ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
12-3-2019- ரிஷபம்.
14-3-2019- மிதுனம்.
16-3-2019- கடகம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 2, 3, 4.
செவ்வாய்: பரணி- 4, கிருத்திகை- 1.
புதன்: சதயம்- 4, 3.
குரு: கேட்டை- 4, மூலம்- 1.
சுக்கிரன்: திருவோணம்- 2, 3, 4.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 3.
கேது: உத்திராடம்- 1.
கிரக மாற்றம்:
13-3-2019- தனுசு குரு அதிசாரம்.
15-3-2019- மீனச் சூரியன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
ராசிநாதன் செவ்வாய் 8-க்குடையவர். ஜென்ம ராசியில் ஆட்சி. அவருடன் வாரத் தொடக்கத்தில் சந்திரன் சம்பந்தம். சந்திரன் 4-க்குடையவர். 4-ஆமிடத்தை பாக்கியாதிபதி குருவும் பார்க்கிறார்; 2, 7-க் குடைய சுக்கிரனும் பார்க்கிறார். தேக ஆரோக்கியத்தில் தெளி வான நிலை காணப்படும். கற்பனை பயமும் குழப்பமும் தீரும். 5-க்குடைய சூரியன் 5-ஆமிடத்தைப் பார்ப்பதால், பிள்ளைகளின் எதிர்காலம் (படிப்பு, பட்டம், வேலை, உத்தி யோகம், தொழில், மணவாழ்க்கை, வாரிசு யோகம் திருப்திகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையும். பிள்ளைகள் விரும்பிய பொருட் களை செலவைப் பார்க்காமல் வாங்கிக்கொடுத்து திருப்திப்படுத்துவீர்கள். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், உடன்பாடும், நல்லுறவும் ஏற்படும். திருமணமாக வேண்டிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். 9-ல் சனி, கேது- ராகு சம்பந்தம் ஏற்பட்டு, 9-க்குடையவர் 8-ல் மறைவ தால், ஒருசிலருக்கு தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து வகையில் குழப்பமும் பிரச்சினையும் ஏற்பட்டாலும், 13-ஆம் தேதி குரு பாக்கிய ஸ்தானத்திற்கு அதிசாரமாகப் போவதால் அவையெல்லாம் மாறிவிடும்; நன்மைகளாகத் தேறிவிடும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் பாக்கியத்தில் இருக்கிறார்; 3-க்குடைய சந்திரன் சாரம் பெறு கிறார். ரிஷப ராசிக்கு சந்திரன் உச்சநாதன். அத்துடன் 3-க்குடையவர். 8, 11-க்குடைய குருவும் ராசியைப் பார்க்கிறார். வில்லங்கம், விவகாரம், வழக்குகள் தீரும். வெற்றி வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து ஒற்றுமையும், அனுசரிப்புத் தன்மையும் எதிர்பார்க்க லாம். மனைவியின் பேரில் சொத்து சுகங்கள் அல்லது தொழில் முதலீடுகள் ஏற்படும். பெண்கள் ஜாதகப்படி, கணவரிடத்தில் அன்பும், அக்கறையும், ஆதரவும், அரவணைப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவும், புது முயற்சிகளில் ஈடுபாடும் ஏற்பட்டு முன்னேற் றமடையும். வேலையில் இருப்போர் தமது கடமைகளைக் கருத்தாக நிறைவேற்றி, மேலிடத்தாரின் பாராட்டுக்குப் பாத்திர மாவதோடு, பதவி உயர்வுக்கும் இடம் உண்டா கும். ஒருசிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் ஏற்பட வாய்ப்புண்டு. 8-ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பதோடு, அதிர்ஷ்ட ஸ்தானமுமாகும். குரு 7-ல் இருப்பதாலும், ராசிக்கு 11-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் மேற்கண்ட அதிர்ஷ்டவாய்ப்புகளும், லாபமும், வெற்றியும் உண்டாவது நிச்சயம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் சனி- கேதுவும் இருப்பதோடு, 7-க்குடைய குரு (மாங்கல்யகாரகன்) 6-ல் மறைவதும், அவரை 6-க்குடைய செவ்வாய் பார்ப்பதும், களஸ்திர காரகன் சுக்கிரன் 8-ல் மறைவதும், கணவன்- மனைவி உறவிலும், குடும்ப வாழ்க்கையிலும், பிரிவு- பிளவுகளை ஏற்படுத்தும் காலம். ஜாதக தசாபுக்திகளும் பாதகமாக இருந்தால்- கணவன்- மனைவியரின் ராசி 6, 8-ஆக இருந் தாலும், அல்லது கூட்டு எண் 8 அல்லது 8-ஆம் தேதி திருமணம் செய்திருந்தாலும் விவாகரத்து ஏற்படவும் இடமுண்டு. ராகு- கேது, சனி சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் சந்தேகப்பிடியில் சிக்கி சந்தோஷக்குறைவை அடையலாம். "சந்தேகக் கோடு சந்தோஷக்கேடு' என்பதை மனதில் நிறுத்தி, அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு கிரக பாதிப்பானாலும் அதற்குப் பரிகாரம் உண்டு; தீர்வு உண்டு. ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து, அதற்குரிய பரிகாரமுறைகளைச் செய்துகொண்டால் மனதில் துக்கம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வருத்தமும் மகிழ்ச்சியும், இன்பமும் துன்பமும் வெளியில் இல்லை. அவரவர் மனதுக்குள்தான் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு செயல் பட்டால் துன்பம் என்பதில்லை. எல்லாம் இன்பமயமே!
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு பார்வையும், 4, 11-க்குடைய சுக்கிரன் பார்வையும் கிடைக்கிறது. ஒருசிலருக்கு கடன், போட்டி, எதிர்ப்பு, இடையூறுகள் இருக்கும். ஒருசிலருக்கு எதிர்காலம் பற்றிய கற்பனைக் கவலைகள் இருக்கும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். ஜாதக தசாபுக் திகள் பாதகமாக இருந்தால், முன்பக்கம் போனால் கடிக்கும்; பின்பக்கம் போனால் எட்டி உதைக்கும் என்பதுபோல- கொஞ் சினால் மிஞ்சும்; மிஞ்சினால் கொஞ்சும்! 7-க்குடைய சனி 6-ல் மறைந்து, ராகு- கேதுக்களின் சம்பந்தம் பெறுவதன் பலன் அதுதான். என்றாலும், சுக்கிரன் ராசிநாதன் சாரம் பெறுவதால் (திருவோணம்), "நீரடித்து நீர் விலகாது' என்பதுபோல பாசப்பிணைப்பும் உண்டாகும். "எதிர்நீச்சல்' சினிமா படத்தில் பாடியதுபோல- ""அடிச் சாலும் புடிச்சாலும் அடிச்சதுக்கு ஒன்னு, புடிச்சதுக்கு ஒன்னு'' என்று பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்தலாம். 13-ஆம் தேதி 5-ல் உள்ள குரு 6-ல் மறைந் தாலும், ஆட்சி பெறுவதால் பிள்ளைகளின் எதிர்காலத் தொல்லைகள் எல்லாம் விலகி, எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 2, 11-க்குடைய புதனோடு சேர்ந்து ராசியைப் பார்க்கிறார். வாரக்கடைசியில் (15-3-2019) சூரியன் 8-ஆமிடத்துக்கு மாறுவார். மாறி னாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதாலும், 5-க்குடைய குரு ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதாலும் அன்புக்கும் அரவணைப் புக்கும் பஞ்சமில்லை. 11-ஆமிடத்து ராகு எதிர்பாராத லாபங்களையும் வெற்றிகளையும் குவிக்கும். 9-ஆமிடத்தில் ஆட்சிபெற்ற செவ்வாய் 3-ஆமிடத்தையும், 4-ஆமிடத்தையும் பார்ப்பதால் நண்பர்களாலும் உடன்பிறப்பு களாலும் நன்மைகள் உண்டாகும். அனுகூல மும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். சகோதர வகை சகாயமும் எதிர்பார்க்கலாம். 5-ல் சனி, கேது- ராகு சம்பந்தம் இருப்பதால், பிள்ளைகள் வகையில் தொல்லைகள் இருந்தாலும், 13-ஆம் தேதி அதிசார குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தொல் லைகள் நீங்கி நல்லவையாக மாறும். வம்புகள் விலகி அன்பு பெருகும். ஒருசிலருக்கு சுபக்கடன் உருவாகி, குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யும்நிலை உண்டாகும். படிப்பு, வேலை, வெளிநாட்டு வேலை, இடம்,வீடு, வாகன அமைப்பு போன்றவற்றில் சுபக்கடன் ஏற்படலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு என்றாலும், 10-ல் உள்ள ராகு சாரம் (சதயம்) பெறுவதால் தொழில், வாழ்க்கை, பதவி, உத்தி யோகம், வேலையில் எந்தக் கஷ்ட நஷ்டமும் இல்லை; பிரச்சினைகளும் இல்லை. போட்டியும் பொறாமையும், எதிர்ப்பும் இடை யூறும் சிலசமயம் இருந்தாலும் ஒருவகையில் உங்களை அது "உஷார்'ப்படுத்தும். அது இல்லை யென்றால் நீங்கள் அலட்சியமாக இருந்து முயலை முந்திய ஆமை கதையாகிவிடும். எதிரியை ஏளனமாக அல்லது எளிதாக நினைத்து வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் கோட்டை விட்டுவிடலாம். எனவே "எதிரிகள்- ஜாக்கிரதை!' என்பதை உணர்ந்து செயல்பட்டு வெற்றிபெற வேண்டும்! ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சிலர் வேலை தேடி வெளிநாடு போகலாம். ஏற்கெனவே வெளிநாட்டில் இருப்போர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு என்று முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம். 10-க்குடைய புதன் 12-க்குடைய சூரியனோடு இணைந்து 6-ல் மறைந்தாலும், அது 10-க்கு 9-ஆம் இடம் என்பதால் தொழில் யோகம், பதவி யோகம் ஆகியவற்றில் முன்னேற் றம் தெரியும். அதேபோல வாழ்க்கையிலும் எண்ணியதை ஈடேற்றி இன்பமடையலாம். நினைத்ததை நிறைவேற்றி நிம்மதியடையலாம். 8-ல் உள்ள செவ்வாய் ஆட்சிபெற்று 11-ஆம் இடம், 2-ஆம் இடம், 3-ஆம் இடங்களைப் பார்ப்பதால், சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் யோகங்களும் உண்டாகும். 8-ஆம் இடம்- 2, 11, 9-க்குடைய சம்பந்தம் அடையும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறும். திருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரிவது. அதிர்ஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. கண்ணுக்குத் தெரியாமல் வருவது விபத்தும் ஆகும்; அதிர்ஷ்டமும் ஆகும். அதனால்தான் 8-ஆம் இடத்தை விபத்து- அதிர்ஷ்ட ஸ்தானம் என்றார்கள்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 2-ல் உள்ள குரு, இந்த வாரம் 13-ஆம் தேதி 3-ஆம் இடம் தனுசு ராசிக்கு மாறுவார். 3-ஆம் இடம் மறைவு ஸ்தானம் என்றாலும், அது ஆட்சி வீடு என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. தனுசு குரு 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கும் என்ப தால், குரு பார்க்க கோடி நன்மை என்ற வாக்கியம் முக்கியத்துவம் பெறும்! திருமண மாகாதவர்களுக்கு திருமண யோகம் செயல்படும். 9-ஆம் இடம் என்பது 5-க்கு 5-ஆம் இடம் என்பதால், வாரிசு இல்லாத வர்களுக்கு வாரிசு யோகம் அமையும். சிலர் பெண் குழந்தைகளாகப் பெற்றெடுத்து ஆண் குழந்தைக்காகத் தவம் இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு அவசியம் ஆண் சந்ததி உண்டாகும். ஆசைக்கோர் பெண்ணும், ஆஸ்திக் கோர் ஆணும் உண்டாகும். ஆண் குழந்தை பிரார்த்தனை நிறைவேற கும்பகோணம்- குடவாசல் வழி, சேங்காலிபுரம் சென்று தத்தாத் ரேயரை வழிபடவேண்டும். 7-ல் செவ்வாய் ஆட்சி! மனைவி விரும்பிக்கேட்கும் பொருட் களை வாங்கித் தருவீர்கள். அது எவ்வளவு விலையானாலும் பொருட்படுத்தாமல் வாங்கித் தந்து சந்தோஷப்படுத்தலாம். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். 10-ஆம் இடத்தை ராசிநாதன் சுக்கிரன் பார்ப்பதோடு, 10-க்கு டைய சந்திரன் சாரம் (திருவோணம்) பெறுவ தால் தொழில் மேன்மையடையும். உற்பத்தி பெருகும். வியாபாரம் செழிக்கும். லாபம் கூடும். மாற்று உபாயங்களைக் கடைப்பிடித்து, தொழில் போட்டி, பொறாமைகளை முறியடித்து, எதிரிகளை வீழ்த்தி சாதனை படைக்கலாம். அதேபோல, அரசியல் கட்சிகளில் இருப்போரும் ராஜதந்திரமான கூட்டணி அமைத்து வெற்றிபெறலாம். பதவி களை அடையலாம். மாணவ- மாணவியர்கள் ஞாபகத்திறனை வளர்த்து படிப்பில் முன்னேற் றம் பெறலாம். மேற்படிப்பு யோகம் அமையும். வீடு வாசல், வாகனம் அமையும் வாய்ப்பு உங்களை வலியவந்து அரவணைக்கும். கைமுதலீடு பற்றாக் குறை என்று தயங்காமல் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளவும். கடன் உடன் வாங்கியாவது கனவுத்திட்டங்களை நனவாக்குங்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு என்றாலும், ஆட்சிபலம் என்பதால் மறைவு தோஷமில்லை. மேலும், ஆரம்பத்தில் 9-ல் உள்ள சுக்கிரன் சாரம் (பரணி), பிறகு 5-க்குடைய சூரியன் சாரம் (கிருத்திகை). குரு எட்டில் மறைந்தாலும் ராசிநாதனின் பார்வை. 13-ஆம் தேதி குரு 9-ல் தனுசு ராசிக்கு மாறியதும் ஆட்சிபலம் பெறுவார். அங்கு சனி இருப்பதால் 10-க்குடைய சனியும், 9-க்கு டைய குருவும் இணைவது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, எல்லா வகையிலும் தொல்லைகள் விலகும்; நல்லவை நடக்கும். பொல்லாப்புகள் பொடிப்பொடியாகத் தூளாகும். அல்லவை அகலும். தொழில் துறையில் நிலவும் தொய்வுகள் தொலையும். உன்னத மேன்மையும் எண்ணியபடி ஏற்படும். வியாபார விருத்தியும், வேலையில் விரும்பிய முன்னேற்றமும், உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும். நீண்டகாலமாக விரும்பியது எல்லாம்- கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக விலகிவிலகிப் போனவையெல்லாம் இனிமேல் விரும்பியபடி நெருங்கிவந்து ஆட்கொள்ளும்! ஆனந்தமடைய வைக்கும்! ஏழரைச்சனியில் குடும்பச்சனி வாக்குச்சனியாக நடந்தாலும், இதுவரை மங்குசனியாக செயல் பட்டவை இனி பொங்குசனியாக மாறி பொலி வைத் தரும். 9-ஆம் இடத்தை விரயாதிபதி சுக்கிரனும், தனாதிபதி குருவும் பார்ப்பதால், தொழில்துறையில் சில சீர்திருத்தங்களும், பயனுள்ள செலவுகளும் ஏற்பட்டாலும், அவை லாபகரமாகவும் முன்னேற்றகரமாகவும் அமையும். லாபம் தரும் வெள்ளாமைக்கு முன்னேற்பாடாக உரம் போட்டு செலவழிப்பது போல, சுபவிரயமாக அதை எடுத்துக்கொள்ள லாம். 10-க்குடைய சூரியன் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும் ஒரு காரணம். 15-ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு மாறியதும், 10-க்கு 8-ல் மறையும் என்றாலும், அவர் குரு சாரம் பெற்று (பூரட்டாதி) குரு வீட்டில் நிற்க, குரு 13-ஆம் தேதிமுதல் சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சிபெறுவதாலும், 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் தொழில், வாழ்க்கையில் முன்னேற்றமும் அனுகூலமும் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். நூறு சதவிகித முன்னேற்றமும் உண்டாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு இதுவரை 12-ல் இருந்து 4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததால், சிலருக்கு ஆரோக்கியக்குறைவு, சிலருக்கு சக்திக்கமீறிய கடன், சிலருக்கு போட்டி, பொறாமை, சிலருக்கு குடும்பத்தில் குழப்பம் ஆகிய காரணங்களால் வேதனையும், விரக்தி யும் வெளியில் சொல்லமுடியாத மனக் கஷ்டமும் இருந்தது. இந்த வாரம் புதன் கிழமை (13-3-2019-ல்) குரு 12-ல் இருந்து ஜென்ம ராசிக்கு பெயர்ச்சியாகி 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கப் போகிறார். அதனால் மகிழ்ச்சி, பிள்ளைகள் வகையில் நல்ல பலன்கள் நடக்கும். படிப்பு, வேலை, சம்பாத்தி யம், பதவி உயர்வு, மணவாழ்க்கை போன்ற நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு வீடு, மனை பாக்கியமும், கடன் வசதிகளும் உண்டாகும். சிலர் வாகனப் பரிவர்த்தனை செய்ய லாம் அல்லது புதிய டூவீலர் அல்லது கார் போன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடும். சனி, கேது- ராகு ராசியிலும், ஏழிலும் சம்பந்தப்படுவதால், சிலருக்கு கலப்புத்திருமணம் அல்லது காதல் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஜனன ஜாதகத்தில் செவ்வாய், சனி- 7-ஆம் இடத்து அதிபதி அல்லது 7-ஆம் இடங்களில் அமைந் திருந்தால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் கட்டாயம் நடக்கும். அப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு (அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி) இப்படிப் பட்ட கோட்சார அமைப்பில் காதல் திருமணம் அல்லது கலப்புத்திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வீட்டில் பெரியோர்கள் அதற்குத் தடை போடாமல், பச்சைக்கொடி காட்டி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது பிள்ளைகள் எடுக்கும் முடிவல்ல! காலமும் விதியும் செய்து வைக்கும் திருவிளையாடல் என்று தெளிந்து, சேர்த்து வைக்கவேண்டும். "எங்கிருந்தாலும் வாழ்க!' என்று மலர் தூவி மனதைப் பக்குவ மாக்கிக்கொள்ள வேண்டும். இவை யெல்லாம் விட்டகுறை தொட்டகுறை. அப்படி காதல் திருமணமாக அமையா விட்டால், அவரவர்களிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டால், பெண்ணைவிட ஆண் வயது குறைந்தவராகக் காணப்படலாம். பெரும்பாலும், சில சமூகத்தாரிடம் இந்த வயது வித்தியாசம் (இளமையான மாப்பிள்ளை) பார்க்கப்படுவதில்லை.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு 13-ஆம் தேதிமுதல் (புதன்கிழமை) சனி யுடன் வந்து இணைந்து, ஆட்சிபலம் பெறப் போவதால், சனியின் மறைவு தோஷம் பாதிக்காது. மறைந்து செயல்படு வதும் ஒருவகை ராஜதந்திரம்- யுத்த தர்மத்தில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. அதற்கு உதாரணம்- வாலியை மறைவில் இருந்துதான் ராமர் அம்பால் தாக்கி சுக்ரீவனை மன்னராக்கினார். யுத்தத்தில் வீரர்கள் இலைதழைகளின் நிறம்போல உடம்பெல்லாம் வண்ணம் பூசிக்கொண்டு அல்லது ஆடை அணிந்து கொண்டு, மறைந்து மறைந்து எதிரிகளை நோக்கி முன்னேறுவதுண்டு. அதை "கோமோபிளஜ்' என்பார்கள். கொரில்லா போர் என்று சொல்லுவார்கள். வள்ளுவரே "பொய்யும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில்' என்று கூறுகிறார். தற்காப்புக்காக எதிரியைக் கொல்வது குற்றமாகாது என்று சட்டம் கூறும். ஆக, மறைவுக்கு இவ்வளவு விதிவிலக்கு இருக்கிறது. அரண்மனையில் ஆபரணங்களைத் திருடிச்சென்ற திருடர்களை வீரர்கள் விரட்டிச் செல்லும்போது, திருடர்கள் வழியிலுள்ள ஒரு விநாயகருக்கு ஒரு பங்கு உண்டியலில் செலுத்துவது வழக்கம். வீரர்களிடம் பிடிபடா மலிருக்க ஓடியபோக்கிலேயே ஒரு முத்துமா லையை பிள்ளையார் கோவிலுக்குள் வீசிவிட்டு தப்பிவிட்டார்கள். திருடர்கள் வீசிய முத்து மாலை கோவிலில் தியானத்திலிருந்த பட்டினத் தார் கழுத்தில் விழுந்தது. வீரர்கள் உள்ளே புகுந்து பட்டினத்தாரை திருடன் என நினைத்து கைது செய்துபோக, அரசன் கழுவிலேற்ற உத்தரவு போட, பட்டினத்தார் கழுமரத்தையே எரித்து விட்டார். ஓட்டுப்போட பணம் வாங்குவதும் லஞ்சம் வாங்குவதற்குச் சமம்தான். மலிவு விலைக்கு ரேஷன் பொருட்களை வாங்கி, அதிக விலைக்கு பலசரக்குக்கடையில் விற்பதும் சட்டவிரோதம்தான். ரேஷன் கடைகளில், ஊழியர்கள் பொருட்களைக் கடத்துவது மட்டும் சட்டவிரோதமல்ல! இப்படி அடிமட் டத்தில் இருந்து மேல்மட்டம்வரை தப்பு நடக்கத்தான் செய்கிறது. "கொன்றால் பாவம்- தின்றால் சரியாப் போச்சு' என்று சொல்லும் வகையில், ஊழல் செய்கிறவர்கள் கோவில் உண்டியலில் பங்கு செலுத்தி பூஜைசெய் கிறார்களே! அது நியாயமா? இதெல்லாம் சனியின் நியாயம், ராகு- கேதுவின் தர்மம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார்; ராசியைப் பார்க்கிறார். சனியுடன் சனிக்கு வீடு கொடுத்த குருவும் 13-ஆம் தேதிமுதல் இணைகிறார். அதனால் குடும்பம், வாக்கு, பொருளாதாரம் ஆகியவற்றில் அனுகூலமான பலன்கள் நடைபெறும். வழக்கு, விவகாரங் களில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். விவாக ரத்துவரை நீதிமன்றம் சென்ற கணவரும் மனைவியும் மனம் திருந்தி, (கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு) ஒருவரையொருவர் புரிந்து இணைந்துவிடுவார்கள். பிரிந்துவாழும் தம்பதிகளும் இணைந்துவாழ முற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் தொழில் முன்னேற்றமடையும்; வியாபாரம் வளர்ச்சியடையும். வேலையாட்கள் கடமை உணர்வோடு பணியாற்றி லாபம் பெருகத் துணைபுரிவார்கள். தாராளமான பணவரவு இருப்பதால் வாக்கு நாணயம் காப்பாற் றப்படும். கொடுக்கல்- வாங்கல் சீராக அமையும். குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டியது வந்து சேர்ந்தால், கொடுக்க வேண்டியதையும் குறிப் பிட்டபடி கொடுத்துவிடலாமே! வரவு வராத போதுதான் கொடுக்க வேண்டியதும் தாமத மாகிறது. 3-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதால், சகோதர சகாயமும், நண்பர்களின் நல்லுதவியும் எதிர்பார்க்கலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் விருச்சிக ராசியில் கடந்த சில மாதங்களாக இருந்து, உங்கள் ராசியைப் பார்த்தது ஒரு தனிபலம்தான். 10-க்குடையவர் 9-ல் நின்றது தர்மகர்மாதிபதி யோகம். இந்த வாரம் 13-ஆம் தேதி, 10-ஆம் இடத்துக்கு குரு அதிசாரமாக மாறுகிறார். அதனால் அந்த தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுமா? செயல்படாதா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். 10-க்குடையவர் 10-ல் ஆட்சிபெறுவது ஒருவகையில் பலம்தான்; யோகம்தான். 2-ல் ஆட்சிபெற்ற செவ்வாயை தனுசு குரு பார்க்கப் போவதாலும் அந்த தர்மகர்மாதிபதி யோகம் தொடர்கிறது. அதாவது 9-க்குடைய செவ்வாயை, 10-க்குடைய குரு பார்க்கிறார். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உருவாகும். மனைவிக்கு அல்லது கணவருக்கு வெளியூரில் நல்ல வேலை வாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்பு உருவாகும். அதைவைத்து வெளியூரில்போய் புதுவாழ்க்கை யைத் தொடங்கலாம். பிள்ளைகளுக்கும் வெளியூர்களில் படிப்பு வாய்ப்பு உருவாகலாம். இடம் மாறுவது அல்லது ஊர்மாறுவது என்பது ஒருவகையில் பரிகாரம்தான். 10-ஆமிடத்து குரு பதிமாறச் செய்யும் என்பது பழமொழி. ராசிநாதன் குரு 10-ஆம் இடத்துக்கு அதிபதி என்பதால், அந்த மாற்றம் உங்களுக்கு நல்ல மாற்றமாக அமையும். இதுவே 6, 8, 12 சம்பந்தம் பெற்றால் பதிகுலையச் செய்யும் என்ற பழமொழி சரியாகும். அது பதிமாறச் செய்யும். இது பதிகுலையச் செய்யும்.
குருப்பெயர்ச்சி (அதிசாரம்)
13-3-2019-ல் விருச்சிக குரு, தனுசு ராசிக்கு மாறி ஆட்சி பலம் பெறுகிறார். இது முறையான பெயர்ச்சி அல்ல. அதிசாரம் எனப்படும். தனுசு ராசியில் 10-4-2019-ல் வக்ரம் அடைந்து, 18-5-2019-ல் மீண்டும் விருச்சிக ராசிக்கு வக்ரகதியாக வருவார். 7-8-2019-ல் விருச்சிக குரு வக்ரம் நீங்கி மறுபடியும் 25-1-2020-ல் தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாவார். இதுவே முறையான குருப்பெயர்ச்சியாகும். (தனுசு ராசியில் உள்ள குரு 28-3-2020-ல் மகர ராசிக்கு மாறுவார்.)