4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

3-2-2019- மகரம்.

5-2-2019- கும்பம்.

8-2-2019- மீனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 3, 4, அவிட்டம்- 1, 2.

செவ்வாய்: அஸ்வினி- 1, 2.

புதன்: அவிட்டம்- 3, 4, சதயம்- 1, 2.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: மூலம்- 2, 3, 4.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 4.

கேது: உத்திராடம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். 8-ல் உள்ள குருவை 8-ஆம் பார்வை பார்க்கிறார். அதனால் குரு 8-ல் மறையும் தோஷம் குறையும். பாக்கியாதிபதி தன் ஸ்தானத் துக்கு 12-ல். 12-க்குடையவர் அதற்கு 9-ல் திரிகோணம். அத்துடன் 12-ஆம் இடத்துக்குப் பார்வை. அதனால், ஓட்டைப்பானையில் நீர் நிரப்பிவைத்தால் ஒழுகிப் போவதுபோல விரயங்களும் செலவுகளும் தவிர்க்க முடியாதபடி வரும். அதேசமயம் 2-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதால், விரயத்துக்குச் சமமாக தனவரவுக்கும் இடமுண்டாகும். வாராக்கடன்களும் வசூலாகும். எதிர்பாராத தனப்ராப்தியும், அதிர்ஷ்டமும் உண்டாகும். 8-ஆம் இடம் விபத்து, கவலை, சஞ்சலம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்றாலும், 2, 9, 11-ஆம் இடத்துச் சம்பந்தம் பெறும்போது, அதுவே அதிர்ஷ்ட ஸ்தானமாகும். திருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரிவது; அதிருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. விபத்தும் கண்ணுக் குத் தெரியாமல் வரும்; அதிர்ஷ்டமும் கண்ணுக்குத் தெரியாமல் வரும். எல்லாம் சொடுக்குப்போடும் ஒரு வினாடிக்குள் நடக்கும்! 4-ல் உள்ள ராகுவும், 10-ல் உள்ள கேதுவும் சிலருக்கு ஆரோக் கியத்தில் பிரச்சினையையும், சிலருக்கு தொழில் துறையில் மாறுதலையும் தரும்! தோல் சம்பந்தப்பட்ட பீடைகள் அல்லது சளி, தடுமல் பிரச்சினைகள் வரலாம். தொழில்துறையில் சம்பளத்துக்குப் போய் வேலை பார்த்தவர்கள், சொந்தத் தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். மிஷினரி சம்பந்தம், அக்னி சம்பந்தம், உணவு சம்பந்தம் போன்ற தொழில்துறையில் ஆர்வமும், அக்கறையும், ஈடுபாடும் உண்டாகும். 4-ஆம் இடம் தாயார், வாகனம் சம்பந்தப்பட்ட இடம். அதனால் தாயாருக்கு சுகக்குறைவு அல்லது வாகன மாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் போன்ற பலன்கள் நடக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 8-ல் மறைவு. அவருடன் ரிஷப ராசிக்கு ராஜ யோகாதிபதியான சனி சம்பந்தம். சனியும் சுக்கிரன் சாரம். (பூராடம்). அத்துடன் சுக்கிரனுக்கும் சனிக்கும் வீடு கொடுத்த குரு, ராசிக்கு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். மேற்கண்ட காரணங்களால் சுக்கிரன், சனிக்கு மறைவு தோஷம் விலகும். ராமா யணத்தில் வாலிலியை மறைந்திருந்து தாக்கி தான் ராமன் வெற்றி பெற்றான். உண்மை யில் அது தர்மத்துக்கு விரோதமான செயல் தான். அப்போது வாலிலி, ""கோபிப்பது உங்களுக்கு குலதர்மம். நாங்கள் குரங்கு இனம். அதனால் தம்பி மனைவியைத் தாரமாக்கிக் கொள்வது எங்கள் தர்மம். அதை உணராமல் என்னைத் தாக்கியது என்ன தர்மம்? தேவியைப் (சீதாவை) பிரிந்ததனால் உன் சித்தம் பேதலிலித்துவிட்டது'' என்று ராமனிடம் சொன்னான்! அதேபோல, உங்கள் நடவடிக்கைகளும், செயல்களும் உங்களுக்கு நியாயமாக- தர்மமாகத் தெரிந்தாலும், சுயநல சிந்தனையை விடுத்து, பொதுநல நோக்கோடும், தர்மசிந்தனையோடும் யோசித்தால் சிலரது நடவடிக்கைகள் தர்மவிரோதம்தான்! "டோக்கன்' கொடுத்து (பணம் கொடுத்து) எம்.எல்.ஏ. எலக்ஷனில் வெற்றி பெறுவது சட்டவிரோதம் என்றாலும், அது அங்கீகரிக்கப்பட்ட வெற்றிதானே! தந்தையின் கட்டளைக்காக பெற்ற தாயைக் கொலைசெய்யத் துரத்தி வந்த பரசுராமர், தாய்க்கு அடைக்கலம் தந்தவரையும், தாயையும் தலையை வெட்டியது அதர்மச் செயல்தான்! ஆனால், அதற்குப் பரிகாரமாக அவர்களுக்கு உயிர்ப்பிச்சை தரும்படி தந்தையிடம் வரம்கேட்டு, இறந்த இருவரின் உடலோடு தலையை மாற்றிப் பொருத்தியதால் வந்த அவதாரம்தான் மாரியம்மன். அப்படிப்பட்ட பரிகாரம் இக்காலத்தில் இல்லை. நஷ்ட ஈடுகொடுத்து, சமாதானம் செய்தாலும் பாவம் தொலைந்துபோகுமா?

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்கு திரிகோணத்தில் இருக்கிறார். புதன் 1, 4-க்குடையவர். 4 கேந்திரஸ்தானம். அவர் 9-ல் திரிகோணத்தில் நிற்பது ஒரு யோகம். எந்த ஒரு கிரகத்துக்கு கேந்திரம்- திரிகோணம் இரண்டும் கிடைக்கிறா அது ராஜயோகம் செய்யும் கிரகமாகிறது. மேலும், 10-க்குடைய குரு 10-ஆம் இடமான மீனத்தைப் பார்க் கிறார். 9-க்குடைய சனி 9-ஆம் இடம் கும்பத்தைப் பார்க்கிறார். அதனால், குரு 6-ல் மறைந்த தோஷம் விலகும்! குருவருளும் திருவருளும் நிரம்பப் பெறலாம். இன்னொரு வகையில் 5-க்குடைய சுக்கிரனும் (திரிகோணா திபதி), 9-க்குடைய சனியும் (திரிகோணா திபதி) 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்ப் பதும் ராஜயோகமாகும்! அதுமட்டுமல்ல; 10-க்குடைய குருவை, 11-க்குடைய செவ்வாய் பார்ப்பதும் ஒரு யோகமாகும். எனவே, உங்களுடைய தொழில், வாழ்க்கை, முயற் சிகள் எல்லாவற்றிலும் முன்னேற்றமும், வெற்றியும், தடையில்லாத வளர்ச்சியும் உண்டாகும். எண்ணங்கள் ஈடேறும். கரு தியது கைகூடும். நினைத்தவை நிறைவேறும். விரும்பியது விரைவில் வந்து சேரும். 1, 7-க்குடைய குரு 6-ல் மறைவதால் குடும்பத்தில் உறவினர்கள் அல்லது தம்பதி களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவை உடனுக்குடன் மாறிவிடும்; மறைந்துவிடும்! தொழில்துறை யிலும், வாழ்க்கையிலும் போட்டி, பொறா மைகளும் அவ்வப்போது உருவானாலும், அவற்றை சிங்கத்தை அதன் குகையிலே சந்தித்து வெற்றி கொள்வதைப்போல, உங்கள் சமயோசித புத்தியாலும், ராஜதந்திர அணுகு முறையாலும் வெற்றி கொள்ளலாம். முக்கிய மான சுபமங்கள் காரியங்களில் கலந்து கொண்டு சுபச்செலவுகள செய்வீர்கள். 12-ஆம் இடத்தை குரு பார்த்த பலன் அதுதான்! அதே போல் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நன்மைகளைக் கருதி வங்கி நிரந்தர டெபா சிட், இன்சூரன்ஸ், சேமிப்புக் கணக்குகளிலும் சுபமுதலீடு செய்வீர்கள்!

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்ம ராகுவும், ஏழில் சப்தம கேதுவும் இருப்பது ஒருவகையில் "மைனஸ்'தான் என்றாலும், ராகுவை 5-ல் உள்ள குரு பார்ப்பதும், கேதுவுக்கு வீடு கொடுத்த சனி குரு வீட்டில்- தனுசு ராசியில் இருப்பதும் "பிளஸ்' ஆகும். அதாவது குரு சம்பந்தம் பெற்ற கிரகங் களுக்கு எந்த தோஷமும் இருக்காது! கங்கையில் சேரும் அசுத்தங்களும் சுத்தமாகி விடுவதுபோல! 2, 8-ல் உள்ள ராகு- கேதுக்கள் பொருளாதாரத்தில் போதிய நிறைவைத் தரமாட்டார்கள். இருந்தாலும், குரு சம்பந்தம் இருப்பதால் தேவைகளை நிறைவேற்று வரர்கள். உதாரணமாக "பொது அர்த்தால்' நேரத்தில் கடைகள் எல்லாம் அடைபட்டுக் கிடந்தாலும், எங்கேயாவது ஒரு சந்துக்குள் அரைக்கதவு மூடிய உணவு விடுதியில், வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடியாவிட்டாலும்- பசியாறிக் கொள்வதுபோல! 10-ல் உள்ள செவ்வாய் ஆட்சிபெற்று, கடக ராசியைப் பார்ப்பதோடு 4-ஆம் இடம், 5-ஆம் இடங் களையும் பார்ப்பதால், உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதை இவற்றுக்கு எந்த பாதிப்பு வராது; பங்கமும் ஏற்படாது. உங்கள் ஆற்றலுக் கேற்ற வெற்றியும், பாராட்டும் கிடைக்கும். பூமி, வீடு, வாகனம், தேக சுகம் ஆகியவற்றிலும் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். தாய்- பிள்ளை உறவிலும் பாசமும், நெருக்க மும், இணக்கமும் ஏற்படும். மனைவியின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதேபோல மனைவியின் தொழில்துறையில் அவரின் திறமைக்கேற்ற பெருமையும், வளர்ச்சி யும் எதிர்பார்க்கலாம். 9-க்குடைய திரி கோணாதிபதி குரு 5-ல் மற்றொரு திரிகோணம் ஏறுவதால், பிள்ளைகளுக்கு நல்லவை நடக்கும். தொல்லைகள் விலகும். துன்பங்கள் தொலையும். ஆரோக்கியம், படிப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், சுபகாரியம், எதிர்கால இன்பம் போன்ற எல்லா நன்மைகளும் நடக்கும். பிரிவு முறியும். உறவு பலமாகும். அதாவது பிரிந்து வாழும் பிள்ளைகள் இணைந்து வாழ்ந்து, இன்ப அதிர்ச்சியைத் தரலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 6-ல் மறைகிறார். அவருடன் கேது சம்பந்தம்- ராகு பார்வை! சூரியன் அல்லது சந்திரனோடு ராகு- கேது சம்பந்தப்படும் போதுதான் சூரியகிரகணம் அல்லது சந்திர கிரகணம் உண்டாகிறது. கிரகணம் என்பது மறைத்தல்- இருட்டு. எனவே, உங்கள் வாழ்க்கை யில் நடக்கும் சம்பவங்கள் இருள்மயமாக அல்லது துன்பமயமாகத் தெரியும். என்றாலும், கிரகணம் என்பது ஒருசில குறிப்பிட்ட மணி நேரம்தான். இருபத்துநான்கு மணிநேரமும் தொடர்ந்து நிலைப்பதில்லை! அதேபோல உங்கள் துயரங்களும், துன்பங்களும், ஆதங் கங்களும் நிரந்தரமானதல்ல. நீர்மேல் எழுதிய எழுத்துப்போல உடனே மறைந்துவிடும். மாறி விடும்! 10-க்குடைய சுக்கிரன் 6-க்குடைய சனி யோடு 5-ல் திரிகோணம் பெறுவதால், தொழில் மேன்மைக்காக சிலர் புதுக்கடன் வாங்க லாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மனைவி வகை உறவினர்கள் வகையில் ஒருசிலர் பிரச்சினைகளைச் சந்திக்கலாம். அல்லது அவர்களுக்கு ஜாமின் பொறுப் பேற்று வாங்கித்தந்த கடன்களை அவர்கள் கட்டத் தவறியதால், உங்கள் வாக்கு நாணயத் தைக் காப்பாற்ற நீங்களே அந்தக் கடனை அடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்! மனைவிக்காகவும் அல்லது மக்களுக்காகவும் எதிர்கால நன்மையைக் கருதி (டெபாசிட்) வைப்பு நிதி முதலீடு செய்யலாம். அல்லது நீண்டகால ஆயுள் காப்பீடு (இன்சுரன்ஸ்) செய்யலாம். 6-ஆம் இடம் என்பது கடன் ஸ்தானம் என்பதால், நாம் வாங்குவதும் கடன்- நாம் கொடுப்பதும் கடன். சிலர் கடன் வாங்கிக் கடனைக் கொடுக்கலாம். கடனை வாங்கிக் கடன் கொடுப்பதும், மரமேறி கைவிட்டவனும் ஒன்று என்பார்கள். அதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கடன் வாங்காமலே இருக்கமுடியாது. மல்லையா, நீரவ்மோடி போன்றவர்கள்போல மோசடி எண்ணத் தோடு கோடிக்கணக்கில் கடன் வாங்குவதும் ஓடி ஒளிவதும் கூடாது. தரம் கெட்டவர் களிடம் கடன்வாங்குவதும் கூடாது.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. அவரே 10-க்குடையவரும் ஆவார். 10-க்கு 9-ல் திரிகோணம்! பொதுவாக மற்ற கிரகங்களைப்போல புதனை மறைவு தோஷம் பாதிக்காது. அதனால்தான் "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்ற ஜோதிடப் பழமொழி இருக்கிறது. மேலும், மற்ற கிரகங்களைப்போல புதனை அஸ்தங்கத தோஷமும் பாதிக்காது. ஏனென்றால் சூரியனோடு இணைந்தே சஞ்சரிக்கும் கிரகம் புதன்! அதனால், அவருக்கு அஸ்தமனம், வக்ர தோஷம் இல்லை! அதாவது தினமும் காலையில் ஓசிக் காப்பி குடிக்கவும், ஓசிப்பேப்பர் படிக்கவும் நம் வீட்டுக்கு வரும் பக்கத்து வீட்டு நண்பருக்கு முக்கியத்துவம் இருக் காது. எப்போதுமே வராத விருந்தாளி வந்தால், அவருக்கு அதிக வரவேற்பும், உபசரிப்பும், மரியாதையும் விசேஷமாக இருக்கும் அல்லவா! ராசிக்குதான் 6-ல் மறைவு; 10-ஆம் இடத்துக்கு திரிகோணம். எனவே உங்கள் வாழ்க்கையும், தொழில் துறையும், வேலை, உத்தியோகமும் எந்தவித பிரச்சினையும், தடையும் இல்லாமல் செயல்படும். மேலும், கன்னி ராசிக்கு 9-க்குடைய சுக்கிரனும் 10-ஆம் இடமான மிதுனத்தைப் பார்ப்பதும் தர்மகர்மா திபதி யோகமாகும். அதேபோல 7-க்குடைய குரு, அதற்கு திரிகோணத்தில் நின்று 7-ஆம் இடத்தையே பார்ப்பதால், திருமணத் துக்காகக் காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணயோகம் உண்டாகும். அர்த்தாஷ்டமச்சனி (4-ஆம் இடத்துச் சனி) பலனாக பிரிந்துவாழும் தம்பதிகள் இணைந்து வாழலாம். சிலர் மனைவி பேரில் ஆபரண வசதிகள் அல்லது தொழில் அமைப் புகளை உருவாக்கித் தரலாம். ஏற்கெனவே நடந்துவரும் தொழில் ஸ்தாபனங்களில் பங்குதாரராக (கூட்டு) சேர்க்கலாம். படித்து முடித்து வேலை தேடியலையும் கணவர் அல்லது மனைவியருக்கு விரும்பிய வேலை யோகம் அமையும். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்கலாம்; சேமிக்கலாம்!

lakshmi

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைந்தாலும், துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியுடன் சம்பந்தம்! சனியும் சுக்கிரன் சாரம். (பூராடம்). அவர்களுக்கு வீடு கொடுத்த குரு, ராசிக்கு 2-ல் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து, செவ்வாயின் பார்வையைப் பெறுவதோடு, செவ்வாயும் உங்கள் ராசியைப் பார்க் கிறார். எனவே, கொள்கையில் வேறுபட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் சந்தர்ப்பவசமான கூட்டணி சேர்ந்து, ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றி பெறுவதுபோல உங்கள் செயல்களும், முயற்சிகளும் கைகூடும். "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' என்ற பாலிஸியைக் கடைப்பிடித்து ஜெயிக்கலாம். 2-ஆம் இடத்து குருவும், 2-க்குடைய செவ்வாயும் பொருளாதாரத்தில் உங்கள் தேவைகளையெல்லாம் நிறைவேற்றலாம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிசாக்கிகளும் வசூலாகும். அதே போல நீங்கள் கொடுக்கவேண்டிய பாக்கிசாக்கிகளும் ஓடியடையும். 6-க்குடைய குரு 6-ஆம் இடத்தையே பார்ப் பதால் எதிரி, கடன், போட்டி, பொறாமை, வைத்தியச்செலவு எல்லாம் இருக்கும். ஆனால் இருக்காது. என்னத்தெ கண்ணய்யா சினிமாவில் சொல்வதுபோல "வரும், ஆனா வராது.' 6-ஆம் பாவப்பலன் கட்டுக்கடங்கி உங்களை பாதிக்காது. விஷமில்லாத தண்ணீர்ப்பாம்பு கடிப்பதுபோல! சிலருக்கு தேக ஆரோக்கியத்தில் அல்லது வாகன வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கலாம். அதேபோல வாழ்க்கை, தொழில் அமைப்புகளில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கலாம். 4-க்குடைய சனி குரு வீட்டில். 10-க்கு குரு பார்வை! 4-ல் கேது; 10-ல் ராகு இருந்தாலும், குரு சம்பந்தம் பெறுவதால் தோஷப் பரிகாரம்!

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவு என்றாலும், அங்கு அவர் ஆட்சிபலம் பெறுகிறார். 2, 5-க்குடைய குருவை செவ்வாய் பார்ப்பதோடு, 5-ஆம் இடத்தை குருவும் பார்க்கிறார். புதியவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். பழகியவர்களின் தொடர்பு துண்டிக்கப்படாது என்றாலும், தூரம் தொலைவாகும். தள்ளிநின்று வேலை செய்யும். கணவன்- மனைவி உறவு ரயில்வே தண்டவாளம்போல தனித்தனியே இருந்தாலும், ஜங்ஷனில் இணைந்து கொள்வதுபோல அவ்வப் போது உறவு முறிவாகாமல் நீடிக்கும். தூரம், தொலைவிலுள்ள உறவினர் களையும் ஒன்றுசேர்க்கும் வகையில் குடும்ப விழாக்களும், விசேஷங்களும், குலதெய்வ வழிபாடுகளும் அமையும். இப்படி எங்கெங்கேயோ இருப்பவர் களை ஒன்றுசேர்க்கத்தான் பண்டிகை களும், விசேஷங்களும், கோவில் வழிபாடு களும் முன்னோர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. 10-க்குடைய சூரியன், கேது- ராகு சம்பந்தம் பெறுவதால், அவசரப்பணி, அவசர வேலை உருவாகி சிரமம் தரலாம். 5-க்குடைய குருவே 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் மனம் போல- எண்ணம்போல காரியங்களை நிறைவேற்றலாம். "எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப்பெறின்' என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லுவார். அதாவது வைராக்கியமும் சாதனையும் உடையவர்கள் கருதியதை நிறைவேற்றி வெற்றி காணலாம். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர். அரச பதவி யைத் தூக்கி எறிந்துவிட்டு, கடும் தவமி யற்றி பிரம்மரிஷியானார். சாலமன் என்ற பேரரசன் சிலந்தி வலைபின்னு வதைப் பார்த்து, பாடம் பயின்று விடாமுயற்சியாக போர் தொடுத்து வெற்றி பெற்றான்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ராசிக்கு திரிகோணம் பெற்று குருவை 8-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே, தளர்ச்சியடையாத முயற்சிகளும், தன்னம்பிக்கை, தைரியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். உங்கள் விருப்பங்களையும் எண்ணங்களையும் ஈடேற்றும். 10-க்குடைய புதன் 3-ல் நின்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம்! ஆகவே, குருவருளும் திருவருளும் உங்களுக்கு வழித்துணையாகவும் அமையும். வாழ்க்கைத் துணையாகவும் அமையும். ராமபிரானுக்கு குருவாக விளங்கிய விசுவாமித்திரர் வழிகாட்டுதலின் பேரில்தான் ராமபிரான் சிவ தனுசுவுக்கு நாண் ஏற்றி சீதாப்பிராட்டியை மணந்தார். அதேபோல அகத்தியர் உபதேசம் செய்த ஆதித்யஹிருதய ஸ்தோத்திரத்தை வழித்துணையாகப் பின்பற்றித்தான், இராவணனை ராமபிரான் வெற்றிகொண்டார்; சீதையை மீட்டார். எனவே, சாதனையாளர்கள் அனைவரும் சோதனைகளைக் கடந்து வெற்றிபெற, குருவின் போதனைகள்தான் துணையாக அமைகின்றன. ஸ்ரீரங்கத்தில் இருந்து 17 முறை திருக்கோஷ்டியூர் வந்து குருநாதர் நம்பிசுவாமிகளிடம் இராமானுஜர் உபதேசம் பெற்று குருநாதரே வணங்கத்தக்க மாமனிதரானார். உங்களுக்கும் வாழ்க்கை மேன்மையடைய குரு வருவார். அருள் தருவார்; நம்பிக்கையோடு காத்திருங்கள்! சுந்தரரை ஈஸ்வரனே தேடிவந்து ஆட்கொண்டு அருளவில்லையா!

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைவு. சனிக்கு வீடு கொடுத்த குரு, அவருக்கு 12-ல் மறைவு. 8-க்குடைய சூரியன் ஜென்மத்தில் கேது- ராகுவுடன் சம்பந்தம். 6-க்குடைய புதன் 2-ல். இப்படி 6, 8, 12-ன் சம்பந்தம் உங்களை மயங்கச் செய்யும்; தயங்க வைக்கும். என்றாலும், 3-க்குடைய குரு 11-ல் நின்று 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் வைராக்கியமும், விடாமுயற்சியும் உங்கள் தளர்ச்சியைப் போக்கி வளர்ச்சியடைய வைத்து வெற்றிபெறச் செய்யும்! அதற்குத் துணையாக மனைவியும் மக்களும் உறுதுணையாக செயல்படுவார்கள். சிலருக்கு உடன்பிறப் புகள் உதவியாக அமைவார்கள். தருமருக்கு அவரின் சகோதரர்கள் நால்வரும்- ராமபிரானுக்கு லட்சுமணன் துணையாகவும் அமைந்தனர். கிருஷ்ணருக்கு பாமா, ஒரு அசுரனை வதம்செய்ய உதவியாக இருந்தார். அதேபோல தசரத சக்கரவர்த்திக்கு, ஒரு எதிரியை ஜெயிக்க கைகேயி உதவியாக இருந்தார். (அப்போது கைகேயிக்கு தசரதர் கொடுத்த இரண்டு வரம்தான் பின்னாளில் ராமரை காட்டுக்கு அனுப்பியதும், பரதனுக்கு பட்டம் சூட்டியதும்.) ஆகவே பங்காளிகளையும், சம்பந்திகளையும் ஜெயிக்க உங்களுக்கு குடும்பத்தார் உற்ற துணையாக அமைவார்கள். தருமருக்கும் ராமபிரானுக்கும் நல்ல உடன்பிறப்புகள் அமைந்தனர். துரியோதனனுக்கும் இராவணனுக்கும் அப்படி அமையவில்லை. அவர்களின் அக்கிரம செயல்களுக்கும், அடாவடி அதர்மங் களுக்கும் ஆதரவளித்தார்கள். ஆகவே சரித்திரத்தில் அவர்கள் வெற்றி பெறவில்லை. எப்போதும் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! தேன் தானும் கெடாது; தன்னோடு சேர்ந்த பொருள்களையும் கெடவிடாது.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறுகிறார். 11-க்குடைய குரு 10-ல் பலம் பெற்று 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பேச்சு, செயல் குடும்பத்தில் நன்மைகளை உண்டாக்கும். வாக்கினால் பல காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் தாராளமான உதவிகள் வரும். பயன்படுத்திக் கொள்ளலாம். வரவேண்டிய பணம், பாக்கிசாக்கிகள் வந்துசேரும். அதனால் நீங்கள் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு குறிப்பிட்ட மாதிரி, குறையின்றி செயல்படும். குடும்ப உறவினர்களும், வெளிவட்டார நண்பர் களும் உங்களுக்கு ஆதரவாகவும் அனு சரணையாகவும் துணைநிற்பார்கள். பெரியோர்களின் ஆசியும் வழிநடத்த லும் அமையும். தொழில்துறையிலும் வேலை செய்யும் இடத்திலும் முன்னேற்ற மான பலன்களை எதிர்பார்க்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகமும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகமும் அமையும். பெண் குழந்தைகளையே பெற்றெடுத்து, ஆண் குழந்தைக்காக தவமிருப்பவர்கள் கும்பகோணம் அருகில் குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடலாம். (சேலம்) நாமக்கல்லில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சேந்தமங் கலத்திலும் (சாமியார் கரடு ஸ்டாப்) தத்தாத் ரேயர் கோவில் (சிறு மலையின்மேல்) உள்ளது. அங்கு சென்றும் வேண்டிக்கொள்ளலாம். அபிஷேக பூஜையும் செய்யலாம். வசதியிருப் பவர்கள் சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தானகோபால கிருஷ்ண ஹோமம் செய்யலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 9-ல் நின்று, உங்கள் ராசியைப் பார்ப்பது வெகுசிறப்பு. அதிலும் குரு 10-க்குடையவராகி 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம்- மிகப் பிரமாதம்! அதனிலும் விசேஷம் 2-க்குடைய செவ்வாய் 2-ல் ஆட்சி பெறுவது! 4, 7-க் குடைய புதன் 12-ல் மறைவது சிறு பலவீனம் என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி 10-ல் நின்று அவரை (புதனை) பார்ப்பது பலம்! எனவே, 12 ராசிக்காரர்களிலும் மீன ராசிக்காரர் களுக்கே நடப்பு கோட்சாரம் மிகமிக அனுகூலமாகவும், அதிர்ஷ்டமாகவும் அமைகிறது. 6-க்குடைய சூரியன் 11-ல் நிற்பதும் பலம்! எதிரிகள் உதிரிகளாகி விடுவார்கள். 5-ல் ராகு. 11-ல் கேது. உங்கள் செயல்களிலும், காரியங்களிலும் சிறுசிறு தடைகளை உணர்த்தினாலும், பள்ளி அருகில் கூட்டு ரோடு அருகில் வேகத்தடை (ஸ்பீடு பிரேக்) மாதிரிதானே தவிர, உங்கள் பயணத்தை திசை மாற்றும் தடைகள் அல்ல! (அதாவது பிரதமர் அல்லது வி.ஐ.பி. வருகையானால் டிராபிக்கை மாற்றுவது போல் ஆகாது.) நற்குணம் உள்ளவர்களின் தொடர்பும், அன்பும், ஆதரவும், ஆசியும் உங்களை வழிநடத்தும்! ஒருசிலர் உங்களைவிட்டு விலகினாலும், விலகிப்போனவர்கள் கெட்டவர்கள் என்று விட்டு ஒதுக்குங்கள். விரும்பி வருகிறவர்கள் நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். அதாவது ஒரு மனிதனுக்கு நல்ல நேரம் வரும்போது நல்லவர்கள் எல்லாம் வந்துசேர்வார்கள். கெட்டவர்கள் விட்டு விலகுவார்கள். கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது நல்லவர்கள் விட்டு விலகுவார்கள். கெட்டவர்கள் தானாக வந்து ஒட்டி உறவாடுவார்கள். கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது இராவணனை விட்டு விபீஷணரும், துரியோதனனை விட்டு விதுரரும் விலகிவிட்டார்கள்.