ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

4-6-2018- கும்பம்.

7-6-2018- மீனம்.

9-6-2018- மேஷம்

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 3, 4, மிருகசீரிடம்- 1.

செவ்வாய்: திருவோணம்- 2, 3.

புதன்: மிருகசீரிடம்- 1, 2, 3, 4, திருவாதிரை- 1.

குரு: விசாகம்- 2, 1.

சுக்கிரன்: புனர்பூசம்- 1, 2, 3, 4.

சனி: மூலம்- 2.

ராகு: பூசம்- 4.

கேது: திருவோணம்- 2.v கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

சனி வக்ரம்.

5-6-2018 மிதுன புதன்.

9-6-2018 கடக சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். ராசிக்கு குரு பார்வை. 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதனால் மற்ற கிரகங்களினால் ஏற்படும் எல்லா சங்கடங்களில் இருந்தும் தப்பிக்கலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயமும் சந்தேகமும் விலகி, நம்பிக்கையும் தைரியமும் உதயமாகும். ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் மதிப்பு, மரியாதை, செல்வாக்குக்கு எப்போதும் குறை ஏற்படாது. அதேசமயம் அவர் (குரு) 12-க்கும் உடையவர் என்பதால் செலவுகளும் விரயங்களும் தவிர்க்க முடியாதவை. இடப்பெயர்ச்சி, குடியிருப்பு மாற்றம், தொழில், வேலையில் மாற்றம் வரலாம். எந்த மாற்றமானாலும் அந்த மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். அது முன்னேற்றகரமான மாற்றமாகவே அமையும். 4-ல் உள்ள ராகுவும் 10-ல் உள்ள கேதுவும் சிலருக்கு ஆரோக்கியக் குறைவையும், சிலருக்கு வைத்தியச் செலவையும், சிலருக்கு வாகன வகை ரிப்பேர் செலவையும் ஏற்படுத்தலாம். சிலருக்கு வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் தடைப்படுத்தலாம். தொழில்துறையில் மந்த நிலையையோ, வேலையாட்கள் பற்றாக்குறையையோ ஏற்படுத்தலாம். அப்படியிருந்தால் கும்பகோணம் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் அபிஷேக பூஜை செய்து வழிபடவேண்டும். அச்சிட்ட பேப்பரில் கார்த்தவீர்யார்ஜுன யந்திரமும் அங்கு கிடைக்கும். அதை வாங்கி வந்து லேமினேஷன் செய்து கடை, தொழில் ஸ்தாபனம், வீடுகளில் மாட்டினால் களவு போகாது. உண்மையான வேலைக்காரர்கள் அமைவார்கள். அதேபோல தத்தாத்ரேயரை வழிபட்டால் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரப்ராப்தி யோகம் அமையும். டிரஸ்டி நாகசுப்ரமணியம், செல்: 93454 38950-ல் தொடர்புகொள்ளலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மிதுனத்தில் புதன் வீட்டிலும்- புதன் சுக்கிரன் வீடான ரிஷபத்திலும் வாரத்தொடக்கத்தில் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். 5-ஆம் தேதி மிதுனத்திற்கு புதன் மாறியதும், புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பார்கள். எனவே பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருக்காது. வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். கொடுக்கல்-வாங்கல், வரவு- செலவு திருப்திகரமாக இருக்கும். கடன்கள் கட்டுக்கடங்கிக் காணப்படும். அதிலும் நியாயமான வட்டி வாங்கும் நல்லவர்களிடம்தான் கடன் வாங்குவீர்கள். கந்துவட்டி- ரன் வட்டி- மீட்டர் வட்டி என்று வசூலிக்கும் மனசாட்சியில்லாதவர்களிடம் கண்டிப்பாக கடன் வாங்கக்கூடாது. இப்படிதான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் வாங்கக்கூடாத பைனான்சியரிடம் கடன் வாங்கிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அரசும் போலீசும் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. 8-ல் உள்ள வக்ரசனி கடன், எதிரி, போட்டி, பொறாமை, வழக்கு வியாஜ்ஜியம் ஆகிய 6-ஆம் இடத்துப் பலன்களையெல்லாம் அழித்து நல்லது செய்வார். சனி 8-ல் தானே இருக்கிறார். 6-க்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று சந்தேகம் ஏற்படலாம். 6-க்குடைய சுக்கிரனை 8-ல் உள்ள சனி பார்க்கிறார். சுக்கிரனை 8-க்குடைய குரு 6-ல் மறைந்து பார்க்கிறார். 3-ல் உள்ள ராகு சகோதர வகையில் சஞ்சலங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கினாலும், சகோதரகாரகன் செவ்வாய் உச்சம் பெற்று ராகுவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதனும், 12-க்குடைய சுக்கிரனும் வாரத்தொடக்கத்தில் பரிவர்த்தனை. 5-ஆம் தேதிமுதல் இருவரும் ஜென்ம ராசியில் ஒன்றாகச் சேர்ந்து 5-ஆம் இடத்து குருவின் பார்வையைப் பெறுவார்கள். அத்துடன் புதனையும் சுக்கிரனையும் சனியும் பார்க்கிறார். சிலருக்கு திருமணத்தடை ஏற்படலாம். சிலருக்கு தாமதத் திருமணம் ஆகலாம். சிலருக்கு மறுமணம் ஏற்படலாம். திருமணமாகிப் பிரிந்திருந்த தம்பதிகள் இணைந்து சேரலாம். இது எப்படி ஒரேவிதமான கிரகச் சேர்க்கையால் மாறுப்பட்ட பலன்களை எழுதுகிறீர்கள் என்று சந்தேகம் ஏற்படலாம். மிதுன ராசிக்கு சனி 9-க்குடைய பாக்கியாதிபதியும் ஆவார். 8-க்குடைய அட்டமாதிபதியும் ஆவார். குரு மிதுன ராசிக்கு 7, 10-க்குடையவர் என்றாலும் உபய ராசிக்கு பாதகாதிபதியாகி 5-ல் திரிகோணம் ஏறுவதால் தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த ஒரு கிரகமும் திரிகோணத்தில் இருந்தால் அந்த கிரகத்தின் கெட்ட தன்மை நல்ல தன்மையாக மாறிவிடும். அதேபோல திரிகோணாதிபதிக்கும் கெடுபலன் குறையும். பசும்பொன் தேவர் அய்யா அவர்கள் "மங்கை சூதகமானால் கங்கையில் குளிப்பாள்; கங்கை சூதகமானால் எங்கே குளிப்பாள்?' என்று கேட்டுவிட்டு, "கங்கைக்கு சூதகமே இல்லை' என்றும் விடை கூறுவார். விஷம் விஷத்தை முறிக்குமல்லவா! சூப்பர் ஸ்டார் ரஜினி "நல்லவனோடு சேரலாம்- அதிநல்லவனோடு சேரக்கூடாது- புத்திசாலியோடு சேரலாம்- அதிபுத்திசாலியோடு சேரக்கூடாது' என்பார். அதாவது சமர்த்தன் சந்தைக்குப்போனால் வாங்கவும் மாட்டான் விற்கவும் மாட்டான் என்பதுபோல! நல்லவனோடு ஒரு கெட்டவன் சேர்ந்தால் அவனும் நல்லவனாகலாம். அந்த நல்லவனையும் கெட்டவன் கெடுத்துவிடலாம். இப்படித்தான் இந்த கிரகச் சேர்க்கை மாற்றியமைக்கும். இதற்கு அவரவர் பூர்வ புண்ணியப் பலன்தான்- விதிதான் காரணம்!

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

Advertisment

கடக ராசிக்காரர்கள் பொதுவாக சாமர்த்திய சாலிலிகள்- கெட்டிக்காரர்கள்- எதையும் சாதிக்கக்கூடியவர்கள். இதை விளக்கும் ஒரு ஜோதிடப்பாடல் உண்டு! "பாடப் படிக்க தேட செலவழிக்க சுகந்த சுற்றுலா செய்ய கற்கடகமல்லாது மற்கிடமேது' என்பதுதான் அந்தப்பாடல்! இப்போது ஜென்ம ராசியான கடகத்தில் உள்ள ராகு- கெட்டிக்காரனையும் திசை திருப்பலாம்; குழப்பவாதியாக்கலாம். ஈகோ வசமாக்கலாம். "மேயிற மாட்டை நக்குறமாடு கெடுத்த மாதிரி' என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது ஒருசிலருக்கு அந்தக்கதையும் நடக்கலாம் என்றாலும் கடக ராசிக்கு 9-க்குடைய குரு 4-ல் அமர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் 10-க்குடைய செவ்வாயும் 7-ல் உச்சம்பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், ராசியாதிபதி சந்திரன் சாரத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தோஷம் விலகும். "கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே- சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பதை பொய்யாக்காமல் உங்களை தர்மகர்மாதிபதி யோகம் காப்பாற்றும். பொதுவாக எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும்போதும் 11-ல் சூரியன் அமைய லக்னம் குறித்துக் கொடுத்தால் அந்தக் காரியம் 100-க்கு 100 வெற்றியாகும். உங்களுக்கு 2-க்குடைய சூரியனே 11-ல் இருப்பது பலம்! எங்கும் வெற்றி; எதிலும் வெற்றி என்பது நிச்சயம்! 7-ல் செவ்வாய், கேது சேர்ந்திருக்க, 7-க்குடைய சனி 6-ல் மறைவது ஒருவகையில் குற்றம்தான். வேலைபார்க்கும் மனைவி அல்லது கணவனுக்கு (பெண் ஜாதகமாக இருந்தால்) வேலைவாய்ப்புக் குறைவால் வருமானத்தடை ஏற்படுத்தும். என்றாலும் சனியும் வக்ரம்; அவருக்கு வீடுகொடுத்த குருவும் வக்ரம் என்பதால் நல்லதாக மாறலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 10-ல் 2, 11-க்குடைய புதனோடு சம்பந்தம். புதனுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 11-ல் பரிவர்த்தனை. 5-ஆம் தேதி முதல் புதனும் சுக்கிரனும் 11-ல் இணைந்து சஞ்சாரம். அவர்களுக்கு குரு, சனி பார்வை. எனவே பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. தேவைக்கேற்ற நேரத்தில் தேவைப்படும் அளவு வரவும் வரும்; செலவும் ஆகும்! ஒருசிலர் கடன் வாங்கி அந்த அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றலாம். குரு 8-க்குடையவர்- 4-ல் அமர்ந்து 6-ஆம் இடத்துக்கு கேந்திரம் பெறுவதாலும், 6-க்குடையவர் 5-ல் குரு வீட்டில் இருப்பதாலும் 6-ஆம் இடத்துப் பலன்கள் நடக்கலாம். சிலர் வீடு, மனை, வாகனம் வாங்க கடன் வாங்கலாம். சிலர் ஆரோக்கியக் குறைவினால் வைத்திய செலவுகள் செய்யலாம். சிலர் போட்டி பொறாமையாளர்களால் நீதிமன்றம் வகையில் செலவு செய்யலாம். சிலர் பங்காளி வகையில் சொத்துப் பிரச்சினைகளை சந்திக்கலாம். தொழில் ஸ்தானத்தில் ராசியாதிபதி சூரியன் திக்பலம் பெறுவதால்- தொழில், உத்தியோகம், வேலையில் கேடு கெடுதிக்கு இடமில்லை. அரசு உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். 10-க்குடைய சுக்கிரன் 11-ல் இருப்பதும், அவரோடு 2, 11-க்குடைய புதன் பரிவர்த்தனையும் பிறகு சேர்க்கையும் இருப்பதன் பலன் இதுவே! 8-க்குடையவர் 3-ல் இருப்பதால் சிலருக்கு உடன்பிறந்தவர்களால் பிரச்சினையும் சங்கடமும் ஏமாற்றமும் ஏற்படலாம். ஒருசிலர் ஜாமின் பொறுப்பேற்று உடன்பிறந்தவர்களுக்கு கடன் உதவிபுரியலாம். அவர்கள் அதை நாணயமாகத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதால் நஷ்டமடையலாம். அல்லது நண்பர்கள் வகையிலும் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் வாரத்தொடக்கத்தில் 9-ல் சுக்கிரன் வீட்டில் பரிவர்த்தனை. சுக்கிரன் புதன் வீடான மிதுனத்தில் பரிவர்த்தனை. மேலும் 10-க்குடைய புதன் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அடுத்து புதனும் சுக்கிரனும் 10-ல் மிதுனத்தில் சேர்க்கையாலும் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. எனவே உங்களுக்கு எல்லாவகையிலும் எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் அத்தனையையும் சமாளிக்கும் சக்தியும் ஆற்றலும் உருவாகும். ஒரு ஜாதகத்தில் குருபார்வை கோடி நன்மையை உண்டாக்கும் என்பதுபோல- தர்மகர்மாதிபதி யோகம் பாதுகாக்கும். எல்லா தோஷங்களையும் போக்கும். விரயாதிபதி சூரியன் 9-ல் நிற்பதால் சிலருக்கு தகப்பனார் வகையில் எதிர்பாராத விரயங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்தலாம். 9-க்குடைய சுக்கிரனை குரு பார்ப்பதாலும், தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதாலும் பொருள் விரயம் ஏற்பட்டாலும்- அது சுபவிரயம் எனலாம். கன்னிராசிக்கு குரு 4, 7-க்குடையவர் 2-ல் வக்ரம் என்பதால் தாயார், தன் சுகம், தன் கல்வி, பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான பலன்களைச் சந்திக்கலாம். அல்லது திருமணம், சடங்கு, நாமகரணம் போன்ற சுபமங்கள செலவுகளைச் சந்திக்கலாம். இதற்கு பணப்பற்றாக்குறை இருந்தால் வெளியில் கடன் வாங்கலாம். சிலர் வங்கிக் கடனும் வாங்கலாம். 6-க்குடைய சனி 4-ல் வக்ரம் என்பதன் பலன் இதுவே! 11-ல் உள்ள ராகு எல்லாவகையிலும் லாபத்தையும் வெற்றியையும் நன்மைகளையும் தருவார். முயற்சிகள் யாவும் முழு வெற்றிபெறும். அந்த வெற்றிக்கு மனைவி அல்லது நண்பர்கள் காரணமாக அமையலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

துலா ராசியில் 3, 6-க்குடைய குரு வக்ரம்! என்றாலும் சுயசாரம் (விசாகம்). அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் ராசிக்கு 9-ல் திரிகோணம். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த புதனும் சுக்கிரனும் தொடக்கத்தில் பரிவர்த்தனை; பிறகு (5-ஆம் தேதிமுதல்) சேர்க்கை! அவர்களுக்கு குருபார்வை. எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். 9-ஆம் இடம் திரிகோணஸ்தானம்- லட்சுமிஸ்தானம். 10-ஆம் இடம் கேந்திரஸ்தானம்- விஷ்ணுஸ்தானம். விஷ்ணுஸ்தானம் என்பது கடின முயற்சிசெய்து வெற்றியடையும் நிலை. லட்சுமிஸ்தானம் என்பது முன்பிறவிப் பயனாக இப்பிறவியில் எதிர்பாராமல் தேடிவரும் அதிர்ஷ்டம். அதனால்தான் 9-ம், 10-ம் தர்மகர்மாதிபதி யோகம். குருவருளும் திருவருளும், லட்சுமியும் விஷ்ணுவும் இணைந்து வழங்கும் யோகம் எனப்படும். 4-ல் கேதுவும் 10-ல் ராகுவும் இருப்பினும், இருவரும் கேந்திர ஸ்தானத்தில் இருப்பதால் (பாவ கிரகம் கேந்திரம் ஏற்பது நற்பலன்) நன்மையாகும்! அதேபோல 9-ல் சுக்கிரனும் புதனும் இணைவதும் தெய்வானுகூலத்தைக் குறிக்கும். மேலும் குரு 9-ஆம் இடத்தையும் ராசிநாதனையும் 10-க்குடைய புதனையும் பார்ப்பதும் யோகம்! ஆனால் சனி 9-ஆம் இடம், 9-க்குடைய புதன், ராசிநாதன் சுக்கிரனைப் பார்ப்பது சிக்கல்! ரோஜாவைப் பறிக்கும்போது, அதிலுள்ள முள் கையில் குத்துவதுபோல் ஒரு சிக்கல்! அந்த சிக்கலைத் தீர்க்க ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் அதற்கான பரிகாரங்களைச் செய்து நிவர்த்தி தேடலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிக்கல்- இடியாப்பச் சிக்கலாக மாறிவிடலாம். அதற்கான தசாபுக்திப் பரிகாரங்களைத் தேடிக்கொள்ளவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். 6-ஆம் இடம், 9-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 6-க்குடையவரே 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் 6-ஆம் இடத்துப் பலன்கள் கடுமையாக பாதிக்காது. தன் கையால் தன் கன்னத்தில் அடித்தால் அதிகம் வலிலிக்காது. அடுத்தவர் அடித்தால் வலிலி அதிகமாக இருக்கும். பாவாதிபதி பாவகத்தைப் பார்ப்பதால் பாவக புஷ்டி. அதனால் ரோகம், ருணம், சத்துரு என்ற 6-ஆம் பாவக்கெடுதல் வரலாம்- ஆனாலும் அவை சமாளிக்கப்படலாம்! 9-ஆம் இடத்தில் ராகு நிற்பதால் தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியஸ்தானத்தில் சில பிரச்சினைகள் எழலாம். ஆனால் ராசிநாதன் பார்வையால் அவை சூரியனைக்கண்ட பனிபோல விலகலாம். தெய்வ வழிபாட்டாலும் பிரார்த்தனையாலும் அதன் பாதிப்புகள் நிவர்த்தியாகும். அதுமட்டுமல்ல; ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி. அதனால் சிலரின் வாழ்க்கையில்- குடும்பத்தில் பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்பட இடமுண்டு. என்றாலும் தன் பொறுமையாலும் சகிப்புத் தன்மையாலும் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுதான் பரிகாரம்! படிப்பு ஏறாத மாணவனுக்கு டியூஷன் பரிகாரம்! பெய்யும் மழையில் நனையாமல் இருக்க குடை பரிகாரம்! இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீர்வுண்டு. பரிகாரம் உண்டு! எந்தப் பரிகாரத்தையும் நம்பிக்கையோடும் முறையாகவும் செய்தால் வெற்றியடையும். சின்னக்குடையில் ஒருவர் நனையாமல் போகலாம். மூன்றுபேர் நாலுபேர் என்றால் நனையத்தானே வேண்டும். இப்படி ஏழரைச்சனி உங்களுக்கு சில தடைகளையும் சிக்கல்களையும் உருவாக்கினாலும் உங்கள் பக்கம் நியாயம், நீதி, தர்மம் இருந்தால் தடைகளை விலக்கி முன்னேற்றம் உண்டாகலாம்!

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் 11-ல் வக்ரம். ஜென்ம ராசியில் சனி வக்ரம்! ஜென்மச்சனி சிலரை உடல்வாதையால் வருத்தும். சிலரைக் கடன் தொல்லையால் படுத்தும். சிலரை பணத்தேவையால் அசத்தும்! சிலரை வெற்றிபெற முடியாமல் அடக்கும்! சிலரை நினைத்ததை அடையவிடாமல் தடுக்கும். என்றாலும் ராசிநாதன் குரு 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் சந்தித்து சமாளிக்கும் சக்தியையும் ஏற்படுத்தும். மலையே விழுந்தாலும் மனம் கலங்காத மனஉறுதியையும் மனவலிலிமையும் உருவாக்கலாம். திருமணத்தடைகளை விலக்கி திருமணத்தை நிகழ்த்தும். திருமணமானவர்களுக்கு மனைவியால் அல்லது கணவரால் நன்மைகளைப் பெருக்கும். மனைவி பேரில், கணவன் பேரில் சொத்து சுகங்களையும் சேர்க்கும். அதற்குக் கடனும் கிடைக்கும். பதவியில், உத்தியோகத்தில் திருப்தியும் முன்னேற்றமும் ஏற்படும். என்றாலும் பிரமோஷன் தாமதமாகும் அல்லது "இன்க்ரிமென்டு' தாமதமாகும். 6-க்குடையவரும் 11-க்குடையவருமான சுக்கிரனும், 7, 10-க்குடைய புதனும் 7-ல் (5-ஆம் தேதிமுதல்) சேர்ந்திருப்பதால், ஏற்கெனவே குறிப்பிட்டபடி சொத்துகள் பதிவாகும். சிலர் வாகனமாற்றங்களைச் செய்யலாம் அல்லது புதிய தொழில் தொடங்கலாம். வருமானத்திற்கான வழிமுறைகளை வகுக்கலாம். படித்து வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு இருந்தாலும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது. தேவைகள் நிறைவேறும். ஆனால் சேமிப்புக்கு இடமிருக்காது.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு, வக்ரம். ஜென்மத்தில் உள்ள கேது சாரம். சனிக்கு வீடு கொடுத்த குரு 10-ல் வக்ரம்- சுயசாரம். சனியை 5, 10-க்குடைய சுக்கிரன் பார்க்கிறார். குரு சாரம். அத்துடன் குருவும் சுக்கிரனைப் பார்க்கிறார். விரயச்சனி நடக்கிறது. எனவே தொழில், வேலை, உத்தியோகத்தில் பிரச்சினைகளோ பிரச்சினைகள். தொழில் என்பது சொந்தத்தொழில் அல்லது கூட்டுத்தொழில். வேலை என்பது தனியார் நிறுவன வேலை. உத்தியோகம் என்பது அரசு உத்தியோகம்! சிலர் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தைச் சந்திக்கலாம். சிலர் கடல் கடந்த வேலைக்குப் போகலாம். சொந்த ஊரைவிட்டு வெளியூரில் தொழில் ஆரம்பிக்கலாம். 4-க்குடைய குரு 4-க்கு 8-ல் மறைவதால் சிலர் வசதிக்காக வீடு மாறலாம். தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குப் போகலாம். இடமாற்றமும் ஒருவகையில் முன்னேற்றமாகவே அமையும். 7-ல் ராகு இருப்பதால் திருமணத்தடை, தாமதம் ஏற்படலாம். ராகு சனியின் சாரத்தில் (பூசம்) இருக்க, செவ்வாய் ராகுவைப் பார்ப்பதால் சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து பரிகார ஹோமம் செய்துகொள்ள வேண்டும். கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணத்தைத் தடுக்க காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் செய்யலாம். பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்யலாம். அதற்கு காரைக்குடி அருகில் வேலங்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளலாம். ஜென்மச் செவ்வாய், ஜென்ம கேது, சப்தம ராகு பார்வை ஏற்பட, குரு பார்வை இல்லாததாலும் சுக்கிரன் 6-ல் மறைவதாலும் களஸ்திர தோஷம் ஏற்பட இடமுண்டு. மேற்படி தோஷம் விலக பரிகாரங்களைத் தேடிக்கொள்ளலாம். சிலருக்கு மறுமணம் நடக்க இடமுண்டு.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் வக்ரம், கேது சாரம். கேது 12-ல். எனவே செலவும் விரயமும் தவிர்க்க முடியாததாக அமையும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து வேண்டிய பரிகாரங்களைச் செய்யலாம். சிலர் செய்த செலவையே திரும்பவும் செய்யும் சூழ்நிலை உண்டாகும். சிலர் ஒரு டாக்டரின் அட்வைஸ்படி ஸ்கேன், எக்ஸ்ரே என்றெல்லாம் எடுத்து, உடனே ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று பயமுறுத்தலாம். பிறகு அந்த நோய் ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பிக்கும்போது ஏற்கெனவே எடுத்த ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் வேஸ்ட் என்று, புதிதாக சில வழிமுறைகளைச் சொல்லி பில் போடலாம். இப்படித்தான் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். இதேமாதிரி கார், டூவீலர் வைத்திருப்பவர்கள் ஒரு மெக்கானிக்கிடம் செலவு செய்த பிறகு வேறு ஒரு மெக்கானிக்கிடம் ரிப்பேர் செய்யும்படி நேரும்! ஒரு அன்பர் வீடு கட்டினார். நல்ல இஞ்சினீயர் பிளான் எல்லாம் சரியாக- முறையாகப் போட்டுக்கொடுத்தார். அவருடைய எஸ்டிமேட்டைவிட வேறொரு கொத்தனார் குறைவாக எஸ்டிமேட் போட்டுக்கொடுத்ததும் அவரிடமே கான்டிராக்ட் கொடுத்துவிட்டார். அவர் பணத்தை அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு உரிய காலத்தில் வீட்டை முடிக்காமல் அரைகுறையாக நிறுத்திவிட்டார். மறுபடியும் பழைய ஆளிடமே சரணடைந்துவிட்டார். ஒட்டிக்கு ரெட்டி செலவு! இதற்குப் பெயர்தான் நனைத்து சுமப்பது என்பது! இதுதான் ஏழரைச்சனியில் விரயச்சனியின் வேலை! 10-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதால் தொழில்துறையில் போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு அல்லது கடன் இருக்கலாம். குரு சுக்கிரனைப் பார்ப்பதால் குருவருளாலும் திருவருளாலும் அதை சமாளிக்க வேண்டும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு குரு 1, 10-க்குடையவர்- ராசிக்கு 8-ல் மறைகிறார். 10-க்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார். ஆனால் 10-ல் 12-க்குடைய சனி வக்ரமாக இருக்கிறார். பொதுவாக மீன ராசிக்காரர்களும் மீன லக்னத்தாரும் கெட்டிக்காரர்கள். ஆனால் கிரக பலமில்லாதபோது அவர்களின் ஆற்றலும் புத்திசாலித்தனமும் பயனற்றதாகிவிடும். அவர்களின் செயல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். இப்போது ராசிநாதன் குருவும் (10-க்குடையவரும்) ராசிக்கு எட்டில் மறைவு, வக்ரம்! 10-ல் விரயாதிபதி சனி! ஆக உங்கள் கணிப்பும் சாமர்த்தியமும் திறமையும் விலைபோகாது. புரட்டாசி 18-ல்தான் (4-10-2018) குருப்பெயர்ச்சி அப்போதுதான் குரு எட்டிலிருந்து 9-ஆம் இடத்துக்கு மாறுவார். ஆக, அதுவரை மீன ராசிக்காரர்களுக்கும் மீன லக்னத்தவர்களுக்கும் பிரச்சினைதானா? இப்போது குரு 8-ல் வக்ரம் என்றால், எட்டாமிடத்துப் பலனை அதிஉக்ரமாக- பலமாகச் செய்வார் என்பது கணக்கு. ஆனி 20-ல் (4-7-2018) குரு வக்ர நிவர்த்தி. அதுவரை அட்டமகுருவின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும். அதன்பிறகு ஓரளவு அதன் வேகம் தணியும். என்றாலும் குரு 9-ஆம் இடத்துக்கு மாறினால்தான் உங்களுக்கு பலம்! யோகம்! ஜூலை 4 வரை ஒரு நோயாளி ஐ.ஸி. யூனிட்டில் இருப்பதற்குச் சமம். அதன்பிறகு ஜெனரல் வார்டுக்கு அட்மிட்டாகி, படிப்படியாக குணமடைந்து, அக்டோபர் 4-ல் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவதற்குச் சமம். எனவே நீங்கள் செய்த நல்ல காரியங்கள் எல்லாம் வேண்டாத விமர்சனத்துக்கு உள்ளாகும். செயல்கள் எல்லாம் பயனற்றதாக அமையலாம்.