ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

அஸ்வினி- 1-ல் சூரியன்.

உத்திரட்டாதி- 1-ல் சந்திரன்.

பூராடம்- 3-ல் செவ்வாய்.

உத்திரட்டாதி- 1-ல் புதன்.

விசாகம்- 3-ல் குரு(வ).

பரணி- 3-ல் சுக்கிரன்.

மூலம்- 3-ல் சனி.

பூசம்- 4-ல் ராகு.

திருவோணம்- 2-ல் கேது.

(இந்த வார ராசிபலனை தமிழ்ப்புத்தாண்டு விளம்பி வருடப் பலனாக எழுதியுள்ளேன்- ஜோதிடபானு)

Advertisment

விளம்பி வருடம் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி சனிக்கிழமை (14-4-2018) காலை 6.58 மணியளவில் உதயாதி நாழிகை 2.18-க்கு உதயமாகிறது. மேஷ லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, தேய்பிறை திரயோதசி திதி.

விளம்பி வருடப் பாடல்விளம்பி வருடம் விளைவு கொஞ்சம் மாரிஅளந்து பொழியும் அரசர் களங்கமுடன்நோவான் மெலிவரே நோக்கரிதாகும் கொடுமைஆவா புகலரிதாம். (இடைக்காடர்)

இதன்பலன்: விளம்பி வருடத்தில் பயிர்களின் விளைச்சல் குறைவாக இருக்கும். மழையின் அளவு குறைந்து தேவைக்கேற்ற காலங்களில் பொழியும். நாட்டை ஆளும் அமைச்சர்களுக்கு களங்கம் ஏற்படும். பொதுமக்களைப் புதுப்புது நோய்கள், பலவிதமான நோய்கள் தாக்கும். இதனால் மக்கள் உடல் மெலிந்து உயிர்ப்பலிகள் ஏற்படும். எதிர்பாராத விதமான கொடுமைகளால் மக்கள் துன்பமடைவார்கள்.

விளம்பி வருட- நவநாயகர்களும் பலன்களும்

Advertisment

1. ராஜா- சூரியன்- நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும். தட்ப வெப்ப நிலைகள் உயரும். தீவிபத்துக்கள் அதிகரிக்கும்.

2. மந்திரி- சனி- மழையின் அளவு குறைந்து புதுவிதமான நோய்கள் உண்டாகும். வாகன விபத்துகளும் உயிர்ப்பலிகளும் அதிகம் ஏற்படும்.

3. அர்க்காதிபதி- சுக்கிரன்- பயிர்கள் விளைச்சல் அதிகரிக்கும். புதிய வகை ஆடை, ஆபரணங்களின் வியாபாரம் ஓங்கும்.

Advertisment

4. மேகாதிபதி- சுக்கிரன்- பால் உற்பத்தி அதிகரிக்கும். பால் பண்டங்கள் விற்பனை அதிகரிக்கும். கலைஞர்கள் பாராட்டப்படுவர். சினிமா, நாடகம், கலைத்தொழில் பிரகாசிக்கும்.

5. ஸஸ்யாதிபதி- செவ்வாய்- புன்செய் பயிர்கள் அதிகம் விளையும் என்றாலும் வனப்பகுதி பயிர்கள் தீயினால் அழியும்.

6. சேனாதிபதி- சுக்கிரன்- நாட்டின் எல்லைப் பகுதிகளில் போர்ப் பதற்றம் ஏற்படும். வெள்ளை தானிய விளைச்சல் அதிகரிக்கும்.

7. இரஸாதிபதி- குரு- கரும்பு போன்ற திரவ- திடப்பயிர்கள் நல்ல விளைச்சல் காணும். இனிப்பு வகைகள் பெருகும். திரவப்பொருள் விலை குறையும்.

8. தான்யாதிபதி- சூரியன்- மழைக்குறைவினால் கோடையில் வறட்சி ஏற்படும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும். சிவப்புநிறப் பயிர்கள் அதிகம் விளையும்.

9. நீரஸாதிபதி- சந்திரன்- முத்து, நவரத்தினங்கள் விலை குறையும். வெள்ளி விலை அதிகரிக்கும்.

குரு, ராகு- கேது பெயர்ச்சி

புரட்டாசி- 18 (4-10-2018) வியாழன் இரவு 10.00 மணியளவில் விசாகம் 4-ல், விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி.

மாசி- 29 (13-3-2019) திங்கள் மாலை 5.38 மணியளவில் மூலம்- 1-ல் தனுசு ராசியில் குரு அதிசாரம்.

மாசி-1 (13-2-2019) புதன் பகல் 1.25 மணிக்கு புனர்பூசம் 3-ல் மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சி. மேற்கண்ட நாளில் அதேநேரம் உத்திராடம் 1-ல் தனுசு ராசிக்கு கேது பெயர்ச்சி.

சந்திர கிரகணம்

விளம்பி வருடத்தில் இரண்டு சந்திர கிரகணம் தோன்றும். அதில் ஒன்று மட்டும் இந்தியாவில் தெரியும். மற்றொன்று தெரியாது.

விளம்பி வருடம், ஆடி மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (27-7-2018) பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம்- 4-ஆம் பாதம்- மகர ராசி- மேஷ லக்னத்தில் இரவு 11.54 மணிக்கு ஆரம்பம்; பின்னிரவு 3.49 மணிக்கு முடியும். இது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தெரியும்.

பரிகாரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம், பூராடம், திருவோணம், ரோகிணி, அஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்திப் பரிகாரம் செய்துகொள்ளவும்.

விளம்பி வருடம், தை மாதம் 7-ஆம் தேதி (21-1-2019), திங்கட்கிழமை, பௌர்ணமி திதி, பூச நட்சத்திரத்தில் இரவு சந்திர கிரகணம் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டில் தெரியாது. எனவே பரிகாரம் தேவையில்லை.

சூரிய கிரகணம்

இவ்வருடம் மூன்று சூரிய கிரகணம் சம்பவிக்கும். ஆனி மாதம் 29-ஆம் தேதி (13-7-2018) வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி, புனர்பூச நட்சத்திரம்.

ஆடி மாதம் 26-ஆம் தேதி (11-8-2018) சனிக்கிழமை அமாவாசை திதி, ஆயில்ய நட்சத்திரம்.

மார்கழி மாதம் 22-ஆம் தேதி (8-1-2019) ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி, பூராட நட்சத்திரம்.

இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தெரியாது. எனவே சாந்திப் பரிகாரம் தேவையில்லை.

பொதுப்பலன்

ஆட்சியாளர்களிடையே குழப்பம் ஏற்படும். தேர்தலில் புதிய மந்திரி சபை புதிய தலைமையின்கீழ் பதவி ஏற்கும். பலவிதமான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும். அண்டை நாட்டினரால் எல்லைப்பகுதியில் தொல்லைகள் உண்டாகும். நமது ராணுவமும் பதிலடி கொடுக்கும். போலி ஆன்மிகவாதிகளும் வேஷதாரிகளும் மக்களை குழப்பமடையச் செய்வார்கள். மக்களிடம் பணப்புழக்கம் குறையும். சாமான்ய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகலாம். நதிநீர்ப் பிரச்சினை எந்தத் தீர்வுக்கும் வராமல் மதில்மேல் பூனையாக அமையும். கல்வித்துறையில் பல மாற்றங்கள் உருவாகும். ஊழல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிக்குவார்கள் என்றாலும், எந்த நடவடிக்கையும் பயன்படாமல் கிணற்றில் போட்ட கல்லைப்போல கிடக்கும். கலைத்துறையினர் மேன்மையடைவர். புதுப்புதுக்கலைஞர்கள் திரையுலகில் மின்னிப்புகழ் அடைவார்கள். புதிய நவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். புதிய வகை விமானங்கள் வாங்கப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். கல்வித்துறையில் சீர்திருத்தம் உண்டாகும். கல்வித்தரம் மேம்படுத்தப்படும். உணவு உற்பத்தி பெருகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும். வானவில்- வால்நட்சத்திரம் தோன்றும். அயல்நாடுகளில் பூகம்பம், நிலநடுக்கம், பெரும் தீவிபத்து போன்றவை உண்டாகலாம். கல்வித்துறையில் மாணவர்களைவிட மாணவிகள் பெருமளவில் முதலிடம் வகிப்பார்கள். ராணுவத்துறையின் பலம் அதிகரிக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படும். மத்திய- மாநில அரசுகளிடையே பிரச்சினைகள் அதிகரிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி பலமிழந்து எதிர்க்கட்சிகள் பலம்பெறும்.

வருட லக்னாதிபதி செவ்வாயும் பாதகா திபதி சனியும் பாக்கிய ஸ்தானத்தில் சேர்ந்திருப்பதால் தொழிலதிபர்களுக்கு (சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு) அரசு அதிகாரிகளினால் தொல்லைகளும் வரிவசூல் அல்லது லஞ்ச லாவண்யமும் அதிகமாக ஏற்படும்.

அதேசமயம் அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 7-ல் வக்ரம் பெற்று, லக்னத்தைப் பார்ப்பதால், ஆன்மிக வழிபாடுகளும், கோவில் கும்பாபிஷேகங்களுக்கு பக்திப் பிரார்த்தனைகள் மேன்மையும் உண்டாகும்.

சனி, செவ்வாய் சேர்க்கையால் தீவிபத்துகளும் மின்கசிவு விபத்துகளும் அதிகமாகும். குறிப்பாக- கோவில் தலங்கள், பள்ளிகளில் சேதம் ஏற்பட இடமுண்டு. வித்யாகாரகன் புதன் நீசம்- மறைவு என்பதால் கல்வி ஸ்தாபனங்களில்- கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் அதிகபட்ச வசூலும் மக்களை வதைக்கும் பணத்திட்டங்களும் காணப்படும். சாதாரணமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிப்புக்கே லட்சக்கணக்கில் செலவிடும் சூழ்நிலை உண்டாகும். அரசும் நிர்வாகமும் இதற்கு முறையான சட்டதிட்டங்களை வகுக்காமல் ஏனோதானோ என்று மெத்தனமாக இருக்கும்.

பாக்கிய விரயாதிபதி குரு வக்ரம் பெறுவதால் வங்கிகளில் மோசடி அதிகபட்சமாகும். ஊழல்வாதிகள் தலைமறைவாகலாம். ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவப்பெயர் எடுக்கலாம். குரு சுக்கிரன் வீட்டில் நிற்க- அதற்கு ஏழில் சுக்கிரனும் நிற்பதால் காதல் தோல்விகளும் விவாகரத்துகளும் அதிகமாகும். கலைத்துறையினர் அரசியலில் தீவிரமாக இறங்கி ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகள் தீவிரமாகும். மக்களும் அதிகபட்ச ஆதரவு தரலாம். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மணல் தட்டுப்பாடு நீங்கும். கட்டடத்தொழில்கள் வளர்ச்சியடையும். பணத்தட்டுப்பாடு காணப்பட்டாலும் புதுப்புது கட்டடங்கள் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கும் ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கும் சவால்களும் "ஈகோ' பிரச்சினைகளும் அதிகரிக்கும். வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள், பொன், வைரம் விலை உயரும். சலுகைகள் அறிவிப்பு வந்தாலும் மக்களுக்கு வாங்கும் சக்தி குறையும். ஆடம்பர வாகனங்கள் உற்பத்தி அதிகரிக்கும். விலைச் சலுகைகளும் எளிய தவணைமுறைகளும் அதிகமாகும். உணவு விடுதிகளில் விற்பனை அதிகம் இருந்தாலும் லாபம் குறைவாக இருக்கும். வேலையாட்கள் பிரச்சினை இருக்கும்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ லக்னத்தில்தான் தமிழ் வருடம் பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாயும் தொழில் ஸ்தானாதிபதி சனியும் 9-ல் இணைந்து, அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும், ராசியில் சூரியனும் சுக்கிரனும் சேர்வதும் உங்களுக்கு ராஜயோகம் உண்டாகும். தர்மகர்மாதிபதி யோகமும் அமைகிறது. எனவே தொழில் வளர்ச்சி மேலோங்கும். அடிமையாக சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் சொந்தத் தொழிலதிபர்களாக மாறலாம். கூட்டுத் தொழிலும் ஆரம்பிக்கலாம். படித்து முடித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பும் சம்பள உயர்வும் அமையும். 10, 11-க்குடையவர் 9-ல் இருப்பதால் உங்கள் முயற்சிகளும் திட்டங்களும் 100-க்கு 100 வெற்றியடையும். ஜாதகரீதியாக தசாபுக்திகள் பாதகமாக நடந்தாலும் சில தடை, தாமதங்கள் காணப்பட்டாலும்கூட முடிவில் வெற்றிவாய்ப்பு நிச்சயம். தோல்விக்கு இடமில்லை. 3, 6-க்குடைய புதன் 12-ல் மறைவு- நீசம் என்பதால் கடன்கள் கட்டுக்கடங்கிக் காணப்படும். போட்டி, பொறாமைகள், எதிரிகள், இடையூறுகள் எல்லாம் பொடிப்பொடியாக சிதறி ஓடும். நோய் நொடிகள், வைத்தியச்செலவுகளையும் டாட்டா காட்டி வழியனுப்பிவிடலாம். அதேபோல தொல்லைகள் கொடுத்த உடன்பிறப்புகளும் நல்லவர்களாக மாறி ஒத்துழைப்பு நல்குவார்கள். பங்காளிப்பகை விலகியோடும். எல்லாரும் இனிதாக ஒன்றுகூடி குலதெய்வ வழிபாட்டை மனம்போல சீரும் சிறப்பாக செயல்படுத்தலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் மேஷ ராசிக்காரர்கள் சிலரின் குலதெய்வ அருள் இறங்கிப் பேசும் சூழ்நிலை ஏற்படும். மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தாருக்கும் இது பொருந்தும். ஜோதிடம், வைத்தியம், அருள்வாக்கு, கோவில் பூஜை போன்ற ஆன்மிகத்தில் ஈடுபடலாம். தலைமைப் பொறுப்பேற்று வசூல் செய்து கோவில் திருப்பணி செய்யலாம். திருமணத்தடை விலகும். வாரிசு யோகம் தழைக்கும். ஆரோக்கியம் பெருகும். பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தமான யோகம் அமையும். அதற்காக சுபக்கடனும் வாங்கலாம்.

பரிகாரம்: ஈரோடு- தாராபுரம் சாலையில் சென்னிமலை சென்று முருகனை வழிபடவும். முருகனைச் சுற்றி நவகிரகங்களும் தேவகோஷ்டங்களில் அமர்ந்து அருள்புரிகிறார்கள்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் மறைந்தாலும், பரணி 3-ல் தன் சுயசாரத்தில் நவாம்சத்தில் துலாத்தில் ஆட்சி பெறுகிறார். மேலும் 6-ல் குரு அமர்ந்து சுக்கிரனைப் பார்க்கிறார். அத்துடன் ராசிக்கு 2-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கிறார். வருட லக்னமே உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில்தான் உதயம். அதனால் திருமணத்தடை விலகும். புத்திர தோஷம் நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். வேலை இல்லாதோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நிறைவேறும். சுபச்செலவுகள் உண்டாகும். தொழில் முதலீடு (இன்வெஸ்ட்மென்ட்), சிலருக்கு ஆன்மிகச் சுற்றுலாப் பயணம், சிலருக்கு உல்லாசப் பயணம், சிலருக்கு ஊட்டி, கொடைக்கானல், டார்ஜிலிங் போன்ற குளுகுளு ஸ்தல யாதிரை, சிலருக்கு காசி, ராமேஸ்வரம், கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத் போன்ற புனித யாத்த்திரை ஆகிய வகையிலும் சுபச்செலவு ஏற்படலாம். நீண்டகாலத் திட்டமான சீரடி பாபா தரிசனம் கிட்டும். 6-ல் உள்ள குரு இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்காக கடன் வாங்கச் செய்வார். அல்லது தீபாவளி பண்டுமாதிரி யாத்ரா பண்டும் சிறுசேமிப்பும் சேர்க்கலாம். தமிழ் வருடப்பிறப்பு சனிக்கிழமை ஏற்படுகிறது. ராசிநாதன் சுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதோடு ரிஷப ராசிக்கு சனி பகவான் ராஜயோகம் செய்யும் கிரகம். அவர் 8-ல் அமர்ந்து 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத தனப்ராப்தி யோகமும் அமையும். மலேசியா, சிங்கப்பூர் மாதிரி வெளிநாடுகளிலும் கேரளா மாதிரி வெளி மாநிலங்களிலும் நடத்தப்படும் லாட்டரி சீட்டுகளிலும் முதலீடு செய்யலாம். திடீர் தனப்ராப்தி யோகமும் உண்டாகும். 8-க்குடையவரும் 11-க்குடையவரும் 6-ல் வக்ரமாகி 2-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்ப்பது விபரீத ராஜயோகமாகும். சொன்னதைச் செய்வீர்கள். செய்வதைத்தான் சொல்வீர்கள். ஒரு கல்யாணத்தில் பிரிந்த குடும்பம் இன்னொரு கல்யாணத்தில் ஒன்று சேருவதுபோல, ஆரம்பத்தில் அட்டமச்சனியில் பிரிந்தவர்கள் அட்டமச்சனி முடிவிற்குள் இணைந்துவிடலாம். குருவின் வக்ரகதியில் தொழில்துறையில் ஏற்பட்ட இழப்புகளைச் சரிக்கட்டலாம். ஈடு செய்யலாம். 4-10-2018-ல் 6-ஆம் இடத்து குருவும் 7-ஆம் இடத்துக்கு மாறி ராசியைப் பார்க்கும் காலம் அரசியல் பதவிகள், கௌரவப் பதவிகள், திருப்பணிக்குழுத் தலைமைப் பொறுப்பு ஆகிய செல்வாக்கு ஏற்படும்.

பரிகாரம்: திருச்சி டோல்கேட் அருகில் உத்தமர்கோவில் சென்று (சப்தகுரு ஸ்தலம்) வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் வருடத் தொடக்கத்தில் 10-ல் நீசம் அடைவார். 5-ல் உள்ள வக்ர குரு மிதுன ராசியைப் பார்ப்பதோடு, ராசிநாதன் புதன் குரு வீட்டில் இருக்கிறார். குரு 7, 10-க்குடையவர். திருமணம் நிறைவேறும். புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மனைவி அல்லது கணவன்மார்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அல்லது சொந்தத் தொழில் யோகம் அமையும். 7-ல் செவ்வாய்- சனி சேர்க்கை. சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க யோகம் உண்டு. பொதுவாக செவ்வாய்- சனி சம்பந்தம் இருந்தால் பெண்களுக்கு 27 வயதுக்குமேல், ஆண்களுக்கு 30 வயதுக்குமேல் திருமணம் முடித்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கு முந்தி செயல்பட்டால் சாதம் அரைவேக்காடு ஆனதுபோல வாழ்க்கையில் பிரிவு, முறிவு ஏற்பட இடமுண்டு. ஜாதக கிரக அமைப்புக்கேற்ற மாதிரி ஹோமப் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். 8, 9-க்குடைய சனியின் கிழமையில் வருடப்பிறப்பு என்பதால் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த மாற்றங்கள் சொந்த வாழ்க்கையின் சுகமான மாற்றங்களாக அமையும் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கால இன்ப ரகசியம் இப்போது புரியாது- தெரியாது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். எல்லாம் நன்மைக்கே என்று திருப்தியடையுங்கள். நல்லதும் கெட்டதும் நமது சிற்றறிவுக்கு எட்டாது. இறைவனே உணருவான். இறைவனை நம்புகிறவர்களுக்கு அவன் பாதுகாப்பாக இருந்து வழிநடத்துவான். தந்தை- பங்காளி வகையில் உள்ள பிரச்சினைகள் அகலும், விரிசல்கள் விலகும். புதிய வாகனம் வாங்கலாம். இரு சக்கர வாகனம்(டூவீலர்) வாங்கலாம். உடன்பிறந்தோர் வகையில் நடக்கும் சுபகாரியங்களில் உங்களுக்கு முக்கியத்துவம் உண்டாகும். 29-4-2018 வரை, பிறகு 20-3-2019 முதல் 13-4-2019 வரை செவ்வாய், சனி சேர்க்கை, பார்வைக் காலங்களில் முன்கவனமாக நடந்துகொள்ளவும்.

பரிகாரம்: திருவெண்காடு சென்று ஸ்வேதாரண்யேஸ்வரர்- பிரம்மவித்யாம்பிகையை வழிபடவும். பிரம்மனின் சமாதி இங்குள்ளது. அகோர மூர்த்தி சந்நிதி மிகச்சிறப்பு. புதனுக்கு தனிச்சந்நிதியும் உள்ளது.

murugan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

விளம்பி வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராசிநாதன் சந்திரன் 3, 12-க்குடைய புதனுடன் இணைந்து 9-ல் இருக்கிறார். புதன் நீசபங்க ராஜயோகமடைகிறார். 8-க்குடைய சனி 6-ல் மறைவது விபரீத ராஜயோகம். அவருடன் வருட லக்னாதிபதியும் ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாயும் இணைவு. எல்லா வகையிலும் யோகம்தான். மக்கள் வழியிலும் வேலை, தொழில், உத்தியோக வழியிலும் திருப்தியான பலன்களை எதிர்பார்க்கலாம். போட்டி, பொறாமை விலகும். கடன் நிவர்த்தியாகும். நோய் நொடி நிவாரணமாகும். நீண்டநாள் பகைவர்கள் நேசக்கரம் நீட்டி நெருங்கி வந்து கைகொடுக்கலாம் நீங்களும் மறப்போம் மன்னிப்போம் என்று ஏற்றுக்கொள்ளலாம். 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை என்றாலும் கையிருப்பு காலியான பிறகே அடுத்த வரவுக்கு இடமுண்டாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யமும் அன்பும் நிலவும். சிலருடைய அமைப்பில் உங்கள் வருமானப் பற்றாக்குறையை வாழ்க்கைத்துணையின் வருமானம் சரிக்கட்டிவிடும். தேவைகளை நிறைவேற்றிவிடலாம். இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டு யோகம் போன்றவை உங்கள் எண்ணம்போல் நடக்க வாய்ப்புண்டு. வி.ஐ.பிக்களின் ஆதரவும் பெரிய மனிதர்களின் உதவியும் அனுகூலமாக அமையம்.

பரிகாரம்: திருவாரூர்- கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகில் தேவூர் சென்று வழிபடவும். குபேரன் இழந்த பதவி, செல்வங்களைப் பெற்ற தலம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் தமிழ் வருடம் (மேஷ லக்னம்) பிறக்கிறது. ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம். அவருடன் 10-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. அவர்களுக்கு 5-க்குடைய குரு பார்வை. கடமையே கண்ணாகக் கருதி செயல்படும் உங்களை 5-ல் உள்ள செவ்வாய், சனி சேர்க்கை பாதிக்காது. ஒருசிலருக்குத் திருமணத்தடை, தாமதம் அல்லது வாரிசுத் தடை ஏற்படலாம். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களை வழிநடத்தும். லாப ஸ்தானத்தை வக்ர குரு பார்ப்பதால் பணத்தட்டுப்பாட்டுக்கு இடமிருக்காது. தேவையான நேரத்தில் தேவைக்கேற்ற வரவு- செலவுகள் செயல்படுவதால் பண நெருக்கடிக்கு இடமிருக்காது. விளம்பி வருடத்தில் நீங்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் உங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். பாராட்டும் பயனும் அடையலாம். சங்கடமான சூழ்நிலைகள் மாறி இங்கிதமான சூழ்நிலை ஏற்படும். 7-ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் வருடப் பிற்பகுதியில் திருமணத்தடை விலகும். வாரிசு யோகம் உண்டாகும். குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள் உங்களுக்கு அனுகூலமான நற்பலன்களை உருவாக்கும். கூட்டுத்தொழில் செய்கிறவர்களுக்கு எதிர்பாராத லாபமும் சேமிப்பும் ஏற்படும். தனித்தொழில் புரிகிறவர்களுக்கு முன்னேற்றமான திருப்பங்கள் ஏற்படும். குடும்பச் சூழ்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும் உங்கள் பொறுமையால் அவற்றைச் சமாளிக்க வேண்டும்.

பரிகாரம்: சென்னை அருகில் பஞ்சேஷ்டி சென்று வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 7-ஆவது ராசியிலும் 8-ஆவது லக்னத்திலும் தமிழ்ப் புது வருடம் பிறக்கிறது. 4, 7-க்குடைய குரு 2-ல் வக்ரமாக இருக்கிறார். ராசிநாதன் புதன் 7-ல் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். சித்திரை வருடப் பிறப்பு, 5, 6-க்குடைய சனிக்கிழமையில் பிறக்கிறது. என்றாலும் குரு வீட்டில் சனி நின்று ராசியைப் பார்ப்பதால், வருட லக்னாதிபதி செவ்வாயோடு சேர்ந்திருப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. எந்தச் செயலைத் தொட்டாலும் ஏனோ தானோ என்றில்லாமல் முழு அக்கறையோடும் தீவிர ஆர்வத்தோடும் செயல்பட வேண்டும். கிரகங்களின் அனுகூலம் இல்லாவிட்டாலும் வள்ளுவர் சொன்னதுபோல் உங்கள் முயற்சி திருவினையாக்கும். 2, 9-க்குடைய சுக்கிரனும், 12-க்குடைய சூரியனும் 8-ல் மறைவதால் தொழில் மாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்றவற்றுக்கு இடமேற்படும். தொழில்துறையில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்ட மாற்று முயற்சியில் ஈடுபடலாம். உத்தியோகம், வேலையில் திருப்தியில்லாதவர்கள் வேறு வேலைகளுக்குப் போகலாம். வெளிநாட்டு வேலைக்கும் போகலாம். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவலங்கள் அதிகமாகும். பதவி உயர்வு தடைப்படும். வேலைப்பளு அதிகமாகும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்: தொழில்துறை சிக்கல் விலக சேலம்- மேட்டூர் பாதையில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

உங்கள் ராசிக்கு 6-ஆவது ராசியிலும் (மீன ராசி), 7-ஆவது லக்னத்திலும் (மேஷ லக்னம்) தமிழ் விளம்பி வருடம் பிறக்கிறது. 4-ல் கேதுவும் 10-ல் ராகுவும் இருப்பதால் சிலருக்கு ஆரோக்கியக்குறைவும் சிலருக்குத் தொழில்துறைக் குழப்பமும் ஏற்படலாம். என்றாலும் வருட லக்னாதிபதி செவ்வாய் குரு வீட்டில் நின்று தொழில் ஸ்தானம் கடகத்தைப் பார்ப்பதால் மலைபோல வரும் துன்பம் பனிபோல விலகிவிடும். ராசியில் உள்ள குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் (9-ஆம் இடம்) குலதெய்வ கிருபை பரிபூரணமாகக் கிடைப்பதோடு குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். சுகஸ்தானாதிபதி சனி துலா ராசிக்கு ராஜயோகாதிபதி ஆவார். அவர் 3-ல் பலம் பெற்று (3, 6, 11- சனிக்கு அற்புதமான இடங்கள்) 5, 9, 12-ஆமிடங்களைப் பார்ப்பதால் உங்கள் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். திட்டங்கள் திட்டமிட்டபடி செயல்படும். 29-4-2018 வரை தனுசு ராசியில் செவ்வாய்- சனி சேர்க்கை. அதன்பிறகு 20-3-2019 முதல் 13-4-2019 வரை செவ்வாய் சனி- பார்வை ஏற்படும் காலங்களில் "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்றில்லாமல் சிந்தித்து செயல்படவேண்டும். நல்லவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க வேண்டும். நல்லநேரம் வருகிறபோது கெட்டவர்களும் நல்லவர்களாக ஒட்டிக்கொள்வார்கள். கெட்ட நேரம் வரும்போது நல்லவர்களும் நம்மைவிட்டு விலகிப் போவார்கள்.

பரிகாரம்: கும்பகோணம்- நாச்சியார்கோவில்- பூந்தோட்டம் செல்லும் வழியில் கூந்தலூர் கிராமத்தில் முருகன்கோவில் உள்ளது. அங்கு சென்று வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் விருச்சிக ராசிக்கு 5-ஆவது ராசியில் (மீனம்), 6-ஆவது லக்னத்தில் (மேஷம்) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. 6-ஆவது லக்னமாக இருந்தாலும் உங்கள் ராசிநாதன் செவ்வாயே தமிழ் வருட லக்னாதிபதியாக அமைவதால் எல்லா வகையிலும் நல்லதாகவே நடக்கும். எண்ணம், திட்டம், செயல் எல்லாம் சிறப்பாக அமையும். புரட்டாசி மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு காலவிரயமும் பணவிரயமும் மாறும். அப்போது வருட ராசிநாதன் குரு உங்கள் ராசியில் அமர்ந்து 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கப் போவதால் விரய குருவின் வேதனைகள் விலகும். சோதனைகள் அகலும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு உயரும். அதன்பிறகுதான் ஏழரைச்சனியின் (பாதச்சனி) பாதிப்பும் குறையும். அதுவரை பழகிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்றபிள்ளைகள், சம்பந்தக்காரர்கள், உற்றார்- உறவினர்கள் எல்லா வகையிலும் ஈகோ உணர்வு ஏற்பட்டு டென்ஷன் அடைவீர்கள். காரண காரியமில்லாமல் வருத்தங்களையும் சந்திப்பீர்கள். உங்கள் 6-ஆவது லக்னத்தில் தமிழ் வருடப் பிறப்பின் பலன் இதுதான். அத்துடன் "வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும்' என்பதால் எல்லாரிடமும் நிதானமாகப் பேசவேண்டும். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் என்பதைச் சிந்தித்துப் பேசவும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் சூரியனார்கோவில்வழி திருவிசநல்லூர் இருக்கிறது. அங்குள்ள சிவன்கோவிலில் சதுர்யுக பைரவர் சந்நிதி இருக்கிறது. அங்கு சனிக்கிழமை சென்று வழிபட வேண்டும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு 4-ஆவது ராசியிலும் (மீன ராசி), 5-ஆவது லக்னத்திலும் (மேஷம்) தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் வருடம் குருவின் ராசியில் பிறப்பதோடு வருட லக்னத்தை குரு பார்க்கிறார். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருடம் பிறப்பதாலும், சனிக்கிழமை பிறப்பதாலும் சனி பகவான் உங்களுக்கு நடக்கும் ஜென்மச்சனியை பொங்கு சனியாக மாற்றிவிடுவார். சொந்த வீடு, ஆரோக்கியம், சொந்த வாகனம், மன நிறைவு, மகிழ்ச்சி போன்ற நன்மைகளை எல்லாம் விளம்பி வருடம் நிறைவேற்றி வைக்கும். சிலர் ஒரு சொத்தைக் கொடுத்து இன்னொரு சொத்தை வாங்கலாம். அல்லது காலிமனையை விற்று வீடு வாங்கலாம். 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் காரணமில்லாத கற்பனைக் கவலைகள் ஏற்படலாம். என்றாலும் குரு 11-ல் இருப்பதால், 11-க்குடைய சுக்கிரன் 5-ல் நின்று குரு பார்வையைப் பெறுவதால் கற்பனைக்கவலைகளை உதறித்தள்ளிவிட்டு நம்பிக்கை தளராமல் செயல்படுங்கள்; பாடுபடுங்கள். சனி பகவான் எந்தச் சுற்றாக இருந்தாலும் இந்த வருடம் உங்களுக்கு பொங்கு சனியாக விளங்கி பூரிப்பை ஏற்படுத்துவார். பஞ்சம ஸ்தானத்தில் 9-க்குடையவர் உச்சம் பெறுகிறார். நெஞ்சம் நிறைந்த சம்பவங்கள் நிகழும்; மனம் மகிழ்ச்சி பெறும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். வரவேண்டிய பாக்கிசாக்கி பணம் வசூலாகும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

விளம்பி வருட லக்னாதிபதி செவ்வாய் உங்கள் ராசிநாதன் சனியோடு சேர்ந்திருக்கிறார். அவர்களுக்கு வீடு கொடுத்தவர் 10-ஆமிடத்தில் வக்ரமாக இருக்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. பாதிப்புகளுக்கு இடமில்லை என்றாலும் தவிர்க்கமுடியாத விரயங்களும் செலவுகளும் காணப்படும். ஜென்ம கேது, சப்தம ராகு. நீங்கள் நல்லவர்தான்- வல்லவர்தான் என்றாலும் கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளுமே உங்களைப் புரிந்து கொள்ளாத நிலையில் மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பணமா, பாசமா என்ற போராட்டத்தில் சில சமயம் சிக்கித் தவிப்பீர்கள். உங்கள் ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் பந்த பாசப் போராட்டத்தில் ஜெயிக்கலாம். புரட்டாசி மாதம் குருப்பெயர்ச்சி வரை எல்லா விஷயத்திலும் எதிர்நீச்சல் அடிக்க வேண்டிய நிலை. மாசி மாதத்தில் ராகு- கேது பெயர்ச்சி வரை இந்த கௌரவப் போராட்டம் நீடித்தாலும் புரட்டாசியில் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இதன் வேகம் தணியும். இந்த வருடம் முழுவதும் சனிப்பெயர்ச்சி ஆகவில்லை. மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். திருமணம், வாரிசு, கணவன்- மனைவி ஒற்றுமை, வாழ்க்கை முன்னேற்றம் எல்லாம் எதிர்பார்க்கலாம். வழிபாட்டின் மூலமாகவே கிரகக்கெடுதல்களை விலக்கி வளம் பெறலாம். நலம் பெறலாம்.

பரிகாரம்: திருப்பதி அருகில் காளஹஸ்திக்குப் போகலாம் அல்லது உத்தமபாளையம் தென்காளஹஸ்திக்குப் போகலாம். திருநெல்வேலி அருகில் ராஜபதியும் செல்லலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு 2-ஆவது ராசி மீன ராசியிலும், 3-ஆவது லக்னம் மேஷத்திலும் தமிழ்ப் புத்தாண்டு விளம்பி வருடம் பிறக்கிறது. 2-ல் சந்திரனும் புதனும் சேர்க்கை. 5, 8-க்குடைய புதனோடு 6-க்குடைய சந்திரன் சேர்ந்திருப்பது விபரீத ராஜயோகம். புரட்டாசி மாதம்வரை குரு ராசிக்கு 9-லும் பிறகு ராசிக்கு 10-லும் சஞ்சாரம். புரட்டாசி வரை துலா குரு வருட லக்னத்தைப் பார்க்கிறார். பிறகு விருச்சிக குரு மீன ராசியைப் பார்ப்பார். சித்திரை வருடப் பிறப்பு சனிக்கிழமையிலும் சனியின் நட்சத்திரத்திலும் பிறப்பதால், தடைகளைச் சந்தித்தாலும் குறுக்கீடுகள் இருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பீர்கள். எடுத்துக் கொண்ட லட்சியத்தில் வைராக்கியமாக இருப்பீர்கள். அதனால் உங்கள் முயற்சிகளிலும் திட்டங்களிலும் முழுவெற்றி பெறலாம். 6-ல் ராகு, 12-ல் கேது. சத்ருஜெயம். போட்டி, பொறாமைகளை விலக்கி ஜெயிக்கலாம். வீண் விரயங்கள் மாறி பயனுள்ள சுப விரயங்களாக மாறும். குரு வக்ர காலத்திலும் சனியின் வக்ர காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் 11-ஆம் இடத்துச் சனி ராசியைப் பார்ப்பதால் எல்லாவற்றையும் எளிதாகச் சமாளிக்கலாம். சகோதர ஒற்றுமையும் சகாயமும் எதிர்பார்க்கலாம். பங்காளிப்பகை மாறும். பூர்வீக சொத்துகளில் உடன்பாடும் நன்மையும் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: திருவாரூர் சென்று மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசியில்தான் தமிழ்ப் புது வருடம் பிறக்கிறது. உத்திரட்டாதி நட்சத்திரம், சனிக்கிழமை. சனி பகவான் ராசிக்கு 10-ல் திக்பலம் பெறுகிறார். மேஷ லக்னத்தில் தமிழ் வருடம் பிறக்கிறது. அந்த லக்னத்தை வருட ராசிநாதன் குரு பார்க்கிறார். சனி பகவானும் குருவின் ராசியில் இருக்கிறார். தமிழ்வருட லக்னாதிபதி செவ்வாயோடு சேர்ந்திருக்கிறார். எனவே, இந்த வருடம் முழுமையும் உங்களுக்கு யோகமான வருடம். ராசிநாதன் குரு 8-ல் மறைந்தாலும் சுயசாரம் பெறுவதால் (விசாகம்) மறைவு தோஷம் விலகும். புரட்டாசி மாதம் குருப்பெயர்ச்சி. 9-ஆம் இடத்துக்கு மாறும் குரு உங்கள் ராசியைப் பார்க்கப்போகிறார். அக்காலம் உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும். திட்டங்கள் வெற்றியாகும். அதுவரை உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் சட்டசபையில் மசோதா அமைப்பில் இருக்கும். மசோதா நிறைவேறிய பிறகு கவர்னரின் கையெழுத்துக்குப் பிறகு அவை சட்டமாகும். அதேபோல குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் முழுவடிவில் ஈடேறும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும். மாசியில் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு எல்லாம் இன்பமயம் என்பதுபோல ஈடேறும். ஒரு உதாரணத்தின்மூலம் சொல்வதென்றால் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு படிக்கும் மாணவன் பள்ளியில் முதலிடம்; ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மாநிலத்தில் முதலிடம் என்பதுபோல உங்கள் செயல்கள் நிறைவேறி மகிழ்ச்சியூட்டும். மனதில் தெளிவும் உருவாகும். பழம் நழுவிப் பாலில் விழ அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி!

பரிகாரம்: ஸ்ரீவைகுண்டம் அருகில் திருக்கோளூர் சென்று வைத்தமாநிதி என்ற பெயரில் குபேரனுக்கு நவநிதிகளும் அருளிய பெருமாள் தலத்தில் வழிபட இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.