ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
28-4-2019- கும்பம்.
1-5-2019- மீனம்.
3-5-2019- மேஷம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பரணி- 1, 2, 3.
செவ்வாய்: மிருகசீரிடம்- 1, 2.
புதன்: அஸ்வினி- 1, 2, 3, 4, பரணி- 1.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 4, ரேவதி- 1, 2.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
புதன் அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் சஞ்சாரம். வாரத் தொடக்கத்தில் 4-க்குடைய சந்திரன் சாரத்திலும், பிறகு தன் சுயசாரத்திலும் சஞ்சாரம். அதனால் உங்கள் தேக ஆரோக்கியத்திலும் சௌக்கியத்திலும் எந்தக் குறையும் வராது. பூமி, வீடு, வாகனம் போன்ற திட்டங்களிலும் முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம். பொருளாதாரத்திலும் பிரச்சினை இல்லை. குடும்பச் சூழ்நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் நிலவும். கொடுக்கல்- வாங்கல் குறிப்பிட்டபடி நிறைவேறும். தாராளமான வரவு- செலவும், அதனால் வாக்கு நாணயம் தவறாத நிலையும் காணப்படும். 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் 9-ல் இணைந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அத்துடன் அவர்களை ராசிநாதன் செவ்வாய் 8-ஆம் பார்வை பார்ப்ப தால், வாரம் முழுவதும் தடை யில்லாத முன்னேற்றமும்- தளர்ச்சி யில்லாத வளர்ச்சியும் எதிர்பார்க்க லாம். 6-க்குடைய புதன் உச்சனான சூரியனோடு சம்பந்தம் என்பதால், 6-ஆம் இடத்து தோஷம் விலகும். புதன் 7-ஆம் இடத்தைப் பார்க்க, 7-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவென்றாலும் உச்சம் என்பதால், கணவன்- மனைவி உறவு, அன்யோன்யம், பாசம், நேசம், அனுசரிப் புத்தன்மை சிறப்பாக அமையும். 9-ல் குரு ஆட்சி என்றாலும் ராகு- கேது சம்பந்தம் என்பதால், குடும்பத்தில் பெரியவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. பனிப்போர் நிகழும். சிலசமயம் நீறுபூத்த நெருப்பாக சுடும். ஆனாலும் "நீரடித்து நீர் விலகாது', "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பதை நினைவில் கொண்டு ஆறுதல் பெறுதலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். அவருக்கு வீடு கொடுத்த குரு 8-ல் மறைவு என்றாலும் ஆட்சி; சனி, கேது சம்பந்தம் என்ப தால், காரணமில்லாத மனக்கவலைகளும் சஞ்சலங் களும் ஏற்படலாம். விரயாதிபதி செவ்வாய் பார்ப்பதால் தேவையற்ற விரயங்களும் செலவு களும் உண்டாகும். சில செலவுகள் அத்தியாவ சியமானவையாக அமையும். சில செலவுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும். சில செலவுகள் தண்டச்செலவாக இருக்கும். அதேசமயம் 2-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் இறைக்க இறைக்க கிணறு ஊறுவதுபோல செலவு ஆக ஆக வரவும் வரும். ஜாதக தசாபுக்தி சாதகமாக இருந்தால், எதிர்பாராத அதிர்ஷ்ட யோகமும் ஏற்படும். 8-ஆம் இடம் விபத்து ஸ்தானம் என்றாலும், அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமும் ஆகிவிடும். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால், வெய்யில் நேரத்தில் நிழலுக்காக மரத்தின்கீழ் ஒதுங்கினாலும் கொப்பு ஒடிந்துவிழும் நிலை உண்டாகும். வெய்யிலின் தாக்கம் உடம்பில் படும். ஒரு அன்பர் மிகமிக அவசரமாக வெளியூர்போக வேண்டிய சூழ்நிலை- எதிர்பாராதவிதமாக அன்று பஸ் ஸ்டிரக். பஸ் நிலையத்தில் தவித்தபோது, ஒரு டாக்சிக்காரர் அவர் போகவேண்டிய ஊரை யடுத்துப் போவதாகச் சொன்னதும், ஏறிப் பயணம் போனார். பாதி வழியில் அதுவும் "பிரேக் டவுன்' ஆகிவிட்டது. ஆக, நடுரோட்டில் நிற்கும் நிலை வந்துவிட்டது. இப்படி நினைத்தது ஒன்று, நடப்பது வேறொன்று என்றாகிவிடும். இதைத்தான் "கிணறுவெட்டப் பூதம் புறப் பட்ட கதை' என்பார்கள். ஒருசிலருடைய அனுபவம்- 2-ல் ராகு இருப்பதால், சொல்லா ததை சொன்னதாக வம்பும் வழக்கும் தேடிவரும். ஒன்றுமில்லாத சமாச்சாரத்துக்கு குடும்பத்தில் வாக்குவாதங்களும் தர்க் கங்களும் உண்டாகும். பெற்ற பிள்ளைக்கும்- பெரியவர்களுக்கும் தர்க்கம் ஏற்படும். ஆகவே "மௌனம் கலகநாஸ்தி' என்பதைக் கடைப்பிடித்து அமைதியாக இருப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 11-ல் சூரியனோடு சம்பந்தம். சூரியன் உச்சம்; 3-க்குடையவர்! உடன்பிறப்புகள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் நட்பும் நல்லுறவும் மலரும். உதவி ஒத்தாசை உண்டாகும். "உயிர் காப்பான் தோழன்' என்ற வாக்கியப்படி உண்மையான நண்பர்களினால் நன்மை உண்டாகும். ஜென் மத்திலுள்ள ராகு அசல் எது- போலி எது என்று உணரமுடியாமல் தடுமாறச் செய்யும். என்றாலும், ராகுவை 7-ல் உள்ள குருவும் சனியும் பார்ப்பதால், குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கிணங்க குழப்பம் நிவர்த்தி யாகும். தடுமாற்றம் விலகும். சனி பார்வை- பாக்கியாதிபதியின் பார்வை, குருவின் பார்வை- கர்மாதிபதியின் பார்வை. எனவே, இங்கு 9, 10-க்குடையவர்களின் சம்பந்தம் தர்மகர்மாதிபதியின் சம்பந்தம் என்பதால், உங்களுக்கு நல்லதே நடக்கும். திருமணமானவர்களுக்கு மனைவியின் யோகத்தால் அல்லது மனைவியின் தயவால் நன்மைகள் வலுவ டையும். அல்லது கணவரால் (பெண்கள் ஜாதகத்தில்) நன்மைகள் வலுவடையும். திருமணமாகாதவர்களுக்கு அல்லது காதல் வயப்பட்டவர்களுக்கு காதலன் அல்லது காதலியினால் நன்மைகள் வலுவடையும். ஒரு பணக்கார காதலி, தன் காதலனுக்கு ஸ்கூட்டர் அன்பளிப்பு செய்தார். திருமணத்துக்குப் பிறகு கார் வாங்கிக்கொடுத்தார். (இது ஒரு அனுபவ உதாரணம்). சிலருடைய யோகத்துக்கு திருமணத்துக்குப் பிறகு பெண் வீட்டிலிருந்து சொந்த வீடு கிடைத்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, சனி- கேது மறைவு. 12-ல் ராகு மறைவு. இதில் குருவைத்தவிர, மற்ற கிரகங்கள் அசுபகிரகங்கள் என்பதால் மறைவு நல்லதுதான். அதாவது டபுள் மைனஸ் பிளஸ் என்பதுபோல- கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதுபோல நல்லதாகிவிடும். ஆனால் குரு பாக்கியாதிபதி (9-க்குடையவர்) 6-ல் மறைவு என்பது தோஷம்தான். அதனால் தாய்- தந்தை, பிள்ளைகளுக்குள் கருத்து வேறுபாடும், பனிப்போரும், பகையும் ஏற்பட இடமுண்டு. அதனால் ஒருவருக்கொருவர் அனுசரித்து, விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. அதேசமயம் ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால், எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற வகையில் எதிரிகளினால் சிலசமயம் அனுகூலமும் உண்டாகும். தேர்தல் சமயம் கருத்து வேறுபாடு கொண்ட கட்சிகள் தற்காலிகக் கூட்டணி அமைத்து வெற்றிபெறுவதுபோல! 7-ல் 8-க்குடைய சனியும், அத்துடன் கேது- ராகுவும் சம்பந்தம் பெறுவதால், சிலருடைய அனுபவத்தில் கணவன்- மனைவிக்குள் பகை ஏற்படலாம் அல்லது கணவன்- மனைவி உறவினர்கள் வகையில் விரிசல் ஏற்படலாம். என்றாலும், குரு சம்பந்தம் பெறுவதால் (குரு ஆட்சி என்பதாலும்) பாதிப்புகள் விலகும்; வேதனை விலகும்; சோதனை விலகும். சாதனை உண்டாகும். 10-ல் சூரியன், புதன் சம்பந்தம். 10-க்குடைய செவ்வாய் 11-ல். 10-ஆம் இடத்துக்கு 9-க்குடைய குரு பார்வை என்பதால் தர்மகர்மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். இந்த உலகத்தில் எதை சாதிக்க வேண்டுமென்றாலும் ஒன்று படைபலம் வேண்டும் அல்லது பணபலம் வேண்டும். இந்த இரண்டும் இல்லாத வர்களுக்கு தெய்வ பலம் வேண்டும். குருவருளும் திருவருளும் அந்த தெய்வபலத்தை உருவாக்கும். அதனால்தான் திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்றார்கள். 9-ல் சுக்கிரன் உச்சம் பெறுவதால், தெய்வபலம் உங்களுக்கு உறுதுணையாக அமையும். அதிலும் குலதெய் வத்தின் கிருபையும் அருளும் பரிபூரணமாக விளங்கும்!
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருடன் 2, 11-க்குடைய புதன் சேர்க்கை! அவர் களுக்கு 5-க்குடைய குரு பார்வை. ஆக 1, 5, 9 என்பது திரிகோண ஸ்தானம். இதற் குடையவர்களின் சம்பந்தம் இருப்பதால் உங்களுக்கு தெய்வானுகூலம் உண்டு. திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். லட்சுமி ஸ்தானம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம். விஷ்ணு ஸ்தானம் என்பது முயற்சி ஸ்தானம்! "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகாது' என்பது பழமொழி. இதில் ஆகும் நாளன்றி என்பதன் அர்த்தம்தான் அதிர்ஷ்டம் என்ற லட்சுமி ஸ்தானத்தின் பொருள்! 11-ஆம் இடத்து ராகு உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியும் லாபமும் பெற்றுத்தரும். வள்ளுவர் "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்றார். ஆக, முயற்சிக்கு முக்கியத்துவம் உண்டு. 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஆகவே உங்களுக்கு லட்சுமி ஸ்தான பலனும் உண்டு- விஷ்ணு ஸ்தான பலனும் உண்டு. எனவே முயற்சிக்கு இரட்டிப்பு பங்கு (டபுள்) பலனும் உண்டு. ஆண்டவன் அருளும் உண்டு. பொதுவாக சோம்பேறிகளுக்கு ஆண்டவன் அருள் கிடைக்காது. நம்பிக்கையும் விடாமுயற்சியும் உடையவனுக்குத்தான் ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அந்தவகையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். அதாவது எடுத்துவைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டுமல்லவா!
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைவு. அத்துடன் அஸ்தமனம். அவருடன் விரயா திபதி சூரியன் சேர்க்கை. இவர்களுக்கு 4-ல் ஆட்சிபெற்ற குரு பார்வை. எனவே தேவை யில்லாத பயணங்களும் அலைச்சல்களும் அதிகமாக இருப்பதோடு, அனாவசியமான விரயங்களும் செலவுகளும் இருக்கும். 8-ஆம் இடம் சஞ்சலம், விபத்து, கவலை, டென்ஷன், வீண் விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், மேற்கண்ட பலன்களையெல்லாம் இப்போது நீங்கள் சந்திக்கக்கூடும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், அவற்றை எளிதாகப் போராடி ஜெயிக்கலாம்; வெற்றி பெறலாம். அதுவும் பாதகமாக இருந்தால், கிணற்றில் விழுந்தவனைத் தூக்க, கை கொடுத் தவனையும் கிணற்றுக்குள் இழுத்துப்போட்ட நிலையாக, உதவிசெய்ய வந்தவரையும் சிக்கலில் மாட்டவைத்து சீரழிக்கும் நிலையாக மாறிவிடும். 4-ல் சனி, கேது- தாயாருக்கோ அல்லது உங்களுக்கோ ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். அல்லது பூமி, இடம், வாகன சம்பந்தமான கடன் உண்டாகலாம். 6-க்குடைய சனி 4-ல் சுக்கிரன் சாரம் என்பதால், அது சுபக் கடன்தான். சிலர் கடன் வாங்கி மனைவிபேரில் (சுக்கிரன் களஸ்திர காரகன் என்பதால்) வீடு, நிலம் ஏற்படுத்தலாம். கேது, ராகு சம்பந்தம் இருப்பதால், சில நேரம் முயற்சிகளில் தளர்ச்சி ஏற்பட்டு, பின்னால் வளர்ச்சி உண்டாகும். குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து முன்னேறலாம்; வெற்றி பெறலாம். 9-ல் செவ்வாயும், அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 7-ல் உச்சம் என்பதாலும் சகோதர- சகோதரி வகையில் நல்ல காரியம் நடக்கும். நல்ல உறவும் உண்டாகும். அற்ப விஷயங்களுக்காக கருத்து வேறுபாடாக இருந்த உடன்பிறப்புகளும், இக்காலம் "மறப் போம் மன்னிப்போம்' என்று உறவைப் புதுப்பித்து செயல்படலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம். அவருக்கு வீடு கொடுத்த குரு 4-ல் ஆட்சி. சில காரியங்களும் திட்டங்களும் உடனுக்குடன் நிறைவேறிவிடும். சில காரி யங்கள் காலதாமதமாக நிறைவேறும். ஆக, எப்படியும் நினைத்ததை நிறைவேற்றிவிடலாம். எண்ணியதை ஈடேற்றலாம். 6-ஆம் இடம் என்பது போட்டி, பொறாமை, கடன், வைத் தியச் செலவு, எதிர்ப்பு, இடையூறு, தடை, தாமதம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்றாலும், 10-ஆம் இடத்துக்கு- வாழ்க்கை- தொழில் ஸ்தானத்துக்கு அது பாக்கிய ஸ்தானம் 9-ஆம் இடமாகும். எனவே தடைகளைக் கடந்து முன்னேறி சாதனைபுரியலாம். தொழில் துறையில் புதியவர்கள் கூட்டுசேர்ந்து முதலீடு செய்யலாம். சம்பள வேலையில் இருப்போர் முதலாளியாக முன்னேறலாம். சிலர் மனைவி, மக்கள்பேரில் கூட்டுத்தொழில் தொடங்கலாம். "லிலிமிடெட் கன்சர்ன்' என்பது பொதுக்கூட்டு ஸ்தானம். "பிரைவேட் லிலிமிடெட்' என்பது சொந்தக்காரர்கள் சம்பந்தப்பட்ட கூட்டு. இந்த இருவகையிலும் கூட்டுத்தொழில் ஆரம்பித்து, ஜே- ஜே என்று அமோகமாகத் தொழில்செய்து லாபம் சேர்க்கலாம். 9-ல் ராகு இருக்க அவரை சனி, குரு, கேது பார்ப்பதால், எக்ஸ்போர்ட்- இம்போர்ட் சம்பந்தமான இரும்பு மிஷினரி தொழில் யோகம் நடக்க வாய்ப்பு உண்டு. 7-க்குடைய செவ்வாய் 8-ல் இருப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சகோதரர்கள், பங்காளி வகை கூட்டுத் தொழில் செய்கிறவர்களுக்கு சில கௌரவப் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் ஏற்பட்டு விலகும். மற்றவர்கள் சமரசப்படுத்தி, பிரிவினை ஏற்படாமல் பாதுகாக்கப்படும். லாபாதிபதியும் பாக்கியாதிபதியும் ஒன்றுகூடி ஏழில் இருப்பது தொழில்மேன்மையைக் குறிக்கும். புதன் விரயாதிபதி என்பதால் சில சுபவிரயங்களும் ஏற்படலாம். அல்லது தொழில் விருத்தி, கிளைகள் ஆரம்பித்தல் போன்ற விருத்தியான செயல்கள் நடக்கலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து தன் ராசியையும், இரண்டாமிடத்தை யும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதிலும் அவர் தன் சுயசாரம் (மிருகசீரிடம்) பெறுகிறார். எனவே உங்களுடைய எண்ணங் களும் திட்டங்களும் செயல்களும் 100-க்கு 100 செயல்படும்; வெற்றிபெறும்! பொருளா தாரத்திலும் எந்தக் குறையும் இல்லாமல், தாராளமான வரவு- செலவுகள் நடக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் எல்லாம் கேட்காமல் தானாக வந்து சேரும். அதனால் நீங்கள் கொடுக்கவேண்டிய பாக்கிசாக்கிகளையும் குறிப்பிட்டபடி கொடுத்து நிம்மதியடையலாம். 10.00 மணிக்கு பார்ட்டியை வரச்சொல்லிலிவிட்டு 9.00 மணிக்கே எடுத்துவைத்து, பெயர் எழுதி வைக்கலாம். ஒரு காலத்தில் இந்த நிலைக்கு எதிர்மறையாக இருந்த காலம். பார்ட்டிக்கு எடுத்துவைத்த பணத்தை வேறொரு பிரச்சினைக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு, பார்ட்டி வந்ததும் உட்காரவைத்து காப்பி- டீ வாங்கிக்கொடுத்து, அக்கம்பக்கம் அவசரகைமாற்று வசூல்செய்து கொடுத்துவிட்டதொரு காலம். அந்தக் காலம் இப்போது இல்லை. இது வசந்தகாலம். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும் வசந்தகாலம். அதனால் ஏழரைச்சனி உங்களுக்கு பொங்கு சனியாக பொலிலிவைத் தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடந்தாலும், அவருடன் ராசிநாதன் குரு சேர்க்கை என்பதால் பாதிக்காது. அதேசமயம் கேது- ராகு சம்பந்தம் என்பதால், உங்களுக்கு உங்கள்மீதே நம்பிக்கை இல்லாமல் சந்தேகம் எழலாம். சிலருக்கு காரியம் தாமதமாகலாம். சிலருக்கு கற்பனை பயம் ஏற்படலாம். சிலருக்கு நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் வரலாம். வீட்டைப் பூட்டி விட்டு சிறிதுதூரம் போனபிறகு, சரியாகப் பூட்டியிருக்கிறோமா என்று குழப்பம் ஏற்பட்டு, திரும்பவந்து பூட்டை இழுத்துப்பார்த்துவிட்டு, சந்தேகம் நீங்கி சந்தோஷமாகப் போகலாம்! இதெல்லாம் ஜென்மத்தில் உள்ள சனியும் கேதுவும் செய்யும் திருவிளையாடல்! என்றாலும் ராசிநாதன் குரு ஆட்சிபெறுவதால், சோதனைகள் நீங்கும்; வேதனைகள் விலகும். சிலருக்கு குடும்பத்தில் வெளியில் சொல்லமுடியாத கௌரவப் போராட்டங்கள் காணப்படும். சிலருக்கு உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகி வேலைச்சுமை அதிகமாகும். நல்ல வேலைக்காரர் என்று ஒரு பக்கம் பாராட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் "நல்லா சுமக்கிற மாட்டின் முதுகில் மேலும் இரண்டு மூட்டை ஏற்றலாம்' என்று சுமை ஏற்றுவார்கள் அல்லவா! சிரிப்பு நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் "ரொம்ப நல்லவண்டா. எவ்வளவு அடிச்சாலும் தாங்கு றான்' என்பார். அதுமாதிரி வேலைப்பளு சுமத்தப்படும். எவ்வளவு சுமத்தப்பட்டாலும், முகம் சுளிக்காமல், வருத்தப்படாமல் அவற் றைத் தாங்கி செயல்பட்டு பாராட்டுப்பெறலாம். அதனால் வெளியூர் முகாமுக்கு- பயிற்சிக்கு உங்களையே சிபாரிசு செய்வார்கள். இதெல்லாம் உங்கள் சர்வீஸ் ரிஜிஸ்டரில் "பிளஸ்மார்க்'தான்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி, தன் ராசிக்கு 12-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி என்பதால் மறைவு தோஷம் இல்லை. அதேசமயம் கேது சம்பந்தமாகி ராகு பார்ப்பதால், சிலசமயம் உங்கள் முயற்சிகள் எல்லாம் வீண்முயற்சிகளாகிவிடும். அதாவது "இருக்குமிடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே- அவர் ஏதும் அறியாதவரடி ஞானத் தங்கமே' என்று பாடியமாதிரி, தொலைந்த இடம் ஒன்று, தேடும் இடம் ஒன்றாக இருக்கும். இதுதான் ஏழரைச்சனியில் விரயச் சனியின் வேலை. சிலர் விவரம் புரியாமல் கிழக்கே போகும் ரயிலுக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, மேற்கே போகும் ரயிலிலில் ஏறி உட்கார்ந்தமாதிரி எதிர்மறையாக செயல்படுவார்கள். சிலர் பொருளை வாங்கு வதற்கு முன்பாகவே கடைக்காரரிடம் தொகை யைக் கொடுத்துவிட்டு, கடைசியில் பொருளை வாங்கி முடித்தபிறகும் கடைக்காரர் தொகை யைக் கேட்க, கொடுத்தோமா இல்லையா என்ற குழப்பத்தில், மறுபடியும் தொகையைக் கொடுப்பார்கள். இதுதான் விரயச்சனியின் வேலை. உங்களுக்கு சம்பந்தமில்லாத- தெரியாத விஷயங்களைப் பேசக்கூடாது. அதனால் வம்பு தும்பு வந்தாலும் வரலாம். அல்லது வீண்விரயம் ஏற்படலாம். அதனால் பின்விளைவுகளை உணர்ந்து, சிந்தித்து, நிதானமாக நடப்பது நல்லது. உடன்பிறந்தோரும் நண்பர்களும் முன்வந்து உதவ வந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதன் பின்பலனை ஆராய்ந்து உணர்ந்து ஏற்றுக்கொண்டால் அனுகூலமாக அமையும். அதனால் தேவையற்ற விரயங் களையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெறுகிறார். அங்கு குருவும் கேதுவும் சேர்க்கை- ராகு பார்வை. ஆக, இவர்களுக்கெல்லாம் 11-ஆம் இடம் பலம்பொருந்திய- பலன் தரும் இடங்களாகும். எனவே உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் எண்ணியவாறு திண்ணமாக ஈடேறும்! 5-ல் உள்ள ராகு உங்களுக்கு தீர்க்கமான திட்ட வட்டமான கருத்துகளையே உருவாக்குவார். அதாவது செய்வதையே சொல்வீர்கள்- சொல் வதையே செய்வீர்கள். இதனை வள்ளுவர், "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணி யார் திண்ணியராகப் பெறின்' என்று சொல் வார். புதிய முயற்சிகள் கைகூடும். உடனிருப்போர் உங்களை தைரியம் இழக்கச் செய்தாலும்- நம்பிக்கை தளரும்படிச் செய்தாலும், நீங்கள் அதை லட்சியம் செய்யாமல், அலட்சியப் படுத்திவிட்டு, உங்கள் மனம் ஆணையிடுவதற் கேற்றவகையில் நம்பிக்கையோடும், உறுதி யாகவும், தைரியமாகவும் செயல்படவேண்டும். அப்போது எட்டாத தூரத்தில் இருக்கும் வெற்றிக் கனியை எட்டிப் பறித்துவிடலாம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. "உன்னால் முடியும் தம்பி" என்பதை தாரக மந்திரமாக- இலட்சிய கீதமாக மதித்து செயல்படவும். அதிர்ஷ்ட தேவதை அது இஷ்டதேவதையாக வந்து அரவ ணைப்பாள். தொழில், வியாபாரம், உத்தியோகம் எல்லாவற்றிலும் உங்களின் உண்மையான உழைப்பும் முயற்சியும் வீண்போகாது. உழைப் பிற்கேற்ற ஊதியமும் பலனும் உண்டாவது நிச்சயம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு 10-ல் ராசிநாதன் குரு உச்சம்! அவரை 9-க்குடைய செவ்வாய் 8-ஆம் பார்வை பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம்! நண்பர் களின் நல்லாதரவால் நல்லதே நடக்கும். சிலசமயம் பணிகள் நிறைவடைய தாமதம் காணப்பட்டாலும், அனுபவசாலிலிகளின் ஆலோ சனையும், உங்கள் வைராக்கிய சாதனையும் உங்களுக்கு வெற்றியை உருவாக்கித் தரும். ஒரு மனிதனுக்கு நல்லநேரம் வரும்போது, நம்மை நாசப்படுத்திய கெட்டவர்கள் எல்லாம் தன்னால் விலகிவிடுவார்கள். நல்லவர்களும் நலம்விரும்பி களும் தன்னால் நம்மிடம் வந்து நட்பு கொள் வார்கள். துரியோதனுக்கு கெட்ட நேரம் ஆரம் பிக்கும்போது சகுனியின் துர்போதனைக்கு முக்கியத்துவம் கொடுத்தான். விதுரரின் நீதி உபதேசங்களைப் புறக்கணித்தான். அதேபோல துரியோதனனுக்கு பக்கபலமாக இருந்த குரு துரோணர் படைத்தலைமைப் பொறுப்பைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். நல்லவர் களுக்கு வெற்றிவரும் காலம் எதிரிகளைப் புறக் கணித்துவிட்டு, நல்லவர்கள் வந்துசேர்வார்கள். இராவணன் போக்கைக் கண்டித்த விபீஷணர், அவனைப் புறக்கணித்துவிட்டு ராமபிரானோடு வந்து நட்பு கொண்டாடினார். ஆக, நல்லவர் யார், வல்லவர் யார், தொல்லை தருபவர் யார், துன்பப்படுத்துபவர் யார் என்று தேர்ந்து, தெளிந்து செயல்படவேண்டியது உங்கள் பொறுப்பு! குருவோடு, சனியும் கேதுவும் சம்பந் தப்பட்டு, ராகு பார்ப்பதால் உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். நல்லவரையும் சந்தேகிக்கும் சூழ்நிலை வரலாம். அதற்கு இடம் தராமல், சிந்தித்து செயல்பட்டால் வெற்றியும் மகிழ்ச்சி யும் உங்களை வந்தடையும். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பார்கள். சிலருக்கு ஊர்மாற்றம், இடமாற்றம் சரியாக அமையும். 9-க்குடைய செவ்வாய் 10-க்குடைய குருவையும், 10-ஆம் இடத்தையும் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். அந்த யோகம் உங்களை வழிநடத்தும்.