4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 1.

Advertisment

சந்திரன்: ஆயில்யம்- 2.

செவ்வாய்: ரோகிணி- 2.

புதன்: உத்திரட்டாதி- 2.

Advertisment

குரு: மூலம்- 1.

சுக்கிரன்: பூரட்டாதி- 3.

d

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 3.

கேது: உத்திராடம்- 1.

விகாரி வருட வெண்பா

பார விகாரி தனிற் பாரண நீருங்குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திபமாம்- சோரர்

பயமதிக முண்டாம் பழையோர்கள் சம்பாத்

தியவுடமை விற்றுண்பார் தேர்.

விகாரி வருடப் பலன்

விகாரி வருடத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். மழை இல்லை. மழை அளவு குறைவதால் விவசாய உற்பத்தி மிதமான அளவே உண்டாகும். திருடர்களால் நாட்டு மக்களுக்கு பயம் அதிகமாகும். நாட்டின் மொத்த உற்பத்தி குறைவதால், மக்கள் தங்கள் முன்னோர்களால் சம்பாதிக்கப்பட்ட சொத்துகளை விற்று உணவு உண்ணக்கூடிய நிலை ஏற்படும். உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும்.

வருடப் பிறப்பு

மங்களகரமான விகாரி வருடம், சித்திரை மாதம் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (14-4-2019) சுக்கிலபட்சம், தசமி திதி, ஆயில்ய நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 1.08 மணிக்கு, சூரிய உதயாதி நாழிகை 17.50-க்கு கடக லக்னத்தில் பிறக்கிறது.

பஞ்சாங்க சிரவண பலன்

வருட ஆரம்பத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, புதிய ஆடை, ஆபரணம் தரித்து கடவுளைப் பூஜித்து, பக்தியுடன் ஜோதிடர்களை வணங்கி பஞ்சாங்க சிரவணம் கேட்கவும்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

இவ்வருடம் முழுவதும் சனி பகவான் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் செய்தொழில், வியாபாரங்களில் கணிசமான லாபம் கிட்டும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த வெளி நாட்டுப் பயண வாய்ப்பு உங்களைத் தேடிவரும். மாடு கன்றுகள் லாபம் தரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். உடல்நலனில் சிறு சுகவீனம் ஏற்பட்டு நீங்கும். தெய்வீகப் பணிகளுக்கென கணிசமான பணம் செலவாகும். முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீகச் சொத்துகளில் சிலபல வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனங்களில் லாபநஷ்டம் சமமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் அதிகரிக்கும். குரு பகவான் வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை எட்டா மிடத்தில் சஞ்சரிக்கிறார். இக்காலகட்டத்தில் குடும்பத் திலும் மனதிலும் சில குழப்பங்கள் தலைதூக்கும். செய்தொழில், வியாபாரம் மந்தநிலை அடையும். பயணங்களில் விழிப்போடு இருக்க வேண்டும். பின்னர் குரு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரிகள், தொழில்முனைவோர், உத்தியோகஸ்தர்கள் மேன்மை யடைவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்படைவார்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் கிட்டும். மனம் தெளிவடையும். ராகு- கேதுக்களின் 3, 9-ஆமிட சஞ்சாரத்தால் சொந்தபந்தங்களால் ஆதரவும் ஆதாயமும் கிட்டும். சமுதாய அந்தஸ்து உயரும். கௌரவப்பதவி ஒன்றும் தேடிவரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பேரும் புகழும் உண்டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இவ்வருடம் முழுவதும் சனி பகவானின் அஷ்டம ராசி சஞ்சாரத்தால் அனாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமான பலனைத் தராது. தொழில், வியாபாரங்களில் தேக்கநிலை உண்டாகும். தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பதவியில் இருப் போர் எதிர்பாராத இடமாற்றம், பணிமாற்றத்தை அடைய நேரும். அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள் உடனடியாகக் கிடைக்காது. குரு பகவான் வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால், திருமணமாகாத இளம் வயது ஆண்- பெண்களுக்கு திருமண வாய்ப்பு கூடிவரும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். விவசாயிகள் அமோக விளைச்சலை அடைவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தினைப் பெறுவார்கள். ஐப்பசி 11-க்குப் பின்னர் குரு எட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் பொருளாதார நிலையில் தொய்வு உண்டாகும். வராக்கடன்கள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். தொழில் பலம் குறையும். உடல் ஆரோக் கியம் குறைந்துபோகும். ராகு- கேதுக்கள் இவ்வருடம் முழுவதும் 2, 8-ல் சஞ்சரிக்க உள்ளார்கள். இதனால் காசுபணச் சேர்க்கை அவ்வளவாகக் கைகொடுக்காது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. பிறர் உங்களைக் குற்றம் சொல்லியவண்ணம் இருப்பார்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். மொத்தத்தில் இவ்வாண்டில் சனி, ராகு- கேது ஆகியோரும், வருடப் பிற்பகுதியில் குருவும் சாதகமான நிலையில் இல்லை என்பதால், எல்லா விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை. தெய்வ வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

சனி ஆண்டு முழுவதும் ஏழில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் வீண் அலைச்சலும், மன வேதனையும் உண்டாகும். இளம்வயதினரின் திருமண முயற்சிகள் தடைப் படும். கணவன்- மனைவி இருவருக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிப் படையும். கூட்டுத்தொழிலில் லாபம் கிட்டாது. காரியத்தடை ஏற்படும். குரு பகவான் வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் செய்தொழில், வியாபாரங் களில் மந்தநிலை உருவாகும். பாக்கிகள் வசூலாகாது. உடல்நலமும் மனநலனும் பாதிப்படையும். அனாவசியச் செலவுகள் ஏற்பட்டு, அதைச் சரிகட்ட கடன் வாங்க நேரிடும். பின்னர் ஏழாமிடத்தில் குரு சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்கள் வெற்றியடையும். உடலில் சோம்பலும் அசதியும் மறைந்து சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். வியாபாரிகள் அபரிமித மான லாபத்தை அடைவார்கள். திருமணமாகாத இளம்வய தினருக்கு திருமண வாய்ப்பு கைகூடி வரும். ராகு- கேதுக்கள் 1, 7-ஆமிடங்களில் ஆண்டு முழுவதும் சஞ்சரிக்க உள்ளனர். பணநெருக்கடி தோன்றும். கையிருப்பு கரையும். வந்த வருவாய் களைக் காப்பாற்றிக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்தி செயல்படுங்கள். அதன்மூலம் விரைவில் முன்னேற்றத்தை அடையலாம். அதுபோல் உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயங் களில் பிடிவாதத்தைக் கைவிட்டு அமைதி காப்பது நல்லது. பெரியவர்களை அனுசரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமின் கொடுத்து பணம் வாங்கித் தருவதைத் தவிர்க்கவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

சனி ஆண்டு முழுவதும் ஆறில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் அடிப்படை வசதிகள் பெருகும். வீடு, மனை, விளைநிலம், தோட்டம் துரவு, வண்டி வாகனங்கள் வகையில் நல்ல அனுகூலம் உண்டாகும். பகை, விரோதம், எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் போகும். கண்டங்கள் விலகும். ஆயுள் விருத்தி உண்டாகும். விரயச்செலவுகள் மட்டுப்படும். பல பெரிய மனிதர்களின் உதவி கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்படையும். குரு பகவான் வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்த கதைதான் போங்கள். சனியின் சாதகமான சஞ்சாரத்தோடு குருவும் இணைந்துகொள்வதால் நினைத்த காரியம் கைகூடும். கௌரவம், அந்தஸ்து உயரும். உடல் பலம்பெறும். உத்தி யோகஸ்தர் பதவி உயர்வை அடைவர். வியாபாரிகள், விவசாயிகள் லாபம் அடைவார்கள். ஐப்பசி 11 முதல் குரு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால், ஆயுதம், இயந்திரம், மின்சாரம் ஆகியவற்றை கவனமாகக் கையாள வேண்டும். சொந்தபந்தங்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். விலை மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். ராகு- கேதுக்கள் 6, 12-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு உண்டாகும். பகை வர்களிடமிருந்துகூட பணம் கிட்டும். எந்தச் செயலையும் துணிவுடன் செய்து வெற்றி வாகை சூடலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகத் தீர்ப் பாகும். கடன்கள் அடைபடும். பணபலம், படைபலம் இரண்டும் உங்களுக்கு உறு துணையாக இருக்கும். சொந் தபந்தங்கள் உதவிக்கு வருவார்கள். குடும்பத்தினர் உங்கள் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். விரும்பிய பொருட்களை அடைந்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சனி பகவான் ஆண்டு முழுவதும் ஐந்தில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் வேண்டியவர்கள், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கு வருவார்கள். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன், லாட்டரி முதலியவற்றில் எதிர்பாராத அதிர்ஷ்டப் பரிசுகள் கிட்டும். முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீகச் சொத்துகளில் சிலபல வில்லங்க விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக கணிசமான பணம் செலவாகும். குரு பகவான் வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரங்களில் சிறு தேக்கநிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சற்று மந்த நிலையை அடைவார்கள். சொந்த பந்தங்கள் கருத்து வேறுபாடு கொள் வார்கள். வீடு, தோட்டம் முதலியவற்றை சீர்திருத்தம் செய்ய கணிசமான பணம் செலவாகும். ஐப்பசி 11 முதல் குருவின் ஐந்தாமிட சஞ்சாரத்தால் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பல வழிகளிலும் வருமானம் வரும். தொழில், வியாபாரத்தில் சில புதுமையான திட்டங்களைப் புகுத்தி பெரும் லாபத்தை அடையமுடியும். ராகு- கேதுக்களின் 11, 5-ஆமிட சஞ்சாரத்தால் விட்டுப்போன உறவுகள் கைகூடும். பெரியவர்களின் எண்ணங்கள், அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கையில் பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஓகோவென்று பிறர் பாராட்டக்கூடிய வகையில் உங்கள் நடவடிக்கை அமையும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். பொருளா தாரம் கணிசமான அளவு அபிவிருத்தி அடையும். எடுத்த காரியங்கள் வெற்றிபெறும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

இவ்வருடம் முழுவதும் சனி நான்கில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தொழில், வியாபாரங்களில் போட்டி, பொறாமைகள் உருவாகும். செலவுகள் கூடும். வம்புகள் தேடும். மாடு கன்றுகள் லாபம் தராது. எதிரிகள் பலம் பெற்று எதிர்க்கத் துணிவார்கள். அரசாங்கத் திடமிருந்து கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்கத் தாமதம் உண்டாகும். முயற்சி செய்த காரியங்களுக்கு முட்டுக்கட்டைகள் உருவாகும். குரு பகவான் வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் மனோதிடம் குறைந்துபோகும். எந்தக் காரியத்திலும் பயவுணர்வு தோன்றும். பிரச்சினைகளை சரியானபடி தீர்க்கமுடியாமல் மனம் ஊசலாடும். மனைவியின் உடல்நலம் பாதிப்படையும். ஐப்பசி 11 முதல் நான்காமிடத்தில் குரு சஞ்சரிப்ப தால் காரியத்தடை, வீண் அலைச்சல், பணமுடை, ஆரோக்கியக்குறைவு ஆகியன உண்டாகும். செய்ய வேண்டிய காரியங்களை ஒத்திப்போட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அனாவசியச் செலவுகள் ஏற்பட்டு அலைக் கழிக்கும். ராகு- கேதுக்களின் 10, 4-ஆமிட சஞ்சாரத்தால் வெளிவட்டாரப் பழக்கங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத வகையில் சில வருமானம் உண்டாகும். தொழில் சம்பந்தப் பட்ட விஷயத்தில் நல்லதொரு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தெய்வீக சம்பந்தமான சில நேர்த்திக் கடன்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். வாடிக்கையாளர் களிடம் உங்கள் நிறுவனத்தின் நற்பெயர் அதிகரிக்கும். அவர்களது ஏகோபித்த ஆதரவால் விற்பனை பன்மடங்கு பெருகும். லாபமும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான காலமிது. விளைபொருட்கள் லாபம் தரும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

இவ்வருடம் முழுவதும் சனி மூன்றில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய தொழில், வியாபாரங்களைத் துவங்க லாம். ஏற்கெனவே செய்துவரும் தொழில், வியாபாரங்களை விரிவுபடுத்தலாம். பொருளாதாரக் கஷ்டங்கள் அறவே நீங்கி, கையில் தாராள பணப்புழக்கம் உண்டாகும். வீடு, காலி மனை, விவசாய பூமி முதலிய வற்றை வாங்கலாம். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். உடன்பிறந்தோரால் உதவியும் ஆதாயமும் கிட்டும். வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை குரு பகவான் இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால், உங்களது சாதுரியத்தைப் பயன்படுத்தி தொழில், வியா பாரத்தைப் பெருக்கலாம். நவீன உபகரணங் களை வாங்கவும், விற்பனையில் புதிய உத்தியைப் புகுத்தவும் சரியான காலமாகும். வங்கிக்கடன், அரசாங்க உதவி முதலியவை உடனடியாகக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வினைப் பெறுவார்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலை அடைவார்கள். காசு பணச் சேர்க்கை கணிசமாக உயரும். புதிய முதலீடு களைச் செய்யலாம். ஐப்பசி 11-க்குப் பிறகு குரு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பார். இதனால் தேவையற்ற மனஉளைச்சல் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தராது. பயணத்தில் கவனம் தேவை. தகப்பனாரின் உடல்நலனில் சுகவீனம் ஏற்பட்டு நீங்கும். எடுத்த காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். 9, 3-ஆமிடங்களில் ராகு- கேதுக்கள் சஞ்சரிப்பதால், உங்களிடம் எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் இருக்கும். உங்களது பேச்சு, எழுத்து, செயல்கள்மூலம் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரித்து, பெருத்த முன்னேற்றத்தை அடைவீர்கள்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

சனி ஆண்டு முழுவதும் இரண்டில் குடும்பச் சனியாக சஞ்சரிக்கவுள்ளார். இதனால் வரவைவிட செலவுகள் அதிகரிக்கும். கஷ்டங் களை ஒரு பொருட்டாகக் கருதாமல், நம் குடும்பம்- நமது பணி என்று குடும்பத்திற்காக உழைப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிறிது சுணக்கம் உண்டாகும். வியாபார விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல்நலனில் சிறு சுகவீனம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனமின்றி, தேர்வில் மதிப்பெண் குறையும். வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் உடல்நலனில் சிறு தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். சமுதாய அந்தஸ்து குறைவுபடும். அனாவசியச் செலவுகள் அதிகரிக்கும். புதிய திட்டங்கள், ஆராய்ச்சித் திறன், புத்தி சாதுரியம் ஆகியவை முடங்கிப்போகும். ஐப்பசி 11 முதல் குரு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயர்வடையும். வீடு வாசல், தோட்டம் துரவு முதலியவற்றை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகள் அடங்கிப்போவர். ஆரோக்கியம் மேம் படும். தொழில், வியாபாரம் முன் னேற்றம் காணும். ராகு- கேதுக்களின் 2-ஆமிட சஞ்சாரம்- பேச்சினால் பிரச் சினையை உருவாக்கும். பயணத் தின்போது பணம், நகை முதலியவற் றைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். இல்லையேல் அவை காணாமல் போக வாய்ப்புண்டு. அதிக அலைச்சல் காரணமாக சரியான நேரத்திற்கு சாப் பிடவோ தூங்கவோ முடியாது. உத்தி யோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

சனி ஆண்டு முழுவதும் ஜென்ம ராசியில் ஜென்மச்சனியாக சஞ்சரிக் கிறார். உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் எதிரியாக மாறுவார்கள். வம்பு வழக்குகள் உருவாகி காவல் நிலையம், கோர்ட் என அலைய வேண்டி வரும். செலவினங்கள் அதிகரிப்பதால் கடன்வாங்க நேரிடும். வியாபாரிகள் சில நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சந்திக்கநேரும். உத்தியோகத்தில் இருப்போர் பதவி மாற்றத்தையும் இடமாற்றத்தையும் அடைவார்கள். ஏழரைச்சனி நடைபெறுகிறது என்பதை மனதில்கொண்டு, எல்லா விஷயத்திலும் கவனமாக செயல் படுவது நல்லது. வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை குரு பகவான் 12-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால், சேர்த்து வைத்த பணம் ஏதாவது ஒருவகையில் விரயமாகும். அதனால் கடன் வாங்கி செலவுகளைச் சமாளிக்கநேரும். மனதில் நிம்மதி குறைவதால் தூக்கமும் குறைந்து போகும். வராக்கடன்கள் அதிகமாகும். குடும்பத் தினர் உங்கள் பேச்சைக் கேட்காமல், சில பிரச் சினைகளை ஏற்படுத்துவார்கள். ஐப்பசி 11-க்குப் பின்னர் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், கூட்டுத்தொழிலில் வருமானம் தடைப்படும். தந்தையின் ஆதரவு குறையும். தந்தைவழியில் மருத்துவச்செலவுகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படும். ஏழில் ராகுவும், ஜென்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கும் இவ்வாண்டில், எல்லா செயல்களும் நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாகவே நடக்கும் சூழல் உருவாகும். பெண்கள் சம்பந்தமான அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்ப உறவுகளில் மனக்கசப்பு ஏற்பட இடமுண்டு. பணத்திற்காக சிலசமயம் கஷ்டப்பட வேண்டிவரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிக்கு சனி ஆண்டு முழுவதும் 12-ல் விரயச்சனியாக சஞ்சரிக்கிறார். அவர் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், பெருங் கஷ்டங்களை உங்களுக்குத் தரமாட்டார். எனினும் வீடு பழுதுபார்த்தல், புதிய வீடு கட்டுதல், பூமி நேர்த்தி, பிள்ளைகளின் வெளிநாட்டுப் பயணம், குடும்ப உறுப்பினர் களின் திருமணம் முதலியவற்றிற்காக கணிச மான பணம் செலவாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல்நலனில் சிறு சுகவீனம் ஏற்பட்டு நீங்கும். முயற்சி செய்த காரியங்கள் தாமதமாக நடந்தேறும். வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை குரு பகவான் 11-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் நாலா வழிகளிலும் பணம் வந்துகொண்டிருக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் முதலிய வற்றை அடைவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை யும் மகிழ்ச்சியும் நிலவும். ஐப்பசி 11-க்குப் பின்னர் குரு 12-ஆமிடதில் சஞ்சரிப்பதால், அனா வசிய அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். பயணங்களில் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். கடன்கள் தொல்லை தரும். விலைமதிப்புமிக்க பொருட்கள் காணாமல்போக வாய்ப்புண்டு. எச்சரிக்கை தேவை. ராகு ஆறிலும், கேது 12-லும் சஞ்சரிக்கும் இக்காலகட்டத்தில், எந்தச் செயலை யும் துணிவுடன் செய்து வெற்றிவாகை சூடலாம். உடல்நலனில் ஏற்பட்டிருந்த நோய்நொடிகள் நீங்கும். எதிரிகளால் உண்டான இடையூறுகள் அகலும். கடன் தொல்லை தீரும். வழக்கு விவகா ரங்கள் சாதகமாகத் தீர்ப்பாகும். நாலா வழி களிலும் வருமானம் வரும். தொழில், வியா பாரங்களில் தடங்கல்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். எல்லா வகையிலும் சிறப்பான காலமாகும் இது.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

சனி ஆண்டு முழுவதும் 11-ல் லாபச்சனியாக சஞ்சரிக்கிறார். உங்களது நீண்டநாள் கனவு கள் நிறைவேறும் தருணமிது. திட்டமிட்ட செயல்கள் சிறப்பான வெற்றியைத் தரும். மூத்த சகோதரர்கள்வழி அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். புதிய தொழில், வியாபாரங் களையும் துவங்கலாம். சோம்பலும் அசதியும் மறைந்து, தெம்பும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். சமுதாய அந்தஸ்து, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்டிருந்த வில்லங்கங்கள் நீங்கும். வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை குரு பகவான் 10-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் செய்தொழில், வியாபா ரங்களில் சில நிர்பந்தம், நெருக்கடிகளைச் சந்திக்கநேரும். பதவியில் இருப்போர் மேலதி காரிகளின் அதிருப்திக்கு ஆளாகி பதவி மாற்றம், இடமாற்றத்தை சந்திக்க வேண்டிவரும். யாருக்கும் எவ்விதமான வாக்குறுதியையும் கொடுத்துவிடவேண்டாம். அதை சரியான சமயத்தில் நிறைவேற்ற முடியாது. வாகனங்கள் தேவையற்ற ரிப்பேர் செலவுகளைத் தரும். உடல் நலனிலும் அவ்வப்போது சிறு உபத்திரவங்கள் ஏற்பட்டு நீங்கும். ராகு 5-லும், கேது 11-லும் சஞ்சரிக்கும் இக்காலகட்டத்தில் இதுவரை தடையாக இருந்துவந்த காரியங்கள்கூட சிறப் பாக நடக்கும். பலவிதத்திலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துசேரும். அயல்நாடு செல்லும் முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் சுகமும் சந்தோஷமும் நிலவும். ஸ்பெகுலேஷன், ஷேர் மார்கெட் முதலியவற்றிலும் நல்ல லாபம் கிட்டும். உங்களது புதிய அணுகுமுறையால் தொழில், வியாபாரம் வேகமாக முன்னேறும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சனி ஆண்டு முழுவதும் 10-ல் சஞ்சரிக்கிறார். இதனால் நல்லதோர் புதிய தொழில், வியாபாரங்களை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்காக கணிச மான தொகை கடன் வாங்க நேரிடும். பத்தா மிடத்தில் சனியிருந்தால் பதவியில் மாற்றம் ஏற்படும் என்ற பழமொழிக்கேற்ப, உத்தி யோகத்தில் இடமாற்றம், பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள் முயற்சியின்பேரில் கிடைக்கும். கணக்குவழக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வைகாசி 4 முதல் ஐப்பசி 11 வரை குரு பகவான் ஒன்பதா மிடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். பிள்ளைகள் சம்பந்தப் பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைத்து, அதன்மூலம் வேண்டிய பல நல்ல காரியங்களைச் செய்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். தெய்வ கைங்கர்யங்களைச் செய்யும் வாய்ப்பு கிட்டும். தகப்பனாரின்மூலம் ஆதாயம் கிட்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். விவசாயிகள் அமோக விளைச் சலை அடைவார்கள். ராகு நான்கிலும், கேது பத்திலும் சஞ்சரிக்கும் இக்காலகட்டத்தில், செய்யும் தொழில் எதுவானாலும் அதில் சிறப் பான பலன்கள் உண்டாகும். உறுதியான மனதுடன் எதைச் செய்வது என்று கணக்குப் போட்டு குடும்ப நிர்வாகத்தைச் சீராகக் கொண்டு செல்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு முதலியவற்றை அடைவார்கள். வெளிவட்டாரப் பழக்கங்கள் அனுகூலமாகும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். அனாவசியச் செலவுகள், ஆடம்பரச் செலவுகள் குறைந்து கையிருப்பு அதிகரிக்கும்.