ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
28-5-2018- விருச்சிகம்.
31-5-2018- தனுசு.
2-6-2018- மகரம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 1, 2, 3.
செவ்வாய்: திருவோணம்- 1, 2.
புதன்: ரோகிணி- 1, 2, 3, 4, மிருகசீரிடம்- 1.
குரு: விசாகம்- 2.
சுக்கிரன்: திருவாதிரை- 3, 4, புனர்பூசம்- 1.
சனி: மூலம்- 3, 2.
ராகு: பூசம்- 4.
கேது: திருவோணம்- 2.
கிரக மாற்றம்:
குரு வக்ரம்.
சனி வக்ரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம். 10-க்குடைய சனி 9-ல். சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 7-ல், சனிக்கு 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கௌரவம், இவற்றுக்குக் குறைவில்லை. தொழில் யோகமும் நன்றாகவே உள்ளது. தர்மகர்மாதிபதி யோகமும் உள்ளது. எனவே உங்களுடைய கனவுகளும் திட்டங்களும் நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே நடந்துவரும் தொழிலும் நல்ல முறையில் இயங்கும், என்றாலும் பாôட்னர்ஷிப் தொழிலாக இருந்தால் இக்காலகட்டத்தில் கூட்டு முறியும் வாய்ப்பு உண்டாகும். பழைய கூட்டாளி விலகலாம். அந்த இடத்தை நிரப்ப புதிய கூட்டாளி வந்துசேரலாம். சிலர் வெளிக்கூட்டாளிகளை விலக்கிவிட்டு குடும்ப உறுப்பினர்களைக் கூட்டு சேர்த்துக்கொள்ளலாம். சொந்தக்காரர்கள் கூட்டு, மனைவி, மக்கள் கூட்டு லாபம் தரும். மனநிறைவை உண்டாக்கும். திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இக்காலம் திருமண ஒப்பந்தம் உறுதியாகும். பூர்வீகச் சொத்து இருந்தும் பயன்தராமல், பலன் தராமல் இருக்கும். கிராமத்தில் இடம், பூமி, வீடு உள்ளவர்களுக்கு தான் அனுபவிக்கமுடியாமல் மற்றவர்கள் அனுபவிக்கலாம். 4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம் இவற்றைக் குறிக்கும் இடம். அதில் ராகு இருப்பதும், கேதுவும் செவ்வாயும் பார்ப்பதும் தோஷம். ஒரு கோடீஸ்வரர் ஆசைப்பட்டு ஒரு "ஆடி' கார் வாங்கினார். வாங்கிய சில வாரத்தில் திடீரென்று நரம்புத்தளர்ச்சி நோய் (வாதம் மாதிரி) வந்துவிட்டது. எங்கும் பயணம் போகமுடியாது. படுத்த படுக்கையாகிவிட்டார். இன்னொருவர் சொந்த வீடு கட்டினார். கிரகப்பிரவேசம் 8-ஆம் தேதியில் செய்தார். இரண்டு மாதத்தில் விபத்தில் இறந்துவிட்டார். அவர் அனுபவிக்க முடியவில்லை. இதுதான் ராகு- கேது 4-ல் சம்பந்தப்பட்ட பலன். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்வது நல்லது. மேற்சொன்னபடி இடம், வாகனம் இவற்றில் பிரச்சினை இல்லாவிட்டால் தாயாருக்கோ அல்லது ஆரோக்கியத்துக்கோ கெடுதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் பாதிப்பு வந்தால் தன்வந்தரி பகவானுக்கு அபிஷேகம், பூஜை செய்யலாம். தாயின் சுகத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் ஆயுள்விருத்திக்கும் தஞ்சை- திருவையாறு அருகில் திங்களூர் சென்று திங்கட்கிழமை ஈஸ்வரனை வழிபடலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் புதன் வீட்டிலும், புதன் சுக்கிரன் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். அதாவது ராசிநாதனும் இரண்டுக்குடையவனும் பரிவர்த்தனை. ராசிக்கு எட்டில் உள்ள சனி (அட்டமச்சனி) ராசிநாதன் சுக்கிரனைப் பார்க்கிறார். சுக்கிரன் 6-க்குடையவரும் ஆவார். ஆயுள் குற்றம் வராது. ஆனால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். செயல் தேக்கம் ஏற்படலாம். அப்படி இல்லையென்றால் தொழில் போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளைச் சமாளிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் கடன், சக்திக்குமீறிய கடன் உருவாகலாம். லாபம் எல்லாம் வட்டிக்கே செலுத்தும்படி இருக்கும். ஆக 6-க்குடைய சுக்கிரனை எட்டில் உள்ள சனி பார்க்கும் பலன் இதுதான்! ஒருசிலருக்கு சுக்கிரன் களஸ்திரகாரகன் என்பதால் களஸ்திர தோஷம் ஏற்படலாம். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருதார யோகம் வரலாம். அதற்குமேல் அதிக வயதானவர்களுக்கு- பேரன், பேத்தி எடுத்தவர்களுக்கு இன்னொரு திருமணம் அவசியம்தானா என்ற கேள்வியோடு ஆசையை அடக்கிக்கொண்டு மனஆறுதலுக்காக குடிபோதைக்கு அடிமையாகலாம். அதனால் சொந்தக் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானாலும் தன் மனநிம்மதிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். அதாவது பகலில் குடிக்காமல் இரவில் "சொசைட்டி கிளப்' (பார்) சென்று பங்குகொள்ளலாம். இது மனைவியை இழந்தவர்களின் நிலை. வேறு சிலர் காதல் தோல்விக்கு ஆளாகி "வசந்தமாளிகை'யில் சிவாஜி பாடின மாதிரி "இரண்டு மனம் வேண்டும்; மறப்பதற்கு ஒன்று; குடிப்பதற்கு ஒன்று' என்று தேடலாம். எதுவானாலும் குடி- குடியைக்கெடுக்கும் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். மதுவிற்பனை நிலையங்களில் குடி- குடியைக்கெடுக்கும் என்று அறிவிப்புப் பலகை வைத்துக்கொண்டே வியாபாரம் செய்கிறார்கள். அதேபோல சிகரெட் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்ற அறிவிப்போடு சிகரெட் விற்பனை நடக்கும். இது என்ன சட்டதிட்டமோ அறிவிப்போ தெரியவில்லை. மதுவிற்பனையும் சிகரெட் விற்பனையையும் நிறுத்த சட்டம் போட முடியுமா? எம்.ஜி.ஆர். பாடிய மாதிரி, "திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது- சட்டம் போட்டுத் தடுக்குறச் கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்ற மாதிரி கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுகிறவனும் இருப்பான். இதுதான் அட்டமச்சனியின் திருவிளையாடல்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதனும், புதன் இருந்த ராசிநாதன் சுக்கிரனும் பரிவர்த்தனை. அதாவது புதன் வீட்டில் சுக்கிரன். சுக்கிரன் வீட்டில் புதன். இந்தப் பரிவர்த்தனை 1, 12-க்குடைய பரிவர்த்தனை. எனவே செல்வாக்கு, மரியாதை, மதிப்பு, கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்புக்கு இடமில்லையென்றாலும், சிலருக்கு அளவுக்கு அதிகமான விரயச்செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு அலைச்சல் திரிச்சல், அதிகமான பயணங்கள் ஏற்படலாம். சிலர் ஊர்விட்டு ஊர் மாறலாம் அல்லது வேறு வீடு மாறலாம் அல்லது வேறு தொழில், வேறு வேலை மாறலாம். 12-ஆம் இடம் என்பது மாற்றத்தைக் குறிக்கும் இடமாகும். இந்தப் பலன் எதுவுமே நடக்கவில்லை என்றால் சிலருக்கு திருமணத்தடை, தாமதம் ஏற்படலாம். அதாவது 30 வயதுவரை திருமணம் தடைப்படலாம். அப்படியிருந்தால் அவர்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வர கலாஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இருவருக்கும் (ஆண்கள்- பெண்கள்) காமோகர்ஷண ஹோமமும் சேர்த்துச் செய்ய வேண்டும். இளமையில் திருமணமானவர்களுக்கு (25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு) திருமண வாழ்க்கை திருப்தியாக அமையாமல் வேதனையும் சோதனையும் உருவாகி பிரிய நேரலாம். இருபாலருக்கும் திருமணம் வரலாம். இதெல்லாம் 7-ல் சனி நின்ற பலன்- சனி சுக்கிரனைப் பார்த்த பலன். ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது நின்ற பலன் (நாகதோஷம்). என்றாலும் குரு ராசியைப் பார்க்கிறார். பரிகார நிவர்த்திக்குப் பிறகு நல்ல மணவாழ்க்கையை எதிர்பார்க்கலாம். 5-ல் புத்திர காரகன் இருப்பது தோஷம். புத்திரஸ்தானாதிபதி சுக்கிரனையும் சனி பார்க்கிறார். அப்படி தோஷமான ஜாதகர்கள் சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும், புத்திரப்ராப்தி வாஞ்சா கல்ப கணபதி ஹோமமும் செய்துகொள்ளலாம். ஆரணி அருகில் புத்திர காமேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகில் குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டாலும் நீண்ட காலமாக வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகு நிற்க, அவருக்கு ஏழில் கேதுவும், செவ்வாயும் அமர்வு. செவ்வாய் 5, 10-க்குடையவர் உச்சம். 6-ல் சனி இருப்பது சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவாரணம். அதாவது 8-க்குடையவர் 6-ல் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பது விதி! அதேசமயம் அவர் 7-க்கும் உடையவர். அவர் 6-ல் இருப்பது ஒருவகையில் குற்றம்தான்! என்றாலும் 7-ல் உள்ள கேது சாரம் பெற்று, வக்ரம் அடைவதால் தோஷம் நிவர்த்தியாகும். சனி 8-ஆம் இடம், 12-ஆம் இடம், 3-ஆம் இடங்களைப் பார்ப்பதால் ஆயுள் விருத்தி, ஆரோக்கிய விருத்தி, தொழில், வேலை சம்பந்தமாக அலைச்சல், தவிர்க்கமுடியாத பயணம், வேலைச்சுமை சுபச்செலவுகள் ஆகிய பலன்களைச் சந்திக்கலாம். 4-ல் 6-க்குடைய குரு வக்ரமாகி, குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 12-ல் மறைவு. அவருக்கு குரு பார்வை கிடைப்பதால் தாயாருக்கு சௌகர்யக் குறைவு ஏற்பட இடமுண்டு. அதேபோல பூமி, மனை, வீடு, வாகனம் சம்பந்தமான வகையில் முக்கியமான செலவுகள் ஏற்படலாம். சிலர் வாகனம் மாற்றம் செய்யலாம். பழையதைக் கொடுத்து புதிது வாங்கலாம். வங்கிக்கடன் வாங்கி வாகனப் பரிமாற்றம் செய்யலாம். சனியும் வக்ரம், குருவும் வக்ரம். குரு 6-க்கும் 9-க்கும் உடையவர். வாரத் தொடக்கத்தில் ராசிநாதனோடு (சந்திரன்) சம்பந்தம் என்பதால் தாயார் வகையில் மாறிமாறி வைத்தியச்செலவுகள் வரலாம். 4-7-2018-ல் குரு வக்ர நிவர்த்தி. (ஆனி 20). அதன்பிறகு 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட கெடுபலன்கள் எல்லாம் விலகி, சுபப்பலன்களாக மாறும். அக்டோபர் 4-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு ராஜயோகம். அதற்கான அறிகுறி ஜூலை 4-ல் குரு வக்ர நிவர்த்திக்குப் பிறகே தெரிய ஆரம்பிக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் பலம். அவருடன் புதன் சம்பந்தம். புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை. சூரியன் விரயாதிபதி சந்திரன் சாரம் (ரோகிணி). எனவே சொந்தத்தொழில் செய்கிறவர்கள் தவிர்க்கமுடியாத விரயச்செலவுகளைச் செய்ய நேரும். அல்லது தொழில் மாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய நேரும். அந்த மாற்றம் முன்னேற்றமாகவே அமையும். 10-க்குடைய சுக்கிரனும், 11-க்குடைய புதனும் பரிவர்த்தனையாக இருப்பதால் தொழில் பயனுள்ளதாகவும் லாபம் உடையதாகவும் அமையும். தொழில் சம்பந்தப்பட்ட வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகும். அதேபோல நீங்கள் கொடுக்கவேண்டிய பாக்கி சாக்கிகளையும் நாணயமாகத் திருப்பிக்கொடுத்து நல்ல பேர் எடுக்கலாம். 10-ஆம் இடத்துக்கு 8-ல் குரு மறைவதும், அங்கு அவர் வக்ரமாகவும் இருப்பதால் சிலருக்கு வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்பும், கடமையும் இருக்கும். ஆனால் வெறும் பாராட்டுதான் இருக்குமே தவிர, ஊதிய உயர்வோ, இங்கிரிமென்ட்டோ இருக்காது. இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் கடமைகளைச் சரிவர செய்யலாம். உழைப்பின் பலன் உடனடியாக இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் அல்லது அடுத்து வந்துசேரும். அது உறுதி! குர்ரானில் "அவனவன் சாப்பிடும் அரிசியில் அவனவன் பெயர் எழுதியிருக்கும். அது உறுதியாக வரும்' என்று சொல்லப்பட்டுள்ளது. வாரியார் சுவாமிகள் வருவது- தானே வரும் என்றும், வருவதுதானே வரும் என்றும் சொல்லியிருப்பார். 7-க்குடைய சனி 5-ல் வக்ரமடைவது திருமணத்தடை, வாரிசுத்தடையை ஏற்படுத்தினாலும், குரு 5-க்குடையவர் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகும். ஜாதகரீதியான பரிகாரப் பூஜைகளைச் செய்யலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 9-ல் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 10-ல் இருக்க இருவரும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள். அதனால் கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி நடந்தாலும் அதன் பாதிப்பு கடுமையாக இருக்காது. தொழில் முன்னேற்றம், லாபம், வெற்றி, வேலை செய்கிறவர்களுக்கும் முன்னேற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி உண்டாகும். 4, 7-க்குடைய குரு 2-ல் இருப்பதோடு 2-க்குடைய சுக்கிரனைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் திருப்தியான சூழ்நிலை அமையும். 10-ஆம் இடத்தை குருவும் சனியும் பார்ப்பதால் புதிய தொழில் யோகம் அமையும். தாயார் அல்லது மனைவி பேரில் தொழில் செய்யலாம். அவர்களைக் கூட்டாளிகளாக சேர்த்துக்கொள்ளலாம். சிலருக்கு மனைவி வகையிலும், சிலருக்கு தாயார் வகையிலும் சொத்து சுகங்கள் வந்துசேரும். சிலர் தாயார் வகையில் ஆண் வாரிசு இல்லாத வீட்டிற்கு சுவீகாரப் புத்திரனாகப் போகும் பாக்கியம் உண்டாகும். அவர்கள்மூலமாக சொத்துகள் கிடைக்கும் யோகமும் உண்டாகும். ஒருசிலரின் அனுபவத்தில் நீண்டகாலமாக குலதெய்வ வழிபாடு இல்லாமல்- பங்காளிகள் ஒன்றுசேராமல்- குலதெய்வம் தூங்கிக்கொண்டிருந்த நிலையைப் போக்க கோடாங்கி குறிகேட்டு, அருள்வாக்கு கேட்டு அதன்படி பரிகாரம் தேடி குலதெய்வக் கிருபைக்கு ஆளாகலாம். அப்படிப்பட்ட கோவில் திருப்பணிகளை உங்கள் மேற்பார்வையில் வசூல்செய்து, செயல்பட்டு கல்வெட்டு பதிக்கலாம். இதன்மூலம் பங்காளிகள் குடும்பத்தில் நல்ல சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். தடைகள் எல்லாம் விலகும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவரை 3, 6-க்குடைய குரு பார்க்கிறார். பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்று சில நூல்கள் சொல்லும். அது தவறு. குருவின் வீடான மீனத்தில்தான் சுக்கிரன் உச்சம் அடைவார். உச்சம் என்பது பலம்! பகை வீட்டில் எப்படி பலம் அடையமுடியும்? பயம்தானே வரும்! ராகு- கேதுவுக்கு சொந்த வீடு (ஆட்சி வீடு) இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறுமுதல் சனி வரை இருக்கின்றன. ராகு- கேதுவுக்கு தனிக்கிழமைகள் இருந்தால் வாரத்துக்கு ஒன்பது நாட்கள் அல்லவா இருக்க வேண்டும். இப்படியும் சில நூல்களில் ராகு- கேதுவுக்கு ஆட்சி வீடும் உச்ச வீடும் சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சரியில்லாத வாதமோ அப்படித்தான் குருவும் சுக்கிரனும் பகை என்ற வாதமும்! குரு பிரகஸ்பதி தேவர்களுக்கு குருநாதர். சுக்கிரன் அசுரர்களுக்கு குருநாதர்! வாதியும் பிரதிவாதியும் சண்டைக்காரர்கள். அவர்களுக்காக கோர்ட்டில் வாதாடும் வக்கீல்கள் சண்டைக்காரர்கள் இல்லையே! தங்களின் வாதத்திறமையால் வாதிக்கும் பிரதிவாதிக்கும் தர்க்கம் செய்யலாம். தமது கட்சிக்காரர்களின் நியாயத்தை எடுத்துச்சொல்லலாம். கோர்ட் முடிந்ததும் இருதரப்பு வக்கீல்களும் ஒன்றாகச் சேர்ந்து காப்பி சாப்பிடப் போய்விடுவார்கள். வாதியும் பிரதிவாதியும் முகத்ûத் திருப்பிக்கொண்டு வெவ்வேறு பக்கம் போய்விடுவார்கள். அதனால் குருவும் சுக்கிரனும் பகைவர்கள் அல்ல! சுக்கிரன் குருவின் சாரத்தில் இருந்தாலும், குரு சுக்கிரனின் சாரத்தில் இருந்தாலும் அந்தந்த ஆதிபத்தியப் பலனை அவர்கள் மாறிச்செய்வார்கள் என்பது விதி! எனவே துலா ராசிக்கு குரு கடன், வியாதி, எதிரி, சத்ரு, சகோதரன் இவற்றைக் குறிக்கும் ஸ்தானாதிபதி என்பதால் குரு இவற்றை உருவாக்கலாம். சுக்கிரன் ராசிநாதன் என்பதால் அவற்றை விலக்கிவிடுவார். உங்களுக்குப் பாதுகாவலாக (செக்யூரிட்டியாக) இருப்பார். துலா ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி 4, 5-க்குடையவர் 3-ல் இருப்பதால் உடன்பிறந்தவர்கள் வகையிலும் நண்பர்கள் வகையிலும் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். மற்றவர்களால் சாதிக்க முடியாத பல காரியங்களை நண்பர்களும் உடன்பிறப்புகளும் சாதித்துக்காட்டுவார்கள். 8-ல் சூரியன், புதன் மறைவது ஒருவகையில் குற்றம் என்றாலும் அவருடன் புதன் சேர்ந்திருப்பதும், சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை என்பதும் தோஷ நிவர்த்தியாகும். ஆயுள் விருத்தி, ஆரோக்கிய விருத்தி, ஐஸ்வர்ய விருத்தி உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நிறைவேறும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம், கேது சேர்க்கை- ராகு பார்வை. செவ்வாய்க்கு வீடு கொடுத்த சனி குரு வீட்டிலும், குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் புதன் வீட்டிலும் நிற்க, சுக்கிரன் சனியைப் பார்க்க, சுக்கிரனை குரு பார்க்க- இப்படி ஒரு சம்பந்தம் (லிங்க்) இருப்பதால் ஏழரைச்சனி இருந்தாலும் அது உங்களைப் பாதிக்காது. சில சமயம் பொங்குசனியாக தங்குதடையில்லாத மங்களங்களைத் தந்தருளுவார். 3-ல் செவ்வாய், கேதுவும் அதற்கு ஏழில் ராகுவும் இருப்பது- உடன்பிறப்புகள் வகையிலும் நண்பர்கள் வகையிலும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். நலங்கள் உண்டாகும். வளங்கள் பெருகும். 7, 8-க்குடைய சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை என்பதால் சிலருடைய அனுபவத்தில் பிள்ளைகள் வகையில் கணவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். பெண் பிள்ளைகளுக்காக ஒருவரும், ஆண் பிள்ளைகளுக்காக ஒருவரும் ஆதரவு காட்டி வாதாடலாம். உதவிகள் புரியலாம். அது பாரபட்ச பாகுபாடு, பேதநிலையை வளர்க்கலாம். கூடியவரை அதைத் தவிர்ப்பது நலம்! ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணெயும் தடவலாமா? சில குடும்பங்களில் பெரியவர்களின் இந்த பாரபட்ச நிலை பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம். ஒரு அன்பருக்கு ஒரே பெண் பிள்ளை, மூன்று ஆண் பிள்ளைகள். அவர் தன் சம்பாத்தியத்தில் ஒரு சிறு வீடு வாங்கினார். அந்த வீட்டை மகளுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு தன் பூர்வீக வீட்டை (பெரிய வீடு) பிள்ளைகள் மூவருக்கும் பகிர்ந்து செட்டில்மென்ட் எழுதிவிட்டார். நியாயமான பங்கு பிரிப்பு என்றாலும், ஆண் மக்கள் மூவருக்கும் சகோதரிக்குக் கொடுத்தது பிடிக்கவில்லை. பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டுவிட்டனர். நல்லது பொல்லதைக்கூட தள்ளிவிட்டார்கள். அதேபோல இன்னொரு குடும்பத்தில் தாயார் தன் நகைகளை மகளுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டது ஒரே மருமகளுக்குப் பிடிக்கவில்லை. மகன்களிடம் புறம்கூறி தனிக்குடித்தனம் போய்விட்டார். தாயார் மகள் வீட்டில் அந்திமக் காலத்தைப் போக்கிக்கொண்டார். பாசமா? பணமா என்றால் பணம்தான் இக்காலத்தில் பெரிதாகப் போய்விட்டது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 11-ல் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம்! அதாவது வக்ரம் அடையும் கிரகம் எந்த வீட்டதிபதியோ அந்த வீட்டுப் பலனை அதிவேகமாகச் செய்யும். நல்ல வீட்டு ஆதிபத்தியம் என்றால் நல்ல பலனையும், கெட்ட ஆதிபத்தியம் என்றால் கெட்ட பலனையும் வலுவாகச் செய்யும். அதுதான் உக்ர பலன் என்பதன் அர்த்தம்! குரு ராசிநாதன் என்பதோடு 4-க்கும் உடையவர். 11-ல் இருக்கிறார். 5-ஆம் இடம், 3-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்க்கிறார். எனவே இந்த பாவப் பலன்களையெல்லாம் அதியற்புதமாக, நல்லதாக, உன்னதமாகச் செய்யும்! சொந்த வீட்டு யோகம், வாகன யோகம், தேக சௌக்கியம், தாய்- தந்தை உறவு, மனைவி- மக்கள் அன்பு, திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள், உபதொழில் யோகம், சகோதர- சகோதரிகள் சகாயம், நண்பர்கள் உதவி, நல்லவர்கள் நட்பு போன்று 3, 5, 7, 9, 11 ஆகிய வீட்டுப்பலன்கள் விரும்பியபடி தெளிவாகவும் தெம்பாகவும் நடக்கும். சிலருக்குக் குடியிருப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு நிறைவுண்டாகும். குடிநீர்த் தட்டுப்பாடு போன்ற குறைகள் நீங்கும். சிலர் புது இடம், வீடு, ஒப்பந்தம் செய்யலாம். 10-ஆம் இடத்து அதிபதி புதன் தன் ஸ்தானத்துக்கு திரிகோணத்தில் நிற்க, ஜென்மச்சனி 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி நண்பர்கள், உடன்பிறப்புகள் வகையில் நல்லது நடக்கும்- நல்லதுதான் நடக்கும். தொழில், உத்தியோகம், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தாரின் பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். இதுவரை சுகக்குறைவு- தனக்கோ பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ என மாறி மாறி ஏதாவது வந்து தொல்லை கொடுத்த வைத்தியச்செலவுகள் இந்த வாரம் முதல் உங்களை விட்டு விலகிவிடும். முழுமையான சுகமும் நிம்மதியும் உண்டாகும். ஆரோக்கியக் கடவுளான தன்வந்தரி பகவான் கோவில் அருகில் இருந்தால் அவருக்கு அபிஷேக பூஜை செய்யலாம் அல்லது தன்வந்தரி மூலமந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். பஸ்ஸில் போகும் போதோ, வேலையில் இருக்கும்போதோ காலில் செருப்பு அணிந்திருக்கும்போதோ மந்திர ஜெபம் செய்யலாமா என்று ஒரு கேள்வி எழலாம். மனதால் மந்திர தியானம் செய்வதற்கு இந்த விதிமுறைகளை அனுஷ்டிக்க வேண்டாம். சர்ச்சில் கிறிஸ்துவர்கள் காலணி அணிந்த நிலையில் "பிரேயர்' செய்கிறார்கள். கடவுள் எற்றுக்கொள்ள மறுக்கிறாரா?
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு, வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த குரு சனிக்கு 11-ல் மகர ராசிக்கு 10-ல் வக்ரம். ஜென்ம ராசியில் 4, 11-க்குடைய செவ்வாய் உச்சம். 7-க்குடைய சந்திரன் சாரம். (திருவோணம்). எனவே இந்த வாரம் உங்களுக்கு விரயச்சனி ஒருபுறம் நடந்தாலும் மற்ற கிரக சஞ்சாரத்தால், கெடுபலன் விலகி நற்பலன் கூடிவரும். நெல்லிக்காய் வாயில் போட்டதும் முதலில் துவர்க்கும். உமிழ்நீர் சேரும்போது இனிக்கும். சுவை மாறிவிடுவதில்லையா? ஆகவே விரயச்சனி சுபவிரயச்சனியாக மாறும். வீடு, நிலம், காலிமனை, வாகனம், சுபமங்கள காரியங்களுக்காகச் செய்யும் செலவு சுபவிரயம். வைத்தியம், கோர்ட்டு செலவு, போலீஸ் விவகாரம், தண்டம் தீர்வை, கடனுக்கான வட்டி ஆகியவை அசுபச்செலவு, வீண்விரயம். சனி சுபகிரகமான குரு வீட்டில் இருப்பதால் சுபவிரயம்தான் நடக்கும். வங்கியில் சேமிப்பு, சீட்டு முதலீடு, எல்.ஐ.ஸி பாலிஸி போன்ற வகையிலும் முதலீடு செய்யலாம். சிலர் ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் ஷேர் மார்க்கெட்டிங் தொழில்துறையில் முதலீடு செய்யலாம். ஏழரைச்சனியில் சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடந்தால்தான் ஏமாற்றமான விரயம், இழப்புகள் ஏற்படும். அதாவது உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்படலாம். அப்படியிருந்தால் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். ஒருமுறை சிவாலயத்தில் ருத்ர ஜெபப் பாராயணம், ஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகப் பூஜை செய்ய வேண்டும். மேற்படி பூஜை, ஹோமம் அவரவர் இருப்பிடத்தருகில் உள்ள சிவாலயங்களில் செய்யலாம். 4-ஆம் இடத்து அதிபதி செவ்வாய் ஜென்மத்தில் உச்சம் என்றாலும், கேது- ராகு சம்பந்தப்படுவதால் காரண காரியமில்லாத வைத்தியச்செலவுகள் ஏற்பட இடமுண்டு. வைத்திய சிகிச்சையும் அவசியம். பரிகார பூஜையும் அவசியம். 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பெரும் பாதிப்புக்கு இடமில்லை. ஒரு டாக்டர் வாயுத்தொல்லை வலியை நெஞ்சுவலி என்று ஆஞ்சியோகிராம் செய்யும்படிச் சொல்வார். இன்னொரு டாக்டர் (ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்) அதெல்லாம் வேண்டாம் என்று மாத்திரை மருந்திலேயே குணப்படுத்திவிடுவார்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 11-ல் ராசிக்கு 9-ல் வக்ரம். அத்துடன் கும்ப ராசியையும் பார்க்கிறார். 2, 11-க்குடையவர் திரிகோணம் பெற்று ராசியைப் பார்ப்பது ஒரு யோகம். அத்துடன் குரு பார்க்க கோடி நன்மை என்பதும் ஒரு நன்மை! எனவே மற்ற கிரகங்களின் கோட்சாரம் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை. 6-ல் ராகு, 12-ல் கேது. பாவ ஸ்தானங்களில் பாவ கிரகம் இருப்பது பாவ தோஷம் நிவர்த்தி என்பது பலன்! எனவே சமீபகாலமாக கிரகங்களின் கோட்சார சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவும் அனுகூலமாகவும் இருப்பதால் கும்ப ராசிக்காரர்களும் அல்லது கும்ப லக்னத்துக்காரர்களும் அனுதாபத்துக்குரியவர்கள் என்ற அவலநிலைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேர்தல் நேரத்தில் முக்கியமான தலைவர்கள் மறைந்தால் அந்த அனுதாப அலையே அந்தக் கட்சிக்கு வெற்றி அலையாக மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு வருவதுபோல உங்களுக்கும் அனுதாப அலை அதிர்ஷ்ட அலையாக மாறி ஆதாயமும் லாபமும் வெற்றியும் உண்டாகும்! ஊனமுற்றவர்களுக்கு (ஹேண்டிகிராப்ட்ஸ்) சலுகைகள் அதிகம் கிடைப்பதும் இந்த லாஜிக்தான்! ஆகவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுபோல இந்த வாய்ப்பை, கிரகங்களின் சஞ்சார யோகத்தை கும்ப ராசிக்காரர்களும் கும்ப லக்னத்தாரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்றும் சொல்லுவார்கள். தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்றார் ஏசு! ஆகவே உங்கள் விடாமுயற்சியினாலும் வைராக்கியத்தாலும் தன்னம்பிக்கை, தைரியத்தாலும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை இன்ப வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுவது உங்களிடம்தான் இருக்கிறது. காலம் உங்கள் கையில்!
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் எட்டில் மறைவது ஒரு வகையில் மட்டுமல்ல; பலவகையிலும் பாதிப்புதான். எந்த ஒரு ஜாதகத்திலும் ராசிநாதனோ லக்னநாதனோ 6, 8, 12-ல் மறையக்கூடாது. நீசமாக பலமிழக்கக்கூடாது. அதேபோல குருவும் பலம் இழக்கக்கூடாது. மறையக்கூடாது. குரு பார்வையும் கெட்டுப்போகக் கூடாது. அக்டோபர் வரை குரு ராசிக்கு 8-ல் மறைவாக இருப்பதால் நீங்கள் என்னதான் விசுவாசமாக, உண்மையாக, உறுதியாகப் பாடுபட்டாலும் பலன் கிடைப்பது கஷ்டம்! உங்கள் உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு நன்மையடைந்து உயர்ந்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல; உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள். வாங்கிய கடனை ரசீதும் கையெழுத்தும் இல்லாமல் திருப்பிக்கொடுத்தாலும் நீங்கள் கடனைத் தரவில்லை என்றுதான் உங்கள்மேல் வழக்குத் தொடுப்பார்கள். அதற்கு ஆதாரம் இருந்தால்தான் உங்கள் வாதம் செல்லும்; இல்லாவிட்டால் தோற்கும். தெளிவாகச் சொன்னால் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தாற்போல நீங்கள் கட்டிய வீட்டில்- நீங்கள் ஆரம்பித்த தொழிலில் நீங்கள் அமர்த்திய ஆட்களே உங்களை ஓரம்கட்டிவிட்டு அவர்கள் ஆட்சி செய்வார்கள். உங்கள் நிலை ஏமாந்த பிழைப்பாகிவிடும்! வெறும் ரோஷப்பட்டு பயனில்லை. காரியம் பெரிதா வீரியம் பெரிதா? கிரகங்கள் சாதகமாக இருந்தால்முட்டாளும் அறிவாளியாகிவிடுவான்! கிரகங்கள் அனுகூலமாக அமையாவிட்டால் அறிவாளியும் முட்டாள் ஆகிவிடுவான். ஒரு முட்டாள் கடலில் எறிந்த ஒரு கல்லை, ஆயிரம் அறிவாளி சேர்ந்தாலும் எடுக்க முடியாது. குரு மறைந்த பலன்- இப்போது நீங்கள் ஐ.சி. யூனிட்டில் இருப்பதற்குச் சமம். உயிருக்கு ஆபத்து வராது. ஆனால் ஆக்ஸிஜன் பொருத்தி காப்பாற்றுவதற்குச் சமம். ஜாதக தசாபுக்தி பாதகமாக உள்ளவர்களுக்கே மேற்சொன்ன பலன். தசாபுக்தி நன்றாக இருந்தால் பெரிதாக பாதிக்காது.