4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
28-10-2018- மிதுனம்.
30-10-2018- கடகம்.
1-11-2018- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 2, 3, 4.
செவ்வாய்: அவிட்டம்- 3, 4.
புதன்: விசாகம்- 4, அனுஷம்- 1.
குரு: அனுஷம்- 1.
சுக்கிரன்: சுவாதி- 3, 2.
சனி: மூலம்- 2.
ராகு: பூசம்- 1.v கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
28-10-2018- சுக்கிரன் அஸ்தமனம், வக்ரம்.
3-11-2018- புதன் வக்ரம் ஆரம்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருக்கிறார். ராசிநாதன் லாப ஸ்தானத் தில் இருப்பது ஒருவகையில் நன்மையே. 11-க்குடைய சனியால் பார்க்கப்படுகிறார். எடுத்த காரியங்களை வெற்றியாக முடிக்கலாம். என்றாலும் சில தடைகளையும் சந்தித்து தான் சாதிக்கமுடியும். 2-க்குடைய சுக்கிரன் அஸ்தமனமாக இருக்கிறார். பொருளா தாரத்தில் பற்றாக்குறை நிலைகளைச் சந்திக்க வேண்டி வரும். 4-ல் ராகு- உடல்நலத்தில் அவ்வப்போது வைத்தியச்செலவுகள் தோன்றி விலகும்; பாதிப்புகள் வராது. 5-க்குடைய சூரியன் 7-ல் நீசமாக இருக்கிறார். 7-ல் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் சூரியன் நீசபங் கமாகிறார். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். அவர்களின் படிப்பு சம்பந்தமான கவலைகள் மாறும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகமாகும். 10-ல் கேது- சிலருக்கு தொழில், உத்தி யோகத்தில் சிறுசிறு சங்கடங்கள் உருவாகும். தனியார் துறையில் பணிபுரிவோருக்கு மேலிடத்தாரின் ஆதரவு குறை வாகவே காணப்படும். 6-ஆமிடத்துக்குச் செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. வீடு, வாகனம் சம்பந்தமாக கடன்கள் கிடைக்கும். அதற்கான வங்கிக்கடன் முயற்சியும் கைகூடும். என்றாலும் எல்லாம் இருந்தும் எதுவுமில்லாத மாதிரியான ஒரு நிலை மனதில் இருந்து வாட்டும். அதற்கு 8-ல் உள்ள குருவும் ஒருவகையில் காரணம். 3-க்குடைய புதன் 8-ல் மறைவு. எனினும் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. தாய்மாமன்வழி உறவில் நன்மை உண்டாகும். உடன்பிறந்த சகோதரவழியில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் அமைப்பும் உருவாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் அஸ்தமனமாக இருக்கிறார்; வக்ரமும் பெறுகிறார். அட்டமத்துச்சனி நடக்கிறது. என்றாலும் குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது பலம். 2-க்குடைய புதனும் குருவுடன் சேர்க்கை. பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலை மாறும். 10-ல் செவ்வாய்- தொழில்துறையில் சில நல்ல மாற்றங்கள் நிகழும். தொழில்துறைக்காக ஏற்படும் விரயங்களை சுபவிரயமாக மாற்றும் அமைப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர் களுடன் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. கணவன்- மனைவிக்குள் அனுசரிப்புத் தன்மையும் ஆதரவும் ஏற்படும். 9-ல் கேது- தகப்பனாரால் சிற்சில சங்கட மான நிகழ்வுகள் உண்டாகலாம். கல்விக்காக திட்ட மிட்டதைவிட சற்று கூடுதலாக செலவுசெய்ய நேரும். 3-ல் ராகு- எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக எதிர் கொள்ளலாம். ராகுவுக்கு 3, 6, 11 நல்ல இடங்கள்தான். நண்பர்களினால் எதிர்பார்க்கும் உதவி தாமதமாகும். உடல்நலத்தில் தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் உண்டாகும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். சுயதொழில்புரிவோர் புதிய முதலீடு செய்யும் முயற்சி களைத் தள்ளிப்போடவும். பணிபுரியுமிடத்திலும் அமைதி யையும் பொறுமையையும் கடைப்பிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். 7-ல் குரு- திருமண மாகாத ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பச் சுமையும் கூடும். தாயார் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். சிலர் குடியிருப்பு மாற்றம், இடமாற்றத்தைச் சந்திக்க நேரும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. என்றாலும் அவருக்கு சாரம் கொடுத்த குரு (விசாகம் 4-ல் புதன்) அவருடன் சேர்க்கை என்பதாலும், புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ராசிக்கு திரிகோணம் என்பதாலும் மறைவு தோஷம் விலகும். மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது ஜோதிட விதி. எனவே தொழில்ரீதியாகவும், வியா பாரரீதியாகவும், உத்தியோகரீதியாகவும் முன்னேற்றகரமான பலன்களைச் சந்திக்கலாம். 6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். மேலும் 9-க்குடைய சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் பலம்தான். அதிலும் 9-க்குடைய சனி 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 10-க்குடைய குரு 10-ஆம் இடத் தைப் பார்ப்பதும் உங்கள் வளர்ச்சிக்கு படிக் கற்களாக அமையும். 5-ல் சூரியன் நீசம் என்றாலும், அவருக்கு வீடு கொடுத்தது சுக்கிரன் என்பதால் சூரியன் நீசபங்க ராஜயோகமடைவார். எனவே எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடும் தைரியத் தோடும் ஆணித்தரமாகவும் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். பெருந்தன்மையும் பெரும்பான்மையான போக்கும் உங்களை உயர்ந்த இடத்தில் அமரச்செய்து பாராட்டும். பொருளாதார வசதிக்குக் குறை வில்லையென்றாலும், "ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு' என்ற மாதிரி வீண் ஆடம்பரச்செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம். அத்தியாவசியமான செலவுகளைச் செய்வதில் தயக்கம் கூடாது. 2-ல் ராகு நிற்பதால் யாருக்கும், எதற்கும் வாக்குறுதி கூறுவதைத் தவிர்க்கவேண்டும். ராகு உங்கள் வாக்கு நாணயத்தைக் காப் பாற்றும் விஷயத்தில் எதிர்மறைப் பலன் தருவார். ராசிநாதன் 6-ல் இருப்பதால் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். வைத்தியச்செலவுகளை விரட்டியடிக் கலாம். 7-ல் உள்ள சனி திருமணத்தடைக ளையும் தாமதங்களையும் உருவாக்கலாம். ஜாதக தசாபுக்திக்கு ஏற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ளவும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
ஜென்ம ராகு காரியத் தடை, காரிய தாமதங்களை உருவாக் கினாலும், 5-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதோடு ஜென்ம ராசியையும் பார்ப்பதால் தோஷம் நீங்கும். தடைகளும் தாமதங்களும் ஒருவகையில் நல்லதாகவே அமையும். ஒரு ராஜா பழம் நறுக்கும்போது கைவிரலை நறுக்கிக்கொண்டார். அருகிலிருந்த மந்திரி "எல்லாம் நன்மைக்கே' என்றார். உடனே அரசர் ஆத்திரமடைந்து அமைச்சரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போதும் அமைச்சர் "எல்லாம் நன்மைக்கே' என்றார். அமைச்சரை விட்டுவிட்டு அரசர் காட்டுக்கு வேட்டைக்குப் போனார். வழிதவறிப்போன அரசரை காட்டுவாசிகள் பிடித்து காளிக்கு நரபலி கொடுக்கப்போனார்கள். அப்போது பூசாரி அரசருக்கு கைவிரல் இல்லை என்றும், ஊனமுற்றவரை பலி கொடுக்கக்கூடாது என்றும் விடுதலைசெய்து அனுப்பிவிட்டார். "எல்லாம் நன்மைக்கே' என்று அமைச்சர் சொன்னதை நினைவுகூர்ந்து அமைச்சரிடம் வந்து, ""உங்களை சிறையில் அடைத்தது எப்படி நன்மையாகும்?'' என்றார். ""என்னை சிறையில் அடைக்காமல் உங்களுடன் அழைத்துச்சென்றிருந்தால் உங்களுக்கு பதில் என்னைப் பலிகொடுத்திருப்பார்கள் அல்லவா! சிறையில் அடைத்தது நன்மைதானே'' என்றா ராம். அதனால் கீதையில் கண்ணன் சொன்னமாதிரி "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.' எனவே எந்தச் சூழ் நிலையிலும், எதற்கும் கவலைப்பட வேண்டாம், கலங்கவும் வேண்டாம். சிலர் சகோதர வகையில் பிரச்சினைகளையும் வருத் தங்களையும் சந்திக்கலாம். இந்த ஜென் மாவில் பிறந்துவிட்டோம். உடன்பிறப் புகளோடு வளர்ந்துவிட்டோம். அடுத்த ஜென்மாவில் யார் யாரோ- எங்கேயோ- எப்படியோ? அதனால் இப்பிறப்பில் போட்டி, பொறாமைகளை விரட்டிவிட்டு விட்டுக் கொடுத்துப்போவதால் யாருக்கு என்ன பாதிப்பு? விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப்போகிறவன்தான் விட்டுக்கொடுக்கமாட்டான். இந்தத் தத்து வத்தைப் புரிந்துகொண்டால் உடன்பிறப் புகளோடு மனம்விட்டுப் பழகலாம்- மகிழலாம். மகிழ்ச்சியும் திருப்தியும் உங்கள் மனதில்தான் மறைந்துகிடக்கிறது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசமாக இருக்கிறார். 3-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்று சூரியனுடன் இணைந்திருப்பதால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படு கிறது. செயல்பாடுகளில் தேக்கம் இருந் தாலும் பூர்த்தியாக நிறைவேறும். 5-ல் சனி- பிள்ளைகள் வகையில் மந்தமான பலன் களையே தரும். அவர்களின் கல்வி, உத்தி யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமதமான பலன்கள் நடக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பங்கு பாகப்பிரிவினை விஷயங்களில் தீர்ப்புகள் தள்ளிப்போகலாம். 7-ல் செவ்வாய், அதைப் பார்க்கும் சனி- எனவே திருமண வயதை எட்டியவர்கள் சிலர் காதல் வயப்படலாம். சிலர் கலப்புத் திருமணம் செய்யலாம். சனி, செவ்வாய் பார்வை காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தை உண்டாக்கும். 4-ல் உள்ள குருவின் பார்வை 8, 10, 12-ஆகிய இடங்களுக்குக் கிடைப்பதால் திடீர் அதிர்ஷ்டம் அல்லது சஞ்சலங்களை சந்திக்கலாம். புதிய ஒப்பந் தங்களில் யோசித்துச் செயல்படுவது நல்லது. 2-க்குடைய புதன் வக்ரம் பெறுகிறார். (3-11-2018). எனவே பொருளாதாரத்தில் பணப் பற்றாக்குறையை சந்திக்கலாம். ஒரு கடனை அடைக்க இன்னெனாரு கடன் வாங்கலாம். தொழில் சம்பந்தமான விரயங்களும் ஏற்படும். சிலர் ஊர் மாற்றம், பணிமாற்றம் போன்ற பலன்களையும் எதிர்கொள்ள நேரும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிக்கு 1, 10-க்குடைய புதன் 3-ல் குருவோடு இணைந்து காணப்படுகிறார். 2-க்குடைய சுக்கிரன் 2-ல் ஆட்சி, அஸ்தமனம். எவ்வளவு வருமானம் வந்தாலும் பற்றாக் குறை நிலையை சந்திக்க வேண்டிய நிலை. "கையிலே வாங்கினேன் பையிலே போடல- காசுபோன இடம் தெரியலே' என்று ஒரு படத்தில் நடிகர் தங்கவேலு பாடியது மாதிரி உங்களது நிலையும் புலம்பலைத் தரும். 4-ல் உள்ள சனி தேக சுகத்தில் ஆரோக்கியக்கு றைவை உண்டாக்குவார். சிலர் மூட்டுவலி, கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப் படலாம். 5-ல் கேது- சிலர் பிள்ளைகளால் பிரச்சினைகளை சந்திக்கலாம். அவர்களின் நலன்கருதி எடுக்கும் முயற்சிகள் பலனளிக் காமல் போகலாம். அவர்களுடன் கருத்து வேறு பாடுகள், சச்சரவுகள் தோன்றும். மேலும் சிலர் குடும்பம் ஓரிடம், பணிபுரியுமிடம் ஓரிடம் என்று அலைக்கழிக்கப்படுவார்கள். கன்னி ராசிக்கு 3, 8-க்கு அதிபதி செவ்வாய் 6-ல் மறைகிறார். அது ஒருவகையில் நன்மை யைத் தரலாம். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதற்கேற்ப திட்ட மிடாமல் செய்யும் சில காரியங்களில் நற்பலன்கள் உண்டாகும். 3-ல் உள்ள குரு நீங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை சமாளிக்கும் தைரியத்தைத் தரும். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் விலகி சமரசம் உண்டாகும். ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வர். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மகிழ்வுடன் வாழும் வழிமுறைகளும் தென்படும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அத்துடன் அஸ்தமனமாகவும் இருக்கிறார். ராசிநாதன் அஸ்தமனமடைவது நல்லதல்ல. 8-க்குடை யவர் அஸ்தமனமடைவது ஒருவகையில் நன்மையே. 2-ல் உள்ள குரு பொருளாதாரத் திலுள்ள பிரச்சினைகளை சரிசெய்வார். கொடுக்கல்- வாங்கல் சீராக இருக்கும். எந்த வழியிலும் உங்களுக்கு கடைசி நேரத்தில் பணத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லறம் நல்லறமாக அமையும். குடும்பத்திலுள்ள குழப் பங்கள் விலகி கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதாயமும் அனுசரிப்பும் உருவாகும். 2, 7-க்குடைய செவ்வாய் 5-ல் சஞ்சரிக்கிறார். அவரை சனி பார்க்கிறார். கல்வி பயிலும் பிள்ளைகளுக்குப் படிப்பில் ஆர்வமின்மை, அக்கறையின்மை தோன்றும். விடாமுயற்சியும் இறைவழிபாடும் இருந்தால் அவற்றிலிலிருந்து தப்பிக்கலாம். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தொழில் அமைப்பிற்காக கடனை ஏற்படுத்துவார். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதுவரை கடுமையாக முயற்சி செய்தும் நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெற்று நிறைவேறும். தசாபுக்திகள் சாதகமாக நடைபெறும் அமைப்பைப் பெற்றவர்களுக்கு எந்தக் காரியத்தையும் சுலபமாக முடிக்கும் துணிச்சலும் தைரியமும் தோன்றும். 12-க்குடைய புதன் 2-ல் வக்ரம். எதிர்பாராத உதவிகள் வந்துசேரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கூடும். தன்னிச்சையாக செயல்படும் சூழ்நிலை உருவாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி 2-ல் இருந்து அவரைப் பார்க்கிறார். உடல் ஆரோக்கியம் தெளிவு பெறும். சிலர் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். உறவினர்களிடையே ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி ஒற்றுமை நிலவும். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை ஆகாது என்றாலும், இங்கு செவ்வாய் ராசிநாதன் என்ற அடிப்படையில் விதிவிலக்கு உண்டு. 10-க்குடைய சூரியன் 12-ல் நீசம் பெற்று, 12-க்குடைய சுக்கிரனோடு இணைந்திருப்பதால் அரசாங்க வழிவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் தள்ளிப்போகலாம். தொழில்துறையில் சற்று மந்தமான நிகழ்வு களைச் சந்திக்கலாம். 2-ல் சனி. பேச்சில் நிதானத்தையும், செயல்பாட்டில் பொறுமை யையும் கடைப்பிடிப்பது நல்லது. குடும் பத்தில் பெரியோரிடமுள்ள கருத்து வேறுபாடுகளை அனுசரித்துச் செல்லவும். ஜென்ம குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமையும் புகழும் வந்துசேரும். சிலரது பிள்ளைகள் படிப்பில் காட்டும் அக்கறையைவிட விளையாட்டில் ஆர்வம் செலுத்தி போட்டிகளில் கலந்து வெற்றியும் பெறலாம். 9-ஆமிடத்தையும் குரு பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்க விவகாரங்கள் ஒரு சுமுகமான முடிவுக்கு வரலாம். குலதெய்வப் பிரார்த்தனை அல்லது இஷ்டதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்புகளும் தென்படும். பொருளாதாரத்தில் வரவுக்கேற்ற செலவுகளும், சிலசமயம் வரவுக்குமீறிய செலவுகளும் ஏற்படத்தான் செய்யும். இறைவழிபாட்டின்மூலமே அதற்குத்தீர்வு காணமுடியும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென் மச்சனி நடக்கிறது. உங்கள் காரியங்கள் பூர்த்தி யாவதில் தாமதம், உடல் ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகளைச் சந்தித்தல், சிலருக்கு கண்டுபிடிக்க முடியாத நோயால் உடல் உபாதைகள் உண்டாகுதல் போன்ற பலன்கள் நடைபெறலாம். ராசிநாதன் குரு 12-ல் மறைந்திருக்கிறார். 10-க்குடைய புதனும் அவருடன் மறைவு. உத்தியோகத்தில் சில அதிரடி மாற்றங்களை எடுக்கலாம். என்றாலும் புதிய ஒப்பந்தங்கள், முதலீட்டு முயற்சிகள் போன்றவற்றைத் தற்காலிலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பூமி, வீடு சம்பந்தமான நல்ல திட்டங்களை செயல் படுத்த வைப்பார். 3-ல் செவ்வாய்- சொத்து சம்பந் தமாக உடன்பிறப்புகளிடம் கருத்து வேறு பாட்டால் விலகியிருந்த நிலை மாறுவதற்கு விட்டுக்கொடுத்து அனுசரித்துச் சென்றால் ஒற்றுமை ஏற்படலாம். 2-ல் கேது- பணப் புழக்கத்தில் சற்று ஏற்றத்தாழ்வுகள் மாறிமாறி உண்டாகும். வாரக்கடைசியில் புதன் வக்ரம் ஆரம்பம். வக்ரத்தில் உக்ரபலம். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். ஆபரணச் சேர்க் கையும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சேமிப் புத் திட்டத்தைத் தொடங்கி அதை நடைமுறைப் படுத்தலாம். சிலர் குடியிருப்பு மாற்றங்கள், சிலர் தொழில் இடமாற்றங்கள் ஆகியவற்றை சந்திக்க நேரும். குடும்பத்தில் ஏற்படும் குழப் பங்கள் நீங்க பெரியோரின் யோசனையையும் ஏற்று நடப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 12-க்குடைய குரு 11-ல் லாபஸ் தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, ஒருபுறம் வரவும், மறுபுறம் செலவும் மாறிமாறி இருந்து கொண்டே இருக்கும். ஜென்ம கேது மனக்குழப் பங்களையும், நிம்மதியற்ற சூழலையும் உருவாக்கும். 7-ல் ராகு- கணவன் மனைவிக்குள் அடிக்கடி சச்சரவுகள், பிணக்குகள் தோன்றி மறையும். என்றாலும் பிரிவு, பிளவிற்கு இடம் ஏற்படாது. 4-க்குடைய செவ்வாய் 2-ல் இருக் கிறார். அவரை 2-க்குடைய சனி பார்க்கிறார். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றினாலும், அதை சமாளிக்கும் வழிமுறைகளும் தென்படும். ஏழரைச்சனிக் காலத்தில் சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடந்தால் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது அவசியம். பணி நிமித்தமாக அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். 3-க்குடைய குரு 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஆகவே உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையில் நன்மைகள் உண்டாகும். அவர்களின் விசேஷ வைபவங்களுக்கு நீங்களும் ஒரு தொகையைச் செலவிடும்படியான சந்தர்ப் பமும் நேரும். இரண்டாம் சுற்று சனி நடப் பவர்களுக்கு இது பொங்குசனியாக செயல்படும். அப்படிப்பட்டவர்கள் ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தொழிலில் முதலீடு, புதிய ஒப்பந்தம் ஆகியவற்றைச் செயல் படுத்தலாம். 10-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சி. 8-க்குடைய சூரியன் அவருடன் நீசபங்க ராஜயோகமடைவதால் திடீர் யோகமும் வாய்ப்பும் கைகூடும். எதிர் பாராத நன்மைகளும் நடக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று உங்கள் ராசியையே பார்க்கிறார். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம். அவருக்கு ராசிநாதன் சனியின் பார்வை கிடைக்கிறது. உடன்பிறப்புகளால் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். தூர தேசத்தில் இருக்கும் சகோதர- சகோதரிகள் இனி உங்கள் அருகிலேயே பக்கபலமாக இருப்பார்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப அவர்கள்மூலம் சில காரியங்களை சாதிக்கலாம். 2-க்குடைய குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணப் பற்றாக்குறை விலகும். வருமானம் தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன்- மனை விக்குள் அன்யோன்யம் கூடும். அதேசமயம் கணவன்வழி உறவினர்களிடையே மனக் கசப்பும், ஈகோ உணர்வும் தோன்றும். ஈகோ உணர்வை விட்டுவிட்டு மரியாதையுடனும் பண்புடனும் நடந்துகொண்டு பெரி யோரின் நன்மதிப்பைப் பெறும் வழியைக் கையாளுங்கள். உதாசீனப்படுத்தாதீர்கள். 6-ல் ராகு- கடன் சுமை குறையும். ஆரோக்கியம் தெளிவு பெறும். வைத்தியச் செலவுகள் விலகும். 6-ஆம் இடத்தை குருவும் பார்ப்பதால் மேற்கூறிய பலனில் சந்தேகம் வரலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து சந்தேக நிவர்த்தி செய்துகொள்ளவும். 9-ல் சூரியன் நீசம். தகப் பனாரின் உடல்நிலையில் கவனம் தேவைப் படும். அவரின் பணியில் இடமாற்றம் ஏற்படும். தகப்பனார்வழி பூர்வீகச் சொத்துகளில் பிரச் சினைகளை சந்திக்கலாம். பூமி, மனை சம்பந் தமான விவகாரங்களில் நற்பலன் உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக 9-ஆம் இடம் குருவுக்கு யோகமான இடமாகும். அதிலும் அவர் 10-க்குடையவர் 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. அதனால் உங்களுக்கு எந்தக் குறையும் வராது. ஆனாலும் 5-ஆமிடத்து ராகு "ஆசைக்கோர் அளவில்லை' என்பதுபோல மனதில் நிறைவை ஏற்படுத்தமாட்டார். 10-ல் உள்ள சனி தொழில்துறையில் போட்டி மனப்பான்மையை உருவாக்குவார். போட்டி அவசியம்தான். அது வெற்றிக்கு முதல் கட்டம். ஆனால் அதுவே பொறாமையாக மாறிவிடக்கூடாது. அப்படியே போட்டி ஏற்பட்டாலும் அடுத்தவர்களோடுதான் மோதிப்பார்க்க வேண்டும்; வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும். கூடப்பிறந்தவர்களிடம் போட்டி மனப்பான்மை கூடாது. அது தன் விரலைக்கொண்டே தன் கண்ணைக் குத்து வதற்குச் சமம். அது தொழில் போட்டியாக இருந்தாலும் சரி; குடும்பத்தில் கௌரவப் போட்டியாக இருந்தாலும் சரி- எந்தப் போட்டிக்கும் இதயத்தில் இடம் கொடுக் காதீர்கள். 6-க்குடைய சூரியன் 8-ல் மறைவதால் போட்டி, பொறாமை, வைத்தியச் செலவு எல்லாம் மறைந்துவிடும். 8-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெறுவதாலும், அவர் 5-ல் உள்ள ராகுவின் சாரத்தில் இருப்பதாலும் சிலசமயம் மனதில் கற்பனைக் கவலைகள் தோன்றும். அவற்றுக்கு இடம்தராமல் விரட்டிவிடுவது நல்லது. 9-க்குடையவர் 12-ல் மறைவதாலும், பித்ருகாரகன் சூரியன் 8-ல் நீசமடைந்து மறைவதாலும் தகப்பனார் வர்க்கத்தில் பிரச்சினைகள் வந்து விலகும். அல்லது ஆரோக்கியத்தில் சிக்கல் உண்டாகும். தசாபுக்தியை அனுசரித்துப் பரிகார ஹோமம் செய்துகொள்வது நல்லது.