4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

7-10-2018- கன்னி.

9-10-2018- துலாம்.

12-10-2018- விருச்சிகம்.

thisweekrasi

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 3, 4, சித்திரை- 1.

செவ்வாய்: திருவோணம்- 4, அவிட்டம்- 1.

புதன்: சுவாதி- 1, 2, 3, 4.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: விசாகம்- 1.

சனி: மூலம்- 1, 2.

ராகு: பூசம்- 2, 1.

கேது: உத்திராடம்- 4, 3.

கிரக மாற்றம்:

11-10-2018- சுக்கிரன் வக்ர ஆரம்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் சித்திரை 17 முதல் தொடர்ந்து மகரத்தில் உச்சமாக இருக்கிறார். ஐப்பசி 10-ல்தான் கும்ப ராசிக்கு மாறுவார். பொதுவாக செவ்வாய் ஒரு ராசியில் 45 நாள் அல்லது அதிக பட்சம் 50 நாள்தான் இருப்பார். இந்த முறை ஆறு மாத காலம் மகர ராசியில் இருக்கிறார். அதிலும் அவர் உச்ச பலத்தோடு நின்று தன் ராசியை 4-ஆம் பார்வை பார்க்கிறார். அத்துடன் 4-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும் (4, 7, 8-ஆம் பார்வை) பார்க்கிறார். அதனால் உங்கள் மதிப்பு, மரியாதை, கௌரவம், திறமை, அந்தஸ்து இவற்றுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. தேக ஆரோக்கியத்திலும் தெளிவான நிலை உண்டாகும். அதேபோல 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 5-ஆம் இடம் மனது, பிள்ளைகள், மகிழ்ச்சி, சந்தான பாக்கியம் இவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், மனதில் நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் இனிய நிகழ்ச்சிகள் இடம்பெறும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். வாரிசு இருப்பவர்களுக்கு அவர்களின் எதிர்காலம், படிப்பு, ஆரோக்கியம், வேலை, சம்பாத்தியம், முன்னேற்றம், வாழ்க்கை, திருமணம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். 10-ல் உச்சம் பெற்ற செவ்வாய் பதவி உயர்வு, சொந்தத் தொழில், புதிய தொழில் யோகம் போன்ற நற்பலன்களைக் கொடுப்பார். அவருடன் கேது சம்பந்தம், ராகு பார்வை என்பதால் சில நேரம் இடையூறுகளும், தடைகளும், போட்டி பொறாமைகளும், குறுக்கீடுகளும் ஏற்படலாம். என்றாலும் அவற்றை எளிதாக சமாளித்து, வெற்றிபெற்று முன்னேறலாம். எதிர்ப்பும் தடைகளும் இருந்தால்தான் உங்களுக்கு விடாமுயற்சியும், வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் உருவாகும். அதனால் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். 9-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரம், வரவு- செலவுகளில் நிறைவு ஏற்படும். 8-ஆம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம் என்பதால் எதிர்பாராத தனப்ராப்திக்கும், அதிர்ஷ்ட யோகத்துக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு என்றாலும் ஆட்சி பெறுகிறார். 7-ல் உள்ள குருவின் சாரம் (விசாகம்) பெறுகிறார். திருமணமாகாதவர்களுக்குத் திருமணயோகமும், தொழில், வருமானம், வேலை இல்லாதோருக்கு சம்பாத்திய யோகமும் உண்டாகும். தொழில்துறையில் போட்டி, பொறாமைகளும் எதிர்ப்பு, இடையூறுகளும் இருந்தாலும் அவற்றை எளிதாக சமாளித்து முன்னேறலாம். சில காரியங்களை "ரிஸ்க்' எடுத்து சாதிக்க வேண்டும். "ரிஸ்க் என்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி' என்று சிரிப்பு நடிகர் வடிவேலு சொல்வதுமாதிரி அமைந்துவிடும். 3-ல் உள்ள ராகு சகோதர- சகோதரி, உடன்பிறப்புகள் வகையில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், குரு பார்வையால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம். சிலசமயம் "கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்' என்பதற்குப் பொருத்தமாக அமையும். மனவுறுதியும் தைரியமும் உண்டாகும். அன்னிய இனத்து நண்பர்களின் உதவியும்- குறிப்பாக முஸ்லிம் இன நண்பர்களின் உதவியும் சகாயமும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். 9-ல் உச்சம் பெற்ற செவ்வாயோடு கேது சம்பந்தம் என்பதால் தகப்பனார் அல்லது பாட்டனார் சொத்துகள் வகையில் பங்கு பாகப் பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாகலாம். ஜாதகரீதியாக பரிகாரங்களைத் தேடிக்கொள்ளவும். சொத்துகள் இல்லையென்றால், அவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு, வைத்தியச்செலவுகள் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகிலுள்ள முருகன் கோவில் (ஒரே சந்நிதியில் விநாயகரும் முருகனும் சேர்ந்து இருப்பார்கள்) சென்று வழிபட்டால் சகோதர ஒற்றுமை ஏற்படும். பங்காளிப்பகை நீங்கும். 6-ல் உள்ள சுக்கிரன் 11-ஆம் தேதி வக்ரம் அடைவதால் போட்டி, பொறாமைகள், கடன், நோய் எல்லாம் நிவர்த்தியாகிவிடும். சுக்கிரன் மனைவிகாரகன் என்பதால் மனைவிவகையில் எதிர்பாராத உதவிகளைப் பெறலாம். அல்லது மனைவி- பிள்ளைகள் வகையில் சுபமுதலீடு செய்யலாம்.

thisweekrasi

Advertisment

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் (துலா ராசியில்) இருக்கிறார். ராகு சாரம் பெறுகிறார். (சுவாதி). ராகு 2-ல் இருப்பதால் வாக்கு, தனம், குடும்பம், நேத்ரம் (பார்வை), வித்தை என்ற 2-ஆம் வீட்டுப் பலன்களில் நல்லதே நடக்கும். பிரிந்த குடும்பம் இணைந்து வாழும். வரவேண்டிய பாக்கிசாக்கிப் பணம் எல்லாம் வந்துசேரும். தாராளமான பொருளாதாரம் நிலவும். கண் பார்வைக் கோளாறுகள் விலகும். "கண்டெஸ்ட்' செய்து சிலர் கண்ணாடி அணியலாம். கல்வியில் ஆர்வம், அக்கறை, மேற்படிப்பு மேன்மை உண்டாகும். கடந்த காலத்தில் பரிட்சையில் "அரியர்ஸ்' வைத்திருப்போர் இனி பாடப்பகுதிகளை எழுதி பாஸ் செய்யலாம்; மேற்படிப்பு படிக்கலாம். ஜோதிடம் கற்பதில் ஆர்வம் உடையவர்கள் ஜோதிடம் கற்றுப் பலன் சொல்லலாம். பேரும் புகழும் அடையலாம். சிலர் கோவில் பூஜைகள் செய்து அருள்வாக்குக் கூறலாம். கோவில் திருப்பணிகளில் இறங்கி செயல்படலாம். நிர்வாகத்தில் அறங்காவலர் பதவிகள் பெறலாம். சிங்கம்புணரி வாத்தியார்கோவில் பூஜகர் ஒருவர் ஜோதிடம் கற்று ஜோதிடம் சொல்வதோடு சில மாணவர்களுக்கு ஜோதிட குருவாகவும் மாறிவிட்டார். 7-ல் சனி இருப்பதால் சிலருக்கு திருமணத்தடை, தாமதம் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்குள் (தசாபுக்தி பாதகமாக இருந்தால்) கருத்து வேறுபாடும், பிரிவும் பிளவும் ஏற்பட இடமுண்டு. திருமணமாக வேண்டிய பெண்களுக்கு காமோகர்ஷண ஹோமமும், ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும்செய்து கலச அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும்; திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இணைவதற்கு பதிகமன ஹோமம் செய்ய வேண்டும். அல்லது பெரும்புலியூர் சென்று வியாக்ரபுரீஸ்வரரை வழிபடவேண்டும். 4-ல் உள்ள சூரியனை சனி பார்ப்பதால் ஒருசிலருக்கு ஆரோக்கியக் குறைவும் அல்லது தாயாருக்கு வைத்தியச்செலவும் அல்லது வாகன சம்பந்தமான செலவுகளும் ஏற்படலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ராகு நிற்க, அவரையும் ராசியையும் 5-ல் உள்ள குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை; கோடி தோஷம் போகும். அதனால் ஜென்ம குரு தோஷமும் போகும். ஏழில் கேது தோஷமும் போகும். 7-ல் 5, 10-க்குடைய செவ்வாய் உச்சம். ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரனின் சாரத்திலும் (திருவோணம்), பிறகு சுயசாரத்திலும் (அவிட்டம்) செவ்வாய் சஞ்சாரம். எனவே 10-ஆம் இடமான தொழில், உத்தியோகம், வேலை இவற்றிலும், 5-ஆம் இடமான பிள்ளைகள், மனசு, மகிழ்ச்சி, திட்டம் ஆகியவற்றிலும், 7-ஆம் இடமாகிய மனைவி- கணவன், உபதொழில் போன்றவற்றிலும் குறைவில்லா நிறைவான பலன்களைச் சந்திக்கலாம். திருமணத்தடை விலகும். திருமணமாக வேண்டிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகமிக விரைவாகத் திருமணம் கைகூடும். 7-க்குடைய சனி குரு வீட்டில் இருப்பதால் நல்ல மணவாழ்க்கையும் அமையும். திருமணமானவர்களுக்கு திருப்தியான குடும்ப வாழ்க்கையும் அன்யோன்யமான தாம்பத்யமும் அமையும். பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையும், மனம் நிறைந்த மணவாளனும், பெரிதுவக்கும் பிள்ளைகளும் அமைவார்கள். "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை' என்றும், "ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். 4-ல் சுக்கிரன்- புதன் சேர்க்கையால் பாசமான தாய், பண்புள்ள பிள்ளை, நல்ல கல்வி, படிப்புக்கேற்ற நல்ல வேலை, வேலைக்கேற்ற சம்பாத்தியம், மேலிடத்தாரின் அன்பும் ஆதரவும் பிரியமும், தொய்வில்லாத தொழில்யோகம் ஆகிய பலன்களையும் எதிர்பார்க்கலாம். செவ்வாய்க்கு கேது- ராகு சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு வேலை, தொழில், உத்தியோகத்தில் ஓய்வில்லாத உழைப்பும் டென்ஷனும் ஏற்பட்டாலும், கடமையைச் செய்வதால் உடமையை உரிமையோடு கேட்டுப் பெறலாம். உயர்வும் தேடிவரும். 6-ல் உள்ள சனி ரோகம், ருணம், சத்ரு ஆகிய 6-ஆம் இடத்துப் பலன்களை கூறாக்கி விரட்டியடிக்கும். வேதனை விலகும். வெற்றிகள் அமையும். மேன்மைகள் உருவாகும். தந்தைவழி- தாய்வழி உறவினர்களின் உறவும், நண்பர்களின் நல்லுதவியும், அண்டை அயலாரின் ஆதரவும் உங்களுக்கு அனுசரணையாக அமைவதால் நினைத்ததை நிறைவேற்றலாம். எண்ணியதை ஈடேற்றலாம். கருதியவை கைகூடும். கவியரசர் கண்ணதாசன் சொன்னபடி "அற்புதக்கீர்த்தி வேண்டின்- ஆனந்த வாழ்வு வேண்டின்- நற்பொருள் குவிதல் வேண்டின்- நலமெலாம் பெருக வேண்டின்' பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் பொற்பாதம் பணிய வேண்டும். சப்தம கேதுவின் தோஷம் நீங்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் அமர்வு. தொடக்கத்தில் விரயாதிபதியான சந்திரன் சாரம். (அஸ்தம்). பிறகு சிம்ம ராசிக்கு ராஜயோகாதிபதியான செவ்வாயின் சாரம். (சித்திரை). செவ்வாய் 6-ல் உச்சம். சூரியனுக்கு திரிகோணம்! ஆகவே யோகமும் வெற்றிவேகமும் விரைவாக வந்து உங்களைத் தழுவுவதால் சோகமும் நீங்கும். சோதனைகளும் ஓடும். சாதனை களும் கூடும். ரோதனைகளும் வாடும். 4-ல் உள்ள குரு 10-ஆம் இடத்தைப் பார்க்க, 10-க்குடைய சுக்கிரன் 3-ல் ஆட்சி. 2, 11-க்குடைய புதன் சம்பந்தம். தனலாபம் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும். பட்டதெல்லாம் துளிர்க்கும். கஷ்டம் என்பதில்லை. நஷ்டம் என்பதுமில்லை. இஷ்டம்போல் இனியவையாக எல்லாம் ஈடேறும். 6-ல் உள்ள கேதுவும் செவ்வாயும் ரோகம், ருணம், சத்ரு ஆகிய ஆறாமிடத்துக் கெடுபலன்களை வேரோடு விலக்கி விரட்டியடிக்கும். 5-க்குடைய குரு 4-ல். கல்வி கேள்வி, தாயின் சுகம், பூமி, வீடு, லாப முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் போட்டி போட்டுக்கொண்டு உங்களை வந்து தழுவும். குரு 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். வரவேண்டிய பணம் எல்லாம் வந்துசேரும். கிடைக்கவேண்டிய பங்கு பாகங்கள் எல்லாம் சீக்கிரம் வந்துசேரும். கெட்டுப்போன பொருட்கள் (காணாமல் போனவை), விட்டுவிலகிப்போன உறவினர்கள் எல்லாம் ஒட்டி உறவாட வந்துசேரும். கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும், கார்த் தவீர்யார்ஜுனரையும் வழிபட்டால் போதும். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஒன்றுசேர்ந்த அம்சம்தான் கார்த்தவீர்யார்ஜுனர்! "ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ராம் ஹி தத்தாத்ரேய நமஹ' என்பது தத்தாத்ரேயர் மூலமந்திரம். "ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாமராஜா பாஹு ஸஹஸ்ரவான் தஸ்ய ஸ்மரண மாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே ஓம்' என்பது கார்த்தவீர்யார்ஜுனர் மூலமந்திரம். தினமும் 108 முறை இந்த மந்திரங்களைப் பாராயணம் செய்தால் எல்லா நலமும் வளமும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு விசுவாசமான வேலைக்காரர்கள் அமைவார்கள். தொலைந்த பொருட்கள் திரும்பக் கிடைக்கும். 5-ல் உள்ள சனி மனக்கிலேசத்தையும் கற்பனைப் பயத்தையும் உருவாக்குவார். அவற்றை இந்த மந்திர ஜெபம் விரட்டியடிக்கும். கெட்டவர்கள் விட்டு விலகுவார்கள். நல்லவர்கள் ஒட்டிக்கொள்வார்கள். தட்டுத்தடுமாறாத வாழ்க்கை அமையும். "படாத கஷ்டம் ஒன்றுமில்லை. பட்டதெல்லாம் போதும். இனிபட முடியாது' என்பவர்களுக்கு மாறுதலும் தேறுதலும் ஆறுதலும் ஏற்படும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசியதிபன் புதன் 2-ல் சுக்கிரனோடு சேர்க்கை! ஜென்மத்தில் விரயாதிபதி சூரியன். அவருக்கு சனி பார்வை. குருவி சேர்த்தமாதிரி சேமிப்பையெல்லாம், செல்வத்தையெல்லாம் காசு பணத்தையெல்லாம் பருந்து கொள்ளையடித்துப்போன மாதிரி எதிர்பாராத இழப்பையும், நஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்தீர்கள். முறையான நிர்வாகத்திறமை இல்லாதது ஒரு காரணம். நம்ப வேண்டியவர்களை நம்பாமல் நம்பக்கூடாதவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தது ஒரு காரணம். இவையெல்லாம் ஏற்பட ஜாதக தசாபுக்திகள் ஒரு காரணம். "விதி வழியே மதி செல்லும்' என்பது இதுதான்! இருந்தாலும் விரயமாகும் காலம் விரயமானதுபோல் லாபம் வரும் காலம் லாபமும் வந்துசேரும். இதையே பெரியோர்கள் "போகும் காலம் கதவை அடைக்க வேண்டாம்; ஆகும் காலம் மெய் வருந்த வேண்டாம்' என்றார்கள். கன்னி ராசிக்கு 11-ல் உள்ள ராகு முயற்சிகளில் வெற்றியும், செய்தொழில்துறையில் லாபமும், வில்லங்கம், விவகாரம் வியாஜ்ஜியங்களில் ஜெயமும் தருவார். 3-ஆம் இடத்து குரு 4, 7-க்குடையவர்- 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தேக சௌக்கியம், பூமி, மனை, வீடு விருத்தி, வாகன யோகம், பூர்வ புண்ணிய பாக்கியம், ஆலய வழிபாடு, ஆன்மிகச் சுற்றுலா, குலதெய்வப் பிரார்த்தனை, செய்தொழில் லாபம் ஆகிய பலன்கள் எல்லாம் நடக்கும். 3, 8-க்குடைய செவ்வாய் 5-ல் உச்சம்; கேது- ராகு சம்பந்தம் என்பதால் சகோதர வகையில், உடன்பிறப்புகள் வகையில், நண்பர்கள் வகையில் பிரச்சினைகளும் வருத்தங்களும் உண்டாகலாம். "மௌனம் கலக நாஸ்தி' என்பதால் மௌனத்தை அனுஷ்டிக்கவும். வேண்டாத விமர்சனங்களை விலக்கவும். ஔவைப்பிராட்டி"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்; வஞ்சகரோடு இணங்க வேண்டாம்' என்று எதிர்மறைவரியாக "வேண்டாம் வேண்டாம்' என்றார். இதையே வள்ளல் பெருமான் வடலூரார் உடன்மறையாக "உனை மறவாத மனம் வேண்டும். வஞ்சகரின் உறவு கலவாமை வேண்டும்' என்று "வேண்டும் வேண்டும்' என்றார். " நல்லதே நினை- நல்லதே செய்- நல்லதே நடக்கும்' என்பது கருத்து.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்மத்தில் ஆட்சி! அவருடன் 9, 12-க்குடைய புதன் சேர்க்கை. 3, 6-க்குடைய குரு 2-ல்- அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் 4-ல் உச்சம்! செவ்வாய்க்கு வீடு கொடுத்த சனி குரு வீட்டில்! இப்படி குரு, சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் மூன்று கிரகங்களும் உங்களுக்கு நல்லதே செய்யும்! 10-ல் உள்ள ராகு உங்களை எப்போதும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படச் செய்வார். அதேபோல 4-ல் உள்ள கேதுவும் செவ்வாயும் பூமி, வீடு, மண், மனை, வாகன வகையில் உங்கள் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவார். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தால் வங்கிக்கடன் அல்லது தனியார் கடன் வாங்கலாம். கடன் வாங்குவதற்கும் ஒரு இலக்கணம் உண்டு. அவசரத்தேவைக்காக தரங்கெட்டவர்களிடம்- மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் கடன் வாங்கக்கூடாது. "ரன் வட்டி', "மீட்டர் வட்டி', "பத்து வட்டி'க்கு வாங்கக்கூடாது. வெற்றுப்பேப்பரில் கையெழுத்துப் போடுவதும், தொகை குறிப்பிடாத காசோலை (செக்) கொடுப்பதும் கூடாது. இப்படிக் கடன் வாங்கியவர்களை நினைத்துத்தான் கம்பர்- கம்பராமாயணத்தில், "கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று பாடினார். இப்படி முறையற்ற கடன் வாங்கித்தான் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு போலீஸ்காரர் மனைவி சீட்டுப்பிடிக்கும் தொழில்செய்து நட்டமாகி ஒருவரிடம் கடன் வாங்கிவிட்டார். அதைத் திருப்பி அடைக்க முடியவில்லையென்று அந்த அம்மாவையே அழைத்துப்போய் கடையில் சிறை (ஹவுஸ் அரஸ்ட்) வைத்துவிட்டார்கள். அப்போதுதான் ஜெயலலிலிதா கந்துவட்டிக்காரர்களுக்கு எதிராக ஒரு அவசர உத்தரவு போட்டார். இன்றைய ஆட்சியாளர்களில் சிலர் ஊழல் சம்பாத்தியத்தை இப்படிப்பட்ட ஆட்களிடம் கொடுத்து வட்டிவாங்குகிறார்கள். அதனால் கடன் வாங்கிய ஏழை எளியவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. என்ன செய்வது? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையாகிவிட்டது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய், 3-ல் உச்சம். அவருடன் கேது- ராகு சம்பந்தம்! அவர்களுக்கு வீடு கொடுத்த சனி குரு வீட்டில்- குரு செவ்வாய் வீட்டில். இப்படி குரு, செவ்வாய், சனி மூவருக்கும் இணைவாக ஒரு சம்பந்தம் ஏற்படுகிறது. அதனால் 2, 5-க்குடையவர் குரு, ராசிநாதன் செவ்வாய், 3, 4-க்குடையவர் சனி என்பதால் இந்த ஆதிபத்திய வகையில் உங்களுக்கு நற்பலன் உண்டாகும். 6-க்குடைய செவ்வாய் உச்சம் பெற்று 6-ஆம் இடத்தையே பார்ப்பதால் எதிரி, கடன், வைத்தியச் செலவு, நோய், பிணி பீடை, போட்டி பொறாமை ஆகிய 6-ஆம் இடத்துக் கெடுபலன்கள் எல்லாம் தடைப்படும், உடைபடும்! வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகும். 9-ல் ராகு நிற்க, அவரைச் செவ்வாயும் குருவும் பார்ப்பதால் ஜாதி, சமயத் தேர்தல்களிலும், குலதெய்வ வழிபாட்டுக் கமிட்டியிலும் வெற்றியும் முக்கிய பொறுப்பும் கிடைக்கும். ஊழல்வாதிகளை விரட்டிவிட்டு- விலக்கிவிட்டு நேர்மையான நிர்வாகத்தை செயல்படுத்தலாம். அதற்கு ஜென்ம குரு 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதே காரணம்! 9-ல் ராகு நிற்பதும் இன்னொரு காரணம்! 10-க்குடைய சூரியன் 11-ல் நிற்பது சிறப்பு. ஒரு முகூர்த்த லக்னம் அமைக்கும்போது 7, 8 சுத்தம் வேண்டும் என்பதுபோல, 11-ல் சூரியன் இருந்தால் எல்லாவகையிலும் வெற்றி உண்டாகும். நிரந்தர லாபம் உண்டாகும். 4-க்குடைய சனி 2-ல் இருப்பதால் தாயார் அல்லது தன் சுகம் அல்லது வாகனம் அல்லது பூமி, மனை வகையில் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும் 11-ஆம் இடத்து சூரியன் அவற்றை நீக்கி குறைகளைப்போக்கி நிறைவுகளை ஏற்படுத்துவார். அதேசமயம் 2-ஆம் இடத்துச் சனி ஏழரைச்சனியில் பாதச்சனி, வாக்குச்சனி நடப்பதால் கவனம் தேவை! பேச்சில் நிதானம் அவசியம்! ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்! வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் சனியின் வீடான மகரத்தில் உச்சம். சனி, குருவின் ராசியான தனுசுவில் அமர்வு. இப்படி குரு, செவ்வாய், சனி மூவரும் பின்னிப் பிணைந்த இணைவில் இருப்பது சிறப்பு! எனவே உங்களுக்கு ஜென்மச்சனி நடந்தாலும் பாதிப்புக்கு இடமில்லை. சிலருக்கு ஆரோக்கியக்குறைவும், சிலருக்கு தேவையற்ற செலவுகளும், சிலருக்கு தவிர்க்கமுடியாத செலவினங்களும், சிலருக்கு குடும்பத்தில் சுபமங்கள காரியங்களில் தடை, தாமதமும், சிலருக்கு வேலை, தொழில்ரீதியாக அலைச்சல் திரிச்சல்களும் ஏற்படலாம். அதேசமயம் 9-க்குடைய சூரியன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-க்குடைய புதன் 11-ல் அந்த வீட்டுக்குடைய சுக்கிரனோடு சேர்க்கை. லாபம், வெற்றி, யோகம்! 2-ல் கேது, 8-ல் ராகு. சிலருக்கு வெளியில் சொல்லமுடியாத பிணிபீடை, மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியாத நோய், எதற்கும் கட்டுப்படாத வலிலி என்று வேதனைப்படுவார்கள். எந்த வேதனையானாலும் சோதனையானாலும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் பாதிக்கும். பிறகு நிவர்த்தியாகும்! ஒருநாளில் 12 மணி நேரம்தான் இரவு. 12 மணி நேரம் பகல் பொழுது! எல்லா இரவுகளும் விடியத்தானே வேண்டும். 24 மணிநேரமும் இரவாகவே இருள் சூழ்ந்திருப்பதில்லை அல்லவா! அதுபோல கஷ்டம் எப்போதும் கஷ்டமாகவே இருக்காது. துன்பம் தொடர்ந்து துன்பமாகவே இருக்காது. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு துன்பம் மாறிவிடும். துன்பம் மாறினால் இன்பம்தானே! 4-ஆம் இடத்தை 4-க்குடைய குரு பார்ப்பதோடு, 9-க்குடைய சூரியனும் பார்ப்பதால் தேக சௌக்கியம் பரிபூரணமாகத் திகழும். பூமி, வீடு மாற்றம் திருப்தியாக அமையும். சிலருக்கு வாகனயோகம் அமையும். சிலர் சொந்த வாகன வசதி உடையவர்களாக இருந்தும் அது உங்களுக்குப் பயன்படாது. வாடகைக் காரில் அல்லது ஓசிக்காரில் (ஏசி வசதியோடு) பயணிக்கலாம். கணவன்- மனைவி தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால இன்பவாழ்வுக்கு, அடிப்படை வசதி வாய்ப்புகளுக்கு பிள்ளையார்சுழி போடலாம். அஸ்திவாரம் அமைக்கலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 12-ல் மறைவு. என்றாலும் ராசிக்கு 11-ல் என்பதால் முக்கியத்துவம் உண்டு. மேலும், குருவின் வீட்டிலுள்ள சனியை மறைவு, அஸ்தமனம் போன்ற தோஷங்கள் பாதிக்காது. அது எப்படி? விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கு என்ற ஒன்றும் உண்டு! தேனில் ஊறும் பொருட்கள் கெடாது- தேனும் கெடாது. கங்கையில் அசுத்தங்கள் சேர்ந்தாலும் அதன் புனிதத்தன்மை கெடாது. அதுபோல குருவின் ராசி, சாரம், சேர்க்கை, பார்வை என்று குரு சம்பந்தம் பெறும் அசுப கிரகங்களும் சுபத்தன்மை பெற்றுவிடும். 12 ஆண்டு ஆயுள்தண்டனை பெற்ற சிறைக்கைதி நன்னடத்தையால் 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை பெறுவதுபோல! சில குறிப்பிட்ட தலைவர்களின் நூற்றாண்டு- விசேஷ காலங்களில் சில கைதிகளுக்கு விடுதலை கிடைப்பதுபோல! எனவே ராசிநாதன் மறைவு என்று கவலைப்பட வேண்டாம். ஆனால் ஜென்மத்தில் கேது நிற்க அவரை ராகு பார்ப்பது தோஷம்தான். அதற்குரிய பாதிப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால் உச்சம் பெறும் செவ்வாயாலும், செவ்வாய் ராசியான விருச்சிகத்தில் சனிக்கு வீடு கொடுத்த குரு இருப்பதாலும் கேது- ராகுவின் வேகம் குறையும் என்பதால் உங்களுடைய செயல் வேகம் குறையாது; செல்வாக்கு குறையாது; திறமை மறையாது; ஆற்றல், அறிவு மறையாது. வசதி வாய்ப்புகள் பெருகும். வருவாய் உயரும். படிப்புகேற்ற வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்தாலும், அது சுபவிரயமாக மாறி திருப்தியைத் தரும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அந்த வருமானத்திலும் சேமிப்பிலும் என்.ஆர்.ஐ. திட்டத்தில் வங்கிக்கடனும் கிடைக்க, மனை, வீடு பாக்கியம் ஏற்படும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல் பலம்பெறுகிறார். பொதுவாக சனிக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் பலமான இடங்கள், நற்பலன் தரும் இடங்கள். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் அற்புதமான இடங்கள். அதேபோல் செவ்வாய்க்கும் 3, 6, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். ஆக, செவ்வாய் 11-க்குடையவர். குரு 11-ல் இருக்கிறார். அந்த அடிப்படையில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்! தொடங்குவதெல்லாம் விளங்கும்! மறைந்துவிடும் களங்கம்! அவப்பெயர் விலகும்! தவப்பயன் பெருகும்! திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணயோகம் அமையும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும்! செய்தொழில் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட்டு சிந்தையைக் குளிர்விக்கும்! லாபம் பெருகும். கடன்கள் அடைபடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். தேக சௌக்கியம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் குறிப்பிட்டபடி செயல்படும். வராத பணம் எல்லாம் வந்துசேரும். 8-க்குடைய சூரியன் 9-ல் இருப்பதால் தகப்பனார் அல்லது பூர்வீகச்சொத்து வகையில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 9-க்குடைய புதன் 10-ல் இருக்க, 10-க்குடைய சுக்கிரன் சேர்க்கை என்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. குருவருளும் திருவருளும் பெருகுவதால் உங்கள் தேவைகள் பூர்த்தியடையும். நினைத்தவை நிறைவேறும்; திட்டங்கள் வெற்றியடையும்; காரியங்கள் கைகூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். குலதெய்வ வழிபாடு- இஷ்டதெய்வ வழிபாடுகள் மனநிறைவை உண்டாக்கும். சிலர் ஆன்மிகச் சுற்றுலா போகலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 8-ல் மறைந்து உங்களை தலையில் குட்டிக்குட்டி சொட்டச்சொட்ட ரத்தம் வரவழைத்த குரு இப்போது 9-ல் மாறி உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 3-ஆம் இடம், 5-ஆம் இடங்களையும் பார்க்கிறார். இது சாபவிமோசனம் பெற்ற மாதிரி! மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி விடுதலை பெற்று மறுவாழ்வு பெறுவது மாதிரி! "பாவம் ஓரிடம் பழி வேறிடம்' என்ற நிலையில் அபகீர்த்திக்கும் அவதூறுக்கும் ஆளான உங்களுக்கு இனி சுபகீர்த்தியும், செல்வாக்கும் உண்டாகும். மனநலம் சீராவதால் உடல்நலமும் சீராகும். விரோதிகளின் சதித்திட்டங்களை விரட்டியடிக்கலாம். கூட இருந்தே குழிபறித்த ஐந்தாம்படைகளை அடையாளம்கண்டு அழித்துவிடலாம். திட்டமிட்ட காரியங்களில் தீவிரமுயற்சி மேற்கொண்டு தொட்டதெல்லாம் தோல்வியில்லாமல் வெற்றியைக் கட்டித்தழுவி மட்டில்லா மகிழ்ச்சி அடையலாம். தொழில்துறையிலும் ராக்கெட் வேகத்தில் பயணித்து வெற்றியும் லாபமும் அடையலாம். குடும்பத்திலும் உற்றார்- உறவினர் வகையிலும் எல்லாரும் பாராட்டுமளவு சீராட்டலாம். நட்பு வட்டாரத்திலும் உதவிகள் பெருக நல்லதை அனுபவிக்கலாம். "அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து குரு' என்ற ஜோதிட விதிப்படி ஒன்பதாம் இடத்து குரு உங்களைப் பண்புள்ளவராக்கும்; செல்வந்தராக்கும்; அன்புடையவர்களின் ஆதரவை உருவாக்கும்! வம்பு வழக்குகளை விலக்கும்! செய்தொழில், வியாபாரத்தில் உய்வுண்டாகும்- உயர்வுண்டாகும். மகிழ்ச்சியும் மனநிறைவும் பெருகும்.