ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
18-3-2018 முதல் 24-3-2018 வரை
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
19-3-2018- மேஷம்.
21-3-2018- ரிஷபம்.
23-3-2018- மிதுனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரட்டாதி- 1, 2, 3.
செவ்வாய்: மூலம்- 2, 3.
புதன்: உத்திரட்டாதி- 3, 2.
குரு: விசாகம்- 4.
சுக்கிரன்: ரேவதி- 1.
சனி: மூலம்- 3.
ராகு: ஆயில்யம்- 1.
கேது: திருவோணம்- 3.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
புதன் வக்ரம்.
21-3-2018- புதன் அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் சனியுடன் சம்பந்தம். 10-க்குடையவர் சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே வாழ்க்கை வசதிகள் எப்படியோ ஓடியடையும். அடிப்படைத் தேவைகளும் பூர்த்தியடையும். அதேசமயம் பாக்கியாதிபதி 8-ல் மறைவது ஒருவகையில் குற்றம்தான். காரணமில்லாத கவலைகளும் விரக்தியும் காணப்படலாம். அட்டமத்தில் சனி இருந்தபோது இப்படியொரு கவலையோ விரக்தியோ இருந்தது. இப்போது அட்டமச்சனி விலகிவிட்டாலும், அட்டம குரு உங்களுக்கு சனி செய்த அவலநிலைபோல ஏதாவது கவலையைத் தரலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து அந்தக் கவலை ஏற்படலாம். பெரும்பாலும் தகப்பனாரைப் பற்றிய கவலை- மனத்துன்பம் காணப்படலாம். அல்லது பிதுரார்ஜித சொத்துகள் பற்றிய கவலையோ வருத்தமோ உண்டாகலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் கவலைகளும் வருத்தங்களும் சூரியனைக் கண்ட பனிபோல மாறிவிடும்; மறைந்துவிடும். இந்த உலகத்தில் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித வாழ்க்கை! இன்பமும் துன்பமும் மாறிமாறித்தான் வரும். எப்போதும் துன்பமாகவே இருக்காது; எப்போதும் இன்பமாகவும் அமையாது. எப்போதும் வெய்யிலாகவே இருப்பதில்லை. அந்த வெய்யிலும் காலையில் இளம் வெய்யில்- மிதமாகவும், உச்சி வெய்யில் கடும் வெப்பமாகவும், மாலை அந்தி வெய்யில் இதமாகவும் இருக்கும். அதேபோலத்தான் வாழ்வும்!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். அவருடன் 2, 5-க்குடைய புதன் நீசம். ஆனாலும் நீசபங்க ராஜயோகம் அடைவார். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து சுக்கிரனையும் புதனையும் பார்ப்பதோடு ரிஷப ராசியையும் பார்க்கிறார். எனவே குரு பார்க்க கோடி தோஷம் விலகும். கோடி நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். உறவினர்களின் வருகை உவகையளிக்கும். நீண்டநாள் விலகியிருந்த உற்றமும் சுற்றமும் நண்பர்களும் நேசக்கரம் நீட்டி வந்து நலம் விசாரிப்பார்கள். நீண்ட இடைவெளி குறைந்துவிடும். "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்பதற்கிணங்க கண்டச்சனி- அர்த்தாஷ்டமச்சனியில் பிரிந்திருந்தவர்கள் இப்போது அட்டமச்சனியில் சேர்ந்து மகிழும் வாய்ப்பு உருவாகும். ஆக பிரித்து வைத்ததும் சனி. இணைத்து வைப்பதும் சனி. இதுதான் சனியின் மகத்துவம். ஒரு ரகசியம் அல்லது உண்மை என்னவென்றால் ரிஷப ராசிக்காரர்களுக்கும் துலா ராசிக்காரர்களுக்கும்- அதேபோல ரிஷப லக்னம்- துலா லக்னத்தார்களுக்கும் எப்போதும் சனி கெடுதல் செய்யமாட்டார். அப்படியே கெடுதலாகத் தெரிந்தாலும் அது முடிவில் நன்மையாகவே அமையும். சிலருக்கு பதவி யோகம், சிலருக்கு அதிர்ஷ்ட யோகம், சிலருக்குத் திருமண பாக்கியம்- சிலருக்கு புத்திர பாக்கியம் இப்படி அவரவர் விருப்பப்படி அவரவருக்கு அதிர்ஷ்டமும் ஆனந்தமும் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருக்கெடுத்து ஓடும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீசபங்க ராஜயோகம் அடைவார். 5-க்குடைய சுக்கிரனும் 10-ல் உச்சம். அவர்களை 6-ல் மறைந்த குரு பார்க்கிறார். 7-க்குடையவர் 8-ல் மறைவது குற்றம் என்றாலும் 10-க்குடையவர் 10-க்கு 9-ல் நின்று 10-ஐப் பார்ப்பது விசேஷம். எனவே, தொழில், பதவி, வேலை, வாழ்க்கை இவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. 12-க்குடைய சுக்கிரன் 10-ல் என்பதால் அரசுப்பணியில் இருப்போருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி அல்லது பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டாகும். சம்பளத்துக்குப் பலகாலம் வேலை பார்த்தவர்கள் இப்போது சொந்தத் தொழிலோ கூட்டுத்தொழிலோ ஆரம்பித்து முதலாளி ஆகலாம். அதற்காக கடன்பட்டாலும் அது சுபக்கடன்தான்- விருத்திக்கடன்தான். நாணயம் கெடாமல் கடனை அடைத்துவிடலாம். சிலர் வீடு கட்டவும், புதிய வாகனம் வாங்கவும் (கார், டூவீலர்) கடன் வாங்கலாம். எளிய தவணை முறையில் கடன் அடைபடும். 2-ல் உள்ள ராகு உங்கள் வேகத்துக்கு குடும்பத்தினர் வேகத்தடையாக விளங்கினாலும் குரு பார்ப்பதால் அவர்களைச் சாந்திப்படுத்தலாம்; சமாதானப்படுத்தலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மனைவிக்கு ஆரோக்கியக்குறைவும் வைத்தியச்செலவும் ஏற்படலாம். என்றாலும் பாதிப்புக்கு இடமில்லை; பயப்படத் தேவையில்லை. அப்படி அமையாவிட்டால் நல்ல காரியத்துக்காக மனைவிமார்களும் தம் நகைகளை சொசைட்டியில் அடகுவைத்து கணவன்மார்களுக்குப் பண உதவி செய்யலாம். 7-ல் உள்ள செவ்வாய், சனி பருவ வயதடைந்தவர்களை காதல் கல்யாணம், கலப்புத் திருமணம் செய்ய வழிவகுப்பார்கள். இது காலத்தின் கட்டாயம். ஜாதி, மதம், கௌரவத்தை விலக்கிவிட்டு பெரியவர்கள் ஆசிர்வதிக்கவேண்டும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ஜென்ம ராகு நின்றாலும் 5-ல் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கிறார்; ராகுவையும் பார்க்கிறார். எனவே உண்மை- உழைப்பு- நேர்மை இவற்றைக் கடைப்பிடித்து, செய்யும் தொழில் அல்லது வேலையில் உயர்ந்த இடம்பிடித்துப் பாராட்டுப் பெறலாம். சிலர் அடிமை வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு சொந்தத்தொழில் ஆரம்பிக்கலாம். சிலர் கூட்டுத்தொழில்துறையில் பிரகாசிக்கலாம், முன்னேறலாம். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டுக்கு ஆளாகலாம்; அவர்களைத் திருப்திப்படுத்தலாம். 6, 9-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடிக்கு இடமில்லையென்றாலும் சேமிப்புக்கும் இடமில்லாத வகையில் நாள் ஓடும். 6-ல் செவ்வாய்- சனி சேர்க்கை தொழில், வாழ்க்கை, பதவி, வேலை எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் திருப்தியையும் உருவாக்கும். சிலருக்கு பதவிச்சுமை, வேலைச்சுமை, பணிச்சுமை காணப்படலாம். நன்றாகச் சுமக்கிற மாட்டு முதுகில் அதிகமாக இரண்டு மூட்டைகளை ஏற்றுவார்களாம். திரைப்படத்தில் வடிவேலு வசனம் பேசிய மாதிரி- "எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்- ரொம்ப நல்லவண்டா' என்ற மாதிரி, சுமைகளைத் தாங்கி செயல்பட்டு மேலிடத்தாரின் நம்பிக்கைக்கு ஆளாகி நல்ல பேர் எடுக்கலாம். 10-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் 10-க்கு திரிகோணம் என்பதால் தொழில், வாழ்க்கை எல்லாம் இனிமையாக எதிர்பார்த்ததுபோல் அமையும். 7-ல் கேது- திருமணத்தடை, தாமதப் பலனைச் செய்யலாம். அல்லது திருமணமானவர்களுக்கு வறட்டுக்கௌரவப் பிரச்சினையை உருவாக்கலாம். எதுவானாலும் விட்டுக்கொடுத்துப் போனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைவு. அவருடன் 2, 11-க்குடைய புதனும் மறைவு; நீசம். 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைவு; உச்சம். புதனுக்கு உச்சனோடு சேர்ந்ததால் நீசபங்கம். இவர்களை 8-க்குடைய குரு 4-ல் அமர்ந்து பார்க்கிறார். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. உத்தியோகம்- வேலை- தொழில்துறையிலும் பாதிப்புக்கு இடமில்லை. என்றாலும் காரணமில்லாத மனஉளைச்சல், வேலையில் டென்ஷன்(ஒர்க்லோடு), விரக்தி இருக்கும். குடும்பத்தில்- பொருளாதாரத்தில் பற்றாக்குறையோ நெருக்கடி நிலையோ ஏற்படாது. ஆனாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். மிச்சத்துக்கு இடமில்லை. மனைவி வகையில் இன்னும் பரிபூரணமான நிம்மதியோ மகிழ்ச்சியோ நிறைவோ ஏற்பட வழியில்லை. ஒன்று அவர்களின் ஆரோக்கியம் தெளிவாக இருக்காது. நித்திய கண்டம் பூரண ஆயுசு. அல்லது வாரிசு இல்லையே என்ற கவலை காணப்படலாம். அடிக்கடி கரு உருவாகி கலைந்துவிடலாம். கர்ப்பப்பை பிரச்சினை இருந்தால் பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) அருகில் திருக்கருகாவூர் சென்று கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபடலாம். அல்லது கும்பகோணம்- வலங்கைமான் பாதையில் மருதாநல்லூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் கருவளர்ச்சேரி சென்று அம்பாளை வழிபட வேண்டும். அகத்திய முனிவரும் லோபமுத்திரையும் (அவர் மனைவி) தங்கிப் பூஜைசெய்த தலம். அம்பாள் சுயம்புமூர்த்தி. அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி தைலம் காப்பிட்டு, புனுகுச் சட்டம் மட்டும் சாற்றப்படும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசம். ஆனாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்வதால் நீசபங்க ராஜயோகம் அடைவார். எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் என்னென்ன திட்டங்கள் தீட்டினாலும்- எம்.எல்.ஏக்களை விலை பேசினாலும் ஈ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் அதை எதிர்கொண்டு சமாளிப்பதுபோல, உங்களைப் பற்றி அவதூறு சொன்னாலும், குற்றச்சாட்டுகளை சுமத்தி புரளி பேசினாலும் உங்கள் செல்வாக்கு குறையாது. நண்பர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும், உற்றார்- உறவினர்களும் உங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையும் நாணயமும் எள்ளளவும் குறையாது. அதற்குக் காரணம் 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம் பெற்று 10-க்குடைய புதனோடு சம்பந்தம் என்பதால், தர்மகர்மாதிபதி யோகமும் பூர்வபுண்ணிய யோகமும் உங்களைக் காத்து நிற்கும். மகாபாரதப் போரில் கொடைவள்ளல் கர்ணன் அர்ஜுனன் அம்பு தாக்கி அடிபட்டு வீழ்ந்தாலும் அவன் உயிர் பிரியாமல் அவன் செய்த தானதர்மம் அவனைக் காத்து நின்றதுபோல! அவனுக்கு அந்த வேதனையும் தெரியவில்லையாம். கண்ணன் வேதியர் உருவில் வந்து தானம் கேட்க- தான் பெற்ற தவப்பயனை அவருக்குத் தானம் அளித்தானாம். அதன்பிறகு கண்ணன் விசுவரூப தரிசனம் காட்டி அவனுக்கு மோட்சம் கொடுத்ததாகப் புராணம்! இதைத்தான் வள்ளுவர் "கூற்றம் குறித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு' என்பார். தவப்பயனால் எமனை வெல்லுதலும் கைகூடும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவு என்றாலும் உச்சம் பெறுகிறார். அத்துடன் அவருக்கு வீடுகொடுத்த குருவும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனைப் பார்க்கிறார்கள். ஒரு கிரகம் தான் பெற்ற சாரத்தின் பலனையும், வீடு கொடுத்த கிரகம், சாரம் கொடுத்த கிரகம் இவற்றால் பார்க்கப்பெற்றாலும், சேர்ந்திருந்தாலும், அந்த கிரகம் மறைந்திருந்தாலும் பலம் பெறும். வாலியை ராமன் மறைந்திருந்துதான் தாக்கினார். மைனாரிட்டி அரசு கூட்டணிக்கட்சி ஆதரவு பலத்தால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதுபோல! எனவே 9-க்குடைய புதனும் மறைவு; ராசிநாதனும் மறைவு என்பதால் உங்களுக்கு பலமில்லை என்று நினைக்க வேண்டாம். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. கொசு உருவத்தில் சிறிதானாலும் யானையின் தும்பிக்கைக்குள் நுழைந்துவிட்டால் யானைக்கு வேதனை இல்லாமல் போகுமா? அவஸ்தைதானே! அதேபோல பாக்கியாதிபதி நீசபங்கத்தால் உங்களுக்கு தெய்வத்தின் கருணையும் கடாட்சமும் உண்டாகும். அதை நேர்மையான வழியில்- நியாயமான வழியில் பயன்படுத்தி வெற்றி பெறவேண்டும். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். ஆகும் காலம் மெய்வருந்த வேண்டாம். போகும்காலம் கதவை அடைக்கவேண்டாம். ஆகும் காலம் என்பது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தகதை அதிர்ஷ்டம் எனலாம். அதிர்ஷ்டம் உள்ளவனை பகைத்துக்கொள்ளாமல் அணைத்துக் கொள்ளவேண்டும். அப்போது வெற்றி எளிதாகிவிடும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 2-ல் குருவின் வீட்டில் இருக்க, குரு- செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில் இருப்பதால் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை யோகம் அடைவார்கள். அதனால் ஏழரைச்சனியின் கடைசிக்கட்டத்தில் இருந்தாலும் சனியின் சங்கடங்கள் உங்களை பங்கப்படுத்தாது. ஏழரைச்சனியில் மங்குசனி என்றும் பொங்கு சனி என்றும் (கெட்டது- நல்லது) உண்டு. இது உங்களுக்கு பொங்குசனிக்காலம். அதேசமயம் செவ்வாயோடு சனி சம்பந்தப்பட்டதால், ஜாதகரீதியாக பாதகமான தசாபுக்திகள் நடந்தால் மட்டுமே எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. யானைமேல் அம்பாரி சவாரி போகிறவனை நோக்கி தரையில் இருப்பவன் கல்லை விட்டெறியும் கதைதான்! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் உதயத்தைத் தடுக்க முடியுமா? அதேபோல 9-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் குருவும் உங்களுக்கு குலதெய்வம்- இஷ்டதெய்வத்தின் கருணையும் கடாட்சமும் பரிபூரணமாக இருப்பதை உணர்த்துவார்கள். "தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்ற குறளின் கூற்றுப்படி, கணவரையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டவள் மற்ற தெய்வத்தை வழிபடத் தேவையில்லை என்பதுபோல குருவையே தெய்வமாகக் கொண்டவர்கள் மற்ற தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. அதற்கு உதாரணம் ஏகலைவன்தான். வில்லுக்கு விஜயன் என்ற பெருமையைப் பெற்ற அர்ஜுனனைவிட சிறந்த வில்லாளியான ஏகலைவனின் குருபக்தியே அவனுக்குப் பெருமை சேர்த்தது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் குரு வீட்டில் பரிவர்த்தனை. அது உங்களுக்கு பிளஸ் பாயின்டுதான். அதனால் ஏழரைச்சனியின்- ஜென்மச்சனியின் பாதிப்பு உங்களைத் தாக்காது. ஜென்மத்தில் உள்ள செவ்வாயும் சனியும் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வாலிப வயதினர் காதல் திருமணம், கலப்புத் திருமணத்துக்கு விருப்பப்படலாம். ஏற்கெனவே திருமணமானவர்கள் ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உப்புசப்புக்கு உதவாத பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகளுக்கு ஆளாவார்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவார்கள். 11-ஆம் இடம் உபய களத்திரஸ்தானம் எனப்படும். லக்னரீதியாக 11-ஆம் இடம் வலுவடைந்தால் சிலருக்கு மறுமணம் ஏற்பட இடமுண்டு. தாரமிழந்த ஆண்களும் அல்லது கணவனை இழந்த பெண்களும் புனர்விவாக மந்திரம் சொல்லி கந்தர்வராஜ ஹோமமும் அல்லது பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அபிஷேகம் செய்து கொள்ளவேண்டும். குரு பார்வை, சம்பந்தம் இருந்தால் மேற்படி தோஷம் விலகும். 7-க்குடையவர் மறைந்தாலும் இருதார யோகம் ஏற்படலாம். சிலர் தாரம் இழந்தாலும் பிள்ளைகளுக்காக மறுமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழலாம். காவி உடையணிந்த சந்நியாசிகள் (போலி சந்நியாசிகள்) பெண்கள் வகையில் ரகசியமாகத் தப்பு செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் செவ்வாய்- சனி சேர்க்கைதான்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருடன் செவ்வாய் சம்பந்தம். அவரும் மறைவு என்றாலும் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால் குரு சனியுடன் சம்பந்தப்பட்டதற்குச் சமம்! செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெறுவதற்கு சமம்! அரசு அலுவலகங்களில் ஒரு அதிகாரி விடுமுறையாகச் சென்றால் அவர் இடத்தில் வேறொரு அதிகாரி (டெபுட்டேஷன்) நிர்வாகம் செய்வதுபோல! எனவே செவ்வாய்- சனி மறைவுதோஷம் உங்களை பாதிக்காவிட்டாலும், ஜென்மத்தில் உள்ள கேதுவும், ஏழில் உள்ள ராகுவும் ஏதோ ஒருவிதத்தில் உங்களை சோதனை செய்யும்; வேதனைப்படுத்தும்! ஒரு குட்டி ஆடு ஓடையில் நின்று தண்ணீர் குடித்ததாம். அதற்கு மேல்புறம் உயரமான இடத்தில் ஒரு புலியும் தண்ணீர் குடித்ததாம். அந்தப் புலி அந்த குட்டி ஆட்டைப் பார்த்து, "நீ குடித்த எச்சில் தண்ணீர் எனக்கு வருகிறது. உன்னை அடித்து தின்னப் போகிறேன், என்றதாம். அந்த ஆட்டுக்குட்டி, "நீங்கள் மேலே இருந்து குடித்த தண்ணீர்தான் எனக்கு வருகிறது. நான் கீழே நின்று குடிக்றேன்' என்று பதில் சொன்னது. அதற்குப் பதில் சொன்ன புலி, "நீ குடிக்காவிட்டால் என்ன? இதற்கு முன்னால் உன் தாய் ஆடு குடித்த எச்சில் தண்ணீர் எனக்கு வந்தது' என்று குட்டி ஆட்டின்மேல் பாய்ந்ததாம். இந்த ஏழரைச்சனியும் விரயச்சனியும் செவ்வாய் சேர்க்கையும் ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களைப் பழிவாங்கலாம். விரயச்செலவுகளை ஏற்படுத்தலாம். சங்கடப்படுத்தலாம். உறவினர் பகை, வருத்தங்களை உருவாக்கலாம். சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்விட்டு மிளகுதீபம் ஏற்றவேண்டும். வசதியிருந்தால் நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம் செய்யலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் செவ்வாயோடு சம்பந்தம். அவர்களுக்கு வீடு கொடுத்த குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை. (11-க்குடையவர் 10-ல், 10-க்குடையவர் 11-ல்). எனவே தொழில், வியாபாரம், பதவி, உத்தியோகத்தில் எந்த பாதிப்பும் சங்கடமும் ஏற்படாது. முயற்சிகளில் தளர்ச்சி இருக்காது. வளர்ச்சியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். பொதுவாக கும்ப ராசிக்காரர்களும் கும்ப லக்னத்தார்களும் அனுதாபத்துக்குரியவர்கள் என்பது ஒரு பொதுவிதி. இப்போதைய கோட்சார அமைப்பு அந்த விதியை மாற்றி, அனுதாபம் ஆதரவாக மாற்றி அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரக்கூடும். 9-க்குடைய சுக்கிரனை 10-க்குடைய செவ்வாயும் பார்க்க, 10-ல் நிற்கும் குருவும் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே குருவருளும் திருவருளும் உங்களுக்கு பெருவருளைத் தந்து பெருமையடையச் செய்யும். பெட்டிப் பாம்பாக சுருண்டுகிடக்கும் பாம்பு வெளியில் வந்து படமெடுத்தாடும் பாம்பாக மாறுவதுபோலவும், குடத்துக்குள் எரிந்த தீபம் குன்றின்மேல் ஏற்றிவைத்த அண்ணாமலை தீபமாக பிரகாசிப்பது போலவும், உங்களுக்குள் புதைந்து கிடந்த ஆற்றலும் திறமையும் வெளியுலகம் பாராட்டும்படி ஒளிவிடும். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஒத்தாசையும் தேடி வந்து திருப்தியளிக்கும். உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்ற நிலைமாறி, தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றும் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்றும், உற்றார்- உறவினர், பங்காளியின் நட்பும் நல்லாதாரவும். உங்களுக்கு ஆனந்தமளிக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நிற்க, 9-க்குடையவர் செவ்வாய் 10-ல் பரிவர்த்தனை என்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு 9-ல் அதிசாரம். அதிலும் அவர் தன் சுயசாரம். விசாகம் 4-ல் கடகாம்சத்தில் உச்சம். குரு பார்க்க கோடி நன்மை. எனவே இந்த வாரக் கோட்சாரம் உங்களுக்கு 100-க்கு 100 சாதகமாகவும் அனுகூலமாகவும் அமைகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்பதுபோல சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொண்டு முயற்சியில் இறங்குங்கள்- முன்னேறுங்கள்- வெற்றியை அடையுங்கள். 10-ல் செவ்வாய், சனி. 4-ஆம் இடத்தை செவ்வாய் பார்க்க, 7-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். ஆகவே தாயின் அன்பும் தாரத்தின் உதவியும் உங்கள் வெற்றிக்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் அமையும். அதனால்தான் தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். பொதுவாக எந்தத்தாயும்- தாரமும் பந்தபாசத்தோடு ஒற்றுமையாக இருப்பதில்லை. உங்கள் ராசிக்கு இது விலக்காக செயல்படும். "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ' என்று பாடலம். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். அதனால்தான் சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்குக் கொடுத்து அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை போதித்தார். அதனால் தாய்க்கு குடியிருந்த கோயிலில் தெய்வபதவி தந்தார்கள். அதுதான் தாய்மை- தூய்மை. தாயை குடிபோதையில் குத்திச்சென்ற மகன் வாசற்படி தடுக்கிவிழ, பெற்ற தாய், "பாத்து நடடா மகனே' என்று, பரிந்துவந்தாளாம். அதுதான் தாய்ப்பாசம்! அந்தத்தாயே உங்களுக்குத் தெய்வமாக விளங்கினால் வெற்றிமேல் வெற்றிவந்து சேரும்.