடிவந்து அரவணைக்கும்! ஒருசிலருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு யோகம் அமையும் அல்லது மேற்படிப்புக்காக வெளிநாட்டில் போய் படிக்கலாம். திருமணமானவர்களுக்கு மனைவி மக்களைப் பிரிந்து வேலைபார்க்கவும், வருமானம் தேடவும் வாய்ப்புகள் அதிகரிக்கும்! 2-ல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் திருமணமாகாதவர்க்குத் திருமணம் நடைபெறும். 5-க்குரிய சூரியன் உச்சம் பெறுவதால் வாரிசு இல்லாதவருக்கு வாரிசு கிடைக்கும். 3, 6-க்குடைய புதன் நீசம் பெறுவதால் ரோகம், ருணம், சத்துரு ஆகிய 6-ஆம் இடத்துப் பலன்களெல்லாம் கெட்டுப்போகும். அதுபோல கடன்களும் கட்டுக்கடங்கியிருக்கும். பங்காளிப்பகை மாறும்; சகோதர உறவு சேரும். வீடு, வாகனம், தொழில் சம்பந்தமான கடன் வாங்கலாம். அதை சுபக்கடனாக எடுத்துக்கொள்ளலாம். குலதெய்வ வழிபாடு மேன்மையடையும். குலதெய்வக் கோவில் சீர்த்திருத்தப்பணியில் ஈடுபடலாம்; கும்பாபிஷேகம் நடத்தலாம். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வேலையில் விரும்பிய இடப்பெயர்ச்சி எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தில் குறைவில்லை. ஆனந்தமான வாரம்; திருப்தியான வாரம்!

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. அவருடன் செவ்வாயும் சேர்ந்திருக்கிறார். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 6-ல் மறைகிறார். அதனால் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் கடின முயற்சிக்குப் பிறகுதான் நிறைவேறும். எல்லா முயற்சிகளும் கிணற்றில்போட்ட கல்லைப்போல அசைவற்றுக் கிடக்கும். சிலசமயம் உங்களுக்கே உங்கள்மீது நம்பிக்கையில்லாமல் விரக்தி ஏற்படும். வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபிறகு வீட்டைப் பூட்டினோமா இல்லையா என்று மீண்டும் திரும்பி வந்து பூட்டை இழுத்துப் பார்ப்பீர்கள். சிலசமயம் தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த நிலைமை ஏற்படலாம். வேறுசிலர் கப்பலில் இலவசமாகப் பெண் வருகிறது என்றால் எனக்கு ஒன்று, சித்தப்பாவுக்கு ஒன்று, பெரியப்பாவுக்கு ஒன்று என்று கேட்பவர்களும் உண்டு. ஒருசிலருடைய அனுபவத்தில் ஒரு வழிப்பாதைபோல வாங்கும் தன்மையாகவே இருப்பார்கள்- திரும்பக் கொடுக்கும் தன்மையாக இருக்காது. இவையெல்லாம் ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் நடக்கும்! மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட கெடுபலன்கள் சம்பவிக்காது; இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காது. இரண்டுக்குடைய புதன் (வித்யாகாரகன்) நீசபங்க ராஜயோகமாக இருப்பதால் மாணவ- மாணவியர்கள் படிப்பில் முதலிடம் பெறுவார்கள். மேற்படிப்பு தொடரும். குரு பகவான் 6-ல் மறைந்து இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் தேர்வில் வெற்றி பெறுவோமா மாட்டோமா என்று சந்தேகம் ஏற்படலாம். அல்லது தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் நல்லமுறையில் பதில் எழுதிவிட்டு வெளியில் வந்தபிறகு சரியாக எழுதியிருக்கிறோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படலாம்! அப்படிப்பட்டவர்கள் ஹயக்கிரீவர் மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே பரீட்சை எழுதலாம். "ஓம் ஞானாந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆகாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே' என்ற மந்திரத்தை ஜெபிக்கலாம். இதனால், அட்டமத்துச்சனி நடக்கும் இக்காலம் மறதி, மந்தப்போக்கு, அலட்சியம் போன்றவை மாறிவிடும். தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெறலாம். அத்துடன் சனிப்பெயர்ச்சிவரை 19 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி மண்விளக்கில் நெய் நிரப்பி அதில் பொட்டலத்தை நனைத்து சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வந்தால் படிப்பில் தடை ஏற்படாது; ஞாபகசக்தி உண்டாகும். தேர்வில் வெற்றி பெறலாம்.

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் பத்தில் நீசபங்கமாக இருக்கிறார். அவர் 1, 4-க்கு அதிபதி ஆவார். புதனுக்கு வீடு கொடுத்த குரு 5-ல் பலம்பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்கள் ராசியை குருவும் பார்க்கிறார். குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். எனவே, உங்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எதற்கும் குறைவில்லை. தொழில்துறையிலும், வியாபாரத்திலும், செய்யும் பணியிலும் எந்தக்குறையும் இல்லாமல் வளர்ச்சியடையும்; மேன்மையடையும். புது முயற்சிகளும் கைகூடும். படித்து முடித்து வேலைதேடி அலைபவர்களுக்கு நல்ல வேலையும் நல்ல சம்பாத்தியமும் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு யோகமும் அமையும். ராசிக்கு 7-ல் செவ்வாய், சனி சேர்க்கை இருப்பதால் சிலருக்குத் திருமணம் தாமதமாகலாம். அல்லது கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்கலாம். பொதுவாக 7-ல் செவ்வாய்- சனி சம்பந்தம் இருந்தால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 30 வயதுக்குமேல் திருமணம் செய்வது நல்லது. அதற்குமுன் திருமணமானால் விவாகரத்து அல்லது பிரிவு, பிளவு ஏற்படலாம். தவிர்க்க முடியாத நிலையில் திருமணம் செய்ய வேண்டியது வந்தால் காமோஹர்ஷன ஹோமமும் பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வ ராஜஹோமமும் செய்யவேண்டும். அத்துடன் யாராக இருந்தாலும் 4, 5, 7, 8 வரும் தேதிகளில் திருமணம் செய்யக்கூடாது. அது தேதி எண்ணாகவும் இருக்கக்கூடாது. கூட்டு எண்ணாகவும் இருக்கக்கூடாது. மேற்படி தேதிகளில் திருமணம் நடந்துவிட்டால் அந்த தேதிகளில் கட்டிய மாங்கல்யத்தை (தாலியை) கழற்றிக் கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் அணியவேண்டும். 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். அங்கு புத்திர காரகன் குரு இருப்பது தோஷம்! காரகோ பாவக நாஸம் என்பது ஜோதிட விதி! அப்படிப்பட்டவர்கள் ஜாதக ரீதியாக புத்திர தோஷம் இருந்தால் சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், புத்திர பிராப்தி கணபதி ஹோமம் செய்து கொண்டால் வாரிசு யோகம் அமையும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் தஞ்சை பாபநாசம் அருகில் திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சகாம்பிக்கையை வழிபடலாம். அல்லது கருவளர்சேரி சென்றும் வழிபடலாம். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் தர்க்கங்களும் வாக்குவாதங்களும் ஏற்படலாம். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பதால் பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை! எதிலும் சகிப்புத்தன்மையும் அவசியம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ராகுவும் அதற்கு ஏழில் கேதுவும் நிற்க, 6-ல் செவ்வாய்- சனி சேர்க்கையும், ராசிக்கு செவ்வாய் பார்வையும் கிடைக்கிறது. பொதுவாக, செவ்வாய்- சனி சேர்க்கை கெடுபலனையே தரும் என்றாலும், 6-ஆம் இடத்தில் சேர்வதாலும், 8-க்குடைய சனி 6-ல் மறைவதாலும் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற விதிப்படி உங்களுக்குப் பாதிப்புகள் இருக்காது. மேலும் 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. எனவே ஜென்ம ராகு- சப்தம கேது தோஷம் (நாக தோஷம்) நிவர்த்தியாகிறது. 7-க்குடைய சனி தன் ஸ்தானத்துக்கு பன்னிரண்டிலும் ராசிக்கு ஆறிலும் மறைவதால் சிலருடைய கணவன் அல்லது மனைவிக்கு (ஆண்கள் ஜாதகம் என்றால் மனைவிக்கும் பெண்கள் ஜாதகம் என்றால் கணவருக்கும்) தொழில், வருமானம், சம்பாத்தியத்தில் பிரச்சினைகள் உருவாகும். இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகப் பலனால் எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கும் சக்தியும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும். வள்ளுவர் "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்' என்று சொல்லுவார். அதன்படி உங்களுடைய விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தரும். அதுமட்டுல்ல; தன் முயற்சியோடு தெய்வ நம்பிக்கையும் பிரார்த்தனையும் உங்களை வழிநடத்தும். சிலர் பாதயாத்திரை போகலாம். சிலர் ஆன்மிகச் சுற்றுலா போகலாம். சிலர் திருவண்ணாமலை கிரிவலம் போகலாம். சிலர் கோவை அருகே வெள்ளியங்கிரிமலைக்கு தெய்வ பயணம் போகலாம். சிலர் சதுரகிரி, பொதிகைமலைப் புனிதப் பயணம் போகலாம். இவையெல்லாம் உங்கள் எதிர்கால இன்ப வாழ்வுக்கு அஸ்திரவாரம்போல! அதாவது குருவருளும் திருவருளும் பெருகுவதால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை இருந்தாலும் பற்றாக்குறைக்கு இடம் ஏற்படாது. 10-க்குடைய செவ்வாய் 6-ல் 8-க்குடையவரோடு மறைந்தாலும் 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம் என்பதால் பயப்படத்தேவையில்லை. தேவைக்கேற்ற நேரத்தில் தேவைக்கேற்ற பணவசதியும் உதவியும் கிடைக்கும். அதுபோதுமே! கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துவிட்டு கொடுக்கும் என்பார்கள். ஆதிசங்கரர் ஒரு ஏழைப் பெண்மணியிடம் பசிக்கு பிச்சை கேட்டார். அந்த அம்மணி தன்னிடம் இருந்த ஒரேயொரு நெல்லிக்கனியை தானம் செய்தார். அப்போது ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். (அங்கம்ஹரே-). உடனே மகாலட்சுமி கனக மழை (பொற்காசு மழையை) பொழிந்து அந்த ஏழைப் பெண்ணின் வறுமையைப் போக்கினாள். நீங்களும் அந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை தினமும் படிக்கலாம். கவியரசர் கண்ணதாசன் தமிழில் அதை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அதையும் படிக்கலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருக்கு 5-க்குடைய குரு பார்வை. 10-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சி. தொழில், உத்தியோகம், வேலை, சம்பாத்தியம் எதிலும் குறையில்லை. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய மாதிரி குறையேதுமில்லை. என்றாலும் 2, 11-க்குடைய புதன் 8-ல் நீசம் என்பதால் எல்லாம் அளந்துபோட்ட மாதிரி இருக்கும். வாங்கிய சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து வீட்டுக்காரம்மாளிடம் தருவார்கள். அந்த அம்மாள் வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகைச்சாமான்கள், பிள்ளைகள் பள்ளிச்செலவு, வீட்டு வாடகை, கரண்டு பில் என்று உருப்படியான காரியங்களுக்கும் அத்தியவசியமான தேவைகளுக்கும் செலவு செய்துவிட்டு சிக்கனம் பிடித்து சீட்டு, சிறுசேமிப்பு என்று செய்வார்கள். சிலர் மகளிர் குழுவில் சேர்ந்தும் சேமிக்கலாம். திடீரென முக்கியமான செலவு- வேண்டியவர் திருமணம்- காதணி விழா, மொய்ச்செலவு அல்லது எதிர்பாராத வைத்தியச்செலவு அல்லது திடீர் பயணச்செலவு என்று வந்துவிடும். உண்டியலில் இருந்து எடுத்து அல்லது அக்கம்பக்கம் கைமாற்றுக் கடன் வாங்கி அதைச் சரிக்கட்டிவிட்டு மறுபடி சேமிப்பில் இருந்து எடுத்த பணத்தையும் அல்லது கைமாற்று வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுத்தும் சரிக்கட்ட வேண்டும். அதாவது கிணற்றில் இறைத்த நீர் குறைய ஊற்று ஊறி அந்த அளவை நிரப்புவது போல பொருளாதாரம் அளவோடு இருக்கும். கிணறு, ஊற்றுப் பெருகி பொங்கி வழியாது. இதுதான் செவ்வாய்- சனியின் சேர்க்கைப் பலன். அதேசமயம் 6-ல் கேது, 12-ல் ராகு இருப்பதால் உங்கள் வாக்கு நாணயம் கெடாது. கௌரவ பங்கமும் வராது. 6- கடன், 12-ஆம் இடம் விரயம். பாவ ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் (ராகு-கேது அசுப கிரகங்கள்- பாவ கிரகங்கள்) இருப்பதால் அந்த பாவத்தன்மை- கெட்ட இடத்து கெட்ட பலன் கெட்டுவிடும். திரிகோணாதிபதி குரு 3-ல் மறைந்தாலும் மற்றொரு திரிகோணத்தை (9-ஆம் இடத்தை) பார்ப்பதன் பலன்- காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக யாரோ ஒருவர் மூலமாக உங்களுக்கு உதவி கிடைக்கும். அது தெய்வ உதவியாக அமையும். அதனால் உங்கள் தேவைகள் ஓடியடையும். தினமும் காலையில் குளித்துமுடித்து சூரிய வழிபாடு செய்தால் குந்திதேவிக்கு சூரியன் நேரில் தோன்றி அருள்பாலித்ததுபோல உங்களுக்கு வாழ்வாதாரம் அமையும். சூரியனுக்கு 12 நாமாக்கள் உண்டு. அதைப் பாராயணம் செய்யலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசம் என்றாலும் கேந்திர பலம் பெறுவதால் நீசபங்கம் அடைவார். ஒரு கிரகம் நீசம் அடைந்தால் அந்த கிரகம் நீசபங்கம் அடைந்து ராஜயோகத்தைத் தருவதற்கு பல விதிவிலக்குகள் உண்டு. அதில் நீசகிரகம் லக்ன கேந்திரம், சந்திர கேந்திரம் பெறுவதால் நீசபங்கம் என்பதும் ஒரு விதி உண்டு. புதன் 1, 10-க்குடையவர். 7-ல் இருக்கிறார். உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே 1-ஆம் பாவம், 7-ஆம் பாவம், 10-ஆம் பாவம் ஆகிய இந்த மூன்று பாவகப் பலன்களும் நீசபங்க ராஜயோகமாகவும், இந்த மூன்று பாவகப் பலன்களைப் பொருத்தவகையில் எந்தக் கேடு கெடுதியும் பாதிப்பும் ஏற்படாதவகையில் நன்மைகள் உண்டாகும். 1-ஆம் பாவம் என்பது உங்களுடைய செயல், ஆற்றல், கடமை, சாதனை, கௌரவம், மதிப்பு, மரியாதை இவற்றைக் குறிக்கும். 7-ஆம் பாவம் கணவன்- மனைவி- உபதொழிலைக் குறிக்கும். 10-ஆம் பாவம் என்பது செயல், வாழ்க்கை, தொழில், பதவி, வேலை, பணி, முயற்சி இவற்றைக் குறிக்கும். இந்த மூன்று பாவகப் பலன்களிலும் முதலில் ஏமாற்றமாகவோ தாமதமாகவோ தெரிந்தாலும் நீசப்பலனைக் கொடுத்தாலும் பிறகு பங்கம் அடைந்து ராஜயோகம் தருவதற்குச் சமமாக- அனுகூலமாக அமையும். விரும்பியதுபோல நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், தொழில், வேலை, உத்தியோகம் இல்லாதவர்களுக்கு சுபயோகமும், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவமும், பொதுக்காரியங்களில் பதவி, கௌரவமும் உண்டாகும். முயற்சிகளில் தளர்ச்சி காணப்பட்டாலும் தடை நீங்கி வளர்ச்சி உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு (அதாவது கண்மூடாமல் உறங்காமல் அலட்சியமாக இல்லாமல்) தொழிலையும் சிப்பந்திகளையும் கண்காணிக்க வேண்டும். கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகலாம் அல்லது களவு போகலாம். சிலருடைய அனுபவத்தில்- வேலியே பயிரை மேய்வதுபோல நம்பிக்கைக்கு உரியவர்களே நம்பிக்கைத் துரோகிகளாக மாறி உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். தொல்லையில் இரண்டுவிதம். ஒன்று அன்புத்தொல்லை; மற்றொன்று வம்புத் தொல்லை! குறிப்பாக அரசியலில் உள்ளவர்கள் ஆதாயம் கருதி சுயநலம் பாராட்டி கட்சி மாறலாம். எதிரியோடு இணையலாம். எதிரிக்கு எதிரி தனக்கு கூட்டு என்ற கொள்கையை மேற்கொள்ளலாம். இராவணனுக்கு இராமன் எதிரி- அவரோடு இராவணன் தம்பி விபீஷணன் சேரவில்லையா?

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு என்றாலும் சொந்த வீட்டில் ஆட்சி பெறுவதால் மறைவு தோஷமில்லை. உதாரணமாக ஜெயில் தண்டனை பெற்றவர்கள் பணம் செலவழித்து சகல சுகபோகங்களையும் அனுபவிக்கவில்லையா? சிலர் சிறைக்கைதி உடுப்புகளைக்கூட கழற்றி தூக்கி எறிந்துவிட்டு சுடிதார் அணிந்து ஷாப்பிங் போனதாகக்கூட செய்திகள் வந்ததல்லவா! 3, 6-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று ராசிநாதன் சுக்கிரனுக்கு (வீடு கொடுத்தவருக்கு) 6, 8 சஷ்டாஷ்டகமாக இருக்கிறார். 3-ஆம் இடம் சகோதர, சகாய ஸ்தானம், நண்பர்கள் ஸ்தானம், பங்காளி ஸ்தானம். 6-ஆம் இடம் பகை, கடன், சத்ரு, போட்டி, பொறாமை, நோய், வைத்தியச் செலவு இவற்றைக் குறிக்கும் இடம். இவற்றுக்குரிய குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் மேற்படி பாவகப் பலனோடு குருவின் ஆதிபத்தியப் பலனை இணைத்துப் பலன் பார்க்க வேண்டும். அதாவது 5-ஆம் இடம் மக்கள், மகிழ்ச்சி. 7-ஆம் இடம் கணவர், மனைவி. 9-ஆம் இடம் தகப்பனார், பூர்வ புண்ணியம், தெய்வ வழிபாடு, குலதெய்வப் பிரார்த்தனை. இந்த மூன்றிலும் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகளும் குறைபாடுகளும் உண்டானாலும் குரு பார்க்கக் கோடி தோஷம் போகும். கோடி நன்மை கூடும் என்ற விதிப்படி எல்லாம் முடிவில் சாதகமாகும். அதேசமயம் 3-ல் செவ்வாய்- சனி சேர்க்கை, 4-ல் கேது, 10-ல் ராகு என்பதால் தாயார் அல்லது தன்சுகம் அல்லது வாகன வகையிலும், தொழில், வேலை, பணி இவற்றிலும் சிலருக்கு டென்ஷன் அதிகமாகலாம். தவிர்க்கமுடியாத செலவுகளும் உண்டாகி பிறகு தீரும். பொதுவாக குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டால் எந்த வம்பும் வழக்கும் வராது. அதற்கு ஒரே பரிகாரம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். ஈகோ உணர்வை விரட்டியடிக்க வேண்டும் பல இளைஞர்களும் இளம்பெண்களும் கண்டதும் காதல் என்று விரும்பித் திருமணம் புரிகிறார்கள். ஆறு மாதத்திற்குள் விவாகரத்து கோருகிறார்கள். அது சினிமாக்காரர்களுக்கும் வெளிநாட்டுக்காரர்களுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கலாம்! தமிழ்நாட்டில் குடும்பப் பெண்களுக்கு சரிவருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடுதானே உயர்வு! அந்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவரையொருவர் புரிந்து செயல்பட்டால் இல்லறம் நல்லறமாகும். "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது' என்ற வள்ளுவர் வாக்கைப் பின்பற்றலாமே.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் சனியோடு சேர்க்கை. பொதுவாக சனி- செவ்வாய் பார்த்துக்கொண்டாலும் சேர்ந்திருந்தாலும் சாரப் பரிவர்த்தனையானாலும் ராசிப் பரிவர்த்தனையானாலும் சிக்கல்தான், பிரச்சினைதான். கிணறுவெட்ட பூதம் புறப்பட்ட கதைதான்! சனியும் செவ்வாயும் எந்தெந்த பாவத்தில் இருந்தாலும் சரி அல்லது எந்தெந்த பாவ அதிபதிகளாக இருந்தாலும் சரி அல்லது எந்தெந்த பாவங்களைப் பார்த்தாலும் சரி அவற்றில் எல்லாம் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தே ஆகவேண்டும். இதற்கு விதிவிலக்கு என்ன? சுபஆதிபத்தியம் பெற்ற குருவோடு சம்பந்தம் பெறலாம். செவ்வாயும் சனியும் ராசி அல்லது லக்ன அதிபதியாக இருக்கலாம். இந்த விதிப்படி விருச்சிக ராசிநாதன் செவ்வாய் என்பதால் செவ்வாய்- சனி சேர்க்கை உங்களை கெடுக்காது. அதேபோல மேஷ ராசி, மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் மேற்கண்ட நான்கு லக்னத்தவர்களும் பயப்படவேண்டாம். அதுமட்டுமல்ல; விருச்சிக ராசிக்காரர்களுக்கு இப்போது ஏழரைச்சனியின் கடைசிக்கூறு நடக்கிறது. பாதச்சனி என்றும், குடும்பச்சனி என்றும் சொல்லப்படும். கடந்தகால ஏழரைச்சனியில் ஐந்தாறு வருடம் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் சந்தித்தவர்களுக்கு துர்ப்பலன் மங்குசனி! இனிமேல் பொங்குசனி! நற்பலன்! இதில் சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடந்தால் மட்டும் யோகமில்லை. பொருள் சேதம், உயிர்ச்சேதம், எதிர்பாராத ஏமாற்றம், இழப்புகளைச் சந்திக்கும் நிலை! அப்படிப்பட்டவர்கள் அந்த காலகட்டம் முடியும்வரை (ஏழரைச்சனி அல்லது சந்திர தசை புக்தி முடியும்வரை) திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் ஒருமுறை ருத்ர ஜெபப் பாராயணம் செய்து சிவன்- அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். அவரவர் இருப்பிடம் அருகில் செய்யலாம். பொன்னமராவதி அருகில் செவலூரில் பூமிநாதசுவாமி, ஆரணவல்லியம்பாளுக்கு 108 சங்கு வைத்து ருத்ரஜெபப் பாராயணம் செய்து ருத்ராபிஷேகம் முறையாகச் செய்வார்கள். ராஜப்பா குருக்கள் செல்: 98426 75863-ல் தொடர்பு கொள்ளலாம். அரசியல் அல்லது வேலையில் ஊழல்செய்து சம்பாதித்தவர்களுக்கு இந்த ஏழரைச்சனியில் பணவகையில் பாதிப்பு இல்லாவிட்டாலும் மன அமைதி, ஆனந்தத்தில் குறை இருக்கும். பிள்ளைகள், பேரன் பேத்தி, குடும்ப சூழலில் குறை இருக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஜென்மச்சனிக் காலம் என்றாலும் எல்லாருக்கும் கஷ்டம் என்பதில்லை. பிரச்சினை என்பது வேறு, கஷ்டம், நஷ்டம் என்பது வேறு! சிலருக்கு நல்ல சம்பாத்தியம், நல்ல வேலை, நல்ல மனைவி மக்கள் இருந்தும் சொந்த வீடு யோகம் இருக்காது. சிலருக்கு சொந்த வீடு இருந்தாலும் அதை சொந்த ஊரில் சொந்தம் சுற்றத்தார் அனுபவிக்க, தான் வெளியூரில் வாடகை வீட்டில் வசிக்கும் நிலை! சிலருக்கு மனசாட்சிப்படி வேலை, தொழில், சம்பாத்தியம் இருந்தாலும், குடும்பத்தில் வறுமை, தரித்திரம் இல்லாத வாழ்க்கை அமைந்தாலும் உரிய காலத்தில்- உரிய வயது காலத்தில் பிள்ளைகளுக்கு நல்ல காரியம் செய்யும் அமைப்பு இருக்காது. அரசு வேலை, ஆளும் அம்சம், படிப்பும் உத்தமம். இருந்தும் பெண் அமையவில்லை, மாப்பிள்ளை அமையவில்லை என்ற குறைபாடு! இது எதனால்? என்ன தோஷம்? அல்லது சாபமா என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கும் நிலை. மீனம், தனுசு ராசிக்காரர்களை பெரும்பாலும் எந்த சாபதோஷமும் பாதிக்காது. அதேபோல மீனம், தனுசு லக்னத்தாருக்கும் எந்த முன்னோர்வகை தோஷமோ செய்வினை தோஷமோ பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனென்றால் இது குருவின் ராசி- லக்னம் என்பதே சிறப்பு! அதேபோல 5, 7, 9-ல் குரு இருக்கப் பிறந்தவர்களுக்கும் (குரு பார்வை இருப்பதால்) எந்த செய்வினைக் குற்றமும் வந்தடையாது. அப்படி சில நினைப்புகள்- அதாவது யாராவது எதாவது செய்வினை செய்திருப்பார்களோ- அதனால் காரியத்தடை ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் அது உண்மையல்ல! வாழைப்பழத்தை தோலை உரித்துச் சாப்பிட வேண்டும். பலாப்பழத்தை மேற்தோலை நீக்கி பழத்தை எடுத்து கொட்டையை நீக்கி சாப்பிடவேண்டும் ஆப்பிள், திராட்சை பழத்தை அப்படியே கடித்துச் சாப்பிடலாம். அது அதற்கு கால அவகாசம் ஏற்படுவது போல உங்கள் தசாபுக்திகளைப் பொருத்து சில காரியங்களைச் செய்யவும் திட்டங்கள் நிறைவேறவும் சில சமயம் தாமதமாகலாம். ஹைவேஸ் ரோட்டில் ஜல்ஜல் என்று 100 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் போகும். பழுதுபார்க்கும்போது ஒருவழிப்பாதையில் போவதும்வருவதுமாக இருக்கும். வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் மெதுவாகத்தான் போகமுடியும். அதுமாதிரி உங்களுக்குத் தடை ஏற்படலாம். அதற்கு ஜென்மச்சனிதான் காரணம். ஆனால் தெய்வபலம் இருப்பதால் தேக்கம் நீங்கி ஊக்கம் உண்டாகிவிடும். எந்த ஒரு செயலும் குருவருளும் திருவருளும் இருந்தால் பரிபூரணமாகிவிடும். ஏகலைவன் மானசீகமாக குரு துரோணரை வணங்கி அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாகிவிட்டான். அதேபோல வீணை பாலசந்தர் என்ற கலைஞர் நேரடி குருவே இல்லாமல் வீணை கற்றுக்கொண்டார்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. செவ்வாயுடன் சேர்க்கை! சனி- செவ்வாய் சேர்க்கை கெடுதல் பலன் என்றாலும் செவ்வாயோ சனியோ ராசிநாதனாகவோ அல்லது லக்ன நாதனாகவோ அமைந்தால் மேற்படி செவ்வாய்- சனி சேர்க்கை கெடுதலாக இருக்காது. அத்துடன் குரு சம்பந்தம் இருந்தாலும் பாதிப்பு விலகிவிடும். ராசிக்கு 6, 9-க்குடையவன் புதன் மூன்றில் நீசம் என்பதால் கடன்போட்டி, பொறாமை, பங்காளிப்பகை எல்லாம் தீர்ந்துவிடும். அதே சமயம் தகப்பனார் ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி, குலதெய்வ வழிபாடு இவற்றைக் குறிக்கும் இடத்தின் அதிபதி, புதன் நீசம் பெற்றாலும் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் உருவாகி மறையும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக அமைந்தால் குலதெய்வக் கோவில் திருப்பணியில் பங்குபெறலாம். அங்கம் பெறலாம். நீண்டகால பிரார்த்தனை வழிபாடுகளும் நிறைவேறும். இஸ்லாமியர்கள் மெக்கா மெதீனா யாத்திரையும், கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் புனித யாத்திரையும், இந்துக்கள் காசி ராமேஸ்வரம், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையும் போகலாம். சிலர் கயிலாய யாத்திரைபோய் "கயிலை மணி' என்று பெருமை சேர்க்கலாம். ஜென்ம கேது, ஸப்தம ராகு. சிலருக்கு உடல் உபாதை அல்லது வாழ்க்கைத்துணைவருக்கு சுகக்குறைவு உண்டாகி விலகும். அப்படிப்பட்டவர்கள் விநாயகர், துர்க்கை, வடக்குப்பார்த்த அம்மனுக்கு அபிஷேக பூஜை செய்வதோடு தன்வந்திரி பகவானையும் வழிபடவேண்டும். செவ்வாய்- சனி சேர்க்கை பலனாக சிலர் கலப்புத்திருமணம் அல்லது காதல் திருமணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத பெற்றோர்கள் காமோகர்ஷண ஹோமம் செய்யலாம். திருமணத்தடை உடைய ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கொள்ளலாம். இந்த ஹோமங்கள் எல்லாம் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நரச்சியம்மன் கோவிலில் செய்யப்படும். விவரங்களுக்கு சுந்தரம் குருக்களை செல்: 9994274067-ல் தொடர்பு கொண்டு பேசலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் ஆட்சிபெற்று செவ்வாயோடு சேர்க்கை. அடிக்கடி செவ்வாய்- சனி சேர்க்கை கெடுதல் செய்யும் என்று எழுதி வருகிறேன். என்றாலும் உங்களை அது பாதிக்காது- கெடுக்காது! ஏனென்றால் சனி ராசிநாதன். அத்துடன் உங்கள் ராசியை 9-ல் இருக்கும் குரு பார்க்கிறார். செவ்வாயோ சனியோ ராசிநாதனாகவோ அல்லது லக்ன நாதனாகவோ அமைந்தாலும் குரு பகவான் சம்பந்தம் பெற்றாலும் மேற்படி செவ்வாய்- சனி சேர்க்கை தோஷம் பாதிக்காது. விதிவிலக்கு! குரு பார்க்க கோடி தோஷம் போகும். கோடி நன்மை கூடும்! 6-ல் ராகு, 12-ல் கேது. 6-ம், 12-ம் கெடுதலான இடங்கள். அதில் ராகு- கேது ஆகிய பாவ கிரகங்கள் இருப்பதால் "கெட்டவன் கெட்டில் கிட்டிடும் யோகம், என்ற விதிப்படி டபுள் மைனஸ்= ஒரு பிளஸ் என்ற ரீதியாக நன்மை உண்டாகும். 7-க்குடைய சூரியன் 3-ல் உச்சம். அதற்கு 2, 11-க்குடைய குரு பார்வை என்பதால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கூடும். பிரிந்து வாடிய கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்து இன்பமடையலாம். சிலருக்கு மனைவி வகையில் சொத்துசுகங்கள் வந்துசேரும். சிலருக்கு கணவர் வீட்டிலிருந்து மேற்படி யோகம் வந்துசேரும். சிலர் மனைவி பேரில் புதிய தொழில் தொடங்கலாம். கூட்டு சேர்க்கலாம். அல்லது பூமி, மனை வாங்கலாம். ஒருசிலர் ஜாதக யோகம் சாதகமாக அமைந்தால் பெட்ரோல் பங்க் அல்லது ரசாயனம் சம்பந்தப்பட்ட தொழில் அல்லது ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்யலாம். மேற்கண்ட தொழில் தொடங்கும்முன்பு மேட்டூர்- சேலம் பாதையில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவேண்டும். தங்கு தடை இல்லாமல், பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் எண்ணிய முயற்சிகள் ஈடேறும்; கருதிய காரியங்கள் கைகூடும். 11-ல் செவ்வாய்- சனி சேர்க்கை பலனாக ஒருசிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகள், விவாதங்கள், தர்க்கங்கள், கருத்துவேறுபாடுகள் நீங்கி உடன்பாடு உண்டாகும்; ஒற்றுமை ஏற்படும். 5-க்குடைய புதனும் நீசபங்கம் என்பதால் வாரிசு இல்லாதோருக்கு வாரிசு யோகமும் பிள்ளைகளைப் பெற்றெடுத்த புண்ணியவான்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் பெருகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவாக இருப்பது ஒருவகையில் நல்லதல்ல. என்றாலும் அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ஆட்சி பெறுவதாலும், இரண்டாம் இடத்தை குரு பார்ப்பதாலும் குடும்பம், பொருளாதாரம், பணப்புழக்கம், வரவு- செலவு இவற்றில் எந்த குற்றம் குறையும் ஏற்படாது. அதேசமயம் 6-க்குடைய சூரியன் 2-ல் உச்சம் பெறுவதால் கடன் வாங்குவதும், கடன் கொடுப்பதும் தவிர்க்க முடியாதவையாகும். தொழில் வகைக்காகவோ அல்லது இடம், பூமி, மனை, வீடு, வாகனம் சம்பந்தமாகவோ கடன் வாங்கலாம். கடன் கிடைக்கும். கடன் வாங்குவது தவறல்ல. ஆனால் அப்படி வாங்கும் கடன் யாரிடம் வாங்குவது? எப்படி வாங்குவது என்பதற்கு சில வரைமுறைகள் உண்டு. நியதிகள் உண்டு. தரங்கெட்டவர்களிடமோ அநியாய வட்டி வாங்குகிறவர்களிடமோ (ரன் வட்டி, மீட்டர் வட்டிக்காரர்கள்) கண்டிப்பாக கடன் வாங்கக்கூடாது அதேபோல வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதோ தொகை குறிப்பிடாமல் வெற்றுக் காசோலை (பிளாங் செக்) கொடுப்பதோ கூடாது. இது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதுபோல! தெரிந்தே பள்ளத்தில் விழுவதுபோல! குர்ரானில் (ஸல்) நபிகள் நாயகம் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க நினைப்பவனுக்கு அல்லா எல்லா வகையிலும் அள்ளித் தருவார். திருப்பிக்கொடுக்க நினைக்காதவனுக்கு அவன் செலவுக்கே ஒரு பணம்கூட கிடைக்காதபடி செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார். அதனால்தான் "கொடுத்து வாங்கினால் கோடி புரட்டலாம்' என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். எனவே 10-ல் செவ்வாய்- சனி இருந்தாலும் குரு வீட்டில் இருப்பதால் தொழில், வாழ்க்கை எதிலும் குறை வராது. ஆனாலும் 5-ல் உள்ள ராகு பலன் உங்கள் மனதில் மட்டும் நிறைவு இருக்காது. காரணம் காரியம் இல்லாத மனக்குறை! அதாவது பாஷை தெரியாத திரைப்படத்தைப் பார்ப்பதுபோல எல்லாரும் சிரிக்கும்போது நாமும் சிரிப்போம். (புரிகிறதோ இல்லையோ). பொது அர்த்தால் நேரத்தில் எங்கேயோ சந்து பொந்தில் ரகசியமாகத் திறந்துள்ள டீக்கடையில் காபி, டீ குடிப்பதுபோல டிகிரி காபியோ, கழனித்தண்ணி டீயோ எதுவானாலும் குடித்து பசியாறுவதுபோல சிலசமயம் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளவேண்டும். குடும்பம், தொழில் அமைப்பிலும் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். சில விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் போகும்!